நண்பரோடு பகிர்தல்: நான் கடவுள்

0 minutes, 12 seconds Read
This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

தாஜ்



அன்புடன்
நண்பருக்கு….

சென்ற வாரம்….
வியாபார விஜயமென்று சென்னை.
செவ்வாய் இரவு புறப்பாடு
காலையில் கஸ்டமரை பார்க்கும் திட்டம்.
சீர்காழியிலிருந்து ஒன்பதரைகெல்லாம்
சிதம்பரம் வந்தாகிவிட்டது.
அடுத்து…
ஒரு மணி நேரத்தில்
சென்னை பஸ்ஸை பிடித்தால் போதும்.

வழிநெடுக…
நகரச் சுவர்களில்
போலீஸ் புடைசூழ
கோமணத்தோடு ஆர்யா விரைகிறார்!
‘நான் கடவுள்’ போஸ்டர்கள்!
குறித்தப்படிக்கு சிதம்பரத்தைத் தாண்ட
மனம் முரண்டுப் பிடித்தது.
கடவுளைவிடவா?
கஸ்டமர் – சென்னை – காலை…?
பார்த்துக் கொள்ளலாம்
கடவுள் தரிசனம் முக்கியம்.

1. ‘நான் கடவுள்’ இஷ்டமாகிப்போன பெயர்!
2. ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ சமஸ்கிருத சப் – டைட்டில் ஜாலி.
3. காசி படப்பிடிப்பு!
3-A. ஆர்தர்.ஏ.வில்சன்! கங்கை… அசலாக பார்க்க கிடைக்கும்!
4. அஹோரி மடம்!
5. ‘கஸ்தூரி மானில்’ சறுக்கிய ஜெயமோகன்… மறு பிரவேசம்!
5-A. அவரது ஏழாம் உலகச் சங்கதிகள்.
6. அங்கஹீனர்களை தேடி எடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்!
6-A. அங்கஹீனத்தின் ஆகப் பாவங்கள்..
கவிஞர்கள்தான்! ‘எங்கள்’ சார்பாக இதில் விக்கிரமாதித்யன்!
7. இசைஞானி இளைய ராஜா.
8. ‘பிதாமகன்’ பாலா!

ஏக்கங்களை தாங்கி
மஹா கர்ப்பமாய்
நான்கு வருட காத்திருந்த
காத்திருப்பு வீண்போகவில்லை!
மூக்கும் முழியுமாக
கடவுள் பிரசன்னமாகியிருக்கிறார்!

விண்ணைத் தொடாதக் குறையாக,
தொடங்கியதுமே…. படம்
மனதையது ஆக்ரமிக்கிறது!

ஓவ்வொரு காட்சியும்
வரைந்தெடுத்த சித்திரம்!
இமைக் கொட்ட முடியவில்லை!
கண்கள்…. பூத்தேவிடுகிறது!
இத்தனைக்காலம் சினிமா பார்த்தும்…
இது புதிய அனுபவம்!!

கங்கைக் கரையில் தொடங்கி
அங்கேயே முடியும்
அத்தனைக் காட்சிகளும்
கைவண்ணத்துகாரர்களின்
கலை தேர்ந்த
வேலைப் பாடாக இருக்கிறது!
ஒளிப்பதிவாளரை
வலம்வந்து கும்பிடலாம்.
தகும்.
அப்படியே….
இளையராஜாவையும்.

இத்தனைக் காலமும்
இளையராஜாவுக்கு
இப்படியோர் இரை
கிட்டியிருக்குமென்று தோன்றவில்லை!
திரை இசையில் அவரது வாத்தியங்கள்
அசாத்திய வளுவோடு
அதம் பண்ணியிருக்கிறது!
குரல்கள் வெடிக்கும் நேர்த்தி
இன்னொருபுறம்!
‘ரூத்(ரா)ஆஆஆ….’
பல காட்சிகளில்
மனித சப்தத்தை
இடியோசையாக
இசையோடு மொழுகி ரசிக்கவிட்டிருக்கிறார்.
பாடல்கள் என்னவோ பழைய ரகம்!
ஸ்டாண்டெட் பல்லவி & குரல்கள்.

படம் வெளிவந்த
ஐந்தாம் நாள் இரவு
இரண்டாம் ஆட்டம்
அதிகம் போனால் நூற்றி ஐம்பது…
குறையும் என்றால்…
நிச்சயம் நூறுக்கும் குறையாத
ரசிகர்களுக்கிடையே
‘அஹம் ப்ரம்மாஸ்மி’யை
பார்த்தேன் ரசித்தேன்.

எண்பது ரூபாய் டிக்கெட் என்பது
கடவுளை பார்க்கத்தான் என்றாலும்…
அதிர்வும் சலனமும்
புரண்டுக் கொண்டிருந்தது.
எல்லாம்…
விளம்பர படங்கள் பார்க்கும்வரைதான்.

இரவு நிலா வெளிச்சத்தில்
கங்கா பெரும்வெளி!
வெள்ளித் தகடுகள் நெளிய
படகுகள் உலாத்தல்.
கரையில் குவியல் குவியலாய்
விறகாக பிணங்கள் எரிகிறது!
நிமிர்ந்து உட்கார்கிறேன்
படம் நிலைக்கொண்ட
நாழியில்….
இடம்மாறிக் கொண்டது
எண்பது ரூபாய்
அதிர்வும் சலனமும்!

படத்தின் லாய்ப்பில்
பார்வை குத்திட்டு நிற்க
மனம் கொள்ளா களிப்பினூடே…
ஒவ்வொரு காட்சியும்
திக் பிரமையோடு கழிகிறது!

தியோட்டரில்
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக
முழுமையாக ஒரு படத்தைப்
பார்த்தேன் என்பது குறைவு.
இடைவேளைக்கு முன்பாகவே
போதும் என்று
எழுந்து வந்தப் படங்களை
எண்ண முடியாது!
அந்த இடைப்பட்ட நேரத்திலும்
அயிரத்தெட்டு தடவை
புகைப் பிடிக்கவென்று
தப்பித்து நகர்வதும் சாதாரணம்!

தமிழில் ஒரு இயக்குனன்
படம் எடுக்க கற்றுக் கொண்டு
இயக்க வருகிறானா? தெரியாது.
ஆனால், பார்வையாளர்களை
வெளியே அனுப்பி (புகைப் பிடிக்க) வைக்க
கட்டாயம் கற்று வைத்திருக்கிறான்!
அவன் கற்கும் முதல் பாடமே
அதுவாகத்தான் இருக்கும்!

அவனது கற்பனை விரியும்
பூபாலப் பரப்பில்
குத்துப் பாட்டு, சண்டை,
பன்ச் டைலாக் போன்ற
அத்தியாவசிய
தமிழ்ச் சினிமாவின் அலங்காரங்கள்
வினோத சாயலில்
முகிழ்பவை!
முத்துக் குளித்தெடுத்த கர்வத்தில்
அதை அவன் படமாக
எடுத்துக் காட்டுகிறான்!

ஆனால்,
பாவம் அவன்!
படத்திற்குப் படம்
நாயகன் நாயகி வேறென்பதைத் தவிர
அவன் கற்பனையில்
விரியும் பூபாலச் சங்கதியென்னவோ…
அச்சரம் பிசகாமல்
எல்லாப் படங்களிலும் ஒரே சாயலாகவே
இருந்துத் தொலைக்கிறது.

ஒரு சிகிரெட்….
ஒரே ஒரு சிகிரெட் புகைத்து
தூக்கி வீசியெறிந்து வரும் நேரமேனும்
பாலா…
தமிழ்பட டைரக்டராக
உருகொள்வார் என்றால்…
ம்..ஹும்.
நகர விடவில்லை.

காசியின் காட்சிகள்தான்
கட்டிப் போட்டதென்றால்…
‘உருப்படிகள்!’
தலைக்காட்டிப் பிறகும்…
நிலைமை அதேதான்!
தங்களின் இருப்பை நிறுவ
அவர்கள்……
அமர்க்களப் படுத்தியப்படிக்கு
விஸ்வரூபத்தை
காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
அப்படியிப்படி
திரும்பக் கூட இயலாதப் போது
நான் எங்கே வெளியே போறதாம்?
பாலாவுக்கு இரக்கமே இல்லை.

பாலாவின் நேர்த்தியில்
உருப்படிகள் மட்டுமல்ல
காசியில் காண்பிக்கும் அர்ச்சகராகட்டும்,
அஹோரி மட குருவாகட்டும்,
தலைகீழாக நின்று
நம்மை நேராகப் பார்க்கவைக்கும்
அஹோரி ஆர்யாவாகட்டும்
எல்லோருமே
நம் விழிகளின் பார்வையில்
ஒட்டிக் கொள்கிறார்கள்!
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும்
பாலா ஏற்றிருக்கும் மெருகு
காலத்தால் அழியாது.

காசி அஹோரி மடம்,
அஹோரி நாயகன்
ஆகிய இரண்டை மட்டும்
விமர்சனம் வைக்காது
ரசிகர்களின்
பொதுப் பார்வைக்கு
தெரிந்தே விட்டுவிட்டு
அவர் பிரமாதப்படுத்தியிருக்கும்
பிற காட்சிகள் அனைத்தும்
எத்தனை அழகாக இருக்கிறது!

காசியின் பின்னணியில்
இளையராஜாவின் பாடலோடு
தொடங்குகிறது….
அஹோரிகளின் சடங்குகள்,
சம்பிரதாயங்கள், ஜபங்கள்,
சிரசாசண காட்சிகள்,
கங்கைக் கரையில்
அநாதையாக வலம் வந்த
ஆரியாவின் இளமைப் பிராயங்கள்,
அவர் கொள்ளும் அஹோரி அவதாரம்,
‘பாங்’ போட்டு மென்று
பைப்பில் கஞ்சா அதக்கி
மந்திரம் உச்சரித்து
புகைப் பிடிப்பதென்ற
அத்தனையும் ஆகி
அந்தப் பாடல் முடியும் தருணம்
உறக்கம் கொள்ள
தலை சாய்க்கிறான் நாயகன்,
அவன் கண்களில்
ஏதோ ஏக்கம்!
அதுதான் எத்தனை
அர்த்தம் கொண்ட ஏக்கம்!

இழந்த குடும்பம்/
கிட்டாமல் போன
பெற்றோர்களின் பாசம்/
அமையாமல் போன
சகஜ வாழ்க்கையென
ஏதோ ஒன்று… அல்லது
எல்லாமுமான ஏக்கம் அது!
பாலாவின் நுட்பப் பதிவாய்
அந்த ஒரு நிமிட பிரேம்
நம்மை வியக்க வைக்கிறது.
இப்படிதான்…
பாலாவின் கவனம் ஈர்க்கும்
நுட்ப வித்தைகள்
படம் தழுவி இருக்கிறது.

குறிப்பாய்…
கடவுள் மறுப்பாளராக
அறியப்படும் பாலா
தன் பக்கத்தைச் சொல்ல
அத்தகைய நுட்பங்களை
திரைக்கதையில் கையாண்டு
பிரமாதப் படுத்தியிருக்கிறார்!

நம் திரைப் படங்களில்
நாயகிகளை பத்தும் பத்தாத
உடையோடு
உலகம் பூராவிலும் இருக்கும்
முக்கிய ரோடுகளில்
பாடலுக்காக
குலுங்கள் சிரிப்போடு
ஆட்டம் போடவிட்டு
இவள் புதுசு…
பம்பாய் இறக்குமதியாக்கும்
பார்த்துக் கொள்ளுங்கள்!
என்கிற விதமாய்
இயங்கும் நிலையில்….
லட்சணமான ஒரு பெண்ணின்
கண்களைப் பிடுங்கி,
அவளது இளம் வட்டம் தெரியும்
முகத்தையும் மிதித்து சிதைத்து
அவலட்சணமான ஆடைகளால்
உடல் மறைக்க
உடுத்தி காட்டிக் காட்டி
பாருங்கள் என் நாயகியை
என்றிருக்கிறார் பாலா!
அந்த அப்பாவி பெண்ணும்
எதிர்ப்பு காட்டாமல்
நடித்தும் இருக்கிறது.
ரசிகர்களும்
ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
ஒப்புக் கொண்டோடு மட்டுமல்ல
அந்தப் பெண்ணை
கடைசியில் கொன்றிருப்பதை
கேள்வி ஆக்குகிறார்கள்.
‘எப்படி கொல்லலாம்?’
நாயகியின் மீது
ரசிகர்கள், விமர்சகர்கள்
கொண்ட இந்த ஈடுப்பாட்டை கண்டு
பாலாவே ஆடியிருப்பார்!

நாயகியை கொன்றது குறித்து
ரசிகர்களும்,
விமர்சனங்களென்று பத்திரிகைகளும்
கவனமாக கேட்பதென்பதெல்லாம் சரி.
படத்தில் பாலா
மையப் படுத்தப்பட்டிருக்கும்,
மூல நாளமாய்
சித்தரித்திருக்கும் செய்தி பற்றி
அவர்கள்
வாய்திறக்க மாட்டேன் என்கிறார்கள்!

நல்லதோர் கவிதையின்
அர்த்தம் பிடிபடாத மாதிரி
பாலா மையப் படுத்தியிருக்கும்
கடவுள் குறித்த விமர்சனங்கள்,
கேலிகள், கிண்டல்கள்….
பலருக்கு அது
பிடிபடாமலேயே போயிருக்கிறது.
பாலாவும் அத்தனை நுட்பமாகத்தான்
அதைக் காட்சிப்படுத்திருக்கிறார்.
பிடிப்படும் சில பத்திரிகைகளாவது
போசுவார்கள் என்றால்… இல்லை!
கடவுளர்களைப் பற்றிய
பாலாவின் விமர்சனத்தை
ஒன்றிரண்டு பத்திரிகைகளைத் தவிர
பிற அனைத்துப் பத்திரிக்கைகளும்
வேண்டுமென்றே தவிர்க்கிறாகள்!
அது மாதிரியே
விசயம் புரிந்தவர்களும் மௌனம்!
ஏன்??
புரியவில்லை!!

1. மலைமீது மாங்காட்டுச் சாமி!!
இந்த சாமி….
வாய் பேசாத, இயங்க முடியாத
முழம் நீளம் உள்ள
குறை பிறவிக் கொண்ட மனிதன்!
மலையோறி வரும் பக்தர்கள்
அதைச் சாமியென்று
கும்பிடுகிறார்கள்.
அந்த மலையையும்,
மலையேறிவரும்
பக்தர்களையும்
காட்டப்படும் ஆரம்பக் காட்சியில்
பின்னணி இசையோடு
‘மருதலை மாமணியே முருகையா…
…….. ………. ………..
எங்க மருத மலைக்கு வந்துப் பாருங்க…..’
பாடல் ஒலிக்கிறது.
இதை புத்தியில் ஓட்டிப் பார்த்தால்
படத்தில் காட்டப்படும் மலை
மருதமலை!
அப்படியானால்
மருதமலை சாமி
இங்கே
மாங்காட்டுச் சாமியாக்கப் பட்டிருக்கிறது!

2. மாங்காட்டுச் சாமி
அமர்த்தப் பட்டிருக்கும்
முகட்டிற்கும் மேலே
உச்சத்தில்
கதாநாயகன் அமர்ந்த நிலையிலும்
சயனித்த நிலையிலும் காட்சிதருகிறான்!
மாங்காட்டுச் சாமியை,
“வாய் பேசாத, இயங்காத சாமி
எப்படி சாமியாகும்?”
நானே பிரம்மா,
நானே ஈஸ்வர் என்றும் கூறுகிறான்!

3. மாங்காட்டுச் சாமியின்
பார்வை படும் இடங்களில் எல்லாம்
‘உருப்படிகள்’ அவலக் காட்சியாக
“ஏன் எங்களை இப்படி படைத்தாய்?”
கேட்காமல் கேட்கும் கேள்வியாக
யாசித்து கிடக்கிறார்கள்!
அவர்களை இப்படி ஆக்கி
ஆட்டுவிக்கும் சாமியிடம்
பதிலில்லை!
அவர்களை ஆசீர்வதிக்கவோ
அரவணைக்கவோ
அதற்கு சக்தியில்லை!
மாங்காட்டுச் சாமிமட்டுமல்ல
உலகில் உள்ள எந்தவொரு சாமியின்
யதார்த்தமும் அதுதான்!
கதாநாயகி ஒரு கட்டத்தில்
எல்லா சாமியிடமும்
தஞ்சம்தேடி அலுத்து புலம்புவதும்
இதையொட்டிதான்.
அல்லா சாமியிடம்
அவள் புலம்புவதை
ஏனோ பாலா
அடக்கி வாசித்திருக்கிறார்!
என்னைக் கேட்டால்…
அவரது அடக்கம் தேவையற்றது.
அழுந்தவே விமர்சனம் வைத்திருக்கலாம்.

4. உருப்படிகள் சிலருக்கு
கடவுள் வேடமிட்டு
யாசிக்க வைத்திருக்கும் பாலா
உன்னிப்பாக கவனிக்க வேண்டியவர்.
யாசிப்பு வாழ்க்கையின் அவலத்தை
கடவுளையும் அறிய வைத்திருக்கும்
பாலாவின் உள் மனகிடக்கை
வியக்க வைக்கிறது!
கடவுள் வேடமிட்ட உருப்படிகளிடம்….
சக உருப்படிகள்
கேளியும் கிண்டலுமாய்
பதிலற்ற கேள்விகளை வைக்கிறார்கள்.

5. மாங்காட்டுச் சாமி வாழும்
மலை மீது
சில சாமியார்களும் வசிக்கிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படிக்கே
“போலீசுக்கு பயந்து வேடமிட்டவர்களாக
இங்கே காலம் தள்ளுகிறோம்”என்கிறார்கள்.

6. காசி காட்சியொன்றில்…
ஜோசிய சாஸ்த்திரத்தின் படி
எட்டு வயது மகனை
காசியில் கொண்டுவந்து விட்ட
தந்தையின்
பகுத்தறிவு அற்ற
மூடத் தனத்தை
வசனங்கள்
சாடோட சாடென்று சாடுகின்றன.

7. ‘அஹம் ப்ரம்மாஸ்மி!’
மனிதனை
கடவுளாக்கிப் பார்த்திருக்கும்
பாலாவின் சமத்தானப் பார்வை!

8. உருப்படிகளை பராமிக்கும்
முருகன் என்கிற பாத்திரம்
உருப்படிகளிடம் கருணை பொழிகிறார்.
கடவுள் காட்டாத கருணையை
மனித ‘முருகன்’ காட்டுகிறான்!

9. வில்லன்களுக்கு
கடவுள் தராதா தண்டனையை
தன்னை கடவுள் என்று கூறிக்கொள்ளும்
மனிதன் தருகிறான்!

நண்பரே
என்ன போர் அடிக்கிறதா?
இதோ முடித்து விடுகிறேன்.

பாலா
இப்படி இந்தப் படத்தில்
கடவுளர்கள் மீது
நேரடியாகவும்…
மறைமுகமாகவும்….
வைத்திருக்கும் விமர்சனத்தை
பலரும் தவிர்ப்பது ஏன்னென்று
நிஜமாகவே
புரியாததால்தான்
இத்தனைக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஜெயமோகனை பற்றிய
இந்தப் பத்தியை
தொடங்கும் முன்னேயே….
அவரை
மனதாரப் பாராட்டியவனாக தொடங்குகிறேன்!

நான் இப்படி ஜெயமோகனை
பாராட்டுவதென்பது
உங்களுக்கு வியப்பைத்தரலாம்!
அவரது இலக்கிய அணுகு முறைக்கு
விமர்சனம் வைத்தேன் என்பது வேறு
இது வேறு.
இன்றைக்கு…
அவரது வசனம் காட்டியிருக்கிற
முனைப்பென்பது வேறு!
மனமாறப் பாராட்டவே தோன்றுகிறது!
வாய்ப்பு கிட்டினால்
அவரை அருகே அழைத்து
உச்சி முகரவேண்டும் போல் இருக்கிறது.

படத்தின் மையவோட்டம்
சிதையாமல்…
சரியாகச் சொன்னால்
இன்னும் அதற்கு வலுகூடும் விதமாக
ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார்
என்பது மட்டுமல்ல நண்பரே….
இந்தப் படம்…
தமிழோடு சமஸ்கிருதம், இந்தி, உருது,
மலையாளம் போன்ற மொழிகளை
உள்ளடக்கி புழங்குகிறது!
அதுவும் பார்வையாளர்கள்
ஒப்புக் கொள்ளும் விதமாக!
இந்த கலப்பு வசனத் திறன்
இங்கே ஜெயமோகன் இன்றி
யாருக்கு வாய்க்கும்?
ஜெயமோகன் என்கிற ஜெமோவுக்கு
ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்.

***
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

author

தாஜ்

தாஜ்

Similar Posts