நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

பி கே சிவகுமார்


நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்” எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளர் சரித்திரம் இதுவரை வெளிவராத பல அரிய செய்திகளை உள்ளடக்கியிருப்பதாக உ.வே. சாமிநாதய்யரால் பாராட்டப்பட்டதாக ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.

“சாதி அமைப்புப் பற்றிய ஒற்றைப் பரிணாம பார்வையை காலனியாதிக்க ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி, சாதி அமைப்பின் தீண்டாமை என்ற ஒன்றை மட்டுமே மையப்படுத்தி, இந்திய சமூகத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றதில் சாதி அமைப்பு ஆற்றிய பணிகளை மறைத்து, எதிர்மறை நோக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சாதி ஒழிப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதி மீது துவேஷம் ஏற்படுத்தவும் முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். காலனியாதிக்க ஆதரவாளர்களுக்கு இது ஒன்றும் புதிய உத்தியல்ல. அமெரிக்க பூர்வகுடி மக்களைப் பிணந்தின்னிகளாகவும், பெருமையுடன் விளங்கிய பலதெய்வ வழிபாட்டாளர்களை நாகரிகமற்றவர்களாகவும் சித்தரித்து, உருவ வழிபாட்டை இழித்துப் பேசி, காலனியாதிக்கத்தைப் பரப்ப மதத்தைக் கைக்கொண்ட வரலாற்றின் ஒரு கண்ணிதான் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்திய காலனிய அதிகார வர்க்கத்தின் சாதி ஒழிப்பு நாடகம். ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாசாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம். இந்திய சமூகத்தில் மட்டுமல்லாமல் ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்புப் பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்த நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என்று நம்புகிறோம்” என்று பதிப்புரையில் கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார்.

ஓவியர் புகழ் வரைந்த ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் கோட்டோவியம் புத்தகத்தின் பின்னட்டையை அலங்கரிக்கிறது.

இந்நூல் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரைக் குறித்து எழுதப்பட்டதாயினும் தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் படித்தறிய வேண்டிய தன்மை கொண்டதாய் உள்ளது உ.வே.சா. குறிப்பிட்டது எவ்வளவு உண்மை என்பதை ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் முயற்சியாலும் உழைப்பாலும் உருவான இந்நூலைப் படிப்போர் அறிவர்.

ஏறக்குறைய 126 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 65.


pksivakumar@yahoo.com

Series Navigation