நற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

மலர்மன்னன்


கத்தோலிக்கக் கிறிஸ்தவ இணைய தளம் எனத் தன்னை பிர கடனம் செய்யும் ‘சர்ச் நியூஸ் ஸைட்’ என்கிற இணையச் செய்தி இதழ், ஒரிஸ்ஸாவின் கிராமப்புறங்களிலும் வனவாசிகள் வாழும் பகுதிகளிலும் ஹிந்து இயக்கம் நடத்திவரும் ஓராசிரியர் பள்ளி கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் காண விரும்பு வோர்,
http://www.churchnewssite.com/portal/?p=20242

என்கிற சுட்டியை நாடலாம்.

பொதுவாக, என்ன இருந்தாலும் கிறிஸ்தவப் பள்ளிகள் மாதிரி வராது என்று சாதிக்கிற சுபாவம் நம்மில் பலருக்கு இன்னமும் உண்டு. பிள்ளைகள் மறைமுகமாகக் கிறிஸ்தவச் சார்புள்ளவர்க ளாக மாற்றப்படுவதையோ, ந்மது கலாசாரத்திலிருந்து அவர்கள் மெதுவாக விலக்கப்படுவதையோ பெற்றோர் பொருட்படுத்துவ தில்லை. தரமான கல்விக்குக் கிறிஸ்தவப் பள்ளிகள்தாம்
சாஸ்வதம் என்று குழந்தைகளை அங்கு சேர்த்துவிடுவார்கள். இவ்வாறன நிலையில், ‘சர்ச் நியூஸ் ஸைட்’ தருகிற செய்தி நம் கவனத்தை ஈர்க்கிறது.. செய்தியை அப்படியே தமிழில் தந்து விடுகிறேன்:

‘புவனேஸ்வர்-இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவ சர்ச் புறக்கணித்துவிட்ட நாட்டுப்புறப் பகுதிகளில் விரிவான பள்ளிக்கூடச் சங்கிலித் தொடரை நிறுவியிருப்பதன் மூலம், தீவிர ஹிந்துக் குழுக்கள் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலே போய்விட்டிருக்கின்றன என்று கல்வி நிபுணர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

1978 முதல், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ். பேரியக்கம்) இந்தக் கிழக்கு மாநிலத்தில் 12,000 ஆசிரியர்கள் கொண்ட 793 பள்ளிகள் அடங்கிய சங்கிலித் தொடரைக் கட்ட மைத்துள்ளது என்று உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். இவ்வியக்கத்தை முன்னின்று நடத்தி, அடிப்படை யான ஆதாரக் கல்வி தொடங்கி, கேந்திர அளவில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆணையங்கள் வரையிலான கல்வித் திட்டங்களில் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளது என்று, அங்கன சாட்டர்ஜி என்ற சமூக-கலாசார மானிடவியல் பேராசிரியர் கூறுகிறார். இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டெக்ரல் ஸ்டடீஸ் என்கிற ஒருங்கிணைந்த கல்வி ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி வருகிறார்.

(இப்பள்ளிகளின் வாயிலாக) முற்று முழுக்க ஒரு புதிய தலைமுறை ஹிந்துத்துவக் கோட்பாட்டில் ஊன்றியிருக்குமாறு உருவாக்கப்பட்டு வருகிறது. இளம் வயதிலேயே வெறுப்பை போதிக்கும் கபடமான செயல் திட்டம்தான் இது என்று இவரது கட்டுரை தெரிவிக்கிறது. இதற்குச் சான்றாக, மாநிலத்தின் பத்தாம் வகுப்பு மாணவர்களில் முன்னணியில் உள்ள 100 பேரில் 55 பேர் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முன்னின்று நடத்தும் பள்ளி களிலிருந்து வருகிறவர்கள்தான் என்று இவரது கட்டுரை மேலும் தகவல் தருகிறது (மத நல்லிணக்கம் என்ற பெயரில் ஹிந்துஸ்தானத்தின் உண்மையான வரலாற்றை மறைத்து, புண்ணுக்கு மருந்திடாமல் புனுகு தடவி ஹிந்துக்களை இளம் பிராயத்திலிருந்தே மயக்கத்தில் ஆழ்த்திக் காயடித்துப் போடாமல் நடந்த நிஜங்களை விருப்பு வெறுப்பின்றித் தெரிந்துகொள்ளச் செய்வதுதான் இநத்ப் பேராசிரியர் கண்களுக்கு வெறுப்பு போதனையாகத் தென்படுகிறது! இவரைப் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் சென்று அங்குள்ள அரசாங்கப் பள்ளிகளில் எத்தகைய வரலாறு கற்பிக்கப்படுகிறது என்று கண்டறிந்து ஆய்வுக் கட்டுரை எழுதினால் அது எப்படி யிருக்கும்? அவ்வளவு ஏன், ஹிந்துஸ்தானத்தின் வரலாற்றுப் பாடத்திட்டங்களிலேயே மக்களைப் பலவாறு துன்புறுத்தி வலுக்கட்டாயமாகக் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்த சேவியர் புனித சவேரியார் என்று போற்றப்படுவதையும் ராணா பிரதாப் சிங், குரு கோவிந்தசிங் போன்றவர்களின் வரலாறுகள் திட்டமிட்டு மறைக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு சும்மா தானே இருக்கிறோம்!)

சர்ச்சுகள் நடத்திவரும் பள்ளிகளின் செல்வாக்கிற்கு மாற்றாகவே
சிசு மந்திர் என்று அழைக்கப்படும் பள்ளிகளும், ஏகல் வித்தியா லயா எனப்படும் கிராமப்புற ஓராசிரியர் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ். தெளிவு படுத்தியுள்ளது என்கிறார், .
அகில இந்திய கிறிஸ்தவர் கெளன்சில் பொதுச் செயலாளர் ஜான் தயாள்.

பெரும்பாலும் பெரிய நகர்ப்புறங்களில் நிறுவப்பட்டுள்ள கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்கள் செல்வந்தர்களுக்கும் செல்வாக்குள்ளவர்களுக்கும் உரிய மேல்தட்டு ஆங்கில மொழி வழிக் கல்வி நிலையங்கள் என்றே பெயரெடுத்துள்ளன என்று இவர் வருந்துகிறார். நாட்டுப்புறங்களில் ஒருசில இடங்களில் மட்டுமே கிறிஸ்தவப் பள்ளிகள் இருப்பதாகவும் அவை தவிரப் பிற பகுதிகளில் உள்ள வெற்றிடத்தையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் பள்ளிகள்தாம் மேல்மட்டப் படாடோபம் ஏதுமின்றி உயர்தரக் கல்வியளித்து நிரப்பி வருவதாக மேலும் கூறுகிறார், இவர். இது குறித்து சர்ச்சானது மறு சிந்தனை செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.

முன்னாள் சமூக சேவை இயக்குனர் ஃபாதர் அன்செலம் பிஸ்வால் இக்கூற்றை ஒப்புக்கொள்கிறார். நாம் நடத்தும் பள்ளிக்கூடங்கள் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு இணையாக மாட்டா என்கிறார், இவர். இன்று நமக்குத் தேவை கல்வி விஷயத்தில் கடப்பாடும் குறிப்பிட்ட திசை நோக்குமே ஆகும் என இவர் மேலும் கூறுகிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பிற்கான வருடாந்திரத் தேர்வில் முதலிடம் வகித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரிஸ்ஸா நெடுகிலும் உள்ள ஆர்.எஸ்.எஸ்.பள்ளிகளைச் சேர்ந்த வர்களே எனக் கூறும் இவர், இந்த ஆர்.எஸ்.எஸ். பள்ளி மாணவர் களில் பலரும் அரசு அலுவலர்களின் பிள்ளைகளாவார்கள் எனவும் தெரிவிக்கிறார்.’

ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தரமான கல்வி கற்றுத் தேர்வில் முதல் இடம் வகிப்பதை ஒப்புக்கொள்ளும் இவர்கள், இது குறித்துக் கவலைப்படுவானேன்?
அப்படியானால் பள்ளிக்கூடங்கள் நிறுவி கல்விப்பணியாற்றுவது தவிர வேறு உள்நோக்கம் ஏதும் சர்ச்சுகளுக்கு உள்ளன போலும்! இந்த உண்மையினையும் ஒப்புக்கொள்வதேபோல் இச்செய்தி வெளியாகியிருப்பதைப் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

நிஜத்தில் குழந்தைகள் இளம் பருவத்திலிருந்தே தேசப்பற்றினை வளர்த்துக்கொண்டு நமது பாரம்பரியமான கலாசாரத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்வதுதான் ஆர்.எஸ்.எஸ். முத்திரை எதுவுமின்றி இப்பள்ளிகள் மேற்கொண்டுள்ள பணி. இதைத்தான் வெறுப்பு போதனை என்று வர்ணிக்கிறார்கள்!

++++

.

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்