நிஜ உலகிலிருந்து சுதந்திரத்துக்கு…

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

சுகுமாரன்நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்

-ஹருகி முரகாமி

ஹருகி முரகாமியை ஓர் இலக்கிய வாசகன் என்ற நிலையில் மொழிபெயர்ப்புகள் வழியாகக் கண்டடைந்தது எதேச்சையாகத்தான். ஆனால் முதல் வாசிப்பில் அவர் பெரும் ஏமாற்றமளிப்பவராக இருந்தார். அதற்குக் காரணம் முரகாமியல்ல.சுவாரசியமானவை
அவருடைய கதைகள். எனினும் ஜப்பானிய எழுத்தாளர் என்ற தகவலைச் சார்ந்து உருவாகியிருந்த எதிர்பார்ப்புடன் அந்தக் கதைகள் பொருந்தவில்லை.யசுநாரி கவபாட்டா, யூகியோ மிஷிமா,கென்சாபுரோ ஒயே போன்ற எழுத்தாளர்களை பாராட்டுணர்வுடன் ஏற்றுக்கொண்டிருந்த மனம் முரகாமி ஒரு பிடிபடாத எழுத்தாளர் என்ற இளப்பமான எண்ணத்தைத்தான் கொண்டிருந்தது.இந்தப் பிடிபடாத்தன்மையே ஹருகி முரகாமியின் தனித்துவம் என்பது தொடர்ச்சியான வாசிப்பில் தெளிவானது.

முன்னர் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் ஜப்பானியக் கலாச்சாரத்தை படைப்பின் உள்ளோட்டமாக வரித்துக்கொண்டிருந்தவர்கள்.உலகப் போருக்குப் பின் ஜப்பானுக்கு நேர்ந்த கலாச்சார வீழ்ச்சியையையும் மனித நெருக்கடிகளையும் பின்புலமாகக் கொண்டிருந்தவை அவர்களுடைய படைப்புக்கள்.கீழைத் தேய மனப்பான்மை மீதான பெருமிதமும் அதை இழந்து போவதிலுள்ள ஏக்கமும்
அந்தப் படைப்புகளில் தென்பட்டன.அதையட்டிய ஓர் ஆன்மீக உணர்வும் படைப்புகளில் இழையோடியது.முன்னோடிகளின் மனப்பாங்குக்கு முற்றிலும் மாறானவர் ஹருகி முரகாமி.அவரது எழுத்துக்களில் இடம் பெறும் ஜப்பான் கலாச்சாரக் குலைவுக்குள்ளான நாடு.கீழ்த்திசை அடையாளங்கள் உதிர்ந்து ஐரோப்பியமயமாகி வரும் தேசம்.மரபுசார்ந்த ஒழுக்கங்களிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட நினைப்பவர்கள் அவரது மனிதர்கள்.அதனால் எழும் புதிய சங்கடங்களால் திணறுபவர்கள். கவாபாட்டாவும் பிறரும் ஜப்பானிய இலக்கியத்தில் நவீனத்துவத்தின் பிரதிநிதிகள். தொழில்யுகத்தின் மானுடக் குழப்பங்கள் பற்றிய விசாரணைகளில் அக்கறை கொண்டிருந்தவர்கள். முரகாமி பின் நவீனத்துவ எழுத்தாளர்.அவரது அக்கறை வீடியோ யுகத்தில் வாழும்
மனிதர்களின் இருப்புப் பற்றியது.

எழுத்துத்துறையில் மட்டுமல்ல தனி வாழ்க்கையிலும் முரகாமி பின் நவீனத்துவ அடையாளங்கள் கொண்டவர்.அவரது எழுத்தார்வத்தைத் தூண்டி விட்டவை ஐரோப்பிய இலக்கியங்களும் ஜாஸ் இசையும்தாம்.பெரும் வாசக வட்டத்தை உள்
நாட்டிலும் வெளிநாட்டிலும் உருவாக்கிக் கொடுத்திருப்பது அவருடைய இந்தச் சாய்வுதான்.

ஹருகி முரகாமி 1949 ஜனவரி 12 ஆம் தேதி கியோட்டா நகரத்தில் பிறந்தார். இளமைப்பருவம் முழுவதும் கோபே நகரத்தில் கழிந்தது.பெற்றோர் இருவரும் ஜப்பானிய இலக்கியம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருந்தனர்.வீட்டில் எந்நேரமும் ஜப்பானிய இலக்கியம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. அந்தச்சலிப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முரகாமி தேர்ந்தெடுத்தது
வெளிநாட்டு இலக்கியங்களை.பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கிய ஆசிரியர்களான ஆன்டன் செக்காவ்,தாஸ்தயேவ்ஸ்கி,·ப்ளாபேர்,சார்லஸ் டிக்கன்ஸ் முதலானவர்கள் அவருடைய அபிமான எழுத்தாளர்களாக இருந்தனர்.
பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையில் பயின்றார் முரகாமி.அந்தக் கால கட்டத்தில் அவருடைய வாசிப்பு அமெரிக்க இலக்கியத்தை மையமாகக் கொண்டிருந்தது.கூடவே பாப் இசையிலும் ஆர்வம் தோன்றி வளர்ந்தது. இருபத்தி இரண்டாம் வயதில் சக மாணவியான யோகோ தகாஷியைத் திருமணம் செய்துகொண்டார்.தம்பதிகள் இருவரும் பகல் வேளைகளில் உணவகத்திலும் இரவுகளில் ஜாஸ் கிளப்பிலும் பணி புரிந்து பொருளீட்டினர். யோகோவின் தகப்பனார் உதவிய கடன் தொகையையும் தங்கள் சேமிப்பையும்
வைத்து சொந்தமாக ஒரு ஜாஸ் கிளப்பைத் தொடங்கினர்.தங்களுடைய செல்லப் பூனை பீட்டர் கேட்டின் பெயரை கிளப்புக்கு வைத்திருந்தார்கள்.கிளப்பில் வேலை செய்துகொண்டே படித்துப் பட்டம் பெற்றார் முரகாமி.எழுத்திலும் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டார்.இலக்கியப்பணி மூலம் புகழும் பொருளும் கிடைக்கத் தொடங்கியதும் கிளப்பை விற்று விட்டு முழுநேர
எழுத்தாளரானார். இந்த கால அளவில் அவரது எழுத்துப் பணி சில கதைகளை எழுதுவதும் அமெரிக்க இலக்கியங்களை ஜப்பானிய மொழியில் பெயர்ப்பதுமாக
அமைந்தது.

இருபத்தியன்பதாம் வயதில் ஒருநாள் விளையாட்டு அரங்கு ஒன்றில் இரண்டு அணிகளுக்கிடையிலான பேஸ் பால் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாவல் எழுதுவதற்கான தூண்டுதல் உண்டானதென்று குறிப்பிடுகிறார் முரகாமி.அப்படி எழுதப்பட்டதே அவரது முதல் நாவலான ‘காற்று பாடுவதைக் கேள்’.புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கான குண்சோ விருதை இந்த நாவல் பெற்றதோடு ஹருகி முரகாமி ஜப்பானிய இலக்கிய உலகில் எதிர்பார்ப்புக்குரிய நட்சத்திரமானார்.தொடர்ந்து வந்த அவரது பிற நாவல்களும் கதைகளும் ஜப்பானிய வாசகர்களால் வரவேற்கப்பட்டு பெருமளவில் வாசிக்கப் பட்டன.முப்பதுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன. பெரும் எண்ணிக்கையில் அவரது நூல்கள் விற்பனையாயின;ஆகின்றன.
முரகாமியின் எழுத்தை வெளியிடுவது இலக்கிய கௌரவம், அதிக விற்பனைக்கு உத்தரவாதம் என்ற நோக்கில் பத்திரிகை ஆசிரியர்கள் அவரைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். சீரிய இலக்கிய ஆர்வலர்களையும் மேம்போக்கான வாசகர்களையும் ஒருசேர ஈர்க்கும் எழுத்து முரகாமியுடையது என்பதன் அடையாளம் இந்தத் துரத்தல். வெகுசன அங்கீகாரம் என்ற ‘வசீகரஅபாயத்’தின்
துரத்தலும் கூட.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபரீத ஆசைக்கு ஆட்பட்டேன்.ஒரு சிற்றேட்டைத் தொடங்கி நடத்துவது என்பது அந்த ஆசை.புதிதாகத் தொடங்குவதற்குப் பதிலாக முன்னர் வெளிவந்து நின்று போன ‘அன்னம் விடு தூதை’ மறு வெளியீடு செய்யலாம் என்பது நண்பர் கதிரின் யோசனையாக இருந்தது.ஏற்றுக்கொண்டேன்.இதழுக்காக எழுத்துக்களைச் சேகரிக்கவும் தொடங்கினோம்.புத்தம் புதுசான மொழிபெயர்ப்புச் சிறுகதையை வெளியிட யோசித்திருந்தேன்.தமிழ் வாசகர்களுக்கு முன்னர் அறிமுகமாகியிராத பிற
மொழி எழுத்தாளர்களாக இருந்தால் சிலாக்கியம் என்று தோன்றியது.என்றாவது வாசிப்பதற்காக முன்கூட்டியே வாங்கி வைத்திருந்த புத்தகங்களிலிருந்து ‘பூகம்பத்துக்குப் பிறகு’ என்ற சிறுகதைத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் இடம்பெற்றிருக்கும் ஆறு கதைகளும் மெல்லமெல்ல ஈர்க்கத் தொடங்கின. எதார்த்ததின் மீது நுட்பமாகப் புனையப் பட்ட கதைகள்.புனைவு முறையில்
புலப்பட்ட நூதனம்.இவை இரண்டும் வாசிப்பை முன் நடத்தின.தொகுப்பில் மிகச் சுவாரசியமானது என்று தோன்றிய ‘டோக்கியோவைக் காப்பாற்றிய தவளை’ (Super frog saves Tokyo) கதையைத் தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்வதற்காக நண்பர் செழியனுக்கு அனுப்பிவைத்தேன்.அவரும் நேர்த்தியாக மொழிபெயர்த்து அனுப்பினார்.அதற்குள் பத்திரிகை ஆசை கலைந்து போனது.
செழியன் மொழிபெயர்த்த கதை பின்னர் ‘உயிர்மை’ இதழில் வெளியானது. இந்தத் தொகுப்பிலும் இடம்பெற்றிருக்கிறது.

முரகாமியின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜே ரூபின் ‘ஹருகி முரகாமியும் சொற்களின் இசையும்’ (Haruki murakami and the Music of Words – Harwill 2002) என்ற நூலில் முரகாமியின் எழுத்துக் கலையைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார். தற்செயலாக அகப்பட்ட இந்தப் புத்தகமே முரகாமியை நெருங்க உதவியது.எனினும் முரகாமி படைப்புகளுடனான என்னுடைய வாசிப்பனுபவம் விரிவானதல்ல.அவருடைய மூன்று நாவல்களும் (நார்வீஜியக் காடு -Norwegien Wood, எல்லைக்குத் தெற்கில் சூரியனுக்கு மேற்கில் – South of the boarder West of Sun, கடற்கரையில் கா·ப்கா – Kafka on the shore) மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் (யானை மறைகிறது – The elephant vanishes, பூகம்பத்துக்குப் பிறகு – After the quake, இருண்ட வில்லோ தூங்கும் பெண் – Blind willow Sleeping woman) மட்டுமே முரகாமியைப் பற்றிய என்னுடைய பார்வைக்கு அடித்தளம்.

ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலம் இந்திய வாசகனுக்கு அறிமுகமாகியுள்ள முரகாமியின் படைப்புகள் இரண்டு பெரும் பிரிவுகளில் அடங்குபவை. நாவல்கள், சிறுகதைகள் ஒரு பிரிவு.உரைநடை ஆக்கங்கள் இன்னொரு பிரிவு. முதற் பிரிவில் ஒன்பது நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும். இரண்டாவது பிரிவில் இடம் பெறும் ‘அண்டர்கிரவுண்ட்’ என்ற நூல் ஜப்பானில் நடந்த கூட்டக்கொலை பற்றிய இதழியல் ஆய்வு. இவை தவிர முரகாமியின் நேர்காணல்களின் தொகுப்புகள்.இந்திய அல்லது தமிழ்
வாசகனுக்கு அணுக எளிதான முரகாமியின் படைப்புலகம் இந்தப் பரப்பில் அடங்கும் என்று எண்ணுகிறேன்.அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகள் பலவற்றை ஜப்பான் மொழியில் பெயர்த்திருக்கிறார் முரகாமி. அது அவரது படைப்புலகில் தமிழ் வாசகன் நுழைய அவசியமில்லாத பகுதி.

முரகாமியின் நாவல்களில் என்னைக் கவர்ந்தது நார்வீஜியன் வுட்.எண்பத்தி ஏழில் வெளிவந்த இந்த நாவல் புதிய தலைமுறை ஜப்பானியர்களை வெகுவாக ஈர்த்ததாகக் குறிப்பிடப் படுகிறது.நாவலுக்கு ஆங்கிலத்தில் பிரபலமான இரண்டு
மொழிபெயர்ப்புகள் உள்ளன.எண்பத்து ஒன்பதில் ஆல்·பிரட் பிர்ன்பாம் மேற்கொண்ட மொழியாக்கம். இரண்டாயிரமாவது ஆண்டில் வெளியான ஜே ரூபினின் மொழிபெயர்ப்பு. இந்த நாவலுக்கு முன்பு அவர் எழுதிய நாவல்கள் சிக்கலான புனைவாக்கம் கொண்டவை. கதையாடலில் பின்னல்கள் கொண்டவை. மாறாக ‘நார்வீஜியன் வுட்’ எளிமையான நடையில் இயங்குகிறது.மேலோட்டமான
பார்வைக்கு சாதாரணமான காதல் கதையாகத் தென்படும் நாவலில் நவீன ஜப்பானியனின் தடுமாற்றமும் ஆன்மீகப் பதற்றமும் முன்வைக்கப் படுகின்றன. விரிவான அர்த்தத்தில் எல்லாக் கீழ்த்திசை நாடுகளின் மானுடச் சூழலுக்கும் அவை பொருந்தும்.

‘நார்வீஜியன் வுட்’ என்ற தலைப்பு பீட்டில்ஸ் இசைக் குழுவினர் பாடிப் பிரபலப்படுத்திய பாடலின் முதல் அடி.தோரு வத்தானபே என்ற முப்பத்தியேழு வயதுக் கதாபாத்திரத்துக்கு மிகப் பிடித்தமான வரி அது. அந்த வரியைக் கேட்டதும் அவன் தன்னுடைய பல்கலைக்கழக நாட்களுக்குச் சென்று விடுகிறான்.அவனுடைய பல்கலைக் கழக சக மாணவன் கிஸ¤கி தற்கொலை செய்து இறக்கிறான்.கிஸ¤கியின் தோழி நவகோவுக்கு அந்த மரணத்தையட்டி வத்தானபேயுடன் நெருக்கம் ஏற்படுகிறது.நவகோவின்
மனத்தளர்ச்சிதான் அவள்மேல் காதல் கொள்ளச் செய்கிறது.ஆனால் அவளோ மன நலத்துக்காக விடுதியில் சேர்கிறாள்.வத்தானபே தனிமையில் துவளுகிறான். மிடோரி என்ற பெண்ணின் காதல் அவனைத் தேற்றுகிறது.இந்த முக்கோணக் காதலில் முக்கியக் கதாபாத்திரங்களின் மனவுலகமே பிரதானமாகிறது. வத்தானபேயின் பிரச்சனை இலட்சியக் காதலுக்கு விசுவாசமாக இருப்பதா?
ரத்தமும் சதையுமான நிகழ்கால மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வதா? என்பதுதான். இதுதான் தற்கால ஜப்பானியனின் ஆன்மீகத் தடுமாற்றம் என்கிறார் முரகாமி. இதன் வெவ்வேறு தளங்களைத்தான் தன் படைப்புகளில் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார்.இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கதைகளில் வரும் கதை மாந்தரின் வெவ்வேறு முகபாவங்களிலும் மனப் பாங்கிலும் முரகாமியின் ஒப்புதலுக்கான சான்றுகளைக் காணக் கூடும்.

அவரது சொந்த நாட்டில் தீவிர விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கும் எழுத்தாளர் முரகாமி.ஜப்பானிய மண்ணின், மக்களின் பிரச்சனைகள் அவரது எழுத்துக்களில் முதன்மைப் படுத்தப்படுவதில்லை என்பது அவருக்கு எதிரான புகார்.’நான்
காணும் ஜப்பான் அப்படியானதல்ல.இது வீடியோ யுக ஜப்பான்.இங்கே ஒவ்வொரு தனி மனிதனும் அன்னியமாகியிருக்கிறான்.உறவுகள் சிதிலமடைந்து சிதறியிருக்கின்றன.சாப் ஸ்டிக்குகளை வைத்துக்கொண்டு உணவருந்தும்
காலம் மாறியிருக்கிறது.பிஸ்ஸாவும் பெர்கரும் ஜப்பானிய உணவுப் பதார்த்தங்கள். எந்தப் பெண்ணும் கிமோனா அணிவதில்லை. சூட்டும் கோட்டும் பொது உடையாகி விட்டன.உறவுகளின் அர்த்தங்கள் மாறிவிட்டன.அதைத்தான் என் எழுத்துக்களில் கொண்டு வருகிறேன்’ என்று வாதிக்கிறார் முரகாமி.’மரபும் கலாச்சாரமும் கொண்டாடும் ஜப்பானிலிருந்து தப்புவதன் மூலமே ஜப்பானைப்
பற்றி எழுதுவதாக’ சொன்ன வாக்குமூலம் அவரது படைப்பு மனநிலையின் ஆதாரப் புள்ளி.

முரகாமி எளிதில் பிடிபடாத எழுத்தாளர்.இரண்டு விதமான செய்நேர்த்தியில் அவரது படைப்பாக்கம் அமைகிறது.ஒன்று:திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நிதானமான எழுத்து. மற்றது: ஒழுங்கு குலைந்த அராஜகமான எழுத்து.அவரது கதைகளை இன்ன இயலைச் சார்ந்ததென்று வகைப்படுத்துவதும் கடினம். நடப்பியல் கதைகளையும் அதிபுனைவாக்கங்களையும் எழுதியுள்ளார். தொகுப்பிலுள்ள ‘குடும்ப விவகாரம்’கதையை நடப்பியல் பாணிக் கதையாகவும் ‘டோக்கியோவைக் காப்பாற்றிய தவளை’ கதையை அதி புனைவாக்கம் சார்ந்ததாகவும் வகுக்கலாம். இந்த இருமுறைகளும் இணைந்த கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.’ஷினகாவா குரங்கு’அதற்குரிய எடுத்துக் காட்டு.அதி புனைவாக்கங்களுக்கு கா·ப்காவும் நடப்பியல் கதைகளுக்கு ரேமண்ட் கார்வரும் அவருக்கு முன்னோடிகள்.ஆனால் கா·ப்கா பாணி வினோதமோ கார்வர் பாணி நடப்பியலோ அல்ல முரகாமியுடையது.கா·ப்காவின்
கதைகள் நடப்பியல் தளத்தின் மீது நிகழும் புனைவு,கார்வரின் கதைகள் நடப்பியல் தளத்தில் இயங்கும் மனவினை அலசல்.முரகாமி நடப்பியலாகத் தொடங்கும் கதைகளைப் புனைவாகவோ புனைவாக ஆரம்பிக்கும் கதைகளை நடப்பியலையட்டியதாகவோ மாற்றுபவர்.அதனால் அவரால் எதார்த்தமானவை உருவகத்தன்மைகொண்டவை, படிமத்தன்மையானவை, நீதிக்கதை,மர்மக்கதை
என்று பலவிதமான ஜலரூபங்களில் கதைகளை உருவாக்க முடிகிறது.

மனிதனின் இருப்பும் பாலியல் பிரச்சனைகளும் முரகாமி எழுத்தின் முதன்மை இழைகள்.இருப்பின் சிக்கல்களைப் போலவே இல்லாமல் போவது பற்றிய துக்கமும் அவரது கதைகளில் தென்படுகின்றன.சமயங்களில் இருப்புக்கு காரணமே பாலியல் வேட்கையாக இருக்கிறது.’என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம்’ கதையில் இரண்டும் பின்னிக் கிடக்கின்றன.கதை
சொல்லியான பள்ளித் தோழன் வாழ்க்கை முழுமையடையாமல் போனதற்குக் காரணமாகக் கருதுவது, அவனுடைய தோழி உடலால் இன்பம் தராததே. குடும்ப விவகாரம் கதையில் அக்காவின் இருப்பையும் தம்பியின் இருப்பையும் நிர்ணயிப்பது செக்ஸ் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டங்கள்தாம்.

முரகாமியின் கதையின் இன்னொரு சுவாரசியமான அம்சம் காணாமற் போவது. பெரும்பாலான கதைகளில் யாராவது காணாமற்போய்க்கொண்டே இருக்கிறார்கள் ‘தேடுதல்’ கதையில் காணாமல்போன கணவனைக் கண்டுபிடிக்க ஆலோசகரைத்
தேடிவரும் மனைவியை முதலில் அறிமுகம் கொள்ளுகிறோம்.ஷினகாவா குரங்கு கதையில் யூகோ காணாமற் போகிறாள்.முரகாமியின் நாவலொன்றில் கிரீசில் ஒரு தீவுக்குக் காதல் பயணம் செல்லுகிறார்கள் இருவர்.வாழ்க்கையில் துயர
அனுபவங்களுக்குள்ளான பெண்ணின் உலகையும் அவளது காமத்தையும் தாங்க முடியாமல் காதலன் காணாமற் போகிறான்.’முழுமையற்ற உலகில் வாழும் முழுமையற்ற மனிதர்கள் அப்படித்தானே இருக்கமுடியும்’ என்பது முரகாமியின் விளக்கம்.

சமூக அக்கறையில்லாத எழுத்தாளார் என்பது முரகாமியின் மீதுள்ள மற்றொரு இலக்கியக் குற்றச்சாட்டு.ஆனால் அது தவறு என்று முரகாமி நிரூபித்தது பிரத்தியேகமான முறையில்.’அண்டர்கிரவுண்ட்’ என்ற அவரது கட்டுரை நூல் ஜப்பானில் நிகழ்ந்த பெரும் கொடுமை ஒன்றுக்கு அவர் காட்டிய எதிர்வினை. ஷோகோ அஷாரா என்ற புத்த துறவியின் ஓம் பிரிவின் ஆதரவாளர்கள்
ஜப்பானின் சுரங்கப்பாதைகளில் விஷ வாயுவைச் செலுத்திப் பலரைக் கொன்றார்கள்.மோட்சத்துக்கு சுலபமாகச் சென்றடைய அவர்கள் கண்டுபிடித்த உபாயம்.பலர் இறந்தனர்.பலர் நெரிசலில் சிக்கியும் நச்சுப் புகையைச் சுவாசித்தும் ஊனமடைந்தார்கள்.1995 மார்ச்சில் நடந்த சம்பவம் பற்றி முரகாமி எழுதிய நூல் ‘அண்டர்கிரவுண்ட்’.சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்களை நேரில்
சந்தித்து நூலை எழுதினார்.

ஹருகி முரகாமியின் ஆறு கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு தமிழ் இலக்கிய வாசிப்பில் புதிய நுண்ணுணர்வைப் பங்களிக்கலாம்.புதிய சுதந்திரத்தை வழங்கலாம்.தான் ஓர் எழுத்தாளனாக மதிக்கப்படுவதும் தனது நூல்கள் ஏராளமாக விற்கப்படுவதும் எதனால் என்ற கேள்விக்கு முரகாமி அளித்த பதில் பின்வருமாறு:

”என்னுடைய புத்தகங்கள் வாசகர்களுக்கு ஒருவிதமான சுதந்திர உணர்வைத்தருகின்றன.நிஜ உலகிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தின் உணர்வை”

முரகாமியின் வார்த்தைகளை உரசிப் பார்க்க இந்த மொழியாக்க நூல் நமக்கு உதவும்.

திருவனந்தபுரம்
25 டிசம்பர் 2006
சுகுமாரன்

(வம்சி புக்ஸ், திருவண்ணாமலை வெளியிடவிருக்கும் ஹருகி முரகாமியின்
‘100% பொருத்தமான யுவதியை ஓர் அழகான ஏப்ரல் காலையில் பார்த்த
போது…’
என்ற தொகுப்புக்கு எழுதிய முன்னுரை. மொழிபெயர்ப்பாளர்கள் –
ஜி.குப்புசாமி,செழியன்,ராஜகோபால்
)

n_sukumaran@rediffmail.com

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்