தொலைக்காட்சி

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

’ரிஷி’


தொலைக்காட்சி- 1

’ரிஷி’

குளிரூட்டிய அறையில்,
உலக நடப்புகளை அலசியாராயும்
செய்தி அலைவரிசை நிகழ்ச்சியொன்றில்,
நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கையுறை அணியாத குறையாய் ஆண்களெல்லாம்
கழுத்து முதல் கால் வரை குளிருக்கு வாகாய்
இழுத்துப் போர்த்துக் கொண்டு
அறிவே உருவாய் அமர்ந்திருக்க,
பெண்களிருவரும்
ஒலி-ஒளி ஊடகங்களின்
கர்ணகடூர கலாச்சாரப் பேருரைகளுக்கப்பால்
நுகர்வுப் பண்டங்களாக்கப்பட்டவர்களாய்
எத்தனை முடியுமோ அத்தனை திறந்தமேனியராய்
அமர்ந்திருந்தனர்
அல்லது
அமர்த்தப்பட்டிருந்தனர்.
தன் அழகை மற்றவர்கள் ஆராதிப்பதாய்
இறுமாந்து அமர்ந்திருந்தவளுக்கு
அல்லது
மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தவளுக்கு
உறைக்காத குளிர்
மற்றவளுக்கு முதுகுத்தண்டில் சில்லிட்டது.
வேலைக்குச் சேர்ந்த இடத்தில் தனக்கு ‘நிமோனியா’ வரச் செய்ய
சதித்திட்டம் தீட்டப்பட்டதாய் கருத்து தெரிவித்து
பணியிடச் சூழல் பாதுகாப்பு குறித்து
வழக்குத் தொடர முடிவெடுத்து
எழுந்து நடந்தாள் திரைக்கப்பால்.

தொலைக்காட்சி – 2

உணவருந்தும் மேஜையில்
எல்லோரும் வட்டமாக அமர்ந்து சாப்பிட வேண்டும்
என்று அடம்பிடித்தாள் சிறுமி.
சதுர வடிவ மேஜையை எப்படி வட்டமாக்குவது என்று
வேடிக்கையாகக் கேட்டவரிடம்
சதுரத்திற்கு சதுரம் தான் வட்டம் என்றாள் திட்டவட்டமாய்.
அறிவுள்ள பெண் தான்!
எல்லோரும் அமர்ந்ததும்
ஒரு தட்டில் கல்லொன்று
ஒரு தட்டில் முள்ளொன்று
ஒரு தட்டில் பல்லொன்று
ஒரு தட்டில் சொல்லொன்று
என ‘ஹாட் க்ராஸ் பன்’ பாடிக் கொண்டே வைத்தாள்.
பின்
”இந்தக் கல் தான் அணுகுண்டு-
இந்தத் தட்டில் சாப்பிடுபவரைத் தலைவெடித்துச்
சிதறடிப்பதற்கு;
இந்த முள் நச்சு முள்-
இந்தத் தட்டில் சாப்பிடுபவரின் தொண்டையில் சிக்கி
நீலம் பாரிக்கச் செய்வதற்கு;
இந்தப் பல் இஷ்ட தெய்வத்திற்கு
(”அம்மா – நம் இஷ்ட தெய்வம் எது – சொல்லேன்”)
பலி கொடுத்துச் செய்வினை செய்யப்பட்டது.
இந்தத் தட்டில் சாப்பிடுபவர் இருதய நோயால் இறந்துபோவார்.
இந்தச் சொல் இனியான மொழியின் ஆனா.
இந்தத் தட்டில் சாப்பிடுபவருக்கு இனி ’கெட்ட’ வார்த்தைகளே
நல்லவையாகும்.
உம், சீக்கிரம் சாப்பிடுங்கள்
நான் பார்க்க வேண்டும்”, என்றாள்
வண்ணத்தொலைக்காட்சி நாடகங்களினூடாய் வளர்ந்துவரும்
சின்னஞ்சிறுமி.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி