தொலைந்த ஆன்மா

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

பென் ஹெக்ட்


ஒரு பன்முக ஆன்மாவின் ‘தொலைந்த ஆன்மா’

“இந்த உலகம் தன்னுடைய தீமைகளைக் குணப்படுத்திக்கொள்ள இதுவரை கண்டுபிடித்திருக்கும் ஒரே நடைமுறைத் தீர்வு, அவற்றைக் கண்டுகொள்ளாமல் மறந்துவிடுவதுதான்.”
The only practical way yet discovered by the world for curing its ills is to forget about them.
– பென் ஹெக்ட் (Ben Hecht)

****
( பென் ஹெக்ட் (1894 – 1964) என்ற அமெரிக்கர் – எழுத்தாளர், திரைக்கதையாளர், திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர், பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். பல்வேறுபட்ட துறைகளில் செயலாற்றியிருந்தாலும் அத்தனையிலும் மிக ஆழமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

பத்திரிக்கையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ‘சிகாகோ தின செய்தி’ (Chicago Daily News) என்ற நாளிதழில் வேலை செய்தபோது கார்ல் வாண்டரர் (Carl Wanderer) என்ற போர் நாயகன் (war hero) தன்னுடைய கர்ப்பினி மனைவியைக் கொலை செய்ததைத் துப்பறிந்து கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தார். அப்பத்திரிக்கையில் இவரெழுதிய ‘சிகாகோவில் 1001 மதியங்கள்’ என்ற கட்டுரைத்தொடர் மிகவும் பிரபலமானது.

பின்னர் திரையுலகிற்குள் நுழைந்த இவர் திரைக்கதை அமைப்பு முறையில் வல்லுநரானார். இன்றும் இவர் ஹாலிவுட் திரைப்படங்களின் திரைக்கதை அமைப்பு முறையின் பிதாமகராகக் கருதப்படுகிறார். ‘தி ஸ்கவுண்ட்ரல்’ (The scoundrel – 1935), ‘அண்டர்வல்ட்’ (Underworld – 1927) இந்த இரண்டு திரைப்படங்களின் திரைக்கதை அமைப்பிற்காக ஆஸ்கர் பரிசு வாங்கியிருக்கிறார். இந்த இரு திரைப்படங்கள் தவிர மேலும் நான்கு வெவ்வேறு திரைப்படங்களுக்காக ஆஸ்கார் பரிசுக்காகப் பரிந்துரைக்கவும் பட்டிருக்கிறார். ‘எ •பேர்வெல் டு த ஆ(ர்)ம்ஸ்’ (A Farewell to the arms), ‘வுதரிங் ஹைட்ஸ்’ (Wuthering heights) உள்ளிட்டப் பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்கு திரைக்கதை வடிவம் அளித்திருக்கிறார்.

திரையுலகில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் எழுத்துப்பணியையும் விடாது மேற்கொண்டிருந்தார் ஹெக்ட். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் யூதர்கள் மீதான நாஜிப்படைகளின் கொடூரச்செயல்களைப் பற்றித் தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி மக்கள் மற்றும் அரசின் கவனத்தை யூதர்கள் பக்கம் திருப்பியது இவர் தன் வாழ்வில் செய்த மிக முக்கியமான செயலாகும். இவரும் ஒரு யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹெக்ட் வலதுசாரி ஸியானிசத்தின் (Right wing Zionism) மிகத்தீவிரமான ஆதரவாளர் ஆவார். ‘பாலஸ்தீனத்தில் ஒரு சுதந்திரமான, சுயாட்சி கொண்ட யூத அரசை நிறுவுதல்’ என்ற கொள்கைக்கு ஸியானிஸம் என்று பெயர். இதில் வலதுசாரி ஸியானிஸ்ட் பிரிவினர் இங்கிலாந்தைத் தங்கள் முன் மாதிரியாகவும், இடதுசாரிப் பிரிவினர் சோஷலிஸக் கொள்கைகளைப் பின்பற்றி, ரஷ்யாவை முன்மாதிரியாகவும் கொண்டனர்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் இஸ்ரேல் என்ற தனிநாடு ஏற்படுத்தப்பட்டு யூதர்கள் அங்கே குடியேற்றப்பட்டனர் என்பது நாமெல்லோரும் அறிந்ததே. ஆனால் இப்படி யூதர்களுக்கென்று தனிநாடு உருவாக்கப்படுவது இங்கிலாந்திற்கு அவ்வளவு பிடித்தமான செயலாக இருந்திருக்கவில்லை. இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பாவில் ‘யூத நிறுவனம்’ (Jewish Agency) உருவாக்கப்பட்டு அதன் தலைவர்கள் யூதர்களுக்காகக் குரல் கொடுப்பதிலும், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இங்கிலாந்தை சம்மதிக்க வைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்கள். இந்த ‘யூத நிறுவனத்தின்’ தலைவர்களில் ஒருவர் ஹங்கேரியைச் சேர்ந்த ருடால்•ப் காஸ்ட்னர் (Rudolf Kastner). இவரும் ‘யூத நிறுவனைத்தைச்’ சேர்ந்த பெரும்பாலான யூதத் தலைவர்களும் இடதுசாரி ஸியானிஸ்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள். உலகப்போருக்குப்பின் இஸ்ரேலின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய காஸ்ட்னர் மீது மல்கெல் க்ரன்வல்ட் (Malchiel Gruenwald) என்ற எழுத்தாளர் மிகப்பெரும் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தினார்.

காஸ்ட்னர் ஹங்கேரியைச் சேர்ந்த யூதர்களை விடுவிப்பதற்காக அடால்•ப் ஐக்மன் (Adolph Eichmann) என்ற நாஜிப்படைத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உலகப்போரின் இறுதியில் மிகுந்த பின்னடைவிலிருந்த ஜெர்மன் படையினர், அந்தப் பேச்சுவார்த்தையின் போது தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தந்தால் படுகொலை செய்யப்படவிருக்கும் யூதர்களை விடுவித்துவிடுவதாகக் கூறினர். ஆனால் காஸ்ட்னரோ ஐக்மனுடன் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய உறவினர்கள் மட்டும் நண்பர்கள் அடங்கிய வெகு சிலரை மட்டுமே தப்பவைத்தார் என்பதே க்ரன்வெல்ட் சுமத்திய குற்றச்சாட்டு. ஒருவேளை காஸ்ட்னர் இங்கிலாந்து மற்றும் இன்னபிற நேசநாடுகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தாலோ, ஹங்கேரிய யூதர்களுக்கு தகவல் கொடுத்திருந்தாலோ நாஜிப்படைகள் கொன்று போட்ட பத்து இலட்சம் யூதர்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும் என்றும் தன் குற்றச்சாட்டு அடங்கிய கட்டுரையில் எழுதியிருந்தார் க்ரன்வல்ட்.

அந்தக் கட்டுரையை எழுதியதற்காக க்ரன்வல்ட் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது இஸ்ரேல் அரசாங்கம். விசாரணைகள் செய்து கீழ் நீதிமன்றத்தில் காஸ்ட்னர் குற்றம் செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டாலும், மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் தீர்ப்பை எழுதிய நீதிபதிகளே “தன்னுடைய ஆன்மாவை சாத்தானுக்கு விற்று விட்டார் காஸ்ட்னர்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்து பென் ஹெக்ட் ‘நம்பிக்கைத் துரோகம்’ (Perfidy) என்ற புத்தகத்தை எழுதினார். பல்வேறு அரசாங்க ஆவனங்கள் மேலும் ஆதாரபூர்வமான வாக்குமூலங்களை வைத்தும் எழுதப்பட்ட இப்புத்தகத்தின் பிரதிகள் இஸ்ரேலிலிருந்து மர்மமான முறையில் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டன. (ருடால்•ப் காஸ்ட்னர் உலகப்போரில் உயிர் பிழைத்த ஒரு யூதரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலை செய்தவர் இஸ்ரேல் அரசாங்கத்தின் பிரதிநிதி என்று குற்றம் சாட்டினார் பென் ஹெக்ட்). இன்று ஆஸ்கார் ஷிண்டலர்(Oscar Schindler) என்ற ஜெர்மானியர் யூதர்களைக் காப்பாற்றிய விஷயம் உலகெங்கிலும் தெரிந்திருக்கிறது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை (‘ஏற்றுக்கொள்ளப்படவில்லை’ என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்) என்றாலும் கூட அதிகாரத்திலிருந்த யூதர்களே, தங்கள் சக இனத்தினரான யூதக்குடிமக்களைக் காப்பாற்றாமல் விட்ட விஷயமோ, அந்த விஷயத்தில் இங்கிலாந்து அசட்டையாக இருந்த விஷயமோ, இப்படிப்பட்டதொரு விமர்சனம் ஒரு சிலரிடம் இருக்கிறது என்பதோ கூட வெகு சிலருக்கே தெரிந்த விஷயம். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இஸ்ரேல் உருவாக்கத்திலும், அதிகார அமைப்பிலும் பெரும்பங்கு வகித்தவர்கள். அமெரிக்காவின் தீவிரமான ஆதரவு இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்தது (இருக்கிறது) என்ற விஷயங்கள் இப்படி இந்த விமர்சனம் வெளிவராமல் அமுக்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம். இப்படியெல்லாம் இருந்தபோதிலும் ஒரு அமெரிக்கராக இருந்தாலும் ஒரு மிகத் தீவிரமான, ஆதாரபூர்வமான விமர்சனங்கள் கொண்ட புத்தகத்தை எழுதிய பென் ஹெக்ட்டின் பணி பாராட்டுக்குரியது.

அரசியல் கிடக்கட்டும். பென் ஹெக்ட்டின் இலக்கியப் பங்களிப்பிற்கு வருவோம். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், சிறந்த நாடகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார் பென் ஹெக்ட். அவருடைய ‘தொலைந்த ஆன்மா’ (The lost soul) என்ற சிறுகதையை ‘உலகின் சிறந்த 75 சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் படிக்க நேர்ந்தது. எந்தவிதமான வர்ணிப்புக்களோ, அலங்காரங்களோ, சிக்கலான வடிவமோ இல்லாமல் மிக எளிமையான வார்த்தைகளில் அற்புதமான கதையைப் படைத்திருக்கிறார் பென் ஹெக்ட். தஸ்தோவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ எழுப்பும் அகவினாக்கள் சார்ந்த தத்துவத்தின் இணை தத்துவம் இக்கதையிலிருந்து எழுகிறது. குற்றமும் அதற்கான தண்டனையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாத காரணிகள் என்று ‘குற்றமும் தண்டனையும்’ நிறுவினால், ‘குற்றம் என்ன என்றே தெரியாதபோது, தண்டனைக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?’ என்றக் கேள்வியை எழுப்புகிறது இச்சிறுகதை. அந்த ‘தொலைந்த ஆன்மாவை’ இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன். கதை முழுவதும் கதை மாந்தர்களின் உடல் மொழியும், இருப்பிடமும் (placement) சுட்டப்படுவது பென் ஹெக்ட் ஒரு திரைக்கதையாசிரியர் என்பதை நினைவுபடுத்துகிறது. பென் ஹெக்ட்டின் பிறந்த தினம் கட்டுரை எழுதப்பட்ட இந்த வாரத்தில்தான் (பிப்ரவரி 28) என்பது ஒரு தற்செயலான விஷயம். )

தொலைந்த ஆன்மா

(பென் ஹெக்ட்)

விரைவில் விடிந்துவிடும்.
சிறையிலிருந்த அவனால் தூங்க முடியவில்லை. அவன் உடையணிந்து தயாராக இருந்தான். தன்னுடைய அறையிலிருந்த கம்பிகள் போட்ட சிறிய சன்னல் வழியாக தணிந்து கொண்டிருக்கும் இரவையும், வானிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் குளிர்கால நட்சத்திரங்களையும் பார்த்தபடி நின்றிருந்தான்.

சவரம் செய்யப்படாத களைத்த உப்பிய முகம் கொண்ட உறுதியான வேறு இரண்டு பேரும் அந்த அறையில் இருந்தார்கள். எருதுகளைப் போன்ற சலனமில்லாத பார்வையுடன் அவர்கள் இருவரும் அந்த சிறை அறையின் சுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ ரகசியமான ஆசையில் உந்தப்பட்டவர்கள் போல குறுகுறுப்பாக சன்னலில் நின்றிருந்தவன் தோள் வழியாக விடிவானின் நிற மாற்றங்களை அந்த இருவரும் பார்த்துகொண்டிருந்தபோது அந்த நான்காமவர் அங்கே வந்தார்.

அந்த இரண்டு உறுதியான ஆட்களும் எதிர்பாராத்திராத ஒரு மரியாதையுடன் அந்த நான்காமவருக்கு வணக்கம் செலுத்தினர்.
“வணக்கம் டாக்டர்” என்றான் ஒருவன்.
“இப்போது மணி என்ன இருக்கும்?” என்று கேட்டான் இன்னொருவன்.

சிறைக்கதவு திறக்கப்பட்டது. டாக்டர் உள்ளே வந்தார். தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து தன் கட்டை விரலுக்கும் மற்ற விரல்களுக்கும் இடையே வைத்து உருட்ட ஆரம்பித்தார். பிறகு அந்த அறையிலிருந்த மின் விளக்கைப் பார்க்கத்தொடங்கினார். அவர் மிகவும் பதற்றமாக இருந்தார்.

“வணக்கம்” என்றார்.
சன்னலில் இருந்தவன் திரும்பிப்பார்த்தான். அவன் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
“இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று பேனாவை உருட்டிக் கொண்டே கேட்டார் டாக்டர்.

சன்னலில் இருந்தவன் ஒரு இதமான பணிவுடன் தலையாட்டினான்.
“நான் சரியாகத் தூங்கவில்லை. வீணாகக் கவலைப் படுவதால் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால்… நான் எனக்குத் துணையாக இருந்த இந்த இரண்டு நல்ல மனிதர்களிடமும் பேசிக்கொண்டிருந்தேன், நான் ஒரு இனம்புரியாத குழப்பத்திலிருக்கிறேன்… நான் யாரென்று எனக்குத் தெரியவில்லை”.

டாக்டர் அதிர்ச்சியடைந்தவராய் அறையிலிருந்த மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்தார். அவர்களிருவரும் எதுவுமே காதில் விழாதது போல சலனமில்லாத முகத்துடன் இருந்தார்கள். டாக்டர் பேனாவைத் தள்ளி வைத்துவிட்டுத் தன் கோட்டுப் பையிலிருந்து ஒரு கருப்பு நிறப் பையிலிருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்தார்.

“வெறும் வழக்கத்திற்காகத்தான்… உங்கள் சட்டையைக் கொஞ்சம் கழற்றுங்கள்” என்று சன்னலில் இருந்தவனிடம் சொன்னார்.

ஸ்டெதஸ்கோப்பை அவன் நெஞ்சில் வைத்துப் பரிசோதித்தார்.
“அற்புதம்…” என்றார்.
மீண்டும் சிறிது நேரப் பரிசோதனைக்கப்புறம்… “நன்றாக இருக்கிறீர்கள். உங்கள் இதயம் மிகவும் சீராக வேலை செய்து கொண்டிருக்கிறது”.

அறையிலிருந்த அந்த மற்ற இருவரும் தங்கள் தொழிலுக்கே உரித்தானதொரு நாகரிகத்துடன் தலையாட்டினார்கள்.

“நான் யாரென்று எனக்குத் தெரியவில்லை” என்று மீண்டும் கூறினான் சன்னலிலிருந்தவன். இந்த முறை அவன் குரல் கொஞ்சம் உயர்ந்திருந்தது.

“நான் நன்றாக இருக்கிறேன் டாக்டர்… ஆனால்……”

மன்னிப்பு கலந்த இதமான புன்னகையில் தன் வார்த்தைகளைத் தோய்த்துக் கூறினான் “…நான் யாரென்ற நினைவு எனக்குத் துளி கூட இல்லை. அதிகாரிகள் தங்களால் முடிந்த அளவுக்கு அதைக் கண்டுபிடிப்பதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருப்பது என் அதிர்ஷ்டம். இல்லையென்றால்… உங்களை நீங்கள் சிறையில் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். தவிர நீங்கள் யாரென்றோ, எந்த ஊரென்றோ தெரியாமல் மறந்து வேறு போயிருந்தால்?! நான் எங்கோ அத்து மீறித் திரிந்து கொண்டிருந்ததற்காக இங்கே வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைத்து வைத்திருப்பது அத்தனை சரியாகப் படவில்லை. என்னை எங்கேனும் ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்திருக்கலாம்… குறைந்தபட்சம் ஒரு ஹோட்டலிலாவது. என்னைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நான் எப்படிப்பட்ட மனிதன் என்று தெரிந்து கொள்வதற்கு நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அது மிகவும் ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. உதாரணமாக, நான் ஒரு படித்த மனிதன்; இந்த மாதிரி சிறைக்கெல்லாம் பழக்கப் படாதவன் என்பதெல்லாம் என்னால் ஊகிக்க முடிகிறது”.

டாக்டர் அறையிலிருந்த அந்த மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்தார். அவர்கள் தங்கள் தோள்களைக் குலுக்கினார்கள். டாக்டர் அவசரமாகத் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.

“இப்போது மணி எத்தனை?” உறுதியான இருவரில் ஒருவன் தயக்கத்துடன் கேட்டான்.
டாக்டர் தன்னுடைய கடிகாரத்தை அவர்கள் இருவருக்கும் ஒரு ரகசிய அசைவில் காட்டிக் கொண்டிருக்கும்போதே சன்னலில் இருந்தவன் பெருமூச்சுவிட்டபடியே பேசத் தொடங்கினான்.
“நான் என்னுடைய சட்டைப்பைகளில் தேடிப்பார்த்துவிட்டேன்… அவற்றில் என்னை அடையாளப்படுத்தும் ஒரு சிறு துகள் கூட இல்லை. ஒரு புத்தகமோ, கைக்குட்டையோ அல்லது வேறு ஏதேனும் அடையாளமோ எதுவும் இல்லை. ஆனால்… என்னுடைய கைகள்… அவற்றைப் பாருங்கள்.. அவை ஒரு உழைப்பாளியின் கைகளைப் போல இல்லை.. மேலும்…”
அவன் பேச்சை நிறுத்திவிட்டுத் தன் தலையின் பின் புறத்தைத் தடவத் தொடங்கினான்.

“நீ எங்கே எப்படி வந்தாய் என்று உனக்கு ஞாபகம் இல்லை?” என்று அவனை உண்ணிப்பாகப் பார்த்தபடி கேட்டார் டாக்டர்.

“இல்லை… எனக்குத் தெரியாது. எனக்கு இப்போது நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்று தெளிவாக ஞாபகம் இருக்கிறது. ஆனால், இறந்த காலம்…”

அவன் கண்களை மூடிக்கொண்டு முகத்தை சுளித்தான். ஒரு விரக்தியான புன்னகையுடன் மீண்டும் பேசத் தொடங்கினான்.

“காவல்துறை மிகச் சீராக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லோருடைய உரிமை. அவர்கள் ஒரு வேளை என்னைச் சிறை பிடித்தபோது புகைப்படம் எடுத்திருக்கலாம். அதைப் பத்திரிக்கையில் கொடுத்து விளம்பரப்படுத்தினால் என்னைத் தேடி யாரேனும் வருவார்கள். நான் மிக முக்கியமானவன் என்று எனக்குத் தெரியும்”.

டாக்டர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
“உனக்கு ஞாபகம் இல்லை?”
“எதுவும் இல்லை” சன்னலில் இருந்த மனிதன் எரிச்சலாக இடைமறித்தான்.
“என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கோபப்பட விரும்பவில்லை.. ஆனால் எனக்கு இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நான் யாரேனும் முக்கியமானவனாக இருக்க நேரிடலாம். என்னை நம்பி யாரேனும் இருக்கலாம். இந்த நிலைக்கு ஏதேனும் மருத்துவப் பெயர் இருக்கும் இல்லையா, டாக்டர்? எனக்கு இப்போது அந்தப் பெயர் ஞாபகம் இல்லை. இந்த நிலை மிகவும் விசித்திரமானதாகவும் அதே சமயம் நகைச்சுவையானதாகவும் இருக்கிறது”.

அவன் விடியல் வெளிச்சத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் ஏன் நகைச்சுவையாக உணர வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் உண்மையில் என் ஆன்மா என்னிடம் இல்லை. அல்லது இப்போதைக்கு அது எங்கேயோ தொலைந்து விட்டது. இது ஒரு மிகவும் கவலை தரும் விஷயம். ஆனால் நான் ஏன் சிரிக்கிறேன்? ஓ… என் சூழ்நிலை என்னை சிரிக்க வைப்பதால் நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளனாகக் கூட இருக்கக் கூடும்… கண்டிப்பாகப் பெரும்பாலான மனிதர்கள் என் நிலையில் இருந்தால் தலையைப் பிய்த்துக்கொண்டு அழுவார்கள். ஆனால் நான்…”

அவன் முகம் சிரிப்பால் விரியத் தொடங்கியது.
“கடவுளே… என்ன ஒரு அழகான காலைநேரம்” என்று முணுமுணுத்தான். அவன் கண்கள் மீண்டும் வெளி உலகில் உலவத் தொடங்கின.

“டாக்டர்,” – தன் கையிலிருந்த பேனாவை உருட்டிக்கொண்டிருந்த டாக்டரை நோக்கித் திரும்பிப் பார்த்துப் பேசத் தொடங்கினான்.

“டாக்டர், ஒரு வேளை என் பெயர் மட்டும் எனக்குத் தெரிந்து விட்டால்…”

ரகசியமான குரலில் கெஞ்ச ஆரம்பித்தான் “நான் யார்…..? யார்…?”

டாக்டர் தொண்டையைச் செருமிக் கொண்டார்.

“உன் பெயர்…” அவர் பேச ஆரம்பித்தார்.

அவர் பேச்சை நிறுத்தினார். காலடிச்சத்தங்கள் கேட்கின்றன. யாரோ அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆறு பேர் கொண்ட ஒரு குழு அந்த அறையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது. அறைக்குள்ளிருந்த இரண்டு உறுதியான மனிதர்களும் எழுந்து நின்று கால்களை உதறிக்கொண்டார்கள். டாக்டர் பரபரப்பானார். அறையை விட்டு வேகமாக வெளியே சென்று அந்தக்குழுவுடன் கலந்து, ரகசியமான குரலில் பதற்றமாகப் பேசத் தொடங்கினார்.

“அதைப்படிக்காதீர்கள். ஷெரீ•ப், நாம் எல்லோருக்கும் அது நிறைய பிரச்சினைகளைத் தரும். அவன் அம்னீஷியா எனும் மறதி நோய் தாக்கப்பட்ட நோயாளி. அவனை எழுப்புவது பிரச்சினைகளைக் கடன் வாங்குவது போலாகும். அவனை இப்படியே விட்டு விடுவோம்.”

“சரி, அவனே விரைவில் கண்டுபிடித்துவிடுவான்.” என்றார் ஷெரீ•ப்.
“எனக்கு அது சந்தேகமாக இருக்கிறது… ” கிசுகிசுப்பான குரலில் ஷெரீ•பிடம் கூறினார் டாக்டர்.

“எப்படியிருந்தாலும் அவனுக்குத் தெரியவரும்போது நீங்கள் அவனைக் கட்டிப்போட்டு…”

“சரி.. நீங்கள் சொல்வது போலவே இருக்கட்டும்” ஷெரீ•ப் தன் கையிலிருந்த ஒரு பேப்பர் கற்றையை சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டார்.
“போகலாம்” என்றார்.

“வாருங்கள்” என்று சிறை அறைக்குள் நுழைந்து கத்தினார் டாக்டர்.

சன்னலிலிருந்த மனிதன் நற்பண்புடன் தலையாட்டினான். டாக்டர் அவன் புஜத்தைப் பற்றி இழுத்து அந்தக் குழுவுக்குள் நுழைத்தார்.

அவர்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். முன்புறம் இருவர். பின்புறம் மற்றும் அவன் இரு புறங்களிலும் இருவர் என அமைத்துக் கொண்டார்கள். டாக்டர் இன்னும் அவன் புஜத்தைப் பிடித்தவாறே அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த உறுதியான இருவரும் அக்குழுவுக்குப் பின்புறமிருந்தார்கள்.

“இங்கே பாருங்கள்…” நடுவிலுருந்த மனிதன் ஆர்வமாகவும், விரைவாகவும் பேசத் தொடங்கினான். ஒரு மயக்கம் அவன் வார்த்தைகளைச் சுற்றிச் சுழலுவது போலிருந்தது. “கனவான்களே, எனக்கு நான் யாரென்ற எண்ணம் துளிகூடக் கிடையாது. நீங்கள் என்னிடம் கொஞ்சம் பொறுமை காட்டினால் என் குடும்பத்தைப் பற்றியோ அல்லது வேறு ஏதேனும் உபயோகமான தகவலோ கிடைக்கலாம்.. ஆனால் நீங்களெல்லாம் யார்? சர்ச்சில் வேலை பார்க்கும் பாதிரியார்களா? என்னை எங்கே கூட்டிப் போகிறீர்கள்? எனக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும். கடவுளே!”

அவனின் அந்த கேள்விக்குப் பதிலளிக்காமல் அத்தனை பேரும் ஜேம்ஸ் ஹார்ட்லியை தூக்குத் தண்டனை நடத்துமிடத்தை நோக்கி தங்கள் போக்கில் வழி நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அங்கே அந்த பெரிய, சோகம் படிந்த மரண அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், ‘கோடாரிக் கொடூரன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் மனிதனை, தன் மனைவியையும், இரு குழந்தைகளையும் சில மாதங்களுக்கு முன் தூக்கத்தில் வெட்டிக் கொன்ற மனிதனைத் தூக்கிலிடுவதைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்தார்கள்.

வழிநடத்தி வந்த அந்தக் குழு ஒரு திறந்திருந்த கதவு வழியாகத் தூக்குதண்டனை மேடையை அடைந்தது.

ஒரு சலசலப்பு அங்கே உருவாகியது. மேடை மேல் சில மனிதர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். மேடையிலிருந்த சலசலப்புகளுக்கு நடுவில் ஒரு அதிர்ச்சியான முகம் பார்வையாளர்களைக் குனிந்து பார்த்தது. அலறுவதற்குத் தயாராக இருப்பது போல அந்த முகத்தின் வாய் திறந்திருந்தது. அந்த முகத்தின் கண்கள் நிலையில்லாமல் இங்குமங்கும் பார்த்துக்கொண்டிருந்தன.

அதன் கழுத்தைச் சுற்றி ஒரு பளபளக்கும் மஞ்சள் கயிறு இறுக்கப்பட்டது.

ஒரு மனிதன் கனமான வெள்ளை உறையை அந்தக் கயிற்றுக் கீழிருந்த உருவத்தைச் சுற்றி மூடினான்.

இன்னொருவன் கையில் ஒரு வெள்ளை முகமூடியுடன் அந்த உருவத்தை நெருங்கினான். திடீரென்று அந்த முகம் அலறத் தொடங்கியது.

மூன்று வார்த்தைகள் – அந்த புகை சூழ்ந்த அறையை நிரப்பின. அழுகையுடன் கூடிய அந்த மூன்று வார்த்தைகளிலிருந்த வலியும், இறைஞ்சலும், அதிர்ச்சியும் கையில் முகமூடியுடன் வந்து கொண்டிருந்த ஷெரீ•பை ஒரு நிமிடம் மேலே நடக்க விடாமல் நிறுத்தின.

“அது நான் இல்லை!” அலறியது அந்த முகம். “அது நான் இல்லை!”

பார்வையாளர்கள் மூச்சை நிறுத்தி வெறித்துப் பார்த்தார்கள்.

மெல்லிய, மஞ்சள் கயிற்றின் முனையில் ஒரு வெள்ளைப் பொட்டலம் இப்படியும் அப்படியுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.


sethupathi.arunachalam@gmail.com

Series Navigation