நடை – சுருளிப்பேட்டையில் சுருண்டோம் – பாகம் 2

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


விடிவதற்கு இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது. காலைக் கடன் கூடக் கழிக்காமல், அப்படியே எழுந்த பலர் ரெட் ஹில்ஸ் பண்ணையை விட்டு, பல் துலக்கியவுடன் கால் செருப்புக்களைப் போட்டுக்கொண்டு, ஐயப்பமார்கள் போவது போன்று ‘கோவிந்தா! கோவிந்தா ‘ என்று கிளம்பினர்.

சென்னை மாநகரத்தின் நவீன வாழ்க்கை (மேற்கத்தியக் கலாசாரத்தில் ஊறிப் போன) வாழ்பவனுக்கு இது புதுமையாக இருந்தாலும் அதுவே நம் நாட்டின் அழகு. புதுமையையும், பழமையும் ஒருங்கே கொண்டாடுவோம். நானும் மற்றவர்கள் போன்று பல் துலக்கியவுடன், ‘சில் ‘ லென்று தண்ணீரை மூஞ்சியில் விட்டுக் கொண்டு கிளம்பினேன். முதல் நாளில் காலில் ஷு போட்டுக்கொண்டதால் காலில் புண் வர ஆரம்பித்திருந்தது. சாணி மிதித்து புனிதமாயிருந்த ஷூவுக்கும் ‘டாடா ‘ காண்பித்துவிட்டு, நண்பன் கொடுத்த ஹவாய் செருப்பைப் போட்டுக்கொண்டு நடக்கலானேன். கருப்பு கும்மிருட்டில் இரண்டொரு கோழிகுஞ்சுகள் ‘கக், கக் ‘ என்று பண்ணையில் கத்திக்கொண்டிருந்தன. பம்பில் யாரோ தண்ணீரடிக்க ஆயில் ஊத்தாத போரிங் ‘கொய் னொய் ‘ என்று கர்ண கடூரமாகக் கத்திக் கொண்டிருந்தது. மங்கலான மஞ்சள் தெரு விளக்கு எரிய மூடிய டாக்கடைகளைத் தாண்டி, ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரிகளைத் தாண்டி நடக்கலானோம்.

‘இந்த இருட்டில் போனால், விடிவதற்குள் பெரிய பாளையம் போகலாம் ‘. நெல்லூர் போகும் இந்த நேஷனல் ஹைவேயில் ஒரு பெரி ய ஆலமரம் வரும். அங்கு பெரிய பாளையம் போகும் பாதை மரங்கள் அடர்ந்து காணப்படும். அது ஒற்றைஉடிப் பாதையில்லை. சிலச் சிறிய பேருந்துகள் போகும். ஆந்திரா மாநிலப் பேருந்துகள் போகும் பாதையும் அது தான் ‘ என்றெல்லாம் என் விவரமறிந்த நண்பன் கூற மனதில் வாங்கிக் கொண்டே விரைவாக நடந்தேன். வெயிலில் நடப்பதற்கு பதில், இவ்வாறு அதிகாலையில் நடக்க எனக்கு மிகவும் பிடித்தது. அதிகாலையில் வம்பு, சினிமா, பற்றியெல்லாம் யோசிக்காமல் மனது நிர்மால்யமாக இருந்தது. காற்றும் தூயமாக இருந்தது. மற்றவர்களெல்லாம் எழாமல், இப்படியே ஒரு நூறு மக்களுடன் வாழ்ந்து, நடந்து அமைதியாக இருக்கலாமே என்ற நினைப்பெல்லாம் வந்தது. ஒரு காலத்தில் ராஜா காலத்தில், மக்கள் இப்படி தான் அமைதியாகக் காலம் கழித்திருப்பார்களோ ?. உற்சாகம் பற்றிக் கொள்ள எனது கால செருப்ப சத்தமே, சர்க் சர்க் என்று பின்னணி இசை முழங்க, பூச்சிகள் ரீங்காரமிட்டு, புளியமர வாசனைகளிடையே நெல்லூரிலிருந்து அவ்வப்போது வரும் லாரிகளின் வெளிச்சத்தில் ஒரு ஒளி, ஒலிக் கண்காட்சியினூடே நடந்தேன்.

‘பாண்டேஜ் பாண்டியன் இன்னிக்கி காலையில் எவ்வளவு உற்சாகமாய் இருக்கான் பாரு ‘ என்று என் நண்பன் என்னைக் கிண்டல் பண்ணினான். நடையில் என் மிடுக்கு கூடியது. ஒரு மாரத்தான் ஓடுபவனுக்கு வரும் கர்வம், ‘அட, நாம கூட 40 கிமீ நடந்தும் தளராமல் நடக்கிறோமே ‘ என்று எனக்கும் வந்தது. ஆனால் தண்டி யாத்திரைப் பண்ணிய காந்தியும், வேதாரண்யம் போன ராஜாஜியும், நீண்ட தூரம் நடந்த கலைஞர், வைகோ போன்றவர்களின் மனத் திண்மை கண் முன்னால் வந்து போனது. நாம ‘ஜாலி பண்ணுவதற்கில்ல போறோம் ‘, அவர்கள் தூரத்திற்கு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா ?. அவர்களைப் போன்று வயதான பிற்கு நடந்து பார்க்க வேண்டும். இப்போது திருமணம் கூட ஆகவில்லை. நல்ல பிள்ளை குட்டிகள் கூடப் போடவில்லை. நம்ம தெம்பிற்கு என்ன, என்று விடலையாக யோசித்து நடந்தேன். ஆனால், நடக்கும் போது பேசினால், வேகமாக நடக்க முடியாது. பேசாம, விறு விறுவென்று நடந்து போகலாம். பொன்னியின் செல்வனில் கல்கி ஆழ்வார்க்கடியானைப் பற்றி எழுதியது ஞாபகம் வந்து. அக்காலத்தில் அந்தத் திறமையான ஒற்றன் எவ்வாறு காடுகளையும், நதிகளையும் நடை நடந்து கடந்து போவான், என்பதைப் பற்றி அடிக்கடி கற்பனை பண்ணிக் கொள்வேன். அவன் ஒரு இடம் பாக்கியிலாமல் அரண்மணைகள், பொது நிகழ்சிகள், தோட்டங்கள், கோட்டைகள் என்று மனம் தளராமல் சுற்றுவது எண்ணி பிரமிப்பாக இருக்கும். அக்காலப் பழக்கம் நம்மில் பெரும்பாலும் போய்விட்டது கண்டு மனம் வேதனைப் பட்டது. நாம் இப்போது என்ன பண்ணுகின்றோம் ?, பொழுதானால் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு மோட்டார் பைக்கில் புகையைக் கக்கிக் கொண்டு ரோட்டில் வெட்டியே போக வேண்டியது. பிறகுப் போகும் வழி முழுவதும், புகையைப் பரப்பி கெடுதல் தான் பண்ணுகின்றோம். இந்நப் புளிய மரமிருப்பதனால் தான் கொஞ்சமாவது புகையைத் தடுத்து நற்காற்று நகரத்திற்குப் போகின்றது. நான் நன்குத் தெரிந்தும் பண்ணுகின்ற நகரத்துத் தப்புகள் புரிந்தன. நடக்க வேண்டும். இல்லையென்றால் சைக்கிளில் கால் மிதித்து போக வேண்டுமென்ற முடிவு செய்தேன்.

நான் எனக்குள்ளே பேசிக்கொள்வதை வெளிப்படையாக என் கை, கால் அசைவதை வைத்து மற்ற நண்பர்கள் கவனித்திருக்க வேண்டும். ‘புளிய மரத்து மோகினி பிடிச்சிக்கிச்சிடா ! பெரிய பாளையத்தில் இவனுக்கு அம்மன் டாலர் போட்ட செயினைப் போட வேண்டும் ‘ என்று கிண்டலடித்தனர். இருளில் புளிய மரங்கள் மெதுவாக ஆட, அந்த சல சலப்பு சிறு கிலேசத்தைத் தான் உண்டு பண்ணியது. ஒருவன், இப்படி தான் ‘எங்க வீட்டிலே இருந்த மரத்திலே, ஒரு முனி இருந்தது …. ‘ என்று விட்டலாச்சார்யார் பாணியில் ஆரம்பித்தான். அந்தக் கதையை முடிக்கும் போது முனி பற்றி நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்காமல் இருக்க முடியவில்லை. ‘….இருக்கா, இல்லையான்னு சொல்ல முடியாது. ஆனால், அப்படி ….நடப்பது உண்மை …என் பாட்டி சொன்ன மாதிரித் தலைமுறையாய் அப்படி நடக்கின்றதாம் …. ‘ என்ற சொன்ன நண்பனின் சொல் திறமையை மெச்சினேன்.

பெரிய பாளையத்திற்குப் போன பாதைப் பிரிந்தது. அது மரங்களுடன் ‘ஹோ ‘ வென்றிருந்தது. நிலா வெளிச்சத்தில் மங்கலாய்த் தெரிந்த தார் ரோடில், கல்லும், சிறு குழிகளால் காலில் ‘குத்து ‘ வாங்கிக் கொண்டே நடையைத் தொடர்ந்தோம். வயலிலிருந்து ஒரு வித மண் வாசனை மிதந்து வந்தது. ‘மாமு! மல்லிகை மோகினி தான் ‘ என்றான் ஒருவன். ‘இல்லடா, பாம்பு வரும் போது …இப்ப்டி தான் வருமாம் …என் பாட்டி…. ‘ என்று பாட்டிக் கதையை மற்றொருவனும், மழையினால் வரும் மண்வாசனைதான் இது என்று மற்றொருவனும் சொல்லிக் கொண்டனர். மெலிதாக வானம் வெளுக்கும் கருக்கல்லில், ஒரு கிராமமும் (பெயர் பள்ளி ….மறந்து விட்டது ) வந்தது. ‘மச்சான். இங்கு ஒரு அல்லிக் குளமிருக்கு ….அது பக்கத்தில ஒரு பம்ப் செட். சும்மா ஜாலியா குளிச்சிட்டு, நம்ம டாய்லெட் வேலையைக் கவனிச்சிட்டா சுகமா இருக்கும் …. ‘ என்று நடைப் பயணத்திற்குக் கூட்டிப் போன நண்பன் கூறினான். சென்னையில் இருப்பவர்களுக்கு ‘ஜாலியாகக் குளியல் ‘ என்றால் புரிந்து கொள்வது கடினமே. அதிலும் பம்ப் செட் பார்ப்பது என்பது பல பேருக்கு அதிசயமாக இருக்கும். பம்ப் செட்டில் அருவி மாதிரி குளிர்ந்த நீர் வருமென்றால் படம் வரைந்து, சன் டிவியில் வீடியோ காண்பித்தால் தான் புரியும்.

‘கச கச ‘ வென்றிருந்த உடம்பை குளிர்ந்த நீரில் காட்டினால் ஆரம்பத்தில் சிறிது ‘வெட வெடத்தாலும் ‘ போகப் போக வெது வெதுப்பாயிருந்தது. தலைமுடியும் ஷாம்பூ போட்டு குளித்த மாதிரி மெலிதாகிவிடும். ஜட்டியுடன் கவலையில்லாம குளித்தோம். காலைக் கடன் கழிக்கும் போது மட்டும் நகர மைந்தர்களுக்கு வயல் காட்டில் போவது என்னவோ போன்று இருக்கும். அதுவும் வயலில் இடம் பார்த்து உட்கார வேண்டும். இல்லையென்றால் ‘புல் ‘லரித்து விடும். கை வசம் ‘பாத் ரூம் பேப்பர்/ டிஷ்யூ பேப்பர் ‘ ஒரு ரோல் எடுத்துக் கொண்டு போயிருந்தோம். எனது நண்பனோ ‘எல்லாம் இலை. அது போதும் மச்சி, அப்றம் இருக்கவே இருக்கு பம்ப் செட் ‘ என்றான். ஆக மொத்தம் இயற்கையோட இருக்கும் வசதிகளை வைத்து ஒட்டிப் போயிருந்தோம்.

குளித்துமுடித்துவிட்டு, எங்களுடன் நடந்த ஒரு அசோக் லேலண்டு நண்பர் வீட்டில் அனைவருக்கும் சாப்பாடு. ஒன்றைச் சொல்ல வேண்டும். பந்திகுப் பறிமாறிதல் என்றால் நமது தமிழர்களின் விருந்தோம்பல் யாருக்கும் வராது. அனைவரையும் உபசரித்து, ஒரு கோவில் பிரகாரத்தில் அவர்கள் உபசரித்த பாங்கு, எந்தப் பண்பாடு மிகுந்த நாட்டிலும் மிகுந்த வரவேற்பைப் பெரும். எனக்கு பெருமையாயிருந்தது. அவர்கள் பணம் படைத்தவர்களா ?. பணக்காரர்களா ?. எளிமையானவர்கள், உழைப்பை நம்பி அடுத்த மாத சம்பளத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள். அவ்வீட்டுப் பெண்களோ வந்தவர்கள் மனம் கோணாது, வயிறு நோகாது நல்லச் சூடான பொங்கல், இட்லி போன்ற தமிழ் பதார்த்தங்களத் திருப்தியுடனே எங்களைச் சாப்பிட வைத்தார்கள். கோவிந்தனைப் பார்க்க போகும் பக்தர்கள் எங்களுக்கு கோவிந்தனே என்ற பக்தியினையும் கோடிட்டுக் காட்டினர். நாங்கள் உண்மையான பக்தர்களா என்பது வேறு விஷயம். ஆனால் வயிறு புடைக்க உண்டோம். எங்கள் பெற்றோர் அவ்வாறு எங்களை ‘கூழக் கிடா ‘ மாதிரி வளர்த்திருந்தனர். தட்டிலோ, இலையிலோக் குழைத்து குழைத்து அடிப்பதில் நாங்க ஒரு பிஸ்தா !

நீண்ட நடைப் பயணத்தில் ஒரு அசெளகரியம். அடுத்து அடுத்த கி.மீ. பற்றியோ, மைல்கள் பற்றியோ யோசித்து உடனே புறப்பட வேண்டும். இல்லையென்றால் காலம் விரயமாகும். உச்சி வெயிலில் நடக்கும் கொடுமை நடந்தேறும். அன்று சாப்பிட்ட உற்சாகத்தில் வம்பு வளர்ந்து கால தாமதமாகிவிட்டது. அனைத்து நடைக் குழுக்களிலும் நேரத்தைக் கண்காணித்து மற்றவரைத் துரிதப்படுத்தும் ஒரு நபர் கட்டாயாம் இருப்பார். எங்கள் அருகாமையில் ஒரு மாமா அப்படி தான் அவசரப்படுத்தினார். ‘பெரிசு! நாங்க உங்களை முந்திப் போகிறோமா இல்லையா பார் என்று சவடால் விட்டுக் குழு நண்பர்களுடன் கிளம்பினேன், பெரிய பாளையம் நோக்கி.

பெரியபாளையத்து அம்மன் கோவிலை நெருங்கினோம். அம்மன் என்றாலே என்க்கு பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, மற்றும் கே.ஆர்.விஜயா தான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு இருவரும் அம்மனைப் என்னைப் போல ஒரு சாதாரணனிடம் பிரபலப் படுத்தியிருக்கிறார்கள். அம்மன் கோவிலுக்கு வரும் மஞ்சள் அணிந்தப் புடவைகளுடன் வரும் பெண்களின் அழகினைக் கண்ணால் தரிசனம் செய்யவும் பிடிக்கும். ஆனால் அழகிலும் ஆபத்து உண்டு என்பதால் என்னவோ நம்ம அம்மன்களைக் கோவத்துடன் காளி ரூபத்தில் வழிபடுகின்றோமோ என்னவோ ?. எனது அம்மா ஞாபகம் வரும். எனது சகோதரிகளும் வந்து போவர். பக்கத்து வீட்டு சைட் அடிக்கும் சுந்தரியும் வந்து போவாள். அன்று வெய்யில் ஏற ஏற ‘கச கச ‘ வென்ற கூட்டத்தினூடே விரைந்து சென்று கர்ப்பக்கிரகத்தருகே சென்றேன். ஏன் இப்படி புழுங்குது ?. சில ‘சர்ச் ‘ சில் இருக்க்கின்ற மாதிரி ‘ஏஸி ‘ இருந்தால நமது பூசாரிக்குச் செளகரியமாக இருக்குமே என்று நினைத்தேன். இருட்டில் தெரிந்த விளக்கு வெளிச்சத்தில் அம்மனைத் தரிசித்து, வியர்வை வழியும் நெற்றியில், குங்குமத்தை அப்பிக் கொண்டு ‘பக்தியுடன் ‘ வெளியே இருந்தத் தூணில் குங்குமத்தை அப்பி என்னால் முடிந்த ‘நல்ல ‘தைச் செய்தேன். பிறகு விளக்கு எண்ணையில் இருந்த கரியையும் பூசிக்கொண்டு, அம்மனை நினைத்துப் பக்கம் இருந்த தூணில் கரியை அப்பினேன். இவ்வாறு ‘நல்ல ‘தைச் செய்து பிரகாரம் சுற்ற வெளியே வந்தால் வெயில் சுட்டெரித்தது. சுண்டல் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு, சாப்பிட்டு விட்டு இலையத் ‘தூர ‘ எற

ிந்து மற்றுமொரு ‘நல்ல ‘ காரியம் செய்து முடித்தேன். கையைக் கழுவ வந்த இடத்தில் ‘பிசு பிசு ‘வென்று இருந்தத் தரையை முத்தமிட்டுக் கீழே விழுந்த என்னைப் பிடித்த என் நண்பன் சொன்னான் ‘நல்ல காரியத்திற்கு இப்படித் தான் பலன் கிடைக்கும் ‘. நெஞ்சில் உண்மை சுட்டெரிக்க அம்மனை வணங்கி மற்றொருவர் கீழே போட்ட இலையைப் பரிகாரமாக எடுத்துக் குப்பைத் தொட்டியில் சேர்த்தேன்.

காலை சாப்பிட்ட பொங்கல், இட்லி காணாமல் போய், வியர்க்க வியர்க்க நடக்க ஆரம்பித்தோம், பத்து மணியாக மெதுவாக நடக்கலானோம். தலையில் துவைத்த ஜட்டியை குல்லா போன்று போட்டுக்கொண்டு விநோதமாக நடந்தோம். பம்ப்செட்டில் குளித்த, துவைத்த ஆடைககளை உடம்பில் சுற்றிக் கொண்டு ஏரத்தின் துணை கொண்டு வெயிலை எதிர் கொண்டோம். பேச்சு குறைந்தது. அடுத்து ஒரு கல்யாண மண்டபத்தில் நண்பகலுக்குச் சாப்பாடு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அசோக் லேலண்டு கம்பெனியார் ஒரு இடத்தில் எங்களுக்கென்று குளிர் மோர் ஊற்றி எங்கள் தாகத்தினைத் தாழ்த்தினார்கள். கால்கள் ஏறும் வெப்பத்தினால் தகிக்கத் தொடங்கின. அடுத்தப் பனை மரத்தினைக் குறிவைத்து நடப்போம். அது வந்த பிறகு அடுத்து ஒரு குறி வைப்போம். இவ்வாறு எவ்வளவு தொலைவு நடக்க முடியுமோ என்று வதங்கியவாறே கலியாண மண்டபம் சென்றடைந்தோம். உடல் கொதித்தது. வயதான பிறகு இவ்வாறு நடக்க முடியுமா என்று சந்தேகம் வந்தது. ‘அதெல்லாம் மனசில இருக்கு ‘ என்றார் என் நண்பனின் அப்பா. அவருக்கு 57 வயது. பெரிசு ! சும்மா சொல்லக் கூடாது. 15 வருடமாக நடக்கிறாராம். என் நண்பனைப் போன்றே வேறு வேலை இல்லையோ என்று சந்தேகமும் வந்தது.

மண்டபத்தில் கல்யாணத்தில் கூடும் கூட்டம் போன்று அதிகம் கூட்டமாய் இருந்தது. வியர்வையில் கீழே உட்கார்ந்தால் தரையும் ஈரமாய்ப் போனது. அத்துடன் ஒருவாறு உட்கார்ந்தால் கால் ‘குறக்களி ‘ வந்து இழுத்துக் கொண்டது. கால்களை ஒருவாறு உதறிச் சமாளித்துக் கொண்டு சூடாக வந்த சாம்பாரினை ‘லப்க் லப்க் ‘ என்று அள்ளினோம். அதில் கடைசியில் வந்த மோர் சாதம் தான் வயிற்றினைச் சாந்தப் படுத்தியது. எங்களுக்குப் பறிமாறியவர்கள் எங்களைப் போன்றே முன்னே நடந்து வந்தவர்கள். கால்கள் வலியினைப் பொருட்படுத்தாது, முன் பின்னே தெரியாத எங்களைச் சகோதரர்களாகப் பாவித்து, சாதி, இன வேறுபாடுகள் இல்லாமல் சம பந்தியாக, அனைவரும் விருந்தளித்தது உள்ளத்தை நெகிழ வைத்தது. இதேச் சமுதாயம் தான் சாதி சண்டையைப் போடவும் செய்கிறது. எனக்குத் தமிழகத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சாப்பாடு முடிந்தவுடன் ஒரு பெரிசு வந்து எங்களை விசாரித்து அடுத்த நடையைப் பற்றிச் சொன்னார். ‘மாலையில் சுருளிப்பேட்டை போய்விடுவீர்கள். ‘ என்று வழியனுப்பினார்.

நகரி ஊர் வந்தவுடன் (ரோஜா எம்.எல்.ஏ வாக தேர்தலில் நின்ற ஊர் தான்), ஆந்திரா பார்டர். உள்ளே சென்றால், சுருளிப்பேட்டை என்றார். எல்லையில் பேசும் தமிழ் மற்றும் தெலுங்கு கலந்து காணப்பட்டது. போஸ்டர்களில் பாலகிருஷ்ணாவும், பிராஷாந்தும் ஒருங்கேக் காணப்பட்டனர். பட்டுக்கோட்டை அழகிரி பஸ், பெரியார் பஸ், மற்றும் ஆந்திராவின் ‘டப்பா ‘ சிகப்பு பஸ் புழுதியைக் கிளப்பி எங்களைத் தாண்டிச் சென்றன. எல்லையில் ஆந்திரா அன்புடன் வரவேற்கின்றது என்றத் தெலுங்கில் எழுதப்பட்ட போர்டினை (அன்புடன் எட்டிலு உதைக்கின்றலு என்றாலு ஆச்சரியமில்லை லு! யாருக்கு தெலுங்கு படிக்கத் தெரியும் ?) என் மருமான் தமிழில் படிப்பதைப் போன்று படித்தேன் (சென்னையில் இருக்கும் பத்மா சேஷாத்ரியில் படிக்கும் என் மருமானுக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. சென்னையில் அது தான் ‘பேஷன் ‘. புத்தியிருந்தால் தமிழ் படிக்கக் கூடாது.).

ஆந்திரா நுழைந்தவுடன் ஆச்சரியமான ஒரு சம்பவம் நடந்தது. அனைவரும் எங்களைக் ‘கோவிந்தா ! கோவிந்தா! என்று அன்புடன் விளித்தனர்.

‘என்னே இவர்களின் பக்தி ‘ என்று வியந்தேன். தமிழர்கள் மாதிரி மற்றவர்களைப் புகழ யாராலேயும் முடியாது. அதே போன்று நம்மவர்களைப் பற்றி அவ்வளவுப் புகழ மாட்டோம். என்.டி.ஆர் மீது அவர்கள் வைத்திருக்கும் பக்தி நமக்கு கிண்டலாக இருக்கும். ஆனால் ரஜினி மீது உயிரையே வைப்போம். அது பக்தில்ல, அன்பு என்போம். முதல் நாள் ரஜினி படத்திற்கு மாலைச் சூட்டி கற்பூரம் கொளுத்துவோம்.

வெயில் இரங்க சுருளிப்பேட்டையின் சிவன் கோவில் கோபுரத்தைப் பார்த்தவாறு ஒரு கல்யாண மண்டபத்தை அடைந்தோம். தொழுநோயாளிகள் காலில் கட்டு போட்டிருப்பதைப் போன்று அனைவரும் காலில் கட்டுக்களோடும், தைலங்களைத் தடவியவாறு காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு, நீட்டிக்கொண்டு பாட்டிமார்கள் போன்று இருந்தனர். ஒரு புயலி அவதிப்பட்ட அகதிக் கும்பல் போன்று இருந்தோம். இந்த மாதிரி வேறு நாட்டில் காட்சியை காணமுடியுமா என்பது சந்தேகமே. இருந்த இரண்டு கழிவரைகளில், கரை அதிகமிருக்கச் சுத்தமில்லாத ஒரு இடத்தில் அனவரும் மாடுகள் மாதிரி மூத்திரம் பெய்து விட்டு நாகரீக மனிதர்களாக, காலைக் அரை குறையாகக் கழிவுக்கொண்டு, கைகளை அலும்பக் குறைவானத் தண்ணீரில் விரல்களை மட்டும் நினைத்து, ‘சுத்தமா ‘ கச்

சுருளிப்பேட்டையில் சாப்பிட்டுச் சுருண்டு போனோம்.

—-

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்