நான் அறிந்த மணி

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

வெங்கட் சாமிநாதன்நான் முதன் முதலாக மணியைப் (எங்களுக்கு அவர் வெறும் மணிதான். S.K.S. மணியோ, பாரதி மணியோ அல்லர்) பார்த்த நினைவு 1960-ன் ஆரம்பமாக இருக்கவேண்டும். புது டெல்லி கரோல் பாகில் வைத்தியநாதய்யர் மெஸ்ஸில் தங்கி இருந்த போது, உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் இருந்த ஹால் போன்ற பெரிய அறையில், (நான்கு கட்டில்கள் போடப்பட்டிருக்கும் அதில்) தங்கியிருப்பவரைப் பார்த்துப் பேச அளவளாவ வருவார். மணி ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதைப் பார்த்திருக்கிறேன். இருவரையும் எனக்கு பழக்கமில்லாத காரணத்தால் அந்த அளவளாவலில் நான் கலந்து கொண்டதில்லை. இருவரையும் ஒன்று சேர்த்தது அனேகமாக இருவரும் தமிழ் நாட்டின் தென்கோடியைச் சேர்ந்தவர்கள் என்பதும் கர்நாடக சங்கீதத்தில் இருந்த பிரேமையும் என்று நினைக்கிறேன். நான் அது பற்றிக் கேட்டதில்லை. பின்னர் பல வருடங்களுக்குப் பின் அந்த நண்பரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவர் பேசிய தமிழும் சங்கீத ஈடுபாட்டையும் கொண்டு இருவரையும் இணைத்தது இந்த இரண்டு பிணைப்புகள் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பிறகு நான் அதிக நாட்கள் அந்த இடத்தில் நீடிக்கவில்லை. அந்த நாட்களில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும் ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு போகும் நிலைதான் தில்லியில் வாழும் தனிக்கட்டைகளுக்கு இருந்தது. எங்களில் ஒரு சிலரை ஒன்று சேர்த்தது மாதம் ஒரு முறையாவது சந்தித்துக்கொள்ளச் செய்தது தில்லியிலிருந்து பிரசுரமாகிக்கொண்டிருந்த கணையாழி பத்திரிகையின் சார்பில் நடந்து வந்த மாதாந்திர இலக்கிய சந்திப்புகள். அதில் தெரியவந்தவர்களில் இப்போது முக்கியமாகப் பேசப்படவேண்டியவர், கணையாழியில் கம்பனையும் வால்மீகியையும் ரசித்து ஒரு ராமாயணத்தொடர் எழுதி வந்த கே.எஸ். சீனிவாசன். நல்ல இலக்கிய ரசிகர். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நிறைய ரசனையோடு படித்தவர். சங்கீதத்திலும் நாட்டியத்திலும் அவருக்கு ஞானமும் ரசனையும் உண்டு என்பது பின்னர் தான் எனக்குத் தெரிந்தது. அவர் எழுதிய ‘சந்தி’ (பெயர் சரிதான் என்று நினைக்கிறேன்) என்ற நாடகம் தில்லியில் AIFACS ஹாலில் நடிக்கப்பட்டது. தில்லியில் வெகு நாட்களாக நடந்து கொண்டிருந்த தக்ஷ¢ண் பாரத் நாடக சபாதான் அந்த நாடகத்தை மேடையேற்றியது. இதற்கு முன்னாலேயே பல வருஷங்களாக தக்ஷ¢ண் பாரத் நாடக சபாவைப் பற்றி நான் பத்திரிகைகளில் வரும் மதிப்புரைகள் வழியாக நான் கேள்விப்பட்டிருந்தாலும், எனக்கு அதில் ஏதும் அக்கறை இல்லாதிருந்தது. காரணம் இந்த தில்லி சபாவும் சென்னை சபா நாடகங்களையே தில்லியிலும் பிரதி செய்ததாகத் தோன்றியது தான். ஆனால் ‘சந்தி’ நாடகம் வித்தியாசமான ஒன்றாக இருந்தது. நாடகத்தை எழுதிய சீனிவாசன் வித்தியாசமாகச் சிந்திப்பவராகத் தான் எனக்கு கணையாழி சந்திப்புகளில் அவர் தெரிந்தார். அத்தோடு அதில் மணியும் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். சில வருஷங்களுக்கு முன் வைத்திய நாத அய்யர் மெஸ்ஸில் இருந்த தன் நண்பரைப் பார்க்க வந்துகொண்டிருந்தவரல்லவா இவர் என்று நினைத்துக்கொண்டேன். அந்த நாடகத்தில் வேறொன்றும் எனக்கு நினைவில் இல்லையென்றாலும், தரையில் உட்கார்ந்து கொண்டு அரிவாள் மனையில் காய்கறி நறுக்கிக் கொண்டே பேசிக்கொண்டிருக்கும் காட்சி இன்னும் பசுமையாகத்தான் இருக்கிறது. அந்த நாடகம் பற்றி அடுத்த நாளே தில்லி பத்திரிகைகளில் மதிப்புரை வெளியாகியிருந்தது. அந்த நாட்களில் இப்படி ஒரு வித்தியாசமான நல்ல பழக்கம் தில்லி பத்திரிகைகளில் இருந்தது. எந்த நிகழ்ச்சிக்கும் உடனுக்குடன் மறு நாளே பத்திரிகைகளில் அது பற்றி ரெவ்யு வந்து விடும். அதுவும் தரமறிந்த மதிப்புரையாக இருக்கும். எல்லாவற்றியும் சகட்டு மேனிக்கு பாராட்டும் சென்னை பத்திரிகைகள் மதிப்புரையாக இராது.

தக்ஷ¢ண் பாரத் நாடக சபாவில் மணி ஒரு முக்கியமான புள்ளியாக இருந்திருக்கவேண்டும். சந்தி நாடகத்தின் வித்தியாசமான முயற்சி சபாவுக்கும் மணிக்கும் சந்தோஷமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். இப்ராஹீம் அல்காஷி என்னும் ஒரு இளைஞர் தில்லியின் தேசீய நாடகப் பள்ளிக்கு பொறுப்பேற்று பத்து வருடங்களுக்கு மேலாகி அகில இந்திய பரப்பில் தன் தாக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ‘சடி ஜவானி புட்டேனு’ (கிழவனுக்கு வந்தது வாலிப முறுக்கு) என்பது போன்ற நாடகங்களை எழுதி மேடையேற்றி ரகளை செய்து கொண்டிருந்த பஞ்சாபி நாடகங்கள் மறையத் தொடங்கின. ஹிந்தி, மராத்தி வங்க நாடக வெளிகளில் அல்காஷியின் அந்தத் தாக்கம் தெரிந்த போதிலும் தமிழ் நாடு தன் தமிழ் மரபின் தனித்தன்மையை விடாது திரும்பத் திரும்ப வலியுறுத்தி தன் கற்பைக் காத்துக் கொண்டிருந்தது. அந்நாட்களில் தேசீய நாடகப் பள்ளியின் நாடங்களை பார்க்க வந்த கூட்டத்தில் தில்லித் தமிழர் யாரையும் பார்த்ததாக எனக்குத் நினவில் இல்லை. ஒரு நாள் இந்திரா பார்த்த சாரதியின் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது தக்ஷ¢ண் பாரத் நாடக சபாவின் மணி வந்து தன்னை அவர்கள் சபாவுக்கு என ஒரு நாடகம் எழுதித் தரக் கேட்டிருப்பதாகச் சொன்னார். அப்படித்தான் மழை நாடகம் எழுதப்பட்டது மட்டுமல்லாமல் தக்ஷ¢ண் பாரத் நாடக சபாவே அதை அதே AIFACS ஹாலில் மேடையேற்றவும் செய்தது. இந்திரா பார்த்த சாரதி நாடகாசிரியர் ஆனார். தமிழ் நாடக மேடையேற்றத்தில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியது. இதைச் சொல்ல வந்த காரணம் இந்திரா பார்த்த சாரதி நாடகம் பக்கம் பார்வை திரும்ப முதலும் முக்கியமுமான காரணம் எஸ்.கே.எஸ் மணி என்பதோடு, எப்போதும் தன் தன் சக்தி இட்டுச் செல்லும் தூரம் வரையிலும் பின் அதற்குச் சற்று மீறியும் கூட செயல்படவேண்டும் என்ற ஒரு துடிப்பு மணியிடம் இயங்கிக்கொண்டிருந்தது என்பதைச் சொல்லத்தான். மணி தூண்டியதால் மட்டுமே எல்லாம் நடந்துவிடும் என்று சொல்லவில்லை. இந்திரா பார்த்த சாரதியின் படைப்புகள் எல்லாமே பெரும்பாலும் உரையாடல்களாலேயே உருவானவை என்பதையும் நினைவு கொள்ள வேண்டும். இ.பா. உருவானது போல, கே.எஸ். சீனிவாசன் உருவாகவில்லையே. சந்தி யோடு அவரது நாடக நுழைவு நின்றுவிட்டது. ‘எனக்கு நாடகம் பார்ப்பதில் ஆர்வம் இருந்ததில்லை. எப்படி இருட்டில் இரண்டு மணி நேரம் சும்மா அப்படியே உட்கார்ந்திருப்பது?’ என்று ஒரு காலத்தில் சொன்னவர் இ.பா. “தப்பு பண்ணிட்டேய்யா, மழையை நாவலா எழுதியிருக்கலாம்” என்று சுஜாதா சொன்னதாகவும் இ.பா. சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் மீறி இ.பா. தொடர்ந்து நாடகம் எழுதியதும் பெரிய விஷயம் தான் இல்லையா?. இதற்குப் பிள்ளையார் சுழி இட்டது மணி தான்.

எனக்குத் தெரிந்து தக்ஷ¢ண் பாரத் நாடக சபாவோ மணியோ தமிழ் நாட்டு சபா நாடகங்கள் பக்கம் திரும்பவில்லை என்று தான் நினைக்கிறேன். அது மட்டுமில்லை. இ.பா வின் நாடகங்கள் தில்லி தக்ஷ¢ண் பாரத் நாடக சபாவால் சென்னைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. போர்வை போர்த்திய உடல்கள் நாடகம் தில்லியில் மேடையேறியதும் அதை அ· பத்திரிகையில் மேடைக் காட்சிகளின் புகைப்படங்களோடு வெளியிடவேண்டும் என்ற எண்ணினேன். அப்போது தான் தொடங்கியது தான் மணியோடுடனான எனது நெருங்கிய பழக்கம். புகைப்படங்களுக்காக மணியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது அவர் பார்லியமெண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள UCO bank கட்டிடத்தில் ஏதோ ஒரு பிர்லாவிடமோ டால்மியாவிடமோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் சில வருடங்கள் கழிந்து சுய சம்பாத்தியகாரராக மாறிவிட்டார். அதில் அவர் வெற்றியுமடைந்திருந்தார். சங்கீதம், நாடகம் என ஈடுபாடுகள் இருந்த போதிலும், சினேகங்களைப் பேணுவதிலும், முடிந்தவரை நண்பர்களுக்கு உதவும் இயல்புடன், வாழ்க்கையின் லௌகீக விஷயங்களிலும் அவர் கெட்டிக்காரராகத் தான் இருந்தார். இது இருந்தால் அது இருப்பதில்லை என்பது மணி விஷயத்தில் இல்லை.

சந்தியையும் மழையையும் தொடர்ந்து மணியின் நடிப்பையும் அவர் முயற்சிகளையும் நான் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்புக்களை தக்ஷ¢ண் பாரத் நாடக சபாவும் பின் அதைத் தொடர்ந்து எண்பதுகளில் தில்லி வந்த கி. பெண்ணேஸ்வரனின் நாடக ஈடுபாடும் தந்து கொண்டிருந்தன. மணியின் நாடக ஈடுபாடுகளும், நடிப்பும் அவரை மேலும் மேலும் என்ற தீவிர நாட்டம் கொண்டவராகக் காட்டியது. இருப்பினும் யாருடைய வளர்ச்சியும் நாடகம் அளிக்கும் வாய்ப்பைப் பொருத்துத் தானே அமையும். அதை சி.சு.செல்லப்பாவின் ‘முறைப்பெண்’ நாடகத்தை பெண்ணேஸ்வரனின் யதார்த்தா மேடையேற்றிய போது அந்த வாய்ப்பை அதில் நடித்த நடிகர்களுக்கு அந்த நாடகம் தந்தது. நவீன நாடக மோஸ்தரில் இருந்தவர்கள் யாரும் தொடாத செல்லப்பாவின் நாடகத்தை, கிராமச் சூழலையும் அதன் வாழ்க்கை மதிப்புகளையும் இயல்பாகப் பிரதிபலித்த முறைப்பெண் நாடகத்தைப் பெண்ணேஸ்வரன் எடுத்துக்கொண்டதும் நல்லதாயிற்று. தன் இயல்பில் மணி என்ன செய்யமுடியும் என்பதை அந்த நாடகம் காட்டியது.

நான் சென்னை வந்துவிட்டேன். வந்த ஒரு சில மாதங்களிலேயே மணியும் சென்னை வந்துவிட்டது தெரிந்தது. அதற்கு வாய்ப்பு அளித்தது ஞான ராஜசேகரனின் பாரதி படத்தில் அவன் பாரதியின் தந்தை சின்னசாமி அய்யராக நடித்தது. அதன் பின் அவர் பாரதி மணியாகவே அறிமுகப்படுத்தப் பட்டார். இங்கு பல திரைப்படங்களில் அவருடைய வயதுக்கும் நடிப்புத் தேவைக்கும் ஏற்ப சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வருகிறார். லெனின், ஜெயபாரதி போன்றாரின் வணிக நோக்கற்ற முயற்சிகளில் மாத்திரமல்ல, வணிக நோக்கிலான ரஜனிசாரின் பாபா போன்ற பெரும் படங்களிலும் அவர் கோமாளித்தனம் வேண்டாத பாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒரு கோமாளித்தனமும் பைத்தியகாரத்தனமும் நிறைந்த உலகில் ஒரு நிதானத்தோடும் சுய நினைவோடும் உலவுகிறார் என்று தான் சொல்லவேண்டும். கூத்தாட்டம் போடுவதில்லை அவர். இருப்பினும் தமிழ் சினிமாவிலும், அது ஜெயபாரதியோ, ஞான ராஜசேகரனோ எவ்வளவு சாத்தியமோ அது வரை தான் செல்ல இயலும். இருப்பினும் சிலர் தம்மால் சில உயரங்களை எட்ட முடியும் என்று பசுபதியும் ஷண்முக ராஜாவும் போன்றோர், தமிழ் சினிமாவில் அந்த சாத்திய எல்லையை சற்று விஸ்தரித்திருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். அதுவே கூட வணிக வெற்றியாக மாறிவிட்ட இப்போதைய சூழலில் இது எத்தனை நாளைக்கு நீடிக்குமோ தெரியாது. ‘இதோ பார் நான் நடிக்கிறேன் பார், என்னமா நடிக்கிறேன் பாத்தியா!” என்று சத்தம் போடாமல் கூத்தாட்டம் இல்லாமல் வாழ்வது தமிழ் நாடகத்திலும் சினிமாவிலும் சாத்தியமில்லை.

மணியின் சினேக வட்டம் விஸ்தாரமானது. அனுபவ உலகமும் மிக விஸ்தாரமானது. இவ்வளவு விஸ்தாரமானதா என்பதை, சாதாரணமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அதைப் பற்றியெல்லாம் சொல்லி அவர் அலட்டிக் கொளவதில்லை. வியப்பூட்டும் அளவுக்கு விஸ்தாரமானது. அதை இப்போது அவர் எழுதிவருவதிலிருந்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவது, மனுஷன் அளக்கறார்’ என்று தோன்றும். இல்லை அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் உண்டு. சொல்லாமல் விட்டதற்கு அந்தந்த சந்தர்ப்பங்களில் தனித்த காரணங்கள் இருக்கலாம். “வேண்டாம், இவரைப் பற்றிய இந்த விஷயங்களைச் சொல்லி, அவர் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பெயரைக் கெடுக்க வேண்டாம்” என்ற ஸ்வதர்மம் காரணமாக இருக்கலாம். “இந்த சம்பவத்தைப் பற்றி இந்த இடத்தில் இப்போது சொல்லவேண்டாம்” என்ற இடம் பொருள் ஏவல் காரணமாக இருக்கலாம். அவரிடம் சொல்வதற்கு நிறையவே இருக்கும். சங்கீத உலகம் பற்றிச் சொல்வதற்கும் நிறைய அவரிடம் உண்டு. அங்கும் அவரது சினேக வட்டம் பரந்தது. சாதாரணமாக இது பற்றியெல்லாம் சொல்லி அவர் அலட்டிக் கொள்வதில்லை. அதுவும் ஒரு ரசனை தான்.

இதை மணி விஷயத்தில் சொல்வதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். நல்ல ரசனை உள்ளவர். சங்கீத அனுபவத்தில் மாத்திரமில்லை. சினேக வெளிப்பாட்டிலும் சரி. மது அருந்துவதில் கூட அவரது அமைதியும் ரசனையும் சுகமானது. நான் அவரோடு கழித்த எந்த இரவும் மது அருந்தாத இரவாக இருந்ததில்லை. க.நா.சு குடும்பத்தோடு சேர்ந்து இருக்கும் போது கூட மணியின் அறையில் அவரது பார் காட்சி தரும். சென்னையில் நடந்த நாடகப் பட்டறைக்கு பதினைந்து நாட்களே தங்குவதாக இருந்தாலும், அவரோடு அவர் பார்-ம் அவர் அறைக்கு வந்து விடும். வெத்திலைச் செல்லம் இல்லாது எந்த சங்கீத வித்வான் தன் இடத்தை விட்டு நகர்வார்? சோடாமேகர் இல்லாது, ஐஸ் பாக்ஸ் இல்லாது மணி எங்கும் நகர்வது இல்லை. அந்த மணி இப்போது மதுவைத் தொடுவது இல்லை. ஆச்சரியம் தான். மது அருந்துவதும் ஒரு ரசனை என்றேன். ஒரு அனுபவம் என்றேன். வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பதில் மதுவும் சேர்ந்தது தான் அவருக்கு. நண்பர்களோடு கூடி அளவளாவுவது போல, நன்றாக ரசித்து சாப்பிடுவது போல. நல்ல கவிதையும் சங்கீதமும் கேட்பது போல. இதை அலங்கோலமாக்கும் (டாஸ்மாக் கடைக் கூட்டத்தை விட்டு விடுவோம்) தமிழ் இலக்கிய கலை உலக பிரமுகர்களை அவரும் அறிவார், நானும் அறிவேன். எதுவும் வாழ்க்கைக்கு அழகு சேர்க்க வேண்டும். ஒருவரின் நட்பின் ஆழத்தையும் தீவிரத்தையும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மாத்திரமே நான் அறிந்துகொண்டது என் அனுபவத்தில் உண்டு. உருது கவிதைகளும் மணம் சேர்க்கும். இந்த அமர்வுகளில், உருது படிக்க எழுதத் தெரியாத நான் கற்றுக்கொண்ட உருது கவிதைகளே நிறைய.. மங்கி வரும் நினைவுகளில் தங்கிய ஒன்று:

பிஸ்தர்கி சில்வட்டோன் சே பூச், பேகராரி உஸ்கி
ஜிஸ்னே காட்டீ ஹோ ராத், கர்வட் பதல் பதல்கர்.

உமர்களையும் கய்யாம்களையும் நாம் இங்கு சந்திக்கலாம். இம்மாதிரி கவிதைகள் மது வோடு கிடைக்குமென்றால் அதன் அழகையும் ரசனையையும் பற்றி வேறென்ன சொல்லவேண்டும்?

வெங்கட் சாமிநாதன்/28.12.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்