நாயகனும் சர்க்காரும்..

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

புதியமாதவி


எங்க மும்பையின் அசல் நாயகனைப் பற்றிய அசலான ஒரு திரைப்படம்..

‘சர்க்கார் ‘. வழக்கம்போல எல்லா திரைப்படங்களுக்கும் போடுகிற மாதிரி

ஓர் அறிவிப்பு, படம் ஆரம்பிக்கும் முன்பு..

‘கதையும் கதாபாத்திரங்களும் எந்த மனிதர்களுடனும் தொடர்புடையன அல்ல. கற்பனையே ‘ என்று.

அதுவும் சர்க்கார் படத்திற்கு இப்படி ஓர்

அறிக்கையைப் போடும் போது அபத்தமாகவே இருந்தது!. ஏனேனில்

படம் முழுக்கவும் மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரேவைச் சுற்றி

பின்னப்பட்டிருக்கும் கதை. 99% பால்தாக்கரேவின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களுடன் ஒப்பிட்டு

ரசிக்க கூடிய பின்னணி. சர்க்காராக நடிக்கும் அமிதாப்பச்சனின் நடை, உடை, பேச்சு, கை அசைப்பு,

கழுத்தில் தொங்கும் உத்திராட்ச மாலை,

அவர் மனைவி..மூத்த மகன்.. வீடு..இத்தியாதி …இப்படி சகலமும்

பால்தாக்கரேவுடன் சம்மந்தப்பட்டவையே. அதனாலேயே படம் வெளியாகும் முன்பு பால்தாக்கரே தன் குடும்பத்துடனும்

சிவசேனை முக்கிய நபர்களுடன்

பார்த்து -கிட்டத்தட்ட நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் கொடுத்தப் பின்-

திரை அரங்குகளுக்கு வந்தது. அமிதாபச்சன் பால்தாக்கரேயாக நடிப்பதும்,

தம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரைப் பற்றி அவருடைய

வாழ்நாளிலேயே எடுக்கப்பட்ட கதை என்பதாலும் திரையரங்குகள் நிரம்பியதும் மும்பை மக்கள் வெகுவாக

ரசித்ததும் இங்கு நடந்தக் கதை.

இனி, ஆரம்பக்காலத்தில் மும்பையில் மாதுங்கா பகுதியில் எடுக்கப்படும்

பெரியவர் வரதராசனார் அவர்களின் கண்பதியும் பந்தல் அலங்காரங்களும்

மும்பையின் தமிழர்கள் வரலாற்றுடன் சம்மந்தப்பட்டச் செய்திதான். அவருடைய கணபதி உற்சவத்திற்கு

பத்துநாட்களும் தமிழ் நாட்டின் திரை உலகிலிருந்து வராத பாடகர், பாடகிகளே இருக்க முடியாது. ஒரு முறை

அந்தப் பந்தல் தீப்பிடித்தது.. தீடிரென. மறுநாள்காலை பெரியவர் வரதராசன், தாராவியில் ஒருவரை

அழைத்துக்கொண்டு மும்பை பாந்திரா பகுதிக்கு

விரைகிறார். பால்தாக்கரேயுடன் சந்திப்பு. பந்தல் மீண்டும் 24 மணிநேரத்திற்குள் எழும்பி நிற்கிறது..

இதுவும் இங்கு நடந்தக் கதை.

தாதாவாக இருந்து மும்பையைக் கலக்கிய போதெல்லாம் அச்சப்படாத

மும்பையின் அரசும் காவல்துறையும் பெரியவர் வரதராசன் ‘தமிழர்ப்பேரவை ‘ என்ற அமைப்பை உருவாக்கி

தமிழர்களின் நலனுக்காக

குரல் கொடுக்க ஆரம்பித்தவுடன் விழித்துக்கொண்டது. பல இலட்சம் தமிழர்களை ஒன்றுதிரட்டி ஈழத்தமிழர்களின்

விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர் நடத்திய பேரணிகள், நிதித்திரட்டும் கூட்டங்கள்..

இனி, மும்பையில் இவரை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டு .. அதன் பின் நடந்தக் கதை

அனைவரும் அறிந்தக் கதை.

மும்பையில் மண்ணின் மைந்தர்கள் அனைவரும் பால்தாக்கரேவின் அரசியல் கருத்துகளுடன் ஒத்துப்போகிறவர்கள்

இல்லைதான்.மாறுபட்ட கருத்துகள் உடையவர்கள் பலர். ஆனால் பெரியவரிலிருந்து சிறியவர் வரை,

படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக

ஒரு நம்பிக்கை இன்றும் இருக்கிறது. ‘பால்தாக்கரே சாப் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு ஓர் ஆபத்து என்றால்

அரசியல் இலாபங்களுக்காக

தன் மக்களைக் காவு கொடுத்துவிட மாட்டார் ‘ என்று நம்புகிறார்கள்.

இன்று அரசியல் தளத்தில் அவரை எதிர்த்து காங்கிரசில் சேர்ந்த ராணே கூட பால்தாக்கரேவே

எதிர்க்கவில்லை, அவருடைய வாரிசு அரசியலை மட்டுமே எதிர்ப்பதாகச் சொல்லியிருப்பதையும் நினைவில்

கொள்ள வேண்டும்.

பால்தாக்கரே பற்றிய சர்க்கார் திரைப்படமும் சரி..

பெரியவர் வரதராசன் பற்றிய நாயகன் திரைப்படமும் சரி..

சொல்லாத காட்டாத உண்மைச் சம்பவங்கள் இப்படி பல உண்டு.

அண்மையில் மும்பையில் பெய்த கன கன கனமழையில் (சென்னையில் 40 செ.மீ கனமழை என்கிறார்கள்,

அப்படியானால் மும்பையில் பெய்த 99 செ.மீ மழைக்கு அதிக கன கன வேண்டாமா!) மும்பையில் பலரின் குரல்

மும்பை நகரை தனி அரசாக டில்லி போல ஆக்க வேண்டும் என்று ஒலித்தது. அப்படி குரல் கொடுத்தவர்கள்

எல்லோரும் பெரிய தொழிலதிபர்கள். கோடிக்கணக்கில் வருமானவரி கட்டுபவர்கள். பல்வேறு

மதம், இனம், மொழி சார்ந்தவர்கள். மும்பையின் எல்லா பத்திரிகைகளிலும் இது குறித்த செய்திகள்,

கருத்துக் கணிப்புகள்.. அடேங்கப்பா.. போகிறப்போக்கில் இதைச் சாக்குவைத்து காரியம் சாதித்து

விடுவார்கள் போலிருக்கிறதே என்று நினைக்கிற அளவுக்கு இருந்தது.

இது குறித்த தொலைக்காட்சி விவாதமேடைகளுக்காக என் போன்றவர்கள்

ரிமோட்டும் கையுமாக உட்கார்ந்திருந்தோம்.

ஆனால்.. ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்தின் அனைத்து அமைப்புகள்,

அரசியல் கட்சிகள், தலைவர்கள், எழுத்தாளர்கள்.. ‘இது எங்கள் மும்பை ‘

என்று ஒரே குரலில் ஒலித்தார்கள்.. அதன் பின் கோடிக்கணக்கில் மும்பைக்கு வருமானத்தைக் கொடுக்கும்

தொழிலதிபர்களின் குரல்கள் ஒலிக்கவே இல்லை.! என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் ஊகங்களுக்கு விட்டு

விடுகிறேன்.!!

இனி.. தமிழர்களுக்கு கொம்பு முளைத்திருக்கிறதா ?

என்று ஒரு கேள்வியை தமிழ்நாட்டில் அதுவும் தமிழ்ச் சினிமாவினால் தமிழ் மக்களுக்கு அறியப்பட்டு அந்த ஒரே

தகுதிக்காரணமாக தமிழ் மண்ணில்

மேடை அளிக்கப்பட்ட நடிகை சுஹாசினி மணிரத்னம் அவர்கள் கேட்டிருக்கிறார்.. அந்த மேடையில் ‘ என்

இனிய தமிழ் மக்களே ‘

என்று அழைக்கும் இயக்குநர் பாரதிராஜாவும் இருந்திருக்கிறார்!

குஷ்பு சொன்ன கருத்துகள் அரசியலாக்கப்பட்டதுடன் எனக்கு உடன்பாடில்லைதான். விபச்சாரி, கன்னிமை, கற்பு

என்ற சொல்லாடல்களில் பெண் மட்டுமே நசுக்கப்படுவதும் ஆணுக்கும் இந்தச்

சொற்களுக்கும் எவ்வித ஒட்டு உறவுகளுமில்லாமலிருக்கும் நடைமுறைச்

சிந்தனைகளும் என் போன்றவர்களை ‘திசைமாறும் போராட்டக்களங்கள் ‘

எழுத வைத்தது. இந்தப் போராட்டங்களில் அதிகமாக ஈடுபடுவதும்

தலித்திய அமைப்புகள் என்ற செய்தியும் என் கவலைக்கு காரணமாக

அமைந்தது. இந்தக் கருத்து தளத்தில் காலம் கடந்து சுஹாசினி அவர்கள்

மூக்கை நுழைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு கருத்தை ஏன் சொல்ல வேண்டும் ?

இதற்குப் பின்னாலிருக்கும் பின்னணி என்ன ?

தமிழ் உணர்வாளர், என் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் சொன்னார்..

‘ எல்லா விளம்பரம் தேடித்தான்.. மேடம் சுஹாசினிக்கு இந்திய நடுவண் அரசின் பெண்ணியக்காவலர் அந்தஸ்து

விரைவில் கொடுக்கப்பட இருக்கிறதாம்..! அவர் துணிச்சலானவர் என்று காட்டிக்கொள்ளத்தான் இப்படி.. ‘

என்றார்.

இதைப் பற்றி எல்லாம் எழுதிப் பேசி அவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் இலவச விளம்பரத்தைக்

கொடுப்பதைத் தவிர்க்கவும் என்று

அறிவுரையும் செய்தார்.

இப்படி ஒரு கருத்தை வேறு எந்த அயல் மாநிலத்திலும் அந்த மாநிலத்து

மக்களைக் குறித்து சொல்லியிருக்கவே முடியாது! இம்மாதிரி அதிசயங்கள்

எல்லாம் தமிழ் மண்ணில் மட்டுமே தமிழர்களுக்கு மட்டுமே

அருளப்பட்டிருக்கும் வரப்பிரசாதங்கள்!

மராட்டிய மாநிலத்தவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு நம்பிக்கை..

தமிழ் மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்ற நிதர்சன உண்மைதான்

மேலே எழுதியிருக்கும் பலச் செய்திகளை.. துண்டு துண்டாக வெட்டி ஒட்டி

என் நினைவுகளையும் பக்கங்களையும் நிரப்பிக்கொண்டிருக்கிறது.

(பி.கு. சிவசேனை, பால்தாக்கரே, பெரியவர் வரதராசன் இவர்களின்

எல்லா செயல்பாடுகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றி)

….

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை