நற்குணக் கடல்: ராம தரிசனம்

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

ஜடாயு


தவத்திலும், கல்வியிலும் சிறந்த நாரத மகரிஷியைப் பார்த்து முனிபுங்கவர் வால்மீகி கேட்கிறார் – “உலகில் தலைசிறந்த குணவான் யார்? வீரன் யார்? தர்மத்தை அறிந்துணர்ந்தவன், செய்ந்நன்றி மறவாதவன், சத்தியத்தில் உறுதியாக நிலைபெற்றவன் யார்?” (வால்மீகி ராமயணம், 2-ஆம் சுலோகம்) பின்னர் இப்படி பல நற்குணங்களின் பட்டியலை அடுக்கிக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறார். இறுதியில் நாரதர் இவை எல்லாவற்றுக்கும் ஒரே விடையாக “ராமன் என்று மக்களிடையே புகழ்பெற்றவன்” (ராமோ நாம ஜனை: ஸ்ருத:) என்று பதிலளிக்கிறார்.

கம்பராமாயணம் 2-ஆம் பாடலில், கம்பர் கூறுகிறார் –

சிற்குணத்தர் தெரிவுஅரு நல்நிலை
எற்கு உணர்த்த அரிது; என்ணிய மூன்றினுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ.

சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும் கடந்த ஞானியர் நிலையை என்னால் உணர்த்த முடியாது; இவற்றுள் முதலாவதான சத்துவகுணத்தின் முழு உருவமாகத் தோன்றிய ஸ்ரீராமனுடைய நற்குணங்களாகிய கடலில் மூழ்குவதே நன்று.

“எல்லையொன்றின்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட் முயலும் முயற்சியைக் கருதியும்..”

என்று பாரதி சொன்னது எல்லையற்ற பரம்பொருளை அல்ல, ஸ்ரீராமனுடைய எல்லை காணமுடியாத குணக்கடலைத் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்புக்கு எல்லை உண்டா? பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஞானத்திற்கு எல்லை உண்டா? தொண்டுக்கு எல்லை உண்டா? 4 முழம் அன்பு, 3 கிலோ பாசம் என்று யாராவது சொல்லுவார்களா?

எல்லையில்லாத இந்த மனிதப் பண்புகளுக்கு ராமன், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன், குகன் என்றெல்லாம் குறியீடுகளால் காட்ட விழைந்தான் அல்லவா கம்பன்? அதைத் தான் பாரதி குறிப்பிடுகிறான் என்று கொள்ள வேண்டும்.

கற்றுக் கடக்க முடியாத கரைகாணாக் கடல் காகுத்தன் கல்யாண குணங்கள். அதனால் தான் “கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ?” என்று கேட்டார் நம்மாழ்வார்.

“அனுபம குணாம்புதி சந்த்ரஸி!” (ஒப்பற்ற குணங்களாகிய கடலுக்குச் சந்திரனே) என்று அழைத்துப் பாடினார் தியாகராஜர். கடல் அலைகள் சந்திரனைக் கண்டு பொங்கி மகிழ்வது போல, நற்குணங்கள் ராமனுக்காக அலைபாய்கின்றனவாம். இந்து தத்துவ மொழியில் கடல், சந்திரன் இரண்டும் மனத்தின் குறியீடுகள், இரண்டும் ஒன்றே என்பது உட்கருத்து.

நூற்றாண்டுகள் கழித்து ஸ்ரீஅரவிந்தர் கம்பனின் அதே கருத்தை எதிரொலிக்கிறார் –

.. It was Rama’s business to be not necessa-rily as perfect, but as largely representative of sattvic man, faithful husband, obedient son, a tender and perfect brother, father, friend — of the outcast Guhaka, of animal leaders, Sugriva and Hanuman, of the vulture Jatayu, friend of even rakshasa Vibhishana. All that he was in a brilliant, striking but above all spontaneous and inevitable way… with a certain harmonious completeness.

His business was to destroy Ravana and to establish Rama Rajya… an order proper to the sattvic civilised human being who governs his life by finer emotions, moral ideals, such as truth, obedience, cooperation and harmony, the sense of domestic and public order — to establish this in a world still occupied by anarchic forces.

(From : Rama As An Avatar Of The Sattvic Human, http://timesofindia.indiatimes.com/articleshow/1812481.cms)

சத்யகாமன், சத்யசங்கல்பன், சத்யபராக்ரமன் என்பனவெல்லாம் ராமனுக்குரிய அடைமொழிகள். “தருமத்தின் தனிமூர்த்தி” என்பான் கம்பன். “ராமோ விக்ரஹவான் தர்ம:” என்பான் வால்மீகி.

சத்தியத்தின் வேர்ச்சொல்லான “சத்” என்பதன் பொருள் “உள்ளது”. அதாவது என்றும் உள்ளது எதுவோ அது உண்மை. அதுவே தருமம். சத்தியம், தருமம் இரண்டும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் தான். அதனால் தான் ஈசாவாஸ்ய உபநிஷத் “சத்ய தர்மாய த்ருஷ்டயே” என்று முடிகிறது.

“உண்டெனும் தருமமே உருவமாய் உடைய நிற்-
கண்டுகொண்டேன் இனிக் காண என் கடவெனோ?”

என்று உயிர்விடும் நேரத்தில் வாலிக்கு இந்த ராம தரிசனம் மூலமாக இந்த ஞான தரிசனம் கிடைக்கிறது.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

என்று வள்ளுவர் குறிப்பிடுவது இந்த “உண்மை”க் குணமான சத்துவ குணத்தைத் தான். சத்துவ குண சொரூபன் ராமன். அவனது வழி தருமம், சத்தியம். அதனால் தான் அவன் தன் உயிர்க்கு மட்டும் அல்ல, மன்னுயிர்க்கெல்லாம் துணையாகிறான்.

ராமனுக்கு முடிசூட்டும் செய்தியைச் சொன்ன தசரதனிடம் வசிஷ்டர் கூறுகிறார் –

பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவியெனும் திருவும்
“இன்னுயிர்த்துணை இவன்” என நினைக்கின்ற இராமன்
தன் உயிர்க்கு என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த
உன்னுயிர்க்கென நல்லன், மன்னுயிர்க்கெலாம் உரவோய்!

(மந்திரப் படலம், 37)

இங்கே பூமடந்தை என்னும் திருமகளும், புவிமடந்தையாகிய நிலமகளும், அவள் உருவாகவே தோன்றிய சீதையும் எல்லாரும் ஒன்று தான். அதனால் இவர்கள் அனைவர்க்கும் துணையானாலும் ராமன் தன் ஏகபத்தினி விரதத்தை பங்கம் செய்யவில்லை!

மகாபாரதத்தில் தருமர் யட்சன் உரையாடலில் “ஒரு மனிதனுக்கு உற்ற துணைவர்கள் யார்?” என்று யட்சன் கேட்க “தருமம் தாய், சத்தியம் தந்தை, கருணை நண்பன், அமைதி மனைவி.. ” என்பதாக தருமர் பதிலளிக்கிறார்.
இதே கருத்தில், இருளில் காட்டில் ராமன் செல்கையில் இந்த நற்குணங்களாகிய விளக்குகளே அவன் துணையாயிற்று என்பதாக கம்பன் அழகாகச் சொல்லுவான் –

தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மையறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்யதன் வில்லுமே, சேமமாகக் கொண்டு
ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே.

(தைலம் ஆட்டு படலம், 47)

மனிதர்களாகவே வந்த சீதை, ராமனுடைய திரு அவதாரங்கள் மானுடப் பண்புகளை மனித குலம் முழுமைக்கும் நினைவூட்டிக் கொண்டிருக்கும், “ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்” என்று வால்மீகியின் ராமன் தன்னைக் கூறிக் கொள்கிறான். “மானுடம் வென்றதன்றே!” என்று கம்பன் மெய்சிலிர்க்கிறான்.

ஸ்ரீராமன் புகழ்பாடும் சந்திரோதயம்
சீதாவின் முகம் தேடும் அருணோதயம்!


http://jataayu.blogspot.com

Series Navigation