தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

முனைவர் மு.இளங்கோவன்தமிழ் மொழிக்கு எண்ணற்ற அறிஞர்கள் பல்வேறு வகையில் தொண்டு செய்துள்ளனர்.அவ்வறிஞர்கள் வரிசையில் தொல்காப்பியச்செல்வர் எனவும்,சித்தாந்த நன்மணி எனவும்,முத்தமிழ் வித்தகர் எனவும் அறிஞர் உலகால் போற்றப்படும் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேராசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும்,சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்குபவர்.அண்மையில் இவருக்கு எம்.ஏ.சி அறக்கொடையின் டாக்டர் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஓர் இலக்கம் உரூபா தொகையும்,ஒரு வெள்ளிப்பேழையும்,ஒருபட்டயமும் சென்னை இராசா அண்ணாமலை மன்றத்தில் அக்டோபர் 12 இல் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.இவ்வுயரிய விருதைத் தகுதி அறிந்து வழங்கிய அரசர் குடும்பத்திற்கும் பரிந்துரை செய்த அறிஞர்களுக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றியும் பாராட்டும் தெரிவித்து நிற்கின்றது.
ஏனெனில் இன்று விருதுக்கும் பாராட்டுக்கும் அலையாய் அலைந்து நடையாய் நடந்து பல்வேறு தந்திரங்களைப் பின்பற்றும் போலிப்புகழ் விரும்பிகளுக்கு நடுவே தமிழ்நூல்களையே தம் செல்வமாகக் கருதி, தமிழ்வடிவாகவே வாழ்ந்துவரும் தமிழ்ச்சான்றோருக்கு விருது கிடைத்துள்ளமை எம்மனோர்க்கு மிகு மகிழ்ச்சி தருகின்றது. இவ்விருதுக்கும் இதனினும் உயரிய விருதுகளுக்கும் தகுதிப்பாடுடைய பேராசிரியர் அவர்கள் கற்றவர்களும் மற்றவர்களும் உளங்கொள்ளும் வகையில் தமிழ் இலக்கண,இலக்கியங்கள்,சமய நூல்களைப் பாடமாகவும்,சொற்பொழிவாகவும் வழங்கும் பேராற்றல் பெற்றவர்கள். தன்னலங்கருதாமல் தமிழ்நலம் கருதி உழைத்த இவர்களுக்கு இப்பரிசில் கிடைத்தமை அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.இவரிடம் கற்றவர்கள் இன்று உலகம் முழுவதும் தமிழ்ப்பணி செய்கின்றனர்.

இவர்தம் இலக்கிய,சமய உரைகள் கேட்டோர் இனியொரு முறை இவர்தம் உரையையும் பாட்டையும் கேட்க மாட்டோமா என ஏங்கும்படியாக இவர் பேச்சு அமையும்.கல்லூரியில் பாடம் நடத்தும் பொழுது தொடர்ச்சியாக ஏறத்தாழ நான்குமணி நேரம் கூட இவர் வகுப்பு நீண்டிருக்கும். மாணவர்கள் யாவரும் இலக்கணப்பாடம் என்பதையே மறந்து ‘சித்திரப் பாவையெனத்’ தமிழின்பம் பருகுவர். எல்லோருக்கும் கசப்பாக இருக்கும் இலக்கணப்பாடம் இவர் நடத்தத் தொடங்கினால் அமிழ்தாக இனிக்கும்.இவர் நடத்தும் பாடத்தோடு நின்று கொள்ளாமல் இலக்கணம்,இலக்கியம்,சமயநூல்கள்,உரையாசிரியர்கள்,உலகியல் என ஒரு வட்டமடித்து வரும்பொழுது தமிழின் அனைத்து நூல்களையும் படித்த மனநிறைவைப் பாடம் கேட்போர் பெறுவர். எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியம் நடத்தத் தொடங்கினால் தொல்காப்பிய உரையாசிரியர் அனைவரும் வந்துசெல்வர். திருக்குறள் பரிமேலழகர், பிற உரையாசிரியர்கள் வந்துபோவர். குமரகுருபரர், சமயக்குரவர்கள் குறிப்பாகத் திருவாசகம் இடம்பெறும். இளங்கோவடிகள் பாட்டு வடிவில் கானல்வரி பாடுவார். கம்பனைக் கரைகண்டவர் இவர்.இத்தகு தகுதிப்பாடுகள் நிறைந்திருந்த காரணத்தால் பிறர் நெருங்கத் தயங்கிய தொல்காப்பியத்தின் அனைத்து உரையையும் விருப்பத்தோடு பதிப்பித்தார்.சாத்திர நூல்களுக்கு அனைவரும் விரும்பும் வகையில் உரை செய்தார்.

பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சிவகாசி சிவனடியார் அறநெறிக்கழகம், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், இரத்தினகிரி, ஆர்க்காடு, சென்னை, புதுச்சேரி, கடலூர் முதலான ஊர்களில் மாதம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்ச்சொற்பொழிவுகள் செய்துவருகின்றார். இவர்தம் தமிழ் வாழ்வை இக்கட்டுரையில் தொகுத்துரைக்கக் காணலாம்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் இளமை வாழ்க்கை

கு.சுந்தரமூர்த்தி அவர்கள் சிவநெறியில் நின்றொழுகும் குடும்பத்தில் 14.04.1930 இல் தோன்றியவர்.இவர்தம் பெற்றோர் குப்புசாமி,நாகரத்தினம் அம்மாள். ஊர் தொட்டியம் அருகில் உள்ள தோளூர்ப்பட்டி. எட்டாம் வகுப்பு வரை பிறந்த ஊரில் பயின்றவர். தந்தையார் ஊர்நலப் பணியில்(கர்ணம்) இருந்ததால் பிற ஊர்களில் வாழ நேர்ந்தது.பின் நுழைவுத்தேர்வு எழுதித் திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்றவர்(1945-1950). அங்குப் பயின்று தேர்ச்சி முடிவு வந்த உடன் அக்கல்லூரியிலேயே தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.பேராசிரியராகவும்,முதல்வராகவும் அக்கல்லூரியிலேயே தம் பணிக்காலம் வரை( 26.06.1950-31.05.1988)தொடர்ந்து பணிசெய்தார்(மீள் விடுப்பில்ஓராண்டு அண்ணாமலைப் பல்கலையில் பணி). மாற்றச்சான்று வாங்காமலே பணிசெய்த பெருமைக்குரியவர் .பேராசிரியர்கள் கா.ம.வேங்கடராமையா, தி.வே.கோபாலையர், நகராமலை இராமலிங்கம் பிள்ளை, ச. தண்டபாணிதேசிகர் முதலானவர்களிடம் தமிழ்பயின்ற பெருமைக்கு உரியவர்.இவர்களுள் இராமலிங்கம் பிள்ளையும்,கோபாலையரும் கு.சுந்தரமூர்த்தியின் ஆழ்ந்த படிப்புக்குக் காரணகர்த்தர்களாக விளங்கினர்.

படிக்கும் காலத்தில் படிப்பில் முதல் மாணவராக விளங்கியதால் காசித்திருமடத்தின் தலைவர் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்டார்.அங்குப்பணி செய்த காலத்தும் திருமடத்தின் கல்விப்பணிகளில் தாளாளர் முதலான பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச்செய்தார்.பணி நிறைவு பெற்றதும் இவர்தம் தமிழறிவும் சமய அறிவும் இவ்வுலகிற்குத் தேவை என்பதை உணர்ந்த தருமையாதீன அடிகளார் அவர்கள் இவர்களை அனைத்துலகச் சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியமர்த்தினார்.மலேசியா,இலங்கை,இலண்டன் முதலான அயலகத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றியவர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றுவதன் வாயிலாகத் தமிழ் இலக்கியங்களையும் சமய நூல்களையும் மக்கள் மனத்தில் பதியவைப்பதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார். (இவர் பல்வேறு தலைப்புகளில் பேசிய பேச்சுகள் பல்லாயிர மணிக்கணக்கில் திருவண்ணாமலை திரு.மனோகரன் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் பற்றிப் பின்பு எழுதுவேன்)

கு.சுந்தரமூர்த்தி அவர்கள் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார் அவற்றுள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான்,முதுகலை.முனைவர் பட்டங்களும்,மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் பண்டிதம்(1954), சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் சைவப் புலவர்பட்டங்களும்(1968) குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் பணி

திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் படித்ததும் அங்குப் பேராசிரியராகப் பணி புரிந்ததும் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்குப் பல்வேறு பெருமைகள் உருவாகக் காரணங்களாயின.திருமடத்தின் சார்பான நிறுவனமானதால் முதலில் தமிழ் இலக்கண,இலக்கியங்களில்,சமயநூல்களில் நல்ல பயிற்சியும்,புலமையும் ஏற்பட்டது. தமிழகத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் அங்குப்பணி செய்ததால் பலரிடம்பயிற்சி பெறமுடிந்தது. சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலானவற்றில் ஆளவை உறுப்பினராகவும்,கல்விக்குழு உறுப்பினராகவும் பலமுறை பணிபுரிந்துள்ளார்.செந்தமிழ்ச்செல்வி,குமரகுருபரர் முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணிபுரிபவர்.

இவர் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும்,சிலப்பதிகாரம்,கம்பராமாயணம்,பெரியபுராணம் முதலான காப்பியங்களையும் மாணவர்களின் உள்ளம் கொள்ளும்படி பாடமாக நடத்துபவர்.சைவசித்தாந்த சாத்திர நூல்களை எளிமையாக யாவருக்கும் விளங்கும்படி நடத்தியதால் சாத்திரநூல்களைத் தமிழகத்தில் படிப்பதில் ஒரு மறுமலரச்சி தோன்றியது எனலாம்.முனைவர் ம.வெ.செயராமன், பொற்கோ, ம.வே.பசுபதி முதலானவர்கள் இவர்தம் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் பதிப்புப்பணிகள்

பதிப்புப்பணிகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் உ.வே.சா.அவர்கள்.அவர்கள் காலத்தில் நூல்களை வெளிப்படுத்துவது போற்றுதலுக்கு உரிய பணியாக இருந்தது.அவர்கள் காலத்திற்குப் பிறகு பழந்தமிழ் நூல்களின் விளங்காத பகுதிக்கும் உரைகளுக்கும் விளக்கம் தரும் பதிப்புகளும்,உரைவிளக்கம் தரும் பதிப்புகளும் தேவையாக இருந்தது. அவ்வகையில் தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப் பியத்தின் அனைத்து உரைகளையும் ஆராய்ச்சி முன்னுரையுடனும் விளக்கவுரையுடனும் பதிப்பிக்கும் முயற்சியில் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் ஈடுபட்டார்.சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இப்பணியில் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்குப் பெருந்துணை செய்தன.சொந்தப் பதிப்பாகவும் பல நூல்களை வெளியிட்டார்.

தொல்காப்பியப் பதிப்புகள்

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் வழியாகத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையை விளக்கவுரையுடன் 1962 இல் பதிப்பித்தார்.தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையை விளக்கவுரையுடன்1963 இல் பதிப்பித்தார்.தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரையை விளக்கவுரையுடன்1964 இல் பதிப்பித்தார்.தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை விளக்கவுரையுடன் சொந்தப்பதிப்பாக 1965 இல் பதிப்பித்தார்.தொல்காப்பியம் செய்யுளியலை நச்சினார்க்கினியர் உரையுடனும் விளக்கவுரையுடனும் 1965 இல் கழகம் வழிப்பதிப்பித்தார்.தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரையை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழி 1979 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழி 1981 இல் வெளியிட்டார்..தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சர்,பேராசிரியர் உரைகளை விளக்கவுரையுடன் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் வழி 1985 இல் வெளியிட்டார்.

மேலும் தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கண நூலைத் தம் சொந்தப்பதிப்பாக 1967 இல் வெளியிட்டார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைக் கழகம் வழி 1972 இல் வெளியிட்டார். மேற்கண்ட இலக்கண நூல்களைக் கற்கப் புகும் ஆர்வலர்கள் யாரும் எந்த வகை இடையூறும் இல்லாமல் இவ்விலக்கண நூல்களைப் பயிலும்படி இவர் வரைந்துள்ள ஒப்புயர்வற்ற விளக்கவுரைகளும்,ஆராய்ச்சி முன்னுரையும் இவரின் ஆழ்ந்த கல்விப் பரப்பையும்,நுண்ணிய ஆராய்ச்சித்திறனையும் காட்டும்.மூலநூலாசிரியரின் கருத்துகளை எடுத்துரைத்தும்,உரையாசிரியர்களின் அறிவுச்செழுமையை விளக்கியும் நூலின் மீதும்,உரையாசிரியர்கள் மீதும் மதிப்பு உண்டாகும் படி இவர் எழுதிச் செல்வார்.இவர்தம் உரைகள் வழியாகப் பண்டைக் காலப் பதிப்புகள் பற்றிய பல குறிப்புகளும் வரலாறும் நமக்குப் புலனாகின்றன.

தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணர் உரைபற்றிய முன்னுரையில் பேராசிரியர் பின்வரும் அரிய செய்திகளப்பதிவு செய்துள்ளார்.
‘எழுத்ததிகார இளம்பூரணர் உரையை முதன்முதல் பதிப்பித்து உதவியவர்கள் பூவிருந்தவல்லி, திரு.சு. கன்னியப்ப முதலியார் அவர்கள் ஆவர்.அப்பதிப்புத் திரிசிரபுரம் மகாவித்துவான் திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கருள் ஒருவராகிய திரு.சுப்பராயச் செட்டியார் அவர்களால் பரிசோதிக்கப்பெற்று கி.பி.1868 இல் வெளியிடப்பட்டதாகும்.அப்பதிப்பு ஏட்டில் கண்டவாறே பதிப்பிக்கப் பெற்றுள்ளது.உரை பொழிப்புரை யாயுள்ளது. விளக்கவுரை எடுத்துக்காட்டுகள் ஆகிய அனைத்தும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.நூற்பாக்கள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை.இப்பதிப்பை வேறு பல பிரதிகளோடு ஒப்பிட்டுப் பதவுரையாக்கியும், விளக்கம் எடுத்துக்காட்டுக்களைத் தனித்தனியே பிரித்தும் தமது கருத்தையும் ஆங்காங்கு வெளிப்படுத்தியும் இரண்டாவதாகப் பதிப்பித்துதவியவர் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் ஆவர்……’ எனத் தம் கலத்திற்கு முன்பு நிகழ்ந்த பதிப்பு முயற்சியை வரலாற்றுப் பதிவாக வழங்குவதில் வல்லவராக விளங்கியவர்.

தொல்காப்பியம் சேனாவரையர் உரையைப் பதிப்பிக்கும் பொழுது அரிய பல வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார் .’…சேனாவரையர் உரை முதன்முதல் திரு.சீனிவாச சடகோபமுதலியார் அவர்களின் வேண்டுகோளின்படி,கோமளபுரம் திரு.இராசகோபால் பிள்ளை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டுத் திரு. பு.கந்தசாமி முதலியார் அவர்களால் 1868 இல் பதிப்பிக்கப்பட்டது.பின்பு யாழ்ப்பாணத்து நல்லூர் திரு.ஆறுமுக நாவலர் அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு திரு.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களால் 1886 இல் பதிப்பிக்கப்பட்டது.பின்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் 1923 இல் பதிப்பிக்கப்படது.அதனையடுத்துப் புன்னாலைக்கட்டுவன் திரு.சி.கணேசையர் அவர்கள் குறிப்புரையுடன் திரு.நா.பொன்னையா அவர்களால் 1938 இல் பதிப்பிக்கப்படது. …’

இவ்வாறு ஒவ்வொரு நூலையும் பதிப்பிக்கும்பொழுது பல்வேறு பதிப்பு வரலாற்றைப் பதிவு செய்வதுடன் பல நூல்களை ஒப்பிட்டுத் திருத்தமாகத் தம் பதிப்பைப் பதிப்பித்துள்ளார்.பொருள் விளக்கத்துடன் புதிய எடுத்துக்காட்டுகளையும் தந்துள்ளார்.நூற்பாவிலும் உரைகளிலும் கண்டுள்ள பாட வேறுபாடுகளை அடிக்குறிப்பாகத் தருபவர்.ஒவ்வொரு நூற்பாவின் அடியிலும் விளக்கவுரை எழுதிப் படிப்பவருக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் பயன்படும்வண்ணம் செய்துள்ளார்.ஒவ்வொரு இயலின் முகப்பிலும் பொருளமைப்பு என்னும் பெயரில் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள பகுதிகள் தொல்காப்பியம் கற்கப் புகுவார்க்குப் பேருதவியக இருக்கும்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் தமிழ்இலக்கியப்பணிகள்

தமிழின் தலைசிறந்த நூலான திருக்குறளில் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மிகச்சிறந்த ஈடுபாடு உண்டு.அனைத்துத் திருக்குறளையும் பரிமேலழகர் உரையுடன் சொல்லும் ஆற்றல்பெற்றவர்.மற்ற உரையாசிரியர்களையும் நன்கு கற்றவர்.எனவே திருக்குறளைப் பல்வேறு வகைகளில் பதிப்பித்துள்ளார். அவற்றுள் ம.வெ.செயராமன் அவர்களின் பொருளுதவியால் வெளியிட்ட திருக்குறள் உரைத்திறன் நூல் குறிப்பிடத்தக்கது.1981 இல் வெளிவந்த இந்நூலில் பரிமேலழகரின் உரையை அடியொற்றியும் அவர்தம் விளக்கத்திற்கு விளக்கமாகவும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. பரிமேலழகர் மாறுபடும் இடங்களும் இவ்வுரையில் சிறப்புடன் விளக்கப்பட்டுள்ளன. பிற உரையாசிரியர்களின் உரை வன்மை, மென்மைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி முன்னுரை என்று 44 பக்கங்களில் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் தந்துள்ள விளக்கம் அவரின் நுண்ணிய புலமையையும்,ஆராய்ச்சி வன்மையையும் காட்டும்.இந்நூலின் அமைப்பு குறளும், பரிமேலழகர் உரையும், இவர்தம் விளக்கவுரையுமாக அமைந்துள்ளது.

திருமுருகாற்றுப்படை உரைத்திறன்(ஐவர் உரையுடன்) என்னும் பெயரில் இவர் வரைந்துள்ள உரை திருமுருகாற்றுப்படையைச் சுவைத்துக் கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்குவதாகும்.இரத்தினகிரி அருள்திரு பாலமுருகன் திருக்கோயில் சார்பில் இந்நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோல் நீதிநெறிவிளக்கம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், சீர்காழிக் கோவை,அபிராமி அந்தாதி,கந்தர் கலிவெண்பா,சங்கரமூர்த்திக் கோவை, கந்தர் அனுபூதி, தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, திருமுல்லைவாயில் புராணம், திருவிளையாடற்புராணம் முதலான நூல்களுக்கு உரையும் குறிப்புரையும் எழுதியுள்ளார்.
கு.சுந்தரமூர்த்தி அவர்களின் திருமுறைப் பதிப்புப்பணிகள்

கு.சுந்தரமூர்த்தி அவர்கள் திருமுறைகளில் நல்ல பயிற்சியுடையவர். பலகாலம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்த ஆற்றலுடையவர். திருமுறைகளைப் பல்வேறு நிறுவனங்கள் பல வடிவில் பதிப்பித்தபொழுது திருமுறைகளின் சிறப்பு வெளிப்படும் வண்ணம் ஆற்றல் சான்ற ஆராய்ச்சி முன்னுரைகளையும் விளக்கங்களையும், குறிப்புரைகளையும் எழுதியவர்.சிவகாசி சிவனடியார் அறநெறிக்கழகம் வழியாகச் சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகியோரின் திருமுறைகளை வரலாற்று முறையில் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதுவரை வெளிவந்த பதிப்புகளில் பேராசிரியரின் இப்பதிப்பு அழகிய வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் தத்துவ நூல்களுக்கான உரைப்பங்களிப்பு

தமிழில் சைவ சமயத் தத்துவத்தை விளக்குவன சாத்திர நூல்களாகும்.பதினான்கு சாத்திரநூல்கள் உள்ளன.இப் பதினான்கு சாத்திரநூல்களுக்கும் உரை எழுதிய பெருமை கு.சுந்தரமூர்த்தி அவர்களையே சாரும். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்த இவ்வுரை நூல்கள் சமய உலகால் பெரிதும் விரும்பப்படுவன. எளிய முறையில் நடப்பியல் உண்மைகளை எடுத்துக்காட்டித் தமிழ்மரபு மாறாமல் உரைவரையும் பாங்கு இவருக்குக் கை வந்த கலையாக உள்ளது.

பணிவு நிறைந்த மாணவராகவும், பண்பு செறிந்த பேராசிரியராகவும், ஆளுமை நிறைந்த கல்லூரி முதல்வராகவும், மயக்கம் போக்கித் தெளிவு நல்கும் உரையாசிரியராகவும்,பிழையற்ற நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியராகவும், ,இலக்கணம்,இலக்கியம்,சமயநூல்கள்,சாத்திரநூல்கள் இவற்றில் பழுத்த புலமைநலம் சான்ற அறிஞராகவும்,கேட்போர் வியக்கும் வகையில் சொற்பொழிவு செய்யும் நாவலராகவும் விளங்கும் கு.சுந்தரமூர்த்தி என்னும் உண்மைத் தமிழறிஞரை வாழும் காலத்திலேயே தமிழக அரசும், உலகெங்கும் உள்ள தமிழர்களும்,தமிழ் அமைப்புகளும் போற்றவேண்டும்.அண்ணாமலை அரசர் பெயரிலான விருது பெறுவது அதன் தொடக்கமாக அமையட்டும்…

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com

இணையம் : www.muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்