நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

பாவண்ணன்


ஆலாஹா என்பது ஒரு குறியீட்டுச்சொல். துரதிருஷ்டம், இயலாமை, பேய், பிசாசு என பீதியும் துக்கமும் தரக்கூடிய எல்லா அம்சங்களையும் பொதுவாகக் குறிக்கும் சொல். ஆலாஹாவின் பெண்மக்கள் என்பதற்கு துரதிருஷ்டவசமாக வேதனைக்கு ஆளாகிற பெண்கள் என்பதுதான் பொருள். ஒரு குடும்பத்தில் துரதிருஷ்டவசமாக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சரிந்துவிழுகிற பெண்களின் வரலாற்றைத் தொகுத்து முன்வைத்துள்ள பதிவாக விரிவடைகிற இந்தப் படைப்புக்கு இத்தலைப்பு பொருத்தமாகவே உள்ளது. நாவலின் ஊடுபாவாக ஒரு புறநகர்ச்சேரியின் உருவாக்கமும் அதில் நிகழ்கிற குடியேற்றமும் கால ஓட்டத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நுட்பமானவகையில் முன்வைக்கப்படுகின்றன. ஆன்னி என்றொரு சிறுமியின் பார்வை வழியாக நாவல் நகர்ந்துசெல்கிறது. தொடக்க அத்தியாயத்தில் அவள் சின்னஞ்சிறுமி. இறுதி அத்தியாயத்தில் அவள் ஓரளவு வளர்ந்தவள்.

ஆன்னியின் பார்வையில் நாவல் வளர்த்தெடுக்கப்பட்டாலும் பாட்டியே கதையின் பிரதான பாத்திரம். பாட்டி இளம்மனைவியாக குடியேறிய காலத்திலிருந்து பழைய நினைவுகள் குழம்பி எதைஎதையோ பிதற்றி நிற்கிற முதுமைப்பருவம்வரை அவளுடைய வாழ்வு விரிவாகச் சொல்லப்படுகிறது. அவள் பெற்றெடுத்த பெண்கள், மருமகள், பேத்தி என மூன்று தலைமுறையினரும் கதைக்குள் வந்துபோகிறார்கள். அகற்ற முடியாத துன்பச்சுமை அவர்கள் வாழ்வை அழுத்திக்கொண்டிருக்கிறது. நாளை விடிந்துவிடும் என்கிற நம்பிக்கையில் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். சந்தோஷத்தையே காணாமல் சங்கடங்களும் வேதனைகளும் நிறைந்த இருளிலேயே தவிப்போடு நிற்கிறார்கள் பாட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மக்கள்.

பாட்டிக்குப் பிறந்தவர்கள் ஐந்து பெண்மக்கள். மூத்த பெண் திருமணமான கையோடு கணவனைப் பறிகொடுத்துவிட்டு பிறந்தகத்துக்குத் திரும்பி வந்துவிட்ட குஞ்ஞிலை. பிரசவம் பார்க்கக் கற்றுக்கொண்டு தன் பொழுதை ஒட்டுகிற அவள் ஒரு தருணத்தில் தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கே பிரசவம் பார்க்கிற நெருக்கடிக்கு ஆளாகிறாள். இரண்டாவது பெண் நோனு. கணவனோடு வாழப் பிடிக்காமல் தனக்குப் பிடித்த இன்னொருவனோடு சேர்ந்து வாழப் போய்விட்டவள். மூன்றாவது மகள் செறிச்சி. சுராயி பிரிவைச் சேர்ந்தவனுக்கு சீதனம் இல்லாமல் வாழ்க்கைப்பட்டு சென்றுவிட்டவள். தேவாலயமே ஏற்படுத்திய திருமணத்திட்டத்தின்படி தன்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தவனை மணந்துகொண்டு குடும்பத்தைவிட்டு வெளியேறுகிற நான்காவது மகள் சிய்யம்மா. குடும்பத்திலிருந்து வெளியேறினாலும் துன்பத்திலிருந்தும் துரதிருஷ்டத்திலிருந்தும் வெளியேற முடியாதவள். மணவாழ்க்கையே வேண்டாம் என்று வெறுப்போடு வீட்டிலேயே அடைபட்டிருக்கும் கடைசி மகள் சின்னம்மா, பெயர்சொல்ல விரும்பாத யாரோ ஒருவனோடு ஏற்பட்டுவிட்ட உறவின் காரணமாக வயிற்றில் தங்கிவிட்ட கருவைக் கலைத்துக்கொண்டு வாழ்வில் நிம்மதியைத் தேடி கன்னிகாஸ்திரியாக மடத்தில் சேர வெளியேறிவிடுகிறாள். பாட்டிக்குப் பிறந்த இரண்டு ஆண்மக்களால் எவ்வித நன்மையும் இல்லை. மனைவியையும் குழந்தையையும் தனிமையில் தவிக்கவைத்துவிட்டு ஊரைவிட்டே வடநாட்டின் பக்கமாக ஓடிப்போகிறான் மூத்த மகன். வீட்டோடு இருந்தாலும் காசநோயால் நிம்மதியிழந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறான் இன்னொரு மகன். மருமகள், பேத்தி, வாழாத மூத்த மகள், வியாதி முற்றிய பிள்ளையோடு பாட்டியின் வாழ்வு குடிசையில் தொடர்கிறது.

கோக்காஞ்செறுவு என்னும் குடியிருப்புப்பகுதி உருவான விதம் ஒரு சரித்திரச்சம்பவம்போல பாட்டியின் எண்ணஅலைகளுக்கிடையே விரிவடைகிறது. தேக்குமரங்கள் நிறைந்து காடாக அடர்ந்திருந்த திரிச்சூர் நகரமாக உருவாகி வருகிற நேரம். நகரவாசிகள் பம்மியும் பதுங்கியும் வழியோரத்திலும் புதர்களிலும் மலம் கழித்துச் செல்லவேண்டிய நெருக்கடி. பாதையில் எச்சரிக்கையில்லாமல் செல்ல நேரிட்டால் மலத்தை மிதிக்கவேண்டும். மலமெடுப்பதற்காக எர்ணாகுளத்திலிருந்து பன்னிரண்டு தோட்டிகள் வரவழைக்கப்படுகிறார்கள். தோட்டிகளின் வருகைக்குப் பிறகு நகர வீடுகளில் கழிப்பறைகள் உருவாகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் மலம் அள்ளிக்கொண்டு டப்பாக்களோடு வண்டியை இழுத்தபடி நகரத்துக்கு வெளியே சென்று கொட்டுகிறார்கள் தோட்டிகள். நகர சேவை செய்கிற தோட்டிகள் வசிக்க நகரத்துக்குள் இடமில்லை. அவர்கள் எங்காவது தங்கியிருந்துவிட்டு சேவை தேவைப்படுகிற நேரத்தில் நகரத்துக்கு வந்துவிடவேண்டும். அதுதான் நகரத்தவர்களின் எண்ணமாக இருக்கிறது. கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டிய இடத்திலேயே தோட்டிகள் வசிக்கிறார்கள். பிறகு, அருகிலிருந்த குன்றின்மீதேறி வசித்து கஷ்டப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் தோட்டிகளின் கோரிக்கையை நகரத்தவர்கள் மதிக்கவேண்டி வருகிறது. பிணங்களும் கழிவுகளும் ஊராருக்குத் தேவையற்ற உடைசல்களையும் கொண்டுவந்து வீசுகிற இடமாக ஊரைவிட்டுத் தள்ளியிருந்த கோக்காஞ்செறுவு அவர்கள் வசிப்பிடமாக மாறுகிறது. அவர்களைத் தொடர்ந்து மீன் வியாபாரிகள், கசாப்புக்கடைக்காரர்கள், தரகர்கள், கூட்டிக்கொடுப்பவர்கள், சின்னஞ்சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறவர்கள். விலைமாதர்கள் சாராயம் காய்ச்சுகிறவர்கள் என மெல்லமெல்ல கோக்காஞ்செறுவுக்குள் தஞ்சமடைகிறார்கள். பட்டணத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டவர்களுக்கெல்லாம் அது புகலிடமாக மாறுகிறது. சாலையோரக் குடியிருப்புகள் கலைக்கப்பட்டு பட்டாளக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்ட மரிஅக்காவின் குடும்பமும் ஒரு மழைநாளில் மலம் அள்ளுகிறவர்களின் குடும்பங்களிடையே அங்கே வந்து சேர்கின்றது. கதை சொல்லும் பாட்டி இளம்மனைவியாக இருந்த காலம் அது. சிறுகச்சிறுக அந்த இடம் வளர்ச்சியடைகிறது. கடைகள் வருகின்றன. ஆலயம் எழுப்பப்படுகிறது. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. மடம் உருவாகிறது. இறுதியாக தார்ச்சாலை போடப்படுகிறது. ரத்தமும் சகதியும் பிராணிகளின் தலைகளும் முண்டங்களும் கண்டகண்ட இடத்தில் இறைபட்டு, ஒருவித பாதையம்சமே இல்லாமல் குப்பைத்தொட்டியாகக் கிடந்த இடம், உருமாறி உருமாறி தார்ச்சலை போடக்கூடிய அளவுக்கு மாற்றமெய்துகிறது. ஆனால் புறவளர்ச்சிக்கு இணையாக அகவளர்ச்சி இல்லை. எல்லாருமே ஏதோ ஒருவகையில் நிம்மதியைத் தொலைத்தவர்களாகவே உள்ளார்கள். மரிஅக்காவின் பெண்மக்கள் மட்டுமல்ல, கோக்காஞ்செறுவுவின் மக்கள் அனைவருமே ஒருவகையில் ஆலாஹாவின் மக்களாக உள்ளார்கள்.

மரிஅக்கா தன் வாழ்வில் இரண்டு கடும்மழைப்பொழிவைப் பார்க்கிறாள். முதல் மழையின்போது அவள் இளம்பெண். பட்டாளத்தவர்களால் விரட்டப்பட்டு வாழ இடம்தேடி வந்து மலம் அள்ளுகிறவர்களிடையே அவர்களுடைய குடிசையில் குடியேறிய சமயம் அதுதான். அன்றுதான் அவள் தன் வயிற்றில் வளர்கிற சிசுவின் இருப்பை ஆழமாக உணர்கிறாள். இரண்டாவது பெருமழையின்போது அவள் பாட்டியாக நிற்கிறாள். நிற்கவும் பலமில்லாத பாட்டி. அவளுக்கென்று அப்போது ஒரு வீடு இப்போது இருக்கிறது. ஆனால் அதையும் மூழ்கடித்துக் கரைத்துவிடுவதுபோல பெருகிவருகிற மழையை செய்வதறியாமல் பார்த்தபடி இருக்கிறாள். மழை தீராத துக்கத்தின் குறியீடாக ஆற்றலோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

குறியீடாக நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கிற இன்னொரு அம்சம் வீட்டின் முன்னால் எழுப்பப்பட்ட அவரைப்பந்தல். பாட்டியும் பேத்தியும் இணைந்து அவரைப்பாத்தியில் முதலில் மண்ணைச் செதுக்குகிறார்கள். அவரை விதை செடியாகி, கொடியாகி, அதற்காகவே உருவாக்கப்பட்ட கம்பங்களைப் பற்றிப் படர்ந்து மிகப்பெரிய பந்தலாக நிற்கிறது. அனால் அந்த நிலை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. சாலையில் தார்போடுவதற்காக வந்த வாகனம் இடித்துத் தள்ளியதால் ஒரு பகுதி பந்தல் சரிந்துவிழுந்து விடுகிறது. இடைவிடாது வீசிய காற்றும் மாழயும் வெள்ளமும் மிச்சமிருக்கிற பந்தலை வீழ்த்தி அடித்துச் சென்றுவிடுகிறது.

பெண்மக்களுடைய வாழ்வாக விரிவடைகிற கதையில் மறக்கமுடியாத பல பாத்திரங்கள் உண்டு. குஞ்ஞிலிக்குப் பிரசவம் பார்க்க கற்றுத்தருகிற கம்பவுண்டர் பாத்திரம் முக்கியமானது. தன் பகுதி மக்களுக்குத் தேவையான மருந்துகளை தன் சொந்தப் பணத்தில் வாங்கி மருத்துவம் பார்த்துவிட்டு, மருத்துவமனையிலிருந்து திருடிக்கொண்டு வந்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வேலையை இழந்துபோகிறது அந்தப் பாத்திரம். குழந்தை குறுக்காகக் கிடப்பதால் மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்று சொன்னபிறகும், பனிக்குடம் உடையும்போது திரும்பலாமல்லவா என்று இழுக்கிற உறவுக்காரர்களின் தாமதத்தால் குழந்தை இறந்துபோகிறது. ஆனால் குற்றம் சுமத்துகிற மருத்துவரிடம் காலம்முழுதும் கம்பவுண்டருடைய இலவசச் சேவையால் பலன்கண்ட மக்களில் ஒருவர்கூட கம்பவுண்டருக்காக வாதாட வராதது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். ஒரு பக்கம் அவமானம். இன்னொரு பக்கம் வேலையிழப்பு. மற்றொரு பக்கம் குஞ்ஞிலையையும் அவரையும் இணைத்துப் பேசும் மனைவியின் சுடுசொற்கள். கடைசியில் அவர் தற்கொலையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். பாதை போட வந்த கல் எஞ்சின் இரைச்சல் பட்டாளத்தின் ஞாபகங்களைக் கிளற, பாட்டியின் மனத்தில் திரண்டுவரும் புலிவேடம் போடுகிற வெளுத்தோடன் சங்கரன் பாத்திரமும் மறக்கமுடியாத ஒன்று.

காசநோயால் படுத்த படுக்கையாகக் கிடந்தாலும் தன் தேசபக்தியின் அடையாளமாகவும் தான் பங்கெடுத்துக்கொண்ட போராட்டத்தின் அடையாளமாகவும் வைத்திருந்த இராட்டைகளை அடுப்பெரிப்பதற்காக தன் தாய் பிளந்து துண்டுதுண்டாக்குவதை முனகலோடு சகித்துக்கொள்ளும் குட்டிப்பாப்பன் முகமும் என்றோ ஓடிப்போன கணவன் பெயரையும் மண்ணைவிட்டு மாறந்துபோன மாமனார் பெயரையும் சொல்லி கோயில் கட்டடக் காணிக்கையைச் செலுத்திவிட்டு வரும்படி சொல்கிற ஆன்னியின் அம்மாவின் முகமும் நாவலை வாசித்துமுடித்தபிறகும் நினைவில் மிதந்தபடி உள்ளன.

ஒரு குடும்பம் உருவாவதில் பெண்களுக்கு உள்ள இடம் மிகவும் முக்கியமானது. தன் கனவுகளைப் பொசக்கிக்கொண்டும் தன் நிம்மதியைப் பறிகொடுத்தும்தன் அவர்கள் இந்தப் பங்கை ஆற்றுகிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் பிரதிபலன் எதிர்பாராத இந்த உழைப்பின் நல்விளைவு. தலைமுறைதலைமுறையாக செலுத்தும் இந்த உழைப்பின் நற்பயனை இந்தப் பெண்கள் ஏன் நுகர்வதே இல்லை என்பதும் எல்லாக் காலங்களிலும் அவர்கள் துரதிரஷ்டத்தில் மூழ்கியவர்களாகவே இருப்பதற்கான காரணம் என்ன என்பதும் இந்த நாவல் எழுப்புகிற முக்கியமான கேள்விகள். இக்கேள்விகளை முழு அளவில் வாசகமனம் உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நம்பகத் தன்மையோடு சம்பவங்களை முன்னும் பின்னுமாகக் கோர்த்து எழுதியிருக்கிறார் சாரா ஜோசப். நிர்மால்யாவின் சிறப்பான மொழிபெயர்ப்பில் தமிழ்வாசகர்களுக்கு நல்ல மலையாள நாவலொன்று கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

( ஆலாஹாவின் பெண்மக்கள். சாரா ஜோசப். மலையாள நாவல். தமிழாக்கம் நிர்மால்யா. சாகித்திய அகாதெமி வெளியீடு, குணா பில்டிங்க்ஸ், தேனாம்பேட்டை, சென்னை. விலை. ரூ130)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்