நாச்சியார் திருமொழி

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

மாலதி


ஆண்டாள் ஒரு பெரிய தவற்றை நிறையவே செய்து விட்டாள்.

அதனால் தான் ‘ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே! ‘ என்று எல்லோரும் வாழ்த்தியிருந்தும் அவளுடைய நாச்சியார் திருமொழி பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை.நாச்சியார் திருமொழியில் மொத்தம் நூற்று நாற்பத்து மூன்று பாடல்கள்.அதைக் குறிப்பிட்டு வாழ்த்தியபோது திருப்பாவை என்ற ஒன்றை அவள் செய்ததே மறந்துவிட்டது பரவசப்பட்ட பாவலருக்கு.அதனால் தான் 143 மட்டுமே அவள் செய்தது என்று சொல்லிவிட்டார்.

ஆண்டாள் செய்த தப்பெல்லாம் பின்னால் வரக்கூடிய விமர்சகர்களைக் கணிக்கத்தவறியதுதான். ‘வேட்கையின் தேடல்கள் மெளனப்பின்னல்களாக வெளிப்பட வேண்டியவை. உரத்த குரலாக ஒலிக்கையில் சத்தும் சாரமுமற்று புதிய அறை களுக்கான வாசல்களை மூடிவிடுகிறது ‘ என்று அவளையும் யாராவது சொல்லிவிடக்கூடும் என்பதில் கவனம் வைத்திருக்க வேண்டும்.

இந்த திருப்பாவை இருக்கிறதே இதற்கு ‘பாப்மியூசிக் ‘ அளவுக்கு பாப்புலாரிட்டி உண்டு.எப்படிப்பட்ட ஜனரஞ்சகத்தன்மை என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு தலைமை ஆசிரியை என்னிடம் சொன்னார். அவருடைய பள்ளிக்கூடம் புகழ் வாய்ந்தது. உள்ளே புக முடியாது.

‘எங்கள் மாணவிகளுக்கு திருப்பாவை நன்கு சொல்லி வைத்திருக்கிறோம்.ஆண்டாள் மிக அழகாக பெண்கள் நல்லபடியாக இருக்க வேண்டியதைச் சொல்லியிருக்கிறாரே! ‘ என்றார். நான் அசட்டுச் சிரிப்பை உதிர்த்து வைத்தேன்..உண்மையில் லோகாயத மொழியில்சொல்வதானால் ‘பெண்கள் எப்படியிருக்கக்கூடாது ‘என்பதைச் சொல்லியிருக்கிறார் அந்தக்கவியரசி.

‘முகம் காட்டாமலிருப்பவனை முலையாலழுத்தி பலவந்தமாக ஈர்த்து ‘ முழுமையான ஆண் வடிவைக் காதலித்த செய்தி திருப்பாவையில்.வெங்காயத்தோல் போல் அதில் மூன்று மேல்தோல், நாடகத்துக்குள் நாடகம்.,ஒரே சமயத்தில் அரங்கினருக்காக ஒரு வார்த்தை,அந்தரங்கமுள்ளவனுக்கு ஒரு வார்த்தை என்று ஏகப்பட்ட யுக்திகள் திருப்பாவைக்குள்.சொல்ல காலங்கள் போதாது

‘ ‘கடவுள் ‘ என்ற போர்வையில் காதலனைப்பாடிய ஆண்டாள் போல நானில்லை. நான் வெளிப்படை ‘என்று புதுக்கவிதையில் குரல் கொடுத்திருக்கிற மும்பை பெண் ஒருவரை இணைய வலையில் படித்தேன்.இந்துமதக்கடவுளர் உணர்வுகளின் குறியீடுகள் என்பதை எத்தனை வகையில் சொன்னாலும் வெண்டும்போது எடுத்துக்கொண்டு வேண்டாத போது மறந்து போவதில் நிச்சயம் செளகர்யங்கள் இருக்கவேண்டும்.வெற்றி பெறும் அணிகளுக்குள் ஒதுங்க அது தானே வழி ?

இராமானுஜர் ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறார்.ஆண்டாள் கவிக்கருத்து பற்றிப் பேச்சு எழுந்தபொழுது, ‘மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகளல்லர்.

முலையெழுந்தார் கேட்கவேணும் ‘ என்று அபிப்பிராயப்பட்டார். முகவாயில் முடி எழுந்த முரட்டாண்மை அதாவது ஆணவம் தவிர்த்து முலையுடைமை போல பெண்தன்மை கொண்ட அனைவருக்கும் ஆண்டாள் புரிபடுவாள் என்பது கருத்து.

ஆண்டாளை ஒரே பெண் கவி என்று திரும்பத்திரும்ப சொல்கிறவர்கள் அவளை அறிந்தவரல்லர்.

‘கடவுளைக் காதலித்து எழுதினதால் ஆண்டாள் கவிதை எடுபட்டது. அப்படி எல்லோரும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி விட்டால் எடுபட்டு விடுமா ? ‘ என்றார் ஒரு நண்பர்.

அப்போதும் இப்போதும் எப்போதும் காதல் கவிதை யை யார் எழுதினாலும் அது எழுதப்படுவது காதலுக்குத்தான்.காதல் தான் அதன் முகவரி. யாரைக்காதலித்தாலும் அது காதலைக் காதலிப்பது தான்.இந்த இழவை எந்த மொழியில் சொன்னால் புரிந்து தொலைக்கப்போகிறது ? சுசிலா,நித்யா,பத்மினி என்று வெவ்வேறு பெயரில் ஆண்கவிஞர்கள் சுட்டுவதும் கண்ணம்மா என்று பாரதி வாய் நிறைய அழைத்ததும் காதலைத்தான்.

கண்ணன் ‘ மால் ‘ எனப்படுகின்ற உன்மத்த காதலின் குறியீடு என்பதை பின் நவீனத்துவங்கள் ஏதுமறியாமலே நன்கு புரிதல் செய்திருந்த ஆண்டாள் குறியீட்டின் எல்லாஅடையாளங்களையும் செவ்வனே உபயோகப்படுத்திக்கொண்டாள். கரிய உடல்,பவள வாய், பெண்மை கலந்த அழகு,குறும்பு, புல்லாங்குழல், வனமாலை, வாசனை, கூடவே ஆடுமாடு, கரையில்லாத அன்பு, அதை மொண்ணையாக வெளிக்காட்டாமல் மிகுந்த சமத்காரங்களோடு எதிராளியைக்காயவிட்டு எதிர்பார்க்கவிட்டு மேல்விழுவது,அப்படியே அள்ளித்தந்து போசிப்பது போன்ற பெண்ணணுக்கமுள்ள அவ்வளவு லட்சியத்தன்மைகளும் ஒட்டிக்கிடந்த ஆண் கண்ணன். அவனுடைய அவ்வளவு உபகரணங்களையும் உபயோகப்படுத்தி பிரேமை கொள்கிறாள் ஆண்டாள்.

நாச்சியார் திருமொழியில் வராத பெண் உளவியல் ரூபங்களே கிடையாது. காதலின் புனைவுக்காட்சிகளை மயக்க அனுபவங்களை சொல்லாமல் விடவில்லை அவள். உடம்பில் ,மனதில், உயிரில் கொஞ்சம் சொரணை இருக்கக்கூடிய அத்தனை பேரும் ரொமாண்டிக் இலக்கியத்தை மறுத்ததாகச் சரித்திரமில்லை. ரசனையின் உயிர் நாடியல்லவா அது ? எவ்வளவு வேஷங்களைப்போட்ட பின்பும் துடிதுடித்து வெளியே ஓடி வருவது ?

சிறுமிகள் இரு விரல் நீட்டி ஒன்றைத்தொடச்சொல்லி ‘ஆம் ‘ அல்லது ‘இல்லை ‘ என்று கண்டறிவது போல , வயதுப் பெண்கள் குலுக்குச் சீட்டுப் போட்டெடுத்து ‘கிடைக்கும் ‘ அல்லது ‘கிடைக்காது ‘ என்பதைப் படித்து அறிவது போல ஆண்டாள் நான்காம் திருமொழியில் கூடலிழைத்துப் பார்க்கிறாள்.

கூடலிழைத்தலாவது…[பெருமாள்கோயில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் உரை,பதிப்பு சித்தர் அச்சுக்கூடம்,மதராஸ் 1925] ‘வட்டமாகக்கோடு கீறி அதற்குள்ளே சுழிசுழியாகச்சுற்றும் சுழித்து ,இரண்டிரண்டு சுழியாகக் கூட்டிப்பார்க்கும்போது இரட்டைக்கணக்காக முடிவு பெற்றால் கூடுகை,ஒற்றைக்கணக்காக முடிவு பெற்றால் கூடாமை என்று ஒரு சங்கேதம் ஏற்படுத்திக்கொண்டு ‘குறி ‘ பார்க்கையாம். ‘

தாயம் விழ வேண்டும் என்று பிரார்த்திப்பது போல ‘கூடல் ‘ கூட வேண்டும் என்று ‘ஒட்டரா வந்தென் கைப்பற்றித்தன்னோடும் கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே ‘ ……என்கிறாள்.

இவ்வளவு லயிப்போடு காதல் செய்கிற தன்னையே பெண்கூறுகளாக்கி ‘நிறை புகழ் ஆய்ச்சியர் ‘ என்கிறாள் நான்காம் திருமொழி பதினோராம் பாடலில். உரை சொல்கிறது, ‘ஆய்ச்சியருக்கு நிறை புகழாவது கிருஷ்ணனை இன்னாள் நாலுநாள் பட்டினி கொண்டாள், இன்னாள் பத்து நாள் பட்டினி கொண்டாள் என்னும் புகழ் காணும் ‘என்பதாக.

‘கேசவன்நம்பியைக்கால் பிடிப்பாளென்ற ‘ பேறு வேண்டுவதாக ஆண்டாள் இன்று சொல்லியிருந்தால் பெண்ணியக் கவிஞர்கள் ‘இவர் எப்போதும் ஆணையே முன்னெடுக்கிறார் ‘ என்று பழி தூற்றக்கூடும்.ஆனால் பெண்ணியம் அறியாத உரைகாரரோ ‘கால் பிடிப்பது பின் கழுத்தைப் பிடிப்பதற்கு ஏதுவாகிறே ‘ என்று கண்டுபிடித்து விடுகிறார். மீண்டும் மேல் பத்தி பட்டினிக்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம். வைணவ உரையாசிரியர்களுக்குத் தந்தி பாஷை. அடுத்தபடி மேற்கோள் குறிகளே உபயோகிக்க மாட்டார்கள். தன் பெண்கூறுகளையே பிற ஆய்ச்சியராகவும் சொல்கிறாள் ஆண்டாள் என்றோம்.காலைப் பிடித்து அழைத்து வந்தபின் மாட்டியவனை வதைப்பார்கள் ஆய்ச்சிமார். ஒருத்தி முகம் கொடுக்காமல் நாலு நாள் பட்டினியொடு இடைகழியில் பழி கிடக்க விட்டிருப்பாளானால் இன்னொருத்தி எட்டு நாள் இரங்க மாட்டாள். வேறொருத்தி பத்து நாள் திரும்பிப்பார்க்க மாட்டாள்.இப்போது புரிந்திருக்கும் கால் பிடிக்க ஏங்கியது எதற்காக என்று. அது கட்டிப் போடத்தான். நாச்சியார் திருமொழி முழுக்கவும் பெண் காதலின் நுட்ப வெளிப்பாடு தான் என்பது எல்லாரும் அறிந்ததே. ஆண்டாளின் சிறப்பு அவளுடைய அதிகப்படி புரிதலில்.அவள் சின்னச்சின்ன விஷயங்களிலும் மனனம் செய்து வைத்திருந்த ஆணுக்கான புரிதலில். ‘உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக்காணும் ‘ கண்ணன் என்று ஆணுடல் அவளுக்கு ஏற்படுத்தும் இம்சைகளைச் சொல்வாள். தன் புலன்கள் அலைக்கழிக்கப்படும்பொது அவன் நிச்சலனமாக,பாதிப்பின்றி இருப்பதைப்போலக் கற்பனை செய்து ‘இருடாகேசன் வலி செய்ய ‘ என்று வேறு குறிப்பிடுவாள். குயிலை அழைத்து அவனைக் கூப்பிடு என்பாள்.

[ரிஷிகேசன் என்று குறிப்பிட்டது ‘நீ என்ன துறந்து விட்டாயா சகலத்தையும் ? உனக்கு புலன்கள் ஒன்றுமேயில்லையா ? ‘என்கிற கிண்டலில். அது உண்மையில்லை என்று தெரியும். இருப்பினும் தன் காதலைச்சொல்லும்போது அதற்குச்சமமாக ஆணிடம் இல்லை என்று குற்றம் சாட்டுவது பெண்ணின் அடிப்படை இயல்பு.இருடாகெசன் என்ற வார்த்தை எவ்வளவு ஆழத்திலிருந்து வருகிறது பாருங்கள்.]

‘வாயுமுலையுமழகழிந்தேன் என் தத்துவனை வரக் கூகிற்றி ‘என்பாள் குயிலிடம். இதனால் தான் ஆண்டாள் தன் உடலைத் தானே புகழ்ந்து பாடிக்கொண்டாள் என்று கருத்து தெரிவித்திருந்தார் ஒரு மேதாவி. உருவகம்,பூடகம்,அவலவிரிவு,பாலியநுண் நேரடி விரிவு எல்லாம் இவர்கள் வந்தபின் தான் உயிர்ப்பெடுத்ததாக எண்ணம்.அல்லது போர்ஹேயோ மார்க்வெஸோ ஒரு கோடி காட்டியிருந்தால் அது சரியாகும்.கேவலம் உள்நாட்டுப் பழம் சரக்கு. அதிலும் பக்திப்போர்வை அதிலெல்லாம் கவித்துவம்வரலாமோ ?

காதலை அவயவப்படுத்தியதோடு நிற்கவில்லை ஆண்டாள்.

‘சிறு குயிலே!திருமாலை ஆங்கு விரைந்தொல்லைக்

கூகிற்றியாகில் அவனை நான் செய்வது காணே1 ‘

;அவனை என்ன செய்யப்போகிறேன் பாரேன் ‘என்கிறாள்.எவ்வளவு தீர்மானமான காதல் ?அத்தோடில்லை.

‘எம்மில் ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் ‘என்கிறாள்,எங்கள் அந்நியோன்னியம் எங்களுக்குத் தான் தெரியும்.எங்கள் வார்த்தையில் உங்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை என்பது போல.

குயிலிடம் பேசுவதைப் பாருங்கள்.

‘சங்கொடு சக்கரத்தான் வரக்கூவுதல் ,பொன்வளை கொண்டு தருதல் …இரண்டத்து

ஒன்றேல் திண்ணம் வேண்டும் ‘என்பாள்.

‘ஒன்று, என் கழன்று விழுந்த வளையை [அவ்வப்போது]கொண்டு வந்து தருதல் அல்லது

மால் வரும்படிக் கூவுதல் இரண்டில் ஒன்றை, குயிலே! நீ இங்கே

பிழைக்கவேண்டுமானால் செய்தாகவேண்டும். ‘ என்கிறாள் .

‘இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் ‘ என்ற நாச்சியார் மொழியில் தமிழ் சரியில்லை என்று பலர் அபிப்பிராயப்படக்கூடும், இப்போது எழுதப்பட்டிருந்தால். ஆண்டாள் தப்பித்தாள்.

என் கவிதைத்தொகுப்பு ‘தணல் கொடிப் பூக்களி ‘ல் தமிழில் நிறைய தவறுகள் இருப்பதாக வித்தகர்கள் தெரிவித்தார்கள். தமிழே சரியில்லை என்றார்கள். ‘வாழ்ச்சி ‘ என்ற் பதத்தை நான் அர்த்தப்பொதிவுக்காக உபயோகப் படுத்தியிருந்தேன். அதே பொருளில் தப்புத்தப்பாக கம்பராமாயணமும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தமும் உபயோகப்படுத்தி விட்டிருந்தன .

‘வித்தியாசமாக எது தெரிந்தாலும் அது அல்பம். ‘ என்று புரிதல் செய்வது பற்றிய ஜென் கதை ஞாபகம் வருகிறது.

‘you are different so there ‘s something wrong with you ‘

குயில் பாட்டு தொடர்கிறது.

அழகிய தோகை கொண்ட அன்னப்பறவையை எல்லா வாத்துக்களுமே

நிராகரிக்கலாகாது.

புன்னைமரங்களும் குருக்கத்தி மரங்களும் கொங்கு மரங்களும் செருந்தி மரங்களும்

நெருங்கிய சோலையிலெ வாழுகிற குயிலே![அதுக்கென்ன இப்பொ ?]

மணிவண்ணனை நான் ஆசைப்பட்டுவிட்டதால் என் கை வளை அதன்பாட்டுக்கு கழண்டு

விழலாமா ?[கூடாது தான் அதற்கு நான் என்ன செய்ய ?]

பவளம் பொல் அதரம் படைத்த என் துணைவன் வந்து சேரும்படி நீ திரும்பத்திரும்ப

இரவும்பகலுமாய் கூவ வேண்டும் [ஐயோ!செத்தேன்]

அடுத்த கட்டத்தில் ‘இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் ‘ குயிலே,உன்னைத்துரத்தி விடுவேன், என்று பாய்கிறது பெண்மொழி[ ?] ஏழாம் திருமொழியில் ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ ‘உயரங்களுக்கு இன்னும் உடல்மொழி வரவில்லை அல்லது வளரவில்லை தற்காலத்தில் என்று படுகிறது.

ஏனெனில் இப்போது சொல்லப்படுகிற உடல்மொழி விவரணை எல்லாம் மேற்கத்தியக் கடைச் சரக்கு. அங்கு பெண்ணியத்தின் பீடு மொழியாக female body language அடையாளப்பட்டிருக்கிறது.அதில் பெண் தான் அறிந்த , தான் உகந்த தன் அங்கங்களை உணர்த்துவித்து அதற்குள் மேவாத ஆணைச் சபிப்பதிலேயே துன்ப சுகம் அடைகிறாள்.ஆண்டாளோ அவன் உகந்த தன் அடையாளங்களை அங்கங்களாக உணர்த்துவித்து பூரித்து அவற்றையே அவனை அடையும் கருவிகளாக்கி அவனை பலவீனப்படுத்தி சேர்தலின் இன்ப சுகம் கொண்டு வருகிறாள். அதற்குத் தன்னடைவாக ‘ஆண் வர்ணனை ‘யைப் பெண் வெளிப்பாடாகச் சொல்லிப்போகிறாள்.

தஸ்லீமா நஸ்ரீனின் பதினெட்டு கவிதைகளை இணையத்தில் பார்த்தேன்.அவற்றில் ஏதோ ஆம்பிள்ளை தொட்டாலே சோகம் என்று பொழுது விடிந்திருக்கிறது. நான் ஏதோ பெண்ணியத்தை ஏசுவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அதற்கும் மேலே இணக்கமான ஆண் இணை இருப்பை ஏன் சொல்ல மறுக்கிறார்கள் ? என்று தான் கேட்டு வைக்கிறேன். ஆண்டாள் வழிகாட்டி.

‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்

கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே

பெண்படையருன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் ‘

என்று காதலன் கையிலிருக்கும் பொருளிடம் அவன் அணுக்கத்துக்குப் பொறாமை தெரிவித்துப் பாடுவதில் ‘வாயமுதம் ‘ என்கிற பதத்தில் ஒலிக்கிற வேட்கையை கவனிக்க வேண்டும்.

ஆண்டாளுக்கு எல்லாமே பிரும்மாண்டம் தான் சிந்தனையில்.வாரணமாயிரத்தைச் சொன்னது கிடக்கட்டும். கண்ணன் உருவத்துக்கே மழையைக் கற்பிதம் செய்தவளாயிற்றே![ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து…] நல்லபடி எல்லாம் நடந்தால் இது நேர்ந்து கொள்கிறேன் என்று நேர்ச்சை சொல்வார்களல்லவா பெண்கள் ? அப்படி ஆண்டாள் நேர்ச்சையைப் பாருங்கள்.

‘நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணை வாய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறு தடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ! ‘

பரவாயில்லை. அல்பசொல்ப பிரார்த்தனை தான். நூறு அண்டா வெண்ணையும் நூறு அண்டா அக்கார வடிசிலும் பாக்கி வைத்து விட்டு புக்ககம் பொய் விட்டாள். இராமானுஜர் வந்து நிறை வேற்றினார். அந்தக்கையோடு நேரே திருவில்லிபுத்தூர் போனார். ச்ந்நிதியில் ‘எம் அண்ணரே ‘என்று அசரீரி அழைத்தது.அதுகொண்டு ஆண்டாளை ‘பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ‘ என்றார்கள். இன்னும் இசகுபிசகாகவெல்லாம் நிறைய சொல்லி விடுவாள் ஆண்டாள். ஆன்மீகத்திலும் பாலியத்திலும் ecstacy ஒரே வித அனுபவம் தானே!

மழையே மழையே மண்புறம் பூசி யுள்ளாய் நின்ற

மெழுகூற்றினாற் போலூற்று …………………………….

அழகப்பிரானார் தம்மையென்னெஞ்சகப்படத்

தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டூற்ற வல்லையே!

என்ற திருமொழியில் ‘மண் புறம் பூசி யுள்ளாய் நின்ற மெழுகூற்றினார்போலூற்று அழகப்பிரானார் ‘ என்ற expression மிகக் கூர்மையானது.தவிர்க்க முடியாமல் ‘cork the bottle and pour the liquid ‘ வந்து தொலைந்தால் மனசில், என்னை பெர்வெர்ட் என்பீர்கள்.

‘ததைத்து ‘ என்ற் வார்த்தைக்கு ‘அவரோடு நெருக்கி வைத்து ‘என்று அர்த்தம் சொல்லி வைத்திருக்கிறது.இந்த வார்த்தையை ஆண்டாள் சொன்னதால் சரியாகி விட்டது. நாங்கள் சொல்லியிருந்தோமானால் தமிழில் தவறிருக்கிறதென்று பதிப்பகம் சொல்லிவிடும்.[எங்களுக்கு சில கொள்கைகள் உண்டுங்க.எங்கள் வெளியீடு என்றால் அதில் சில விஷயமிருக்கணும்.]

12ம் திருமொழியில் ஆண்டாள் அம்மாமார்களையே ஆணை செய்ய ஆரம்பித்து விடுகிறாள்.

‘என்னைக் கொண்டு போய் கண்ணனிடம் சேர்ப்பியுங்கள். நான் நூல் நூலாகிவிட்டேனல்லவா ? எழவே முடியாமல் விழுந்து பட்டேன். என்னைப் பழையபடி ஆக்க வேண்டுமென்று தொன்றுகிறதல்லவா ?அதைச் செய்யாதீர்கள்.ஏனெனில் என் பழைய நிலை அவனோடு இணைந்திருந்த நிலை,.அதற்கும் பழைய நிலை ,அவனைச் சந்திக்கும் முன் நான் இருந்த கன்னி நிலை. அந்த நிலைக்கு கொண்டு வாருங்கள். ‘

[முதல் நாளைக்குத் திரும்பிப் போய் இன்னொரு முறை புதிய முயற்சியைத் தொடங்குவாள் போலிருக்கிறது.]

பண்டு பண்டாக்க உறுதிர் ஆகில்

நீர் என்னை ஆணையால் காக்க வேண்டில்

இனி நாணி ஒரு கருமமில்லை

என்னை ஆய்ப்பாடிக்கே உய்த்திடுமின்.

கொண்டு கோள் செய்திருக்கிறேன்.ஆண்டாள் இன்னும் அழுத்திக்கட்டி யிருக்கிறாள் வார்த்தைகளை.

‘என்னை அந்தப் பழைய நிலைக்குக் கொண்டுவர நிச்சயம் செய்தீர்களாயிருந்தால் ,சத்தியமாக என்னைப் பிழைக்க வைக்கப் போவதானால், என்னை ஆய்ப்பாடியில் கொண்டு விட்டு விடுங்கள். ஊர் உலகமெல்லாம் அறிந்தாயிற்று. இனி என்ன வெட்கம் கிடக்கிறது ,காரியத்துக்கு ஆகாமல் ?

நந்தகோபாலன் கடைத்தலைக்கே

நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்……

மருத்துவர் வாசலில் நோயாளியைக்கிடத்துவது போல இரவோடிரவாக என்னை நந்தகோபன் வீட்டில் சேர்த்து விடுங்கள்.

‘ஆழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று செங்கச்சு ஆடை கொண்டு கண் ஆர்த்து சிரு மானிடரைக் காணில் நாணும் கொங்கைத்தலம் இவை கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா ‘….எனவே என்னை யமுனைக்கரையில் தூக்கிப் போட்டு விடுங்கள்.

முன்பு ‘அவன் பேரைச்சொல்லு சொல்லு ‘என்று பழக்கி விட்ட கிளி சதா பேர் சொல்லி அழைக்க கோபத்தில் கூட்டிலடைத்தாள் ஆண்டாள். அது பரிதாபமாக கோவிந்தா என்று கூவத்தொடங்கியது. தீனிக் கொழுப்பில் தான் இதற்கு இவ்வளவு திமிர் என்று பட்டினி போட்டாள்.றது இன்னமும் உச்சஸ்தாயியில் ‘உலகளந்தான் ‘ பேரை அவன் அளந்த உலகு முழுவதும் கேட்குமாறு அலறத் தொடங்கவும் தாங்கவே முடியவில்லை ஆண்டாளுக்கு. கொடுமையான விரஹம் தீரும்படிக்குத் தன்னை துவராபதியில் சேர்த்துவிடச் சொல்கிறாள்.

‘கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் ஊட்டுக்கொடாது செறுப்பனாகில் உலகளந்தானென்று உயரக்கூவும் ………..துவராபதிக்கென்னை உய்த்திடுமின் ‘

அடுத்த கட்டம் தான் அசத்தல்.

என்னை அவன் இருக்குமிடம் கொண்டு சேர்க்கும் வரை தாங்காது.இங்கேயே முதலுதவியாய் அவன் ஆடையைக் கொண்டுவந்து என் மீது படும்படி விசிறி விடுங்கள் என்கிறாள்

‘கண்ணன் காட்சிப் பழகிக்கிடப்பேனை புறம் நின்று

புண்ணில் புளி பெய்தாற் போல அழகு பேசாதே…

அவன் அரையில் உடுத்திய பீதகவாடையைக் கொண்டுவந்து வாட்டம் தணிய வீச மாட்டார்களா ? ‘ என்கிறாள்.

‘மேலிட்ட உத்தரீயமானால் ஆகாதோ ? அரையில் சாத்திய பீதாம்பரமாகவே இருக்கவெணுமென்று என்ன நிர்ப்பந்தம் ? ‘என்ற நஞ்சீயர் கேள்விக்கு பட்டர் பதிலைப் பாருங்கள்.

‘கண்ண பிரானுடைய ஸ்வேத பரிமளத்திலே மிகவும் ஆசை கொண்டவள் காணும்.

மேலிட்ட உத்தரீயத்திலே அது விசேஷமாகக் கிடைக்காது. ‘

இன்னும் நாச்சியார் திருமொழியில் பல விந்தைக்குரிய பெண் மனவியல் பாங்கும் விகாரங்களும் அடையாளப் படுகின்றன.

நாச்சியார் திருமொழியைச் சொல்லிவந்து அப்படியே என் கவிதைகளையும் பக்கத்தில் வைத்து வருகிறேன் என்று யாராவது அபிப்பிராயப்பட்டால் ‘திருவாணை,நின்னாணை ‘ சுட்டுப் பொசுக்கு என் குப்பைகளை. சாக்கோடு சாக்காக ஆண்டாள் மேடையில் என் கடையையும் விரித்துவிட்டேன் என்று நீங்கள் குற்றம் சாட்டினால் பின் பக்கத்தைக் காட்டியபடி ஓட்டமாக உள்ளே ஓடுகிறேன். யப்பா!யாரங்கே! திரையை இழுத்து விடுங்க.

***

மாலதி

malti74@yahoo.com

Series Navigation