நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

கோமதி நடராஜன்


நாம் அன்றாடம் சந்திக்கும் எல்லோாிடமும் ஒரு பலம் ஒரு பலவீனம் இரண்டும் இருக்கும்.அவைகளைச் சாியாக புாிந்து கொண்டு பழகினால், எப்பேர்ப் பட்டவராக இருந்தாலும் அவரை நம் பக்கம் சுலபமாகச் சாய்த்து விடலாம்.யானையின் பலம் மட்டுமே நமக்குத் தொியும்,பாகனுக்கு அதன் பலவீனமும் தொிந்திருப்பதால்தான் அவனால் மத யானையைக் கூட

ஒரு சிறு அங்குசத்தால் அடக்கி வைத்திருக்க முடிகிறது.

தானாக வந்து உங்களிடம் பழகுபவர்கள் மட்டுமே நல்லவர்கள், மற்றவரெல்லாம், மாறுபட்டவர்கள், என்று உங்கள் அனுகூலத்தையும் ஆதாயத்தையும் மட்டுமே எடை போட்டு அடுத்தவரது குணத்தை முடிவு செய்யாதீர்கள்.

எல்லோரும் உங்களை விரும்பவேண்டும் என்று நினைத்து உங்கள் அதிகப்படியான நேரத்தை வீணாக்காதீர்கள்.தானாகக் கனிந்த கனியின் ருசிக்கும் அடித்துப் பழுக்க வைத்த கனியின் ருசிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள். பழகும் பத்து போில் ஒன்றிரண்டுதான் உண்மையாக இருக்கும் என்பதைப் புாிந்து கொள்ளுங்கள். சிலருடைய நடவடிக்கைகள்,அவர்களது வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்கள் தந்த துயரம்,ஏமாற்றம் விரக்தியின் எதிராலியாக இருக்கலாம்,அவர்களின் பின்னணி புாியாமல் புாியாத புதிராக இருக்கிறாரே என்று அங்கலாய்க்காதீர்கள்.

அடுத்தவர் மனதைப் படிக்கிறேன் பேர்வழி என்று,அனுமதியின்றி அவர்களின் அடிமனதை ஊடுருவிப் பார்க்க முயலாதீர்கள்.நிறைய ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் தைாியம் இருந்தால் ஆட்சேபணையில்லை. எல்லோராலும் உள்ளும் புறமும் ஒரே மாதிாி வைத்திருக்க முடியாது வைத்திருக்கவும் மாட்டார்கள்.யார் யார் எப்படி வேஷம் போடுகிறார்களோ அதை அப்படியே நம்புவதாகப் பாவனை செய்து கொண்டு அதற்குத் தகுந்த வேஷத்தோடு பழகப் பழகிக் கொள்ளுங்கள்.உலகம் ஒரு நாடக மேடையென்று அறிவாளிகள் அனுபவிக்காமலா சொல்லியிருப்பார்கள் ? இறைவன் மனதுக்கு மூடி போட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

குறையில்லா மனிதனே கிடையாது.அடுத்தவாிடம் நீங்கள் காணும் குறைகளைக் கண் அளவில்,வாசலிலேயே நிறுத்திக் கொள்ளுங்கள். அதை மனம் வரை இழுத்துச் சென்று அல்லல் படாதீர்கள். மனம் ஆண்டவன் இருக்க வேண்டிய இடம் ,அதில் அழுக்கைச் சேர்க்காதீர்கள்.

அடுத்தவர் உங்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று நீங்கள் நிர்ணயித்திருக்கிறீர்களோ,அதே விதிமுறைதான் நீங்கள் அடுத்தவாிடம் பழகும் பொழுதும் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஏனோ மறந்து விடுகிறீர்கள்.பன்னீரையும் சந்தனத்தையும் எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் சேற்றையும் புழுதியையும் அடுத்தவர் மேல் தயங்காமல் வாாி இறைக்கிறீர்களே!செய்யலாமா ?

நண்பர்கள் மத்தியில்,அந்த இடத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி விமாிசிக்கும் மட்டமான பொழுதுபோக்கைத் தவிர்த்து, ஆரோக்கியமானக் கலந்துரையாடல் கலையை வளர்ப்போம். சமயத்தில் நாம் இல்லாத கூட்டமும் அமையலாம். ஏமாளியாக இருக்கலாம், தப்பே இல்லை.ஏமாற்றுபவர்களாக மட்டும் இருந்து விடாதீர்கள்.ஏமாந்தவர்களைக் கடவுள் காப்பாற்றுவார், ஏமாற்றியவர்களைக் கடவுள் கவனித்துக் கொள்வார்.

அடுத்தவரைச் சிாிக்க வைக்கத் தொியாவிட்டால் பாதகமில்லை,அழவைக்கும் பாவத்தைச் செய்யாமல் இருப்போம்.அதுவும் ஒரு வகையில் புண்ணியம்தான்.

அடுத்தவரைப் பற்றிய உங்கள் கணிப்பை,விமாிசனத்தை யாரையும் நம்பி வெளியிடாதீர்கள்.கேட்டவர் நாளை உங்கள் கைவராகலாம், விமாிசிக்கப் பட்டவர் உங்கள் உற்றத் தோழனாகலாம்.நம் அபிப்பிராயங்களும் கணிப்புகளும் என்றைக்குமே சாியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அவைகளை நேரமும் சந்தர்ப்பங்களுமே உருவாக்குகின்றன. இவை இரண்டும் மாறும் பொழுது நம் கணிப்புகளும் மாற்றம் பெறுகின்றன.எனவே சில விஷயங்களை மனதிலேயே பத்திரப் படுத்துவது நல்லது.

நீங்கள் உங்களை அறிவாளி,மேதை என்று கூறிக்கொள்ளுங்கள்.சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால் மற்றவர்களை முட்டாள் மடையன் முடிவு செய்து விடாதீர்கள்.அறிவாளிக்கு அடிப்படைத் தகுதி ,அடுத்தவாிடம் உள்ள திறமையைக் கண்டு பிடித்துப் பாராட்டுவதுதான்.இந்த நற்பண்பு உங்களிடம் இல்லையென்றால்,அறிவும் இல்லையென்றாகிவிடும்.

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்