நானாச்சு என்கிற நாணா

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த காலத்தை நோக்கி பயணிக்கத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். H.G.Wells எனக்கு மட்டும் தனியாக ஒரு கால வாகனம் செய்து கொடுத்திருக்கிறார். நான் அதில் பலமுறை பயணித்திருக்கிறேன். உங்களையும் சில முறை அழைத்துச் சென்றுமிருக்கிறேன் எனவே தயக்கமின்றி ஏறுங்கள.

திருநெல்வேலி மாவட்டம்.ஆழ்வார்குறிச்சி கிராமம். கீழத்தெரு எனப்படும் அக்ரஹாரம். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பிராமணர்கள் தான் வசித்து வந்தார்கள். மொத்தமே 50 வீடுகள் இருந்தால் அதிகம். பஸ் ஸ்டாண்டில் இறங்கி நேரே வந்தால் ஒரு தெப்பக் குளம் தெரியும் .அந்தக் குளத்தை ஒட்டி ஒரு தெரு போகிறதல்லவா அதுதான் கீழத்தெரு. ஆங்கிலத்தில் east Street. அந்த ஊரைப் பொறுத்தவரை எந்த விசேஷமாக இருந்தாலும் அதை அவரவர் வீடுகளில் வைத்து நடத்துவது தான் வழக்கம். வாசலில் பெரிதாக பந்தல் போட்டிருப்பார்கள். அதை வைத்து எந்த வீட்டில் விசேஷம் என்று வருபவர்கள் ஊகித்துக் கொள்ளலாம்.

கல்யாணம் என்றால் சம்பந்தி வீட்டார் தங்குவதற்கென்று காலியாயிருக்கும் ஏதாவது ஒரு வீட்டை தயார் செய்திருப்பார்கள். எப்படியாவது ஏதாவது ஒரு வீடு காலியாகத்தான் இருக்கும். அதை பயன்படுத்திக் கொள்வார்கள். சமையல் , சாப்பாடு எல்லாம் பெண் வீட்டில்தான். மூன்று நாட்கள் முன்னாதாகவே சமையற்காரர்கள் வந்து விடுவார்கள். தேவையான சாமாங்கள் எல்லாம் முன் கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்து விடுவார்கள். கடைசி நிமிட அவசரத்திற்கு கை கொடுக்க இருக்கவே இருக்கிறது குருநாதன் கடையும் , காசா கடையும்.

பூணூல் என்றாலும் இவ்வளவு ஏற்பாடுகளும் உண்டு. சம்பந்திகள் தங்குவதற்குப் பதிலாக உறவினர்கள் தங்குவார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். இது போன்ற நாட்களில் உதவிக்கு எத்தனை பேர் இருந்தாலும் போதாது. எல்லாருக்கும் ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டேயிருக்கும். ஒன்றுமில்லையென்றால் இருக்கவே இருக்கிறது சீட்டாட்டம். இந்த சந்தர்ப்பங்களில் தான் நாணா என்ற நானாச்சு எங்கள் ஊர்க்காரர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பான். அவனுடைய பழகும் இயல்பு மிகவும் ஆச்சரியமானது. யார் வீட்டுக் கல்யாணம் , பூணூல் என்றாலும் ஏதாவது ஒரு சொந்தம் கொண்டாடிக் கொண்டு அவர்கள் வீட்டு மனிதனாகவே மாறி விடுவான்.

அவனுக்கு யார் யார் வீட்டில் இன்னைன்ன தேதியில் கல்யாணமோ , பூணூலோ நடக்கும் என்பது எப்படித்தான் தெரியுமோ? சரியாக சமையற்காரர்கள் வந்து இறங்கும் போது இவனும் ஆஜராகி விடுவான். கல்யாணமென்றால் அவன் எப்பவும் பெண் வீட்டாரின் வகையில் தான் இருப்பான். சாமான்களெல்லாம் லிஸ்ட் படி சரியாயிருக்கிறதா என்று பார்ப்பான். சம்பந்தி மனிதர்களிடம் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவான்.அவசரத்துக்கு ஏதேனும் வேண்டுமென்றால் வாங்கிக் கொடுப்பான்.சமையலுக்குத் தேங்காய் அரைத்துக் கொடுப்பான். பொறுப்பாக நின்று பரிமாறுவான். வேளாவேளைக்கு காபி சப்ளை செய்வான். இன்னும் இப்படி பலப்பல வேலைகள் அவனுக்கு இருந்து கொண்டேயிருக்கும், செய்து கொண்டேயிருப்பான். இவையெல்லாம் செய்வதற்கு சம்பளமாக அவன் கேட்பது மூன்று வேளை சாப்பாடு மட்டும் தான்.

நானாச்சு என்கிற நாணா , குட்டையாக , ஒல்லியாக இருப்பான். அம்பாசமுத்திரத்தில் ஒரு புரோகிதர் வீட்டு ஆறாவதோ , ஏழாவதோ பையன். படிப்பும் வரவில்லை , மந்திரங்களும் வாயில் நுழையவில்லை. எல்லோருடனும் இனிமையாக பழகும் குணமே அவனுக்கு மூலதனமாக அமைந்து அவன் சாப்பாட்டுக்கு வழி செய்தது. ஏதாவது கல்யாணத்தில் வேட்டி வைத்துக் கொடுத்தால் உடையும் ஆயிற்று. தங்குமிடம் இருக்கவே இருக்கிறது சத்திரத்து திண்ணைகள். இது போன்ற ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூடப் பார்ர்க்க முடியாததை , அவன் தன் விதி விட்ட வழியென்றோ , தனக்கு இதுதான் கிடத்தது என்ற மனோபாவத்துடனோ குதூகலமாக ஏற்றுக் கொண்டான்.

அவன் இயற்பெயர் நாராயணன். நாணா என்று கூப்பிடுவார்களாயிருக்கும். ஏன் அப்படிச் சொன்னேன் என்றால் நாராயணன் என்றோ , நாணா என்றோ சொன்னால் பலருக்குத் தெரியாது. நானாச்சு நாணா என்றால் உடனே புரித்து கொள்வார்கள். எந்த வேலை சொன்னாலும் , “நீங்க கவலைப் படாதீங்கோ மாமா!நானாச்சு முடிச்சுர்றேன்” என்பான். அதனால் அவன் பெயர் நானாச்சு என்றே நிலைத்து விட்டது. என்ன வேலை செய்து அவன் மற்றவர்களைக் காக்காய் பிடித்தாலும் அவன் என்றால் ஏனோ எல்லோருக்கும் சற்று இளக்காரமாகவே இருந்தது.மக்களுக்கும் அவனது சேவைகள் தேவையாக இருந்தன என்பதால் எழுதப் படாத ஒப்பந்தமாக அவன் வேலை செய்வதும் , இவர்கள் அதற்கு சாப்பாடு போடுவதும் சில சமயங்களில் வேட்டி துண்டு மரியாதையும் செய்வதுமாக வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

கல்யாணம் இல்லாத மாதங்களில் அவன் என்ன செய்கிறான் , எப்படிச் சாப்பிடுகிறான் என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தது. எல்லார் வீட்டு விவரங்களையும் விரல் நுனுயில் வைத்திருக்கும் அவனைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவன் ஒரு நாடோடி. எந்த ஊரிலும் நிலையாகத் தங்கியிருக்க மாட்டான். புரோகிதர்கள் மந்திரம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை சிரார்த்தங்களுக்கு எங்களுடன் வந்து கூடமாட ஒத்தாசையாய் இரு சாப்பாடு போட்டு ஐந்து ரூபாய் பணமும் வாங்கித்தருகிறேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.ம்ஹூம் அவன் வரவே மாடாஎன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டான். அதற்கு ஒரு புரோகிதர் தனக்குத்தான் இந்த ஜென்மத்துல கல்யாணமே ஆகலை , அடுத்த ஜென்மத்திலியாவது அது நடக்கணும்னு இப்படிப் பண்றானோ என்னவோ என்று சொல்லிச் சிரித்த போது அவன் சிரிக்கவேயில்லை. கண்களில் லேசாக சோகம் இழையோடியது.

1975ஆம் வருடம் ஆழ்வார்குறிச்சி R.I (Revinew Inspector) வீட்டில் அவரது மூத்த மகளுக்குக் கல்யாணம். மாப்பிள்ளைக்கு தெங்காசி ஸ்டேட் பாங்கில் வேலை. பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம். வழக்கம் போல மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்து இறங்கி விட்டார்கள். நானாச்சுவும் சமையற்காரர்களும் அதற்கும் முன்னதாகவே வந்து இறங்கியாகி விட்டது. R.I வீட்டுக் கல்யாணம் என்றால் லேசா? கிராமத்துத் தலையாரிகள் , அலுவலக பியூன்கள் என்று வேலை செய்ய ஆட்களுக்குக் குறைவில்லை. நானாச்சு எப்போதும் போல பிசியாக இருந்தான்.

மணப்பெண்ணின் தங்கை சரஸ்வதி சூட்டிகையான பெண். அவளும் இங்குமங்கும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். கல்யாணம் என்பதெல்லாம் தங்களுடைய செல்வாக்கைக் காட்ட நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி தானே? கல்யாணப் பெண்ணைப் போலவே சரசுவும் நிறைய நகை அணிந்திருந்தாள். அவள் கழுத்தில் அணிந்திருந்த மாங்காய் மாலை மட்டுமே 10 பவுன் தேறும் என்று பேசிக் கொண்டார்கள். சமையல் சாமான்கள் வந்து இறங்கியவுடன் அவற்றைச் சரி பார்க்க சரசுவும் போயிருக்கிறாள். எல்லாவற்றையும் லிஸ்ட் படி எண்ணி வாங்கி ஸ்டோர் ரூமில் அடுக்கி வைத்து விட்டு வரும்போது பார்த்தால் எல்லா நகைகளும் இருக்கிறது மாங்காய் மாலையை மட்டும் காணோம்.

அனைவருக்கும் விஷயம் தெரிந்து திடுக்கென்றுஆகிவிட்டது. சரசுவோ அழுகையை நிறுத்தவே இல்லை. இதை ஒரு அபசகுனமாகக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் ஏதேனும் சொல்வார்களோ என்ற பயம் வேறு R.Iக்கு. நல்லவேளை அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் நகை திரும்பக் கிடைத்தால் பரவாயில்லை என்று அபிப்பிராயப் பட்டார்கள். யார் எடுத்திருக்கக் கூடும் என்று எதுவும் சொல்ல முடியவில்லை. கல்யாண வீடு. ஆள் நடமாட்டம் அதிகம். அதிலும் எல்லாரும் வேண்டியவர்கள் , சொந்தக்காரர்கள். யாரை என்று சந்தேகப்பட?

சரசுவிடம் விசாரித்தார்கள். அவள் மாலையை எப்போது கடைசியாகப் பார்த்தாள்? எப்போது காணவில்லை என்று தெரிந்தது? இப்படி. அவளும் மிகவும் கஷ்டப்பட்டு நினைவு படுத்திக் கொண்டு சொன்னாள். ” நான் மாப்பிள்ள வீட்டுக்கு காபி கொண்டு போகும்போது இருந்தது. நானே தொட்டுப் பார்த்தேன். அதுக்கப்புறம் சமையல் சாமானெல்லாம் எறக்கி வெச்சுட்டு கதவப் பூட்டி ஸ்டோர் ரூம் சாவிய சமயக்காரர்ட்ட குடுத்தேன். அப்றமா தொட்டுப் பாக்கும் போது தான் இல்லேன்னு தெரிஞ்சது” என்றாள்.

அவள் கூற்றுப்படி ஸ்டோர் ரூமில் இருக்கிறதா? இல்லை சமையக்க்ட்டில் கீழே விழுந்து விட்டதாவென விசாரிக்க சிலர் போனார்கள். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். “யார் கையிலயாவது கெடச்சிருக்கும். கெடச்சவா குடுக்கவா போறா? பவுன் விக்கற வெலையிலே?” என்று பேசிக் கொண்டார்கள். நேரம் செல்லச் செல்ல R.Iக்கு டென்ஷன் எகிறியது. மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து முணுமுணுப்பு கிளம்பி விட்டது என்று யாரோ அவர் காதில் போட்டு விட்டார்கள். அது வேறு அவருக்கு வயிற்றைக் கலக்கியது. சரசுவைக் கூப்பிட்டு ” நீ ஸ்டோர் ரூமில் நிற்கும் போது உங்கூட யார் இருந்தா?” என்று விசாரித்தார். நானாச்சு ஒருவன்தான் இருந்ததாகத் தெரிய வந்தது.

அவன் அப்படிப் பட்டவன் இல்லை என்று உறுதியாகச் சொல்லும் தைரியம் அங்கே யாருக்குமே இல்லை. எல்லோருமே ஒருவேளை இருக்கலாமோ என்று தான் நினைத்தார்கள். R.I அவனைக் கூப்பிட்டனுப்பினார். வந்தவனுக்கு தன்னை சந்தேகத்தோடு தான் அழைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே எழவில்லை. அழுக்கு வேட்டியுடனும் அதைவிட அழுக்கான துண்டு தோளில் தொங்க ஓடி வந்தான். “டேய் நானச்சு! எங்காத்து பொண்ணு கழுத்திலிருந்த மாங்கா மாலையக் காணும். நீ எடுத்திருந்தியானா கொடுத்துடு. போலீஸுக்கெல்லாம் போக மாட்டேன். ஒன்னையும் ஒண்ணும் செய்ய மாட்டேன்” என்றார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டவன் தீயை மிதித்ததைப் போல பதறிவிட்டான். “ஐயோ அண்ணா! என்னண்ணா இது. நான் போய் அந்த மாதிரியெல்லாம் செய்வேனா? அதுவும் கொழந்தை கழுத்துல கெடந்ததப் போய் நான் எடுப்பேனா? என்னைப் பாத்து இப்படிக் கேட்டுட்டேளே” என்றான். கண்களில் கண்ணீர் வராத குறை. செய்ததையும் செய்து விட்டு மிகுதியாக நடிக்கிறான் என்று தான் பட்டது எல்லாருக்கும். நயமாகவும் பயமாகவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று. எப்போதும் ஒரே பல்லவி “நான் எடுக்கலை , நான் எடுக்கலை”. அவனுக்காக பரிந்து பேச யாருமேயில்லை. அது அவன் மனதை ஆகப் புண்படுத்தியிருக்க வேண்டும்.

திரும்பத் திரும்ப “உங்காத்து சாப்பாட்டுக்குத்தான் ஆசைப் படுவேனே தவிர நகையெல்லாம் எடுக்க மாட்டேன். அதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம்ணா. என்னை நம்ப ஒத்தர் கூடவா இல்லை? ” என்று புலம்பிக் கொண்டிருந்தான். சிலருக்குப் பார்க்கப் பாவமாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு சிறு பெண் ஓடி வந்து ” மாங்கா மாலை கெடச்சுடுத்தாம் !சரசு அக்கா ஜாக்கெட்டுக்குள்ளே மாங்கா மாலை விழுந்திருந்துதாம். மாமி சொல்லச் சொன்னா” என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அந்த இடமே சற்று நேரம் மௌனமாக இருந்தது.

நானாச்சுவை அடித்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்ற அளவுக்கு நினைத்தவர்கள் மெள்ள முணுமுணுத்தபடி அந்த இடத்தை விட்டு நகரலாயினர். அவனுக்குப் பரிந்து பேச வேண்டும் என்று நினைத்த சிலர் அவனைத் சொக்கத்தங்கம் என்று தாங்கள் சொன்னதாகவே பேசிக்கொண்டனர். R.Iக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவருடைய அலுவலக பரிவாரங்களுக்கு முன்னால் ஒன்றுமில்லாத ஒரு பரதேசியிடம் மன்னிப்புக் கேட்பது கௌரவக் குறைவாகப் பட்டது. தன் கம்பீரம் குறையாமல் , நானாச்சுவை தான் மன்னித்து விட்ட தோரணையில்”சரி சரி! மாலை கெடைஸ்ச்சுடுத்தாம். எல்லாம் சரியாப் போச்சு! போடா நானாச்சு நீ போய் உன் வேலையப் பாரு. உனக்கு ஒரு வேஷ்டி வாங்கி வெச்சுருக்கேன் கல்யாணம் முடிஞ்சதும் தரேன்” என்றார்.

ஒரு நாடகம் முடிந்து விட்ட திருப்தியோடு கூட்டம் கலைய ஆரம்பித்தது. காணாமல் போன நகை கிடைத்து விட்டது , நானாச்சுவுக்கு வேட்டி கிடைக்கப் போகிறது இதைவிட திருப்திகரமான முடிவு இருக்க முடியுமா என்ன? ஆனால் நானாச்சு அந்த இடத்தை விட்டு அசையவில்லை நகர முயன்ற R.Iயையும் விடவில்லை. “அண்ணா எனக்கு எத்தனை வயசாறதுன்னு சொல்றதுக்கு எங்கம்மாவோ , அப்பாவோ உயிரோட இல்லை. ஆனா நான் இந்த மாதிரி கல்யாண வீடுகள்ள ஒத்தாசைசெய்ய ஆரம்பிச்சு கிட்டத்தட்ட இருவத்தஞ்சு வருஷமாச்சு. எத்தனையோ பெரிய பணக்காரக் கல்யாணத்துலயெல்லாம் கலந்துண்டு இருக்கேன். அவாத்து அடுக்குளை வரைக்கும் போய் வந்துருக்கேன். ஆனா இது வரைக்கும் யாருமே என்மேல திருட்டுப் பட்டம் கட்டினதில்லேண்ணா. ஆனா அதை நீங்க செஞ்சுட்டேள்” .என்றான் கலக்கமாக.

“இப்ப அதுக்கு என்ன பண்ணணும்கறே? நான் செஞ்சது தப்புன்னு கன்னத்துல போட்டுக்கச் சொல்றியா?” என்றார் R.I. எகத்தாளமாக. “ஐயோ! அண்ணா நான் அப்படியெல்லாம் சொல்லுவேனா? கொறஞ்ச பட்சம் தெரியாமே பண்ணிட்டேண்டா நாணா , நீ ரொம்ப நல்லவன்ன்னு சொல்லியிருக்கலாமே அண்ணா. அந்த வார்த்தையில தாண்ணா என் மானமே அடங்கியிருக்கு. நான் நாலு ஆத்துக்குப் போக வேண்டியவன். இங்க இருக்கறவா பலபேர் அங்கயும் வருவா. என்னை சந்தேகப் பட்டதை மட்டும் மத்தவா கிட்ட சொன்னாள்னா ஒரு கடுகுப் பொட்டலம் காணலைன்னா கூட என்னைத்தான் அண்ணா சந்தேகப்படுவா. நீங்க தெரியாம கேட்டுட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா , R.Iயே சொல்லிட்டாரேன்னு என்னை ஒண்ணும் சொல்ல மாட்டா” என்று நீளமாகப் பேசி முடித்தான்.

அன்று R.I என்ன மூடு சரியில்லையோ இல்லை மகள் கல்யாணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற டென்ஷனோ தெரியவில்லை கடுங்கோபம் வந்து விட்டது அவருக்கு. “:என்னடா அடுத்த வேளை சோத்துக்கு வக்கில்லாத பய என்னப் பேச்சு பேசறே? நான் சொல்ல மாட்டேன் .உன்னால என்னடா செய்யமுடியும்? பிச்சக்காரப் பயலுக்கு கௌரவம் வேற. நான் சொல்றதை வெச்சுண்டு நிஜமாவே திருடலாம்னு பிளான் போடறியோ என்னமோ யாருக்குத் தெரியும்? புத்தி சொல்ல வந்திட்டான் , தரித்திரக் கழுதை. போடா போ” என்று திட்டிவிட்டு விட்டு அங்கிருந்து போகத் துவங்கினார்.

R.I பேசப் பேசவே நானாச்சுவின் முகம் பயங்கரமாக மாறிக்கொண்டு வந்தது. யாரும் சற்றும் எதிர்பாராததை , ஏன் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததைச் செய்தான் செய்தான் நானாச்சு. R.Iயை நெருங்கி அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு வினாடி கூட தாமதியாமல் ஓடியே போய் விட்டான். உழைத்து உரமேறிய கை என்பதால் அடி பலமாகவே விழுந்தது போலும். R.I பொறி கலங்கிப் போய் விட்டார். சுதாரித்துக் கொண்டு அவனைப் பிடிக்க முயல்வதற்குள் அவன் பஸ் ஸ்டாண்டிற்கு ஓடி விட்டான். . யாரோ ஒருவன் R.Iயைக் கை நீட்டி அடித்து விட்டான் என்ற செய்தி பரவினால் அவருக்குத்தான் கேவலம் என்பதாலும், கல்யாண காரியங்கள் இருந்ததாலும் சம்பந்தி வீட்டாருக்கு இந்த விஷயம் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்ததாலும் , அந்த விஷயத்தை அதற்கு மேல் பெருசு பண்ண வேண்டாம் என்று விட்டு விட்டார்கள். R.I மேல் பகை உள்ளவர்கள் நானாச்சு செய்தது சரியென்றும் , அவரால் காரியம் ஆக வேண்டியவர்கள் அதைத் தவறு என்றும் கொஞ்ச நாள் பேசிக் கொண்டிருந்தார்கள். R.I. அவனைக் கருவிக்கொண்டேயிருந்தார். “என்னிக்காவது என் கையில கிடைக்காமலா போயிடுவான்” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த சம்பவம் நடந்த பிறகு வேறு எந்தக் கல்யாணத்திலும் , பூணூலிலும் நானாச்சுவைக் காணவே இல்லை. எல்லார்க்கும் கை ஒடிந்தாற்போலிருந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவன் எங்கே போனான் என்ன ஆனான் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. R.I மட்டும் “பிரம்மஹத்தி , எங்கியாவது ஆத்துல , கொளத்துல விழுந்து செத்துருக்கும்” என்றார். அப்படி நடந்ததாகவும் தெரியவில்லை. சில மாதங்கள் கழித்து காசி ராமேஸ்வரம் என்று தீர்த்த யாத்திரை செய்து திரும்பிய கணபதி ஐயரும் அவர் மனைவியும் தான் சொன்னார்கள் ” நானாச்சு இப்போ காசியிலே இருக்கான், அங்க சங்கர மடத்துல வரவாளுக்கெல்லாம் எடம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்துண்டு, சமச்சிப் போட்டுண்டு நன்னா இருக்கான். ஒரு சுத்துப் பெருத்துபயிருக்கான். நல்ல நெறம் வந்துருக்கு. கங்கைத்தண்ணியோல்லியோ! பேரைக்கூட நாணா சாஸ்திரின்னு மாத்தி வெச்சுண்டு இருக்கான் , எங்களைக் கூட நன்னா கவனிச்சிண்டான்” என்றார்கள் .

ஊர் மொத்தமும் R.I உட்பட வாயைத்திறந்து கொண்டு கேட்டுக்கொண்டிருந்தது.

Series Navigation