This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
“லாவண்யா விஷயம் உனக்கு தெரியுமா? உன்னை வரச் சொல்லி எழுதியிருப்பதாய் சொன்னாள்.” முறுமுறுப்பது சொன்னான் சுரேஷ்.
“ஆமாம். கடிதம் எழுதியிருந்தாள். ஆனால் எனக்கு எங்கே முடியும்? கடிதம் எழுதவே நேரம் இல்லை. பிரசவம் ஆன பிறகு பத்து நாட்கள் இருந்து விட்டு வரணும்.”
சுரேஷ் திகைத்துப் போனான்.
லாவண்விடம் உயிரையே வைத்திருந்த வசந்தி இன்று லாவண்யா தனக்கு எதுவுமே ஆகமாட்டாள் என்பது போல் பேசுகிறாள்.
அதற்குள் சுந்தரி வந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
“சவிதாவின் அப்பா” வசந்தி அறிமுகப்படுத்தினாள். சுந்தரி திகைப்புடன் பார்த்தாள். குழந்தையை தூங்க வைப்பதற்காக உள்ளே போனாள் சுந்தரி. வசந்தி பின்னாலேயே வந்து “குழந்தையை நான் தூங்க வைக்கிறேன். நீ போய் கொஞ்சம் அவருடன் பேசிக் கொண்டிரு. என்னுடன் பேசுவதற்கு அவருக்கு சங்கடமாக இருக்கு. சவிதா வரும் நேரம் ஆகிவிட்டது. டீயைக் கலந்து கொடு” என்றாள். சுந்தரி வியப்படைந்தவளாய் சமையலறைக்கு சென்று டீ யை தயாரித்துக் கொண்டிருந்தாள்.
வசந்திக்கு வீணாவின் நினைவு வந்தது.
“நான் தான் ஜெயித்தேன் வீணா! எனக்கு அவன் மீது கோபம் வரவில்லை. இருபத்தி இரண்டு வருடங்கள் சேர்ந்து குடித்தனம் செய்தோம். பிரிந்துவிட்டோம். அவரவர்களின் வாழ்க்கை அவரவர்களுக்கு. என்னுடைய வாழக்கை என் கையில் இருக்கிறது. என் கஷ்ட சுகங்கள் என்னுடையவை. என் இருப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. நான் ஒரு நபருக்கு மனைவி, இரு குழந்தைகளுக்கு தாய் மட்டுமே இல்லை. இந்த சமுதாயத்துடன் தொடர்பு இருக்கும் ஒரு மனுஷி நான். என் சூழ்நிலையை என்னால் மாற்றிக் கொள்ள முடியும். என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நான் செய்யும் முயற்சி கூட எனக்கு சந்தோஷம் தருகிறது. இந்த சந்தோஷத்திற்கு முன்னால் வேறு எதுவும் இணையாகாது. நான் எதையும் இழந்து விடவில்லை. கணவனின் வீட்டில் தவிர பெண்ணுக்கு சுகம் இருக்காது என்று சொன்னது யாரோ தெரியவில்லை. ஆனால் அது உண்மையில்லை. இன்று நான் இருப்பது போல் சுயகௌரவத்துடன் யாருமே இல்லை. கணவன் இல்லாவிட்டால் மனைவிக்கு தனிமைதான் என்பது பொய்தான். இன்று என்னை சுற்றிலும் மனிதர்கள் இருக்கிறார்கள்.”
வசந்தி யோசனையில் ஆழந்திருந்த போது சவிதா வந்தாள். தந்தையைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு சுரேஷ் தாழ்ந்த குரலில் சொன்னான். “அம்மாவை நீ ரொம்ப மாற்றிவிட்டாய். ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.”
சவிதா முறுலித்தாள். “அம்மாவை நான் மாற்றவில்லை டாடீ! அம்மாவின் சுபாவமே அதுதான். ரொம்ப புத்திசாலி, பொறுமை, மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம், பகிர்ந்து கொடுக்கும் அன்பு எல்லாமே இருந்தன. ஆனால் இவை எதுவும் உங்களுடைய மனைவியாக, எங்களுக்கு தாயாக இருந்த போது வெளியில் வரவில்லை. வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு விதமாக சொன்னால் நான்கு சுவர்களுக்குள் மங்கிப் போய்விட்டாள். அம்மாவுக்கு இருக்கும் சக்தி நம் யாருக்குமே இல்லை” என்றாள்.
சுரேஷ¤க்கு புரிந்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் மௌனமாக இருந்தான்.
அன்புள்ள லாவண்யாவுக்கு,
உன் கடிதம் கிடைத்து ஒரு வாரமாகிவிட்டாலும் பதில் போடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. இங்கே சவிதாவின் சிநேகிதி சுந்தரி நம் வீட்டில் பிரசவித்திருக்கிறாள். பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதிலேயே எங்க மூவருக்கு பொழுது சரியாக இருக்கிறது. நீ குளிக்காமல் இருப்பதை கேட்டு நானும் சவிதாவும் ரொம்ப சந்தோஷப்பட்டோம். உனக்கு பெண்குழந்தைதான் பிறக்க வேண்டுமாம். சவிதாவின் விருப்பம் இது. உன் உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். டாக்டரிடம் சென்று ரெகுலர் ஆக செக்கப் செய்துகொள். இப்போதைக்கு என்னால் வர முடியாது. பிரசவம் ஆன பிறகு வருகிறேன். தேவைப் பட்டால் பதினைந்து நாட்கள் தங்குகிறேன்.
அடுத்தவாரம் நான் திருச்சிக்கு ரோகிணியிடம் போகிறேன். அங்கே ஆஸ்பத்திரியில் அவளுக்கு கூடமாட ஒத்தாசை செய்து கொண்டு அங்கேயே இருப்பேன்.
லாவண்யா! இதனால் உன்னுடைய கௌரவத்திற்கு இழக்கு வந்து விடும் என்று பயப்படாதே. உங்க அம்மா தனி நபராக தன் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என்று பெருமைப் படு. உங்க அம்மா நான்கு பேருக்கு உதவியாக இருக்கிறாள் என்று சந்தோஷப்படு.
உண்மைதான் லாவண்யா! நான் இப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை என் கையில் இருக்கிறது. அது மட்டுமே இல்லை. ஒருத்தருடைய வாழ்க்கை அவர்களுடைய கையில்தான் இருக்க வேண்டும் என்ற உண்மையும் புரிந்தது. இந்த ஞானம் ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டியது முக்கியம். நியாயமோ அநியாயமோ எனக்கு நானே செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறேன். யாரோ எனக்கு அநியாயம் செய்து விட்டார்கள் என்று வாழ்க்கையை முடித்து கொள்ளும் நிலையிலிருந்து வெளியேறிவிட்டேன்.
இருபது வருடங்கள் குடித்தனம் செய்த போது உங்க அப்பாவுக்கு மனைவியாக, உங்களுக்கு தாயாக வாழ்ந்தேன்.
உங்க அப்பா என்னை நெசிக்கவில்லை. நானும் உங்க அப்பாவை நேசிக்கவில்லை. நேசிக்கணும் என்ற விஷயம் கூட எனக்கு தெரியவில்லை. உங்க அப்பா என்னுடைய கணவன். கணவனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, கணவனிடமிருந்து எதை பெற்றுக் கொள்ள வேண்டுமோ இந்த சமுதாயம் எனக்கு கற்றுக் கொடுத்தது. அதைத்தான் செய்தேன். கணவனிடம் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, குழந்தையை எப்படி வளர்க்க வேண்டுமோ அதைத்தான் நான் செய்தேன். எந்த குறையும் வராமல் நடந்து கொண்டேன்.
ஆனால் நான் தோற்றுப் போய்விட்டேன். தோற்றுப் போகாமல் முடியாது. மணல் அஸ்திவாரத்தின் மீது எந்த கட்டிடமாவது நிலைத்திருக்குமா? இந்த மணல் அஸ்திவாரத்தின் மீது நம்முடைய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று எனக்கு அளவுகடந்த கோபம் வருகிறது. என்னை விட்டு பிரிந்ததில் உங்க அப்பாவுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. இருபது வருடங்களாக யாரை என் வாழ்க்கையின் லட்சியம் என்று நம்பியிருந்தேனோ அந்த நபரக்கு நான் இல்லை என்றால் எந்தக் கவலையும் இல்லை தெரிந்த பிறகு நான் எங்கே போவது?
என் உயிரையும் பணயம் வைத்து, சதையை ரத்தத்தைப் பகிர்ந்து கொடுத்து ராப்பகலாய் கண்விழித்து பெற்று வளர்த்த மகளுக்கு நான் ஒரு கௌரவப் பிரச்னையாக தவிர வேறு விதமாக தென்படவில்லை என்ற போது……
தனக்கு தேவைப்பட்ட போது தவிர என் நினைப்பே அவளுக்கு வரவில்லை என்ற போது…
நான் என்னவாகணும்?
வேறு யாராவது இருந்திருந்தால் என்னவாகியிருப்பார்களோ தெரியாது. ஆனால் நான் மனுஷியாகி விட்டேன். ஒரு மனைவியாக, ஒரு தாயாக இல்லாமல் மனுஷியாக நிலைத்து நின்றேன்.
நான் தேர்தெடுத்த லட்சியமே தவறு என்றும், அது ஒரு நாளும் என்னை கரை சேர்க்கப் போவதில்லை என்றும், ஏதோ ஒரு நாள் என்னை மூழ்கடித்து விடும் என்று எனக்கு அப்போ தெரியாது.
இந்த விஷயத்தை முன்னாடியே தெரிந்திருப்பது பெண்களுக்கு வரம். அந்த ஞானோதயம் எனக்கு ஆகிவிட்டது. என் வாழ்க்கையின் லட்சியத்தை முடிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மகளாக, மனைவியாக, தாயாக வாழ்ந்து பழகிவிட்ட எனக்கு ஆரம்பத்தில் பயமாக இருந்தது.
எந்த பாதுகாப்பும் இல்லையே என்று தோன்றியது. எந்த ஆதாரமும் இல்லாமல் என்னவாகி விடுவேனோ என்று கஷ்டமாக இருந்தது.
நாட்கள் போகப் போக என் கால்களில் தெம்பு வந்தது. என் கண்கள் பார்க்க கற்றுக் கொண்டன. என் வாய் பேசத் தொடங்கியது. என்னுள் உயிர்சக்தி பாயத் தொடங்கியது. நான் மனுஷியாகிவிட்டேன்.
லாவண்யா!
என்னை மனுஷியாக பார்க்க கற்றுக்கொள். உங்களுக்காக உழைக்கும் அம்மாவாக பார்ப்பதை விட்டுவிடு. என் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே.
இன்று என் வார்த்தைகள் உனக்கு அர்த்தம் இல்லாதவையாக தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு மனுஷியாக மாற வேண்டிய நாள் வந்தே தீரும். மனுஷியாக மாற வேண்டும் என்ற விருப்பம் பலமாக தோன்றும் அந்த நிமிடத்திற்காக என் வார்த்தைகளை கவனமாக உன் மனதில் பூட்டி வைத்துக் கொள்.
மனுஷியாக மாற வேண்டிய அந்த நாள் வரும் போது, அப்படி மாறக் கூடிய சக்தி இல்லை என்றால் நாம் எல்லோரும் சர்வநாசனம் ஆகிவிடுவோம். நாமே எஞ்சியிருக்க மாட்டோம். அதனால் நம் உயிரை பணயம் வைத்தாலாவது சரி மனுஷியாக மாற வேண்டிய சக்தியை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். என் வார்த்தைகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாரு.
உன்னை என்னுடைய மகளாகவோ, மனோகரின் மனைவியாகவோ அல்லாமல் ஒரு மனுஷியாக அடையாளம் காணப்போகும் நாளுக்காக காத்துக் கொண்டிருப்பேன்.
பிரியமுடன்,
வசந்தி
முற்றும்
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
“லாவண்யா கடிதம் எழுதியிருக்கிறாள். அந்த மேஜை மீது வைத்திருக்கிறேன் பாரு” என்றாள் வசந்தி.
“என்ன எழுதியிருக்கிறாள்?” ஆர்வமற்ற குரலில் கேட்டாள் சவிதா.
“படித்துதான் பாரேன்.”
“அக்கா எழுதிய கடிதங்களை படிக்கணும் என்றால் எனக்கு ரொம்ப போர். மாமியாரையும், நாத்தனாரையும் குற்றம் சொல்லுவதை தவிர அவளுக்கு வேறு வேலை இல்லை. தான், தன்னுடைய கணவன் தவிர உலகில் வெறு நல்லவர்களே இல்லை என்பது போல் எழுதுவாள். அக்காவைப் பார்த்தால் சில சமயம் எனக்கு இரக்கம்தான் வரும்.”
“நான் சொன்னது என்ன? நீ பேசும் பேச்சு என்ன?” சவிதாவின் போக்குக்கு தடை போட்டபடி சொன்னாள் வசந்தி.
“எப்போ கடிதம் எழுதினாலும் அவங்க குடும்பத்து பிரச்னைகள்தான். அவற்றை படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. விசேஷம் ஏதாவது இருந்தால் நீயே சொல்லு” என்றாள் சவிதா ஓய்வாக சாய்ந்தபடி.
“விசேஷம்தான். லாவண்யாவுக்கு இப்போ முன்றாவது மாதம்.”
“உண்மையாகவா!” சவிதா சந்தோஷமாக கேட்டாள். “பலே பலே! சின்ன வயசிலேயே நீ பாட்டியாக போகிறாய்.”
“சின்ன வயசா? நாற்பத்தி இரண்டாகிறது எனக்கு” என்றாள் வசந்தி.
“உடல் நலம் சரியாக இருக்கிறதாமா? டாக்டரிடம் போய் செக்கப் செய்து கொண்டாளா? பெண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும். இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்கணுமா?”
சவிதாவின் பரபரப்பைக் கண்டு வசந்தி சிரித்தாள். “உன் பரபரப்பு இருக்கட்டும். லாவண்யா உடனே என்னை கிளம்பி வரச் சொல்லி எழுதியிருக்கிறாள்.”
“ஏனாம்? உன்னை வரச் சொல்லுவானேன்? உன்னைப் பார்க்கணும்னு இருக்கோ என்னவோ. அக்காவுக்கு பிடித்ததெல்லாம் சமைத்து போடு. எனக்கு தெரியும். அக்கா இந்த சாக்கில் தனக்கு பிடித்தததை எல்லாம் சாப்பிட்டு விட்டு ஒரு சுற்று பருத்து விடுவாள். போயிட்டு வாம்மா” என்றாள் சவிதா உற்சாகத்துடன்.
“போய் வருவது இல்லை. இனி எப்போதும் தன்னிடம் தான் இருக்கணுமாம். சாசுவதமாக அவளிடம் இருப்பது போல் கிளம்பி வரச்சொல்லியிருக்கிறாள்.
“ஏன்? எதற்காகவாம்?” சவிதா வியப்படைந்துவிட்டாள்.
“கடிதத்தைப் படிக்காமல் கேள்விகளை கேட்டால் என்ன சொல்ல முடியும்? படித்த பிறகு பேசு” என்று கடிதத்தை கொண்டு வந்து தந்தாள்.
அன்புள்ள அம்மாவுக்கு,
உனக்கு ஒரு சுபச் செய்தியை சொல்லப் போகிறேன். எனக்கு இப்போ மூன்றாவது மாதம். நேற்றுதான் டாக்டரிடம் சென்று செக்கப் செய்து கொண்டு வந்தேன். ரொம்ப ஓய்ச்சலாக இருக்கிறது. எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. சமையலறைக்குப் போனாலே வயிற்றை குமற்றிக் கொண்டு வருகிறது. எப்படியோ சமாளித்துக் கொண்டு சமையல் செய்கிறேன். பழமும், பாலையும் தவிர வேறு எதுவும் சாப்பிட முடியவில்லை. உன் மாப்பிள்ளை நான் அவஸ்தை படுவதை பார்த்துவிட்டு “உங்க அம்மாவை வரச் சொல்லி எழுது” என்றார். எனக்கானால் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவர் தானாகவே, நான் ஒன்றும் கேட்காமலேயே உன்னை வரச் சொல்லியிருக்கிறார். உண்மைதானா என்று இரண்டு மூன்று தடவை கேட்டு விட்டேன்.
“உண்மையாகத்தான்! அங்கே உங்க அம்மாவுக்கு எப்படி பொழுது போகும்? இங்கே வந்தால் உனக்கு உதவியாக இருக்கும். நீ மசக்கையுடன் இருந்தால் எல்லாம் தானே பார்த்துக் கொள்வாள். இப்போ மட்டுமே இல்லை. நாளைக்கு குழந்தை பிறந்த பிறகும் உங்கம்மா இங்கே இருக்கலாம். உனக்கு குழந்தை வளர்ப்பு பற்றி என்ன தெரியும்? உங்க அம்மா இங்கே இருந்தால் உனக்கு கவலையில்லை. உங்க அம்மாவை வரச் சொல்லி கடிதம் போடு” என்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு என் மீத அன்பு அதிகம். எப்படி இருந்தால் நான் சுகமாக இருப்பேன் என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பார்.
எனக்கு முதலிலிருந்தே உன்னை இங்கே அழைத்து வைத்துக் கொள்ளணும் என்ற விருப்பம் இருந்தது. நீ இங்கே வந்தால் வாய்க்கு பிடித்ததை சமைக்கச் சொல்லி நிம்மதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். சமையல் சரியாக வராத நாட்களில் உன் நினைவுதான் வரும். ஆனால் எங்க மாமியார், நாத்தனாரைப் பற்றி உனக்குத்தான் தெரியுமே. அவர்களுக்கு பயந்து வாயை திறக்காமல் இருந்துவிட்டேன். இப்போ அவரே சுயமாக சொல்லிவிட்டார். மாமியார் ஏதாவது சொன்னால் “எனக்கு ஒன்றும் தெரியாது. உங்க மகனையே கேட்டுக் கொள்ளுங்கள். அவர் வரச் சொன்னதால்தான் எங்க அம்மா இங்கே வந்தாள் ” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விடுவேன். நீ உடனே கிளம்பி வா. சவிதா கல்லூரிக்கு போய் விட்டால் வீட்டில் தனியாக உனக்கு போர் அடிக்கும் இல்லையா?
உடனே கிளம்பு. வரும் போது முறுக்கு, தேங்குழல், ஸ்வீட் ஏதாவது செய்து கொண்டு வந்தாயானால் எங்க மாமியார் வாயைத் திறக்க முடியாது. மசக்கைக்கு கறுப்பு புடவை, இன்னும் என்னவெல்லாம் கொண்டு வரணுமோ உனக்கே தெரியும். ஒன்று விடாமல் எல்லாம் வாங்கிக் கொண்டு வர வேண்டும். பிறந்த வீட்டிலிருந்து சின்ன குறை இருந்தாலும் எங்க மாமியார் ஊர் முழுக்க டமுக்கு அடிப்பாள்.
நீ சென்னையிலேயே இருந்திருந்தால் நம் வீட்டில் எவ்வளவு வைபவமாக சீமந்தம் நடந்திருக்கும்? அந்த அதிர்ஷ்டம்தான் இல்லை. மற்றதையாவது கிரமமாக நடத்தணும். அப்பொழுதுதான் என்னால் புகுந்த வீட்டார் முன்னால் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
கிளம்பி வரும் முன் தந்தி கொடுத்தால் யாராவது ஒருத்தர் ஸ்டேஷனுக்கு வருகிறோம்.
இப்படிக்கு,
லாவண்யா.
அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு சவிதா பேசவில்லை. மேஜை மீது வைத்துவிட்டு போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
“போகட்டுமா?” வசந்தி கேட்டாள்.
“உன் விருப்பம்” என்றாள் சவிதா.
“என் விருப்பம் இருக்கட்டும். உன்னுடைய உத்தேசம் என்ன?” வசந்தி கேட்டாள்.
சவிதா பதில் பேசவில்லை.
“ஏதாவது சொல்லேன்?” என்றாள் வசந்தி.
“நீ அக்காவிடம் போவது, அவர்களுடைய குழந்தைகளை வளர்ப்பது, எல்லோரும் சேர்ந்து ஒரே குடும்பமாய் இருப்பது, மகள் மருமகன், பேரன் பேத்தியுடன் நீ சேர்ந்து வாழ்வது … அந்த வாழ்க்கை பிடித்திருந்தால் நீ போகலாம். தான் கஷ்டப்படக் கூடாது என்ற அக்காவின் எண்ணம் எனக்கு சரியென்று படவில்லை. அந்தக் கடிதமே எனக்கு பிடிக்கவில்லை. என் விஷயத்தை விடு. லாவண்யாவிடம் நீ எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாயோ எனக்கு தெரியும். இந்த சமயத்தில் அக்காவிடம் இருக்க வேண்டும் என்று நினைத்தால் போய் வாம்மா” என்றாள் சவிதா.
வசந்தி மௌனமாக இருந்தாள்.
“என்ன நடந்ததும்மா?” அம்மாவின் மௌனத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“நீ என்ன செய்யப் போகிறாய்?” வசந்தி திடீரென்று கேட்டாள்.
“நானா? இந்த வருடம் படிப்பு முடிந்து போய் விடும். ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொள்கிறேன். என் விஷயம் எப்போ எதற்கு?” சவிதா இப்படி சொன்னாளே தவிர அவளுக்கு ஏனோ துக்கம் பொங்கி வந்தது. அந்தப் பக்கம் திரும்பி மௌனமாக அழுதுக் கொண்டிருந்தாள். வசந்தி மெதுவாக எழுந்து அருகில் வந்து பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள். முதுகில் கையைப் பதித்து “ஏன் அழுதுக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டாள்.
சவிதா இந்தப் பக்கம் திரும்பி தாயின் மடியில் தலையை வைத்துக் கொண்டு ஹோவென்று அழுதாள்.
“அழாதேம்மா. எதற்காக இந்த அழுகை?”
“நான் என்ன செய்யட்டும் அம்மா? நான் எப்படி என் வாழ்க்கை இருக்கணும் என்று நினைத்தேனோ அந்த மாதிரி என்னால் இருக்க முடியவில்லை. என்னுடைய வாழ்க்கை எனக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. வீணா, ரமணன், சத்யன் எல்லோரும் எனக்கு வேண்டும் அம்மா! எல்லோரும் நட்புடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். எல்லோரும் சேர்ந்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். எப்படி?”
சவிதா ரொம்ப நேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாள்.
“சவிதா! நான் இருபது வருடங்களாக எதை வாழ்க்கை என்று நம்பி வந்தேனோ அந்த வாழ்க்கை என்னுடையது இல்லை என்று முடிவான போது நான் என்ன செய்தேன்?”
சவிதா திகைத்துப் போனவளாய் தாய்ன் பக்கம் பார்த்தாள்.
“உங்க அப்பாவும் நானும் சிறந்த தம்பதிகள் என்றும், நான் இல்லாவிட்டால் உங்க அப்பாவால் எந்த வேலையும் செய்து கொள்ள முடியாது என்றும், கணவன், குழந்தைகள், வீடு இவைதான் என்னுடைய வாழ்க்கை என்றும், குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்து அவர்கள் குடித்தனம் செய்யும் அழகைப் பார்த்து, அவர்களுடைய குழந்தைகளை வளர்ப்பது தான் வாழக்கை என்றும் எவ்வளவு ஆழமாக நம்பினேன்? திடீரென்று அந்த வாழ்க்கை காணாமல் போய் விட்டது. இப்போ அந்த வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்று தோன்றுகிறது. இப்போ நான் எனக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கணவன் மனைவி பிரிந்து போவது நடக்கக் கூடாத விஷயம் இல்லை என்றாய். ஒத்துப் போகாத போது பிரிந்து போவதுதான் நல்லது என்று சொன்னாய். கணவன் மட்டுமே மனைவியின் உலகம் இல்லை என்றாய். இப்போ ஏதோ கருத்து வேற்றுமைகள் வந்து உங்க கட்சிக் காரர்கள் பிரிந்து போய் விட்டார்கள். அதற்காக இவ்வளவு துக்கப்பட வேண்டுமா? தைரியமாக இருக்க வேண்டாமா?”
சவிதா தாயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கட்சியில் பிரிவு வராமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பிரிந்து விட்டது உண்மைதானே. அவரவர்களுக்கு சரி என்று பட்ட பாதையில் நடந்து செல்லுங்கள். வேலைகளை நிறுத்தாதீங்க. உங்க எல்லோருடைய லட்சியம் ஒன்றுதானே? என்றாவது எல்லோரும் இணைய முடியும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருங்கள். வீணாவிடம் நீயே போய் பேசு. பிரச்னைகளை பற்றி யோசித்து தீர்க்கும் வழியைப் பாருங்கள். அவ்வளவுதானே தவிர அழுது கொண்டும் பயந்து கொண்டும் இருந்தால் எப்படி நடக்கும்? நாம் எல்லோரும் சேர்ந்து சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஏதோ ஒரு தடங்கல் வந்து விட்டதும் நின்று விட்டால் எப்படி? ஏதோ ஒன்றை செய்வோம். நமக்கு சரி என்று பட்டதை, சமுதாயத்திற்கு நல்லது என்று நினைப்பதை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் சரி செயல் படுவோம். சோர்ந்து போய் அழுதுக் கொண்டிந்தால் காரியம் நடக்காது.”
வசந்தியின் பேச்சை கேட்டு சவிதா யோசனையில் ஆழ்ந்து போனாள்.
அன்று மாலை சுந்தரியின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் வசந்தி. சுந்தரி சவிதாவின் ஸ்டூடென்ட் யூனியனில் வேலை பார்த்த பெண். பி.ஏ. வரையிலும் படித்தாள். போன வருடம் அதே யூனியனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பையனை காதல் திருமணம் செய்து கொண்டாள். அவன் எப்போது யூனியன் வேலையிலேயே சுற்றிக் கொண்டிருப்பான். சுந்தரிக்கு வேலூரில் டைபிஸ்டாக வேலை கிடைத்ததால் அங்கே குடித்தனம் செய்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு இப்போ ஒன்பதாம் மாதம். பெற்றோருக்கு விருப்பமில்லாத திருமணம் செய்து கொண்டதால் சுந்தரியை அவர்கள் பிரசவத்திற்கு அழைக்கவில்லை. அழைப்பு இல்லாத போது அங்கே போவதற்கு சுந்தரியின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தனியாய் பிரசவத்தை எதிர்க்கொள்ளவும் பயமாக இருந்தது. சுந்தரியின் நிலைமையை புரிந்து கொண்டு வசந்தி தன்னிடம் வரச் சொன்னாள்.
“மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு நீ என்னிடமே இரு. உனக்கு தயக்கமாக இருந்தால் பேயிங் கெஸ்டாக இரு. உன்னுடைய பாரத்தையும், பிறக்கப் போகும் குழந்தையின் பாரத்தையும் என்னிடம் விட்டு விடு. நீ நிம்மதியாக இரு” என்றாள் வசந்தி. சுந்தரியும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டாள்.
அன்று முதல் லீவ் போட்டு வைசாக்கிற்கு வந்து கொண்டிருந்தாள். வசந்தி ஆறுமணி முதல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் ஏழு மணியாகும் போது ஆட்டோ வந்து வீட்டின் முன்னால் நின்றது. வசந்தி சூட்கேஸை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்தாள். சுந்தரி ஆயாசப்பட்டுக் கொண்டே கட்டில் மீது உட்கார்ந்து கொண்டாள்.
“ஒன்பதாம் மாதம் முடியும் வரையில் வேலை பார்க்காமல் பத்து நாட்களுக்கு முன்னாடியே லீவ் போடக் கூடாதா? இப்போ பாரு எப்படி மூச்சு வாங்குகிறதோ” என்றபடி காபி கலந்து கொண்டிருந்தாள் வசந்தி.
“பிரசவம் ஆன பிறகு பாப்பாவுடன் நிறைய நாட்கள் இருக்கலாம் இல்லையா, அதான்” என்று சொல்லி முடிக்கும் முன்பே “அம்மா!” என்று கத்தினாள் சுந்தரி.
காபியை அப்படியே வைத்து விட்டு வசந்தி ஹாலுக்கு வந்த போது சுந்தரி கட்டிலில் சரிந்திருந்தாள்.
“என்ன ஆச்சு சுந்தரீ? உடம்பு சுரத்தாக இல்லையா?”
“இடுப்பு கடுக்கிறது. ரயிலில் உட்கார்ந்து வந்தேன் இல்லையா” என்றபடி எழுந்துக் கொண்டு பாத்ரூமுக்குப் போனாள்.
வசந்திக்கு ஏதோ சந்தேகம் வந்து பாத்ரூம் வாசலிலேயே நின்றுக் கொண்டிருந்தாள்.
“அம்மா!” என்று மறுபடியும் கத்தினாள் சுந்தரி.
“என்னம்மா? கதவைத் திற” என்றாள் வசந்தி.
“அம்மா! என்ன இது? புடவை எல்லாம் நனைந்து விட்டது. நிற்கவில்லை” என்றாள் சுந்தரி பதற்றத்துடன்.
“பனிக்குடம் உடைந்துவிட்டதோ என்னவோ” வசந்தி பதற்றமடைந்து சுந்தரியை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு கட்டில் மீது படுக்க வைத்தாள்.
“ஆட்டோவை அழைத்து வருகிறேன். ஆஸ்பத்திரிக்கு போகலாம்.” வசந்தி பர்ஸை எடுத்துக் கொண்டு முன் அறைக்குப் போவதற்குள் சுந்தரி வீலென்று கத்தினாள். வசந்திக்கு படபடப்பாக இருந்தது. சுந்தரி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். இரத்தத்தால் படுக்கை நனைந்து கொண்டிருந்தது. வசந்தி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்த்தாள். குழந்தையின் தலை கருப்பாக தென்பட்டுக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினாள்.
அடுத்த வினாடி தேறிக் கொண்டு பக்கத்து வீட்டுக்கு ஓடினாள். அவர்கள் வீட்டு பையனை டாக்டரை அழைத்து வருவதற்காக துரத்தினாள். “அருகில் எந்த டாக்டர் இருந்தாலும் சரி, ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அழைத்து வா” என்று அவசரப்படுத்தினாள். பக்கத்து வீட்டுக்காரியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் போது சுந்தரியின் உடல் முழுவதும் வியர்வையால் தொப்பலாகிவிட்டிருந்தது. ·பேனை போட்டு விட்டு சுந்தரியின் கால்மாட்டில் உட்கார்ந்து கொண்டாள். குழந்தையின் தலை வெளியே வந்தது.
“டாக்டர் வரும் வரையில் நிற்காது. வாங்க” என்றபடி பக்கத்து வீட்டுக்காரி மெதுவாக குழந்தையைப் பிடித்துக் கொண்டாள். வசந்தியும் தாங்கிக் கொண்டாள். இரண்டு பேரின் கைகளிலும் மெதுவாக நழுவியது அந்த பச்சிளம் குழந்தை. வசந்தி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டாள். சுந்தரி மயக்கமாக இருந்தாள்.
பக்கத்து வீட்டுக்காரி ஸ்டவ்வை பற்ற வைத்து வெந்நீர் போட்டுக் கொண்டிருந்தாள்.
வசந்தியின் கைகளில் குழந்தை சின்னஞ்சிறு வாயைத் திறந்து வீச் வீச்சென்று கத்திக் கொண்டிருந்தது.
அதற்குள் டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தான் பக்கத்து வீட்டு பையன்.
டாக்டரம்மா உள்ளே வரும் போதே வசந்தியைப் பிடித்துக் கொண்டு அர்ச்சனை செய்ய ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்க வேண்டாமா? வலி வந்த உடனேயே ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போயிருக்க வேண்டாமா? ஏதாவது நடந்தால் என்ன செய்திருப்பீங்க? உங்களுடைய தைரியத்திற்கு பாராட்டத்தான் வேண்டும்” என்று ஒரு பக்கம் வசந்தியை கடிந்து கொண்டே செய்ய வேண்டியதெல்லாம் செய்தாள்.
வசந்தி மௌனமாக டாக்டர் சொன்னதை எல்லாம் செய்தாள். ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவியது.
பக்கத்து வீட்டுக்காரியும், அவளுடைய மகனும் கிளம்பிப் போய் விட்டார்கள். ஒன்பது மணிக்கு சவிதா வரும் போது சுந்தரி தூங்கிக் கொண்டிருந்தாள்.
“எப்போ வந்தாள்? எப்போ தூஙகினாள்?” என்று கேட்டுக் கொண்டே சுந்தரியின் பக்கத்தில் உட்காரப் போன சவிதா சுந்தரியின் பக்கத்தில் நெளிந்து கொண்டிருந்த உருவத்தை பார்த்து வீலென்று கத்தினாள்.
வசந்தி சமையலறை வாசலில் நின்று கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.
“குழந்தை எப்போ பிறந்தது? அங்கேயே டெலிவரி ஆகிவிட்டதாமா? கொஞ்சமாவது புத்தியிருக்கா?”
“அங்கே பிரசவம் ஆகவில்லை. இங்கே உன் கட்டில் மீது தான் பெற்றெடுத்தாள்” என்றாள் வசந்தி.
சவிதா திகைத்துப் போனாள். “எப்போ வந்தாள்? எப்போ டெலிவரி ஆச்சு?”
“ஏழுமணிக்கு வந்தாள். ஏழறைக்கெல்லாம் குழந்தை பிறந்து விட்டது.”
“உண்மையாகவா? நம் வீட்டிலேயா? இங்கேதானா?” சவிதா கட்டிலை சுற்றி சுற்றி வந்தாள். “குழந்தையை பெற்றுக் கொள்வது இவ்வளவு சுலபமா?”
“அது குழந்தையைப் பொறுத்து இருக்கும். நீ இரண்டு நாட்கள் என்னை படுத்திய பிறகுதான் பிறந்தாய்” என்றாள் வசந்தி சிரித்துக் கொண்டே.
“உண்மைதானா அம்மா! எனக்கு தெரியாது இல்லையா? சாரி” என்றாள் சவிதா தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டே.
“கொஞ்சியது போதும். போய் குளித்து விட்டு வந்து குழந்தையை தூக்கிக் கொள்” என்றாள் வசந்தி.
“அம்மாடி! குழந்தையை தூக்கணும் என்றால் எனக்கு பயம்.” பாத்ரூமுக்குள் நுழைந்தாள் சவிதா.
குழந்தை பிறந்தது முதல் அந்த வீட்டில் சந்தடி தொடங்கிவிட்டது. மூன்று பெரியவர்கள் சேர்ந்து எவ்வளவு பாடுப்பட்டாலும் சுண்டுவிரல் அளவுக்கு கூட இல்லாத அந்தக் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திணறிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பாலை கலந்து வைத்த போது அவள் குடிக்க மாட்டாள். குடிக்க மாட்டாள் என்று நினைக்கும் போது திடீரென்று எழுந்து அழ ஆரம்பித்து விடுவாள். பாலைக் கலந்து எடுத்து வருவதற்குள் எல்லோரையும் ஆட்டிவைப்பாள். இவர்கள் தூங்கும் போது விழித்துக் கொள்வாள். இவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது தூங்குவாள். இவர்கள் சாப்பிட உட்கார்ந்தால் எவ்வளவு ஆழமாக தூங்கிக் கொண்டிருந்தாலும் சரி யாரோ தட்டி எழுப்பிவிட்டது போல் எழுந்து விடுவாள். யாராவது ஒருவர் கையை அலம்பிக் கொண்டி வந்து தூக்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். யாராவது ஒருத்தர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மற்றவர்கள் தூக்கி வைத்துக் கொள்ளலாம் என்றாலும் சும்மாயிருக்க மாட்டாள். சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் வந்து தூக்கிக் கொண்டால் தவிர அழுகையை நிறுத்த மாட்டாள். இனி இப்படி இருந்தால் சரியாக வராது என்று சுந்தரி குழந்தையைத் தூக்கிக் கொண்டால் வசந்தி சாதம் பிசைந்து சுந்தரிக்கு ஊட்டுவதும், வசந்தி தூக்கிக் கொண்டால் சுந்தரி ஊட்டுவதுமாக புதிய முறையை தொடங்கினார்கள். ஒரு நாள் இப்படி போனதும் இருவருக்கும் மற்றவர்கள் ஊட்டிவிட்டால் நன்றாக இருப்பது போல் தோன்றி அதையே கடைபிடித்தார்கள். இவ்விருவரையும் பார்த்து சவிதா தனக்கும் யாராவது ஊட்டித்தான் ஆகணும் என்று அடம் பிடித்தாள். மொத்தத்தில் வீட்டில் ஒரு வரைமுறையே இல்லாமல் போய் விட்டது. பெரியவர்கள் மூன்று பேரும் சிறுக் குழந்தைகளாக மாறி அந்த குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தார்கள்.
குழந்தையைத் தூங்க வைப்பது ஒரு கலையாகி அந்த கலையில் வசந்தி தேர்சி பெற்று விட்டாள். கட்டில் மீதோ தரையிலேயோ உட்கார்ந்து கொண்டு கால்களை ஆட்டிக் கொண்டு ஏதோ ஒரு பாட்டை உரத்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரியவில்லை என்றாலும் ஊ ஊ என்றோ ஆ என்றோ பெரிதாக ராகமாய் சொல்ல வேண்டும். வசந்தி பாட்டு பாடுவதில் சுந்தரியை விட முதல் இடத்தில் இருந்தாள். சின்ன வயதில் லாவண்யாவுக்கும் சவிதாவுக்கும் தன்னுடைய தாய் பாட்டிய பாட்டை நினைவு படுத்திக் கொண்டு பாடிக் கொண்டிருந்தாள்.
பிறந்து பதினைந்து நாட்களுக்குள்ளேயே தூங்குவதற்காக ஒரு முறையைக் கண்டுபிடித்து, அந்த முறைக்கு பெரியவர்களையும் பழக்கப்படுத்தி விட்ட குழந்தையின் பிடிவாதத்திற்கு பிரமித்துப் போனவளாக வசந்தி பாடிக் கொண்டிருந்தாள்.
“அத்தை அடிச்சாளோ மல்லிகைப் பூ செண்டாலே, மாமன் அடிச்சானோ” என்று குரலை உயர்த்தி எந்த தயக்கமும் இல்லாமல் பாடிக் கொண்டிருந்த வசந்தி சட்டென்று நிறுத்திவிட்டாள்.
எதிரே சுரேஷ்!
எழுந்து நின்று கொண்டால் குழந்தை விழித்துக் கொண்டு விடுவாள் என்று நினைவுக்கு வந்ததால் எழுந்து நிற்கும் முயற்சி கூட செய்ய வில்லை வசந்தி.
“சவிதா …” வார்த்தைகளுக்காக தடுமாறிக் கொண்டிருந்தான் சுரேஷ்.
“சவிதா படிப்பதற்காக சிநேகிதியின் வீட்டுக்கு போயிருக்கிறாள். பரீட்சைகளுக்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கு. இங்கே குழந்தை இருப்பதால் படிப்பு ஓடவில்லை. உட்காருங்கள். வரும் நேரம்தான்” என்றாள் நாற்காலியை காண்பித்தபடி.
“இந்தக் குழந்தை…”
“சுந்தரி என்று எனக்கும், சவிதாவுக்கும் சிநேகிதி. அந்தப் பெண் இந்த வீட்டில் தான் பிரசவித்தாள். பதினேந்து நாட்களாகிறது. சுந்தரி குளிக்கப் போயிருக்கிறாள். இந்தக் குழந்தை எவ்வளவு புத்திசாலியோ வார்த்தைகளில் சொல்ல முடியாது.” வசந்தி குனிந்து குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தாள்.
சுரேஷ் வசந்தியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் இளைத்தாற்போல் தென்பட்டாலும் வசந்தி பார்க்க தெம்பாக இருந்தாள். அவள் சிரிப்பில், கண்களில், பேச்சில் அவன் இதற்கு முன் பார்த்திராத சுறுசுறுப்பு.
அம்மா நன்றாக இருக்கிறாள் என்று சவிதா சொன்ன போதிலும் இவ்வளவு நன்றாக இருப்பாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. வசந்தியின் நினைவு வரும் போதெல்லாம் தான் பெரிய குற்றம் செய்துவிட்டோம் என்று தோன்றும். வசந்தியின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டோமோ என்ற குற்றஉணர்வு தகித்துக் கொண்டிந்தது.
ஆனால் பிரிந்து போய்விட்டு வசந்திக்கு நன்மைதான் செய்திருக்கிறோமோ என்ற சந்தேகம் இப்போ ஏற்பட்டது. அதற்கு முன் வசந்தியின் முகத்தில் இந்த பரந்த மனப்பான்மை தென்பட்டதில்லை. எப்போதுமே குன்றிவிட்டவள் போன்ற முகத்தோற்றம் இருந்து வந்தது. கண்களில் உதட்டில் எப்போதும் யாரைப் பற்றியாவது குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கும். ஒரு விதமான தயக்கம் அவள் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும்.
இப்பொழுது அந்த லட்சணங்கள் எதுவும் இல்லை. சுரேஷின் மனைவியாக வசந்தி இல்லை. பெண்ணாகவும் இல்லை. சகமனுஷியாக தென்பட்டாள். சிரிப்பதில், பேசுவதில் எந்த தயக்கமோ, கூச்சமோ இல்லாத, இன்னதென்று சொல்ல முடியாத சுதந்திரத்தன்மையுடன் செயல்பட்டாள்.
மடியில் குழந்தையுடன் அவள் ஒரு மனுஷியாக இருந்தாள்.
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
மறுநாள் மாலையில் சவிதா திரும்பி வந்தாள். சவிதாவின் முகத்தைப் பார்த்ததுமே ஏதோ பெரிய ஆபத்து வந்து விட்டது இன்று வசந்திக்கு புரிந்துவிட்டது. என்னவென்று கேட்டாள்.
“ஏதோ கட்சி தகராறு” என்றாள் சவிதா.
முதல்நாள் இரவு மதுசூதன் வந்தான் என்று சொல்லிவிட்டு அவன் கொடுத்துவிட்டு போன காகிதங்களை கொடுத்தாள் வசந்தி.
சவிதா பொறுமையாக அந்த காகிதங்களை எல்லாம் படித்தாள். அவள் வீட்டை விட்டு நகரவில்லை. யாரும் வரவும் இல்லை. வசந்திக்கு மூச்சு திணருவது போல் இருந்தது.
“என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்ட போது சவிதா ரொம்ப நேரம் பேசவில்லை. கடைசியில் “கட்சியில் பிரிவு வந்து விட்டதும்மா” என்றாள்.
“பிரிவு வந்ததா? எதனால்?”
“என்ன சொல்லுவது எப்படி சொல்லுவது என்று எனக்கும் புரியவில்லை. நான்கு நாட்கள் போகட்டும். பார்க்கலாம்” என்றாள்.
நான்கு நாட்கள் கழிந்தன. வசந்திக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. சவிதா சரியாக சாப்பிடவில்லை. வாய் விட்டு பேசவில்லை.
என்ன விஷயம் என்று கேட்டால் ஒன்றும் இல்லை என்பாள். வசந்திக்கு பயமாக இருந்தது. ராஜலக்ஷ்மிக்கு தந்தி கொடுத்தாள்.
மூன்றாவது நாள் ராஜலக்ஷ்மி வந்த போது சவிதா கொஞ்சம் தேறிக் கொண்டு விட்டாள். அதற்கு முதல்நாள்தான் மாதவி என்ற பெண்ணும், கோபி, ஸ்ரீனிவாஸ¤ம் வந்தார்கள். அவர்களுடன் பேசிய பிறகு சவிதாவிடம் கொஞ்சம் கலகலப்பு தென்பட்டது.
ராஜலக்ஷ்மி வந்த பிறகு என்ன சமாசாரம் என்று கேட்டாள்.
“என்ன இருக்கு? பழைய கதைதான். கட்சிப் பிரிவு.” முறுவலுடன் சொன்னாள் சவிதா.
“இந்த முறை காரணம் என்னவாம்? எதற்காக கட்சிப் பிரிவு?” ராஜலக்ஷ்மி கேட்டாள்.
“அதுவும் பழசுதான். மூன்று உலகங்களின் கொள்க்கை.”
“மைகாட்! மூன்று உலகங்களின் கொள்க்கையா? அப்படி என்றால்?” ராஜலக்ஷ்மி வியப்புடன் கேட்டாள்.
“அதுதான் எனக்கும் புரியவில்லை. பிரிவு வந்த ஒவ்வொரு முறையும் மூன்று உலகங்களின் கொள்கை என்பார்கள். அதற்குப் பிறகு வழக்கமான சண்டைகள். தம்மை மைனாரிட்டியாக்கி தம்முடைய அப்பிப்பிராயங்களை எல்லாம் அடக்கி வைத்தார்கள் என்று ஒரு கும்பல் குற்றம் சாட்டினால், தம் பக்கம் மக்களை ஈரப்பதற்கு சதிதிட்டம் போட்டதாக மற்றொரு கும்பல். நடந்த தவறுகளுக்கு நீங்கதான் பொறுப்பு என்று பரஸ்பரம் குற்றம் சாட்டுவது, கடைசியில் மூன்று உலகங்களின் கொள்க்கையை கொண்டு வந்து குறுக்கே போடுவது.”
“மூன்று உலகங்களில் கொள்க்கை என்றால் என்ன?” வசந்தி கேட்டாள்.
“உலகத்தில் இருக்கும் நாடுகளை எல்லாம் மூன்று வகையாக பிரித்து விடலாம் அம்மா. பணக்கார நாடுகள், சுமாரான நாடுகள், ஏழைநாடுகள். ஒவ்வொரு நாடும் ஒரு உலகம். பணக்காரநாடுகள் ஏழை நாடுகளை அடக்கி ஆள முயன்று கொண்டிருக்கும்.”
“அதனால் கட்சிக்கு வந்த பிரச்னை என்ன? பிரிவு ஏற்படுவானேன்? இதைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. வீணா நம் வீட்டுக்கு வராமல் இருப்பானேன்?”
“அதுதானே எனக்கும் புரியவில்லை. நேற்று வீணாவைக் கடைத்தெருவில் பார்த்தேன். அருகில் சென்று பேச முயன்றால் விருப்பமில்லாதவள் போல் நான்கு வார்த்தைகள் சுருக்கமாக பேசினாள். கட்சியில் ஏற்பட்ட பிரிவைப் பற்றி இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் தெரிய வந்திருக்கு. அவள் ஒரு பக்கம் சேர்ந்து விட்டாள். நான் அந்த பக்கம் வரமாட்டேன் என்று மேலிடத்தில் யாரோ அவளுக்கு சொல்லியிருக்கிறார்கள். என்னிடம் பேசக் கூடாது என்று தடை போட்டார்களோ என்னவோ. என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை. நாங்கள் இணைந்து செய்த காரியங்களுக்கு, சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்போ வந்த பிரிவனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறைந்தபட்சம் நட்புடனாவது இருப்போம் என்ற எண்ணம் இல்லை. ஏன் இப்படி நடக்கிறது என்று புரியவில்லை.” சவிதா தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
ராஜலக்ஷ்மி தன்னால் முடிந்த வரையில் சவிதாவை உற்சாகப் படுத்த முயன்றாள். ராஜலக்ஷ்மியுடன் சந்திரசேகரும் அங்கேயே தங்கிவிட்டான். அவனுடைய தங்கை சரளா ராஜலக்ஷ்மியைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள்.
எல்லோரும் சேர்ந்துக் கொண்டதால் வீட்டில் மறுபடியும் கலகலப்பு ஏற்பட்டது. சவிதாவும், ராஜலக்ஷ்மியும் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி சந்திரசேகரை ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
வசந்தியும், சரளாவும் சந்திரசேகரின் பக்கம் சேர்ந்து கொண்டு அவர்களின் வாயை மூட வைப்பார்கள்.
நான்கு பெண்களும் தனக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது சந்திரசேகர் முறுவலுடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அதைக் கவனித்த சவிதா நமக்குள் நாமே சண்டை போட்டுக் கொள்வதால் ஆண்கள் சுகமாக இருக்கிறார்கள். முதலில் நாம்தான் ஒன்றாக இணைய வேண்டும் என்பாள்.
“சந்திரன் எல்லா ஆண்களைப் போல் இல்லை” என்பாள் வசந்தி, அவன் பக்கத்திலிருந்து ஒரு அங்குலம் கூட நகராமல்.
சரளா கொஞ்ச நேரம் ஊசலாடி விட்டு மறுபடியும் வசந்தியின் பக்கம் வந்து விடுவாள்.
பத்து நாட்கள் கழித்த ராஜலக்ஷ்மி கிளம்பி விட்டாள். நான்கு மாதங்களில் டிரைனிங்கை முடித்துக் கொண்டு வந்துவிடுவதாக சொல்லிவிட்டுப் போனாள்.
வீட்டிற்கு தேவையான சாமானகளை வாங்கி வருவதற்காக வசந்தி கடைத்தெருவுக்கு போனாள். சவிதா பரீட்சைகளுக்காக படித்துக் கொண்டிருந்தாள். வருடம் முழுவதும் அங்கே இங்கே என்று வேலையாய் சுற்றிக் கொண்டிருந்த சவிதாவின் சிநேகிதிகள் கூட நூலகத்திலேயோ, வீட்டிலேயோ உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். சவிதாவும் பகல் முழுவதும் நூலகத்தில் படித்து விட்டு மாலையில் வீட்டுக்கு வருவாள். பகல் முழுவதும் ஓய்வாக இருப்பதால் வசந்தி சவிதாவிடம் புத்தகங்களை கேட்டு வாங்கி படித்துக் கொண்டிருந்தாள்.
சவிதா வீட்டுக்கு வந்ததுமே தாய் எது வரையிலும் புத்தகத்தை படித்தாள் என்று கேட்டுக் கொண்டு அதைப் பற்றி பேசுவாள். பிடித்திருக்கிறது என்று வசந்தி சொன்னால் எதற்காக பிடித்திருக்கிறது என்றும், பிடிக்கவில்லை என்றால் காரணம் சொல்லு என்றும் கேட்பாள். புரியவில்லை என்று சொன்னால், சேர்ந்து படிப்போம் வா என்று கூப்பிடுவாள். வசந்திக்கு முதலில் தான் படித்தவற்றைப் பற்றிப் பேசுவதில் அதிகம் ஆர்வம் இருக்கவில்லை. சில சமயம் புரியவும் இல்லை. சவிதா விடாமல் தொணதொணத்தால் சலித்துக் கொள்வாள். சவிதாவும் தன் பிடிவாதத்தை விட மாட்டாள்.
“நானும் ஏதாவது வேலைக்கு போகிறேன்” என்றாள் வசந்தி. அவளுக்கு சுலபமாக கிடைக்கக் கூடியது டீச்சர் வேலைதான். ஆனால் வசந்திக்கு அந்த வேலை செய்வதில் விருப்பம் இல்லை. “என்னால் பாடம் சொல்லித் தர முடியாது. சின்னக் குழந்தைகளுக்கு புரிவது போல் சொல்லித் தருவது சாதாரண விஷயம் இல்லை” என்றாள்.
ரோகிணி கடிதம் எழுதினாள்.
“நீ சவிதாவுக்காக அங்கே இருக்கப் போகும் இந்த இரண்டு வருடங்களில் நர்ஸ் டிரைனிங் எடுத்துக் கொண்டாயானால் பிறகு என்னிடமே வந்து விடலாம். என்னிடம் வந்த பிறகும் நீ கற்றுக் கொள்ள முடியும். ஆனால் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் சொல்கிறேன். வைசாக்கில் பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கும் டாக்டர் பதஞ்சலி என்னுடைய கிளாஸ் மேட். ரொம்ப நல்லவன். அவனிடம் போனால் தினமும் கொஞ்ச நேரம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். உனக்கு இருக்கும் ஆர்வத்தை பொறுத்து நிறைய விஷயங்களை கற்றுக் கெள்ளலாம். சவிதாவின் படிப்பு முடிந்த பிறகு நீ என்னிடம் வந்தாயானால் எனக்கும் நிம்மதியாக இருக்கும். சிரத்தையாக நோயாளிகளை கவனிக்கவும், உதவி செய்யவும் சரியான ஆள் இல்லாததால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நீ இங்கே வந்தால் என்னுடைய பிரச்னைகள் தீர்ந்துவிடும். என் சுயநலத்தின் காரணமாகத்தான் இந்த கடிதம் எழுதுகிறேன்” என்று எழுதியிருந்தாள்.
சவிதாவும் இந்த யோசனை நன்றாக இருப்பதாக ஒப்புக் கொண்டாள். “எங்க கும்பலில் யாருக்காவது உடல்நலம் சரியாக இல்லை என்றால் உன்னிடம் அனுப்பி வைத்து விடலாம்” என்றாள் உற்சாகத்துடன்.
சவிதாவின் பரீட்சைகள் முடிந்ததுமே டாக்டர் பதஞ்சலியிடம் போகணும் என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.
ரோகிணியிடம் போனால் தனக்கும் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சாலையைத் தாண்ட போன வசந்தி சட்டென்று நின்றுவிட்டாள். வீணா சாலையைத் தாண்டி இந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தாள். வசந்தி இருந்த இடத்திலேயே நின்று கொண்டு வீணாவைப் பார்த்து முறுவலித்தாள். வீணா சங்கடத்துடன் நின்று விட்டாள்.
“வீணா! கண்ணில் படவே இல்லையே? சௌக்கியமாக இருக்கிறாயா?” குசலம் விசாரித்தாள் வசந்தி.
“நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றாள் வீணா.
“வீட்டு பக்கம் வரவே இல்லையே? இப்போ போகலாம் வா” என்றாள் வசந்தி.
“வேண்டாம்மா” என்றாள் வீணா.
“ஏன்? எதற்காக வர மாட்டாய்? சவிதாவுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது வரலாம் இல்லையா?”
வீணா பதில் பேசவில்லை.
“சவிதாவுக்கும் உனக்கும் நடுவில் என்ன பிரச்னை? நீங்கள் இருவரும் எவ்வளவு சிநேகமாய் இருந்தீங்க? கட்சியில் ஏதோ பிரிவு வந்தால் நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளவும் முடியாத அளவுக்கு விலகிப் போகணுமா?”
“எங்கள் இருவரின் கொள்க்கைகளும் வேறு வேறு அம்மா!”
“என்ன கொள்க்கைகளோ எனக்குத் தெரியாது. சவிதாவும், நீயும் சொல்வது போல் யஜமானியாக இருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள் என்று என்னால் நம்ப முடியாது. நாளைக்கு மாணவர்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தால் என்ன செய்யப் போறீங்க? சவிதா போராட்டம் நடத்தினால் நீ குறுக்கே விழுந்து தடுக்கப் போகிறாயா? போராட்டத்தை யார் நடத்துவார்கள்?”
“யாருக்கு பலம் இருந்தால் அவர்கள் போராட்டத்தை நடத்துவார்கள்.” பிடிவாதமாக சொன்னாள் வீணா.
“நீங்க இருவரும் சேர்ந்து கொண்டால் போராட்டம் பலப்படும் இல்லையா?”
“தேவைப்பட்டால் இணைந்து கொள்வோம்.”
“அப்படி இருக்கும் போது ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்ப்பானேன்? கட்சியில் பிரிவு வரவேண்டிய தேவையில்லை என்று நினைக்கும் போது அதற்காக உங்களுடைய நட்பை புறக்கணிப்பானேன்? கொள்க்கையை விட முடியாது என்றால் நட்பை மட்டும் தொடருங்கள். வாதம் புரிந்து எது நல்லது என்று முடிவு செய்யுங்கள். உன்னுடைய கருத்துக்களை பற்றி சவிதாவிடம் சொன்னாயா? யாரோ சொன்னதைக் கேட்டு விட்டு பேசாமல் இருந்து விட்டாய். அது சரிதானா என்று விசாரிக்கவும் முயற்சி செய்யவில்லை.” வசந்தி மூச்சு வாங்கிக் கொள்வதற்காக நிறுத்தினாள்.
“நான் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். வருத்தப்படாமல் உங்களால் பதில் சொல்ல முடியுமா?” வீணா கடினமான குரலில் கேட்டாள்.
“சொல்ல முடிந்தால் சொல்கிறேன்.”
“சவிதாவின் அப்பாவும், நீங்களும் பிரிந்து போய் விட்டீங்க. மறுபடியும் உங்களால் அவரைப் பார்க்க முடியுமா? சவிதாவின் கல்யாணத்திலேயோ, வேறு ஏதாவது சந்தர்ப்பத்திலேயோ அவருடன் சேர்ந்து உங்களால் வேலை செய்ய முடியுமா? ஒன்றாக உட்கார்ந்து பேச முடியுமா? இன்னொருத்தருக்கு சொல்வது சுலபம். எதுவும் தன் வரையில் வந்தால்தான் புரியும்.”
திகைத்துப் போய் நின்று விட்ட வசந்தியைப் பார்த்ததும் இரக்கம் பிறந்ததோ என்னவோ “அம்மா! உங்களிடம் எனக்கு மதிப்பு அதிகம். சவிதா என்றால் எனக்கும் பிடிக்கும். ஆனால் எங்க இருவரின் எண்ணங்கள் வேறு வேறு. ஒரு விஷயத்தை சவிதா எப்படி யோசிப்பாள் என்று எனக்குத் தெரியும். சவிதாவுக்கு கொள்க்கையிடம் பிடிமானம் இல்லை. வேலை நடப்பது அவளுக்கு முக்கியம். எனக்கு கொள்க்கைதான் முக்கியம். எப்போதாவது சந்தித்தால் பேசுகிறேன்.”
வசந்தி கொஞ்சம் தேறிக் கொண்டாள். “உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடியவள் இல்லை. ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்த விருப்பம் கூட உங்கள் கொள்க்கைக்கு மாறுபட்டதோ என்னவோ எனக்கு தெரியாது.”
வீணாவுக்கும் வசந்திக்கும் வார்த்தைகள் முடிந்து விட்டாற்போல் தோன்றியது. என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“எங்கே போகிறாய்?” வசந்தி கேட்டாள்.
“வீட்டுக்குத்தான்.”
“கொஞ்ச நேரம் எங்க வீட்டுக்கு வரக் கூடாதா?”
“நீங்களே எங்கள் வீட்டுக்கு வரலாம் இல்லையா?”
“எல்லாவற்றுக்கும் போட்டீயா? சரி வா. உங்கள் வீட்டுக்கு போகலாம்” என்றாள் வசந்தி.
வசந்தி இப்படி சொல்லுவாள் என்று எதிர்பார்க்காத வீணா சங்கடத்தில் ஆழ்ந்தாள். “பஸ்ஸில் போகலாமா?”
“வேண்டாம். ரிக்ஷ¡வில் போகலாம்” என்றபடி ரிக்ஷ¡வுக்காக குரல் கொடுத்தாள் வசந்தி.
“நன்றாக படிக்கிறாயா? சவிதா பகல் முழுவதும் லைப்ரரியில் உட்கார்ந்திருக்கிறாள். உங்க பரீட்சைகளின் பரபரப்பை பார்த்தால் எனக்கும் ஏதாவது பரீட்சை எழுதினால் தேவலை போலிருக்கிறது.” வசந்தி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“எழுதுங்களேன்.” வீணாவும் சேர்ந்து சிரித்தாள்.
“வாழ்க்கை எனக்கு வைத்த பரீட்சையுடனே எனக்கு சரியாக இருக்கு. இனி யூனிவர்சிட்டீ பரீட்சைகளை எங்கிருந்து எழுதுவது? அந்த பரீட்சையில் பாஸ் ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து இன்னொரு பரீட்சை வைத்து விட்டார்கள். இதில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இல்லை.”
“நீங்க இந்த விஷயத்தை இவ்வளவு சென்சிடிவ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாதும்மா. நட்பை விட முக்கியமான கொள்க்கைக்காக எங்களுடைய நட்பு முறிந்துவிட்டது.”
“அப்படி முறிந்து போக வேண்டிய தேவையில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. சென்சிடிவ்வோ, அஞ்ஞானமோ உங்கள் பரிபாஷையில் வேறு ஏதோ எனக்குத் தெரியாது. மூன்று உலகங்களின் கொள்க்கைக்காக உங்களுடைய நட்பை இழப்பானேன்? நம் நாட்டில் அவசரமாக செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியோ, உங்களுடைய வழிமுறைகளைப் பற்றியோ உங்களுக்குள் கருத்து வேற்றுமை இருந்தால் என்னால் புரிந்துகொள்ள முடியும். அப்படி எதுவும் இல்லை இல்லையா? ஒருவரிடம் ஒருவருக்கு இருக்கும் பிரியத்தை குழி தோண்டி புதைப்பானேன்?”
“உங்களுக்கு இதெல்லாம் புரியாதும்மா.”
“வீணா! எனக்கு கோபம்தான் வருகிறது. எனக்கு புரியாமல் இருப்பதற்கு இதில் என்ன இருக்கிறது? எனக்கும், மக்களுக்கும், யாருக்கும் புரியாத விஷயங்களை, யாருக்கும் தெரியாத விஷயங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போறீங்க? உங்க கட்சியில் பிரிவு வந்தால் அதை புரிய வைக்க வேண்டியது உங்களுடைய கடமை. அர்த்தமே இல்லாத காரணங்களை சொல்லி நாங்கள் பிரிந்து போய் விட்டோம் என்று சொன்னால் நாங்கள் வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கணுமா? நண்பர்களாக ஒன்றாக சேர்ந்து வேலை செய்தவர்கள் பிரிந்து போய் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதுதான் உங்களுடைய வேலையா? நேற்று சவிதா சொல்லிக் கொண்டிருந்தாள், ராமமூர்த்தி பத்து வருடங்களாக தவறு செய்து கொண்டிருக்கிறார் என்று. பத்து வருடங்களாக தவறு செய்து கொண்டிருந்தால் ஏன் யாரும் எதுவும் சொல்லவில்லை? இப்போ திடீரென்று அவரை விலக்குவது, அவர் தனியாக வேறு கட்சியை தொடங்குவது, இதெல்லாம் என்ன?”
வீணா வசந்தியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் வீடு நெருங்கிவிட்டது. “நான் இந்த வார்த்தைகளை சொன்னதற்காகவே உனக்கு எதிரியாகி விடுவேனா? இந்த வார்த்தைகளை நான் பிரியத்தால் சொல்கிறேனோ, கோபத்தால் சொல்கிறோனோ உங்களுக்கு புரியவில்லை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற அகம்பாவத்தில் இருக்காதீங்க. உங்களுக்கு தெரியாததும் சிலது இருக்கும். உங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு புரியும் விதமாக செய்யுங்கள்.”
வீணா மௌனமாக வீட்டுக்குள் நடந்தாள்.
வீணாவின் தாய் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தாள். வசந்தியைப் பார்த்ததும் “நானே உங்க விட்டுக்கு வரணும்னு நினைத்திருந்தேன். நீங்க இங்கே வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இது வரையில் உங்களை சந்திக்காமல் போனது என்னுடைய தவறுதான். மன்னித்து விடுங்கள்” என்றாள்.
வசந்தியும் முறுவலித்து விட்டு “வேலைக்குப் போவதால் உங்களால் முடிந்திருக்காது. நானே வந்திருக்க வேண்டும். தவறு என்னுடையதுதான்” என்றாள்.
“என்ன? முதல் சந்திப்பிலேயே தவறுகளை ஒப்பிக்கிறீங்க?” என்றாள் வீணா குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொண்டே.
“எங்களுக்கு சுய விமரிசனம் செய்து கொள்ளத் தெரியும்” என்றாள் வசந்தி கிண்டலாக.
“அம்மாடியோவ்! உங்களுக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியும் என்று தெரியாமல் போய்விட்டதே.” வீணா சொன்னாள்.
வசுந்தராவும், வசந்தியும் கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக் கொண்டார்கள். வசந்தி விடை பெற்றுக் கொண்டாள்.
“சவிதாவை வரச் சொல்லுங்கள்” என்றாள் வசுந்தரா.
“நீங்களும் வீணாவும் எங்கள் வீட்டுக்கு வாங்க” என்றாள் வசந்தி.
வீட்டுக்கு போன பிறகு சவிதாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள் வசந்தி.
சவிதா வியப்புடன் தாயைப் பார்த்தாள். “நீ ரொம்ப மாறி விட்டாய் அம்மா! இப்படி எல்லாம் பேசத் தெரியும் என்று நான் நினைக்கவில்லை.”
“தேவை வந்தால் எல்லாம் தானாகவே வரும். கம்பச்சித்திரமா என்ன?” வசந்தி மகளுக்கு முன்னால் வெட்கப் படுவதற்கு என்னவோ போல் இருந்தது.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
ராமமூர்த்தி இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பிப் போய் விடுவான் என்ற போது திருச்சியிலிருந்து சாந்தாவும் ரோகிணியும் வந்தார்கள். ராமமூர்த்தி வந்ததிலிருந்து வசந்தி அவர்களுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டாள்.
வாரத்திற்கு ஒரு கடிதம் எழுதும் வசந்தியிடமிருந்து பதினைந்து இருபது நாடகள் கழிந்தும் கடிதம் வராமல் போனாதால் ரோகிணியும் சாந்தாவும் கவலைப்பட்டார்கள். மறுபடியும் டிப்ரெஷனில் விழுந்து விட்டாளோ என்று பயந்து நேரில் பார்ப்பதற்காக வந்தார்கள்.
சவிதா ஸ்டேஷனுக்கு சென்று அவர்களை அழைத்துக் கொண்டு வந்தாள்.
ரோகிணியைப் பார்த்ததுமே வசந்தி அவளை உடனே ராமமூர்த்தியிடம் அழைத்துச் சென்றாள்.
“நீ முதலில் பாரு இந்த ஆளை” என்று அவசரப்படுத்தினாள்.
ரோகிணி எல்லா ரிப்போர்டுகளையும், பயன்படுத்திய மருந்துகளையும் பார்த்துவிட்டு சிகிச்சை சரியானதுதான் என்ற பிறகுதான் திருப்தி அடைந்தாள்.
சாந்தா வசந்தியை வித்தியாசமாக பார்த்தாள். அன்று முழுவதும் அவளுடன் கழித்த பிறகு வசந்தியடம் ஏற்பட்ட மாறுதல் இருவருக்கும் புரிந்தது.
“நீ இந்த அளவுக்கு மாறுவாய் என்று நான் ஒரு நாளும் நினைக்கவில்லை. பரவாயில்லை. தேறிக் கொண்டு விடுவாள் என்று ரோகிணி சொன்னாலும் தற்கொலை செய்து கொண்டு விடுவாயோ என்று பயந்தேன்” என்றாள் சாந்தா.
“இதையெல்லாம் சவிதா சாதித்தாள்.” ரோகிணி சொன்னாள்.
“சவிதாவுக்கு இந்த அரசியல், இந்த சூழல் இருந்திருக்காவிட்டால் வசந்தி என்னவாகியிருப்பாள்?” சாந்தா கேட்டாள்.
“என்னவாகியிருப்பேனோ தெரியாது. ஆனால் எதுவும் ஆகக் கூடாது என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கணவன், குழந்தைகள் தவிர வேறு வாழ்க்கையும் இருக்கும். அந்த வாழ்க்கை நன்றாகவும் இருக்கும் என்று தெரிந்தால் யாரும் என்னைப் போல் குடும்பத்தில் புதைந்து போய்விட மாட்டார்கள். அந்த அளவுக்கு புதைந்து போகாமல் இருந்தால் அந்த குடித்தனத்திற்காக உயிரை விட்டு விட மாட்டார்கள். அரசியல் மட்டும்தானா? உங்க இருவருக்கும் உங்க ஸ்டூடென்ட்ஸ், உங்க நோயாளிகள்… அவர்களுக்கு உங்களுடைய இருப்பு எவ்வளவு முக்கியம்? நம்முடைய வாழ்க்கை வெறும் வீட்டு வேலைகளுடன் நின்று போய்விடாமல் சமுதாயதிற்கும் பயன்பட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ வார்த்தைகளில் சொல்ல முடியாது” என்றாள் வசந்தி.
“ஆனால் அரசியலில் எனக்கு பல சந்தேகங்கள் இருக்கு. நீ மறுபடியும் கஷ்டங்களில் விழுந்துவிடுவாயோ என்று பயமாக இருக்கு.” சாந்தா சொன்னாள்.
“கஷ்டங்கள்! நம் சுற்றிலும் இருக்கும் வாழ்க்கை நம்முடையதாக இருக்க வேண்டுமே ஒழிய கஷ்டங்களுக்கு என்ன வந்தது? முன்பு ஒரு தடவை பண்டிகைக்கு குழந்தைகளுக்கும் எனக்கும் புத்தாடைகள் இல்லை என்றால் அதுவே எனக்கு கஷ்டமாக இருந்தது. நல்ல நாளில் குழந்தைகளுக்கு கூட புத்தாடைகளை அணிவிக்க முடியாமல் போய்விட்டேனே என்று பலநாட்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போ கஷ்டங்களுக்கும் சுகங்களுக்கும் புதிய அர்த்தங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றாள் வசந்தி.
“கஷ்டமோ சுகமோ ஏதோ ஒன்று வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கணும் சாந்தா! குட்டையில் தேங்கிவிட்ட நீரை போல் ஒரே இடத்தில் நின்று விடக் கூடாது. வாழ்க்கையை பலவிதமான அனுபவங்களுடன் விசாலமாக மாற்றிக் கொள்ளணும், பெண்களின் வாழ்க்கையில் வாய்ப்புகள் குறைவு. அரசியலை பற்றி எனக்கு முழுவதுமாக தெரியாது என்றாலும், வசந்தியை இந்த அளவுக்கு ஊக்கம் தந்தவை நல்லதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது” என்றாள் தோகிணி.
சாந்தா தன்னுடைய கல்லூரி மாணவிகளில் சிலர் அரசியலில் ஈடுப்பட்டிருந்தாலும் எப்படி லட்சியத்துடன் இருக்கிறார்களோ, மற்றவர்கள் எப்படி தான்தோன்றித்தனமாக அலைந்துக் கொண்டிருக்கிறார்களோ விவரமாக சொன்னாள்.
வசந்தி ராஜலக்ஷ்மியின் விஷயத்தை அவர்கள் இருவரிடமும் சொன்னாள். பெண்கள் இவ்வளவு தைரியமாக, நேர்மையுடன், புத்திசாலித்தனத்துடன் இருப்பதை கேட்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் இருந்த இரண்டு நாட்களும் சிரிப்பும் கும்மாளமுமாக கழிந்து விட்டன.
“உங்க சிநேகிதிகள் வந்த பிறகு என்னை மறந்தே போய் விட்டீங்க” என்றான் ராமமூர்த்தி சிரித்துக் கொண்டே.
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களுக்கு கொஞ்சம் தெம்பு வந்ததும் என்னை மறந்து விட்டீங்க. உங்க படிப்பு. எழுத்து என்று மூழ்கிவிட்டீங்க” என்றாள் வசந்தி தானும் சிரித்துக் கொண்டே.
“நாளை மறுநாள் நான் கிளம்புகிறேன்” என்றான் அவன்.
“எங்கே?” என்றாள் வசந்தி வியப்புடன்.
“ஏதாவது ஒரு இடத்திற்கு போய்த்தானே ஆகணும். உடல் நிலை சரியாகி விட்ட பிறகும் இங்கே தங்கியிருப்பது நியாயம் இல்லை.”
“இன்னும் பத்து நாளாவது ஓய்வு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.” கவலையுடன் சொன்னாள். ராமமூர்த்தி போய் விடுவான் என்ற நினைப்பே அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
“ஏற்கனவே ஓய்வு அதிகமாகிவிட்டது. செய்ய வேண்டிய வேலைகள் நின்றுவிட்டன. தொடர்ந்து வேலை செய்தால் தவிர முடியாது.”
“மறுபடியும் ஊண் உறக்கம் இல்லாமல் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளப் போறீங்களா?”
“பணிவிடை செய்து தேற்றுவது நீங்கதான் இருக்கீங்களே? எதற்காக கவலைப்படணும்?”
இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த போது சவிதா வந்தாள்.
“ராமமூர்த்தி நாளை மறுநாள் புறப்படுகிறாராம்.” எவ்வளவு அநியாயம் பார்த்தாயா என்பது போல் சொன்னாள் சவிதாவிடம்.
“அம்மா உங்களுக்காக கவலைப்படுகிறாள். உங்களுக்கு பணிவிடை செய்து ரொம்ப பழகிவிட்டாள். தூக்கத்திலும் அதே புலம்பல். ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் ஏரியாவில் யாருக்காவது உடல்நலம் சரியாக இல்லை என்றால் அம்மாவிடம் அனுப்பிவிடுங்கள்” என்றாள் சிரித்துக் கொண்டே.
ஒருநாள் மாலையில் பீச்சுக்கு போகலாம் என்று சவிதாவும் வசந்தியும் கிளம்பினார்கள். வீட்டை பூட்டும் போது சந்திரசேகர் வந்தான். “எங்கே புறப்பட்டீங்க?”
“சும்மா பீச் வரைக்கும்” என்றாள் சவிதா.
வசந்திக்கு சந்திரசேகரைப் பார்த்ததும் ராஜலக்ஷ்மி அவனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள் என்று புரிந்துவிட்டது. என்ன பதில் சொல்லப் போகிறான் என்று பதற்றமும், ஆர்வமும் அவள் மனதில் பரவியிருந்தது.
“வாங்க. நானும் உங்களுடன் வருகிறேன்” என்றபடி கேட்டைத் திறந்தான்.
மூவரும் போய் பீச்சில் உட்கார்ந்து கொண்டார்கள். மாலை நேரத்து வெயில் கடல்நீரின் மீது பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. வசந்தியின் மனதிலும் கடல் அலைகளை போல் உத்வேகம் நிரம்பியிருந்தது.
சவிதா ஆர்வமும், பரபரப்பும் கலந்த பார்வையுடன் சந்திரசேகரைப் பார்த்துக் கொண்டே “சொல்லுங்கள்” என்றாள்.
“சற்று முன்னால்தான் ராஜலக்ஷ்மிக்கு கடிதம் எழுதி போஸ்ட் செய்தேன். உங்களிடமும் பேச வேண்டும் என்று நினைத்து இப்படி வந்தேன்” என்றான் கொஞ்சம் தயங்கிக் கொண்டே.
வசந்தி பொறுமையற்றவளாக நகர்ந்தாள்.
“ராஜலக்ஷ்மி எழுதிய கடிதத்தைப் பார்க்கிறீங்களா?” அவன் ஜேபியிலிருந்து கடிதத்தை எடுக்கப் போனான்.
“தேவையில்லை. அவள் என்ன எழுதியிருப்பாள் என்று எனக்குத் தெரியும். நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதைச் சொல்லுங்கள்” என்றாள் சவிதா.
“நான் என்ன சொல்லப் போகிறேன்? ராஜலக்ஷ்மி எவ்வளவு சீக்கிரமாய் என் காதலை ஏற்றுக்கொண்டால் அவ்வளவு நல்லது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
மனதிலிருந்து பெரிய பாரம் நீங்கிவிட்டாற்போல் வசந்தி மூச்சை விட்டுக் கொண்டாள்.
“ராஜீ உங்கள் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று உங்களுக்கு புரியவில்லையா?” சவிதா கேட்டாள்.
சந்திரசேகர் புரியாதவன் போல் பார்த்தான்.
“உங்களுடைய பிரபோசலை ஏற்றுக் கொள்ளும் உத்தேசம் இல்லை என்றால் அந்த விஷயத்தை உங்களிடம் ஏன் சொல்லப் போகிறாள்?”
அதைக் கேட்டதும் சந்திரசேகரின் முகம் மலர்ந்துவிட்டது. அவன் கண்களில் தென்பட்ட மலர்ச்சியைப் பார்த்ததும் வசந்திக்கு ராஜலக்ஷ்மியைப் பற்றிய கவலை முழுவதுமாக நீங்கிவிட்டது.
“ராஜலக்ஷ்மி என்னிடம் அந்த விஷயத்தை ஒளிமறைவில்லாமல் சொன்னதற்கு எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு. அவளுடைய நேர்மை, என் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கை இவை எல்லாம் புரிந்தது. ராஜலக்ஷ்மி போன்ற பெண் கிடைப்பது உண்மையிலேயே என்னுடைய அதிர்ஷ்டம்தான்” என்றான்.
“நீங்க ரொம்ப ஆவேசத்தில் இருக்கீங்க. இந்த ஆவேசம் வாழ்நாள் முழுவதும் இருக்குமா?” கிண்டலாக கேட்பது போல் கேட்டாள் சவிதா.
“அப்படி என்றால்?” அடியுண்டவன் போல் பார்த்தான் சந்திரசேகர்.
“நீங்க இப்போ ஏதோ தியாகம் செய்வது போல், தவறு செய்து விட்ட ஒரு பெண்ணை மன்னித்து ஏற்றுக் கொள்வது போல் திக்குமுக்காடுவீங்க. பின்னால் நீ தவறு செய்து விட்டாய், நீ அப்படிப் பட்டவள், ஒழுக்கம் இல்லாதவள் என்று வாழ்நாள் முழுவதும் குத்திக் காண்டே இருப்பீங்க. அப்படி செய்வதாக இருந்தால் நீங்க ராஜீயை பற்றி மறந்து போவது நல்லது.” கடினமான குரலில் சொன்னாள் சவிதா.
“என்ன பேச்சு இரு சவிதா? ஏன் இப்படிப் பேசுகிறாய்?” வசந்தி பதற்றமடைந்தாள்.
“பரவாயில்லைங்க. அந்த வார்த்தைகளை கேட்டுக் கொள்வதற்கு ஒரு ஆணாக எனக்கு தகுதி இருக்கிறது. ஆனால் ஒரு ஆண்மகனாக இருக்கக் கூடாது என்று தீவிரமாக முயற்சி செய்பவர்களில் நானும் ஒருவன். ராஜலக்ஷ்மி தவறு செய்து விட்டாள் என்றோ, களங்கமடைந்து விட்டாள் என்றோ நான் நினைக்கவில்லை.”
“பின்னே ராஜலக்ஷ்மி நேர்மையானவள் என்று எப்படி நினைக்கிறீங்க? தான் செய்த தவறை உங்களிடம் தெரிவித்தாள் என்றுதானே? அசல் அந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? ஒருக்கால் ராஜீ ஏதாவது காரணத்தினால் உங்களிடம் அந்த விஷயத்தை சொல்லாமல் போனால் நேர்மையில்லாதவள் போலவும், ஏமாற்றியது போலவும் ஆகி விடுமா? அந்த விஷயத்திற்கு அவ்வளவு முக்கியத்தும் இருக்கு என்று நீங்க நினைக்கிறீங்களா? ஒரு மனுஷியை அந்த ஒரு விஷயத்தைக் கொண்டு மட்டுமே எடைபோடுவது, நல்லது கெட்டது முடிவு செய்து சரியாகுமா?”
சவிதாவின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த வசந்திக்கு வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட்டன. இந்தக் காலத்து பெண்கள் எவ்வளவு சுயகௌரவத்தோடு இருக்கிறார்கள்? எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்? எவ்வளவு தைரியமாக மனதில் இருப்பதை எல்லாம் வெளியில் சொல்கிறார்கள்? பெண்கள் எல்லோரும் இப்படி இருக்க முடிந்தால் எத்தனை பிரச்னைகள் தீர்ந்துவிடும்? என்றெல்லாம் யோசித்தபடி சவிதாவை புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சந்திரசேகர் யோசனையில் ஆழ்ந்துவிட்டான். சற்று நேரம் கழித்து தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் சொன்னான்.
“நவீனுக்கும் ராஜலக்ஷ்மிக்கு நடுவில் நடந்த விஷயம் ரொம்ப முக்கியமானது என்றோ, அது தான் ராஜலக்ஷ்மியின் நல்லதை கெட்டதை முடிவு செய்யும் என்றோ நான் நினைக்கவில்லை. ஆனால் அந்த விஷயத்திற்கு சமுதாயத்தில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. ராஜலக்ஷ்மி அல்லாமல் வேறு பெண்ணாக இருந்தால் அந்த விஷயத்திற்கு தற்கொலை செய்து கொண்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதே போல் சாதாரணமாக ஆண்கள் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வார்களோ உங்களுக்குத் தெரியும். ராஜலக்ஷ்மி இந்த விஷயத்தை எடுத்துக் கொண்ட விதம், நான் எப்படிப்பட்ட ஆண்மகனோ தெரிந்து கொண்ட பிறகுதான் என்னைப் பற்றி யோசிக்கணும் என்ற அவளுடைய அணுகுமுறையும் எனக்குப் பிடித்திருந்தன. இந்த காரணங்களுக்காகத்தான் நான் அவளை நேர்மையானவள் என்று சொன்னேனே தவிர வேறு எண்ணம் இல்லை. அவள் ஏதோ தவறு செய்துவிட்டாள் என்றோ, நான் அவள் வாழ்க்கையை சீர் திருத்துகிறேன் என்ற பிரமையோ எனக்கு இல்லை. என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்” என்றான் சீரியஸாக.
சவிதா அவனுடைய பதிலைக் கேட்டு சமாதானமடைந்து விட்டவள் போல் மௌனமாகிவிட்டாள்.
“எப்போ திருமணம் செய்துக் கொள்வதாய் இருக்கீங்க?” வசந்தி உரிமை எடுத்துக் கொண்டு கேட்டாள்.
“அம்மா! உனக்கு எல்லாமே அவசரம் தான்” சவிதா சலித்துக் கொண்டாள்.
“ராஜலக்ஷ்மி எப்போ சொன்னால் அப்போ. எல்லாம் அவளுடைய விருப்பத்தை பொறுத்துதான் நடக்கும்” என்றான் சந்திரசேகர்.
“உங்களுடைய வேலை ஸ்திரமானதுதானா?” சவிதா கேட்டாள்.
“பேஷாக. பர்மண்ட் ஜாப். நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கும் வேலை” என்றான். அவன் ஒரு வங்கியில் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறான்.
பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு வருடம் கழிந்துவிட்டது. சவிதாவுக்கு மூன்றாம் ஆண்டு பரீட்சைகள் முடிந்து விட்டன. விடுமுறையில் பதினைந்து நாட்கள் சென்னைக்குப் போய் அப்பாவுடன் இருந்துவிட்டு வந்தாள். வசந்தி மனதில் எந்த வருத்தமும் பட்டுக் கொள்ளாமல் சவிதாவை அனுப்பி வைத்தாள். வசந்திக்கு இப்போ கை நிறைய வேலை. வீட்டில் எப்போதும் யாராவது இருந்துகொண்டே இருப்பார்கள். சவிதாவின் சிநேகிதிகள், யூனியனில் வேலை பார்ப்பவர்கள், அவ்வப்பொழுது வரும் கட்சி தொண்டர்கள், அடுத்த ஊர்களிலிருந்து வரும் மாணவர் இயக்கத்தின் மெம்பர்கள். வீட்டில் எப்போதும் சலசலப்புதான்.
வசந்திக்கு இப்போ வெளியே போய் செய்ய வேண்டிய காரியங்கள் கூட இருந்தன. இதனால் அவளுக்கு தனிமை என்றால் என்னவென்று கூட மறந்து போய்விட்டது. அதனால்தான் சவிதா “இந்த பதினைந்து நாட்களும் ரோகிணி ஆன்டீயிடம் போய் இருந்து விட்டு வாயேன்” என்று சொன்ன போது ஒப்புக் கொள்ளவில்லை.
“வீட்டை பூட்டிக் கொண்டு போய் விட்டால் எப்படி? யாருக்கு என்ன தேவை ஏற்படுமோ? வேண்டுமானால் நீ சென்னையிலிருந்து வந்த பிறகு போய்க் கொள்கிறேன்” என்றாள்.
சவிதா நிம்மதியாக சென்னைக்கு போய்விட்டு வந்தாள். சென்னையில் என்ன விசேஷம் என்று வசந்தி தனியாக எதுவும் கேட்கவில்லை. சவிதா தானாகவே அப்பாவைப் பற்றி நான்கு வார்த்தைகள் சொன்னாள். “அம்மா! மாமா வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். ரொம்ப போர் அடித்துவிட்டது. பாவம் சுமித்ரா! ரொம்ப மோசமாக இருக்கிறாள். அவளுக்கு மெடிகல் என்ட்ரன்ஸில் சீட் வராததால் மாமி தினமும் அவளை அர்ச்சனை செய்து கொண்டே இருக்கிறாளள். அதைக் கேட்டுக் கேட்டு அந்தப் பெண்ணுக்கு தான் எதற்கும் லாயக்கு இல்லாதளோ என்ற தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது. இருபத்தி நான்கு மணிநேரமும் படிப்புதான். மாமாவின் வீட்டில் பேப்பர் கூட வரவழைப்பதில்லை. ஒரு துண்டு காகிதம் தென்பட்டாலும் அது மெடிகல் என்ட்ரன்ஸ¤க்கு சம்பந்தப்பட்டதுதான். தமாஷ் என்ன தெரியுமா? இரவில் எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையில் மாமாவீட்டு ஏரியாவில் கரெண்டு போகும். அப்போ பஜ்ஜர் செஷன் தொடங்கும். மாமாவும் மாமியும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் புத்தகத்தை பார்த்துக் கொண்டே கேள்விகளை கேட்பார்கள். சுமித்ராவும் டக் டக் என்று எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள். சீட் ஏன் வரவில்லையோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.” அந்த காட்சி நினைவுக்கு வந்ததும் சவிதா விழுந்து விழுந்து சிரித்தாள்.
“போகட்டும் விடு. எப்படியாவது சுமித்ராவை டாக்டராக்க வேண்டும் என்பது லக்ஷ்மியின் தவிப்பு. படிக்க வைக்கவில்லை என்றால் எப்படி?”
“இப்படி படிக்க வைத்தால் ஒரு நாளும் சீட் வரப் போவதில்லை. ஒருக்கால் சுமித்ரா டாக்டர் ஆனாலும் பிராக்டீஸ் செய்யப் போவது அவளுடைய அப்பா அம்மாதான். யாருக்கு ஆபரேஷன் செய்யணும், யாருக்கு வைத்தியம் பார்க்கணும் என்று எல்லாம் அவர்களே முடிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன். இப்போ அவர்கள் எதை சாப்பிட சொன்னால் அதைத்தான் சாப்பிடுகிறாள். எந்த ஆடைகளை உடுத்தச் சொன்னால் அதைத்தான் போட்டுக் கொள்கிறாள். அதைப் பார்க்கும் போது எனக்கு பித்ரு பக்தி, மாத்ரு பக்தியை விட ஹீனமானது வேறு இல்லை என்று தோன்றியது.”
“அப்படி என்றால் உனக்கு என் மீது பக்தி இல்லை. அப்படித்தானே?” வசந்தி முறுவலுடன் கேட்டாள்.
“பக்தி இல்லவே இல்லை. அம்மாவிடம் எனக்கு அன்பு….. பிரியம்.” தாயைக் கட்டிக் கொண்டாள் சவிதா.
“சுமித்ராவும் அம்மாவிடம் அன்பு இருப்பதால்தான் அதையெல்லாம் செய்கிறாளோ என்னவோ?”
“அப்படி எதுவும் இல்லை. உள்ளூர திட்டிக் கொண்டே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு செய்கிறாள். தன்னுடைய பேச்சு எடுபடாது என்று பயந்து கொண்டே செய்கிறாள். அப்படி செய்வதை விட அவங்கம்மா பேச்சை மறுத்துவிட்டு தன்னுடைய விருப்பம் போல் செயல்பட்டால்தான் அவளுக்கு அம்மாவிடம் அன்பு இருப்பதாக அர்த்தம்.”
“உன்னுடையது எல்லாமே தலைகீழ் விவகாரம்.”
“என்னுடையது மட்டுமே இல்லை. உலகமே இப்படித்தான் இருக்கு.” சவிதா சண்டைக்கு தயாரானாள்.
“சரிதான. ஒப்புக்கொள்கிறேன். அது போகட்டும். கடந்த பதினைந்து நாட்களாய் வீணா ஒரு தடவை கூட வரவில்லை. என்ன நடந்ததோ என்னவோ. இன்று மாலை போய்விட்டு வருவோம். நான் ஒண்டியாக போவானேன் என்று சும்மாயிருந்து விட்டேன்” என்றாள் வசந்தி.
“ஒரு தடவை கூட வரவில்லையா?” சவிதா யோசனையில் ஆழ்ந்தாள். “யாரெல்லாம் வந்தார்கள்? ரமணன் வந்தானா?”
“வந்தான். இரண்டு முறை. பத்து நிமிடங்கள் இருந்துவிட்டு போனான். அவ்வளவுதான்.”
அன்று மாலை வசந்தியை மறுத்துவிட்டு தனியாக கிளம்பிப் போன சவிதா இரவு முழுவதும் வீட்டுக்கு வரவில்லை. வசந்திக்கு பழக்கம்தான் என்றாலும் முன்கூட்டியே சொல்லாததால் பதற்றமாக இருந்தது.
நள்ளிரவு தாண்டிய பிறகு பார்ட்டீ மெம்பர் ஒருத்தன், ஏற்கனவே பலமுறை வந்திருப்பவன் வந்தான். வசந்தியிடம் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தான். வசந்திக்கு அவன் சொன்னதில் பெரும்பாலான விஷயங்கள் புரியவில்லை. பார்ட்டீயில் நிறைய தவறுகள் நடந்து வருவதாக சொல்கிறான் என்று மட்டும் புரிந்தது.
“இந்த விஷயங்கள் எல்லாம் சவிதாவிடம் சொல்லுங்கள். இந்த பேப்பர்கள், கடிதங்கள் எல்லாம் அவளிடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு விடியற்காலையில் அவன் கிளம்பிப் போனான்.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
இரவு பன்னிரெண்டு மணி தாண்டிவிட்டாலும் சவிதாவும் வசந்தியும் இன்னும் உறங்கவில்லை. அவசரமாக சில காகிதங்களை ஸைக்லோஸ்டைல் செய்து தரவேண்டும் என்று கட்சிக்காரர்கள் கொடுத்து விட்டு சென்றிருந்தார்கள்.
வசந்திக்கு இந்த வேலை நன்றாக பழகிவிட்டது. ஆரம்பத்தில் ஒரு முறை அவசரமாக தேவைப்பட்டதால் சமயத்திற்கு யாரும் இல்லாததால் வசந்தியைக் கொண்டு பத்து பக்கங்களை ஸைக்லோஸ்டைல் செய்ய வைத்தார்கள். அதற்கு பிறகு வசந்திக்கு அந்த வேலை பழகிவிட்டது. மாதத்திற்கு பத்து நாட்களாவது அந்த வேலை இருக்கும். இவையெல்லாம் சவிதா வேலை பார்க்கும் கட்சியின் கொள்க்கைகளுக்கு சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகள்.
ஸ்டென்ஸில் பேப்பர் மீது எழுதி அனுப்புவார்கள். வசந்தி அவற்றை வெள்ளைக் காகிதத்தில் பதித்துத் தருவாள். வசந்திக்கு அந்த இயந்திரமும், மையும் இரண்டு மாதங்களில் பழக்கமாகிவிட்டன.
வசந்திக்கு அந்த காகிதத்தில் எழுதியிருப்பதைப் படித்தால் எதுவும் புரியவில்லை. சவிதாவிடம் கேட்ட போது “அதெல்லாம் புரிய வேண்டும் என்றால் முதலில் சில புத்தகங்களைப் படிக்கணும் அம்மா” என்றபடி சில புத்தகங்களை கொடுத்தாள். அவற்றை படித்தாலும் வசந்திக்கு புரிந்தாற்போல் இருக்கவில்லை. பார்ட்டீக்காரர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய ரிப்போர்டுகள் மட்டும் புரிந்தண. அவற்றைப் படித்தால் ரொம்ப உற்சாகமாக இருந்தது.
சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்துப் போராடுவது அவசியம். இதுதான் வசந்திக்கு முக்கியமாக புரிந்தது. சவிதாவும் மற்றவர்களும் பாடும் பாட்டுக்கள், மாணவர் இயக்கத்தின் மூலமாக அவர்கள் செய்யும் காரியங்கள், நடத்தும் கூட்டங்கள் … வசந்திக்கு இவற்றில் ஆர்வம் அதிகரித்தது.
அன்று இரவும் ஸைக்லோஸ்டைல் செய்ய வேண்டிய பேப்பர்களை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள் வசந்தி. சவிதாவும் உதவி செய்து கொண்டிருந்தாள். யாரோ கதவைத் தட்டினார்கள். வசந்திக்கு பயமாக இருந்தது. சமீபகாலமாய் போலீஸாரைப் பற்றிய கவலை அதிகரித்திருந்தது. என்றாவது ஒரு நாள் போலிஸார் சவிதாவைத் தேடிக் கொண்டு வருவார்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி, உறுதியாக நினைத்தாள். நள்ளிரவு நேரத்தில் கதவு சத்தப்படுத்தியதும் பதற்றத்துடன் இயந்திரத்தையும் பேப்பர்களையும் கட்டிலுக்கு அடியில் தள்ளினார்கள். கதவு சத்தம் மேலும் கூடியது. சவிதாவை “நீ இரு” என்று சொல்லிவிட்டு வசந்தி போய் கதவைத் திறந்தாள்.
நான்கைந்து பேர் தடதடவென்று உள்ளே வந்தார்கள். வீட்டில் முன்னால் கார் ஒன்று நின்றிருந்தது. வசந்திக்கு பயத்தால் வாயில் வார்த்தை வரவில்லை.
வசந்தியில் நிலைமையைப் பார்த்து விட்டு ஒருவன் “சவிதா இல்லையா?” என்று கேட்டான். அதற்குள் ரமணன் உள்ளே வந்தான். சவிதா வெளியே வந்தாள். “நீங்களா? வாங்க வாங்க. உட்காருங்கள். எப்படி இருக்கீங்க?” என்று பரபரத்தாள்.
வந்தவர்களில் ரமணனைப் பார்த்த பிறகு வசந்தியின் பயம் குறைந்துவிட்டது. “நான் போலீஸார் என்று நினைத்துவிட்டேன்” என்றாள் ரமணனிடம்.
வந்தவர்களில் பெரியவர் ஒருத்தர் சவிதாவிடம் சொன்னார். “ராமமூர்த்தியின் நிலைமை கொஞ்சம் கூட நன்றாக இல்லை. என்ன வியாதி என்று அந்த ஊர் டாக்டருக்கு தெரியவில்லை. மேற்கொண்டு அங்கே ஒரு நாள் இருந்தாலும் ஆபத்து என்று தோன்றியது. ஹாஸ்பிடலில் சேர்ப்பது நல்லது இல்லை. இங்கே தங்க வைத்து தெரிந்த டாக்டரிடம் வைத்தியம் பார்த்தால் தேவலை என்ற எண்ணத்துடன் அழைத்து வந்தோம். முன்கூட்டி தகவல் தெரிவிப்பதற்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது. அவன் காரில் இருக்கிறான். இங்கே தங்க வைக்கலாமா? பரவாயில்லையா?”
சவிதா சுறுசுறுப்பாக கதவை நோக்கி நடந்து கொண்டே “வாங்க. அழைத்து வருவோம்” என்றாள்.
நான்கு பேர் சேர்ந்து ஒரு நபரை தூக்கிக் கொண்டு வந்தார்கள். சிவப்பாய், ஒல்லியாக இருந்த அவனுக்கு நினைவு இருக்கவில்லை. அவனை உள்ளே கட்டில் மீது படுக்க வைத்தார்கள்.
“துணையாக ரமணன் இங்கே இருப்பான். நாளை காலையில் டாக்டரை வரவழைத்து காட்டுங்கள்” என்று சொல்லிவிட்டு ரமணனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள்.
சவிதா ராமமூர்த்தியின் நெற்றியில் கையைப் பதித்து “ஜுரம் அதிகமாய் இருக்கு” என்றாள்.
“ஒரு வாரமாய் அப்படியேதான் இருக்காம். எது சாப்பிட்டாலும் வெளியில் வந்துவிடுகிறதாம். அந்த சின்ன டவுனில் இருக்கும் டாக்டருக்கு எதுவும் புரிபடவில்லை. டைபாயிட், மலேரியா போல் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார். நாளைக்கு ஸ்பெஷலிஸ்ட் யாரிடமாவது காட்டணும்.”
“ஹாஸ்பிடலுக்குப் போகாமல் எப்படி முடியும்?” வசந்தி கேட்டாள்.
“நமக்கு தெரிந்த டாக்டர் யாரையாவது அழைத்து வந்து காண்பித்து அவருடைய அறிவுரையின்படி செய்வோம்” என்றாள் சவிதா.
“ராமமூர்த்தி சாருக்கு உடல்நலத்தைப் பற்றி கொஞ்சம் கூட லட்சியம் இல்லை. ராப்பகலாய் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்.” என்றான் ரமணன்.
சவிதாவும், ரமணனும் ராமமூர்த்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை வசந்தி கேட்டுக் கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து மூவரும் படுத்துக் கொண்டார்கள்.
வசந்திக்கு இன்னும் உறக்கம் வரவில்லை. உள்ளிருந்து ராமமூர்த்தி முணகுவது போல் சத்தம் கேட்டது. வசந்தி எழுந்து உள்ளே போனாள். குச்சியாய் இருந்த கைகளால் நெற்றியை அழுத்திக் கொண்டிருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
வசந்தி அருகில் சென்றாள். தலைவலிக்கிறதோ என்னவோ. என்ன செய்வது?
தயங்கிக் கொண்டே அருகில் அமர்ந்து கொண்டு தலையை பிடித்துவிட்டாள். நெற்றியின் மீது கையை ரொம்ப நேரம் வைத்திருப்பது கஷ்டமாக இருந்தது. ஜுரம் அதிகமாய் இருந்தது. வசந்தி ஈரத்துணியை கொண்டு வந்து நெற்றியின் மீது வைத்தாள். கொஞ்ச நேரம் கழித்து துணியை மறுபடியும் தண்ணியில் நனைத்து பற்றுப் போட்டாள். நெற்றிப் பொட்டை கொஞ்ச நேரம் பிடித்துவிட்ட பிறகு அவன் மறுபடியும் தூங்கி போய்விட்டான்.
அதற்குள் பொழுது விடிந்துவிட்டது.
சவிதாவும், ரமணனும் காலையில் தயாராகி வெளியே சென்றார்கள். வசந்தி பாலை சுட வைத்துக் கொண்டு வந்தாள். ராமமூர்த்தி எழுந்து உட்காரும் நிலையில் இருக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்துகொண்டு ஸ்பூனால் வாயில் விட்டாள். மெதுவாக குடித்தான். ஐந்து நிமிடங்கள் கழித்து திக்கு முக்காடிக் கொண்டிருந்தவனைப் பார்த்து வசந்தி பயந்துபோய்விட்டாள். குடித்த பால் முழுவதும் வாந்தியாக வெளியே வந்துவிட்டது. அவனுடைய உடைகள், போர்வை எல்லாம் ஈரமாகிவிட்டன. உடுத்தியிருந்த லுங்கி கூட நனைந்துவிட்டது.
வசந்திக்கு கையும் காலும் ஓடவில்லை. என்ன செய்வது? எதுவும் செய்யாமல் எப்படி இருப்பது?
மெதுவாக யோசித்து செயல் பட்டாள். ஈர டவலால் முகத்தை துடைத்து விட்டாள். சட்டையைக் கழற்றச் செய்து கழுத்துக்கு பின்னால் துடைத்தாள். ஒரு பக்கமாக அவனை நகர்த்தி படுக்கையின் விரிப்பை உருவினாள். இன்னோரு போர்வையைப் போர்த்தி விட்டு லுங்கியை அப்புறப்படுத்தினாள்.
அவனுடைய பேக்கில் மாற்று லுங்கிக்காக தேடிக் கொண்டிருந்த போது ரமணன் வந்துவிட்டான். நடந்ததை அவனிடம் சொன்னாள் வசந்தி. டாக்டர் வந்து பார்த்தார். பழைய ரிபோர்டுகளை பரிசோதித்தார். மருந்துகளை எழுதிக் கொடுத்து சலைன் பாட்டிலை வைத்துவிட்டு போனார். அன்று முழுவதும் ஏதேதோ டெஸ்டுகள் செய்வதற்கு யார் யாரோ வந்துக் கொண்டிருந்தார்கள். வசந்தி சமையலை முடித்துவிட்டு ராமமூர்த்தி பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.
சவிதா கல்லூரிக்கு போனாள். ரமணன் டெஸ்ட் ரிசல்டுகளுக்காகவும், டாக்டர்களுக்காகவும் அலைந்து கொண்டிருந்தான். இரண்டு நாட்களுக்கு பிறகுதான் டாக்டர்கள் என்ன நோய் என்று கண்டுபிடித்தார்கள். லிவருக்கு சம்பந்தப் பட்ட நோய் என்றும், ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்ளணும் என்றும் சொன்னார்கள்.
ராமமூர்த்தியின் பொறுப்பு முழுவதும் வசந்தியின் மீது விழுந்தது. சவிதா கல்லூரிக்கு போயாக வேண்டும். வீட்டில் எப்போதும் இருப்பவர்களைத் தவிர வேறு யாராவது இருந்தால் சந்தேகப்படுவார்கள் என்று மற்றவர்களை தடுத்துவிட்டார்கள்.
ராமமூர்த்தி போலீஸாரின் கண்ணில் படாமல் கடந்த மூன்று வருடங்களாக அஞ்ஞாதவாசத்தில் இருந்து வருகிறான். கீழே வீட்டுக்காரர்கள் கேட்ட போது வசந்தி ராமமூர்த்தி தன்னுடைய தம்பி என்றும், இன்னும் திருமணமாகவில்லை என்றும் சொன்னாள். அடுத்த போர்ஷனில் இருப்பவர்கள் பெங்காலி. இவர்களைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். சவிதாவின் சிநேகிதிகளின் வருகை, நடக்கும் மீட்டிங்குகள் அவர்களுக்கும் பழக்கம்தான். அவர்கள் வீட்டிலிருக்கும் வயதான அம்மாள் மட்டும் வந்து ராமமூர்த்தியைப் பார்த்துவிட்டுப் போனாள்.
வசந்தி பதினைந்து நாட்கள் ராமமூர்த்தியைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள். அவன் ஒரு ஆண். அவனுக்கு எப்படி பணிவிடை செய்வது என்ற சங்கோசம் இல்லாமல் எல்லாம் செய்தாள். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்த அவனுடைய உயிரை இரண்டு கைகளாலேயும் பிடித்து நிறுத்துவதற்கு முயன்றாள். அவன் பிழைத்துக் கொள்ள வேண்டும். எப்படியாவது பிழைத்தாக வேண்டும் என்ற நினைப்பை தவிர வேறு எண்ணம் இல்லாதவளாய் சிசுரூஷை செய்தாள்.
பதினைந்து நாட்களுக்கு பிறகு முதல் முறையாய் ஜுரம் குறைந்து சாதாரணமாக இருந்தான். அன்று வசந்தி என்றும் இல்லாத அளவுக்கு சந்தோஷமாக இருந்தாள். “ஜுரம் இல்லை. இனி கவலைப் பட வேண்டியதில்லை” என்று சவிதா, ரமணனிடம் நூறு முறையாவது சொல்லியிருப்பாள். அன்று சலைனை கூட எடுத்து விட்டார்கள். இரவு பத்து மணிக்கு பாலையும், மருந்துகளையும் கொடுத்த பிறகு ராமமூர்த்தி நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தான்.
“இன்று அவர் இனி எழுந்து கொள்ள மாட்டார் அம்மா! நீ நிம்மதியாக தூங்கு” என்று சொன்னால் வசந்தி கேட்டுக் கொள்ளவில்லை. எப்போதும் போல் அவனுடைய தலை மாட்டில் பாயை விரித்துக் கொள்ளப் போனாள்.
சவிதா தாயை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் தன்னுடைய கட்டில் மீது படுக்கச் செய்து தானும் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.
நள்ளிரவு நேரத்தில் “அடடா! கையை நகர்த்தாதே. சற்று நேரம் அ¨சாயாமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்றபடி பதற்றத்துடன் வசந்தி கத்தியதைக் கேட்டு சவிதா விழித்துக் கொண்டாள். தாயை உலுக்கிவிட்டு “என்ன நடந்ததும்மா?” என்றாள் குழப்பத்துடன்.
“நான் இன்னும் ராமமூர்த்தியின் சலைன் நினைவாகவே இருந்திருக்கிறேன் போலும். கையை அசைத்து விட்டு சிரிஞ்சி நகர்ந்து ரொம்ப ரகளையாகிவிடும் இல்லையா. அதே நினைப்பில் புலம்பிவிட்டேன் போலும்” என்று எழுந்துகொண்டாள்.
“நி இங்கே படுத்துக் கொள். நான் அங்கேயே படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு ராமமூர்த்தியின் கட்டிலுக்கு பக்கத்தில் பாயை விரித்துப் போட்டு படுத்துக் கொண்டாள். ராமமூர்த்தி அமைதியாக தூங்குவதைக் கவனித்து தானும் நிம்மதியாக தூங்கினாள்.
மேலும் பத்துநாட்கள் கழிந்தபிறகு ராமமூர்த்தி எழுந்து நடமாடத் தொடங்கினான்.
“நீங்கதான் என்னை பிழைக்க வைத்தீங்க. நீங்க மட்டும் இல்லை என்றால் செத்துப் போயிருப்பேன்” என்று ராமமூர்த்தி சொன்ன போது வசந்தியின் உடல் சிலிர்த்தது.
“தன்னுடைய வாழ்க்கை வீண் போகவில்லை. தன்னிடம் சக்தி இன்னும் பாக்கியிருக்கிறது. எத்தனை சக்தி இருக்கிறது என்றால் ஒரு மனிதனின் உயிரை மீட்டுத் தரும் அளவிற்கு. தன் வாழ்க்கைக்கு இப்போ ஒரு அர்த்தம் இருக்கிறது. தான் இல்லாவிட்டால் சில வேலைகள் நடக்காது. தன்னால் சில காரியங்களை திறமையாக செய்ய முடியும். அந்த காரியத்தால் பிரயோஜனம் இருக்கு. ராமமூர்த்தி உயிரோடு இருந்தால் மக்களுக்கு நன்மை நடக்கும். அந்த ராமமூர்த்தியை தான் பிழைக்க வைத்தாள்.”
வசந்திக்கு தன் மீது கௌரவமும், மதிப்பும் ஏற்பட்டன. அகில உலகத்தையும் நேசிக்க வேண்டும் என்ற அளவுக்கு விருப்பம் ஏற்பட்டது.
உலகத்தில் எல்லோருடைய கஷ்டங்களை, உடல்நலக் குறைவை, அமைதியின்மையைத் துடைத்தெரியக் கூடிய சக்தி தனக்கு இருக்கணும் என்ற தவிப்பு ஏற்பட்டது.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
வசந்திக்கு இதை எல்லாம் புரிய வைப்பதற்கு சவிதாவும், ராஜலக்ஷ்மியும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ராஜலக்ஷ்மி தன்னுடைய உணர்வுகளை, மனதை எல்லாம் வசந்தியுடன் பகிர்ந்துகொண்டாள். சவிதா கல்லூரிக்கு போன பிறகு வசந்தியிடம் வந்து எதையாவது பேசிக் கொண்டிருப்பாள்.
ராஜலக்ஷ்மி தங்கியிருந்த போது வசந்தி அவளை அன்புடன் பார்த்துக் கொண்டாள். அந்தப் பெண்ணுக்கு சந்தோஷம் தரக் கூடிய வேலைகள், அவை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் சரி சிரத்தையாக செய்துவந்தாள்.
தினமும் மாலையில் ராஜலக்ஷ்மின் கூந்தலை சிடுக்கு எடுத்து தலைவாரிப் பின்னிவிட்டாள். “தினமும் தேங்காய் எண்ணெய் தடவினால் கூந்தல் நன்றாக வளரும்” என்று அறிவுரை வழங்கினாள்.
ராஜலக்ஷ்மி தைரியமாக இருப்பது, சிரித்த முகத்துடன் வளையம் வருவது, சிநேகிதிகளுடன் சாதாரணமாக இருப்பது இவை எல்லாம் வசந்திக்கு ரொம்பவும் பிடித்திருந்தன. இதற்கு முன்பாக இருந்தால் ராஜலக்ஷ்மியின் நிலைமையில் இருக்கும் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு நேசித்திருப்பேனா என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.
லாவண்யாவின் சிநேகிதிகள், சவிதாவின் சிநேகிதிகள் வீட்டுக்கு வருவதுண்டு. ஆனால் அவர்களுடன் தனக்கு ரொம்ப பழக்கம் இருந்தது இல்லை. ரொம்பவும் சின்ன வயதில் இருக்கும் போது சிநேகிதிகளை வாசலுடனே அனுப்பிவிடும் படி எச்சரித்ததுண்டு. உள்ளே வந்தால் ரகளை செய்வார்கள் என்று சலித்துக் கொள்வாள். அந்தக் குழந்தைகள் போன பிறகுதான் தன் குழந்தைகளுக்கு சிற்றுண்டியை வழங்குவாள். சுரேஷ் ஒரு நாள் “அவர்களுக்கும் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று சொன்ன போது “அப்படிச் செய்தால் இனி குடித்தனம் உருப்பட்டாற்போல்தான். இனி தெருக் குழந்தைகள் எல்லோரும் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள்” என்று எரிந்து விழுந்தாள்.
கொஞ்சம் பெரியவர்கள் ஆன பிறகு குழந்தைகள் தங்களுடைய நெருங்கிய சிநேகிதிகளை வீட்டுக்கு அழைத்து வந்தால், காபி தயாரித்து குரல் கொடுப்பாள். அவர்களே வந்து வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். அந்த சிநேகிதிகளைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. குழந்தைகள் எப்போதாவது தன்னுடைய சிநேகிதிகளை பற்றி சொல்ல வந்தால் மூட் நன்றாக இருந்தால் கொஞ்சம் காது கொடுத்து கேட்பாள். இல்லையா போதும் நிறுத்துங்க என்று சலித்துக் கொள்வாள்.
இங்கே சவிதாவின் சிநேகிதிகள் எல்லோரும் அவளுடன் நட்புடன் பழகுகிறார்கள். எப்போதாவது தவிர அவர்கள் தனியாக பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் வந்தால் வசந்திக்கு சந்தோஷமாக இருக்கும். ராஜலக்ஷ்மி விஷயம் அவளை ரொம்ப பாதித்தது. லாவண்யாவுக்கோ, சவிதாவுக்கோ நேர்ந்து விட்டது போல் அவ்வளவு கவலையை அனுபவித்தாள்.
அந்தப் பெண்ணுக்கு ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். தன் குடும்பத்தைச் சேராத நபரை பற்றி இவ்வளவு தூரத்திற்கு யோசிப்பது, அன்பு செலுத்துவது இதுதான் முதல் தடவை. ஆனால் மனதிற்கு பிடித்திருந்தது.
ராஜலக்ஷ்மிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன், தேவை ஏற்பட்டால் தனக்கு ராஜலக்ஷ்மி உதவி செய்வாள் என்றும், தன்னை நேசிப்பாள் என்றும் பலமான நம்பிக்கை கூட ஏற்பட்டது. பரஸ்பரம் அந்த நம்பிக்கை இருப்பதால்தானோ என்னவோ இந்த உறவு இவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.
பதினைந்து நாடகள் கழிந்துவிட்டன. “இனியும் லீவ் போட்டால் மரியாதை இல்லை. கிளம்புகிறேன்” என்றாள் ராஜலக்ஷ்மி.
அன்று இரவு கிளம்புவதற்காக டிக்கெட் வாங்கி வந்தாள். மாலையில் சவிதா யூனியன் மீட்டிங் இருக்கு என்று போய்விட்டாள். “உன்னுடைய ரயில் எட்டுமணிக்குதானே. ஏழறை மணிக்கெல்லாம் ஆட்டோ எடுத்து வருகிறேன். தயாராக இரு” என்றாள்.
ராஜலக்ஷ்மி பெட்டியை பேக் செய்தாள். “நீங்களும் சவிதாவும் சென்னைக்கு வாங்கம்மா” என்று அழைத்தாள்.
“நீ இன்னும் நான்கு நாட்கள் தங்கினால் என்னவாம்? இதோ மாங்காய் தொக்கு. இதை ஒரு பிளாஸ்டிக் கவரில் தனியாக சுற்றி பேக்கில் வைத்துக் கொள்” என்றாள் பாட்டிலை நீட்டிக் கொண்டே.
“எதுக்காக சிரமப்பட்டீங்க? கடையில் நான் வாங்கிக் கொள்ள மாட்டேனா?”
“உன்னால் கடையில் வாங்கிக் கொள்ள முடியாது என்பதற்காகவா? உனக்கு பிடிக்குமே என்று கிளறினேன்.” உரிமையுடன் கடிந்துகொண்டாள் வசந்தி.
“எங்க அம்மாவை விட நீங்க நெருக்கமாகி விட்டீங்கம்மா” என்றாள் ராஜலக்ஷ்மி.
“அதென்ன பேச்சு ராஜீ! உங்க அம்மாவை விட நான் எப்படி நெருக்கமானவளாக ஆக முடியும்? நமக்குள் அறிமுகமாக இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை.”
“அது உண்மைதான். ஆனால் நான் இந்த ஜென்மத்தில் எங்க அம்மாவிடம் சொல்லிக் கொள்ள முடியாத விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் என்னுடைய வேதனையை பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இது எங்கம்மாவிடம் சாத்தியப்படாது.”
“எதனால்?” யோசித்துக் கொண்டே கேட்பது போல் கேட்டாள் வசந்தி.
“ஏன்னு கேட்டால் காரணம் எனக்கும் தெரியவில்லை. தவறு என்னுடையதுதான் என்று நினைக்கிறேன். வேளைக்கு சாப்பாடு போட்டு பசியை ஆற்றும் தாயாகத்தான் பார்த்தேனே ஒழிய சிநேகிதியாக பார்க்கவில்லை. அம்மாவுக்கு இதெல்லாம் புரியாது. என்னாலும் சொல்ல முடியாது. இரண்டு பேரும் ரொம்ப விலகியிருப்பது போல் இருப்போம். மனம் விட்டு பேசிக் கொள்ளும் நெருக்கம் இல்லை எங்களுக்குள். அம்மா என்னிடம் ரொம்ப அன்பாக இருப்பாள். எங்கம்மாவுக்கு நான்கு குழந்தைகள். எங்கள் நான்கு பேரை வளர்ப்பது தான் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கமாக அம்மா இருந்து வந்தாள். இருந்தாலும் அம்மாவால் என்னை புரிந்துகொள்ள முடியாது. என்னைப் புரிந்து கொள்ள முடியாத அம்மாவிடம் எல்லாவற்றையும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது.”
தானே ராஜலக்ஷ்மின் தாயாகிவிட்டது போல் வசந்தி கண்கலங்கினாள். ராஜலக்ஷ்மியை அருகில் இழுத்துக் கொண்டாள்.
அப்பொழுதுதான் கதவைத் தள்ளிக் கொண்டு சந்திரசேகர் உள்ளே வந்தான், “இன்றுதானா உங்கள் பயணம்?” என்றபடி.
சவிதாவுக்காக இரன்டு மூன்று முறை வந்திருந்த சந்திரசேகரை வசந்தி வெறுமே பார்த்திருக்கிறாளே தவிர பழக்கம் இல்லை.
“உட்காரு தம்பீ!” என்றாள் தான் அங்கிருந்து போகணுமா என்று யோசித்துக் கொண்டே.
“நீங்க இன்றைக்கு பயணத்தை நிறுத்திக் கொள்ளக் கூடாதா?” என்றான் சந்திரசேகர்.
“ஏன்? நாளைக்கு ஏதாவது மீட்டிங் இருக்கா?” வியப்புடன் கேட்டாள்.
“மீட்டிங்காவது மண்ணாவது? உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இரண்டு நாட்களாக மூளையைக் கசக்கிக் கொண்டு இன்றைக்கு ஒரு முடிவுக்கு வந்தேன். நாளை இரவு போய்க் கொள்ளலாம். இன்றைக்கு போகாதீங்க.”
“என்ன விஷயம்? போகட்டும், அடுத்த முறை வந்த போது சொல்லுங்கள்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“ப்ளீஸ்! நான் ரொம்ப சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்க நாளைக்கு போய்க் கொள்ளலாம். ஆண்டீ! நீங்களாவது சொல்லுங்கள். நான் இந்த அளவுக்கு சொல்லும் போது மறுக்க வேண்டாம் என்று.”
“என்ன பேசப் போறீங்க?” ராஜலக்ஷ்மி தயங்கிக் கொண்டே கேட்டாள்.
“முதலில் நீங்க பயணத்தை கைவிடுங்கள். பிறகு சொல்கிறேன்.”
இனியும் தான் அங்கே இருப்பது சரியில்லை என்று வசந்தி உள்ளே போனாள்.
இரண்டு நிமிடங்கள் கழித்து ராஜலக்ஷ்மி உள்ளே வந்து “அம்மா! சவிதா வந்தால் இந்த டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு, நாளைக்காக வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள். நானும் சந்திராவும் கொஞ்சம் பீச் வரையிலும் போய் வருகிறோம்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.
சவிதா வரும் வரையில் வசந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. ‘சந்திரசேகர் என்ன பேசப் போகிறான்? எதற்காக பயணத்தை நிறுத்தச் சொன்னான்’ என்று.
தாய் சொன்னதைக் கேட்டதும் சவிதாவின் முகம் மலர்ந்துவிட்டது. “அப்பாடா! அந்த தூங்குமூஞ்சிக்கு இப்பொழுதுதான் விழிப்பு வந்ததா? அவன் ராஜீயை காதலிக்கிறான் என்று எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். எங்கே டிக்கெட்?” என்று அவசரப்பட்டாள்.
“எதற்காக இந்த பதற்றம்? அவனுடைய உத்தேசம்தான் என்ன? ஏன் அவளை பயணத்தை கான்சல் செய்யச் சொன்னான்?” ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள் வசந்தி.
“ஒருக்கால் உன்னைக் காதலிக்கிறேன். கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்வதற்காக இருக்கும்” என்றாள் சவிதா சந்தோஷமாக சிரித்துக் கொண்டே.
“ராஜீ சம்மதிப்பாளா?”
“வரட்டும். அவளே சொல்லுவாள் இல்லையா?”
சவிதா ஸ்டேஷனுக்கு கிளம்பிப் போனாள். ராஜலக்ஷ்மியும், சவிதாவும் ஒரே நேரத்தில் திரும்பி வந்தார்கள்.
“என்னவாம்? எதற்காக உன்னைப் போக வேண்டாம் என்று தடுத்தான்?” சவிதா கேட்டாள்.
“ஊகித்து சொல்லு பார்ப்போம்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“காதலிக்கிறேன் என்று சொன்னானா இல்லையா?”
“சொன்னான்” என்றாள் ராஜலக்ஷ்மி முறுவலுடன்.
“நீ என்ன சொன்னாய்?” சவிதா பதற்றத்துடன் கேட்டாள்.
“யோசித்துச் சொல்லுகிறேன் என்றேன்.”
“இந்த இரண்டு வார்த்தைகள்தானா நீங்க பேசிக் கொண்டது? முழுவதையும் சொல்லு. இல்லாவிட்டால் கொன்றே போட்டுவிடுவேன்.” சவிதா மிரட்டினாள்.
“சொல்லத்தான் போகிறேன். முதலில் சாப்பிடலாம். அம்மா! ரொம்ப பசிக்கிறது.” செல்லம் கொஞ்சுவது வசந்தியிடம் சொன்னாள்.
வசந்திக்கு சந்திரசேகர் சொன்ன பேச்சுக்கு சந்தோஷமாக இருந்தாலும் உள்ளூர எங்கேயோ சின்ன சந்தேகம், தப்பிப் தவறி இந்தப் பெண் அவனிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட்டாளோ என்று. சாப்பாடு போடும் போது கேட்கவும் செய்தாள்.
சவிதாவும் கவலையுடன் பார்த்தாள்.
“எப்படி சொல்லுவதென்று புரியவில்லை. அவன்தான் அதிகம் பேசினான். அவனைத் தடுத்து நிறுத்தி என் வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தது. நான் அதை இப்படி உணருகிறேன். இந்த விஷயத்தை பற்றி உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமோ என்னவோ என்று என்னால் சொல்ல முடியவில்லை. அதான் என் அபிப்பிராயத்தை கடிதத்தில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்” என்றாள் ராஜலக்ஷ்மி.
“இதை எல்லாம் அவனுக்கு கடிதத்தில் எழுதப் போகிறாயா? எதற்காக எழுதணும்?” வசந்தி கோபமாக கேட்டாள்.
“எதற்காக என்றால்? சொல்லணும் இல்லையா?”
“சொல்லாமல் இருந்தால் என்னவாகும்? அது அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை என்று நீயே நினைக்கும் போது.”
“வேண்டுமென்றே மறைப்பானேன்? சொன்னால் என்னவாகும்?”
“உங்களுக்கு ஒன்றும் தெரியாது. சொன்னாலும் கேட்க மாட்டீங்க. நடந்ததேதோ நடந்துவிட்டது. எல்லாம் மறந்து போய் விடவேண்டும் என்று நினைக்கிறீங்க. மறுபடியும் எதற்காக இந்த வேணடாத வேலைகளை செய்து பிரச்னைகளை வரவழைப்பானேன்?” வசந்திக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “எனக்கு என்ன வந்தது? உங்கள் விருப்பம். சொன்னால் கேட்டுக் கொள்ளப்போறீங்களா என்ன?” என்றபடி விருட்டென்று எழுந்துகொண்டு அங்கிருந்து போய்விட்டாள்.
சமையலறையை ஒழித்துக் கொண்டே ராஜலக்ஷ்மியும் சவிதாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் சரியாக காதில் விழவில்லை என்றாலும் “இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. நீ சொல்வதுதான் சரி என்று ஒருவருக்ககொருவர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.” வசந்தி நினைத்துக் கொண்டாள் கோபமாக.
சவிதா சமையலறையில் விளக்கை அணைத்துவிட்டு முன்னறைக்கு போனாள். ராஜலக்ஷ்மி வந்து வசந்தியின் பக்கம் வந்து படுத்துக் கொண்டாள்.
“அம்மா! இந்த விஷயத்தை மறைப்பானேன்? நான் என் உயிர் சிநேகிதி என்று நினைத்த சவிதாவிடம் சொல்லியிருக்கிறேன். வீணாவுக்கும், ரமணனுக்கும் தெரியும். சந்திரசேகரிடமிருந்து மறைப்பது என்றால் அவனிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தமாகிவிட்டாதா? நம்பிக்கை இல்லாமல் காதலை தொடங்குவானேன்? அவனும் அந்த விஷயத்தை எங்களைப் போலவே எடுத்துக் கொண்டால் பிரச்னையை இல்லை. ஆட்சேபணை இருந்தாலும் பிரச்னை இல்லை. தானே என்னை விட்டு விலகிப் போய் விடுவான். இது நான் அவனுக்கு வைக்கும் ஒரு பரீட்சை என்று நினைத்துக் கொள்ளுங்கள் அம்மா. பின்னால் வேண்டாத பிரச்னைகளுக்கு இடம் கொடுப்பதை விட இது நல்லது இல்லையா?” கெஞ்சுவது போல் சொன்னாள் ராஜலக்ஷ்மி.
“ஆகட்டும். உங்க இஷ்டம்” என்றாள் வசந்தி கொஞ்சம் வழிக்கு வந்தவள் போல்.
“உங்க இஷ்டம் என்று சொன்னால் சரியில்லை. இது தான் சரியான வழி. ஆமாவா இல்லையா சொல்லுங்கள்?”
“ஆமாமாம். போய் படுத்துக் கொள்” என்றாள் வசந்தி. ராஜலக்ஷ்மி எழுந்துக் கொண்டு முன் அறைக்குப் போனாள்.
மறுநாள் கிளம்பி சென்னைக்கு போய்விட்டாள்.
வசந்தி வைசாக்கிற்கு வந்து ஆறுமாதங்களாகிவிட்டன. இந்த ஆறு மாதங்களில் லாவண்யா ஒரு முறை வந்தாள். தங்கியிருந்த இரண்டு நாட்களும் சவிதாவை வசைபாடிக் கொண்டே இருந்தாள்.
“நீதான் இப்படிச் செய்தாய். குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டாய். புகுந்தவீட்டார் முன்னால் என்னை நிமிர்ந்து நிற்க முடியாமல் செய்துவிட்டாய்” என்று ஏசினாள்.
“நான் என்ன செய்துவிட்டேன்?” சவிதா கேட்டாள்.
“அம்மாவை அங்கிருந்து எதற்காக அழைத்து வந்தாய்? அம்மா அங்கே இருந்தால்தான் மதிப்பும் கௌரவமும். அப்பா இப்போ பப்ளிக்காக அவளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். அம்மா அங்கே இருந்தால் இப்படி நடந்திருக்காது இல்லையா? கொஞ்சமாவது ஒளிவு மறைவு இருந்திருக்கும்.”
“அப்போ அம்மாவின் நிலைமை எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்குமோ யோசித்துப் பார்த்தாயா? தினமும் அப்பாவின் முன்னால் சோகத்துடன் வளையம் வருவது, குற்றம் செய்துவிட்டாற் போல் அப்பா தலைமறைவாக இருப்பது. வாய் விட்டு பேசுவதற்கு கூட மனிதர்கள் இல்லாத வீட்டில் அம்மாவுக்கு எவ்வளவு நரகமாக இருக்கும்? என்னிடம் இருந்தால் நிம்மதியாக இருப்பாள். நீ அனாவசியமாக கவலைப்பட வேண்டாம்” என்றாள் சவிதா.
“அப்பா அப்படி ஏன் நடந்துகொள்ளணும்?” என்றாள் லாவண்யா.
“போய் அப்பாவிடம் கேள். என்னைக் கேட்பானேன்?” சவிதா சொன்னாள்.
“தவறு அம்மாவுடையதுதான். அப்பாவை கட்டிப் போட தெரியவில்லை. ஆண்கள் அப்படியும் இப்படியும் இருப்பது சகஜம்தான் என்று கண்டுகொள்ளாமல் சும்மா இருந்திருக்கணும். இப்போ எல்லோரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?”
“என்ன சொல்கிறார்கள்?” சவிதா சீரியஸாக கேட்டாள்.”
“உங்க அம்மாவை அப்பா விட்டுவிட்டார்களாமே என்று கேட்கிறார்கள். என்ன பதில் சொல்வது? தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை.”
மௌனமாக இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த வசந்திக்கு திடீரென்று ஆவேசம் பொங்கிக் கொண்டு வந்தது.
“எல்லோரிமும் போய் சொல்லு. எங்க அம்மாவை அப்பா தள்ளி வைத்துவிட்டார் என்று சொல்லு. எனக்கு இல்லாத மானக்கேடு உனக்கு என்ன வந்தது?” என்று சொல்லிக் கொண்டே கதறினாள்.
“அக்கா! நீ எதற்காக வந்தாய்? அம்மாவை அழ வைப்பதற்காகவா?” சவிதா கடிந்துகொணடாள்.
இருந்த நான்கு நாட்களும் லாவண்யா அழுது ஆர்பாட்டம் செய்து வீட்டின் அமைதியைக் கெடுத்து விட்டு போய்ச் சேர்ந்தாள்.
லாவண்யாவுடன் தனக்கு இருந்த பந்தம் ஏதோ அறுந்துவிட்டது போல் இருந்தது வசந்திக்கு. லாவண்யாவுக்கு தன்னுடைய குடும்பகௌரவப் பிரச்னையைத் தவிர வேறு எதுவும் இல்லை.
எல்லாம் சரியாக இருந்தால் தன்னிடமிருந்து வேலையை வாங்கிக் கொள்வாள். தன் குழந்தைகளின் பொறுப்பையும் தன்னிடம் ஒப்படைத்து மேலும் தன்னிடமிருந்து உழைப்பை உரிஞ்சு கொள்வாள். இப்போ அதெல்லாம் சாத்தியம் இல்லை என்று தெரிந்த பிறகு தன்னை ஒரு மனுஷியாக பார்க்காமல் பிரச்னையாக பார்க்கிறாள். இந்த யோசனை வந்த பிறகு சவிதாவின் சிநேகிதிகளிடம், முக்கியமாக வீணா, ராஜலக்ஷ்மி, சுந்தரி இவர்களிடம் அன்பு அதிகமாயிற்று.
“அவர்களைப் பொறுத்தவரையில் நான் உழைக்கும் இயந்திரம் இல்லை. சொத்து சுகம் தருபவள் இல்லை. என்னை ஒரு பிரச்னையாக அவர்கள் நினைக்கவும் இல்லை. மனிதனுக்கு சகமனிதனிடம் இருக்க வேண்டிய மனிதநேயம்தான் எங்களுக்கு இடையே இருக்கிறது. லாவண்யாவுக்கும் எனக்கும், சுரேஷ¤க்கும் எனக்கும் இடையே அந்த உறவு இல்லாமல் போய்விட்டது.”
இந்த எண்ணம் வந்ததும் வசந்திக்கு புதிதாக ஞானம் பிறந்துவிட்டது போல் தெம்பு பிறந்துவிட்டது.
சுரேஷ் அவ்வப்பொழுது இந்த ஊருக்கு வந்து சவிதாவைச் சந்தித்து விட்டுப் போவது வசந்திக்குத் தெரியும். ஒருநாள் சவிதா கல்லூரியிலிருந்து வரும்போது ஒரு பாக்கெட் கொண்டுவந்தாள்.
“என்ன இது?” என்றபடி திறந்து பார்த்தாள் வசந்தி.
புத்தாடைகள்.
“புது டிரெஸ்ஸா? எப்போ வாங்கினாய்?” பிரித்துப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“அப்பா வாங்கி வந்தார். மதியம் கல்லூரியில் கொண்டு வந்து கொடுத்தார்.”
வசந்தி சட்டென்று பாக்கெட்டை கீழே வைத்தாள். சவிதா பாக்கெட்டை எடுத்து மேஜை மீது வைத்துக் கொண்டே “அப்பா ஹோட்டலில் தங்கியிருக்கிறார் அம்மா. மாலையில் வந்து சந்திப்பதாக சொல்லியிருக்கிறேன். காத்துக் கொண்டிருப்பார். போய் வருகிறேன். நான் வருவதற்கு தாமதமாகுமோ என்னவோ. நீ சாப்பிட்டு விடு” என்று சொன்னாள்.
வசந்தி பதில் பேசவில்லை. சவிதா குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு போய்விட்டாள். சுரேஷை இங்கே வரச் சொல்லவில்லை என்று சவிதா நினைத்துக் கொண்டிருக்கிறாளா? சவிதா ஏன் தந்தையை அழைக்கவில்லை? தாய் வருத்தப் படுவாளோ என்றா? சுரேஷ் எப்படி இருக்கிறான்? வசந்திக்கு சுரேஷை பார்க்க வேண்டும் போல் இருந்தது. வாசலிலேயே காத்திருந்தாள்.
இரவு ஒன்பது ஆனபிறகு வீட்டின் முன்னால் ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவிலிருந்து இருவரும் இங்கினார்கள்.
வசந்தி கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்தாள்.
சுரேஷ் சிரித்துக் கொண்டு சவிதாவின் தோளில் தட்டியபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
சுரேஷ் நன்றாகத்தான் இருக்கிறான். சந்தோஷமாக, உற்சாகமாக இருந்தான். தான் இல்லாமல் போனது ஒரு குறையாகவே இல்லை. அவனுக்கு தன்னைப் பற்றிய யோசனையே இருப்பது போல் தென்படவில்லை. ஆட்டோ கிளம்பிப் போகும் வரையில் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அதற்கு பிறகு ஒரு நாளும் வசந்தி சுரேஷின் நினைவுகளில் கண்கலங்கவில்லை. அது தேவையில்லாத விஷயம் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
இருபது வருட தாம்பத்திய வாழ்க்கையில் கடைசியில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
“இன்னும் இதே போல் இருபது வருடங்கள் கழித்துவிட்டு செத்துப் போகவில்லையே என்பற்காகவா அழுது தீர்கக்கணும்” என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி.
சவிதாவின் நண்பர்கள், அவர்களுடைய அரசியல்கள், போராட்டங்கள், இயக்கங்கள் இதெல்லாம் அவளையும் அறியாமலேயே அவளுக்குள் இடம் பிடித்துக் கொண்டன.
This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
ஆட்டோவை விட்டு இறங்கியதம் வீட்டு நம்பரை சரிபார்த்துக் கொண்டாள் சவிதா. ஆட்டோக்காரனுக்கு பணத்தைத் தந்துவிட்டு கதவைத் தட்டப் போன போது வெறுமே சாத்தியிருந்த கதவுகள் திறந்துகொண்டன. “ராஜீ!” என்றழைத்தபடி பேக்கை கீழே வைத்த சவிதாவை ஓடிவந்து கட்டிக் கொண்டாள் ராஜி.
“சவிதா! நீ வந்துவிட்டாயா? எவ்வளவ நல்லவள் நீ! எனக்காக வந்தாயா?” என்றபடி கண்ணீர் விட்டாள் ராஜி.
“நன்றாகத்தான் இருக்கு. நீயாக இருந்தால் மட்டும் வந்திருக்க மாட்டாயா? எப்படி இருக்கிறாய் ராஜீ?” அன்பு ததும்பும் குரலில் கேட்டாள் சவிதா.
“நன்றாகத்தான இருக்கிறேன். மனதில் பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த போராட்டத்தில் வெற்றியோ வீர மரணமோ தெரிந்து போய்விட்டால்…”
“உன் மூஞ்சி! போரும் இல்லை புண்ணாக்கும் இல்லை. நீ அனாவசியமாக உணர்ச்சிவசப்படுகிறாய்” என்று சவிதா சொல்லிக் கொண்டிருந்த போதே ராஜலக்ஷ்மி அழத் தொடங்கிவிட்டாள்.
“உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? எதற்காக அழுதுக் கொண்டிருக்கிறாய்?”
“எனக்கு செத்துப் போகணும் போல் இருக்கு.”
“தமிழ் சினிமாவில் வருவது போல் பேசுகிறாய். உன் மீது சினிமா பாதிப்பு அதிகமாக இருக்கா இல்லை பேதை என்ற வார்த்தையை நிரூபிக்கும் முயற்சியா?” சிரித்தாள் சவிதா.
“சரிதான். உனக்கு எல்லாமே விளையாட்டாகத்தான் இருக்கு.”
“விளையாட்டு இல்லை. நீ இவ்வளவு வருத்தப்பட்டுக் கொண்டு அழுவானேன்? கொஞ்சம் முட்டாள்தனமாக, அசந்து போய் இருந்துவிட்டாய். அதை கவனித்து அவன் உன்னை அவமானப்படுத்திவிட்டான். இனிமேல் அது போல் நடக்காமல் கவனமாய் இருக்கணும்.”
“அவன் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டான் சவிதா? அந்தக் கேள்விதான் என்னை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. எனக்கு மதிப்பு தரணும் என்று அவனுக்கு ஏன் தோன்றவில்லை? அருகில் வந்து முத்தம் கொடுத்த போது பிரியம் இருந்து அப்படி செய்கிறான் என்று நினைத்தேனே தவிர ஒரு இரவு தன் உடல் வேட்கையை தணித்துக் கொள்ள ஒரு சாதனமாக என்னை நினைத்துவிட்டான் என்ற விஷயம் நினைவுக்கு வந்த பொழுதெல்லாம் அவமானத்தால் தகித்துப் போய்க் கொண்டிருக்கிறேன். அவனால் அந்த காரியத்தை எப்படி செய்ய முடிந்தது? நான் அவ்வளவு தாழ்ந்தவளாக தென்பட்டேனா? கற்பிழந்து விட்டேன் கறைபடிந்து விட்டேன் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் என் வருத்தம் எல்லாம் நட்பைப் பற்றி, காதலைப் பற்றி, பரஸ்பரம் கொடுக்க வேண்டிய கௌரவத்தைப் பற்றி. இதெல்லாம் யாருக்காவது புரியுமோ இல்லையோ எனக்குத் தெரியாது.”
“என்னால் புரிந்துகொள்ள முடியும் ராஜீ!” சவிதா ஆதரவுடன் ராஜியின் தோளில் கையை வைத்தாள்.
“வீணாவிடம் சொன்னாயா? என்ன சொன்னாள்?”
“என்ன சொல்லப் போகிறாள்? நீ கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கணும் என்றாள். தான் கோபாலை இரண்டு வருடங்களாக காதலித்து வந்தாலும் தொலைவாக வைத்திருப்பதைப் பற்றி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள். ஒருநாளும் எல்லை மீறியதில்லை என்றாள்.”
“எல்லை மீறுவது, தவறு செய்வது …இவை எதுவும் எனக்கு அந்த சமயத்தில் நினைவுக்கு வரவில்லை. அதேதோ இயற்கையான விஷயமாக தொன்றியது.”
“அப்படி தோன்றியது இல்லையா. அதை அப்படியே ஏற்றுக்கொள். ஒரு அனுபவம் ஏற்பட்டது. கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. கொஞ்சம் வேதனையை கொடுத்தது. முடிந்து போய்விட்டது. அதைச் சுற்றிலும் வேண்டாத எண்ணங்களை, வார்த்தைகளை, பிரமைகளை பிணைத்து குழப்பத்தில் ஆழந்துவிடாதே.”
“முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன் சவிதா! ஆனால் எனக்கே ஆச்சரியமாக இருக்கு என் வேதனையைக் கண்டு. நம் மீது பழமை வாதத்தின் பாதிப்பு நிறையவே இருக்குன்னு இப்போ புரிகிறது. இந்த நிகழ்ச்சி ரொம்ப சின்னது என்றும், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைத்துக் கொண்டாலும் ஏதோ புரியாத வேதனை, துக்கம், எதையோ இழந்துவிட்டேன் என்ற உணர்வு, செத்துப் போய் விடலாம் என்ற அளவுக்கு ஆவேசம். ஓரளவுக்கு படித்திருக்கும் எனக்கே இப்படி இருந்தால் இனி சராசரி பெண்கள் இதை எப்படி தாங்கிக் கொள்வார்கள்? உண்மையிலேயே இது முக்கியமான விஷயமா? இல்லையா?”
“அதை அப்படி கேள்வியின் மூலமாக அல்லாமல் பிராக்டிகலாக புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம் ராஜீ! நாம் நம்மை கௌரவித்துக் கொள்வோம். நம் உடல்களை கௌரவித்துக் கொள்வோம். அந்த உடலுக்கு ஏற்படும் அனுபவங்கள் அன்புடன் பிணைந்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அந்த அன்பு இல்லாமல் யாராவது நம் உடல்களை அனுபவித்தால் நமக்குக் கோபம் வரும். அந்த அவமானத்திற்கு வேதனை ஏற்படும். காதல் இருப்பது போல் நடித்து ஏமாற்றினால் நமக்கு கோபமும், வேதனையும் ஏற்படும். எந்த விஷயத்திலே§யும் வற்புறுத்தலுக்கும், அவமானத்திற்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாகக் கூடாது என்றுதான் நினைப்போம். அப்படி நடந்த போது வருத்தப் படுவோம். அதைவிட முக்கியத்துவம் தருவது அனாவசியம். இந்த விஷயத்தை இப்படி அனலைஸ் செய்வதுதான் சரி என்று எனக்கு தோன்றுகிறது. எனக்குத் தெரிந்ததுதான் சரி என்று நினைக்காவிட்டாலும், இந்த சூழ்நிலையில் இதைவிட சரியான யோசனை தோன்றவில்லை.”
தங்களுக்கு இருந்த ஞானத்துடன் அந்த அனுபவத்தை அனலைஸ் செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருந்தார்கள் அந்த இரண்டு பெண்களும். மறுநாள் வைசாக் பயணத்திற்கு ராஜலக்ஷ்மியை சம்மதிக்க வைத்தாள் சவிதா.
“ரமணன் எப்படியாவது உனக்கும் நவீனுக்கும் திருமணம் நடத்தி வைக்கணும் என்கிறான்” என்றாள் சவிதா அன்று இரவு படுத்துக் கொள்ளும் போது.
ராஜலக்ஷ்மி கொஞ்ச நேரம் பேச வில்லை
“என்ன சொல்கிறாய்? நவீனிடம் ஒரு முறை பேசி பார்த்தால்?” சவிதா மறுபடியும் கேட்டாள்.
“எனக்கு விருப்பம் இல்லை” என்றாள் ராஜலக்ஷ்மி.
சவிதா பதில் பேசவில்லை. ராஜலக்ஷ்மி மேற்கொண்டு ஏதோ சோல்லுவாள் என்பது போல் கேட்டுக் கொள்ள தயாராக இருந்தாள்.
“அவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொள்ளணும் என்ற எண்ணமே இல்லை. நான் அவசரப்பட்டு விட்டேன் என்று அவன் சொன்ன பிறகும் அவனிடம் கேட்பது என்றால் இந்த நிகழ்ச்சி நடந்ததால்தானே. எல்லோரும் சேர்ந்து ரகளை செய்தால் வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து கொள்வானாய் இருக்கும். ஆனால் அந்த கல்யாணம் எப்படி இருக்கும்? அவனுக்கு என் மீது கௌரவம் இல்லை என்று எனக்கு வருத்தம். வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டி வந்தது என்று அவனுக்கு என் மீது வெறுப்பு. இனி அந்த குடித்தனம் எப்படி இருக்கும்? கல்யாணத்திற்கு வேண்டிய அஸ்திவாரம் இல்லாமல் எதற்காக அந்த சடங்கு?”
சவிதா மௌனமாக இருந்தாள்.
“அஸ்திவாரம் இல்லாமல் இது நடக்கவில்லையா என்று கேட்கக் கூடும். ஆமாம். நடந்துவிட்டது. அந்த நேரம் அப்படிப்பட்டது. அது மட்டும் நடக்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே வாழ்நாள் முழுவதும் அதை சுமப்பானேன்? அதை அப்படியே மறந்து போவது நல்லது என்று தோன்றுகிறது.
“ஆமாம். அதுதான் நல்லது” என்றாள் சவிதா.
மறுநாள் இரவு ரயிலுக்கு இருவரும் வைசாக்கிற்கு கிளம்பினார்கள்.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
வசந்தி வெறுமே கட்டில் மீது படுத்துக் கொண்டிருந்தாள். முன் அறையில் இருபது பேர் வரையில் இடுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பெண்களும், பையன்களும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். காலை பதினோரு மணியிலிருந்து அந்த பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.
நடுவின் மூன்று பெண்கள் சமையலறைக்கு சென்று டீ தயாரித்து எடுத்துப் போனார்கள். சவிதா உள்ளேயே வரவில்லை.
“இவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த கூட்டம் எதற்கு? இந்த சத்தம் எதற்கு? யாரையோ கொன்று விடுவது போல் ஆவேசம் எதுக்கு?” வசந்திக்கு ஒன்றும் புரியவில்லை. மாலை ஐந்து மணிக்கு அவர்கள் எல்லோரும் கிளம்பிப் போன பிறகு சவிதா களைப்புடன் உள்ளே வந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
“இது என்ன திருநாள் கூட்டம்?” வசந்தி கோபமாக கேட்டாள்.
“நாளையிலிருந்து பாலிடெக்னிக் காலேஜ் எல்லாம் ஸ்ட்ரைக் செய்கிறது அம்மா. அந்த விஷயங்களை எல்லாம் பேசி முடிவு செய்யத்தான் எங்க யூனியன் மெம்பர்கள் எல்லோரும் இங்கே கூட்டம் போட்டோம். நான் ஸ்டூடெண்ட் யூனியனில் மெம்பர் ஆக சேர்ந்திருக்கிறேன். இரண்டு வருடங்களாக அதில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நம் வீட்டில் இது போன்ற மீட்டிங்குகளை தவிர்க்க முடியாது” என்றாள் சவிதா.
“ஸ்ட்ரைக் செய்வானேன்?” விருப்பம் இல்லாமலேயே வசந்தி கேட்டாள்.
“பாலிடெக்னிக் முடிந்த பிறகு இன்ஜினியரிங்கில் மாணவர்களுக்காக சில சீட்டுகள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் தர மறுக்கிறது. அதனால் ஸ்ட்ரைக் செய்து அந்த சீட்டுகளை சம்பாதிக்கணும்.”
“பாலிடெக்னிக் மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் உனக்கென்ன வந்தது?”
“எல்லோரும் மாணவர்கள்தானே அம்மா! அவர்களுக்கு பிரச்னை வந்த போது நாங்கள் கைகொடுத்தால் எங்களுக்கு பிரசனை வந்த போது அவர்கள் உதவி செய்வார்கள்.”
“எல்லோரும் சேர்ந்து வருடம் முழுவதும் காலேஜுக்கு போகாமல் இருந்துவிடலாம்.”
“காலேஜுக்கு போகவிக்லை என்றால் நஷ்டம் எங்களுக்குத்தானே?”
“அது உங்களுக்குத் தெரிந்தால் வேறு நன்மை என்ன? நான் படித்துக் கொண்டிருந்த நாட்களில் கல்லூரில் எந்த போராட்டம் நடந்தாலும் நான் மட்டும் கல்லூரிக்கு போகாமல் இருந்ததில்லை.” பெருமையுடன் சொன்னாள் வசந்தி.
“போதும். நிறுத்து, சின்னக் குழந்தையா என்ன?” வசந்தி சிரிப்பை அடக்கிக் கொண்டே கோபமாக பார்க்க முயற்சி செய்தாள்.
தாயை பேச்சில் ஆழ்த்தும் முயற்சியில் சவிதா கேட்டாள். “நீ படிக்கும் நாட்களில் எதற்காக போராட்டம் நடந்தது அம்மா?”
“ஏதோ ஒரு காரணம். மாணவர்கள் போராட்டம் நடத்தாமல் இருப்பார்களா? நான் பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் போது பெரிய போராட்டம் நடந்தது ஹோட்டலில் விலையை உயர்த்திவிட்டார்கள் என்று. எங்க கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருத்தி அருணா என்று பெயர். உண்ணவிரதம் இருந்தாள். கடைசியில் ஹோட்டல்க்காரர்கள் விலையை குறைத்தார்கள். அன்று அந்தப் பெண் அருணாவை லாரிலேயோ காரிலேயோ மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து ஊர்வலமாக அழைத்துப் போனார்கள். அந்தப் பெண் ரொம்ப உயர்ந்தவள் என்று ரோகிணியும், இல்லை என்று நானும் இரண்டுநாட்களுக்கு சண்டை போட்டுக் கொண்டோம். நான் படிக்கும் நாட்களில்தான் வைசாக் ஸ்டீல் போராட்டம் நடந்தது. ஸ்டீல் ·பேக்டரி ஆந்திர மாநிலத்திற்குதான் சொந்தம் என்று முழக்கங்கள் செய்தார்கள். எங்க கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் அருணா, ஜான்ஸி, மருத்துவக் கல்லூரியைச் சேரந்த உஷா, ஏ.சி. கல்லூரியைச் சேர்ந்த சரோஜினி, ஹோமலதா எல்லோரும் ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து லெக்சர் கொடுப்பார்கள். படிப்பு வீணாகிறது என்று நாங்கள் நொந்துகொள்வோம். ஏதாவது ஒரு விஷயத்திற்க ஸ்ட்ரைக் செய்துக் கொண்டே இருப்பார்கள்.” வசந்தி கடந்த காலத்து நினைவுகளில் மூழ்கிவிட்டாள்.
“அப்படி செய்யவில்லை என்றால் ஸ்டீல் ·பேக்டரி வந்திருக்காது இல்லையா அம்மா?” தாயின் நினைவுகளை கலைத்துக் கொண்டிருப்பது தெரியாமல் சவிதா சொன்னாள்.
“என்னவோ தெரியாது சவிதா! எனக்கு இந்த அரசியலைக் கண்டாலே பயம்! இந்த அரசியலில் இறங்கிதான் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டிய டாக்டர் பாஸ்கர் ராவ் அநியாயமாக இறந்து போய் விட்டார். எவ்வளவு நல்ல மனிதர் தெரியுமா? பார்த்தாலே அவருடைய நல்லதனம் தெரிந்து போய்விடும். அப்படிப்பட்டவரை கொலை செய்து விட்டார்கள். நீ பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பேப்பரில் அந்த செய்தி வந்தது. அதற்கு முன்பு அவர்கள் உங்க பாட்டியின் பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள். பேப்பரில் அந்த செய்தியை படித்துவிட்டு உங்க தாத்தா அன்று முழுவதும் சாப்பிடவில்லை. அவரைப் போய் கொன்றுவிட்டார்களே என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார். அந்த நாட்களில் அரசியல் பாதிப்பு அப்படியெல்லாம் இருந்தது.”
“அம்மா! நீ சொல்வது சாகன்டி பாஸ்கர்ராவ் பற்றியா?
“இருக்கலாம். அவருடைய வீட்டு பெயர் உனக்கு எப்படி தெரியும்?”
சவிதா உற்சாகத்தை அடக்க முடியாமல் தாயைக் கட்டிக் கொண்டாள். “அம்மா! அவரை உனக்கு தெரியுமா? உன்னைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கு” என்றாள்.
“உனக்கு எப்படி அவரைப் பற்றி தெரியும்?” வசந்தி வியப்புடன் கேட்டாள்.
“அவர் மக்களுக்காக உயிரை இழந்தார் இல்லையா? அதனால் மக்களுக்கு தெரியும். அவரைப் பற்றி நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்” என்றாள்.
சவிதா அரசியலில் ஈடுப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தது முதல் வசந்திக்கு கையும் காலும் ஓடவில்லை. இத்தனை நாளும் சவிதா இன்ஜினியரிங் முடிப்பாள். மிஞ்சிப் போனால் காதல் திருமணம் செய்து கொள்வாள் என்று நினைத்திருந்த வசந்திக்கு இந்த விஷயம் மேலும் ஆபத்து விளைவிக்கக் கூடியதாக தோன்றியது.
தான் சொன்னால் கேட்டுக் கொள்ளும் நிலையில் சவிதா இல்லை.
அப்பா சொன்னால் கேட்டுக் கொள்வாளோ என்னவோ. சுரேஷிடம் இந்த விஷயத்தை யார் போய் சொல்லுவார்கள்? சொன்னால்தான் என்ன செய்ய முடியும்? மற்றவர்கள் சொன்னால் இந்தப் பெண் கேட்டுக் கொள்வாளா?
வசந்தியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். அவளுக்கு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த விபத்தை விட இது பெரிய ஆபத்தாக தோன்றியது. படிப்பு வீணாகிவிடும் என்பதை விட அரசியலில் மூழ்கி அநியாயமாக இறந்து போய் விடுவாளோ என்று பயந்து நடுங்கினாள் வசந்தி.
ஒரு வாரமாக சவிதா காலையில் டிபனை சாப்பிட்டு விட்டுப் போனால் மறுபடியும் இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாள். வந்த பிறகு அன்றைக்கு நடந்த சமாசாரங்காள எல்லாம் விலாவாரியாக தாயிடம் சொல்லுவாள். எந்த கல்லூரிகளுக்கு போனார்கள்? அங்கே என்வெல்லாம் பேசினார்கள் என்று. எப்படி முழக்கம் போட்டார்கள், சிநேகிதிகள் என்ன சொன்னார்கள், போலீஸார் எப்படி நடந்து கொண்டார்கள் என்றும் விவரமாக தெரிவிப்பாள்.
வசந்திக்கு மனதில் பயமாக இருந்தாலும் சவிதா சொல்லும் விஷயங்களை ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வாள். சவிதா அவளுக்கு புதிய உலகத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். அந்த உலகத்தைப் பற்றி அவளுக்கு தெரியாததால் பயமாக இருந்தாலும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருந்தது. சவிதா அந்தப் பக்கம் போகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அவளுடைய எண்ணத்திற்கும், சவிதா சொல்லும் விஷயங்களில் ஏற்படும் ஈர்ப்புக்கும் நடுவில் நலிந்து போய்க் கொண்டிருந்தாள் அவள். கடைசியில் சவிதா அதைப் பற்றி பேசவில்லை என்றால் கேட்டுத் தெரிந்துகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டாள் அவள்.
நாளேடுகளில் மாணவர்களுடைய போராட்டத்தைப் பற்றிய செய்திகளை படிப்பது, அவற்றுடன் மற்ற செய்திகளை படிப்பது பழக்கமாகிவிட்டது. சவிதாவின் சிநேகிதிகள் வந்து பொது விஷயங்களைப் பற்றி பேசும் போது உற்சாகமாய் இருந்தது, தினமும் யாரோ ஒருத்தர் வந்து கொண்டுதான் இருந்தார்கள். ஏதேதோ பேசிக் கொண்டுதான் இருந்தார்கள்.
ஆரம்பகாலத்தில் அவர்களுக்கு முன்னால் வருத்தமாக தென்படக் கூடாது என்றும், கலங்கிவிடக் கூடாது என்றும் பழைய நினைப்புகளை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு அவர்களிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள். நாளாக நாளாக அவள் வருத்தமாக இருக்கும் நேரம் குறைந்துவிட்டது.
மாணவர்களின் போராட்டம் முடிய ஒரு மாதமாகிவிட்டது. மாணவர்களின் கோரிக்கைகளை சிலதை ஏற்றுக் கொண்டார்கள். சிலது மறுக்கப்பட்டன. ஏற்றுக் கொண்டவை முக்கியமானவை என்பதால் மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டார்கள்.
போராட்டம் முடிந்த அன்று மறுபடியும் இருபத்தைந்து பேராவது வந்து முன் அறையில் கூடினார்கள். இந்த முறை வசந்தி அவர்களுக்கு டீயைப் போட்டுக் கொடுத்தாள். அவர்களும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டே கோப்பையை வாங்கிக் கொண்டார்கள். அந்த அபிமானத்தைக் கண்டபோது வசந்திக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
“எங்க அம்மா ரொம்ப நல்ல அம்மா” என்று சவிதா கன்னத்தில் முத்தமிட்ட போது வசந்திக்கு பெருமையாகவும், வெட்கமாகவும் இருந்தது. கோப்பைகள் போதிய அளவு இல்லாததால் சிலர் குடித்த பிறகு கோப்பைகளை அலம்பி மீதி இருந்தவர்களுக்கு கொடுக்க வேண்டியதாயிற்று.
வீணா, மாதவி, சந்திரா, ஸ்ரீனிவாஸ், கோபி கோப்பைகளை அலம்பி வைத்ததும் வசந்தி டீயை நிரப்பினாள். எல்லோரும் டீயை குடித்த பிறகு அந்த அறையின் வாசற்படியில் சாய்ந்துக் கொண்டு உட்கார்ந்தபடி எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி.
எல்லோரும் மறுபடியும் பேச்சுவார்த்தையில் மூழ்கிவிட்டார்கள்.
எல்லோருமாக சேர்ந்து இந்த போராட்டம் நடந்த காலத்தில் கன்வீனர் ஆக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற பையனை விமரிசித்தார்கள்.
கையேட்டுப் பத்திரங்கள் தாமதமாகிவிட்டன.
கல்லூரிகளுக்குப் போகும் முன்னால் சரியாக திட்டம் போடவில்லை.
யார் எந்த கல்லூரிக்கு போகணும் என்று முன்பே தீர்மானிக்காததால் குழப்பமாகிவிட்டது.
எந்த பொறுப்பு யாருக்கு என்ற விஷயத்தில் தெளிவு இல்லை.
இந்த வேலையை நீ தான் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லப் படவில்லை.
இப்படி பலவதமான குற்றச்சாட்டுகளுடன் கிருஷ்ணமூர்த்தியை தாக்கினார்கள்.
கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொண்டான். இந்த அனுபவத்தால் எதை எப்படி செய்யணுமோ பாடம் தெரிந்துக் கொண்டதாக சொன்னான்.
“அப்பாடா” என்ற வசந்தி நிம்மதியாக மூச்சை விட்டுக் கொண்டாள். எங்கே சண்டையில் போய் முடியுமோ என்று அவள் பயந்து கொண்டிருந்தாள். அதற்குள் கோபால் என்ற இளைஞன் எழுந்து கொண்டான். “தவறு நடந்து விட்டது என்று சொன்னால் சரியாகிவிடுமா. ஆன நஷ்டம் ஆகிவிட்டது இல்லையா?” என்றான்.
“ஆமாம். நடந்து விட்டது. இனி மேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளணும்” என்றான் கிருஷ்ணமூர்த்தி.
“இப்போ நஷ்டம் வந்தது உண்மைதானே.”
“ஆமாம். அதற்கு என்ன செய்ய முடியும்?”
“அப்படி சொன்னால் எப்படி? அடுத்த தட¨யும் தவறுகளை செய்து விட்டு மறுபடியும் இதே பதில் வந்தால்?”
“தவறுகள் நடந்தால் அப்படி நினைக்காமல் வேறு என்ன செய்ய முடியும்?”
“தவறுகள் செய்வானேன்?”
“சரியான வழிமுறைகள் தெரியாததால்.”
“இல்லை. பிரச்னையை சரியாக புரிந்துக் கொள்ளாததால். கார்ல் மார்க்ஸ் என்ன சொன்னார் தெரியுமா…” என்று தொடங்கிய கோபால் விடாமல் பேசிக் கொண்டிருந்தான். வசந்திக்கு எதுவும் புரியாததால் சலிப்படைந்து உள்ளே பொனாள்.
ஒரு மணி நேரம் கழித்து இரவுக்கான சமையலை முடித்துவிட்டு அவள் வரும் போது எல்லோரும் கிளம்பிப் போனார்கள். வீணா மட்டும் தங்கிவிட்டாள்.
இருவரும் சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்த போது வசந்தி ” அந்தப் பையன் கோபால் என்ன தான் சொல்ல வருகிறான்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்று வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.
“சரிதான். எங்களுக்கே புரியவில்லை. உனக்கு எப்படி புரியும்? இந்த போராட்டத்திற்கு தான் தலைமை வகித்திருந்தால் இன்னும் சிறப்பாக நடந்திருக்கும் என்பது அவனுடைய எண்ணம்” என்றாள் சவிதா.
“போகட்டும். இப்படி செய்யலாம் என்று முன்னாடியே சொல்லியிருந்தால் அதன்படி செய்திருப்போம் இல்லையா? ஏன் சொல்லவில்லை? சொன்னாலும் நாம் கேட்டுக் கொள்ளவில்லை என்றால் அப்போ சொல்லணுமே ஒழிய தவறு முழுவதும் நம்முடையதுதான் என்பது போலவும், எல்லாம் தெரிந்த ஞானி போலவும் பேசினால் எப்படி?”
“தலைமை பதவில் இல்லை என்றால் சிலருக்கு வேலை செய்ய பிடிக்காது” என்றாள் சவிதா.
“தலைமை என்ற பேச்சே இல்லாமல், ஒருத்தன் சொல்லி மற்றவர்கள் அதன்படி நடக்கணும் என்று இல்லாமல் எல்லோரும் சேர்ந்து யார் யார் எந்த வேலையை செய்ய வேண்டுமோ முடிவு செய்யலாம் இல்லையா? நான் இந்த வேலையைச் செய்கிறேன் தானாக ஏற்றுக் கொள்ளலாம் இல்லையா?”
“அப்போ யாரும் எதையும் செய்யாமல் இருந்துவிட்டால்? அடுத்தவர் செய்வார்கள் என்று சும்மா இருந்துவிட்டால்?”
“யாரும் எதையும் செய்யாமல் எப்படி இருப்பார்கள்? இது போன்ற அமைப்புகளில் சேர்ந்ததே ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்று தவிப்பு இருப்பதால்தானே? வேலைக்கு டிமிக்கி கொடுப்பவர்கள் என்பது போல் பேசுகிறாயே?” என்றாள் வீணா.
சவிதா சிரித்துவிட்டாள்.
வசந்தி இருவரையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டே வசந்தியையும் மெதுவாக தங்களுடைய பேச்சில் கலந்துக் கொள்ளச் செய்தார்கள். பேச்சை தொடர்ந்து கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள்.
வீணா அன்று அங்கே தங்கிவிட்டாள்.
“அம்மா! நாங்கள் முன் அறையில் படுத்துக் கொள்கிறோம்” என்றபடி தலையணை போர்வைகளை எடுத்துக் கொண்டு போனாள் சவிதா.
வசந்தி தனியாக எஞ்சியிருந்தாள். அவர்கள் இருவரும் தனியாக பேசிக் கொள்ளணும். தான் இருந்தால் இடைஞ்சல். தன்னுடன் சாதாரணமான விஷயங்களை எல்லாம் பேசுவாள். தனிபட்ட விஷயங்கள், மனதில் இருக்கும் விஷயங்கள் எதாவது பேசிக் கொள்ளணும் என்றால் தன்னுடைய சிநேகிதிகளுடன்தான் பேசுவாள். தனக்கு அப்படி தனியாக பேசணும் என்றால் யார் இருக்கிறார்கள்? சுரேஷ் இருந்தால் அவனிடம் பேசியிருப்பாளோ? சவிதா இப்படி இருக்கிறாள். அவள் சிநேகிதி இப்படி சொன்னால் என்று பகிர்ந்துக் கொண்டு இருப்பாளோ? இத்தனை வருடங்கள் செய்த குடித்தனத்தில் சுரேஷ¤டன் தான் பகிர்ந்துகொண்டவை என்ன?
எப்பொழுதாவது குழந்தைகளைப் பற்றி பேசப் போனால் காதில் வாங்கிக் கொள்ளமாட்டான். சவிதாவைப் பற்றி கவலைப் பட்டால் “அவளைப் பற்றி கவலைப் படாதே. ரொம்ப புத்திசாலி” என்று முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்.
“குழந்தைகளுக்கு துணிமணி வாங்கணும் என்றோ, ஏதாவது பொருள் வாங்கணும் என்றோ சொன்னால் “தாராளமாய் வாங்கிக் கொள். நாளைக்கு பணம் தந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு தூங்க முற்படுவான், இல்லையா வசந்தியை அருகில் இழுத்துக் கொள்வான்.
கடந்த ஒரு மாதமாக சவிதா சொல்லி வருவது போல் சுரேஷ் தன்னிடம் எந்த விஷயத்தையும் சொன்னதில்லலை. தன்னுடைய உலகம் என்னவோ, தன் எண்ணங்கள் என்னவோ எதையும் சொன்னதில்லை. இப்போ தனிமை தன்னை வாட்டுவானேன்? சவிதா தன்னுடைய சிநேகிதியுடன் பகிர்ந்துகொள்வது போல் தானும் தன்னுடைய சிநேகிதிகளுன் பகிர்ந்துகொள்ளலாம் இல்லையா? வசந்தி விளக்கை போட்டுக் கொண்டு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக் கொண்டு ரோகிணிக்கும், சாந்தாவுக்கு கடிதம் எழுதத் தொடங்கினாள்.
“அம்மா! இன்னும் தூங்கவில்லையா?” சவிதா குரல் கொடுத்தாள்.
“ரோகிணிக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தூங்குங்கள்” என்றாள் வசந்தி, எழுதிக் கொண்டே.
முன் அறையில் விளக்கு அணைக்கப்பட்டு விட்ட பிறகும், ஒரு மணி வரையில் வசந்தி தன்னுடைய தற்போது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் விதத்தைப் பற்றி, சவிதா மற்றும் அவளுடைய சிநேகிதிகளைப் பற்றி தன்னுடைய எண்ணங்களைப் பற்றி விவரமாக திருப்தியுடன் மூச்சு விட்டுக் கொண்டாள். அதற்கு பிறகு தூங்கிவிட்டாள்.
அன்று மாலை கல்லூரியிலிருந்து வந்த சவிதா தனக்கு வந்த கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்த போது வசந்தி காபி கலந்து எடுத்து வந்தாள். மறுபடியும் சமையலறையில் வேலையை முடித்துக் கொண்டு முன் அறைக்கு வந்த போது சவிதா கையில் கடிதத்தைப் பிடித்தபடி கட்டிலில் குறுக்கே படுத்திருந்தாள். காபியை குடிக்கவே இல்லை.
“என்ன சவிதா? ஏன் இப்படி படுத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று அருகில் வந்தாள் வசந்தி.
“ஒன்றும் இல்லை அம்மா! என் சிநேகிதி கடிதம் போட்டிருக்கிறாள். மனசு சரியாக இல்லை” என்று எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.
“”யாரு? என்ன எழுதியிருக்கிறாள்?”
“ராஜலக்ஷ்மி என்று, இங்கே எங்களுடன் வேலை பார்த்தாள். பி.எஸ்ஸி. படித்தாள். கம்ப்யூட்டர் டிரைனிங்கிற்காக சென்னைக்கு போனாள். ஆறு மாதங்களாச்சு போய். கடிதத்தை நீயே படித்துப் பாரு. நான் குளித்துவிட்டு வீணாவை பார்த்துவிட்டு வருகிறேன்” என்று எழுந்துகொண்டாள்.
என்றும் இல்லாதவிதமாக சவிதாவின் முகம் கம்பீரமாக, பதற்றத்துடன் தென்பட்டதும் வசந்தி அந்தக் கடிதத்தை உடனே படிக்கத் தொடங்கினாள்.
சவிதா!
இந்த கடிதத்தை பயங்கரமான மனநிலையில் இருக்கும் போது எழுதுகிறேன். நான் இங்கே வந்து ஆறுமாதங்களாகிவிட்டன. இந்த அனுபவத்திற்காகத்தான் இங்கே வந்தேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எப்படி எழுதுவது என்று கூட எனக்குப் புரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்னால் நவீன் இங்கே வந்தான். அமெரிக்காவுக்கு போகும் முன் ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வதற்காக என்னிடம்தான் வந்தான்.
உங்க எல்லோரையும் விட்டு பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதாலோ என்னவோ நவீனைக் கண்டதும் உயிர் திரும்பி வந்தாற்போல் இருந்தது. ரொம்ப சந்தோஷமாக வரவேற்றேன். அன்று விடுமுறை எடுத்துக் கொண்டேன். இருவரும் சேர்ந்து அவனுடைய வேலை விஷயமாக ஊரைச் சுற்றினோம். வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தோம். ஏதோதோ பேசிக் கொண்டு பொழுதை போக்கினோம்.
எனக்கும் நவீன் என்றால் பிடிக்கும்தான். நல்ல நண்பன் என்றும், புது எண்ணங்களைக் கொண்டவன் என்றும், ரொம்ப புத்திசாலி என்றும் நல்ல அபிப்பிராயம் இருந்தது. நான் நவீனை காதலிக்கிறேனா என்று எனக்கு நானே கேட்டுக் கொண்ட சந்தர்ப்பங்களும் இருக்கு. அப்போ நம் குரூப்பில் எல்லோரிடமும் அப்படிப் பட்ட நட்புதான் இருந்தது. அதனால் அந்த விஷயத்தைப் பற்றி நான் அதிகமாக யோசிக்கவும் இல்லை.
அப்படிபட்ட நட்பு இருந்ததால் அவனைப் பற்றி எந்த பயமும் இருக்கவில்லை. நீயும் நானும் ஒரு வீட்டில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன்.
ஆனால் நவீன் அப்படி இல்லை. நாங்கள் பேசி முடித்துவிட்டு படுத்துக் கொண்ட சற்று நேரத்திற்கு நவீன் “எனக்கு பயமாக இருக்கு” என்றான்.
நான் வியப்படைந்து “எதுக்கு?” என்றேன்.
“இது போல் உன் பக்கத்தில் படுத்துக் கொண்டு என்னால் சாதாரணமாக இருக்க முடியுமா? காலையில் எழுந்ததும் உன் முகத்தை எப்படி பார்ப்பது? ரொம்ப அமைதியில்லாமல் தவிப்பாய் இருக்கு” என்றான்.
இனம் புரியாத உணர்வு என் உடலை, உள்ளத்தை தழுவியது. திடீரென்று அவன் ஒரு ஆண், நான் ஒரு பெண் என்ற விஷயம் நினைவுக்கு வந்து என் உடல் சிலிர்த்தது. அது போன்ற சிலிர்ப்பை அதற்கு முன் நான் அனபவித்தது இல்லை.
அதற்கு முன் ஓரிருவர் என்னை காதலிப்பதாக தொல்லை கொடுத்ததும், கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வேண்டுகோள் விடுத்ததும் உனக்கு தெரியும். அதையெல்லாம் நான் முறுவலுடன் மறுத்ததும் உனக்கு தெரியும். எப்போதும் என் மனம் இது போல் சிலிர்த்தது இல்லை. நவீனிடம் எனக்கு இருந்த கௌரவமோ, நட்போ, காலையிலிருந்து சேர்ந்து சுற்றியதால் ஏற்பட்ட நெருக்கத்தின் பாதிப்போ … ஏதோ ஒன்று. என் மனம் அவன் வார்த்தைகளுக்கு நிலை தடுமாறியது.
பதில் பேசாமல் அப்படியே படுத்திருந்தேன்.
“ஏன் பேச மாட்டேங்கிறாய்?” என்றான் அவன்.
“என்ன பேசட்டும்?” என்றென் வலிய வரவழைத்துக் கொண்ட சலிப்புடன்.
இரண்டு நிமிடங்கள் கழித்து அவன் என் அருகில் வந்தான். என் கையை பற்றிக் கொண்டான். நான் அப்படியே இருந்தேன். என் இதழ்களில் முத்தம் பதித்தான். எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. என்னையும் அறியாமல் நான் அவன் கன்னத்தில் முத்தம் பதித்தேன். இரண்டு பேரும் கொஞ்ச நேரம் எங்களை மறந்துவிட்டோம். பிறகு அவன் சாரி என்ற போது “இவ்வளவு நல்ல அனுபவத்தை பகிர்ந்துகொண்ட பிறகு சாரி எதற்கு?” என்று தலையில் குட்டிவிட்டு அன்புடன் நெற்றியில் முத்தமிட்டேன். காலையில் எழுந்த பிறகு அவன் என்னவோ போல் இருந்தான். சீக்கிரமாக புறப்படுவதற்கு தயாரானான். அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவனுடைய போக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதிகம் பேசாமலேயே கிளம்பிப் போய்விட்டான்.
ஊருக்கு போன பிறகு கடிதம் எழுதுவான் என்று எதிர்பார்த்தேன். கடிதம் வந்தது.
அன்று தான் அவசரப்பட்டு விட்டதாகவும், என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும் யோசனை தனக்கு இல்லை என்றும், இருபதாம் தேதி அன்று தான் அமெரிக்காவுக்கு கிளம்புவதாகவும் எழுதியிருந்தான். இன்றுதான் இருபதாம் தேதி. அவன் அமெரிக்காவுக்கு கிளம்பிவிடுவான். என் மனம் அமைதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
அவனுக்கு என் மீது அன்பு இல்லை. அப்படி இருக்கும் போது அன்று ஏன் அப்படி நடந்து கொண்டான்?
ஒரு பெண்ணாக தவிர ஒரு சிநேகிதியாய் ஏன் என்னை பார்க்க முடியவில்லை?
என்னை எந்த அளவுக்கு அவமானப்படுத்துகிறோம் என்று அவனுக்கு தெரியாதா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?
அவன் என்னை காதலிக்கிறான் என்று கண்மூடித்தனமாக எப்படி நம்பினேன்?
காதலிக்கவில்லை என்றால் இவ்வளவு உரிமையை எப்படி எடுத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையா? அவன் என் நண்பன் … நல்லவன் என்ற விசுவாசமா?
இல்லை, அவன் என் கண்களுக்கு ஒரு ஆண்மகனாக தென்பட்டானா? காதலைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அந்த நிமிஷத்தில் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டேனா?
என்னை அவன் முத்தமிட்ட போது நான் தடுக்கவில்லை. மேலும் அந்த முத்தத்தால் பரவசமடைந்துவிட்டேன். இப்போ நினைத்தாலும் அந்த அனுபவம் மயக்கத்தை தருவதாகத்தான் இருக்கிறது.
அவனை என்னவென்று கடிந்து கொள்வது என்று தெரியவில்லை. அசல் திட்டலாமோ கூடாதோ என்று கூட தெரியவில்லை. மனம் முழுவதும் துக்கம் நிரம்பியிருக்கிறது. இந்த அனுபவத்தை எப்படி எடுத்துக் கொள்வது, எப்படி அனலைஸ் செய்வது என்று புரியாத குழப்பம்.
சாதாரண பெண்ணைப் போல் அவன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று அவனை வசைபாடி, அழுது புலம்பி திருப்திபட்டுக் கொள்ள முடியவில்லை. தவறு செய்துவிட்டேன் என்று என்னையே நான் குறை காணமுடியவில்லை.
ஆனால் அவன் என்னை அவமானப்படுத்திவிட்டதாக கோபமும், வேதனையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன.
நானே முட்டாள்தனமாக நடந்துகொண்டு அவனுக்கு வாய்ப்பு அளித்துவிட்டேனோ என்று தோன்றுகிறது.
எது எப்படி இருந்தாலும் இத்தனை நாளாக நான் “திருமணமே செய்து கொள்ளமாட்டேன்” என்று பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் எல்லாம் பலவீனமானவை என்றும், உள்ளூர ஆணின் துணைக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் என்ற விஷயம் புரிந்து விட்டது. இந்த கசப்பான அனுபவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்த விடுப்பட்ட பிறகு அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.
உன் அபிப்பிராயத்தை எழுது.
உன்,
ராஜலக்ஷ்மி
கடிதத்தை முடித்த பிறகு வசந்திக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. யார் இந்த பைத்தியக்காரப் பெண்? அவள் வாழ்க்கை நாசமாகிவிட்டதே? அவன் எவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட்டு போய்விட்டான்?
இப்போ என்ன செய்யப் போகிறாள்? அந்தப் பெண் எழுதியதைப் பார்த்தால் தைரியமாகத்தான் இருப்பாள் போல் தோன்றுகிறது. புத்திசாலியாக இருந்தாலும் சில சமயம் இப்படி நிகழ்ந்து விடுமோ என்னவோ?
வசந்தி யோசனைகளிலிருந்து மீளுவதற்குள் வீணா, அவள் பின்னாலேயே ரமணன் வந்தார்கள். இரண்டு பேரையும் அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னாள் சவிதா.
வீணா படித்து முடித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்து போனாள்.
“எதற்காக இரக்கம் காட்டுகிறாய்? என்ன நடந்துவிட்டது இப்போ?” என்றாள் சவிதா.
“என்ன நடந்ததாவது? அநியாயம் நடந்துவிட்டது இல்லையா?
“அநியாயம் நடந்ததா? அவன் அவமானப்படுத்தினான். அவ்வளவுதானே?”
“அவமானம்தானா? அதைவிட வேறு ஒன்றும் இல்லையா?” ரமணனின் குரல் பொறுமையின்றி ஒலித்தது.
“என் பார்வையில் அவ்வளவுதான்.”
“என் பார்வையில் அப்படியில்லை. அந்தப் பெண்ணின் வாழ்க்கை நாசமாகிவிட்டது. ஒரு கரும்புள்ளி விழுந்துவிட்டது. அந்த கறையை எதைக் கொண்டும் போக்க முடியாது. நாளைக்கு அவளுக்கு திருமணம் ஒரு பிரச்னையாக இருக்கும்.”
“மைகாட்! நீ மேற்கொண்டு ஒரு வார்த்தை பேசினால் என் கையால் உதை வாங்கப் போகிறாய் ரமணன்! எவ்வளவு அர்த்தம் இல்லாமல் பேசுகிறாயோ உனக்கே தெரியவில்லை.” சவிதா கோபமாய் விழித்தாள்.
“உனக்குத்தான் யதார்த்தம் புரியவில்லை. எவனோ அனுபவித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது அவ்வளவு எளிது இல்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் கல்யாணம் செய்து கொள்ளும் பெண் கன்னியாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். என்னுடன்தான் அந்தப் பெண்ணுக்கு முதல் அனுபவம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பேன்.”
“நீ வாயை மூடிக் கொண்டு வெளியில் போய்விடு. மேற்கொண்டு ஒரு வார்த்தை பேசினாய் என்றால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றபடி வேகமாக எழுந்தாள் சவிதா.
“சும்மாயிரு சவிதா! என்ன இது?” வீணா சவிதாவைத் தடுத்தாள்.
“உங்களுடைய ஆவேசம் தணிந்த பிறகு நிதானமாக யோசித்துப் பாருங்கள். என் வார்த்தைகளில் இருக்கும் உண்மை உங்களுக்கும் புரியும்” என்று சொல்லிக் கொண்டே புறப்படுவதற்காக எழுந்துகொண்டான் ரமணன்.
“ரமணன்! தயவுசெய்து இந்த விஷயத்தை நீ வெளியில் எங்கும் பேசாதே” என்றாள் வீணா.
“ஏன்? எதற்காக அவ்வளவு பயம்? இருந்தாலும் நான் அந்த அளவுக்கு பண்பு இல்லாவதவன் இல்லை” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
சவிதாவுக்கு ஏனோ துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது.
வசந்தியும், வீணாவும் “என்ன இது பையித்தியம் போல் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” என்று சமாதானப்படுத்திய போது மேலும் அழுதாள்.
“இல்லை அம்மா! எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. ஒரு விஷயம் நடந்துவிட்டது. ராஜலக்ஷ்மி அதை அவமானமாக எடுத்துக் கொண்டாள். நானும் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன். ஆனால் ரமணன்? பண்பாளன், முற்போக்கு எண்ணங்கள் உடையவன், யூனியனில் வேலை பார்ப்பவன் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொண்டான்? ராஜலக்ஷ்மியை என்னவெல்லாம் சொன்னான்? கறை படிந்துவிட்டது, கற்பிழந்துவிட்டாள், யாரோ அனுபவித்தவளை எவன் பண்ணிக் கொள்வான், எனக்கு கன்னிப்பெண்தான் வேண்டும்… எத்தனை பேச்சுக்கள்? எவ்வளவு வெட்கமில்லாமல் பேசிவிடட்டான்? அந்தப் பெண்ணின் வாழ்க்கை அந்த ஒரு இரவின் மீது ஆதாரப்பட்டிருப்பது போல். இவர்கள் பேசும் பேச்சுக்கள், ஆற்றும் சொற்பொழிவுகள் எல்லாமே ட்ராஷ்! ஆண்கள் இப்படித்தான் யோசிப்பார்கள் என்று தெரிந்த எந்தப் பெண்ணும் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் தற்கொலை செய்துகொள்ளாமல் வேறு என்ன செய்வாள்? நவீன், ரமணன் இரண்டு பேருமே அசலான ஆண்கள். இவர்களுடன் எவ்வளவு அப்பாவியாக நட்பு வைத்திருந்தோம்? தன்னைபற்றி உலகம் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாத ராஜலக்ஷ்மி கூட ரமணனின் வார்த்தைகளைக் கேட்டு தாங்கிக் கொள்வாள் என்று நான் நினைக்கவில்லை. புரட்சி எழுத்தாளர்களின் படைப்புகளை சீரியஸாக டிஸ்கஸ் செய்யும் இந்த இரண்டு பேரும் இந்த விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.” சவிதா தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“இவர்களைப் பற்றி யோசித்து மனதை பாழடித்துக் கொள்ளாதே. ராஜலக்ஷ்மி தைரியமாகத்தான் இருக்கிறாள். அவளுக்கு மேலும் தைரியம் சொல்லி கடிதம் எழுதுவோம். முடிந்தால் சென்னைக்கு போய் அவளை இங்கே அழைத்து வருவோம். மனிதர்களை மாற்றுவது சுலபமான காரியம் இல்லை. பொறுமையாக மாற்றத்தை வரவழைக்கணும்.” வீணா சவிதாவின் தோளில் ஆதரவுடன் கையை பதித்தாள்.
“பொறுமையை கடைபிடித்து நவீன், ரமணனிடம் மாற்றத்தை வரவழைக்கணுமா?” திகைத்துப் போனவளாக கேட்டாள் சவிதா.
“அவர்கள் ஏதோ ரொம்ப பெரியவர்கள் என்று நினைப்பதுதான் நாம் செய்த தவறு. மற்ற விஷயங்களில் எப்படி இருந்தாலும் பெண்களைப் பற்றி யோசிப்பதில் மட்டும் அவர்கள் பின் தங்கி இருக்கிறார்கள். அவர்களை மாற்றித்தான் ஆகவேண்டும்” என்றாள் வீணா.
“மாற்றிப் பாரு, உனக்கு பொறுமை இருந்தால்” என்றபடி போய் படுத்துக் கொண்டாள் சவிதா.
ராஜலக்ஷ்மிக்கு அப்போ நடந்த அவமானத்தை விட இப்போ ரமணன் செய்த அவமானம் அவளை அதிகமாக பாதித்துக் கொண்டிருந்தது.
ஒரு சம்பவத்தை வார்த்தைகள் எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றன?
அந்த விஷயத்தை ராஜலக்ஷ்மி அவமானமாக நினைத்து வேதனைப் படுகிறாள்.
ரமணன் அதை ஒரு களங்கமாக, அழிக்க முடியாத கறையாக நினைக்கிறான்.
ராஜலக்ஷ்மியைப் போல், தன்னைப் போல் யோசிப்பவர்கள் இருப்பது அரிதோ?
சமுதாயம் ரமணனைப் போல்தான் யோசிக்கும். கன்னிப்பெண் … கற்பு … கறை …இந்த வார்த்தைகளைச் சுற்றி பிணைந்திருக்கும் எண்ணங்கள் எவ்வளவு கடினமானவை?
அவற்றைத் தகர்த்தெறிவது எவ்வளவு கஷ்டமோ இன்று புரிந்தது, ரமணன் கூட அப்படி பேசியபோது. முதலில் ராஜலக்ஷ்மியிடம் போக வேண்டும். இந்த உளைச்சலை குறைக்க ஏதாவது செய்ய வேண்டும். இந்த யோசனையில் பசியைக் கூட மறந்துவிட்டாள் சவிதா. அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து போய்விட்டாள்.
This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
பிக்னிக்லிருந்து வந்த பிறகு வசந்தி மேலும் சோர்ந்துவிட்டாள். நேரத்திற்கு சாப்பாடு இல்லை. வீட்டு வேலைகளிடம் சிரத்தை இல்லை. எப்போதும் ஏதோ யோசனை இல்லையா அழுகை.
அண்ணனும், அண்ணியும் வந்து தைரியம் சொல்லுவார்கள். “இது போன்றவை அவ்வப்பொழுது நடந்துகொண்டுதான் இருக்கும். அதை எல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. நான்கு நாட்கள் பொறுமையாக இருந்தால் அவனே வழிக்கு வருவான்” என்பார்கள்.
“எனக்குத் தெரிந்து நான்கு மாதங்களாகிவிட்டது. அதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னாலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்றது. மெலும் நான்கு மாதங்கள் நீடித்தால் இனி அந்த உறவு சாசுவதமாகிவிட்டால்?” என்பாள்.
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. இப்படிப்பட்ட உறவுகளை ஆயிரத்தெட்டு பார்த்திருக்றோம். லட்ணமாய் இருக்கும் மனைவியை எவனாவது இழப்பனா என்ன? ஆனால் அவளுக்கு பணம் எதுவும் தாரைவார்த்துவிடாம்ல ஜாக்கிரதையாக இருக்கணும்” என்பார்கள்.
பணத்தைப் பற்றிய பேச்சை எடுத்ததும் வசந்திக்கு மூளை கலங்கிவிடும் போல் இருந்தது. “எல்லோருக்கும் பணத்தைப் பற்றிய கவலைதான். லாவண்யா, அண்ணன், அண்ணி மற்றும் எல்லோருக்கும் நீலிமா சுரேஷிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுவிடுவாளோ என்ற பயத்தைத் தவிர வேறு எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. மனுஷன்தான் முக்கியம் என்று யாருக்குமே தோன்றவில்லை தன் ஒருத்திக்கு தவிர. பண இழப்பு தனக்கு முக்கியமில்லை. “சுரேஷ் மனைவியை விட்டுவிட்டான். நீலிமாவுடன் இருக்கிறான்” என்று பத்து பேர் சொல்லுவதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
அவனுடைய வேலைகளை செய்யாமல், அவன் இல்லாமல் இந்த வீட்டில் இருப்பது ரொம்ப கஷ்டம்.
பின்னே என்னதான் செய்வது? இதே கேள்விதான் திரும்பத் திரும்ப அவள் மனதை குடைந்துக் கொண்டிருந்தது. பதில் மட்டும் தெரியவில்லை.
சுரேஷ் பெயரளவுக்கு வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.
இருவருக்குமிடையே பேச்சு வார்த்தையே இல்லை. அவனாக பேச முயன்றாலும் பதில் சொல்ல வசந்திக்குப் பிடிக்கவில்லை. அவன் அவ்வளவு ஸ்பஷ்டமாக மறுப்பை வெளிப்படுத்திய பிறகு இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று தோன்றியது.
மூளையைக் கலங்கடிக்கும் எண்ணங்களின் கொந்தளிப்புடன், தகித்துக் கொண்டிருந்த அவமானத்துடன் வாழ்வது சாத்தியம் இல்லை என்று தோன்றிவிட்டது.
“எதற்காக வாழணும்? எத்தனை நாட்களுக்கு வாழணும்? செத்துப் போனால்தான் என்ன?” சாவைப் பற்றிய நினைப்பு வந்ததும் வேட்டைக்காரனைப் பார்த்துவிட்ட முயல் குட்டியைப் போல் நடுநடுங்கிப் போவாள். இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கும். தூக்கமில்லாத இரவுகளில் பயத்தினால் நடுக்கமெடுத்து வியர்வையால் உடல் தொப்பலாக நனைந்துவிடும். அறையில் இருக்கும் ஜன்னல்கள், பொருட்கள் எல்லாம் தன்னைப் பார்த்து பரிகாசம் செய்து கொண்டே தன் மீது பாய வருவது போல் தோன்றும். பயந்து போய் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்வாள்.
உயிரோடு இருப்பதற்கு எந்த காரணமும் இல்லாததால் செத்துப் போவதில் வசந்திக்கு எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. ஆனால் எப்படி செத்துப் போவது என்று தான் தெரியவில்லை. நாள் முழுவதும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
கேஸை திறந்து விட்டு தீக்குச்சியை கொளுத்தி விடலாம்.
தூக்கமாத்திரைகளை விழுங்கிவிடலாம். உயரமான கட்டிடத்திலிருந்து குதிக்கலாம். இல்லையா குளமோ குட்டையோ பார்த்து விழுந்து சாகலாம்.
முடிந்துவிடும். வசந்தியின் கதை முடிந்துவிடும். வசந்தி இருக்க மாட்டாள். அவளுடைய துக்கமும் இருக்காது.
ஆனால்…..
“வசந்தி இறந்து போய்விட்டாள். பாவம்! கணவன் அவளை விட்டுவிட்டான் இல்லையா? அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்” என்று இரக்கம் காட்டுவார்கள்.
“செத்து எதை சாதித்தாள்? எப்படியாவது கணவனை தன் வழிக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டாமா?” என்று பழித்துக் காட்டுவார்கள்.
அதற்கு பிறகு எல்லோரும் மறந்து போய்விடுவார்கள். சுரேஷ், லாவண்யா, சவிதா எல்லோரும் சிலநாட்கள் அழுதுவிட்டு மறந்து போய்விடுவார்கள்.
அதற்காகவா தான் தற்கொலை செய்துகொள்வது?
நான் … நான் யாரு?
எதற்காக இந்த உலகிற்கு வந்தேன்? வந்ததற்கு என்ன செய்தேன்?
எனக்குக் கூட உதவி செய்ய முடியாத இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். சகலமும் என்று நினைத்த கணவனை இழந்துவிட்டேன். யாருக்கும் தேவையில்லாமல், இந்த பாரம் தங்கள் தலை மீது விழுந்து விடுமோ என்று எல்லோரும் பயந்து கொண்டிருக்கும் போது, என்னால் யாருக்கும் கடுகளவு பட பிரயோஜனம் இல்லாத போது, அந்த விஷயத்தை எல்லோரும் தன்னிடமே ஸ்பஷ்டமாக சொல்லிவிட்டதால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் செத்துப் போய்விடுவாள். அது எவ்வளவு பயங்கரமானது?
இந்த உலகில் ஒருத்தருக்குக் கூட நான் தேவையில்லையா?”
“வசந்தீ! நீ இல்லா விட்டால் நாங்கள் என்னவாகிவிடுவோம்? உன்னுடைய உதவி, உன்னுடைய இருப்பு எங்களுக்கு தேவை” என்று சொல்லக் கூடிய நபர் ஒருத்தர் கூட இல்லையா? யாருக்கும் அக்கறை இல்லாத போது நான் எதற்காக வாழணும்? யோசிக்க யோசிக்க வசந்திக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. பயத்தையும் வெற்றிக் கொண்டுவிட்ட மனக்குழப்பம் ஆக்டோபஸ் போல் வசந்தியை சூழ்ந்துக் கொண்டுவிட்டது.
ஒரு முறை சவிதாவை பார்த்து விட்டால்? தாயின் உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் முணுமுணுப்பு கேட்டது. எதற்காக சவிதாவைப் பார்ப்பது? லாவண்யாவைப் பார்த்தது போறவில்லையா? லாவண்யாவாவது சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு தன்னிடம் வரச்சொன்னாள். சவிதா அப்படி இல்லை. உடனே வேலையைத் தேடிக் கொள்ளச் சொல்வாள். சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பாள். ஏதேதோ சொல்லி தன்னை மேலும் தனிமையில் தள்ளிவிடுவாள். தன்னுடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளவே அவளுக்கு சரியாக இருக்கு. இன்னும் தன்னுடைய பாரத்தை எங்கே சுமக்கப் போகிறாள்?
என்னை யாரும் பார்த்துக் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடித்தேன். சவிதா பிறந்த போது செத்துப் பிழைத்தேன். இந்த விஷயத்தை சொன்னால் அவளுக்குப் புரியுமா? என்னுடைய மகள்கள் என்று பெருமைபட்டுக் கொள்ளும் சுரேஷ¤க்குத்தான் புரியுமா?
யாரும் தன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. யாரும் துணைக்கு வரப் போவதில்லை. உதவிகரம் நீட்டப் போவதில்லை. “கடலில் போய் குதி” என்பார்கள். “தனியாக அலைகளுடன் போராடி வெளியில் வா” என்பார்கள். “எங்களை கூப்பிடாதே. உன் வேதனையைப் பார்க்க முடியாமல் நாங்களும் கஷ்டப்படணும். எங்களுக்கு என்ன தலையெழுத்து?” என்று சலித்துக் கொள்வார்கள். வேண்டாம். யாரையும் கூப்பிட வேண்டாம். தனியாக இந்த வீட்டில் நிசப்தமாக மறைந்து போக வேண்டும்.
அழக் கூடாது. எதற்காக அழுவது? யாருகாக அழுவது? உனக்காக நீயே அழுவானேன்?
வசந்தி தூக்க மாத்திரை பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டாள். டம்ளரில் தண்ணீரை எடுத்து வந்தாள். ஒவ்வொன்றாய் விழுங்கிக் கொண்டிருந்தாள். ஒன்று .. இரண்டு.. மூன்று… நான்கு… ஐந்து … ஆறு… ஏழு …எட்டு…. ஒன்பது…பத்து….பதினொன்று….
வசந்திக்கு திடீரென்று துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. “நான் சாக மாட்டேன். வாழணும். வாழத்தான் வேண்டும்” என்று அழுது கொண்டே கையிலிருந்த பாட்டிலை வீசி விட்டு கட்டிலில் விழுந்து அழுதுக் கொண்டிருந்தாள். அழுது அழுது தன்னையும் அறியாமல் மயக்கத்தில் ஆழ்விட்டாள்.
மறுபடியும் விழிப்பு வந்த போது சுற்றிலும் மனிதர்கள். சுரேஷ், அண்ணன், அண்ணி, லாவண்யா, மனோகர். கையில் சலைன் ஏறிக் கொண்டிருந்தது. வசந்திக்கு பெரிதாக சிரிக்க வேண்டும் போல் தோன்றியது. லேசாக முறுவலித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டாள். சுரேஷ் லாவண்யாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“அம்மாவை உன்னுடன் அழைத்துப் போ லாவண்யா! கொஞ்ச நாட்களுக்கு உன்னிடம் வைத்துக்கொள்.”
“அம்மாடியோவ்! எனக்கு பயமாக இருக்கு டாடீ! அம்மா இது போன்ற காரியம் ஏதாவது செய்தால் என்னால் என்ன செய்ய முடியும்? மனோகருக்கு இதெல்லாம் பிடிக்காது.” முதல்நாளே மனோகர் எச்சரித்தது நினைவுக்கு வந்து இயலாமையுடன் பேசினாள் லாவண்யா.
வசந்தியின் அண்ணி லக்ஷ்மி கூட அதையேதான் சொன்னாள். “எங்கள் வீட்டுப் பெண் எங்களுக்கு பாரமா என்ன? ஆனால் இப்படி ஏதாவது நடந்தால் பின்னால் எல்லோரும் என்னைத்தான் சொல்லிக் காட்டுவார்கள். அந்த பழியை என்னால் சுமக்க முடியாது.”
சுரேஷ் கடைசி வாய்ப்பாக ரோகிணிக்கு ·போன் செய்தான். “வசந்தியின் நிலைமை சரியாக இல்லை. தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டாள். ஆபத்து எதுவும் இல்லை. சில நாட்கள் உங்களிடம் இருந்தால் கொஞ்சம் தேறிக் கொள்வாள்.”
ரோகிணி உடனே “இன்று இரவே கிளம்பி வருகிறேன்” என்று சொன்ன பிறகு சுரேஷ் சிறுப் பிள்ளையைப் போல் விசும்பி விசும்பி அழுதான். வசந்தி தன் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்றாள் என்ற விஷயம் அவன் இதயத்தை மலையாய் அழுத்தியது. அதை எப்படி இறக்குவது? வசந்தியை எப்படி காப்பாற்றுவது, நீலிமாவை என்ன செய்வது? இந்த நிலைமை ஏன் வந்தது? எதுவும் புரியாமல் எல்லாம் குழப்பமாக இருந்தது.
அந்த நிமிடம் ரோகிணி பெரும் துணையாக தென்பட்டாள். “நாளை காலையில் ரோகிணி வருகிறாள்.”
சுரேஷின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும் வசந்தியிடம் சலனம் ஏற்படவில்லை. அவளுடைய மூளை செயல்பட மறுத்துக் கொண்டிருந்தது. கண்ணெதிரே தென்படும் காட்சிகளை பார்த்துக் கொண்டும், பார்க்க முடியாதபோது கண்களை மூடிக் கொண்டும் காலத்தைக் கழிப்பதைத் தவிர வசந்தியால் எதையுமே யோசிக்க முடியவில்லை.
“திருச்சிக்கு வந்து பத்து நாட்கள் நிம்மதியாக என்னுடன் இருந்துவிட்டு வரலாம் வா” என்று ரோகிணி சொன்ன போதும் பற்று இல்லாமல்தான் இருந்தாள். ரோகிணி அவளுக்கு வேண்டிய உடைகளை எடுத்து வைத்தாள். வசந்திக்கு கொஞ்சம் தெம்பு வந்ததும் பயணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
நான்கு மாதங்களுக்கு முன்னால் திருச்சிக்கு போன வசந்திக்கும் இந்த வசந்திக்கும் ஒற்றுமையே இல்லை.
ரயிலில் உட்கார்ந்திருந்த வசந்திக்கு தன்னுடைய கடந்த கால தாம்பத்திய வாழ்க்கை தனக்குப் பின்னால் இடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டது போல் தோன்றியது. நிலநடுக்கம் வந்து வீடுகள் எல்லாம் சிதிலமடைந்த பிறகு அந்த இடம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாள் வசந்தி. மறுபடியும் அங்கே வீட்டை கட்டும் வாய்ப்பே இல்லையோ என்று தோன்றியது வசந்தியை பார்க்கும் போது. ரயில் செண்ட்ரலை விட்டு கிளம்பியதும் வசந்தியால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இனி சென்னை என்பதே தனக்கு இல்லையா? சென்னை என்ற வார்த்தைக்கு இனி தன் வாழ்க்கையில் இருக்கப் போகும் அர்த்தமே வேறு.
இதெல்லாம் சுரேஷால்தான் வந்தது. சுரேஷ் இல்லையென்றால் தன் வாழ்க்கையில் சென்னையும் இல்லை.
இது சுரேஷின் தவறா இல்லை தன்னுடையதா?
சென்னையின் பக்கம் ஓடிக் கொண்டிருந்த மனதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் வசந்தி களைத்துப் போய்விட்டாள்.
திருச்சிக்கு வந்து பத்துநாட்களாகி விட்டன. இந்த பத்து நாட்களில் ரோகிணி பேசுவதை கேட்பது, தன்னுடைய யோசனைகளில் மூழ்கிக் கிடப்பது தவிர வசந்தி வேறு எதுவும் செய்யவில்லை. இரவில் ரோகிணி தரும் தூக்கமாத்திரையின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். ரோகிணி வலுகட்டாயமாக சாப்பிட வைப்பதால், உணவை விழுங்கிக் கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் ரோகிணியின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதையும் தவிரக்க முடியவில்லை. ரோகிணி வேண்டுமென்றேதான் குழந்தைகளை வசந்தியிடம் அனுப்பி வைத்தாள்.
குழந்தைகளுடன் இருக்கும் போது வசந்திக்கு பொழுது நன்றாகத்தான் கழிந்து கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் உறங்க சென்றபிறகு மறுபடியும் தனிமை வந்து சூழ்ந்து கொண்டது.
ரோகிணி ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு தன் கணவனை ஆபீஸ் அறையிலிருந்து இழுத்துக் கொண்டு வருவாள். மூவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும் போது ஷியாம் கோர்ட்டில் நடந்ததை, ரோகிணி ஆஸ்பத்திரி சமாசாரங்களை சொல்லி சிரிக்க வைப்பார்கள். பிறகு ரோகிணி வசந்தியுடன் சற்று நேரம் பழைய கதைகள் எதையாவது பேசிக் கொண்டிருந்துவிட்டு தூக்கமாத்திரையைக் கொடுத்து வசந்தியை தூங்கச் செய்வாள். மறுபடியும் காலையில் தனிமை என்ற பிசாசு வசந்திக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
தான் வந்தது முதல் ரோகிணி சாந்தாவைப் பற்றி பேச்சை எடுக்காததை வசந்தி கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். தானாக சாந்தாவைப் பற்றி பேசவும் விருப்பம் இல்லை. கடைசியில் ஒருநாள் சாந்தாவிடம் தானாகவே கிளம்பினாள். தான் போகப் போவதாக ரோகிணியிடம் சொல்லவும் இல்லை.
ரோகிணி ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிப் போனதும் தானும் தயாராகி பெண்கள் கல்லூரிக்குப் போனாள். கல்லூரிக்கு விடுமறை போலும். கல்லூரி வளாகம் நிசப்த்மாக இருந்தது. கல்லூரியைத் தாண்டி குவார்ட்ர்ஸ் பக்கம் போய்க் கொண்டிருந்த போது “தான் இப்போ எதற்காக இங்கே வருகிறோம்?” என்ற யோசனை வந்ததும் நின்றுவிட்டாள். மறுபடியும் ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக நடந்து போய் சாந்தாவின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்த வேலைக்காரி பழையபடி பெயரைக் கேட்டுக் கொண்டு “உட்காருங்கம்மா” என்று சொல்லிவிட்டு சாந்தாவிடம் சொல்வதற்காக உள்ளே போனாள்.
பரீட்சை பேப்பர்களை திருத்திக் கொண்டிருந்த சாந்தா வசந்தியைப் பார்த்தும் வியப்புடன் எழுந்து கொண்டாள்.
“வசந்தி! வா உட்காரு” என்று சொல்லிக் கொண்டிருந்த சாந்தாவின் வார்த்தைகள் முடிவ¨யும் முன்பே வசந்தி அங்கே இருந்த நாற்காலியை வேகமாக இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துகொண்டாள்.
சாந்தா முறுவலுடன் பார்த்துவிட்டு “எப்போ வந்தாய்?” என்று கேட்டாள்.
“பத்து நாளாச்சு.”
“எல்லோரும் சுகம்தானே?” சாந்தா குடிக்க தண்ணீரை கொண்டு வந்து தந்தாள்.
“யாரும் சுகமாக இல்லை.” டம்ளரை பிடுங்கி பக்கத்தில் வைத்தாள்.
“ஏன்? என்ன நடந்தது?” சாந்தா சாதாரணமான குரலில் கேட்டாள்.
“ஒன்றுமே தெரியாதா? ரோகிணி சொல்லவில்லையா?” சண்டைக்கு வந்தவள் போல் கேட்டாள் வசந்தி.
“சொன்னாள். ஐயாம் சாரி வசந்தி!” என்றாள் சாந்தா.
“சாரி எதுக்கு? உனக்கு சந்தோஷமாகத்தான் இருக்குமோ என்னவோ.”
“எனக்கு சந்தோஷமாக இருப்பதாவது?” நயமான குரலில் சொல்லிக் கொண்டே வசந்தியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் சாந்தா.
“என்னை பார்த்த பிறகாவது, என் வேதனையை புரிந்துக் கொண்டாலாவது திருந்துவாய் என்று உன்னிடம் வந்தேன் சாந்தா! ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளாதே.”
“ஆகட்டும். நீ சாதாரணமாக இரு. இப்போ அந்த ரகளை எல்லாம் எதுக்கு?”
“அப்படி இல்லை. முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லு. நீ செய்தது தவறா இல்லையா? நீயும் அவனும் சேர்ந்து இன்னொரு பெண்ணுக்கு அநியாயம் செய்வது பாவம் இல்லையா? முதலில் உன் தவறை ஒப்புக்கொள்.”
வசந்தியின் மனநிலை புரிந்ததும் சாந்தாவின் மனம் இளகிவிட்டது. தனக்கு அநியாயம் நடந்துவிட்டது. நீலிமாவும் சுரேஷ¤ம் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்கள். அவர்களை என்ன செய்வது என்று புரியாத வெறுப்பு! அவர்கள் தவறை புரிந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையை தனக்கு திருப்பித் தரவேண்டும் என்ற ஆழமான விருப்பம்!
இதனால் வசந்தியின் மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டதென்றும், உள்ளுக்குள் நரகவேதனை பட்டுக் கொண்டிருக்கிறாள் என்றும், தன்னை ஏசி, தவறை ஒப்புக்கொள்ள செய்து திருப்திப்பட்டுக் கொள்ளும் எண்ணத்துடன் வந்திருக்கிறாள் என்று சாந்தாவுக்கு புரிந்துவிட்டது. இப்பொழுது என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்தாள்.
வசந்தி சொன்னதற்கெல்லாம் தலையை அசைத்துவிட்டு, தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டு அனுப்பிவிடலாம். அதனால் தற்காலிகமாக அவளுக்கு அமைதி கிடைக்கும்படியாக செய்யலாம். ஆனால் அதனால் அவள் வெறுப்பு மேலும் கூடுமே ஒழிய குறையப் போவதில்லை. அவளை சாதாரண மனுஷியாக்க வேண்டும் என்றால் மறுபடியும் யோசிக்கும்படியாக அவளை மாற்றுவது ஒன்றுதான் வழி.
சாந்தா அதை செய்யத்தான் முடிவு செய்தாள். “வசந்தி! நான் செய்த தவறு என்ன?” நேராக கேட்டுவிட்டாள்.
“கல்யாணமானவுடன் ஏன் உறவு வைத்திருந்தாய்?” அதைவிட நேராக கேட்டாள் வசந்தி.
“அவனுக்கும் எனக்கும் பிடித்திருந்தது. அதனால்”
“அவனுடைய மனைவிப் பற்றி யோசிக்க வேண்டாமா? அவள் எங்கே போவாள்?”
“என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவளுக்கு எங்களுடைய உறவு பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்வாள். சகித்துக் கொள்ள முடிந்தால் சகித்துக் கொள்வாள். நான் அவனிடம் நீ இப்படி இருவருடனும் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால் அவனே அவளுக்கு டைவோர்ஸ் கொடுக்கக் கூடும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். வசந்தீ! ஒரு விஷயம் சொல்லு. கணவன் மனைவி பிரிந்து போகக் கூடாதா?”
“பிரிந்து போகலாம். அவள் ஏதாவது தவறு செய்திருந்தால்…. திருமண வாழ்க்கைக்கு அவள் லாயக்கு இல்லாமல் போய் விட்டால் பிரிந்து போகலாம்.”
“திருமணம் என்பதே ஒரு தவறு வசந்தீ! எல்லோரும் சேர்ந்து செய்யும் தவறு. அந்த தவறை தெரிந்துகொண்டு அதை திருத்த முயற்சி செய்தால் மட்டும் அது தவறு என்று ரகளை செய்வார்கள். ராதாகிருஷ்ணனுக்கு அவளிடம் எந்த பந்தமும் இல்லை. பெரியவர்களாக பார்த்து கட்டி வைத்தார்கள். வேண்டாம் என்று சொல்லக் கூட தெரியாத வயது. அவளுக்கும் அப்படித்தான். தவறு நடந்துவிட்டது. இனி காதல் என்ற உணர்வே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் பட்டமரமாய் அவன் வாழணுமா?”
“நீ கண்ணில் படாமல் இருந்தால், நீ சம்மதிக்காமல் இருந்தால் அப்படித்தான் வாழ்ந்திருப்பான் இல்லையா?” நிஷ்டூரமாக சொன்னாள் வசந்தி.
“காதல் என்று உணர்வை அவன் சந்திக்கவில்லை என்றால் அப்படித்தான் வாழ்ந்திருப்பானோ என்னவோ? காதலை தேடும் முயற்சியில் அவன் வாழ்க்கை முடிந்து போயிருக்குமோ என்னவோ. ஆனால் அவனுக்கு காதல் கிடைத்துவிட்டது. எதற்காக மறுக்கணும்? மறுத்து எதை சாதிக்கப் போகிறான்? கடைமைக்காக செய்யும் குடித்தனத்திற்காக காதலை விட்டுவிடணுமா?”
“நாளைக்கு உன்னை விட அதிகமாக காதலிக்கும் நபர் கிடைத்துவிட்டால்?” ஏளனமாய் கேட்டாள் வசந்தி.
“அப்பொழுது என் சுயகௌரவத்திற்கு இழுக்கு வராத விதமாக விஷயத்தை செட்டில் செய்து கொள்வேன். கிடைக்காத ஒன்றுக்காக அழுது புலம்பும் ஹீனமான நிலைக்கு, என் இல்லாமைக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று ஏசும் நிலைக்கு தாழ்ந்து போக மாட்டேன். அதே போல் என் காதலுக்கு ராதாகிருஷ்ணன் தகுதியானவன் இல்லை என்று எனக்குத் தோன்றிய அடுத்த நிமிடம் அவனுக்கு என் அன்பு கிடைக்காது. என் காதல் விலை மதிப்பற்றது. ஒரு பிடி சோற்றுக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக என் காதலை செலவழிக்க முடியாது. மனிதனை மனிதனாக நேசிப்பேன். எங்களுடைய உறவு சொத்து, மானமரியாதை போன்ற எல்லைகளுக்கு உட்பட்டது இல்லை. அப்படிப்பட்ட காதலை பற்றி உனக்குத் தெரியாது.” மூச்சு இரைத்தால் நிறுத்தினாள் சாந்தா.
“ஒரு பிடி சோற்றுக்காக நான் சுரேஷை விரும்புகிறேனா?” தீவிரமான குரலில் கேட்டாள் வசந்தி.
“சோற்றுக்காக இல்லை என்றால் ஹோதாவுக்காக. சுரேஷின் மனைவி என்று பறைச்சாற்றிக் கொள்வதற்காக. கணவன் விட்டுவிட்டான் என்று தெரிந்தால் சுற்றிலும் இருப்பவர்கள் ஏளனம் செய்வார்களோ என்ற பயம்! இந்த பயங்கள் எதுவும் இல்லை என்றால், மானமரியாதை பிரச்னைகள் இல்லை என்றால், நீ மட்டுமே இல்லை, இந்த உலகில் எந்த மனைவியும் கணவனுக்காக இப்படி பிராதேயப்பட்டுக் கொண்டிருக்க மாட்டாள். ராதாகிருஷ்ணனின் காதலுக்காக நான் என் மானமரியாதைகளை பொருட்படுத்தவில்லை. என்னை தாழ்வாக பேசினாலும் லட்சியப்படுத்தவில்லை. நல்ல சிநேகிதி என்று நினைத்திருந்த நீயும் அந்த விஷயம் தெரிந்ததும் வெறுத்துவிட்டு உடனே கிளம்பிப் போகணும் என்று சொன்னாய். உன்னைப் போன்றவர்களின் வெறுப்பையும் நான் பொருட்படுத்தவில்லை. யார் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி ராதாகிருஷ்ணனின் அன்பு எனக்கு வேண்டும். அந்த அன்பு இல்லாமல் என் வாழ்க்கைக்கு முழுமையில்லை என்று நினைத்தேன்.”
சாந்தாவின் ஆவேசத்தைக் கண்டு வசந்தி திகைத்துப் போனாள். சாந்தாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்து மனம் கலங்கினாள்.
“வசந்தீ! உன் பார்வையில், உலகத்தின் பார்வையில் நான் கெட்டவளாக இருக்கலாம். ஆனால் நான் என்ன செய்துவிட்டேன்? ராதாகிருஷ்ணனை வலுக்கட்டாயமாக என் வாழ்க்கையில் இழுத்துக் கொண்டேனா? என் வீட்டு வாசற்படியைத் தாண்டிப் போகக் கூடாது என்று தடை செய்தேனா? எனக்கு மாதாமாதம் பணம், காசு தரச் சொல்லி வற்புறுத்தினேனா? உனக்குக் குழந்தைகள் இருந்தால் என்ன? உன் மூலமாய் எனக்குக் குழந்தைகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேனா? எதுவும் செய்யவில்லை. நான் செய்ததெல்லாம் அவனுடைய காதலை மறுக்காமல் போனதுதான். என்னைப் பார்த்தால் ஜொலிக்கும் அந்தக் கண்களை என்னால் மறுக்க முடியவில்லை. என்னுடைய பேச்சை, நான் வரைந்த ஓவியங்களை ரசனையுடன் கேட்கும், பார்க்கும் அவன் மனதை என்னால் மறுக்க முடியவில்லை. இங்கே எனக்கு நிம்மதியாக இருக்கு என்று என்னைத் தேடிக் கொண்டு வந்தவனை வெளியில் போகச் சொல்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஏன் என்றால் எனக்கும் அன்பும், அமைதியும் வேண்டும். இந்த பிரச்னைக்கு சரியான தீர்வு என்னவென்று எனக்குத் தெரியாது. நான் செய்து கொண்டிருப்பது சரியா தவறா அதுவும் தரியாது. ஆனால் இப்படி இருப்பது எனக்கு நிம்மதியாக இருக்கு. நான் யாருக்கு தீங்கு செய்ய நினைக்கவில்லை. வருத்தப்பட வைக்கணும் என்ற எண்ணமும் இல்லை. ஆனால் இதில் நான் செய்யக் கூடியது எதுவும் இல்லை. இந்த சமுதாயமும், திருமணத்திற்கு தரும் மதிப்பீடுகளும் சேர்ந்து இந்த பிரச்னையை உருவாக்கிவிட்டன. என்னை குற்றம் சாட்டினால் என்னால் என்ன செய்ய முடியும்?” தன்னையும் அறியாமல் சாந்தா அழத் தொடங்கினாள்.
“அழாதே சாந்தா! அழாதே. என் வருத்தத்தில் நான் ஏதோ சொல்லிவிட்டேன். அழாதேம்மா ப்ளீஸ்!” என்றப் சாந்தாவை கட்டிக் கொண்டாள் வசந்தி.
தான் சாந்தாவை தேற்றுவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்காத வசந்தி, விசும்பி விசும்பி அழுதுக் கொண்டிருந்த சாந்தாவின் முதுகில் தடவிக் கொடுத்தாள். கண்ணீரைத் துடைத்துவிட்டாள். “சாந்தா! பெண்களின் வாழ்க்கையே இப்படித்தான்” என்று தானும் கண்ணீரை உகுத்தாள்.
எதிர்மறையான நிலைமையில் இருந்த அந்த இரண்டு பெண்களும் தாம் பெண்கள்தான் என்பதை முதல் முறையாக உணர்ந்துக் கொண்டது போல் கைகளை கோர்த்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் ஆதாரமாக நின்றார்கள். வாழக்கையைப் பற்றியும், திருமணபந்தத்தைப் பற்றியும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். தைரியம் சொன்னார்கள். மாலையாகும் போது ரோகிணி வந்தாள்.
“நீ இங்கே இருக்கிறாயா? வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்கக் கூடாதா? நான் பயந்தே போய்விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. சென்னைக்கு திரும்பிப் போய்விட்டாயோ என்று நினைத்தேன். சாந்தாவைப் பார்த்து மேற்கொண்டு என்ன செய்வது என்று கேட்கத்தான் வந்தேன். இங்கே வந்திருப்பாயோ என்ற சந்தேகம் கூட வந்தது. ஆக மொத்தம் என்னைக் கொன்று விட்டாய் போ.” வசந்தி தென்பட்டதும் சந்தோஷத்தில் ரோகிணி மூச்சுவிடாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
“எதற்காக அவ்வளவு பதற்றம்? நான் ஒன்றும் செத்துப் போக மாட்டேன். எனக்கு சாகணும் என்று தோன்றவில்லை. எப்படியாவது வாழணும் என்றுதான் நினைக்கிறேன்” என்றாள் வசந்தி சோர்வு கலந்த முறுவலுடன்.
“பார்த்தாயா எப்படி பைத்தியமா போல் பேசுகிறாளோ? இப்போ என்ன நடந்துவிட்டது என்று இந்த பேச்சு? உனக்கு எவ்வளவு சுதந்திரம் கிடைத்திருக்கிறதோ தெரியாது” என்றாள் ரோகிணி நிலைமையை எளிதாக்குவது போல்.
“ஆமாம். சுதந்திரத்தை தவிர வேறு என்ன?” என்றாள் வசந்தி.
“நாம் சின்ன வயதில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை படித்துவிட்டு என்ன சொல்லுவோம் நினைவு இருக்கிறதா? ஒரு கதையில் கணவனின் அன்புக்காக ஏங்கும் மனைவியைப் பற்றி ரொம்ப பரிதாபமாக எழுதியிருந்தாள். அந்தக் கணவன் எவளுடனாவது ஓடிப் போய் இந்த மனைவியை நிம்மதியாக வாழவிடக் கூடாதா என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போ நீ என்ன சொன்னாய் தெரியுமா? அப்படிச் செய்தாலும் இந்த பெண்களுக்கு புத்தி வராது. தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையா கணவனின் காலடியில் விழுந்து கிடப்பார்கள் என்று.” சிரித்துக் கொண்டே சொன்னாள் சாந்தா.
“அப்போ இந்த நிலைமை எனக்கு வரும் என்று கனவு கண்டேனா?”
“இப்போ உன் நிலைமைக்கு என்ன வந்து விட்டது? நீ ஒரு மனுஷியாக உன்னை அடையாளம் காணும் நாட்கள் வந்துவிட்டன. நிம்மதியாக உனக்குப் பிடித்த காரியங்களை செய்து கொள். கணவன் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று மட்டும் நினைக்கதாதே.” ரோகிணி சொன்னாள்.
“ஆனால் இப்போ என்னால் என்ன செய்ய முடியும்” சோர்ந்து போன குரலில் சொன்னாள் வசந்தி.
“இப்போ தொடங்குவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம் ஆனால் அசாத்தியம் மட்டும் இல்லை. அதனால்தான் பெண்கள் திருமணம் மட்டும்தான் வாழ்க்கை என்று நினைக்கக் கூடாது. நமக்கு என்று ஒரு வாழ்க்கை, ஒரு வேலை, ஒரு இடம் தனியாக இருக்கணும்.”
“சவிதாவைப் போலவே பேசுகிறாய்” என்றாள் வசந்தி.
“சொல்ல மறந்து விட்டேன். சவிதா கடிதம் எழுதியிருக்கிறாள்” என்றபடி ரோகிணி பர்ஸிலிருந்து போஸ்ட் கார்டை எடுத்துக் கொடுத்தாள்.
இரண்டே வரிகள், இருபதாம் தேதி கிளம்பி வருகிறேன். நீ நலமாய் இருப்பாய் என்று நினைக்கிறேன் என்று
“பன்னிரெண்டாம் தேதி அன்றே சென்னைக்கு வந்துவிட்டாள். நான் இல்லைன்னு தெரிந்ததுமே உடனே கிளம்பி வந்திருக்க வேண்டியதுதானே. அப்பாவுடன் ஒரு வாரம் தங்கிவிட்டு பிறகுதான் வருகிறாள். என்ன இருந்தாலும் அவளுக்கு அப்பாவிடம் தான் பிரியம் அதிகம்.” வசந்தி வருத்தப்பட்டுக் கொண்டாள்.
“இந்த விஷயங்களை எல்லாம் அப்பாவிடம் பேசுவாளாய் இருக்கும். குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரும் முக்கியம்தான்” என்றாள் சாந்தா.
“லாவண்யாவுக்கு நாங்களிருவரும் முக்கியம் இல்லை. பணம்தான் பிரதானம்.”
“லாவண்யா இப்போ நம் வீட்டு குழந்தை இல்லை. இன்னொருத்தனின் மனைவி. அவனுக்கு எது முக்கியம் என்று தோன்றுகிறதோ தனக்கும் அதுதான் முக்கியம் என்று நினைப்பாள்” என்றாள் ரோகிணி.
“லாவண்யா அப்படி நினைப்பது இயற்கை. வசந்தி தன்னுடைய சக்தியெல்லாம் தாரைவார்த்து உனக்கு கணவன்தான் முக்கியம் என்று பாலாடையால் புகட்டாத குறையாக மகளுக்கு கற்றுக் கொடுத்திருப்பாள். அப்படித்தானே?”
வசந்தி ஆம் என்பது போல் தலையை அசைத்தாள்.
“நம்மை எல்லாம் மகள், மனைவி, தாய் என்பதைத் தவிர ஒரு மனுஷியாக நினைவில் வைத்துக் கொள்ளமாட்டோம். சின்ன வயதில் அப்பா அம்மாவுக்கு, அண்ணன் தம்பிகளுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று தான் முயற்சி செய்வோம். பிறகு கணவனை சந்தோஷமாக வைத்திருப்பது, குழந்தைகளை வளர்ப்பது, இத்துடன் நம்முடைய வாழ்க்கை முடிந்து போய்விடும். வசந்தி! உனக்கு நினைவு இருக்கா? உங்க பக்கத்து வீட்டில் இருந்த கல்யாணியை ஒரு நாள் அவளுடைய அப்பா எப்படி அடித்தாரோ?”
வசந்திக்கு நினைவு வந்துவிட்டது.
கல்யாணி ஒரு நாள் கல்லூரியிலிருந்து திரும்பி வரும் போது எவனோ ஒருவனை டாக்ஸி மோதி பக்கத்தில் தள்ளிவிட்டு வேகமாக போய் விட்டது. காலில் அடிபட்டுவிட்டதால் அவனால் எழுந்துகொள்ள முடியவில்லை. தெருவிலும் யாரும் இல்லாததால் கல்யாணி அவனுக்கு கைக்கொடுத்து அவன் காலுக்கு கைக்குட்டையால் கட்டுப் போட்டு எழுந்து நிற்கும் வரையில் துணையாய் இருந்தாள். பிறகு ரிக்ஷ¡வை கூப்பிட்டு அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.
இதையெல்லாம் கல்யாணியின் பக்கத்து வீட்டில் இருப்பவர் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கல்யாணியின் தந்தையிடம் என்ன சொன்னாரோ தெரியாது. அன்று இரவு அவளுடைய தந்தை அவளை மாட்டை அடிப்பது போல் அடித்தார்.
“ஒரு ஆண்பிள்ளையை நடு ரோட்டில் கட்டிப் பிடித்து நின்று கொண்டிருந்தாயா? உடலில் திமிரு ஏறிவிட்டதா?” என்று வாய்க்கு வந்தப் ஏசினார். கல்யாணி சொல்லவந்ததை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தன்னுடைய மகள் தன் வீட்டு மானமரியாதையை காப்பாற்ற வேண்டுமே தவிர எவனோ முன் பின் தெரியாதவனின் உயிரைக் காப்பாற்றத் தேவையில்லை என்பது அவருடைய நம்பிக்கை. பெண்பிள்ளைகள் அதற்குறிய லட்சணங்களோடுதான் இருக்க வேண்டுமே தவிர மனிதநேயத்தோடு இருக்க வேண்டியதில்லை என்பது அவருடைய எண்ணம்.
அவருக்கு மட்டுமே இல்லை. இந்த நாட்டில் லட்சக் கணக்கான தந்தைகளுக்கு, கணவர்களுக்கு, அண்ணன்தம்பிகளுக்கு, மகன்களுக்கு அந்த அபிப்பிராயம்தான். பெண்கள் பெண்களுக்குறிய லட்சணங்களுடன் இருக்க வேண்டும்.
அந்த லட்சணங்களை பின்பற்றி பெண்கள் தங்களைச் சேர்ந்த ஆண்களின் கௌரவத்தை காப்பாற்றவேண்டும். அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.
வசந்திக்கு கல்யாணியுடன் ரமா, ராணி, வீணா, சாரதா, வரலக்ஷ்மி எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களுடைய படிப்பு பாதியில் நின்று போன விதமும் நினைவுக்கு வந்தது.
பி.ஏ. முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு பையன் வரலக்ஷ்மிக்கு காதல் கடிதம் எழுதினான். வரலக்ஷ்மி ரொம்ப சந்தோஷப்பட்டாள். கூட படித்துக் கொண்டிருக்கும் நான்கைந்து சிநேகிதிகளுக்கு காண்பித்தாள். சாந்தா, ரோகிணி அந்த கடிதத்திற்கு பதில் எழுதச் சொல்லி அவளை உற்சாகப் படுத்தினார்கள். அந்த பையனை எல்லோருக்கும் தெரியும். ஏ.சி. கல்லூரியில் பி.எஸ்ஸி. மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அந்தக் கல்லூரியின் கல்சுரல் செகரெட்ரியாக இருந்தான். அவனை எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்டவன் தன்னை விரும்புவதாக தெரிந்த போது வரலக்ஷ்மிக்கு பெருமையாக இருந்தது. சிநேகிதிகளும் சந்தோஷப்பட்டார்கள்.அன்று இரவு வரலக்ஷ்மி சுந்தரத்திற்கு பதில் எழுதினாள். அவள் மனம் சுதந்திரமாக செயல் பட்ட முதல் காரியம் அதுதானோ. மறுநாள் அந்தக் கடிதம் எப்படி போய்ச் சேர்ந்ததோ தெரியாது. அவளுடைய தந்தையின் கைக்கு சிக்கியது.
பெண்பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களை, பேக்குகளை சோதனை போடுவது பெரும்பாலான தந்தைகளுக்கும், அண்ணன்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.
அவர் சுந்தரம் எழுதிய கடிதத்தைக் கூட வாங்கி படித்தார். அதற்குப் பிறகு வரலக்ஷ்மி கல்லூரிக்கு வரவில்லை. நான்கைந்து மாதங்களில் அவளுக்கு திருமணமாகிவிட்டது. திருமணத்திற்கு வந்திருந்த சாந்தாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள் வரலக்ஷ்மி. “இந்தக் கடிதம் எங்கப்பாவின் கண்களில் பட்டதால்தான் இதெல்லாம் நடந்தது. இந்தக் கடிதத்தில் நான் எழுதியதெல்லாம் உண்மை என்று சுந்தரத்திடம் சொல்லு. என் நிலைமையை விளக்கிச் சொல்லு. அவனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதையும் சொல்லு.” அழுதுக் கொண்டே சொன்னாள் வரலக்ஷ்மி.
சிநேகிதிகளுகெல்லாம் ரொம்ப கோபம் வந்தது. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்?
வரலக்ஷ்மியின் திருமணம் முடிந்துவிட்டது.
வரலக்ஷ்மி என்ன தவறு செய்துவிட்டாள். காதல் கடிதம் எழுதுவது தவறா? போகட்டும் தவறுதான் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு சின்ன தவறுக்காக அவளுடைய வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா?
ரோகிணியும், சாந்தாவும் அந்த விஷயத்தைப் பற்றி பேசும் போது வசந்தி புதிதாக கேட்டுக் கொள்வது போல் கேட்டுக் கொண்டாள்.
“பழைய விஷயங்களை எல்லாம் நான் மறந்து போய்விட்டேன். ஆனால் லாவண்யா யாரையாவது காதலித்தேன்னு சொல்வாளோன்னு பயந்து கொண்டுதான் இருந்தேன். சவிதா மட்டும் நிச்சியமாக எவனையோ ஒருவனை காதலித்து தீருவாள். அது மட்டும் நிச்சியம்.”
“தாய் என்ற வேடத்திலும் நீ நன்றாக பொருந்திவிட்டாய். இனி அந்த வேடங்களை எல்லாம் விட்டுவிடு. ஒரு மனுஷியாக வெளியில் வா” என்றாள் சாந்தா.
சிநேகிதிகள் இருவரையும் பார்த்து இயலாமையுடன் சிரித்தாள் வசந்தி. சவிதா வருகிறாள் என்றால் வசந்திக்கு சந்தோஷத்தோடு பயமும் ஏற்பட்டது. சவிதா இந்த விஷயமாக தன்னுடைய அப்பாவிடம் பேசிவிட்டு வருவாள். இந்த விஷயமாக ஏதோ ஒரு முடிவு செய்து கொண்டுதான் வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது. அதோட தன்னை விமரிசனம் செய்வாள். இப்படி இருக்காதே… அப்படி இரு என்று ஏதேதோ சொல்லுவாள் என்ற பயமும் இருந்தது.
சவிதா தன் தந்தைக்கு புத்திமதி சொன்னால்!
தன்னை மறுபடியும் சென்னைக்கு அழைத்துப் போனால்?
சுரேஷ் தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டால்?
எவ்வளவு நன்றாக இருக்கும்? சவிதாவால் அந்த காரியத்தை செய்ய முடியும். சவிதாவின் பேச்சை சுரேஷ் தட்டமாட்டான். மகளிடம் அவன் உயிரையே வைத்திருக்கிறான். அவள் கேட்டால் அவனால் மறுக்க முடியாது. சவிதா இந்த காரியத்தை மட்டும் செய்து முடித்தால் வாழ்நாள் முழுவதும் அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பேன் என்று நினைத்துக் கொண்டு ஆசையை அடக்கிக் கொள்ள முடியாமல், ஒருக்கால் அப்படி நடக்காமல் போனால் எப்படி என்ற பயத்தை ஜெயிக்கவும் முடியாமல் வசந்தி திண்டாடிக் கொண்டிருந்தாள்.
சாந்தா, ரோகிணி சொன்னது எல்லாம் உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டாலும் அதெல்லாம் தனக்கு சம்பந்தப்பட்டது இல்லை என்று தோன்றியது. பெண்கள் சுயகௌரவத்தை இழக்கக் கூடாது. உண்மைதான். ஆனால் தனக்கு வீடு வேண்டும். அந்த வீட்டில் சுரேஷின் மனைவியாக இல்லாமல் வேறு விதமாக, யாரும் இல்லாதவளாக, கணவனால் ஒதுக்கப் பட்டவளாக, கணவனை ஒதுக்கிவிட்டவளாக வாழ்வது தேவை இல்லை என்று தோன்றியது.
இந்த விஷயத்தை மனதில் வைத்தக் கொள்ள முடியாமல் ரொகிணியிடம் சொல்லிவிட்டாள். ரோகிணிக்கு கோபம் வந்துவிட்டது போலும்.
“நீ உன் கணவனுடன் சேர்ந்து சந்தோஷமாக குடித்தனம் செய்யணும்னு நினைப்பதில் தவறு இல்லை. அதற்காக கணவனால் புறக்கணிக்கப் பட்டவர்களை, கணவனை விட்டுவிட்டவர்களை இளப்பமாக பார்க்காதே. அந்த போக்கு நல்லது இல்லை” என்றாள் சீரியஸாக.
“நான் ஏன் இளப்பமாக நினைக்கப் போகிறேன்?” என்றாள் வசந்தி தன் தவறை உணர்ந்தவளாக.
“உன் பேச்சில் அந்த தொனிதான் இருக்கு. உலகம் உன்னை எப்படி பார்க்குமோ என்ற கவலைப் படுகிறாய். உனக்கு சுரேஷிடம் பிரியம் இருந்தால் அவனுக்காக வருத்தப்படு. உலகத்தைப் பற்றி கவலைப்படாதே. கணவனால் கைவிடப் பட்ட மனைவியர்கள் எல்லாம் லாயக்கில்லாதவர்கள் என்றும், தரம் தாழ்ந்தவர்கள் என்று எடைபோடாதே. அவரவர்களின் சூழ்நிலை அவரவர்களுக்கு. கணவனின் ஸ்டேட்டஸ் வைத்துக் கொண்டு பெண்ணை அடையாளம் காணும் வழக்கம் ஒழிந்து போனால் தவிர பெண்களுக்கு விமோசனம் இல்லை” என்றாள் கோபம் தணியாத குரலில்.
சவிதா வந்துவிட்டாள். அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று படபடக்கும் இதயத்துடன் உட்கார்ந்திருந்தாள் வசந்தி. தாயையும், ரோகிணியையும் குசலம் விசாரித்துவிட்டு முகம் அலம்பிக் கொண்டு வந்தாள் சவிதா.
வசந்தி மகளுக்கு காபி கலந்து கொடுத்துவிட்டு தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டாள்.
“அம்மா! வைசாக்கில் ஹாஸ்டல் அறையை காலி செய்துவிட்டேன்” இன்றாள் சவிதா.
“என்ன விஷயம்?” என்றாள் வசந்தி அதிகம் ஆர்வம் காட்டாமல்.
“சின்னதாக போர்ஷனை பார்க்கச் சொல்லி என் சிநேகிதிகளிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நம் இருவருக்கும் இரண்டு அறைகள் இருந்தால் போதும் இல்லையா?” என்றாள் சவிதா.
“நம் இருவருக்கா?” என்று வசந்தி சொல்லிக் கொண்டிருந்த போதே ” ஆமாம் அம்மா! ஹாஸ்டலில் எனக்கு சாப்பாடு சரியாக இல்லை. ஒழுங்காக படிக்கவும் முடியவில்லை. அம்மா! இரண்டு வருடங்கள் நீ எனக்கு ஒத்தாசையாக இருந்தால் அதற்குப் பிறகு மேற்படிப்புக்கு சென்னைக்கு வந்துவிடுகிறேன்.”
“சவிதா! உங்கப்பா என்னை வைசாக்கிற்கு அழைத்துப் போகச் சொன்னாரா?” வசந்தி சக்தியை முழுவதுமாக திரட்டிக் கொண்டு கேட்டாள். அவளுக்கு தான் சவிதாவின் மீது வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது போல் தோன்றியது.
“சவிதா! உங்கப்பா என்னதான் சொல்கிறார்? நீ எதுவுமே கேட்கவில்லையா? அவளை விட்டு விடுவதாக சொன்னாரா இல்லையா? இந்த விஷயத்தை அவரிடம் பேசினாயா? இல்லை உங்க அக்காவைப் போல் தப்பித்துக் கொண்டாயா?” வசந்தி ஆவேசமாக கேட்டாள்.
“பேசினேன் அம்மா!” என்றாள் சவிதா தலை குனிந்தபடி.
“என்ன சொன்னார்?”
சவிதா பதில் பேசவில்லை.
“சொல்லு சவிதா! என்னதான் சொன்னார்?”
“அம்மா! உன்னால் அங்கே நிம்மதியாக இருக்க முடியாது. அப்பாவால் அவளுடைய நட்பை துண்டித்துக் கொள்ள முடியாது.”
“நட்பை துண்டித்துக் கொள்ள முடியாதாமா?” வசந்தி பைத்தியம் பிடித்தவள் போல் பார்த்தாள்.
“அம்மா! வருத்தப்படாதே. என்ன செய்வது என்று எனக்கும் புரியவில்லை. உன் மீது காதல் இல்லை என்று அப்பா சொல்கிறார்.”
“இத்தனை வருடங்கள் குடித்தனம் செய்துவிட்டு என் மீது காதல் இல்லையா? என்னுடைய குறை என்ன?”
“உன்னிடம் எந்த குறையும் இல்லை அம்மா! அப்பா அந்தப் பெண்ணை காதலிக்கிறார்.”
“சீ… கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் வளர்ந்த மகளிடம் தன் காதல்லீலைகள் எல்லாம் தெரிவித்தாரா?”
“அம்மா! அப்பா என்னிம் எல்லா விஷயங்களையும் சொன்னார். மேற்கொண்டு நடக்க வேண்டியது என்ன என்று பார்க்க வேண்டுமே தவிர அப்பாவை திட்டுவதால் பிரயோஜனம் என்ன?”
“உங்க அப்பாவை திட்டக் கூடாதா? மனைவிக்கு துரோகம் செய்தவனை திட்டக் கூடாதா? சொல்லு, உங்க அப்பா துரோகி இல்லையா?”
“அப்பா உனக்கு வேதனைதரும் காரியத்தைத்தான் செய்திருக்கிறார். ஆனால் அப்பா துரோகி இல்லை அம்மா! ரொம்ப நல்லவர். இந்த நிலைமை ஏற்பட்டதற்கு எவ்வளவு வேதனைப் படுகிறாரோ உனக்குத் தெரியாது.”
சவிதா இப்படி சொன்னதும் வசந்திக்கு கோபம் வந்துவிட்டது. “வேதனைப்படுகிறாரா? எதற்காக வேதனைப் படணும்? நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்காகவா? உங்க அப்பா துரோகி இல்லை. நான் தான் வஞ்சகி. என்னை விட்டுவிடுங்கள். எல்லோரும் என்னை ஒதுக்கிவிடுங்கள்.”
உரத்தக் குரலில் கத்திக் கொண்டிருந்த தாயை சவிதா மார்போடு அணைத்துக் கொண்டாள். “அம்மா! நான்தான் இருக்கிறேனே? நீ கவலைப்படாதே” என்று சொல்லிக் கொண்டிருந்த மகளை விட்டு தொலைவுக்கு நகர்ந்து “உங்க அப்பாதான் நல்லவர் இல்லையா. அவரிடமே போய்விடு. என்னைப் பற்றிய கவலை உனக்கு எதற்கு? என் மீது காதல் இல்லையாமே. நான் உங்க அப்பாவுக்கு தாலி கட்டிய மனைவி. சொல்லு மனைவிதானே?”
“மனைவியை காதலித்தாகணும்னு இல்லையே அம்மா?”
“மனைவியைக் காதலிக்காமல் வேறு யாரை காதலிப்பார்கள்? எல்லா கணவன் மனைவியும் பரஸ்பரம் அன்பாக இல்லையா?”
“உலகில் எல்லா தம்பதிகளும் பரஸ்பரம் காதலித்துக் கொள்வார்கள் என்று நீ நம்புகிறாயா அம்மா? எனக்கு ஏனோ எல்லா தம்பதிகளும் சமாதானமாகப் போய் எப்படியோ குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.”
“உனக்கு நாளைக்கு கல்யாணமானால்…”
வசந்தியின் வார்த்தைகளை இடையிலேயே நிறுத்திவிட்டாள் சவிதா. “நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன். ஒரு ஆணின் காதலுக்காக வாழ்நாள் முழுவதும் அழுதுக் கொண்டிருக்க மாட்டேன்.” கோபமாக சொன்னாலும் திடமாக ஒலித்தது சவிதாவின் குரல்.
தான் நினைத்தபடி ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டாள் வசந்தி. சவிதாவிடம் இனி பேசி பயன் இல்லை. அந்த ஆசையும் போய்விட்டது. சவிதாவுடன் வைசாக்கிற்கு போகட்டும் என்பது சுரேஷின் எண்ணம்.
வசந்தியை ஏமாற்றம் சூழ்ந்து கொண்டுவிட்டது. யார் என்ன சொன்னாலும் வசந்தி கேட்டுக் கொள்ளவில்லை. கட்டிலை விட்டு எழுந்துகொள்ளவும் இல்லை. தாயின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சவிதா தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மூன்றாவது நாள் வசந்தியின் அண்ணி லக்ஷ்மி வந்தாள். சவிதாவுடன் வசந்தி வைசாக்கிற்கு போவதாக சுரேஷ் தெரிவித்தால் திருச்சிக்கு வந்தாள்.
வந்ததுமே கட்டில் மீது உட்கார்ந்திருந்த வசந்தியைக் கட்டிக் கொண்டு ஹோவென்று அழப்போனாள்.
சவிதா மாமியை தடுத்துவிட்டு “சும்மாயிருங்கள் மாமீ! இப்போ என்னவாகிவிட்டது? ஏற்கனவே அம்மாவுக்கு உடல்நலம் சரியாக இல்லை” என்று வலுக்கட்டாயமாக பிரித்து நாற்காலியில் உட்கார வைத்தாள்.
“என்ன நடந்ததா? உங்க அப்பா என்ன காரியம் செய்து விட்டார்? நம்பினால் நம்பு. உங்க மாமாவுக்கு இரண்டு நாட்களாக சாப்பாடே பிடிக்கவில்லை. திடீரென்று எனக்கு மனைவி பிடிக்கவில்லை என்று சொன்னால் போகட்டும் என்று விட்டுவிடுவதற்கு கல்யாணம் என்ன குழந்தைகளின் விளையாட்டா?” என்று சுரேஷை வசைபாடத் தொடங்கினாள். கடைசியில் “இப்படியே போனால் எப்படி? இத்தனை வருடங்களும் குடித்தனம் செய்து விட்டு இப்போ வேண்டாம்னு சொன்னால் சும்மா விட்டு விடுவதா?” என்று நீட்டி முழக்கினாள்.
“என்ன செய்யலாம்?” ரோகிணியும், சவிதாவும் கேட்டார்கள்.
“ஜீவனாம்சத்திற்காக கோர்ட்டுக்கு போகணும். சொத்து முழுவதையும் பிரித்துக் கொடுக்கச் சொல்லணும். அப்போ தெரியும் காதலும் கத்திரிக்காயும்” என்றால் பழிப்பது போல்.
“அப்பா சொத்து முழுவதையும் எங்க மூவரின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். நிலத்தைக் கூட எனக்கும் அக்காவுக்கும் சரி சமமாக பிரித்துக் கொண்டுத்துவிட்டார். வீடு எப்படியும் அம்மாவின் பெயரில்தான் இருக்கு. மாதா மாதம் வரும் சம்பளத்தை மூவருக்கும் சமமாக பங்கு போடுவதாக சொல்லிவிட்டார். அக்காவுக்கு இப்போ அப்பா அனுப்ப வேண்டியதில்லையே?”
லக்ஷ்மி திகைத்துப் போனாள். “அதெல்லாம் வெறும் பேச்சு. இப்போ பிரச்னையை சமாளிப்பதற்காக அப்படி சொல்லியிருப்பார். முதலில் எழுதி வாங்கிக் கொள்ளணும்.”
“அந்த வேலையையும் அப்பா செய்து முடித்துவிட்டார் மாமீ! லாவண்யாவும், மனோகரம் தங்களுடைய பங்கு சொத்தை கேட்டார்களாம். அப்பா எல்லோரையும் பற்றி யோசித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.
லக்ஷ்மிக்கு மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “சொத்து கொடுத்துவிட்டால் மட்டும் போதுமா? கணவன் விட்டுவிட்டான் என்ற அபக்கியாதியை சுமத்திவிட்டு, இன்னொருத்தியுடன் மட்டும் எப்படி இருப்பான்? நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் கேட்க வேண்டாமா? அத்தையை கணவன் தள்ளிவைத்துவிட்டான் என்றால் நாளைக்கு என் குழந்தைகளுக்கு கல்யாணம் கார்த்தி ஆக வேண்டாமா?” என்றாள் இல்லாத துக்கத்தை குரலில் வெளிப்படுத்திக் கொண்டே.
“மாமீ! எங்க அப்பாவை அப்படி எல்லாம் பேசாதீங்க. எனக்குப் பிடிக்காது” என்றாள் சவிதா.
“ஓஹோ! அப்பாவிடம் அவ்வளவு அன்பு பொங்கி வழிகிறதா? நீ கிளம்பு வசந்தீ! சென்னைக்கு போகலாம்” என்றாள் வசந்தியிடம்.
“நான் வரமாட்டேன்” என்றாள் வசந்தி.
“பின்னே எங்கே இருப்பாய்? கஷ்டமோ நஷ்டமோ பிறந்தவீட்டார்தானே அடைக்கலம் தரணும்”
“அம்மா என்னிடம் இருப்பாள் மாமீ! நீங்க கவலைப்பட வேண்டியதில்லை,”
“கொஞ்ச நாட்களுக்கு அவள் நிம்மதியாக இங்கேயே இருக்கட்டும்” என்றாள் ரோகிணி.
“இன்னும் எங்கே நிம்மதி? வாழ்க்கையே நாசமாகிவிட்ட பிறகு.” லக்ஷ்மி சலித்துக் கொண்டே விடுவிடென்று போய்விட்டாள்.
வைசாக் போய்ச் சேரும் போது காலை ஒன்பது மணியாகிவட்டது. சவிதா சாமான்களை இறக்கிவிட்டு ஆட்டோ பேசினாள். இருவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டைப் பற்றி யோசித்துக் கொண்டே ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டார்கள்.
அவர்கள் போய்ச் சேர்ந்த போது வீடு முழுவதும் சாமான்களுடன் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வரிசையாக மூன்று அறைகள். கடைசி அறை சமையலறை. சமையலறையில் நின்று கொண்டிருந்தால் ஜன்னல் வழியாக் கடல் தென்பட்டுக் கொண்டிருந்தது. உயரமாய் எழும்பி கரையில் வந்து மோதிவிட்டு பின்னால் சென்று கொண்டிருந்த அலைகளை பார்த்துக் கொண்டு வசந்தி நின்று கொண்டிருந்தாள்.
“இந்த வீடு நமக்கு போறுமா அம்மா? உனக்கு பிடித்திருக்கிறதா?” சவிதா கேட்டாள்.
“தாராளமாய் போதும். அது இருக்கட்டும். இந்த சாமான் எல்லாம் யாருடையது? யார் இதை எல்லாம் அடுக்கி வைத்தது? ·பேன்களை கூட ·பிக்ஸ் செய்திருக்கிறார்கள்.”
அப்பா இதையெல்லாம் ஏற்பாடு செய்தார் என்று சொன்னால் அம்மாவின் மனம் காயப்படும் என்று உணர்ந்த சவிதா “என் நண்பர்கள் இருக்கிறார் என்று சொன்னேன் இல்லையா? அவர்களுக்கு கடிதம் போட்டிருந்தேன். எல்லாம் தயாராக வைத்தார்கள்” என்றாள்.
மேலும் “அம்மா! இன்றைக்கு சமைக்க வேண்டாம். நண்பர்களின் வீடு பக்கத்தில்தான் இருக்கு. அங்கே வரச்சொல்லி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள்” என்றாள் குளிக்கத் தயாராகிக் கொண்டே.
“நான் யார் வீட்டுக்கும் வர மாட்டேன்” என்ற வசந்தியை கெஞ்சி சம்மதிக்க வைத்தாள்.
“அவர்கள் உங்க அப்பாவைப் பற்றிக் கேட்டால் எப்படி?” பேதையாக கேட்டுக் கொண்டிருந்த தாயைப் பார்த்ததும் சவிதாவுக்கு இரக்கம்தான் ஏற்பட்டது.
“அம்மா! அவர்கள் என் நண்பர்கள். அவர்களுக்கு என்னுடைய விஷயம் எல்லாம் தெரியும். யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டார்கள். நீ வா.”
“எல்லாம் சொல்லிவிட்டாயா? நான் வர மாட்டேன். என்னை வற்புறுத்தாதே.” வசந்தி நகர மறுத்துவிட்டாள்.
“அம்மா! அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். உன்னை ரொம்பவும் விரும்புவார்கள் பாரேன்.”
“என்னை விரும்புவானேன்? கணவனால் கைவிடப் பட்டவளை விரும்புவது புது நாகரீகமா?” கடினமான குரலில் சொன்னாள் வசந்தி. எல்லோரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுகிறார்கள் என்றும் அந்த இரக்கத்தை கடினமான பேச்சுக்கள் மூலமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தாயை இயலாமையுடன் பார்த்தாள் சவிதா.
அதற்குள் வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்டது. நான்கு இளைஞர்கள் பிலுபிலுவென்று உள்ளே வந்தார்கள்.
வசந்தி பதற்றத்துடன் எழுந்து நின்று கொண்டாள்.
சவிதா “நீங்களே வந்துவிட்டீங்களா? எங்களுக்கு கொஞ்சம் தாமதம் ஆகும் போலிருந்தது. அட! கையில் கேரியர் வேறு கொண்டு வந்தீங்களா?” என்றப் அவர்களிடமிருந்து கேரியரை வாங்கிக் கொண்டாள்.
“எங்க அம்மா” என்று வசந்தியை சுட்டிக் காட்டினாள்.
“அம்மா! இவன் ஸ்ரீனிவாஸ். இவன் கோபி. அவன் ரமணன். கடைசியாக இருப்பவன் சர்மா. ஸ்ரீனிவாஸ¤ம் கோபியும் இன்ஜினியரிங், என்னை விட ஒரு வருஷம் சீனியர். ரமணன் எம்.எஸ்ஸி. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். சர்மா ஹவுஸ் சர்ஜன்” என்று எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். வசந்திக்கு என்ன சொல்வதென்று புரியாமல் எல்லோரையும் உட்காரச் சொன்னாள்.
“அம்மா! இவர்கள் அடுத்தத் தெருவில் ஒரு பெரிய அறை எடுத்துக் கொண்டு தங்கியிருக்கிறார்கள். சமைத்துப் போட ஆள் இருக்கிறான். ரூமில் இருப்பதாக சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எங்களுடையது வீடு என்பார்கள். உங்க அறைக்கு வருகிறேன்னு சொன்னால் வராதே, வீட்டுக்கு வருவதாக இருந்தால் வா என்பார்கள்.” சவிதா கலகலவென்று பேசிக்கொண்டிருந்தாள்.
சவிதாவின் பேச்சு முடிவடையும் முன்பே வசந்தி உள்ளே போய் படுத்துக் கொண்டாள்.
இங்கே இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ? சவிதாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்ற பயம் பிடித்துக் கொண்டது வசந்திக்கு. ·பிரண்ட்ஸ் என்று சொன்னால் பெண்பிள்ளைகள் என்று நினைத்தாள். நான்கு பேரும் பையன்கள். ஒரே வகுப்பு சேர்ந்தவர்களும் இல்லை. எப்படி நட்பு ஏற்பட்டிருக்கும்? சவிதா இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்? எப்படி கேட்டுத் தெரிந்துகொள்வது? சுரேஷ¤க்கு தெரிந்தால் என்ன சொல்லுவான்? தானே தடம் புரண்டுவிட்ட பிறகு மகளை என்ன சொல்ல முடியும்? அப்பாவின் சலுகை இருப்பதால்தான் இவள் இப்படி நடந்து கொள்கிறாளா? எப்படியாவது சவிதாவை வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தாள் வசந்தி.
புது இடம், புதிய பொறுப்புகள் வசந்திக்கு கொஞ்சம் தெம்பு வந்தாற் போலிருந்தது. சவிதா அவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்த போது வசந்தி சாப்பாடு பரிமாறுவதற்கான ஏற்பாடுகளை செய்தாள்.
அன்று மாலை இரண்டு பெண்கள் வந்தார்கள். சோபா, வீணா என்று அறிமுகப்படுத்தினாள் சவிதா. நண்பர்கள் கூட்டத்தில் பெண்பிள்ளைகள் கூட இருப்பது தெரிந்து நிம்மதியாக மூச்சை விட்டுக் கொண்டாள் வசந்தி. அவர்கள் மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்த போது அருகில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
அடிக்கடி பையன்களின் பெயர்கள் வருவது, ஏதேதோ புத்தகங்களைப் பற்றி அர்த்தம் இல்லாமல் பேசிக் கொள்வது … இதையெல்லாம் பார்க்கும் போது வசந்திக்கு கவலைப் பிடித்துக் கொண்டுவிட்டது.
“சவிதா! உங்கள் பேச்சு எனக்கு புரியவே இல்லையே?” இரவு படுத்துக் கொள்ளும் முன்பு பேச முயன்றாள்.
“இப்பொழுதுதானே வந்திருக்கிறாய். போகப் போக தானே புரியும். எல்லோரையும் புரிந்துகொள்வாய். தூக்கம் வருகிறது.” முகத்தை மூடிக் கொண்டு தூங்க முற்பட்டாள் சவிதா.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
பகல் முழுவதும் சாத்தூர் அணைக்கட்டில் அங்கும் இங்கும் சுற்றினார்கள். பார்க்கும் காட்சிகள் எதுவும் இருவரின் மனதில் பதியவில்லை. அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கலகலவென்று சிரித்துக் கொண்டு, சந்தோஷமாக இருந்தார்கள். வசந்தி நிம்மதியை இழந்தவளாய் வந்து படிகட்டின் மீது உட்கார்ந்துகொண்டாள். தண்ணீரில் அலைகள் வந்து கரையைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஆங்காங்கே மக்கள் படிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.
நதியில் குதித்துவிட்டால் என்ன என்று தோன்றியது வசந்திக்கு. தன்னையும் அறியாமல் இரண்டடிகள் முன்னால் வைத்தாள். எதற்காக செத்துப் போகணும்? ஏன் என்றால்? வாழ்க்கையில் மிக முக்கியமானது என்று தான் நினைத்தது தனக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இனி வாழ்வதில் என்ன பயண்?
வசந்தியின் யோசனைகளை சிதறடித்தபடி திடீரென்று ஒரு காகிதம் காற்றில் பறந்து வந்து வசந்தியின் முகத்தை வந்து தாக்கியது. பின்னாலிருந்து ஒருத்தி “ஐயாம் சாரி!” என்றபடி முறுவலுடன் அந்தக் காகிதத்தை எடுத்தக் கொண்டாள். பக்கத்திலேயே படியில் உட்கார்ந்துக் கொண்டு வேகவேகமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். வசந்தியும் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். நடுவில் அந்தப் பெண் ஒரு தடவை நிமிர்ந்து வசந்தியின் பக்கம் பார்த்தாள். பிறகு முறுவலித்துவிட்டு மறுபடியும் தன் வேலையில் மூழ்கிவிட்டாள்.
“தனக்குத்தான் எந்த வேலையும் இல்லை. இவளைப் போல் தானும் ஏதாவது துறையில் ஈடுபட்டிருந்தால் இன்று மூச்சு கூட விட முடியாத அளவுக்கு வேலையில் மூழ்கியிருந்திருப்பாள்.
வீட்டு வேலைகளை ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் செய்து கொண்டிருந்தாள். விதவிதமான டிபன்கள், பட்சணங்கள் தயாரிப்பாள். வீட்டை எப்போதும் துடைத்துக் கொண்டோ, தூசியைத் தட்டிக் கொண்டோ இருப்பாள்.
எத்தனை வேலைகள்? இன்றும் அந்த வேலைகள் எல்லாம் அப்படியே இருக்கு. நாளைக்கு லாவண்யாவுக்கு மகனோ மகளோ பிறந்தால் தன்னிடம்தான் அனுப்பிவைப்பாள். முன்னால் ஒரு தடவை பேச்சு வாக்கில் சொல்லியிருக்கிறாள், அம்மாதான் அவளுடைய குழந்தைகளை வளர்க்கணும் என்று.
அப்படி வளர்த்தால் … மறுபடியும் அந்த வேலைகளை எல்லாம் செய்தால் தனக்கு ஓய்வு கிடைக்காத அளவுக்கு வேலை இருக்கும்.
ஆனால் தனக்கு அதனால் என்ன ஆகப் போகிறது? எப்படியும் அந்தக் குழந்தையும் லாவண்யாவை விட்டுவிட்டுப் போகத்தான் போகிறது. அப்படி இருக்கும் போது இந்த வேலைகளுக்கு, இந்த உழைப்புக்கு அர்த்தம் என்ன இருக்கிறது?
இத்தனை நாளும் நான் செய்த வேலைக்கு மதிப்பு இருக்கிறதா? மனைவி என்பதால் செய்தேன். தாய் என்பதால் செய்தேன். அந்த வேலைகள் எல்லாம் செய்ய வேண்டியவைதான் என்றாலும், அவற்றை செய்து கொண்டே எனக்காகவும் ஏதாவது செய்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?
நாள் முழுவதிலும் எனக்காக ஒரு நிமிஷமாவது செலவழித்திருந்தால் இன்று இந்த சூனியம் ஏற்பட்டு இருக்குமா?
“வசந்தி! கிளம்பலாம் வா” என்ற படி சுரேஷ் வந்தான். இருவரும் மறுபடியும் ஹோட்டலுக்கு வந்தார்கள். இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்தார்கள். சுரேஷ் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தான். வசந்தி தலை குனிந்தபடி கட்டில் மீது உட்கார்ந்திருந்தாள். இந்த முயற்சியும் வீண்தானா? நாள் முழுவதும் மௌனமாக கழித்ததைத் தவிர இரண்டு பேரும் மனம் விட்டு பேசவில்லையே? ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு நிமிர்ந்தாள்.
“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான் சுரேஷ்.
“ஒன்றும் இல்லை.” அவனுடைய கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள். சுரேஷிடம் எந்த சலனமும் இருக்கவில்லை. எங்கேயோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். மெதுவாக அவன் தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள். அவன் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு அவன் கண்களுக்குள் ஆழமாக பார்க்க முயன்றாள். கழுத்தில் மென்மையாக உதடுகளால் ஒற்றியெடுத்தாள்.
“ரொம்ப களைப்பாக இருக்கு வசந்தி! நாள் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தோம் இல்லையா?”
சுரேஷ் வசந்தியின் கையை விலக்கி விட்டு கட்டிலில் அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவமானத்தினால் வசந்தியின் உடல் நெருப்பாக தகிக்கத் தொடங்கியது.
“நான் அதற்குக் கூட லாயக்கு இல்லாதவளாகி விட்டேனா?” வசந்தியின் வார்த்தைகள் தொண்டைக் குழியிலேயே நின்று விட்டன. ஏற்கனவே சுரேஷ் போர்வையால் முகத்தையும் மூடிக் கொண்டு படுத்துவிட்டான்.
அந்த கட்டிலில் சுரேஷ¤க்கு பக்கத்தில் படுத்தால் பிணமாக மாறி விடுவோமோ என்ற உணர்வு எற்பட்டது வசந்திக்கு. தன்னுள் உயிர் சக்தி நசிந்துப் போய்விட்டது போலவும். இரத்தம் உரைந்து போய் நரம்புகள் செயலிழந்து விட்டது போலவும் இருந்தது. யோசிப்பது, வேதனைப்படுவது, ஆவேசமடைவது போன்ற உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாய் வெறுமையாய் மேற்கூரையை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். விடியற்காலையில் எப்போதோ உறக்கம் தழுவியதாலோ என்னவோ நன்றாக விடிந்த பின்னால் தான் விழிப்பு வந்தது.
ஏற்கனவே சுரேஷ் எழுந்துக் கொண்டு சாமான்களை எல்லாம் பேக் செய்துவிட்டிருந்தான்.
முதல் முறையாக “இனி பிரயோஜனம் இல்லை” என்ற அபிப்பிராயம் ஏற்பட்டது வசந்திக்கு.
நீலிமாவிடம் ஏற்பட்டிருப்பது வெறும் மோகம் இல்லை. அவர்களிருவருக்கும் நடுவில் நடந்த விஷயம் சாதாரணமானது இல்லை. இந்த எண்ணம் மேலோங்கியதும் வசந்திக்கு திடீரென்று சோர்வு ஆட்கொண்டது.
என்ன செய்வது? சுரேஷை விட்டுவிட்டு எப்படி வாழ்வது? யோசித்து யோசித்து மூளை சூடாகிவிட்டது. எதிரே தென்பட்ட நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டாள். தான் பருமானாகிவிட்டது உண்மைதான். ஆனாலும் அழகாகத்தான் இருக்கிறாள்.
இடுப்பு உடலோடு கலந்து போகாமல் மெலிந்து இன்னும் தனியாய் தென்பட்டுக் கொண்டுதான் இருந்தது. கைகள் குண்டாகிவிட்டாலும் மென்மையை இழக்கவில்லை. ஆண்களை இன்னும் ஈர்த்துக் கொண்டுதான் இருந்தாள். பொது இடங்களுக்கோ, சினிமாவுக்கோ போனால் ஆண்களின் பார்வை அவளைத் துரத்திக் கொண்டுதான் இருக்கும்.
இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தாலும் இளமையின் துள்ளலை இன்னும் இழக்கவில்லை. மார்புகள் சரிந்திருக்கலாம். இடுப்பில் இரண்டு மடிப்புகள் தோன்றியிருக்கலாம். இரண்டு குழந்தைகளை பெற்று பாலூட்டி வளர்த்து, வீட்டு வேலைகளை எல்லாம் ஒண்டியாக செய்துக் கொண்டிருந்தால் அந்த அளவுக்கு கூட உடலில் மாற்றங்கள் வராமல் எப்படி இருக்க முடியும்?
அப்படியும் தான் அழகை இழந்து விடவில்லை. தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு குரூபியாக இல்லை.
போன வருடம் கூட தன்னை மார்போடு அணைத்துக் கொண்டான். தன்னுடைய அழகு அவனைப் பைத்தியமாக்குவதாக மூச்சு முட்ட தழுவிக் கொண்டான்.
சுரேஷ் தன்னை விட்டு விலகிப் போனதற்கு சரிந்து போன மார்பகமோ, இடுப்பின் மடிப்புகளோ காரணம் இல்லை.
கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட மறந்து போனவளாய் கண்ணாடியின் முன்னால் அப்படியே நின்று கொண்டிருந்தாள் வசந்தி.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
தொடுவானம் தொட்டுவிடும் தூரம்
அத்தியாம் 9
வசந்திக்கு திருமணமான அடுத்த வாரமே பி.ஏ. ரிசல்ட்ஸ் வந்து விட்டன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். சிநேகிதிகள் எல்லோரும் வாழ்த்துக்களை தெரிவித்த போது வசந்திக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவற்றை லட்சியப்படுத்தவும் இல்லை. அப்பொழுது அவள் பார்வை படிப்பின் மீது இருக்கவில்லை.
சுரேஷ¤க்கு என்ன பிடிக்கும்? எப்படி இருந்தால் தன்னை அவனுக்கு பிடிக்கும்? மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி? நாத்தனாரிடம் பிரியமாக நடந்துகொள்வது எப்படி? சண்டை சச்சரவுகள் வராமல் எப்படி பார்த்துக் கொள்வது?
இது போன்ற யோசனைகளுடன் வசந்தியின் மூளை குழம்பியிருந்தது. மாமியார் மாமனாருக்கு பணிவிடை செய்து அவர்களிடம் நற்மதிப்பை பெறுவாள். கணவனுக்கு வேண்டியவிதமாக நடந்துகொள்வாள். நாத்தனாரை கூடப் பிறந்த சகோதரியாக பார்த்துக் கொள்வாள். சீரும் சிறப்புமாக தன்னுடைய குடித்தனம் ரொம்ப நன்றாக இருக்கும். அழகான இந்த கனவு வசந்தியை ஒரு இடத்தில் நிற்க விடவில்லை. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது, சிநேகிதிகள் பாராட்டியது இவை எதுவும் வசந்தியின் மனதில் நிற்கவில்லை.
ஒருநாள் வரலக்ஷ்மியும், சாந்தாவும் வந்து வலுக்கட்டாயமாக வசந்தியை கல்லூரிக்கு இழுத்துக் கொண்டு போனார்கள், மதிப்பெண்களை வாங்கி வருவதற்கு.
ஆபீஸில் மதிப்பெண் சான்றிதழை வாங்கி வரும் போது இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் வாசலில் லெக்சரர் மூர்த்தி வசந்தி மற்றும் அவளுடைய சிநேகிதிகளை உள்ளே அழைத்தார். “எம்.ஏ. இலக்கியத்தில் என்ன எடுத்துக் கொள்ளப் போகிறாய்? ஆங்கிலமா தமிழா?”
அவருடைய கேள்வி புரியாமல் வசந்தி திகைத்துப் போனாள்.
“ஆங்கிலம் எடுத்துக் கொள். அந்த மொழியின் மீது உனக்கு நல்ல ஆளுமை இருக்கிறது. சிலருக்குத்தான் அது சாத்தியம். ஆங்கிலம் படித்தால் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.” மேலும் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
“நான் மேற்கொண்டு படிக்கப் போவதில்லை சார்” என்றாள் வசந்தி.
அவர் திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு ” ஏன்?” என்று கேட்டார்.
“கல்யாணம் நிச்சயமானது முதல் வசந்தியின் முகத்தில் வெட்கம் படர்ந்து ரொம்ப அழகாக தென்படுகிறாள் இல்லையா? ஆனால் வெட்கப்பட்டுத்தான் ஆக வேண்டுமா ? உன்னைப் போல் வெட்கப்பட என்னால் முடியாது என்று தோன்றுகிறது.” ரோகிணி கிண்டலடித்தாள்.
லெக்சரர் மூர்த்தி வசந்தியின் வெட்கத்தை லட்சியப்படுத்தவில்லை. உட்காரு என்று நாற்காலியை சுட்டிக் காட்டினார்.
வசந்தி உட்கார்ந்துகொண்டாள். அரைமணி நேரம் மூர்த்தி ஏதோதோ சொன்னார். அதனுடைய சாராம்சம் அவள் மேலும் எம்.ஏ. படிக்கணும். வசந்தியின் காதுகளில் அவர் சொன்னது எதுவும் விழவே இல்லை. தாமதமாகிக் கொண்டிருக்கிறதே? சுரேஷ் வீட்டில் தனக்காக காத்துக் கொண்டிருப்பான். இவர் பாட்டுக்கு வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறாரே?” என்று உள்ளூர சலித்துக் கொண்டாள். அவர் சொல்லி முடித்ததும் ” ஆகட்டும் சார்” என்று விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
“மூர்த்தி சார் சொன்னபடி எம்.ஏ. படித்திருந்தால்?” இன்று மனதில் ஏதோ சலனம்!
எம்.ஏ. படித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சுரேஷ் இப்படி நடந்துகொண்டதற்கு தனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காதா? ஏதாவது வேலைக்கு போயிருந்தால் மட்டும் கணவன் தன்னை ஒதுக்கிவிட்டால் வருத்தம் இல்லாமல் போய் விடுமா?
இன்று சுரேஷ் தன்னை விட்டு விலகிவிட்டான் என்ற வேதனையுடன் தன் வாழ்க்கை முழுவதையும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் அர்ப்பணம் செய்துவிட்டு, தான் இன்று வெறுமையுடன், புத்திச்சாலித்தனம் எதுவும் இல்லாதவளாக, எந்த பற்றுகோலும் இல்லாதவளாக இந்த மூன்று பேரைத் தவிர வேறு அடையாளம் எதுவும் இல்லாதவளாக எஞ்சி நின்று விட்டாள்.
இவர்களுடைய கருணைக்காக எதிர்பார்க்க வேண்டிய நிலைமை. தானும் ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு தனிப்பட்ட அங்கீகாரம் கிடைத்திருந்தால், தனக்கும் ஒரு ஆதாரம் இருந்திருக்கும். தன் இரண்டு கால்களில் ஒன்றாவது தரையில் கொஞ்சம் ஊன்றியிருக்குமோ என்னவோ. இப்படி திடீரென்று காலுக்கடியிலிருந்து நிலம் நழுவி தான் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிப்பது போல், பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் பள்ளத்தாக்கில் விழுந்து கொண்டிருப்பது போல் தோன்றியிருக்காதோ என்னவோ.
ஆனால் தன்னால் இதையெல்லாம் எப்படி ஊகிக்க முடியும்? சுரேஷ் இப்படி எல்லாம் செய்வான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு மனைவியாய், ஒரு தாயாய் இருப்பதை விட ஸ்திரமான ஸ்தானம் வேறு எதற்கு இருக்க முடியும்? ஆனால் அவையெல்லாம் வெறும் கூடுகள் என்றும், நிலையற்றவை என்று எப்படி தெரியும்? ஆனால் உலகில் எல்லோரும் சுரேஷை போல் இருக்க மாட்டார்கள். மனைவியை கைவிட்டு விடமாட்டார்கள். அந்த நீலிமா போன்றவர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் குறுக்கே வரமாட்டார்கள்.
நீலிமாவைப் பற்றிய நினைப்பு வந்ததும் வசந்தியின் இதயம் நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. துக்கம் பொங்கி வந்தது.
“தூங்காமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறாயா?” சுரேஷ் எழுந்துகொண்டான்.
“விழிப்பே வராமல் போய் விடுமோ என்று” சொல்லிக் கொண்டே கடியாரத்தின் பக்கம் பார்த்தாள்.
மணி நான்காகியிருந்தது. “எழுந்துகொள்ளுங்கள். போகலாம்” என்றாள் வசந்தி.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
“வருகிற ஞாயிற்றுக்கிழமை வெளியே எங்கேயாவது போய் வருவோம். வீட்டில் இருந்து இருந்து போர் அடிக்கிறது.” மாலையில் டீ குடித்துக் கொண்டே வசந்தி சொன்னதை கெட்டு வியப்புடன் பார்த்தான் சுரேஷ். இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் குறைந்து விட்ட சூழலில் வசந்தியில் வார்த்தைகள் அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தின.
“எங்கே போவது?” முணுமுணுப்பது போல் கேட்டான்.
“எங்கே வேண்டுமானாலும். நாளைக் காலையில் சாத்தூர் அணைகட்டுக்குப் போனால் திங்கள் காலையில் திரும்பி வந்து விடலாம்.”
என்ன பதில் சொல்வதென்று புரியாததால் சுரேஷ் மௌனமாக இருந்தான்.
“எனக்கு பிக்னிக் போகணும் என்று இருக்கு. அழைத்துப் போவீங்களா? மாட்டீங்களா?” கடினமான குரலில் கெட்டாள் வசந்தி. எப்படியாவது தன் குடித்தனத்தை சீர் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு அவளுக்கு.
“எனக்குப் போகணும்னு இல்லை. நீ போகணும்னு நினைத்தால், துணைக்கு வரணும் என்றால் வருகிறேன்.” பட்டுக்கொள்ளாமல் சொன்னான்.
வசந்திக்கு தாங்க முடியாத அளவுக்கு கோபம் வந்தது. இதுவே அந்த நீலிமா கேட்டிருந்தால் சந்தோஷம் தாங்க முடியாமல் குதித்து பாடிக் கொண்டு போயிருப்பான். தான் இப்போ வேண்டாதவளாகி விட்டாள். இதெல்லாம் புது மோகம்தானா? தான் அலட்சியமாக இருந்துவிட்டாளா? குழந்தைகளின் நினைப்பில், வீட்டு வேலைகளின் மும்மரத்தில் கணவனை லட்சியப்படுத்தவில்லையா? அவன் தேவைகளை பூர்த்தி செய்ய வில்லையா?
இப்போ தான் மாறினால்? அவனுடைய தேவைகளை பூர்த்திசெய்தால்? அவனிடம் மாற்றம் வருமா? அந்த நீலிமாவிடம் இருக்கும் மோகம் போய்விடுமா? பலவிதமான எண்ணங்களால் திக்குமுக்காடியவள் தலையை இரண்டு கைகளாலும் அழுத்திக் கொண்டே “எனக்கு போகணும் போலிருக்கு. நீங்களும் வரணும். வந்துதான் ஆகணும்” பிடிவாதமாக சொன்னாள்.
“சரி. அப்படியே போவோம்” என்றான் சுரேஷ். டீயைக் குடித்துவிட்டு வெளியே சென்றான்.
வசந்திக்கு பிரமிப்பாக இருந்தது. சுரேஷ¤டன் சேர்ந்து தான் சாத்தூர் அணைக்கட்டுக்குப் போகப் போறாள். திருமணமான புதிதில் இருவரும் அணைக்கட்டுக்கு போய் இரண்டு நாட்கள் ஜாலியாக இருந்து விட்டு வந்தார்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் சுரேஷ் அணைகட்டு போய் வந்ததைப் பற்றி நினைவு படுத்திக் கொண்டே இருந்தான். மறுபடியும் ஜாலியாக போய் வரலாமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தான். நேரம்தான் கிடைக்கவில்லை.
“இப்போ மறுபடியும் சாத்தூர் பயணத்தால் தன் குடித்தனம் சீரடைந்தால்?” அந்த நினைப்பே வசந்திக்கு புதிய தெம்பை அளித்தது. சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளை எல்லாம் செய்தாள். சமீபகாலமாய் பொருட்படுத்தாமல் இருந்த சுரேஷின் பொருட்களை எல்லாம் ஒழுங்குப் படுத்தினாள். அவனுடைய உடைகளை இஸ்திரி போட்டு வைத்தாள். சட்டை பித்தான்களை தைத்தாள். அழுக்கடைந்த கைக்குட்டைகளை எல்லாம் தேடித் தேடி தோய்த்துப் போட்டாள்.
மா¡லயில் தேங்காய், பழங்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் ராமர் கோவிலுக்கு கிளம்பினாள்.
“ஸ்ரீராமசந்திரா! என் கணவர் எனக்கு தக்கும்படியாக செய் சுவாமீ! அவர் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறார்” என்று வேண்டிக் கொண்ட போது “ஸ்ரீராமர் தன் மனைவியை தள்ளி வைத்தாரே? மறந்து விட்டாயா?” என்று யாரோ காதில் சொல்வது போல் தோன்றியது.
“சீ… சீ.. எல்லாம் வேண்டாத யோசனைகள். ராமர் ஏகபத்னிவிரதம் கடைபிடித்தவர். மக்களுக்காக அப்படிச் செய்தாரே ஒழிய சீதையிடம் அவருக்கு எவ்வளவு அன்பு! பரஸ்த்ரீ வியாமேகத்தில் விழுந்து மனைவியை காட்டுக்கு அனுப்பி வைத்தாரா என்ன? வேண்டாததை நினைப்பதால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது” என்று நினைத்தபடி கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அடுத்ததாக பிர்லாமந்திருக்கும், கிருஷ்ணரின் கோவிலுக்கும் போன போது திடீரென்று அந்த கடவுள்களுக்குக் கூட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது நினைவுக்கு வந்தது.
“இந்த கடவுள்களுக்கு புத்தி இப்படி போவானேன்?” கோபமாக மனதிலேயே திட்டிக் கொண்டாள். மேலும் மனம் நிம்மதியில்லாமல் போனதைத் தவிர வேறு பிரயோஜனம் இருக்கவில்லை.
சனிக்கிழமை மாலையில் கிளம்பலாம் என்று நினைத்திருந்த போது சுரேஷின் நண்பன் ஒருவன் வீடு தேடிக் கொண்டு வந்தான். அவனை வழியனுப்பும் போது இரவு பதினோரு மணியாகிவிட்டது.
“நாளை காலையில் போகலாம்” என்றான் சுரேஷ் கொட்டாவி விட்டுக் கொண்டே. வசந்தி ஆர்வமற்றவளாய் தலையை அசைத்தாள்.
சுரேஷ் இந்த புரோக்கிராமை நிறுத்துவதற்காக அந்த நண்பனை அழைத்திருப்பானோ? நாளைக்காவது அழைத்துப் போவானா? வசந்தி யோசித்துக் கொண்டிருந்தாள். உறங்கிக் கொண்டிருந்த சுரேஷைப் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தாள். தூங்கிவிட்டால் மறுபடியும் விழிப்பு வராதோ என்று கண்களை விரித்தபடி உட்கார்ந்திருந்தாள்.
திறந்த அந்தக் கண்களுக்கு முன் எத்தனையோ காட்சிகள்!
மனதில் எத்தனையோ நினைவுகள்!
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
எது என்னவாக இருந்தாலும் சரி சுரேஷ¤டன் எப்போதும் போல் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று வசந்தி முயற்சி செய்தாள். சுரேஷ் வீட்டுக்கு வந்ததும் சிரித்த முகத்துடன் அவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொடுத்தாள். முகத்தில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த வசந்தியை வியப்புடன் பார்த்தான் சுரேஷ்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தைகளைப் பற்றி பேசிக் கொண்டார்கள். அதிகமாக சவிதாவைப் பற்றிதான், ஹாஸ்டலில் எப்படி அவஸ்தைப் படுகிறாளோ என்று.
சாப்பாடு முடிந்ததும் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு மேஜை அருகில் சென்றான் சுரேஷ்.
வசந்தி ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. “இதுவே நிலிமாவாக இருந்தால் இப்படி புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருப்பீங்களா?” தீவிரமான குரலில் கேட்ட வசந்தியை திகைப்புடன் பார்த்தான்.
“அர்த்தம் இல்லாமல் ஏன் இப்படிப் பேசுகிறாய் இதை அர்ஜென்டாக பார்க்கணும். நாளை காலையில் ஒரு ஆபரேஷன் இருக்கிறது.”
சுரேஷ் மறுபடியும் புத்தகத்தில் தலையை நுழைத்தான்.
“எல்லாம் வெறும் பேச்சு. பொய்! அந்த ஆபரேஷன் கேஸ் ஒன்றும் முக்கியமானது இல்லை. பத்து நாட்கள் லீவ் போட்டுவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் ஊர் சுற்றியவருக்கு அர்ஜென்ட் கேஸ் இருக்குன்னு சொன்னால் நம்பக் கூடிய விஷயம்தானா? என்னுடன் பேசுவதில் விருப்பம் இல்லை. என் பக்கத்தில் படுத்துக் கொள்வதில் விருப்பம் இல்லை. என்னை அரவணைத்துக் கொள்வதில் விருப்பம் இல்லை. அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் இந்த நாடகம்.” வசந்திக்கு அளவு கடந்த துக்கம் ஏற்பட்டது.
“எதற்காக இந்த அழுகை?” கோபமாக கேட்டான் சுரேஷ்.
“எதற்காகவா? என்னைக் கண்டால் உங்களுக்கு பிடிக்காமல் போனதற்கு. நான் இன்னும் சாகாமல் இருப்பதற்கு. சொல்லுங்க. இன்று ஏதோ ஒன்றை முடிவு செய்யுங்கள். நான் வேண்டுமா இல்லை அவள் வேண்டுமா? இரண்டில் ஒன்றை சொல்லுங்கள். இனி மேலும் என்னால் இந்த நரகத்தை தாங்கிக் கொள்ள முடியாது.”
“வசந்தீ பிளீஸ்! நீலிமாவுடன் உறவை முறித்துக் கொள்வது என்னால் முடியாத காரியம். உன்னிடம் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் நீலிமா என்றால் அன்பு …. காதல்.”
“என்னிடம் உங்களுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் விருப்பம் கூட இல்லை. அப்படித்தானே. அதை ஒப்புக்கொள்ளுங்கள் முதலில். அவளிடம்தான் உங்களுக்கு காதல். அவளிடமே போங்கள். அவள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள். போய் விடுங்கள்.” ஹிஸ்டீரியா வந்தது போல் கத்தினாள் வசந்தி.
“வசந்தீ! சும்மா இரு.” சுரேஷ் எழுந்து வந்து வசந்தி¨யின் கையைப் பற்றிக் கொண்டான்.
வசந்தி கையை உதறித் தள்ளினாள். “சீ … என்னை தொடாதீங்க. அந்த தேவடியாளுடன் இருந்து விட்டு என்னிடம் வர வேண்டாம். வெட்கம் மானம் எதுவும் இல்லை அவளுக்கு. கல்யாணம் ஆனவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறாள். எச்சில் சாப்பாட்டுக்கு ஆசைப் பட்டாள். அந்த தேவடியாளுடன் உறவை முறித்தக் கொண்டு வந்தால்தான் நான் இந்த வீட்டில் இருப்பேன். இல்லையா செத்துப் போகிறேன். இல்லையா எங்கேயாவது போய் விடுகிறேன்.”
ஹிஸ்டீரிக்காக அழுதுக் கொண்டே வெளியில் போவதற்காக வசந்தி போராடிக் கொண்டிருந்தாள். சுரேஷ் அவளை வலுக்கட்டாயமாக கட்டில் மீது தள்ளிவிட்டான். வசந்தி வாய்க்கு வந்த படி நீலி¨மாவை வசை பாடிக் கொண்டிருந்தாள். சுரேஷ் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவள் வாயை மூட வைத்தான். அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் இயலாமையுடன் நின்றுவிட்டான்.
***************************************************************************************
மறுநாள் மாலை வரையில் அப்படியே படுத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. பச்சை தண்ணீரை கூட குடிக்கவில்லை. மாலையில் அண்ணண், அண்ணி வந்ததைப் பார்த்த பிறகும் அவளுக்கு எழுந்து கொள்ளணும் என்று தோன்றவில்லை. லக்ஷ்மி வலுக்கட்டயாயமாக எழுப்பி முகத்தை அலம்பச் செய்து காபி குடிக்க வைத்தாள். தலையை வாரிவிட்டுக் கொண்டே மெதுவாக இதோபதேசம் செய்தாள்.
“வசந்தீ! இப்படி பைத்தியமாக இருக்கிறாயே? காலையில் சுரேஷ் வந்து எல்லாவற்றையும் சொன்னான். நீ இப்படி ரகளை செய்துக் கொண்டிருந்தால் விவாகரத்தைத் தவிர வேறு வழியில்லை என்றான். ஏன் இப்படி உன் கையாலேயே உன் குடித்தனத்தை நாசமாக்கிக் கொள்கிறாய்? நகத்தால் கிள்ளி எரிய வேண்டிய விஷயத்திற்கு யாராவது கோடாலியைப் பயன்படுத்துவாங்களா? நான்கு நாட்கள் கண்களை மூடிக் கொண்டு சும்மா இரு. சின்னவளுக்கு திருமணம் ஆக வேண்டாமா? அவனாக சொன்னதால்தான் விஷயம் உனக்குத் தெரிந்தது. இல்லாவிட்டால் எப்படி தெரியும்? அவன் தவறு செய்திருக்கிறான். அந்த தவறை திருத்திக் கொள்வதற்கு டைம் கொடுக்கணுமா இல்லையா? சொத்து முழுவதையும் அவளுக்கு தாரைவார்த்தால் வருத்தப்படலாம். அதுதான் இல்லையே? உனக்கு எல்லா பொறுப்பும் முடிந்துவிட்டது. சின்னவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டால் இனி கவலைப்பட வேண்டியது இல்லை. இப்போ சண்டை போட்டு குடித்தனத்தை நடுத்தெருவுக்கு கொண்டு நிறுத்தப் போகிறாயா? உங்க அண்ணன் விஷயத்தை கண்ணால் பார்த்தாய் இல்லையா? பத்துமாதம் போவதற்குள் அவள் வேறு வழியைத் தேடிக் கொண்டு போய்விட்டாள். இவருக்கும் புத்தி திரும்பி வந்தது. என் மதிப்பு புரிந்தது. நீ சண்டை போடவும் வேண்டாம். சாப்பாடு, தண்ணி இல்லாமல் குன்றிப் போகவும் வேண்டாம். உனக்கு என்ன தலையெழுத்து? சுரேஷின் மனைவி நீ. இரண்டு குழந்தைகளின் தாய். தலையை நிமிர்த்திக் கொண்டு பெருமையுடன் வளையம் வா. ‘உன் மனைவி எங்கே? இந்த அம்மாள் யாரு?’ என்று நான்கு பேர் கேட்டால் சுரேஷ்தான் குன்றிப் போகணும். கல்யாணம் காட்சி ஒன்றும் இல்லாமல் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைப்பட்டவள் அவள். அவள்தான் தலையைக் குனிந்து கொள்ளணும். நீ மகாராணியைப் போல் இருக்கணும்.” ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, காதில் குடியிருக்காத குறையாக அறிவுரைகளை வழங்கினாள் லக்ஷ்மி.
தானே எல்லோருக்கும் சமையல் செய்தாள். வசந்தியைச் சாப்பிட வைத்து அவர்களும் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் போன சற்று நேரத்திற்கெல்லாம் சுரேஷ் வந்தான். வசந்தி முகத்தைத் திருப்பிக் கொண்டு “மேஜை மீது எல்லாம் இருக்கு. பரிமாறிக் கொண்டு சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு போய் படுத்துக் கொண்டாள்.
நாடகள் பாரமாக கழிந்துக் கொண்டிருந்தன. வசந்தி நாளுக்கு நாள் இளைத்து துரும்பாகிக் கொண்டிருந்தாள். சுரேஷ் நீலிமாவின் உறவு தன் கண் முன்னாலேயே பலப்படுவதைப் பார்த்துக் கொண்டு வேறுமே இருப்பது அவளுக்கு நரகத்தில் இருப்பது போல் இருந்தது. சுரேஷ் மறுபடியும் தனக்கு நெருக்கமாவான் என்ற ஆசை கற்பூறமாய் மறைந்துக் கொண்டிருந்தது.
அண்ணியின் அறிவுரையின் படி ஒரு மாதம் எதையும் பொருட்படுத்தாமல் இருந்ததும் வசந்திக்கு பைத்தியம் பிடித்தாற்போல் இருந்தது. சுரேஷ் பாட்டுக்கு தன்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான். வசந்தியிடம் அதிகம் பேச மாட்டான். காலையில் போய் விட்டு இரவு பத்து மணிக்கு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நேரடியாக பேசுவதை விட மனதிலேயே விதவிதமாக கேள்விகளைக் கேட்டு பதில் சொல்ல முடியாமல் அவன் தலை குனிந்து நிற்பது போல் ஊகித்துக் கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது. கொஞ்சநாட்கள் கழித்து அதுவும் சலிப்பை ஏற்படுத்தியது.
அன்று மாலை வீட்டின் முன்னால் இருந்த செடிகளுக்கு முன்னால் போய் நின்றுக் கொண்டிருந்தாள் வசந்தி. மலரும் மொட்டுக்களுடன் ரோஜா செடி கண்கொள்ளாமல் காட்சி தந்தது. அந்த மொட்டுக்கள் எல்லாம் பூவாக மலரும். பூக்களை பறிப்போம். மறுபடியும் பூக்கள் மலரும். மறுபடியும் பறிப்போம். கொஞ்ச நாட்கள் கழித்து ரோஜா செடி காய்ந்து போய்விடும். ரோஜா செடி எதற்காக வளர்ந்தது? பூக்களை தந்து விட்டு செத்துப் போவதற்காகவா? அந்த செடியின் மூலமாக எத்தனை பேருக்கோ சந்தோஷம் ஏற்பட்டிருக்கும். உயிரோடு இருக்கும் வரையில் சந்தோஷத்தைக் கொடுத்து விட்டு மண்ணில் கலந்து விடும்.
தான் பிறந்த போது தாய் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார்களோ என்னவோ. ஆனால் நாளாக நாளாக தான் அவர்களுக்கு பாரமாகிவிட்டாள். சுரேஷின் கையில் தன்னைப் பிடித்துக் கொடுக்கும் வரையில் அவர்கள் கண்களில் ஏதோ சுமை! தன்னைப் பற்றிய கவலைதான் அவர்களுக்கு எப்போதும். சுரேஷ¤க்கும், குழந்தைகளுக்கு தன்னிம் பிரியம் இருக்கிறதா? எந்த மாதிரியான பிரியம்? தான் சுரேஷின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டாள். அவனும் நல்லவனாக இருந்தான். குழந்தைகளை பாசத்தோடு வளர்த்தாள். அவர்களும் பாசத்தோடு இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாக நடப்பது போலிருந்தது. வாழ்க்கை தனக்கு புரிபட்டு விட்டாற்போல் இருந்தது. இப்போ சுரேஷ் செய்த காரியத்தினால் தன் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிட்டது. ஏன்? அப்படி ஏன் ஆக வேண்டும்? சுரேஷ¤ம், குழந்தைகளும் இல்லை என்றால் இந்த உலகமே தனக்கு இல்லாமல் போய் விடுமா?
உலகம் என்றால் தன்னைப் பொறுத்தவரையிலும் என்ன? தானும், தன்னைச் சுற்றியிருப்பவர்களும். இதற்கு மிஞ்சிய உலகம் வேறு என்ன இருக்க முடியும்? சுற்றிலும் இருப்பவர்கள் தன்னைப் பார்த்து இரக்கப் படுவார்கள். ஏதோ குறை இருந்திருக்கும், அதான் விட்டுவிட்டான் என்பார்கள். உள்ளூர சிரித்துக் கொள்வார்கள். தான் இப்படியே அழுமூஞ்சியாக இருந்தால் சலித்துக் கொள்வார்கள். எரிந்து விழுவார்கள். எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் கணவன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும் லட்சியமில்லை என்பார்கள். அப்படி லட்சியம் இல்லாததால்தான் கணவன் திசை மாறிப் போனான் என்பார்கள். தான் எப்படி இருக்கணும்? என்ன செய்யணும்? எது செய்தால் சரி, எது செய்தால் தவறு? தவறுக்கும் சரிக்கும் அப்பாற்பட்டது எதுவும் இல்லையா? எண்ணங்களில் ஆழ்ந்து போன வசந்தி கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்து கொண்டிருந்த ரோகிணியைக் கவனிக்கவில்லை.
“வசந்தீ!” என்று அழைத்த ரோகிணியை நம்பமுடியாவள் போல் பார்த்தாள் வசந்தி.
“எப்போ வந்தாய்?”
“காலையில். இங்கே சர்ஜன்ஸ் கான்·பரென்ஸ் நடக்கிறது. அதற்காக வந்தேன். இரண்டு நாட்கள் இருப்பேன். என்ன விஷயம்? வீட்டில் விளக்குக் கூட போடாமல் வெளியில் இருட்டில் நின்று கொண்டிருக்கிறாய்?” ரோகிணி சிரித்த முகத்துடன் குசலம் விசாரித்ததும் வசந்திக்கு ஏதோ பற்றுகோல் கிடைத்தாற்போல் தோன்றியது.
“ரோகிணீ! வா.. வா” என்று உள்ளே அழைத்துப் போனாள். மளமளவென்று குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.
“சுரேஷ் இல்லையா?” என்று ரோகிணி கேட்ட கேள்விக்கு வசந்தியின் முகம் சுருங்கிவிட்டது.
“வருவார். தாமதமாகும்.” முணுமுணுப்பது போல் சொன்னாளள்.
“என்ன ரொம்ப இளைத்துவிட்டாயே? குழந்தைகளைப் பார்க்கவில்லையே என்ற ஏக்கமா?”
ரோகிணி கேட்ட போது பார்வையைத் தாழ்த்திக் கொண்டாளே ஒழிய பதில் சொல்லவில்லை.
ரோகிணி கொஞ்சம் நேரம் தன் குழந்தைகளைப் பற்றி, தன்னுடைய பிராக்டீஸைப் பற்றி, கான்·பரென்ஸ் பற்றி பேசினாள். வசந்தி ஆர்வம் காட்ட வில்லை என்று உணர்ந்ததும் பேச்சை நிறுத்திவிட்டாள். வசந்தி ரோகிணிக்கு இந்த விஷயத்தை எப்படி சொல்வது, சொன்னால் ரோகிணி எப்படி எடுத்துக் கொள்வாள், என்ன நினைப்பாள் என்ற யோசனையில் மூழ்கிவிட்டாள்.
கடைசியில் இரண்டு நிமிடங்கள் மௌனமாக இருந்த ரோகிணி இனியும் தாங்கிக் கொள்ள முடியாமல் “வசந்தீ! என்ன ஆகிவிட்டது உனக்கு?” என்று திரும்பத் திரும்ப கேட்டதும் வசந்தி இந்த உலகிற்கு வந்தாள்.
“எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ரோகிணீ! சுரேஷ் நீலிமா என்ற பெண்ணை காதலிக்கிறானாம். சமீபகாலமாய் அவளுடன்தான் இருக்கிறான்.” சொல்லும் போதே வசந்தியின் குரல் அடைத்துக் கொண்டுவிட்டது.
ரோகிணி பதற்றமடைந்தாள். “என்னதான் நடந்தது? எப்போ?” என்று வசந்தியின் அருகில் வந்தாள்.
தனக்காக கலவரப்பட்டுக் கொண்டிருந்த சிநேகிதியைப் பார்த்ததும் வசந்தியால் மேலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுது கொண்டே, ரோகிணி ஆறுதல்மொழிகளுக்கு கொஞ்சம் தேறிக் கொண்டு விவரங்களை எல்லாம் சொன்னாள்.
“என் வாழ்க்கையில் இப்படி ஏன் நடக்கணும்? நான் என்ன பாவம் செய்தேன்?” என்று அழுதுக் கொண்டிருந்த வசந்தியை இரக்கத்துடன் பார்த்தாள் ரோகிணி.
“இந்த நிலைமையிலிருந்து எப்படி வெளியேறணும் என்று யோசிக்கணுமே தவிர அழுதுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் எப்படி?”
“என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ புரியவில்லை. நான் என்ன செய்தேன் என்று எனக்கு இந்த தண்டனை? என் குறை என்ன?”
“நீ ஒன்றும் செய்யவில்லை வசந்தீ. ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்து கொள்ளணும். இந்த காலத்தில் திருமணங்கள் நீடித்து நிலைப்பதில்லை. இதில் தவறு யாருடையது என்பதை ஒதுக்கிவிட்டு, திருமண பந்தத்தைப் பற்றி நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது. அதற்கு அவ்வளவு மதிப்பு தரவில்லை என்றால் நமக்கு இவ்வளவு வெதனை இருக்காது” என்றாள் ரோகிணி ஆழமாக யோசித்துக் கொண்டே.
“திருமணத்திற்கும், குடும்பத்திற்கும் மதிப்பு தரவில்லை என்றால் இனி வேறு எதற்கு மதிப்பு தருவது? சுரேஷ் இப்படி நடந்து கொள்வது தவறு இல்லையா?”
சுரேஷ் செய்தது தவறுதான் என்று ரோகிணி அவனை வசைபாடாதது வசந்தியை வருத்தியது.
“சுரேஷ் செய்தது தவறு என்று குற்றம் சாட்டுவதால் நமக்கு என்ன ஆகப் போகிறது? தன்னுடைய நிலைமையை அவன் நிலை நாட்டிக் கொள்வான். முந்தா நாள் வரையில் சுரேஷ் நல்லவனாகத்தானே இருந்தான். எந்த சூழ்நிலையில் வந்தாளோ தெரியாது, இன்னொரு பெண் அவனுடைய வாழ்க்கையில் வந்து விட்டாள். உடனே அவன் கெட்டவனாகி விடுவானா? அப்படியே அவன் கெட்டவனாக இருந்தால் அவனைப் பற்றி உனக்கு என்ன வருத்தம்? அவனுடைய செயல்களுக்குத் தகுந்த பலனை அவன் அனுபவிப்பான். உன்னிடமிருந்து விலகிப் போவதே அவனுக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கலாம். அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்த நிலைமையிலிருந்து எப்படி வெளியேறுவது? எப்படி சீர் படுத்துவது என்று யோசிப்பது நல்லது. சுரேஷிடம் நான் பேசிப் பார்க்கட்டுமா?
“என்னவென்று பேசுவாய்?”
“அவன் மனதில் என்ன நினைக்கிறானோ கேட்கிறேன்.”
“அவனிடம் கேட்டால் டைவோர்ஸ் தந்து விடுகிறேன் என்பான். சொத்தை என் பெயருக்கு மாற்றி விடுகிறேன் என்பான். எனக்கு டைவோர்ஸ் வேண்டாம். சொத்தும் வேண்டாம். சுரேஷ்தான் வேண்டும்.”
“சுரேஷிடம் உனக்கு இன்னும் அன்பு இருக்கிறதா? அவன் இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று…”
ரோகிணியின் வார்த்தைகள் இன்னும் முடியவில்லை. வசந்தி இடையிலேயே நிறுத்திவிட்டாள்.
“காதல் காதல் என்று பைத்தியக்காரத்தனமாக பேசாதே. நான் சுரேஷை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவன் என் போட்டோவைப் பார்த்து என்னை கல்லூரியில் வந்து நேரில் பார்த்து விருப்பப்பட்டு கல்யாணம் செய்து கொண்டான். நான் அவனுடைய போட்டோவை எப்போ பார்த்தேன் தெரியுமா? முகூர்த்தம் வைத்த பிறகு. மணமேடையில்தான் ஆளை பார்த்தேன். அவன் என்னுடைய கணவன். நான் அவனுடைய மனைவி. என் கழுத்தில் தாலியைக் கட்டியிருக்கிறான். அவனிடம் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவனுக்கு அனுகூலமாக நடந்து கொள்ளவில்லை என்றால், தீராத நோயுடன் படுத்துக் கொண்டிருந்தால் அவன் என்னை விட்டுவிட்டுப் போனாலும் ஒரு அர்த்தம் இருக்கும். எனக்கு என்ன குறை? நான் என்ன குறை வைத்துவிட்டேன் என்று இன்னொருத்தியிடம் போகணும்? எதற்காக டைவோர்ஸ் தருவதாக சொல்லணும்? இதெல்லாம் என்னவென்று நறுக்குன்னு கேட்டு அவனை வழிக்குக் கொண்டுவருபவர்களே இல்லையா?”
ஆவேசத்தில் வசந்தியின் முகத்தில் வியர்வை அரும்பியது. ரோகிணி வசந்தியின் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
“ஆவேசத்தை விட்டுவிட்டு யோசித்துப் பாரு. இது சரியில்லை என்று சுரேஷிடம் சொல்வது ஒரு பிரச்னை இல்லை. நம்முடைய வார்த்தைகளை அவன் லட்சியப்படுத்துவானா? ஒருக்கால் வலுக்கட்டாயமாக அவனைத் தடுத்து நிறுத்தினாலும் அவனுக்கு உன்னிடம் காதல்….”
“மறுபடியும் காதல் என்கிறாயே? அந்த காதல் எனக்கு வேண்டாம். எனக்கு கணவன் வேண்டும். வீட்டில் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னைச் சார்ந்திருக்கும் கணவன், என்னைப் பாதுகாக்கும் கணவன், என்னை போஷிக்கும் கணவன், மாலையில் வீட்டுக்கு வரும் கணவன், எனக்காகவும், என் குழந்தைகளுக்காகவும் வாழும் கணவன் வேண்டும் எனக்கு. காதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளவில்லை. கணவனுக்காக, அவனுக்கு பெற்றுத் தரும் குழந்தைகளுக்காக நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு கணவன் வேண்டும். குழந்தைகள் வேண்டும். குடும்பமும் வேண்டும். ஆனால் சுரேஷ¤க்கு நான் தேவையில்லை. லாவண்யாவுக்கு சொத்தை தவிர அம்மா வேண்டியதில்லை. சவிதா எதையும் பொருட்படுத்த மாட்டாள். இப்போ நான் என்ன செய்யட்டும்? எனக்கு ஏன் இந்த நிலைமை?”
வசந்தியை எப்படி சமாதானப்படுத்துவது என்று ரோகிணிக்குத் தெரியவில்லை.
“அழாதே வசந்தீ! ப்ளீஸ்!” என்று சொல்வதை தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
அன்று இரவு சுரேஷ் வீட்டுக்கு வராததால் ரோகிணிக்கு நிலைமை கொஞ்சம் தீவிரமாகவே இருப்பது போல் தோன்றியது.
காலையில் எழுந்து கொண்டதும் காபி, டிபன் தயாரிப்பதில் வசந்திக்கு கூடமாட ஒத்தாசை செய்துவிட்டு, வசந்தியுடன் சேர்ந்து டிபனை சாப்பிட்டு விட்டு கான்·பரென்ஸ¤க்கு கிளம்பினாள் ரோகிணி.
“மாலையில் சீக்கிரம் வந்து விடுகிறேன். நீ தயாராக இரு. இருவரும் சேர்ந்து கொஞ்ச நேரம் வெளியில் போவோம்” என்று சொல்லிவிட்டுப் போனாள் ரோகிணி.
சர்ஜென்ஸ் கான்·பரென்ஸில் காலையில் நடக்கும் கூட்டம் முடிந்தது. லஞ்சுக்காக எல்லோருடனும் சேர்ந்து டைனிங் ஹாலுக்குப் போன போது யாரோ “நீலிமா!” என்று அழைத்ததைக் கேட்டு அந்தப் பக்கம் திரும்பினாள் ரோகிணி.
“நீலிமா!” இந்த முறை குரலை உயர்த்தி அழைத்தார்கள். “யாரு? ஓ… நீயா?” என்ற படி நீலிமாவும் அந்த நபரிடம் சென்றாள்.
‘இவளிடம் பேசிப் பார்த்தால்?’ என்ற எண்ணம் வந்தது ரோகிணிக்கு. ‘என்னவென்று பேசுவது? நீங்க சுரேஷை விட்டுவிடுங்கள். வசந்தி ரொம்ப வேதனையில் இருக்கிறாள்’ என்று சொல்வதா?
அவள் என்ன பதில் சொல்லக் கூடும்? உங்களுக்கு அனாவசியம் என்றால்? சுரேஷ்தான் என்னை விட்டுப் போக மாட்டேங்கிறான். முடிந்தால் நீங்களே அவனை அழைத்துக் கொண்டு போங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டால்?
நீலிமாவிடமிருந்து சுரேஷை இழுத்து வந்து வசந்தியின் குடித்தனத்தை நிலை நாட்ட முடியுமா? கட்டாயத்தின் பேரில் சேர்ந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமா?
சுரேஷ் ஏன் வசந்தியிடமிருந்து பிரிந்து போனான்?
நீலிமாவுக்கு ஏன் நெருக்கமானான்?
இவ்வளவு பெரிய ரிஸ்கை எதற்காக எடுத்துக் கொண்டான்?
இதை எல்லாம் ஆழ்ந்து யோசிக்காமல் சினிமாவில் வருவது போல் நீலிமாவை தியாகம் செய்யச் சொல்வதில் அர்த்தம் என்ன இருக்கு?
முதலில் சுரேஷிடம் பேச வேண்டும். அப்பொது பிரச்னை என்னவென்று புரிய வாய்ப்பு இருக்கிறது.
இந்த விதமாக யோசித்ததால் ரோகிணி நீலிமாவை தொலைவிலிருந்து கவனித்தாளே தவிர அருகில் செல்லும் முயற்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் மாலையில் நீலிமாவுக்காக வந்த சுரேஷ் தனக்குப் பக்கத்திலேயே ஸ்கூட்டரை நிறுத்தியதால் சுரேஷிடம் குசலம் விசாரிக்க வேண்டியதாயிற்று.
சுரேஷ் ரோகிணியிடம் பேசிக் கொண்டிருந்த போதே நீலிமா அங்கே வந்தாள்.
“டாக்டர் நீலிமா. இவள் ரோகிணி, வசந்தியின் சிநேகிதி. திருச்சியில் பிராக்டீஸ் செய்கிறாள்.” ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைத்தான்.
நீலிமா நட்புடன் முறுவலித்துவிட்டு “வாங்க. காபி சாப்பிடுவோம்” என்றபடி கேண்டினை நோக்கி நடந்தாள்.
சுரேஷ¤ம் ரோகிணியும் அவளுக்குப் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தார்கள்.
“வீட்டுக்கு போனீங்களா?” சுரேஷ் கேட்டான்.
“இரவு அங்கேதான் தங்கினேன்” என்றாள் ரோகிணி.
“நேற்றிரவு சுரேஷ் என்னிடம் தங்கிவிட்டான்” என்றாள் நீலிமா இடையில் புகுந்து.
ரோகிணிக்கு சங்கடமாக இருந்தது. முவரும் உட்கார்ந்து கொண்டார்கள். காபி வந்ததும் குடிக்கத் தொடங்கினார்கள்.
நீலிமா ரோகிணியின் ஆஸ்பத்திரியைப் பற்றியும், பிராக்டீஸ் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தாள். ரோகிணி ஏதோ பேசியாக வேண்டும் என்பது போல் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ரோகிணி சொன்னாள். “வசந்தியும், நானும் நெருங்கிய சிநேகிதிகள். கல்யாணம் முடிந்து வசந்தி வெளியூருக்குப் போகும் வரையில் தினமும் ஒரு தடவையாவது சந்தித்துக் கொள்ளவில்லை என்றால் எங்களுக்கு என்னவோ போல் இருக்கும். திருமணமானதும் வசந்தி எங்கள் எல்லோரையும் மறந்துவிட்டு குடும்பத்தில் மூழ்கிவிட்டாள்.” தான் ஏன் இப்படி பேசுகிறோம் என்ற சந்தேகம் வந்ததும் திடீரென்று நிறுத்திவிட்டாள் ரோகிணி.
“என்னுடன் பேச வேண்டும் என்று நினைக்கிறீங்களா? எங்க வீட்டுக்குப் போகலாமா?” முறுவல் மாறாமலேயே கேட்டாள் நீலிமா.
“வேண்டாம். உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டியது எதுவும் இல்லை. பேசி ஏதாவது தீர்வு காண்பதாக இருந்தால், பேசாமலேயே நீங்கள் இருவரும் அந்தக் காரியத்தை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வசந்திக்கு அதிகம் துன்பம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதைவிட என்னால் வேறு என்ன சொல்ல முடியும்?” என்றாள் ரோகிணி.
மூவரும் அவரவர்களின் யோசனையில் மூழ்கியபடி ரொம்ப நேரம் மௌனமாக இருந்தார்கள்.
ரோகிணி முன்னால் எழுந்துக் கொண்டாள். “நான் கிளம்புகிறேன்” என்றாள். அவள் பின்னாலேயே சுரேஷ¤ம், நீலிமாவும் நடந்தார்கள்.
“வசந்தீ! நி கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் திருச்சிக்கு வாயேன்” சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள் ரோகிணி.
“இப்பொழுதா? இந்த சூழ்நிலையில் சுரேஷை விட்டுவிட்டா?”
“வசந்தீ! சுரேஷ் நீலிமாவுடன் இருந்தால் உன்னால் வேதனைப் படாமல் இருக்க முடியுமா?”
வசந்தி பதில் சொல்லவில்லை.
“சுரேஷ் நீலிமாவுடன் இருந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று நீ பலமாக நினைத்தால் அதற்கு தயாராக இருக்கணும். அப்படி இல்லாமல் சுரேஷ் நீலிமாவுடன் உறவு வைத்திருப்பதில் உனக்கு ஆட்சேபணை இருந்தால் அந்த விஷயத்தை சுரேஷிடம் பேசி ஏதோ ஒரு முடிவை எடுத்துக் கொள்ளணும். இப்படி அழுது ஆர்பாட்டம் செய்து, சாப்பாட்டையும் தூக்கத்தையும் விட்டு விட்டு உன்னை நீயே துன்புறுத்திக் கொள்வது நல்லது இல்லை. நீ இப்படி இளைத்து துரும்பாவதை என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எந்த முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் மனம் அமைதியாக இருப்பது முக்கியம். இப்படி தினமும் சுரேஷ¤க்காக எதிர்பார்த்துக் கொண்டு, அவன் வந்ததும் சண்டை போட்டுக் கொண்டு ..இது உன் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது இல்லை. கொஞ்ச நாட்கள் என்னுடன் வந்து இரு. கொஞ்சம் தைரியம் வரும். ஏதோ ஒரு முடிவை எடுத்துக் கொள்.”
ரோகிணி நயமான குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போது வசந்தி பற்றற்ற மனதுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். “ஏதோ ஒரு முடிவை நான் எடுக்கணுமா? நீலிமாவுடன் சேர்ந்து இருப்பதோ இல்லை சுரேஷை விட்டுப் பிரிவதோ ஏதோ ஒன்றை நான் முடிவு செய்யணுமா? எதற்காக? இந்த நீலிமா யாரு? தனக்கு இந்த நிலைமை வருவானேன்? இவர்கள் எல்லோரும் ஏன் இப்படி பேசுகிறார்கள்?
“நீலிமா யாரு என்பதை இப்போதைக்கு விட்டு விடு. ஒரு மனிதனுக்கு மற்றொரு நபருடன் இருக்கும் உறவு அவனுடைய விருப்பத்திற்கு உட்பட்ட விஷயம். அந்த உறவை எப்படி வேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்குத்தானே இருக்கும்? நீ என்னுடன் இருக்கும் நட்பை துண்டித்து விட வேண்டும் என்று முடிவு செய்தால் அது உன் விருப்பம். நான் எவ்வளவு வேண்டிக் கொண்டாலும் உன் மனதை மாற்ற முடியாது. உன்னுடைய நட்பு இல்லாமல் வாழ கற்றுக் கொள்வேன். என் சுயகௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வேன். உன்னுடைய நட்பு இல்லாவிட்டால் செத்துப் போய் விட மாட்டேன் இல்லையா?”
“ரோகிணி! நீ சொல்வதற்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? நட்பும் கணவன் மனைவி உறவும் ஒன்றுதானா? நட்பை இழப்பதும், திருமண பந்தத்தை இழப்பதும் ஒன்றுதானா?”
“அது நீ கொடுக்கும் மதிப்பீடுகளை பொறுத்து இருக்கும் வசந்தீ! நானாக இருந்தால் இரண்டையும் ஒன்றாக எடைபோடுவேன். பெரியவர்களின் விருப்பங்களுடன், லௌகீகத்துடன் முடிச்சு போடப்பட்ட திருமணங்களை விட ரசனைகள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் தெரிந்த பிறகு நாளாக நாளாக வளரும் நட்புதான் மதிப்பு வாய்ந்தது என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட நட்பை இழக்கும் போதுதான் வேதனை அதிகமாக இருக்குமோ என்னவோ. ஆரம்பத்திலிருந்தே நீ திருமண பந்தத்திற்கு அதிக மதிப்பு தந்தாய். அது மட்டும் இருந்தால் போதும். மற்ற எதுவும் தேவையில்லை என்று நினைத்தாய். இப்போ அந்த பந்தம் நிலைக்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகு துடிதுடிக்கிறாய்.” வெளிறிப் போய்விட்ட வசந்தியின் முகத்தைப் பார்த்து ரோகிணி நிறுத்தினாள்.
“எனக்கு சுரேஷ் மீது எந்த உரிமையும் இல்லையா?” தன்னை தானே நம்ப முடியாதவள் போல் வசந்தியின் குரல் ஒலித்தது.
“இல்லாமல் என்ன? தாராளமாய் இருக்கு. அவன் மீது கேஸ் போட்டு அவனை உன்னுடன் குடித்தனம் செய்யச் சொல்லி கோர்டாருக்கு வேண்டுகோள் விடுத்து அவர்கள் ஆணையிட்டால் வேறு வழியில்லாமல் திரும்பி வந்த சுரேஷை என் கணவன் என்று கொண்டாடும் உரிமை இருக்கு. அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை இருக்கு. ஆனால் இவை எதுவும் என் கண்ணோட்டத்தில் நீ செய்யக் கூடிய காரியங்கள் இல்லை. அவன் மனதில் உன் பால் பிரியம் இல்லாத போது அவன் மீது உரிமை கொண்டாடி நீ எதை சாதிக்கப் போகிறாய்? அசலானதை உன்னால் பெற முடியாது இல்லையா?”
வசந்தி பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். மனம் முழுவதும் மரத்துப் போனாற்போல் இருந்தது. காதல்! காதல்! காதல்!
காதல் என்ற வார்த்தையையே அழித்து விட வேண்டும் என்ற அளவுக்கு ஆவேசம் வந்தது.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
தொடுவானம் தொட்டுவிடும் தூரம்
அத்தியாயம் 6
எப்படியோ வசந்தி எதிர்பார்த்த அந்த நாள் வந்து விட்டது. லாவண்யாவும் மனோகரும் வந்தார்கள். அன்று இரவு சுரேஷ் வீட்டிலேயே இருந்தான். காலையிலேயே வந்து விட்ட மகளையும், மாப்பிள்ளையையும் பார்த்து சந்தோஷப்பட்டான். வசந்தியைப் பற்றி கேட்க வேண்டியதில்லை. கடந்த இருபது நாட்களில் அவள் முகம் கொஞ்சம் தெளிவாய், சந்தோஷமாய் இருந்தது அன்றுதான். காலை எட்டரை மணிக்கு நான்கு பேரும் உணவு மேஜையின் முன்னால் அமர்ந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அசல் ஒன்றுமே நடக்காது போலவும், எல்லாம் சாதாரணமாகவே இருப்பது போலவும், அதெல்லாம் கனவு போலவும் வசந்திக்குத் தோன்றியது.
மலர்ந்த முகத்துடன் பரிமாறிக் கொண்டிருந்த தாயைப் பார்த்த போது லாவண்யாவுக்கும் பிரச்னை தீர்ந்துவிட்டிருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. காபியைக் குடித்த பிறகு மனோகரும் சுரேஷ¤ம் வெளியே சென்றார்கள்.
லாவண்யா சமையலறையில் அம்மாவிடம் வந்தாள். பிரச்னை தீரவில்லை என்றும், அப்படியே இருக்கிறது என்றும் அம்மாவிடம் பேசிய இரண்டு வார்த்தைகளிலேயே புரிந்துவிட்டது அவளுக்கு.
“அப்பாவிடம் அவர் பேசுவதாக சொல்லியிருக்கிறார் அம்மா. இரவில் நான் பேசுகிறேன்” என்றாள்.
“பாரத்தை முழுவதும் உங்க கையில் வைத்திருக்கிறேன். எப்படியோ இந்த வீட்டை சரிப்படுத்த வேண்டியது நீதான்” என்றாள் வசந்தி மகளின் கைகளைப் பற்றிக் கொண்டு.
“என்னால் என்ன செய்ய முடியும் அம்மா? அவர் எப்படிச் சொன்னால் அப்படி கேட்டுக் கொள்ள வேண்டியவள்தானே. அவர்தான் பேசப் போகிறாரே” என்றாள் லாவண்யா பாரமாக மூச்சை விட்டுக் கொண்டே.
மதியத்திற்கு மனோகர் ஒருத்தன்தான் வந்தான். சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்வதற்காக அறைக்குள் போனான். லாவண்யா அவன் பின்னாலேயே போனாள். இதயம் படபடக்க அந்த அறையின் கதவுகள் எப்போடாப்பா திறந்துகொள்ளும் என்று அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் வசந்தி.
மனோகரின் பேச்சுக்கு அவர் ஒப்புக் கொண்டிருந்தால் லாவண்யா உடனே வந்து சொல்லியிருப்பாள். என்னதான் நடந்தது? இத்தனை நேரமாய் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? லாவண்யா எப்போ வெளியில் வருவாள்? கட்வுளே! இந்தக் கஷ்டம் எனக்குத்தான் வர வேண்டுமா?
மாலையில் ஐந்து மணிக்கு லாவண்யா அறையை விட்டு வெளியே வந்தாள்.
“என்னம்மா? மனோகர் என்ன சொல்கிறான்?” பதற்றத்துடன் கேட்டாள் வசந்தி.
“அப்பா நல்லவர்தான் அம்மா”
லாவண்யா சொன்னதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது வசந்திக்கு. “அப்படி என்றால்… என்ன நடந்தது? மனோகர் சொன்னதற்கு அப்பா ஒப்புக்கொண்டாரா?”
“ஒப்புக் கொண்டார் அம்மா! எனக்கும், சவிதாவுக்கும் சரி சமமாய் சொத்தைப் பிரித்துக் கொண்டுப்பதாக. எங்களுடைய பங்குக்கு இரண்டு ஏக்கர் நிலமும், ஐம்பதாயிரம் ரொக்கமும் வரும். தங்கைக்கும் அதேதான். இந்த வீட்டை உனக்குக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். வீட்டை உன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டுவிட்டால்..”
பைத்தியம் போல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்து பேச்சை நிறுத்தினாள் லாவண்யா. “அம்மா! அம்மா!” என்று உலுக்கினாள்.
“நீ என்ன சொல்கிறாய்? மனோகர் உங்க அப்பாவிடம் என்ன பேசினான்? உண்மையில் மனோகர் என்னதான் சொல்கிறான்?” வசந்தி ஆவேசம் வந்தவள் போல் கேட்டாள்.
“அவரால் என்ன சொல்ல முடியும் அம்மா? அவர் ஏதாவது சொன்னால் அப்பா கேட்டுக் கொள்வாரா என்ன?”
“அப்பாவிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினானா இல்லையா?”
“இந்த விஷயம் என்றால் இந்த விஷயம் என்று இல்லை. ஆனால் இந்த விஷயத்தைப் பற்றித்தான் பேசினார்.” முணுமுணுப்பது போல் சொன்னாள் லாவண்யா.
“சுற்றிவளைத்து பேசுவானேன்? நேராக விஷயத்தைச் சொல்லு. மனோகர் என்னதான் சொல்கிறான்?”
“நான் இந்த விஷயத்தைச் சொன்னதும் மனோகருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. அப்பாவை நன்றாக திட்டினார். ஆனால் அப்பாவிடம் இதைப் பற்றிப் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவருக்கு வெட்கம் இல்லை என்றாலும் எனக்கு இருக்கு. நான் போய் அவரிடம் எப்படிப் பேசுவேன் என்றார்.”
“பின்னே காலையில் உங்க அப்பாவுடன் எதுவும் பேசவில்லையா? சொத்து விஷயம் எதற்கு வந்தது?” சோர்ந்து போன குரலில் கேட்டாள் வசந்தி.
“அப்பா அவள் மீது மோகத்தில் சொத்து முழுவதையும் அழித்துவிட்டால் நம்மால் என்ன செய்ய முடியும்? முன்ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்று மனோகர் நினைக்கிறார். கல்யாணத்தின் போதே வரதட்சிணை எதுவும் தரவில்லை. இப்போ அப்பா இப்படி இருக்கிறார் என்றதும் அவருக்கு அந்த சந்தேகம் வந்தது. அடுத்த வருடம் நாங்களும் அமெரிக்காவுக்கு போவதாக இருக்கிறோம். அப்பா பணம் கொடுக்கவில்லை என்றால் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால் நமக்கு வரவேண்டியதை முன்னாடியே கேட்டு வாங்கிக் கொள்வது நல்லது என்று அவர் சொல்லிவிட்டார். என்னால் என்ன செய்ய முடியும் சொல்லு? அப்பா காலையில் சொத்து விவகாரங்களை எல்லாம் மனோகரிடம் சொல்லியிருக்கிறார். தற்சமயம் எங்களுடைய பங்கை மட்டும் கொடுத்து விட்டார். இன்று இரவு நான் அப்பாவிடம் உன்னைப் பற்றிப் பேசுகிறேன். வீட்டை உன் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டால் உனக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது”
வசந்தி மௌனமாக இருந்தாள்.
“என்னம்மா? பதிலே சொல்ல மாட்டேங்கிறாய்?” லாவண்யா சலித்துக் கொண்டாள்.
“சொத்தை எழுதி வாங்கிக் கொள்ளவா நான் உங்களை வரச் சொன்னேன்?” வசந்தியின் குரல் எங்கேயோ பாதாளத்திலிருந்து ஒலிப்பது போல் க்ஷ£ணமாக கேட்டது.
“பின்னே அப்பா கேட்டுக்கொள்ளாத போது எங்களால் மட்டும் என்ன செய்ய முடியும்?”
“கேட்டுக் கொள்வதற்கு அசல் சொன்னால்தானே?”
“அப்பா என்ன சின்னக் குழந்தையா? என்னவென்று சொல்ல முடியும்? நீதான் நான்கு நாட்கள் பொறுமையாக இருக்கணும். இரவில் நான்தான் பேசுவதாக சொல்லியிருக்கிறேனே?”
“நி ஒன்றும் பேச வேண்டாம்.” வசந்தியின் குரல் திடமாக ஒலித்தது.
“ஏன்? மறுபடியும் என்ன வந்தது?” லாவண்யா நெற்றியைச் சுளித்தாள்.
“சொத்துக்களை பிரித்துக் கொள்வதற்காக நீங்க வந்திருக்கீங்க என்று நான் நினைக்கவில்லை. அம்மா கஷ்டத்தில் இருக்கிறாள். ஆதரவு தருவதற்காக வந்திருக்கீங்க என்று நினைத்தேன். உங்க அப்பா சொத்தை உங்களுக்குக் கொடுக்காமல் வேறு யாருக்கோ கொடுத்து விடுவார் என்ற சந்தேகம் கூட எனக்கு வரவில்லை. இந்த வீட்டிலிருந்து என்னை வெளியேற்றும் தைரியம் உங்க அப்பாவுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவற்றுக்காக இல்லை உங்களை வரச் சொன்னது. அம்மாவுக்கு இப்படி அநியாயம் செய்யலாமா அப்பா என்று நான்கு வார்த்தைகள் என் சார்பில் கேட்டு அப்பாவை சம்மதிக்க வைப்பாய் என்றும், அப்பொழுதும் உங்க அப்பாவுக்கு புத்தி வரவில்லை என்றால் திருந்தும் வரையில் அம்மாவுக்கு உன் நிழலில் அடைக்கலம் கொடுப்பாய் என்றும் உன்னை வரச் சொன்னேன். உங்களுடைய பயம் உங்களுக்கு. உங்களுடைய சொத்துக்களை எடுத்துக் கொண்டு நீங்க போங்கள். கஷ்டமோ நஷ்டமோ நான் பார்த்துக் கொள்கிறேன்.
“உன்னை என்னுடன் அழைத்துப் போக மாட்டேன்னு சொன்னேனா? ராத்திரி அப்பாவிடம் பேசிவிட்டு..”
“என்ன பேசப் போகிறாய்? அம்மாவுக்கு வீட்டைக் கொடுத்து விடுங்கள் அப்பா! அம்மாவை நான் அழைத்துக் கொண்டு போகிறேன் என்று சொல்லுவாய். மகராஜனாக தந்து விடுவார். பீடை ஒழிந்தால் போதும் என்று நினைப்பார். என் பங்கு சொத்தை எடுத்துக் கொண்டு உங்க வீட்டுக்கு வர வேண்டிய தலையெழுத்து எனக்கு என்ன? எனக்கு என் கணவன், என் வீடு வேண்டும். நான் இங்கேயே இருப்பேன். நீ சொன்னது போல் பொறுமையாக இருப்பேன். என்றாவது ஒரு நாள் அவருடைய மனம் மாறுமோ என்னவோ? மாறவில்லை என்றாலும் நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன். நீ என் விஷயமாக அப்பாவிடம் எதுவும் பேச வேண்டாம்.”
வசந்தி அங்கிருந்து போய்விட்டாள்.
“நல்லாத்தான் இருக்கு. உன் கோபத்தை எல்லாம் என் மீது காட்டினால் என்னால் என்ன செய்ய முடியும்?” என்று முணுமுணுத்துக் கொண்டே மனோகரிடம் சென்றாள் லாவண்யா.
அன்று இரவு வசந்தி மௌனமாக எல்லோருக்கும் பரிமாறினாள். சுரேஷ் அன்று மாலை நேரத்தோடு வீட்டுக்கு வந்து விட்டிருந்தான். சாப்பாடு முடிந்ததும் லாவண்யாவும் மனோகரும் தங்கள் அறைக்குள் புகுந்துக் கொண்டார்கள்.
சுரேஷ் சற்று நேரம் வராண்டாவில் நடை பயின்றுவிட்டு படுத்துக் கொள்வதற்காக உள்ளே வந்தான். வசந்தி கோபத்தில் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தாள். “சொத்து முழுவதும் பிரித்துக் கொடுத்துவிட்டீங்களாமே? எல்லாம் துறந்து விட்டு போய்விடப் போறீங்களா?” சுரேஷ் உள்ளே வந்ததும் எரிந்து விழுந்தாள்.
“துறந்து விட்டுப் போவதாவது? மனோகர் கச்சிதமாக கேட்டுவிட்டான். லாவண்யாவும் அதே அபிப்பிராயத்தில் இருப்பதாக சொன்னான். என் குழந்தைகளுக்கே என் மீது நம்பிக்கை இல்லாதபோது அவனுக்கு எப்படி இருக்கும்? குழந்தைகளுக்கு இல்லாமல் சொத்தை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருநாளும் இல்லை. அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்துவிட்டேன்.”
“எனக்குக் கொடுக்க வேண்டியதையும் கொடுத்துவிட்டு அனுப்பிவிடப் போறீங்களா?”
“பைத்தியம் போல் பேசாதே” என்று கத்தினான் சுரேஷ்.
“அப்படி என்றால் அது கூட இல்லாமல் செய்யப் போறீங்களா? உங்களுக்கு என்ன குறை வைத்துவிட்டேன் என்று என்னை இப்படி நாதியற்றவளாய்…”
“வசந்தீ! வேண்டுமென்றால் சொத்து முழுவதையும் உன் பெயருக்கு எழுதி வைத்து விடுகிறேன். எனக்கு எரிச்சல் மூட்டாதே.”
“சொத்தை பார்த்துக் கொண்டு நான் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்தால் நீங்க அவளுடன் குடித்தனம் செய்துக் கொண்டு இருக்கப் போறீங்களா?”
“வசந்தீ!” ஆத்திரத்துடன் கையை ஓங்கினான் சுரேஷ். வசந்தி மிரண்டு போய் அழத் தொடங்கினாள்.
“இப்படியாவது வாழ்வதை விட செத்து ஒழிவது மேல்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான்.
ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆன சத்தம் கேட்டதும் இந்த உலகத்திற்கு வந்தாள். வசந்தி வெளியே வருவதற்குள் சுரேஷ் போய்விட்டிருந்தான். “நீலிமாவிடம்தான் போயிருப்பான். எரிச்சலில் கிளம்பிப் போயிருக்கிறான். அவளிடம் நிம்மதியாக இருப்பானா? அவள் சண்டை போடாமல் சிரித்த முகத்துடன் இருப்பாளா? என்னிடம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுடைய மனநிம்மதிதான் எனக்கு முக்கியம் என்பாளா? உன்னிடம் தான் எனக்கு அமைதி என்று அன்பாக அவளை…”
வசந்தியின் மனம் சோர்ந்துவிட்டது “ஏன் இப்படிச் செய்தேன்? பொறுமையாக இருக்கணும் என்று நினைத்தவள் ஏன் அவனை தூண்டிவிட்டேன்? வீட்டில் இருந்வன் வெளியே போகும்படியாக செய்துவிட்டேன். இப்படியே நடந்தால் இனி அவன் முழுவதுமாக அங்கேயே இருப்பான். வீட்டுக்கு வரவே மாட்டான். தான் நினைத்தது என்ன? செய்தது என்ன? ஏன் இப்படி தவறு செய்கிறாள்? எப்படி நடந்து கொள்ளணுமோ தனக்குத் தெரியவில்லை. எடுத்துச் சொல்பவர்களும் யாரும் இல்லை.
லாவண்யா ஏன் இப்படிச் செய்தாள்? தந்தைக்கும் மகளுக்கும் இடையே, தாய்க்கும் மகளுக்கும் இடையே இருப்பது பணம் மட்டும்தானா? வேறு எதுவும் இல்லையா? பணத்தை வாங்கிக் கொண்டு அவள் பாட்டுக்கு போய்விடுவாள். தாய்க்கு என்ன நேர்ந்தாலும் அவளுக்கு கவலையில்லை. லாவண்யாவுக்காக தான் எவ்வளவு கஷ்டப்பட்டாள்? அவளை பெற்றெடுத்து பாலூட்டி வளர்த்தாள். பாலூட்டி வளர்ப்பது என்றால் என்னவென்று அவளுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படிப் பேச மாட்டாள். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அளவு கடந்த தாகமும், பசியும் அவளை வாட்டி எடுக்கும். அடிக்கடி சாப்பிடணும் போல் இருக்கும். தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் தாகம் தீராது. நாக்கு வரண்டு போய்விடும். இருந்தாலும் சரி, குழந்தை ஒரு வேளை சரியாக பால் குடிக்கவில்லை என்றால் உயிரே போவது போல் இருக்கும் தனக்கு. அன்றைக்கும் இன்றைக்கும் தாயின் அன்புக்கு எஞ்சியிருப்பது தாகம் ஒன்றுதானா? அப்போ தண்ணீர் இப்போ கண்ணீர் குடித்து வாழவேண்டுமா? அப்படி செய்தாலும் இந்த பாசம் விட்டுப் போய் விடுமா? இந்த தாகம் தீருமா?
வசந்திக்கு சுரேஷ் செய்த துரோகத்தை விட லாவண்யா செய்த துரோகம்தான் பெரியதாக தோன்றியது. இருபது வருடங்களாக தன் உடலில் இரத்தத்தோடு கலந்து விட்ட நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது வசந்தியால் நம்ப முடியவில்லை.
“இந்த உறவுகள் இவ்வளவு பலவீனமானவையா? இவற்றை ஆதாரமாக பற்றிக் கொள்ள நினைத்தால் காலுக்கடியில் நிலம் நழுவிப் போய் விடுமா? சூனியத்தில் நிற்க வேண்டி வருமா? தன்னுடைய திருப்தி, சந்தோஷம் நிம்மதி எல்லாமே அர்த்தமில்லாதவையா?” யோசிக்க யோசிக்க வசந்திக்குப் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது.
மறுநாள் காலையில் “நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய் எத்தனை நாள் ஆகிறது?” சுரேஷிடம் கேட்டாள்.
“பத்து நாட்கள்.” வசந்தி கேட்ட தோரணையிலிருந்து அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று சுரேஷ¤க்குப் புரிந்துவிட்டது.
“ஏன் இப்படி செய்யறீங்க?
“நீலிமா மூன்று வருடங்களாக லீவ் எடுத்துக் கொண்டதில்லையாம். பத்து நாட்கள் லீவ் போட்டு ஜாலியாக இருப்போம் என்று சொன்னாள்.”
“என்னுடன் ஜாலியாக பத்துநாட்கள் லீவ் போட்டு என்றாவது இருந்தீங்களா?”
“நான் உன்னுடன்தானே இருக்கிறேன். நாளையிலிருந்து நீலிமாவுக்கு ஆஸ்பத்திரியுடன் சரியாக இருக்கும். ஓய்வு எங்கே?”
‘இந்த மனுஷனுக்குக் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் போய்விட்டது. நானும் அவளும் ஒன்று என்பது போல் பேசுகிறானே?’ வசந்திக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது.
“அவரவர்கள் வழியில் குழந்தைகள் போன பிறகு நானும் தனியாகத்தான் இருக்கிறேன், பத்துநாடகள் லீவ் போட்டு என்னுடன் இருப்போம் என்று நினைக்க வில்லையே?”
“உன்னிடம் என்ன பேசுவது? வீட்டு விஷயங்களைத் தவிர உன்னிடம் பேசுவதற்கு எந்த விஷயமும் இருக்காது.”
“நீலிமாவுடன் பேசுவதற்கு மட்டும் என்ன இருக்கும்?”
“ஏதோ ஒன்று. ஆஸ்பத்திரி விஷயங்கள், இலக்கியம், இசை இப்படி ஏதேதோ. உலகத்தைப் பற்றி அவளுக்கு நிறையவே தெரியும்.”
“எனக்கும் தெரியும். உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நானும் அந்த இலக்கியத்தை எல்லாம் படித்திருக்கிறேன். இப்பொழுது என் உலகமே நீங்களும் குழந்தைகளும்தான். உங்க மூவரையும் பற்றி எனக்குத் தெரிந்தாற்போல் வேறு யாருக்காவது தெரியுமா? இருபது வருடங்களாக உங்களுக்கு வேண்டியது என்னவென்று தெரிந்துகொள்வதுதான் என்னுடைய வாழ்க்கை என்று நினைத்தேன்.”
“உனக்கு எதுவும் தெரியாது வசந்தி. எனக்கு நீலிமா வேண்டும் என்று உனக்குத் தெரியுமா? உனக்கு அந்த விஷயம் கொஞ்சமாவது புரிகிறதா? இந்த சூழ்நிலையில் லாவண்யா சொத்தைப் பற்றிக் கேட்பாள் என்று நீ நினைத்தாயா? சவிதாவை உன்னால் ஒரு நாளும் புரிந்துகொள்ள முடியாது. இத்தனை நாளாக எங்களைப் புரிந்து கொள்வதில் தவறு செய்துவிட்டாய்.”
வசந்தி சோர்ந்து போனவளாய் தரையில் சரிந்துவிட்டாள். “ஆமாம். உங்களைப் புரிந்துகொள்ள எனக்குத் தெரியவில்லை. முடியவில்லை. உங்கள் யாரையுமே நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை.”
“வசந்தீ! அழாதே ப்ளீஸ்! எங்கள் எல்லோருடைய சுகத்திற்காக நீ பாடுப்பட்டாய். ஆனால் எங்களுக்கு அந்த சுகம் போறவில்லை. இல்லையா அந்த சுகத்தின் அருமை தெரியவில்லை.”
அவர்களை சந்தோஷமாக வைப்பதற்கு பாடுப்பட்ட ஒரு வேலைக்காரி. அதைவிட தனக்கு மதிப்பு இல்லையா? அவர்கள் வேறு தான் வேறா? குடும்பத்திற்காக சுரேஷ் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிக்கிறான். தான் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து வீட்டு நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டாள். இது ஒரு குடும்பம். இந்த குடும்பத்தில் ஒவ்வொரின் நலத்திற்காக எல்லோரும் உழைக்க வேண்டாமா? அப்படி இல்லை என்றால் குடும்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன இருக்கு? “நீ எங்களுக்காக கஷ்டப்பட்டாய்” என்று தனிமைப்படுத்திப் பேசுவானேன்? என்னைத் தாழ்த்துவானேன்? பணம் சம்பாதிப்பது என்ற வேலையை குடும்பத்திற்காக செய்ய வில்லையா? ஆண் என்பதால் ஏதோ ஒன்றை செய்து தன் திறமையை நிரூபித்துக் கொள்வதற்காகத்தான் செய்கிறானா? அதனால்தான் உங்களுக்காக கஷ்டப்படுகிறேன் என்று சொல்லவில்லையா?
சவிதா தன்னை வேலை பார்க்கச் சொன்ன போது தனக்கு ஓய்வு நேரம் எங்கே இருக்கு என்று கேட்டதும் என்ன சொன்னாள் அவள்? அவங்கவங்க வேலையை அவரவர்கள் பார்த்துக் கொள்ளும் விதமாக செய்து, வீட்டு வேலைகளை எல்லோரும் சேர்ந்து செய்தால் உனக்கு வேண்டிய அளவுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் என்று சொன்னாள்.
“இனி உங்க அப்பாவைக் கொண்டு சமையல் செய்ய வைக்கச் சொல்கிறாயா? தலையெழுத்துதான் போ!” என்பாள் வசந்தி சிரித்துக் கொண்டே.
“செய்யட்டும். சமைப்பது கௌரவக்குறைவான காரியமா என்ன?” என்பாள் சவிதா.
“இல்லையா பின்னே? போயும் போயும் ஆண்கள் சமைப்பதாவது?” என்று வசந்தி எரிந்து விழுவாள்.
“சமைக்கவில்லை என்றால், சாப்பாட்டை யாரோ ஒருவர் தயாரித்து வைக்கவில்லை என்றால் இந்த உலகத்தில் எந்த வேலையாவது ஒழுங்காக நடக்குமா? மக்கள் உழைப்பதே சாப்பாட்டுக்காகதானே? அந்த உணவை சமைப்பது மட்டும் கௌரவக் குறைவான காரியம் எப்படியாகும்? பெண்கள் சமைப்பதால்தானா?” என்று சண்டைக்கு வருவாள் சவிதா.
உண்மையிலேயே தான் செய்த வேலை பத்து ஆட்கள் செய்யும் வேலைக்கு சமமானது. தான் வேலைக்குப் போய் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் அப்போ என்னவாகியிருக்கும்? வேலைக்குப் போவதற்கும் போகாமல் இருப்பதற்கும் நடுவில் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறதா? இல்லை ….. அது உண்மை இல்லை.
இப்போ வேலைக்குப் போகணும் என்றால் தன்னால் எந்த வேலைக்கு போக முடியும்? தனக்கு என்ன வேலை கிடைக்கும். தனக்கு ஒன்றும் தெரியாது. அசல் வேலைக்கு தான் போக வேண்டிய அவசியம் என்ன? தான் ஒரு இல்லத்தரசி. வீடும், குழந்தைகளும் தான் தன்னுடைய வேலை. இந்த வீட்டை மட்டும் விட்டுட்டுப் போகக் கூடாது.
“இங்கேதான் தன்னுடைய வேலை. வாழ்வும் சாவும் இங்கேதான்.”
திரும்பத் திரும்ப அந்த விஷயத்தை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தாள் வசந்தி.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
சென்னைக்கு வந்த இரண்டாவது நாள் முதல் லாவண்யாவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி. லாவண்யா வந்தால் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வசந்திக்குக் கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியது. சவிதாவிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில் பிரயோஜனம் இல்லை. சவிதாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் “அப்பாவுக்கு டைவோர்ஸ் கொடுத்துவிடு. ஏதாவது வேலையைத் தேடிக் கொண்டு வாழக்கையை நடத்து” என்று சொல்லுவாள் என்று வசந்தி பலமாக நம்பினாள்.
இந்த வீட்டுடன் தனக்கு இருக்கும் பிணைப்பை பற்றி அவளுக்கு என்ன தெரியும்? அவள் வெறும் துடுக்கு. ஒரு நாள் அவளுடைய புத்தகங்களை, துணிமணிகளை எடுத்து வைத்ததற்கு சலித்துக் கொண்டாள். “என் விஷயத்தில் தலையிடுவானேன்? என் பொருட்களை நான் எடுத்து வைத்துக் கொள்ள மாட்டேனா? அக்காவுக்கு ஊட்டிவிட்டு எதற்கும் லாயக்கு இல்லாதவளாக செய்தது போறாதா? வேறு வேலை இல்லை என்றால் எங்கள் உயிரை எடுப்பானேன்? பி.ஏ. வரையில் படித்திருக்கிறாய் இல்லையா. ஏதாவது வேலையைப் பார்க்கக் கூடாதா? உனக்கும் கொஞ்சம் பொழுது போகும். நாங்களும் நிம்மதியாக இருப்போம்” என்று பாய்ந்தாள்.
“உங்கள் எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து செய்வதுதான் என்னுடைய வேலை” என்றாள் வசந்தி.
“இது போன்ற பழங்கதைகளை சொல்லாதே. எனக்கு எரிச்சல்தான் வருகிறது. உன்னுடையது வெறும் சுயநலம்” என்றாள் சவிதா.
“சுயநலமா? உங்களுக்கும், அப்பாவுக்கும் எல்லாம் எடுத்து வைப்பது, பார்த்துப் பார்த்து செய்வது என்னுடைய சுயநலமா?” என்று வசந்தி கோபத்தில் வாதம் புரிந்தாள்.
“ஆமாம். வடிகட்டின சுயநலம்! நாங்கள் எல்லோரும் உன்னைச் சார்ந்து இருப்பது உனக்கு சந்தோஷம். ஒவ்வொரு விஷயத்திற்கும் அம்மா! அம்மா! என்று உன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கணும் என்பது உன்னுடைய எண்ணம். அப்பாவையும் அப்படித்தான் உருவாக்கியிருக்கிறாய். அப்பாவுக்கு சட்டைக்கு பொத்தான் தைத்துக் கொள்ள தெரியாது. பேனாவையும், மூக்குக்கண்ணாடியையும் தினமும் யாராவது தேடி தரணும். அப்பாவை கையாலாகாதவனாக ஆக்கிவிட்டாய். நான் மட்டும் அப்படி இருக்க மாட்டேன்” என்று சண்டை போட்டாள்.
இதையெல்லாம் சுரேஷிடம் சொல்லி சிரித்துக் கொண்டாள் அன்று. உண்மையிலேயே அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று உறவினர்கள், சிநேகிதிகள் யாருடைய வீட்டுக்கும் போக மாட்டாள். கல்யாணம் போன்ற முக்கியமான விழாக்களுக்கு முகூர்த்த நேரத்திற்கு மட்டும் போய் வருவாள். ரோகிணியின் கல்யாணத்தின் போது சவிதா பிறந்து மூன்று வருடங்களாகியிருந்தன. சவிதாவை அழைத்துக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் சுரேஷ¤க்கு ஜலதோஷம் என்றும், லாவண்யாவுக்கு பரீட்சைகள் நடக்கிறது என்றும் போகவில்லை. கல்யாணம் முடிந்த பிறகு ரோகிணி கணவனுடன் வந்து விட்டுப் போனாள். அதையெல்லாம் அவர்களுக்காக தான் சந்தோஷமாக விட்டுக் கொடுத்தாள். ஆனால் அது தியாகம் இல்லை சுயநலம் என்று பழிக்கிறாள் சவிதா.
அவளிடம் போனால் இந்த பிரச்னை மேலும் சிக்கலாகிவிடுமே தவிர சுரேஷ் தனக்குக் கிடைக்கமாட்டான். தான் இந்த வீட்டில் சுரேஷ¤டன் பழையபடி வாழவேண்டும். அதற்காக ஏதாவது செய்யணும் என்றால் லாவண்யா ஒருத்தியால்தான் முடியும். வசந்தி லாவண்யாவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். சுரேஷ் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தான். எதுவும் நடக்காதது போலவே நடந்துகொள்கிறான். இரவு நேரங்களில் மட்டும் ரொம்ப தாமதமாக வீடு திரும்புகிறான். ஒரு நாள் அசல் வரவே இல்லை.
தன்னிடம் சொல்லிவிட்ட பிறகு அவனுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய பிடுங்கல் இல்லாமல் ரொம்ப நிம்மதியாகிவிட்டது போலும். தன்னை ஏமாற்றுவது பிடிக்காமல் அந்த உண்மையைத் தெரிவித்துவிட்டதாக சொன்னானே தவிர, தன்னுடைய சுகத்திற்காகத்தான் சொல்லியிருப்பான் என்று தோன்றியது. இப்பொழுது எவ்வளவு தாமதமாக வந்தாலும், வராமலே இருந்துவிட்டாலும் தான் புரிந்துகொள்ள வேண்டும். தப்பித்தவறி கேட்டு விட்டாலோ உடனே சொல்லிவிடுவான் நீலிமாவிடம் போயிருந்ததாக. தன்னால் என்ன செய்ய முடியும்?
அன்று இரவு இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்த சுரேஷைப் பார்த்து வசந்திக்கு பொறுமை நசிந்து போய்விட்டது.
“அந்த நீலிமாவின் வீடு எங்கே இருக்கு?”
“ஆஸ்பத்திரி குவார்ட்டர்ஸில்”
“இத்தனை நேரம் நீங்க அங்கே தங்கி விட்டால் நான் மட்டும் தனியாக எப்படி இருப்பேன்னு நினைத்தீங்க?”
“உனக்கு பழக்கம்தானே. நைட் ட்யூடி இருக்கும் போது தனியாகத்தானே இருப்பது வழக்கம்.”
“எப்பொழுதாவது இருப்பது வேறு. தினமும் தனியாக இருக்கணும் என்றால்?”
“நான் வந்து விட்டால் அங்கே நீலிமா தனியாகி விடுவாள். இருந்தாலும் உனக்காகத்தான் நான் இங்கே வருகிறேன்.”
சுரேஷின் பேச்சைக் கேட்ட போது வசந்திக்கு கண்மண் தெரியாத அளவுக்கு கோபம் வந்துவிட்டது.
“எனக்காக நீங்க இங்கே வந்துதான் ஆகவேண்டும். நான் உங்கள் மனைவி என்றும், நீலிமா என்ற நபர் இருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, இருபது வருடங்களுக்கு முன்பே நான் உங்களுடைய மனைவியாகிவிட்டேன் என்றும் அவளுக்குத் தெரியாதா? அவள் தனியாக இருக்க முடியாமல் போவதற்கும் எனக்கும் சம்பந்தம் என்ன? என் கணவன் என் வீட்டுக்கு தாமதமாக வந்தால் கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லையா? நீலிமா தனியாக இருப்பாளே என்று நான் எதற்காக யோசிக்கணும்? உங்களுக்காக நான் வீட்டில் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பேன் என்று அவள் ஏன் யோசிக்கக் கூடாது?”
“நீலிமா யோசிக்காமல் என்ன? அவள் உனக்காக ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாள்.”
“நீலிமா எனக்காக வருத்தப்படுகிறாளாமா? ஏன் வருத்தப்படணும்? எனக்கும், தனக்கும் கூட வருத்தம் இல்லாதவிதமாக செய்வது அவளுக்கு கஷ்டம் ஒன்றும் இல்லையே?”
“அது கஷ்டமாக இல்லாமல் இருந்தால் எப்பொழுதோ செய்திருப்பாள். நீலிமா என்னிடம் உயிரையே வைத்திருக்கிறாள். நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொள்கிறோம்.”
“தாராளமாக காதலித்துக் கொள்ளுங்கள். நான் செத்துப் போகிறேன். கல்யாணமும் செய்து கொண்டு சந்தோஷமாக இருங்கள்.”
ஹிஸ்டீரிக்காக அழுது கொண்டிருந்த மனைவியைப் பிடித்துக் கொண்டு “வசந்தீ! அழாதே ப்ளீஸ். சும்மாயிரு” என்று சொல்லிக் கொண்டிருந்த சுரேஷை கோபமாக பார்த்தாள்.
கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் தீனமாக பார்த்துக் கொண்டிருந்த சுரேஷைப் பார்த்ததும் வசந்தியின் கோபம் தணிந்துவிட்டது. “நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள்? சாகக் கூடாது. அழவும் கூடாது. வருத்தப்படக் கூடாது. இதென்ன காரியம் என்று உங்களைக் கேட்கவும் கூடாது. என்னை என்ன செய்யச் சொல்றீங்க?”
“நான் செய்தது தவறுதான் வசந்தீ! நீலிமாவை விட்டு விலகியிருந்திருக்கணும். ஆனால் முடியவில்லை. உன்னிடம் எனக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் நீலிமாவிடம் அன்பு. என்ன செய்வதென்று தெரியவில்லை. உங்க இருவருக்கும் நியாயம் நடப்பது போல் ஏதாவது வழி இருந்தால் தேவலை. உன்னை வருத்தம் ஏற்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை.”
“உங்களுடைய இரக்கம் எனக்குத் தேவையில்லை.”
“இரக்கம் இல்லை துக்கம்! நீ வேதனைப் படுவதைப் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கோ உனக்குத் தெரியாது. ஆனால் நீலிமா விஷயம் கூட நான்தான் பார்க்கணும். உன் மீது இருப்பது பொறுப்பு என்றால் அவள் மீது இருப்பது அன்பு. என்ன செய்வது என்றுதான் புரியவில்லை.” தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டான் சுரேஷ்.
இந்த வருத்தமெல்லாம் உண்மைதானா? இல்லை வெறும் நடிப்பா? நீலிமாவிடமும் இப்படித்தான் பேசியிருக்கக் கூடும். நீலிமாவிடமிருந்து எப்படி மீட்பது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது என்னிடமிருந்து எப்படி மீட்பது நீலிமா யோசித்துக் கொண்டிருப்பாளாய் இருக்கும். கடைசியில் எந்த விதத்தில் போய் முடியப் போகிறது? நான் என்ன செய்ய வேண்டும்? நான் வேண்டுமோ அவள் வேண்டுமோ முடிவு சேய்யுங்கள் என்று சுரேஷிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தன்னால் கேட்டுவிட முடியுமா? இத்தனை வருடங்களாக சுரேஷின் விருப்பம்தான் தன்னுடைய விருப்பம். அவனுடைய முன்னேற்றம்தான் தன்னுயை முன்னேற்றம். அவன் சந்தோஷம்தான் தன்னுடைய சந்தோஷம். எப்போதும் அவனுக்கு உறுதுணையாக இருப்பதைத் தவிர எதிர்த்து நின்று போராட தனக்குத் தெரியாது. அதற்கான தெம்பு தன்னிடம் இல்லை. அப்படிப் போராடுவது நல்லதா கெட்டதா என்றுகூடத் தெரியாது. யாராவது தனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் தேவலை, எதை செய்யலாமோ எதை செய்யக் கூடாதோ?
லாவண்யா! சீக்கிரம் வாயேன். வசந்தியின் நினைப்பு முழுவதும் லாவண்¨யா மீதுதான்.
மறுநாள் ஆஸ்பத்திரியின் குவார்ட்டர்ஸ¤க்குப் போகாமல் அவளால் இருக்க முடியவில்லை. நீலிமாவைப் பார்த்தாக வேண்டும் என்ற தவிப்பு அவளை ஒரு இடத்தில் நிற்க விடவில்லை. சுரேஷை ஈர்க்கும் அளவுக்கு அவளிடம் என்ன இருக்கிறது? அதன் சிறப்பு என்ன? அந்த குவார்ட்டர்ஸில் வசந்திக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குப் போய் நீலிமாவின் குடியிருப்பை கண்டுபிடித்து விடலாம் என்றுதான் கிளம்பினாள். ஆனால் அந்த காலனி கேட் அருகிலேயே சுரேஷின் ஸ்கூட்டரில், பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்த நீலிமா கண்ணில் பட்டுவிட்டாள். ஒரு நிமிடம் நீலிமாவை தலை முதல் கால் வரையில் எடை போடுவது போல் பார்த்தாள். “என்னை விட சின்னவள். என்னைவிட நிறம் மட்டுதான். ஆனால் அழகாக இருக்கிறாள்.” சோர்வாக இருந்தது வசந்திக்கு.
தன்னையும் அறியாமல் காலனிக்குள் நடந்தாள். காலையிலேயே இங்கு வந்து அவளுடன் ஆஸ்பத்திரிக்குப் போகிறான் போலும். திடீரென்று அவள் கால்கள் நின்றுவிட்டன. எதிரே தென்பட்ட வீட்டின் முன்னால் டாக்டர் நீலிமா என்ற பெயர்பலகையைப் பார்த்ததும் சுயநினைவு திரும்பியது போல் இருந்தது. வீடு பூட்டியிருக்கவில்லை. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் யாரும் இருக்கவில்லை. விசாலமாக இருந்த ஹாலுக்குள் திவானைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. வராணடாவில் நாற்காலிகள். உள் அறையில் சின்ன உணவுமேஜை ஒன்று இருந்தது. அதற்குப் பக்கத்து அறையில் கட்டிலும், ஆடைகள் மாட்டும் மரத்தினால் ஆன ஸ்டாண்டும் இருந்தன. சமையலறை மிகவும் சின்னது. பாத்திர பண்டங்கள் கூட அதிகமாக இல்லை. வீடு முழுவதும் விசாலமாக, தூய்மையாக காட்சியளித்தது.
“இதென்ன வீடு, சாமான் எதுவுமே இல்லாமல் மொட்டையாக இருக்கு?” என்று நினைத்துக் கொண்டே மறுபடியும் வராண்டாவுக்கு வந்தாள் வசந்தி.
அதற்குள் கேட்டைத் திறந்து கொண்டு “யாரு வேணும் அம்மா?” என்று கேட்டுக் கொண்டே வேலைக்காரச் சிறுமி போலும், உள்ளே வந்தாள். “டாக்டரம்மா இல்லை. ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க. குடிக்க தண்ணீர் வேண்டுமா?” என்று பணிவுடன் கேட்டாள்.
“வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வசந்தி அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
மறுபடியும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் அவளுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
“என்ன வீடு அது? என்ன மனுஷி அவள்? அந்த வீட்டில் சுரேஷால் எப்படி இருக்க முடிகிறது?”
வசந்தி வீட்டை முழுவதுமாக கண்ணாலேயே பார்வையிட்டாள். வீடு முழுவதும் சாமான்கள் நிரம்பியிருந்தன. டிராயிங் ரூம் முழுவதும் ·பர்னிச்சர், டைனிங் ரூமுக்குத் தேவையான பெரிய உணவுமேஜை, ·பிரிஜ். சமையலறையில் பளபளவென்று மின்னும் பாத்திரங்கள், பீங்கான் கப்புகள், கண்ணாடி டம்ளர்கள், தட்டுக்கள் … எல்லாம் அந்தந்த இடத்தில் பாந்தமாக நேர்த்தியாக அடுக்கி வைக்கபட்டிருந்தன.
அவற்றுக்கு நடுவில் நின்று கொண்டிருந்த வசந்திக்கு தான் பாதுக்காப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் பலமாக தோன்றியது. அந்த ·பர்னிச்சர், சாமான்கள் தன்னைக் காப்பாற்றும் கேடயங்கள் போல் தோன்றின. ரொம்ப பாதுகாப்பான இடத்தில் நிம்மதியாக இருப்பது போல் உணர்ந்தாள். இந்த வீட்டுக்குப் பழக்கப் பட்ட சுரேஷ் எதுவுமே இல்லாத அந்த வீட்டில் எப்படி இருக்கிறானோ அவளுக்குப் புரியவில்லை. அந்த வீட்டில் சுவற்றில் ஒரு படம் கூட இல்லை. ஹால் முழுவதும் வெறிச்சோடிக் கொண்டு, உள்ளே எங்கேயோ கட்டில் மெத்தை. அதை நினைக்கும் போதே வசந்திக்கு பயமாக இருந்தது.
சுரேஷால் அங்கே இருக்க முடியாது. எங்கே திரும்பினாலும் குசலம் விசாரிக்கும் சாமான்களை எல்லாம் விட்டுவிட்டு அவனால் எப்படி இருக்க முடியும்? கட்டாயம் தன்னிடமே திரும்பி வருவான். இதெல்லாம் நான்கு நாள் கூத்துதான்.
வசந்திக்கு உள்ளிருந்து தைரியமும், தெம்பும் ஏற்பட்டன. வீட்டை ஒழுங்குப் படுத்த ஆரம்பித்தாள். சுரேஷின் உடைகள், புத்தகங்கள் எல்லாவற்றையும் நீட்டாக அடுக்கி வைத்தாள். எல்லாம் நேர்த்தியாக இருந்தால் சுரேஷால் ஒரு நாளும் இந்த வீட்டை விட்டு இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டே திருப்தியுடன் மூச்சை விட்டுக் கொண்டாள்.
சுரேஷ¤க்காக சூடாக வெங்காய பக்கோடா செய்தாள். இன்று சீக்கிரமாக வீட்டுக்கு வரச் சொல்லணும். நீலிமாவிடம் போவதற்கு முன்பே இங்கே வரவழைத்து விடணும். களைத்துப் போய் வரும் அவனுக்கு இங்கேதான் நிம்மதி கிடைக்கும்னு நிரூபித்துக் காட்டணும் என்று நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு ·போன் செய்தாள் வசநதி.
மறுமுனையில் சொல்லப்பட்ட பதிலை கேட்டு சிலையாய் நின்று விட்டாள்.
ஒரு வாரமாக சுரேஷ் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. லீவ் போட்டிருக்கிறான். இன்னும் மூன்று நாட்கள் லீவில்தான் இருக்கிறான்.
வசந்திக்கு திடீரென்று ஏதோ சந்தேகம் வந்து நீலிமா வேண்டும் என்று கேட்டாள். நீலிமாவும் அதே போல் விடுமுறையில் இருக்கிறாள். வசந்திக்கு ஒரேதிரியாய் உடலிலிருந்து சக்தி முழுவதும் வற்றிவிட்டாற் போலிருந்தது.
“இந்த ஒரு வாரமாக அவர்கள் இருவரும் பகல் முழுவதும் சேர்ந்துதான் இருக்கிறார்கள். பகல் மட்டுமென்ன? இரவுகளிலும் கூட. சுரேஷ் நள்ளிரவு தாண்டிய பிறகுதான் வீட்டுக்கு வருகிறான். அங்கே நீலிமா வீட்டில் பகலும் இரவும் சந்தோஷமாக இருக்கிறான்.”
சற்றுமுன் தனக்கு காவலாக இருப்பது போல் தோன்றிய பொருட்கள் எல்லாம் இப்பொழுது தன்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றிது வசந்திக்கு.
சுரேஷ¤க்கு அப்படி இருந்தால்தான் பிடிக்குமா? எதற்காக இத்தனை சாமான்கள் வீணாய் என்பான் வாடகை வீட்டில் இருக்கும் போது. சொந்த வீட்டுக்கு வந்த பிறகு நாளுக்கொரு ஒரு விதமாக வீட்டை எடுத்து வைத்தால் வேலை வெட்டி இல்லையா என்று சலித்துக் கொள்வான். ஆனால் தான் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. இந்த ·பர்னிச்சர், சாமான்கள் இதெல்லாம் சுரேஷ¤க்குப் பிடிக்கவில்லையா?
சவிதாவுக்கு பிடிக்காது. “வீட்டில் சுதந்திரமாக நடமாடக் கூட முடியாதபடிக்கு சாமான்களை நிரப்பிவிட்டாய்” என்று சண்டை போடுவாள்.
வசந்திக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது.
“லாவண்யா! உங்க அம்மாவை இந்த பிர்சனையிலிருந்து எப்போ வந்து மீட்கப் போகிறாய்?”
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
சொல்லாமல் கொள்ளாமல் வந்த தாயைப் பார்த்ததும் லாவண்யா சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள்.
“அம்மா! நெற்று இரவுதான் நினைத்தேன், அம்மா ஒரு தடவை வந்துவிட்டு போனால் நன்றாக இருக்குமே என்று. காலையில் நீயே வந்து விட்டாய்” என்று கட்டிக் கொண்டாள். வாடிப் போன முகத்தையும், சிவந்த கண்களையும் பார்த்தபோது பயணக் களைப்பு என்று நினைத்தாளே தவிர தாய்க்கு ஏதாவது கஷ்டம் வந்திருக்கக் கூடும் என்ற யோசனை கூட வரவில்லை லாவண்யாவுக்கு.
“அம்மா! நீ வந்தால் நன்றாக இருக்கும் என்று ஏன் நினைத்தேன் தெரியுமா?”
“எதுக்காகம்மா?” அன்பு ததும்பும் குரலில் கேட்டாள் வசந்தி.
“இரண்டு நாட்களில் எங்க மாமியார், நாத்தனார், குழந்தைகள் வருகிறார்கள். மாமியார் ஒரு பழைய பஞ்சாங்கம், மடிசஞ்சி. வீடு இப்படி இருந்தால் பிடிக்காது. இங்கே தூசியிருக்கு என்பாள். அங்கே குப்பை இருக்கு என்பாள். இந்த சாமான் இங்கே இருக்கக் கூடாது. அது அங்கே இருக்கக் கூடாது என்று ஒரே சத்தம் போடுவாள். நீ ஒரு தடவை வீட்டை ஓழுங்குப் படுத்தி வைத்தாய் என்றால் எனக்கு நிம்மதியாக இருக்கும். ஏதாவது பட்சணங்கள் நான்கைந்து விதமாக செய்து டப்பாவில் வைத்துவிட்டாயானால் இனி மதியம் டிபன் பிரச்னை கூட இருக்காது.. அவர்கள் இருக்கும் பத்து நாட்களும் நீயும் இருந்துதான் ஆகணும். போகவும் விட மாட்டேன்.” லாவண்யா தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.
“ஆகட்டும்மா!” என்று வசந்தி சொல்லிக்கொண்டிருந்த போதே பொல பொலவென்று அவள் கண்ணகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“என்ன நடந்தது அம்மா?” லாவண்யா கழுத்திலிருந்த கையை எடுத்துவிட்டு முன்னால் வந்து கேட்டாள்.
மகளைக் கட்டிக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள் வசந்தி. லாவண்யா மிரண்டு போய்விட்டாள்.
“அம்மா! என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்?” என்று பதற்றமடைந்தாள்.
மகளிடம் அந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்று வசந்திக்குப் புரியவில்லை.
“உங்க அப்பா வெறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்” என்று எப்படியோ வாயைத் திறந்து சொல்லிவிட்டு ஹோவென்று கதறினாள். லாவண்யா திகைத்தாள். ஓரு நிமிடம் குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் அழுதுக் கொண்டிருந்த தாயைப் பார்த்துக் கொண்டே வெகு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். வசந்தி ஒவ்வொரு விஷயமாக சொல்லச் சொல்ல லாவண்யாவுக்கு தந்தையின் மீது கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
“சீ! இந்த வயதில் அப்பாவுடைய புத்தி இப்படிப் போவானேன்? குழந்தைகள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட வரவில்லையா? பாவம் அம்மா! இதையெல்லாம் எப்படி தாங்கிக் கொள்வாள்? இனி வாழ்நாள் முழுவதும் இப்படி அழுதுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதானா? அம்மாடியோவ்! இன்னும் இரண்டு நாட்களில் மாமியார், நாத்தனார் எல்லோரும் வரும் போது அம்மா இது போல் அழுது கொண்டிருந்தால், அவர்கள் என்னவென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்தால் தன்னுடைய மதிப்பு என்ன ஆவது? மாமியார் இனி தன்னை லட்சியப்படுத்துவாளா? உங்க அப்பா அப்படி, உங்க அம்மா இப்படி என்று சொல்லிக் காட்ட மாட்டாளா?
லாவண்யாவின் இதயம் வேகமாக துடித்தது. தலையைப் பிடித்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்து வசந்தி “லாவண்யா! இந்த ஆபத்திலிருந்து நீ தான் என்னை மீட்கணும். உங்க அப்பாவிடம் நயமாகப் பேசுவாயோ சண்டைபோடுவாயோ, அவரை வழிக்குக் கொண்டுவரணும். இல்லையா நான் என்ன செய்யணுமோ, எப்படி வாழணுமோ வழிகாட்டணும். உங்க அம்மாவை நீதான் காப்பாற்றணும்” என்று அழுதாள் வசந்தி.
வெளியில் இருக்கும் வெயில் கூட உறைக்கவில்லை லாவண்¡வுக்கு. யோசனைகளால் அவள் மூளை சூடாகிவிட்டிருந்தது. இந்த விஷயத்தை மனோகரிடம் சொல்லணுமா வேண்டாமா? அமெரிக்காவுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் அக்காவுக்கு விடைகொடுக்கும் சந்தோஷத்தில் இருக்கிறான் அவன். சொன்னால் எரிச்சலடைவானோ? சொல்லவில்லை என்றால் ஏன் சொல்லவில்லை என்று கோபித்துக் கொள்வானோ? என்ன செய்வது? இந்த பிரச்னை ஏன்தான் வந்ததோ? கல்யாணம் ஆகி ஆறுமாதங்கள் கூட ஆகவில்லை, இவ்வளவு பெரிய பிரச்னை என் தலையில் வந்து விழணுமா?
இந்த அம்மாவும் ரொம்ப முட்டாளாக இருக்கிறாள். அப்பாவிடம் அன்பாக பேசி அவர் மனதை தன் பக்கம் திருப்பிக் கொள்வதை விட்டு விட்டு அவர் அந்த செய்தியைச் சொன்னதும் சண்டை போட்டுக் கொண்டு மகள் வீட்டுக்கு வந்து விடுவதா?
தாயின் மீது எரிச்சல், கோபம் இரண்டும் ஏற்பட்டன லாவண்யாவுக்கு.”இங்கே வந்து அழுதுகொண்டிருந்தால் எனக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருக்குமோ யோசிக்காமல் திடீரென்று கிளம்பி வந்துவிட்டாள். இப்போ என்ன செய்வது?
மனோகரிடம் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள் லாவண்யா. எப்படியோ தாயைச் சமாதானப் படுத்தி நாளை காலையிலேயே சென்னைக்கு அனுப்பிவிட வேண்டும். மாமியாரும், நாத்தானாரும் வந்துவிட்டு போன பிறகு மனோகரிடம் விஷயத்தை சொல்லி தந்தையிடம் பேசச் சொல்லாம். மனோகர் பேசினால் தந்தைக்குக் கொஞ்சமாவது புத்தி வரலாம். அதைவிட வேறு வழியில்லை. கொஞ்சம் தெளிவு பிறந்தாற்போல் இருந்தது லாவண்யாவுக்கு.
மதியம் தாயை வலுக்கட்டாயமாக சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது லாவண்யாவுக்கு. “நல்லாத்தான் இருக்கு கூத்து!” என்று உள்ளூர சலித்துக் கொண்டாள். வசந்தாவின் வேதனை லாவண்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மனோகருக்கு இந்த விஷயம் தெரிந்து விடாமல் மறைத்து வைப்பது முக்கியமாகிவிட்டது அவளுக்கு. தாயின் சோர்ந்துவிட்ட முகம், சிவந்து விட்ட கண்கள் … இவற்றுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டதால் அவற்றுக்குக் காரணமாக இருந்த தாயின் மீது எரிச்சல் ஏற்பட்டது. இரவு மனோகர் தூங்கப் போன பிறகு தாயிடம் வந்தாள் லாவண்யா.
“அம்மா!” என்றபடி பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு தாயின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“படுத்துக்கொள் லாவண்யா! நேரமாகிவிட்டது” என்றாள் வசந்தி மகளின் கையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே.
“அம்மா! எங்க மாமியாரைப் பற்றி உனக்குத் தெரியாதும்மா. ரொம்ப சந்தேகப் பேர்வழி. ஆயிரம் கேள்விகள் கேட்டு பிடுங்கியெடுப்பாள். நாத்தனாரோ அந்தத் தாய்க்கு தப்பாமல் பிறந்தவள்தான்.” தவறு செய்துவிட்டவள் பார்வையைத் தரையில் பதித்தாள்.
“என்ன வேண்டுமாம் அவர்களுக்கு? எந்தக் குறையும் இல்லாமல் அவர்கள் கேட்ட சீர்வரிசைகளை எல்லாம் செய்து கொடுத்தோமே? இன்னும் ஏதாவது வேண்டுமா? எது வேண்டுமானாலும் வாங்கிக் கொடுத்து விடலாம்” என்றாள் வசந்தி.
“அந்த விஷயம் இல்லை அம்மா!”
“பின்னே என்னவாம்? விவரமாக சொல்லு.”
கொஞ்ச நேரம் லாவண்யா எதுவும் பேசவில்லை. மகளுக்கு என்ன பிரச்னை வந்துவிட்டதோ என்று வசந்திக்கு பயமாக இருந்தது.
“அவர்கள் வரும் போது நீ இப்படி இங்கே இருந்தால் நன்றாக இருக்காது இல்லையா.”
வசந்தியின் தலையில் இடி விழுந்தாற்போல் இருந்தது.
மிரள மிரள தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்ததும் லாவண்யாவின் இதயம் இளகிவிட்டது.
“அது இல்லை அம்மா. அவர்கள் சரியாக புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏதோ ஒரு வார்த்தையைச் சொல்லி உன்னை நோகடிப்பார்கள். அவர்கள் வந்து விட்டுப் போன பிறகு நானும் மனோகரும் வந்து அப்பாவுடன் பேசுகிறோம். நீ நாளை காலையில் கிளம்பி சென்னைக்குப் போய்விடு.”
வசந்திக்கு துக்கம் கூட வரவில்லை. செயல் மறந்து போனவளாய் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
“நாளை காலையில் சென்னைக்குக் கிளம்பும்மா” தீனமாய், அபலையாய் லாவண்யாவின் குரல் வசந்தியின் காதுகளில் எதிரொலித்தது.
லாவண்யாவால் தனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. இத்தனை நாட்களும் அவள் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்தாள். இப்பொழுது கணவனின் பாதுகாப்பில் இருக்கிறாள். லாவண்யாவிடம் நான்கைந்து நாட்களுக்கு தங்குவது கூட சாத்தியப்படாது. மறுபடியும் சென்னைக்குத் திரும்பிப் போகணும் என்ற எண்ணமே வசந்தியை குன்றிப் போகும்படியாக செய்தது.
சுரேஷிடம் சொல்லாமல் வந்து விட்டாள். அடுத்த நாளே திரும்பி வந்தால் என்ன நினைத்துக் கொள்வான்? வேறு போக்கிடம் இல்லை என்று நினைக்க மாட்டானா? லாவண்யா தன்னுடைய எதிர்பார்ப்புகளை எப்படி தகர்த்தெறிந்து விட்டாள்?
பெற்ற மகள் இருக்கிறாள். அவளுக்கு தான் கொடுத்த அன்பு இருக்கிறது. அந்த அன்பு தனக்குத் திரும்ப கிடைக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பியிருந்தாள். லாவண்யாவும் தன் மீது அன்பு இல்லையா? எல்லாம் பொய்தானா?
மாமியார், நாத்தானார் என்று யோசிக்கிறாளே ஒழிய, தாய்க்கு எப்படிப்பட்ட கஷ்டம் வந்துவிட்டது என்று யோசிக்கவில்லை. எப்படி யோசிப்பாள்? திருமணம் நிச்சயமானது முதல் “இனி நீ அந்த வீட்டுப் பெண். உன் வீடு, உன் கணவன், உன் மாமியார், உன் நாத்தனார்….. அதுதான் உன் குடும்பம். எங்களுக்கு வேறு என்ன வேண்டும்? நீ அழகாக குடித்தனம் செய்துக் கொண்டிருந்தால், எப்போதாவது வந்து நான்கு நாட்கள் இருந்துவிட்டுப் போகப்போகிறவர்கள் நாங்க” என்று சொல்லி அனுப்பியது தான்தானே. லாவண்யா அவர்களுடைய வீட்டைச் சேர்ந்தவளாக இருப்பதால் இது போன்ற விஷயங்களில் பிறந்த வீட்டையும், பெற்ற தாயை¨யும் விலக்கி வைக்க நினைக்கிறாள். வயதில் சின்னவள்தானே. அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. புகுந்தவீட்டாருக்குத் தெரிந்து விட்டால் தாயை இளப்பமாக பார்ப்பார்களோ என்று பயப்படுகிறாள். அவர்களுடைய ஏச்சுகளுக்கு தான் நொந்துபோய்விடுவோமோ என்று முன்னாடியே யோசித்திருக்கிறாள். பைத்தியக்காரி! எவ்வளவு பயப்பட்டாளோ என்னவோ? இந்த விதமாக யோசித்து மனதை அமைதி படுத்துவதற்கு முயற்சி செய்தாள் வசந்தி.
மகளுடையது தவறு இல்லை என்று நினைத்துக் கொள்வதற்கு அவள் மனம் தயங்கவில்லை. ஆனால் மறுபடியும் சென்னைக்குப் போகணும் என்றால் மனம் எதிர்ப்பு தெரிவித்தது. லாவண்யாவிடம் தனக்கு புகலிடம் கிடைக்காதா என்று ஏங்கியது. கடைசியில் மனம் முழுவதும் விரக்தி பரவியது. “நாளை மறுபடியும் சென்னை … நாளை மறுபடியும் சென்னை” அவள் மனதில் திரும்பத் திரும்ப அந்த எண்ணம்தான் மேலோங்கியிருந்தது.
தொடரும் …..
தெலுங்கில் Volga {P.Lalithakumari}
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com
This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
தொடுவானம் தொட்டுவிடும் தூரம்
அத்தியாயம் 3
“மாலையில் வருவதற்கு தாமதமாகும். நீலிமாவிடம் போகிறேன்.”
வசந்தியின் பக்கம் பார்க்காமலேயே சொல்லிவிட்டு அவசர அவசரமாக போய்விட்டான் சுரேஷ்.
வசந்தி திகைத்துப் போனவளாய் அப்படியே நின்றுவிட்டாள். தன்னுடைய நிலை என்னவென்று அவளுக்கே புரியவில்லை.
என்ன செய்வது? எவ்வளவு தைரியமாக சொல்லிவிட்டுப் போகிறான்! இரவு நேரம் கழித்து வந்தால் “எங்கே போயிருந்தீங்க?” என்று கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்காமல் முன்னாலேயே சொல்லிவிட்டான். பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து அவன் தப்பித்துக் கொண்டுவிட்டான். முழு பாரத்தையும் தன் மீதே போட்டு விட்டான்.
இப்போ என்ன செய்வது? “நீங்க நீலிமாவிடம் போகக் கூடாது” என்று சொன்னால்? “போகாமல் என்னால் இருக்க முடியாது” என்பான்.
“முடியாவிட்டால் நான் உங்களுடைய மனைவியாக இருக்க மாட்டேன்” என்று சொல்லணும்.
“நல்லது” என்பான்.
அப்பொழுது தான் அவனுடைய மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு தயாராக இருக்கிறாளா?
இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் தான் சுரேஷின் மனைவியாகவே இருக்க வேண்டும். இந்த வீட்டை விட்டு விட்டு சுரேஷ¤க்கு தொலைவாக தன்னால் வாழமுடியாது. அம்மாடி! இந்த வீட்டை… தன்னுடைய வீட்டை விட்டுட்டுப் போவதா? இந்த வீடுதான் தன்னுடைய உயிர். தான் வேறு இந்த வீடு வேறு இல்லை. வசந்திக்கு இதயம் முழுவதும் இறுகிப் போய்விட்டாற்போல் இருந்தது. இருபது வருடங்கள் எப்படி வாழ்ந்தேன்? இந்த குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தேன்? இந்த வீட்டைத் தவிர வேறு உலகம் இருப்பதையே மறந்துவிட்டேன். சுரேஷ¤க்கும், குழந்தைகளுக்