நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

புதியமாதவி, மும்பை


என் முதல் கவிதை நூல் – சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி
என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு, தலைகீழ்விகிதங்கள், சதுரங்ககுதிரை
மட்டுமே. மும்பையில் என்னையும் நாஞ்சிலாரையும் அறிந்த நண்பர்கள் நாஞ்சிலாரின் அணிந்துரைக்காக
என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அதன்பின் நானும் என் பணிகளுக்கு நடுவில் மறந்துப்போனேன்.
கவிதைகளையும் கவிதைகள் அனுப்பியதையும். சில மாதங்கள் கடந்து அவர் அணிந்துரையும் கடிதமும்
வந்தது. அணிந்துரை நாஞ்சிலாரின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
அவர் தந்த அணிந்துரையை விட மிகவும் முக்கியமானது அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம்.

கானமுயலெய்த அம்பினில் யானைப் பிழைத்த
வேல் ஏந்தல் இனிது

என்று முடியும். அக்கடிதம். இன்றும் ஒவ்வொரு நூலும் அச்சில் வெளிவரும் போது நான் எடுத்து மீண்டும் மீண்டும்
வாசித்துக் கொள்ளும் ஒரு கடிதம் நாஞ்சிலாரின் கடிதம் தான்.

எங்காவது என் சிறுகதைகள், கவிதைகள் வாசித்தால் அதைப் பற்றி தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல அதிலிருக்கும் குறைகளையும் தெளிவாக என்னிடம் சொல்லும் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ்ச்சிப்ப்படுத்தும் தருணங்கள். மழையில் மிதந்த மும்பை, தீவிரவாதிகள் தாக்கிய மும்பை, குண்டுவெடிப்புகளில் காயப்பட்ட மும்பை.. இப்படியாக மும்பையைப் பற்றிய செய்திகள் வாசிக்கப்படும் போதெல்லாம் அதைப் பற்றி பேசியிருக்கிறார். பெரும்பாலும் கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது சமூக அக்கறையுடன் மும்பை, மும்பை சார்ந்த செய்திகளைப் பேசியிருக்கிறார்.

அவர் குடும்பத்தில் அடுத்தடுத்து துயரச் செய்திகள் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டு பேசிய போது ‘இனிமேல் குடிப்பதில்லை ‘ என்று முடிவு செய்திருப்பதாகவும் தனக்கென நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும் சொன்ன குடும்பத்தலைவனைப் பார்த்தேன்.

ஓரளவு இன்று நாஞ்சில் நாடனின் படைப்புகளை முழுமையாக வாசித்திருக்கிறேன், அவரைப் பற்றியும் அறிந்திருக்கிறேன் என்ற பின்புலத்தில் இன்று அவர் படைப்புகளை மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாஞ்சிலாரின் படைப்புகளில் பெண் காதாபாத்திரங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? என்று நண்பர் கே.ஆர்.மணி என்னிடம் கேட்டார். அப்போது தான் நாஞ்சிலார் படைப்புகளில் உலாவும் பெண்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நாஞ்சில் நாடனா.. அவர் கதைத்தளம் முழுக்கவும் ஆண்களின் ஆக்கிரமிப்பு..ஆண்பார்வையில் நகரும் கதைகள் என்பது புறந்தள்ள முடியாத உண்மை. நாஞ்சில்நாடன் தன் கதைகளில் பெண்ணியம் பேசுவதாகவோ அல்லது பெண்விடுதலைப் பேசி தன்னை பெண் விடுதலையின் நாஞ்சில் தலைவனாகவோ அடையாளம் காட்டிக்கொள்ளும் பம்மாத்துகளைச் செய்வதில்லை. நாஞ்சிலாரின் கதைகளின் ஊடாக பயணிக்கும் போது நாம் சந்திக்கும் பெண்கள் மிகவும் சர்வசாதாரணமாக பெண்ணியத்தையும் பெண்விடுதலையையும் பாட்டிவைத்தியம் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள்! அவர்களுக்கே உரிய நாஞ்சில் மொழி நடையில்
கதைக்கு மிகவும் தேவையான அளவு மட்டுமே கருத்துகள் தெளிக்கப்பட்டிருக்கும். எந்தக் கதையிலும் கதையை விட்டு விலகியோ துருத்திக்கொண்டொ அவர் பேசும் பெண்ணியம் தனித்து நிற்பதில்லை. பெண்ணியம் மட்டும் அல்ல.. நாஞ்சில் நாடன் அவர் படைப்புகளில் பேசும் சமூக அரசியலும் அப்படித்தான். நாஞ்சிலார் கதைகளில் சமூக அரசியல் பேசுகிறாரா ? என்று பலர் வியப்படையலாம். அவர் படைப்புகளின் ஊடாக நடத்தும் சமூக அரசியல் குறித்து கோவை ஞானி அவர்களும் மிகவும்
வியப்புடன் என்னிடம் பேசியிருக்கிறார். தனிக்கட்டுரையாக இது குறித்தும் எழுத வேண்டும்.

நாஞ்சிலாரின் முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள் முழுக்கவும் ஆணின் பார்வையில் நகரும் கதைதான். அதுவும் ஒரு 25, 27 வயது இளைஞனின் பார்வையில் வாழ்க்கை குறித்த எண்ணங்கள். ஒவ்வொரு பெண்ணும் முதலில் அறிந்த ஆண் அவள் தந்தை. அவளுக்குத் திருமணமாகி இன்னொருவன் மனைவியானப் பின் அவள் தன் கணவனை தன் தந்தையுடன் அதிகமாக ஒப்பிட்டுப் பார்க்கிறாள். அதிலும் குறிப்பாக ஆளுமையும் அதிகாரமும் கொண்ட தந்தையாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
இந்த ஒப்புமையின் ஏற்ற இறக்கங்களின் பாதிப்புகள் ஓர் ஆணின் பார்வையில் தலைகீழ் விகிதத்தில் பேசப்படுகிறது. ஒரு பெண்ணின் பார்வையில் எதுவும் பேசப்படவில்லை.

இந்திராகாந்தியின் வாழ்க்கையில் தந்தை-கணவர் என்ற இருவருக்கும் நடுவில் அவர் இழந்துப் போன வாழ்க்கையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரே கூட இல்லஸ்டேட் வீக்லி பத்திரிகையில் ஒரு நேர்காணலில் இதைக் குறிப்பிடத் தான் செய்திருக்கிறார்.

நாஞ்சிலாரின் பெண்கள் சிலரின் முகம் தெரிவதில்லை. பலருக்கு தனிப்பட்ட எந்த அடையாளமும் கிடையாது. தனிப்பட்ட கருத்துகளோ விருப்பு வெறுப்போ கூட கிடையாது.

‘எச்சம்’ சிறுகதையில் எல்லோரும் போனபின் செத்துப்ப்போன பலவேசம் பிள்ளையின் சிதைக்குப் பக்கத்தில் வந்து தன் இரு பெண்குழந்தைகளுடன் நின்று அழுதுவிட்டு வாய்க்குள்ளேயே புலம்பிக்கொண்டு போகும் உருவங்கள். முகம் தெரிவதில்லை, வார்த்தைகள் குறைப்பிரசவமாகிப் போகும் இடத்தில் நாம் பார்க்கும் பெண்களின் மவுனத்தில் தான் கதையின் அதுவரை எழுதப்பட்ட அனைத்து சொற்களும் மறுவாசிப்புக்குள்ளாகி கதையைக் கனப்படுத்துகின்றன. அப்படித்தான் நாஞ்சிலாரின் சில பெண் கதைப்பாத்திரங்களும்,

மாமிசப்படைப்பு நாவலில் (பக் 71)
“இவனுகெல்லாம் எட்டு ஏக்கரும் பத்து ஏக்கரும் அம்மைக்கு வயத்திலேருந்து வர்ச்சிலேயே கூட கொண்டு வந்தானுகோ?
எவனோ எழுதி வச்சான்.. பெண்டாட்டியோ மகளொ பாக்கதுக்கு செவப்பா லெச்சனமா முலையும் தலையுமா
இருக்காளா? இன்னா நாப்பது கோட்டை விதப்பாடு…” என்று சொல்லும் போது பெண் என்னவாக பயன்படுத்தப்பட்டாள்
என்பதைக் காட்டுகிறார்.

இவருடைய பெண்களுக்கு ஆண் சமுதாயம் பெண்ணியல்புகளாக செதுக்கி வைத்திருக்கும் கற்பியல் குறித்த கோட்பாடுகள் இல்லை. பெரும்பாலான பெண் கதைப்பாத்திரங்கள் அக்கா என்றும் மதனி என்றும் அழைக்கப்படுகிறார்கள். அக்காவுடனும் மதனியுடனும் சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாலியல் உறவுகளைத் தின்று செரித்து நிற்கும் ஆண்களுடன் முரண்படாமல் இசைந்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பெண்கள். உபாதை சிறுகதையில் வரும் பூமணி, தவசி சிறுகதையில் வரும் விசாலம், தலைகீழ் விகிதங்கள்
க்தைநாயகி இவர்கள் தான் விதிவிலக்கானவர்கள். அதிலும் குறிப்பாக உபாதை கதையின் பூமணி. கங்காதரன் பிள்ளையிடம் வசமாக மாட்டிக்கொண்ட போதும் தன் சாதுர்யத்தால் அவரைத் தள்ளிவிட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள்.
தவசியில் வரும் விசாலம் கணவனால் கைவிடப்பட்டு குழந்தையுடன் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வயிற்றுப்பசி தீர்க்க காத்திருக்கும் தவசி. இக்கதையில் கூட தவசியைப் பற்றிய காட்சிப்படிமம் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கிறது.
“சற்றும் கவர்ச்சியின் சாயை அடிக்காத உடலமைப்பு. மேல்வரிசைப் பற்கள் முரண்பாடான கோணத்தில் இருக்கும். என்ன முயற்சி செய்தாலும் வாயை மூடவே முடியாது. கதவோ, திரையோதான் போட வேண்டியதிருக்கும்… விசாலத்திடம் யாருக்கும் விளையாடத் தோன்றாது. அந்த சோகம் தங்கிய முகத்தைப் பார்க்கவே ஆகாது ஆண்களுக்கு”
இப்படிப்பட்ட விசாலம் தவசியாகி – பிச்சை எடுப்பதற்கு – காரணம் அவள் ஆண்களை ஈர்க்கவில்லை என்பதும்தான். “அழகே இல்லாததால் அவள் எனக்குத் தங்கை ஆகிவிட்டாள்” என்று வாசித்த புதுக்கவிதை வரிகள் நினவுக்கு வருகிறது.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனால் தாம்பத்ய சுகம் அனுபவிக்க முடியாத பெண்கள், கணவனால் தாய்மை அடைய வாய்ப்பில்லாத பெண்கள் இவர் கதைகளில் சமூகம் விதித்திருக்கும் ஒழுக்க கோட்பாடுகளை மீறியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பெண் தன் கணவன் தவிர்த்து பிறிதொரு ஆணை விரும்புவதற்கும் உடலுறவுக்கு இசைவதற்கும்
மேற்கூறிய காரணங்களையே நாஞ்சிலார் தன் கதைத்தளத்தில் கையாண்டிருக்கிறார்.

இந்தக் காரணங்களை முன்வைப்பதன் மூலம் அக்கதைப் பாத்திரங்களின் செய்யல்பாடுகளை நேரிடையாக நியாயப்படுத்திடவில்லை எனினும் வாசகனுக்கு அக்கதாபாத்திரங்கள் மீது வெறுப்பு ஏற்படுவதில்லை. “கொடுக்கல் வாங்கல்; சிறுகதையில் வரும் பொன்னம்மை தானியலின் உடற்பரப்பை மேய்ந்து கொண்டிருப்பவள். அதுவும் அவன் மரத்தில் ஏறி நிற்கும் போது கீழே விழுந்தக் காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள். தார் பாய்ச்சிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தானியல் யோசிக்கும் அளவுக்கு அவனையும் அவன் உடலையும் மேயக் காத்திருக்கும் பசு அவள்.

நாஞ்சிலார் அவர்கள் மங்கலம், குழூவுக்குறி, இடக்கரடக்கல் கட்டுரையில் பெண் ஆண் உடல் மீது கொண்டிருக்கும் கவர்ச்சி குறித்தோ ஈர்ப்போ குறித்தோ ஏன் பதிவு செய்யவில்லை என்பதைப் பற்றி சங்க இலக்கியம் தொட்டு கம்பன், கலம்பகம் வரை பேசியிருக்கிறார். நகக்குறி இடுதல் குறித்து எழுதும்போது : பெண் எங்கு நகக்குறி இட்டாள்? யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. நகக்குறி போகட்டும். ஆண்குறி பற்றி சங்கப் பரப்பில் குறிப்பேதும் உண்டா..” என்றெல்லாம் கேள்விகளை முன்வைக்கிறார். அவருடைய கதைமாந்தர்களில் பொன்னம்மை தான் ஆண்குறியைப் பார்த்து ரசித்ததாக அல்லது ஏங்கியதாகக் காட்டப்படும் பெண். ஆனால்
பொன்னம்மை ஏன் இப்படி இருக்கிறாள் என்பதற்கு ஒரு காரணம் கதைப் போக்கில்சொல்லப்படுகிறது.” முப்பது இருக்குமா? ஆனால் முப்பதுக்கு மதிக்க முடியாது. பிள்ளை குட்டி எதுவும் இல்லை என்பதாலோ படை குதிரை போல்தான் இருக்கிறாள்!” (பக் 276)

பிள்ளை குட்டி இல்லாத பெண் என்ற ஓரு வரி நாஞ்சில் நாடன் அவள் செயல்களுக்கு சொல்லும் ஒரு காரணமாகவே கருத வேண்டியுள்ளது. அவளுக்கு குழந்தைகள் இருந்ததாக எழுதியிருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றி எந்தக் குறிப்பும்
எழுதாமல் விட்டிருக்கலாம். ஆனால் பொன்னம்மை பிள்ளைக் குட்டி இல்லாதவள் என்று எழுதுவதன் மூலம் அறிந்தோ அறியாமலோ இப்படிப்பட்ட காரணங்களை பெண் பிறிதொரு ஆணை விரும்புவதற்கான காரணங்களாக காட்டுவது ஏன்? இம்மாதிரியான காரணங்களே சமூக விதிவிலக்குகளுக்கான விதிகள் ஆக்கப்படுவதை நாஞ்சில் நாடன் அவர்களும் நன்கு அறிவார்.
இந்தப் பொன்னம்மை தான் எட்டுத் திக்கும் மதயானையில் வரும் சுசிலா. சுசிலாவும் இப்படித்தான் பேசுகிறாள்..
“எனக்கு வெலக்கம் வர்ற நாளு தப்பி இருவது நாளாச்சு.. முப்பிடார் அம்மன் கண்ணைத் தொறந்து பாத்திருக்கா, பந்திரெண்டு வருசத்துக்குப் பொறவு. ஆணாலும் பெண்ணாலும் இது ஒனக்க பிள்ளை. .ஓர்மையிலே வச்சுக்கோ..” என்று பூலிங்கத்திடம் சொல்கிறாள்.
12 வருட தாம்பத்ய வாழ்க்கையில் அவளுக்கு கணவன் மூலமாக குழந்தை இல்லை. அவள் பூலிங்கத்துடன் கொண்ட உறவுக்கு இது ஒரு காரணமா?
இதே நாவலில் வரும் கோமதியும் கணவனால் ஒரு குழந்தைக்குத் தாயானப் பின் கைவிடப்பட்டவள். அவளுக்கு பூலிங்கத்துடன் உடலுறவு உண்டு. ஆனால் அவனுக்கு மனைவியாக வாழ விரும்பவில்லை. குழ்ந்தை நீனாவுடன் அவளை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருந்தும் அவளால் அவனுடன் வாழ்க்கையை தொடர முடிவதில்லை.
செம்பகத்தின் கணவனோ உடலுறவுக்கே தகுதியில்லாதவன். அதுவே பூலிங்கமும் செண்பகமும் இணைவதற்கான வலுவான காரணமாக அமைந்துவிடுகிறது.
பெண்கள் அதிகமாக இடம் பெற்றுள்ள அவர் நாவலான எட்டுத்திக்கும் மதயானை நாஞ்சிலாரின் பெண் பாத்திரப்படைப்புகளின்
பல்வேறு முகங்களைக் காணும் தளமாக அமைந்திருப்பதுடன் பெண்ணியம் குறித்த பல்வேறு கருத்துகளைப் போகிறப் போக்கில் சொல்வதற்கான தளமாகவும் அமைந்திருக்கிறது.

தாயின் நடத்தைச் சரியில்லை என்று தாயுடன் உறவு கொண்டவனைக் கொலை செய்த பரமுவிடம் பூலிங்கம் கேட்கிறான்.. :” தப்பா ஒரு ஆள் ஒனக்க அம்மை மேலே கை போட்டிருந்தா கொடுக்கரிவாளை வச்சுக் கொத்திப் போட்டிருக்க மாட்டாளா? ஆனா அவ அப்படிச் செய்யல்லே. அந்த ஆளு தப்பா நடக்கப் பாக்காண்ணு ஒங்க அப்பா கிட்டே சொல்லல்லே.. இல்லியா? நீ எங்கிட்டே கோவப்படாம யோசிச்சுப்பாரு.. காசுக்காச்சுட்டி போகப்பட்ட பொம்பிளையா? இல்லேல்லா? பின்னே எதுக்கு அவளும் உடை குடுத்தா?

…………
இதெல்லாம் நம்ம கணக்கிலே ஆம்பிடாத விசயம்டே..

இங்கே பரமுவின் அம்மாவாக பெயரிலியாக காட்டப்படும் பெண்தான் எவ்வித காரணமும் சொல்லப்படாமல் இன்னொரு ஆணிடம் உறவு கொண்டதாகக் காட்டப்படும் பெண் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,

“காவல், கற்பு, குலம், பெருமை என்ற சொற்கள் எல்லாம் மனித அகராதியில் என்று வந்து சேர்ந்தவை என்று
தெரியவில்லை. சொற்கள் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்திருக்க வேண்டும். கரையான் புற்று வளர்வதைப்போல.
சொற்களுக்கு அச்சப்பட்டுப் பதுங்கித் திரியும் மனிதன், சொற்களைத் தூக்கித் தூர எறிய முடியாமல்,
சொற்களைச் சுமந்து திரியும், முகமூடியாய் அணிந்து திரியும், வெறுமனே வாயிலிட்டு வெற்றிலைப் பாக்குப்
போலக் குதப்பித்திரியும் மனிதன்..”

பூலிங்கம் குரலில் ஒலிக்கும் நாஞ்சில்நாடனின் குரல் இது.

குடும்பச்சுமையில் தன்னைக் கவனிக்காது நாற்பது வயதிலேயே உருவமற்று கட்டொழுங்கு இல்லாமல்
போகும் பெண்களைப் பற்றியும் பாபி கதைப் பாத்திரத்தின் மூலம் உணர்த்துகிறார் நாஞ்சில்நாடன்.

“தன் உடலைச் சீராக வைத்துக் கொள்வதிலும் சேட்டைக் கட்டியிருந்த தாம்பத்யக் கயிறு தழையாமல்
பார்த்துக் கொள்வதிலும் சாமர்த்தியம் போதவில்லை போலும். இந்தியக் குடும்பப் பெண்களுக்கு நாற்பத்தைந்து
வயதுக்குள்ளேயே எல்லாம் ஆடி அடங்கிவிடும் போலிருக்கிறது. பிறகு பெசரெட் செய்வதும் பெண் பிள்ளைகளுக்குச்
சீர் விடுவதும் பேரன் பேத்திகளைக் கொஞ்சுவதும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கேற்றுவதும் சனீசுவரனைச்
சுற்றுவதும் தான் வாழ்க்கை என்று ஆகிவிடும் போலும்” (பக் 71) என்கிறார்.

நாஞ்சில் நாடனின் கதைக்களம் நகரமாக இருக்கலாம். ஆனால் கதை மாந்தர்கள் அதிலும் குறிப்பாக
பெண்கள் நாஞ்சில் நாட்டு பெண்கள். அவர்கள் தனக்கென தனி அடையாளம் இல்லாதவர்கள். ஆண்களால்
வஞ்சிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் தனித்து விடப்பட்டவர்கள். ஆண் துணைக் கிடைக்கும் போது
நெருப்பில் பற்றிக்கொள்ளும் பஞ்சு போல எரிந்து போகிறவர்கள். எனினும் கற்பு, திருமண உறவு
என்று கற்பிக்கப்பட்டிருக்கும் சமூக விதிகளை வார்த்தைகளால் அல்ல தங்கள் வாழ்க்கையால்
வளைத்து போட்டு வாழக்கற்றுக் கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக வாய்திறந்து பேசுவதில்லை.
அவர்களின் மவுனங்களும் செயல்களுமே கதைக்களத்தில் ஆண் கதை மாந்தர்களின் முகத்தைக்
காட்டும் கண்ணாடிகளாகவும் இருக்கின்றன.

நாஞ்சில் நாடனின் பெண் கதைப் பாத்திரங்கள் பெரும்பாலும் அவர் தலைமுறையை/அவர் அம்மாவின் தலைமுறையைச்
சார்ந்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.
கதைப் போக்கில் கதைக்கான பிரச்ச்னை முடிச்சு அந்த தலைமுறைக்கான எண்ண ஓட்டத்தில்
அவிழ்க்கப்படுகிறது. அதே முடிச்சு இன்றைய பெண்ணிடம் கிடைத்திருந்தால் அவள் என்ன் செய்திருப்பாள்
நாஞ்சிலார் அவள் என்ன செய்வதாக நினைப்பார் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.

இன்றைய இளம் தலைமுறை பெண்களின் செயல்களும் பிரச்சனைகளுக்கு அவர்கள் எடுக்கும்
முடிவுகளும் நாஞ்சில் நாட்டிலும் மாறித்தானிருக்கும். அந்த மாற்றங்களை அவர் வருங்காலத்தில் பதிவு செய்ய
வேண்டும் என்பது என் போன்றவர்களின் எதிர்பார்ர்பும் விருப்பமும்.
“தாய் பயன்படுத்திய சொற்களை மனைவி பயன்படுத்தவில்லை, ஆனால் அறிந்திருந்தாள்,
மனைவி அறிந்த அச்சொற்களை மகள் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை” நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களுக்காக
வருத்தப்படும் நாஞ்சில்நாடன் இந்த மாற்றங்கள் வெறும் சொற்களில் மட்டும் நிகழவில்லை, வாழ்வியல்
வாழ்க்கை மதிப்பீடுகள் என்று பல்வேறு தளத்தில் நிகழ்ந்திருப்பதை பதிவு செய்ய வேண்டும்.

ஒரு மகனாக தந்தையாக, தனையனாக, நண்பனாக ஏன் தாத்தாவாகவும் அவரைச் சுற்றி இருக்கும்
பெண்களின் தலைமுறை சிந்தனை மாற்றங்களைப் பதிவு செய்வதன் மூலம் அவர் படைப்புகளின்
கதை மாந்தர்களின் தலைமுறை வட்டம் பூர்த்தி அடையும்.

நாஞ்சில் நாடன் பெண்ணிய விடுதலைக்காக பெண்ணியக்குரல் எழுப்ப தன் பெண் கதைப்பாத்திரங்களைப்
படைக்கவில்லை. ஆனால் அவரின் பொன்னம்மை, சுசிலா, கோமதி, பானு, செம்பகம், பேய்க்கொட்டு மதனி,
விசாலம், பூமணி , பரமுவின் அம்மா என்று பல்வேறு பெண்முகங்களைக் காட்டி அவரவர் செயல்களின் மூலம்
கதையை நகர்த்திச் செல்கிறார். ஆனால் அதிகமாக அந்தந்த பெண் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்கள்,
உணர்வுகள் குறித்து பேசவில்லை, பெரும்பாலும் அவர்களுக்காகவும் அவர்கள் குறித்தும் பேசுவதும்
கதையின் ஆண் கதை மாந்தர்களாகவே இருப்பது ஆண் பார்வையில் சித்தரிக்கப்படும் பெண் கதை
மாந்தர்கள் என்று சொல்வதற்கே இடமளிக்கிறது.
நாஞ்சிலார் அவர்களே சொவ்லது போல எந்த ஒரு செயலுக்கும் இரண்டு பார்வைகள் உண்டு.
வண்டிக்காரனின் பார்வையில் பேசப்படுவது மட்டுமல்ல. வண்டியை இழுக்கும் மாடுகளின் பார்வையிலும்
பேசப்பட வேண்டும் என்பார்., அதையே தான் அவர் படைத்திருக்கும் பெண் கதைப் பாத்திரங்களுக்கும்
பொருத்திப் பார்க்கிறேன்.
விசாலம் கதையில் பேசவே இல்லை. பேசியிருந்தால் கைக்குழந்தைக்குப் பசி தீர்க்க பிச்சை எடுப்பதை
” தவசி” என்று சொல்லத் துணிவாளா? அல்லது தன்னை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை – இச்சமூகத்தை
அரக்கர்கள் என்று அடையாளம் காட்டுவாளா?
சுசிலாவுக்கு தனக்கு தாய் அந்தஸ்த்துக் கிடைக்கிறது.
ஆண் துணையின்றி வாழும் கோமதியின் வறண்ட நிலத்தில் அவன் மழையாகும் போது
அவளுக்கு அந்த ஈரம் தேவைப்படுகிறது.
செம்பகத்தின் கணவன் தாம்பத்ய உறவுக்கு லாயக்கில்லாத அவலம்தான் அவளை பூலிங்கத்தின்
தோள்களில் சரிந்து விடச் செய்கிறது.
அப்படியானால் ஆண்-பெண் ஈர்ப்பு, உடலுறவுகளுக்கு இவை மட்டுமே காரணமா என்றால் இல்லை.
இக்காரணங்களைத் தாண்டிய ஆண்-பெண் உறவுகளை நாஞ்சிலார் தன் கதைக்களத்தில் பயன்படுத்தவில்லை
என்பதை மட்டுமே இப்பொதைக்குச் சொல்லிக்கொள்ளலாம்.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஆண்-பெண் ஈர்ப்பு நிலைப் பற்றி சதுரங்க குதிரையில் ஒரு
சின்னக்கோடு வரையப்பட்டிருக்கும். அவர் படைப்புகளில் வாழும் மற்ற பெண்களுக்கு
அம்மாதிரியான மன உணர்வுகள் இருந்திருக்கும் என்பதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு ஆண் கதை
மாந்தரும் யோசிக்கவே இல்லை.
சுசிலா பூலிங்கத்தை மோகித்ததும் கோமதி பூலிங்கத்தை மோகித்ததும் வெறும் உடல் சார்ந்த தேவை
மட்டும்தானா? அவர்களின் பக்கம் இருந்த நியாயங்கள், உணர்வுகள் அனைத்துமே
ஆண் கதைமாந்தர்கள் மூலம் பேசப்படுவதால் வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட அகமனம் சார்ந்த ஆண்-பெண் ஈர்ப்புநிலை பேசப்படவே இல்லை.
பெண் ஆணை நாடுவதும் உடலுறவுக்கு இசைவதும் கதைகளில் சொல்லப்படும் காரணங்களாக
மட்டுமே இருக்குமானால் அது பெண்ணை எந்த வகையிலும் பெருமைப் படுத்தாது.
செம்பகம் பூலிங்கத்தை தவிர வேறு எந்த ஆணை அந்தச் சூழலில் சந்தித்திருந்தாலும் கூட
அவனுடன் ஓடிப்போயிருப்பாள் என்று கருத கதைக்களத்தில் நிறைய இடம் இருக்கிறது.
ஆண் உடலுறவுக்கான தேவை இருக்கும் போது பெண் அந்தச் சூழலில் சந்திக்கும்
எவனுடனும் உடலுறவுக்கொள்ள இசைவது போல காட்டுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதில்லை.
ஆண் மடியில் படுத்தவுடன் எந்தப் பெண்ணும் அடுத்தக்கட்டமாக உடலுறவுக்கு இடம் கொடுத்து
விடுவளா. ?
பல மாதங்கள் பட்டினிக்கிடந்தவன், தாகமாக இருந்தவன் பழைய கஞ்சியைக் கண்டதும்
எடுத்து குடித்து வாயைத் துடைத்துக்கொண்டு நிற்பது போல் பெண் உடலும் பெண் மனமும்
இருப்பதில்லை.
உடல் தேவைகளைத் தின்று செரித்து வாழ்ந்த ஆச்சிகளும் மதனிகளும் உண்டுதான்.

நாக்கில் எச்சில் ஊறும் நாஞ்சில் நாட்டு வகைவகையான சமையல்களைப் பற்றி புத்தகம் போடும் அளவுக்கு
எழுதக்கூடியவர் நாஞ்சில் நாடன். அப்போதெல்லாம் அந்த வகைவகையான சமையல்களைச் செயது பரிமாறும்
நாஞ்சில் நாட்டு வளைக்கரங்கள் இதைப்பற்றி எல்லாம் எழுதினால் என்ன எழுதி இருப்பார்கள் என்பதை
யோசித்துப் பார்க்கிறேன். வெறும் ருசி மட்டுமல்ல அந்த ருசிகளுக்குள் அவர்கள் இழந்துப் போன வாழ்க்கையின்
எத்தனையோ ருசிகரமான உணர்வுகள், ரகசியங்கள் வெளிவரலாம்.

மும்பையை மும்பை மக்களை தன்னுடம் தன் படைப்புகளுடனும் இணைத்து சீரஞ்சீவியாக
வாழ வைத்துக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை