தொலைத்தூர பயணம்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

கே.பாலமுருகன்


1
நீண்ட பயணத்தின்போது
வெகுநேர உரையாடல் திடீர் சலிப்பை
ஏற்படுத்தியிருக்கும்.
அல்லது உருவங்கள் கரைந்து
வெறும் சொற்கள் மட்டும்
மிதக்கக்கூடும்.
தொலைத்தூர பயணம் ஒரு மாயையென
அவதாணிப்பற்ற பொழுதுகளுடன்
வெறும் மீதங்களாய் வந்து சேர்ந்திருக்கும்.
பயணத்தவர்களில் சிலர் காணாமல்
போயிருந்தாலும்கூட
ஒரு மர்மயாய் இருப்பின் சூன்யத்தில்
ஒட்டிக்கிடக்கும் வாக்கியங்களால்
நிரம்பக்கூடும்.

2
எதுவரை நீளும் என்கிற முன்னறிவிப்பு
ஏதுமின்றி பயணம் விரிய
அர்த்தமற்று ஓடிக் கொண்டிருக்கின்றன
காருக்குள் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரமும்
ஓயாமல் சப்தமிட்டுக் கொண்டிருக்கும்
வானொலி பாடல்களும்.

3
ஒரு தொலைத்தூர பயணத்தில்
சில மௌளனங்களைக் கண்டடைந்தேன்.
எனக்குள்ளே நான் பேசிக்கொள்ளும்
வித்தையைக் கற்றிருந்தேன்.
பேசாமல் விடுப்பட்டுப் போன
உரையாடல்களின் போதாமைகளைச்
சரிக்கட்டிக் கொண்டிருக்கவும் செய்தேன்.
வெறுமனே சில மணிநேரங்கள் அமர்ந்திருப்பதைத் தவிர
சில அதிசயங்களும் நிகழும் தொலைத்தூர பயணத்தில்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்