நித்யா

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

விசிதா


டேய் இந்த உடையும்,தலையலரங்லாரமும்,பிண்ணனி இசையும் எப்படி என்றாள் நித்யா

திரையில் நித்யா வெவ்வேறு உடைகளில் வெவ்வேறு பிண்ணனி இசையில் ஆடிக் கொண்டிருந்தாள்.

நடனமாடுவது ஆறு நிமிடங்கள், ஆனால் நான்கு விதமான உடைகள் நான்கு விதமான பிண்ணனி இசைகளிலிருந்து எனக்குப் பிடித்தது எதுவென்பதை தீர்மானிக்க ஒரு மணி நேரமாயிற்று.

தெரியாது என்றால் விட மாட்டாள், வருங்கால மனைவியிடம் என்ன பேச முடியும்

ஆமாம் இந்த இசை சங்க காலத்திலிருந்ததா

அது தெரியாது ஆனால் எத்னோமியுசிக் ஆர்கவைஸ், குளோபல் மியுசிக் டாட்டாபேஸிலிருந்து இதைத் தேடிஎடுத்து போன நூற்றாண்டு ஆய்வுகளுடன் ஒப்பிட்டே இது பொருந்துமென முடிவு செய்தேன்

இந்த பாரு நித்யா எனக்கு சங்க கால இசை தெரியாது உன்னைத் தெரியும் உன்னைப் பிடிக்கும்

அதனாலே அதையும் பிடிக்கும்

அது போதும், ஆனால் நீ பேசினது ஒரு கதையில் வருது ஐம்பது வருஷத்திற்கு முந்தி விசிதா

எழுதிய கதையில்

அதை எப்படிச் சொல்றே

முட்டாளே நீ பேசினதை உடனே பதிவு பண்ணி யாராவது அது மாதிரி எழுதியிருக்காங்களான்னு

பார்க்க முடியும் என்னாலே, அந்த சிஸ்டம் இப்போ நீ சொல்றதை பதிவு பண்ணுது உடனே திரையில்

காட்டுது பார்

அட, ஆமாம் , ஆனா முதல்ல அதை தூக்கி எறி, எதஎயெடுத்தாலும் ஆர்க்கவைஸில் தேடற புத்தியை கொஞ்சம் நாள் ஒதுக்கிவை.

சரி ஆனா அதற்கு இப்போதய விலை 50 முத்தம்

நித்யாவை நான் பார்த்தது ஒரு கலை நிகழ்ச்சியில். தோட்டத்தில் வேலை செய்து கைளைத்து

வந்த போது என்னதான் நடக்கிறது ஊரில் என்று தேடிய போது வீட்டிற்கு எதிரே உள்ள அரங்கில்

அவள் நடனமாடிக் கொண்டிருந்தாள் என்பதை வீட்டுத் திரைக் காட்டியது , அந்த அசைவுகள், அந்த கண்கள், அந்த கன்னம் வீட்டிலிருந்து பார்த்த பின் உடனே ஒடினேன் அரங்கிறகு. அப்புறம் அவளை நான் அங்கே நேரில் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பழகி, அன்பை வெளிப்படுத்தி, பின் ஒரு நாள் காதலைச் சொன்ன பின், அடுத்த நாளே கூப்பிட்டவுடன் என்னுடன் வந்து தங்கிவிட்டாள். எனக்கும் காதல் வரும், ஒரு காதலி கிடைப்பாள் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. சில பெண்கள் வந்து போன என் வாழ்க்கையில் அவள் நிரந்தர வசந்தமானாள். எனக்கு பிடிச்சது தோட்டத்தில் செடி வளர்ப்பது, மலை ஏறுவது, பனிச் சறுக்கு இத்தியாதி. அவளுக்கு இசை, நடனம்,கவிதை போன்றவை. மாறுபடும் விருப்பங்கள் மாறாத காதல். அவள் காதலை அவள் பெற்றோர் ஏற்றனர். அவள் ஆய்வினை முடித்த பின் எங்கள் திருமணம் என்று தீர்மானித்தோம்.

அறையை ஒழுங்குபடுத்துவோம், ஒரு கை கொடு, அப்பாவுடன் பேசும் போது அறை சுத்தமாக இருக்கட்டும் என்றேன்.

அப்பாவுடன் பேசப்போறியா, நம்ம விஷயத்தைப் பத்தி என்று படபடத்து கேட்டவளிடம் ஆமாம், அக்காவும், தம்பியும் முடிஞ்சா சேர்ந்துக்குறோம்ன்னு சொன்னாங்கா என்றேன்

நான்

அடுத்த அறையிலிருந்து பார், நீ பார்ப்பது அவருக்கு தெரியாது

முகத்தினை கொஞ்சம் அழகு செய்து கொண்டு, அப்பாவிற்கு பிடித்த வாசனையை அறையில் உலவ விட்டேன், அறையின் பிண்ணனியை இளம் நீலத்திற்கு மாற்றினேன். பின் சுவர்த்திரையில் அப்பாவை

அழைத்த போது அங்கே வீட்டில் அப்பா, அம்மா. அப்பா சாய்வு நாற்காலியில், அம்மா ஊஞ்சலில். அப்பா கையிலிருந்து ரத்த அழுத்தம் சரியாக உள்ளது என்ற சமிக்ஞை வந்தது. எனக்கும் ஒரு நிம்மதி

என்ன எப்படி இருக்கே

நல்லாயிருக்கேன் அப்பா, உங்களின் படிப்பு எப்படி

அது பாட்டுக்கு போகுது, நேரம்தான் இல்லை, அம்மாவும் கூட படிக்கிறாளா, அவளைப்

பார்க்கத்தான் தோணுது.

அப்பா ஒரு விஷயம் உங்கள்ட்ட

ஆமாம் கேள்விப்பட்டேன், அந்தப் பொண்ணு குரல்,வீடியோ கிளிப்பிங் பார்த்தேன், நல்லா டான்ஸ்

ஆடறா, பாடறா,அந்தக் காலத்து ஐஸ்வர்யாவையும் இந்தக் காலத்து தன்யாவையும் நினைவுபடுத்தாறா,

உங்க அம்மா கூட சின்ன வயசுல இந்த மாதிரியெல்லாம் ஆடியிருக்கா

இப்ப எங்க இருக்கா அவ

அவ ஹாஸ்டலில் நல்ல பொண்ணுப்பா, அவங்க வீட்டிலே சரின்னுட்டாங்கப்பா, இங்க யூனியன் டிபார்ட்மெண்டிலும் சரின்னு சொல்லிட்டாங்கா, இரண்டு பேர் உடம்பும் மாட்ச் ஆகுது, உங்க சம்மதம் மட்டும் வேணும்

அதெல்லாம் சரி, அந்த விஷயம் இடிக்குதே

அப்பா, இந்த காலத்தில் போய் அதெல்லாம் பார்த்தால்

பார்ப்பேன், நான் பார்ப்பேன், எவ்வளவோ விட்டுக் கொடுத்தாச்சு, இதில் முடியாது

சமிஞ்கை ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகரிப்பதைக் காட்டியது,

அப்பா அக்கா செய்யாததையா நான் செஞ்சுட்டேன், அப்புறம் என்னப்பா

இல்லை, அவை அந்த விஷயத்தில் சரியாத்தான் செய்தாள், நீதான் முரண்டு

பிடிக்கிற, தப்பு செய்திருக்க

அப்பா நித்யா நல்ல பொண்ணுப்பா, முதல் குழந்தையை ஆம்பளைக் குழந்தையா பெத்துக்கணும்

அதுக்கு உங்க பேர் வைக்கணுமுன்னு ஆசைப்படறா, உங்க மேலே ரொம்ப மரியாதை உண்டு

அதெல்லாம் சரி, அந்த விஷயத்தில்தான் பிரச்சினை, பொண்ணு நல்ல பொண்ணு, நல்லா படிக்குது,

உனக்கு ஒத்துப் போகும் ஆனா என்னால் அதில் விட்டே கொடுக்க முடியாது

சமிக்ஞை மஞ்சள் நிறத்தைக் காட்டியது

இல்லைப்பா, கல்யாணமே வேண்டாமென்று இருந்தேன், நித்யாவைப் பார்க்கிற வரைக்கும் எனக்கு

கல்யாணத்தில் , குடும்ப வாழ்க்கையில் விருப்பமில்லாமல் இருந்தேன் அது உங்களுக்கு தெரியாதா

இந்த பாரு, அதெல்லாம் எனக்கும் தெரியும், இந்த ஒன்றிற்குத்தான் யோசிக்கிறேன்,

இதில் போய் எப்படி நான் விட்டுக்கொடுப்பேன், கொஞ்சம் யோசி, உனக்கு வேற பொண்ணா

கிடைக்காது

இல்லைப்பா, அவளை என்னாலே கைவிடமுடியாது

சமிக்ஞயில் மாறுதல் இளம் சிவப்பின் துவக்கம்

அம்மா குறுக்கிட்டு சரி இதெல்லாம் அப்புறம் பேசலாம் என்றாள்

அப்பா கடைசியா ஒருதரம் கேட்கிறேம்ப்பா, எனக்கா என் ஆசைக்காக இதுக்கு சம்மதிங்கப்பா

இளம் சிவப்பு கரும் சிவப்பாகவே அம்மா அப்பா கையில் அந்த இடத்தில் ஒரு சிறு கட்டியை வைத்தாள்

இதற்கு மேல் இப்போ பேசாதே, என்றபடி அம்மா துண்டித்தாள்

உண்மைதான் அப்பாவிற்கு இந்தப் பேச்செடுத்தால் ரத்த அழுத்தம் எகிறுது , இதைத்தான் அக்காவும்,

தம்பியும் சொன்னார்கள்.

அடுத்த அறையில் நித்யா அழுது கொண்டிருந்தாள், அப்பா ஒத்துக்கவே மாட்டாரா, அப்படியானா நாம

கல்யாணம் பண்ணிக்கவே முடியாதா

என் செல்லம், அப்படியில்லை, அவர் மனசை மாத்தலாம், கொஞ்சம் பொறு

அக்கா என்ன செய்தாள், எப்படி ஒத்துக்கிட்டார்,

ஐயோ உனக்குப் புரியல்ல, அப்பா காதலுக்கு எதிரியில்லை, அக்கா அதே ஜாதியில் காதலிச்சா அப்பா சரின்னார்

அப்போ நம்ம காதல் அவ்வளவுதானா

யார் சொன்னா, அப்பா சம்மதிக்கலைன்னாலும் இங்க கோயில்ல உனக்குத் தாலி கட்டி அப்புறம்

இந்தியா போய் முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்

சிரிப்பு பூத்த அவள் முகத்தை என் உதடுகளால் அளந்தேன்

சரி நான் கிளம்பறேன், இன்னும் அரை மணி நேரத்தில் அங்க இருக்கணும், நீ

நான் வீட்டிலிருந்தே வேலை செய்வேன், அப்புறம் டான்ஸ் ரிகர்சல், அந்த சங்கப்பாடல்

டான்சிற்கு பாக்கிரவுண்ட் டிசைன் செய்ய வர்ச்சுவல் பீரியட் சிஸ்டத்தில் கொஞ்ச நேரம்

வேலை பண்ணுவேன், வீட்டிலிருந்தே சிமுலேஷன் செய்வேன், நீ வந்தப்புறம் வீட்டில்

இறுதி ரிகர்சல்

செய், உன்னைவிட்டா யாருக்கு இதெல்லாம் இன்னிக்குத் தெரியும்

அப்போதுதான் நினைவிற்கு வந்தது இன்று விசேஷ ஆடை அணிவது உசிதமென்று, அதைத்

அணிந்த பின் உடலுள்செலுத்தியை(இம்பிளாண்டை)த் தேடினேன், போன மாதம் வாங்கியது தீர்ந்து விட்டிருந்தது.

நித்யா

என்ன டார்லிங்

உன் இம்பிளாண்ட் மூணு கொடு, மறக்காமால இந்த மாசம் கொஞ்சம் அதிகமாக வாங்கி வை,

இந்தா, ஆறு எதற்கும் வைச்சுக்கோ

கையில் செருகிக்கொண்டேன், ரத்த ஒழுக்கை இது குறைக்கும், வலி இருக்காது, முக்கியமா உடம்பு சோர்வதை சரி செய்யும் , இன்னும் மூன்று, நான்கு நாட்களுக்கு அந்தத் தொல்லையை சகித்து கொள்ள வேண்டும், மாதாமாதம் இதே தொல்லை, இதை இல்லாமல் செய்யவே முடியாதா,அம்மா காலத்திலிருந்து முயற்சி பண்றாங்க, இன்னும் தீர்க்க முடியலையே என்று நினைத்தபடி வெளியேறினேன்.

—-

wichita@rediffmail.com

Series Navigation