நகர் வெண்பா – இன்னும் நான்கு

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

மத்தளராயன்


இரண்டாம் மாடி பால்கனி

வெள்ளென மேல்குளித்த வீட்டுப்பெண் கீழ்த்தளத்தில்
உள்ளுடையு லர்த்தத் தயங்குகிறாள் -பள்ளியில்
ஓதும் இசைகேட்கப் பால்கனியின் நின்றது
போதுமே உள்ளே நட.


வேலை நாள் மரணம்

மேலேநேர் மாடிக் கிழவனார் போயாச்சாம்
காலையில் வாச்சுமேன் சொன்னது- வேலைக்கு
இப்பக் கிளம்ப இடைவழியில் தென்னோலை.
எப்போ எடுப்பாங்க கேள்.


சீறுநீர்

பக்கத் தெருமுனையில் பாதியுடைச் சாமியார்கள்
கக்கத்தில் சூலம் இடுக்கியே முக்கிமுக்கி
வீறுகொண்டு இந்தியில் நீர்பிரி யச்சுவரில்
‘சீறுநீர் போகிறவன் நாய் ‘.


இலக்கியக் கூட்டம்

இலக்கியக் கூட்டமது இன்றைக்காம் போக
அலக்கிய முண்டுநீள் ஜிப்பா கலக்கல்தான்
சால்னா புரட்டாவே வாங்க எடுத்தாயே
சோல்னாப்பை எங்கேநீ தேடு.

Series Navigation