தைவான் நாடோடிக் கதைகள் (3)

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

தமிழில் மதுமிதா3. ஏரிச் சகோதரிகளும், இரு சகோதரர்களும்

‘அலி’ மலை மத்திய தைவானில் உள்ளது. அந்த மலை, அழகிய சூரிய உதயம், கடல்கள், மேகங்கள், செம்மரங்கள் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்றது.

மேலும் ‘அலி’ மலையின் ‘சகோதரிகள்’ ஏரி காண்பதற்கு ரொம்ப அழகு. சிலநேரங்களில் தூய ஏரியின் நீர் கண்ணாடிபோல், ஒளிரும் சூரியக்கதிரை பிரதிபலிக்கும்; சிலநேரங்களில் ஏரியின் மேல்பகுதி மூடுபனியின் வெண்திரைப்படலத்தால் அணைக்கப்பட்டாற்போல் காட்சியளிக்கும்.

ஒன்று பெரிதாயும், ஒன்று சிறிதாயும் இணைந்து ஓடும் ‘ஏரிச்சகோதரிகள்’ குறித்த, இதயத்தை உலுக்கும் கதை இது.

வெகுகாலத்திற்கு முன்பு அலி மலையில் பாலிநேசியர்கள் மட்டுமே வசித்துவந்தனர். இதைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தலைவனுக்கு இரு அழகிய மகள்கள் இருந்தனர். பெரியவள் அவானா. சின்னவள் அவாசா. பாடலும், ஆடலும் அவர்கள் இருவருக்கும் விருப்பமானவை.

முக்கியமாக பௌர்ணமி இரவுகளில், தங்கள் வயதொத்த தோழிகளை அழைத்துக்கொண்டு காட்டிற்குச் சென்று புல்தரையில் ஆடிப் பாடுவர். அப்போது பார்க்க ரொம்ப அழகாக அவர்கள் தேவதைகள்போல் இருப்பார்கள்.

அலி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட அனைவருமே மனநிறைவோடு வாழ்பவர்கள்.

இதில் இனத்தலைவன் மொகுலு என்ற ஒருவன் மட்டும் விதிவிலக்கு. அவன் கெட்டவன், கருணையில்லாதவன். மற்றவரிடம் உரிமை எடுத்து எதையும் தனக்கு அனுகூலமாக்கிக் கொள்பவன்.

காட்டுப்பன்றி, சிறுத்தைப் புலிகளைத் தானே கொன்றுவிடும் அளவில் அவன் பலசாலியானதால், அனைவரும் அவனை விரும்பாவிட்டலும், அவனுக்கு அச்சப்பட்டனர். அவனை ‘அலி மலையின் கரடி’ என்று பட்டப்பேர் வைத்தே அழைத்தனர்.

ஒருமுறை மொகுலு இரு உதவியாளர்களுடன் வேட்டைக்குச் சென்றான்.

காட்டில் எங்கிருந்தோ வந்தது ஆகா, இனிய பாடல். ஒலியைத் தொடர்ந்து அவர்கள் போனார்கள்.

புல்வெளியில் தோழிகளுடன் மகிழ்வாய் ஆடிப் பாடிக்கொண்டிருக்கும் அவானா, அவாசா இருக்கும் இடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தனர்.

அவர்களைப் பார்த்த மொகுலு உதவியாளர்களிடம் உரக்க, “பரவாயில்லை. பார்க்க அழகாகத் தெரிகிறார்கள்!” என்றான்.

அவன் குரலைக் கேட்டு ஆடுவதை நிறுத்திவிட்டார்கள் பெண்கள். அவர்கள் கோபத்துடன் அவனைப் பார்த்தார்கள்.

“ஹா!ஹா!ஹா!” பெருங்குரலில் சிரித்தான் மொகுலு.

“தொடர்ந்து பாடுங்கள்; ஆடுங்கள். நான் அலி மலையின் கரடி. உங்கள் அதிர்ஷ்டம் என் முன் ஆடுவது” என்றான்.

அவன் பட்டப்பெயரைக் கேட்ட தோழிப்பெண்கள் பயந்து ஓடிவிட்டனர். அவானா, அவசா மட்டும் இருந்தனர்.

அவானா மனத்தாங்கலுடன், “எப்படி நீ கடுமையாகப் பேசலாம். நீ பலவானானால், காரணமேயில்லாமல் எப்படி பிறரை அவமானப்படுத்தலாம்?” என்றாள்.

அவாசாவோ, “பெண்களை அவமானப்படுத்தினால் நீ ஹீரோவாகிவிடுவாயா? இப்படி நடந்துகொண்டால், கடவுள் உன்னை தண்டித்துவிடுவார்.” என்றாள்.

மொகுலு முகம் சுழித்து உரக்கக் கத்தினான். “வாயை மூடு. என் முன்னால் எப்படி இப்படியெல்லாம் பேசுவாய்.”

ஒரு உதவியாளன் மெதுவாய் மொகுலுவிடம், “தலைவா! அலி மலையின் மிக அழகிய பெண்கள் இவர்கள். நீ ஏன் இவர்களை ஆசைநாயகிகளாக உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது?” என்றான்.

மொகுலு ஆமோதித்தான். “சரி. நல்ல ஆலோசனை. இருவரும் ஒவ்வொருத்தியைத் தூக்கிக் கொள்ளுங்கள். நாம் போகலாம்.” என்றான்.

சகோதரிகள் கோபத்தில் முகம் சிவந்தனர். போராடினர். ஆனால் அந்த இரு மனிதர்களின் உறிதியான பிடியிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை.

மொகுலு சிரித்தான்.

திடீரென ஒரு பெருத்த குரல் கேட்டது. “அவர்களை விட்டுவிடு!”

ஒரு மரத்தின் பின்புறமிருந்து இரு இளைஞர்கள் வெளிப்பட்டனர்.

சிறிதும் பயமேயின்றி ஒருவன் மொகுலுவிடம், “இரு சகோதரர்களான நாங்கள் உன்னைப்போல் பலவான்களல்ல என்றாலும், இப்பெண்களைத் தூக்கிச் செல்ல உன்னை அனுமதிக்கமாட்டோம். மலைக்கடவுள் எங்களுக்கு உதவுவார்! எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றான்.

மொகுலு அலட்சியமாய், “மலைக்கடவுள் காட்சிகொடுப்பதற்குள் நீ இறந்து விடுவாய். உனக்கு அவர் உதவ வரப் போவதில்லை” என்றான்.

உடனே ஆகாயத்திலிருந்து மின்னல் தெறித்தது. நிர்மலமான ஆகாயம் இருண்டது. காதைச் செவிடாக்கும் இடியின் ஓசையில் மொகுலு பயந்தான்.
நடுங்கும் குரலில் அவனின் உதவியாளன், “தலைவா! மலைக்கடவுள் கோபம் கொண்டுவிட்டாரோ?” என்றான்.

திகைத்த மொகுலு அச்சத்தை வெளிக்காட்டாமல், தைரியசாலிபோல் நடிக்க முயற்சி செய்தான். அடுத்த கணம் அவனும், உதவியாளர்களும் பயத்துடன் ஓடிவிட்டனர்.

அவர்கள் ஓடிச்சென்றதும், ஆகாயம் எப்போதும் போல் தெளிந்தது. இரு சகோதரிகளும், இரு சகோதரர்களும் மகிழ்ச்சியாய் காட்டில் ஆடிப் பாடினர்.

மொகுலுவுடன் ஏற்பட்ட கசப்பான நிகழ்வை மறந்துவிட்டனர்.

ஆனால் இந்நாட்களில் மொகுலு மன அமைதியை முற்றிலும் தொலைத்திருந்தான். ஒரு தூதுவனை இரு சகோதரிகளின் தந்தையிடம் அனுப்பி வைத்தான். “உன் இருமகள்களை மூன்று நாட்களுக்குள் எனக்கு மனைவியாக அனுப்பிவைக்கக் கட்டளையிடுகிறேன். இல்லையென்றால் உன் குடியை எரித்து மக்களையும் முழுதாய் அழித்து விடுவேன்” என்று சொல்லி யனுப்பினான்.

இச்செய்தி பழங்குடியினரிடையே மிக வேகமாய்ப் பரவியது. அனைவரும் கலவரத்துடனும், பயத்துடனும் இருந்தனர்.

அவர்கள் அழகிய, மெல்லியல் புடைய இரு சகோதரிகளை மொகுலுவுக்கு பலிகொடுக்க விரும்பவில்லை. ஆனால் மொகுலுவின் கொடுந்தன்மை, இரக்கமின்மை ஆகிய அவனின் நடத்தைக்கு பயந்தனர்.

இப்படியெ அவன் தந்த கெடு, மூன்று நாட்கள் கடந்தன.

மூன்றாம்நாளின் இரவில் அவானா, அவாசா தங்கள் குடியை விட்டு சத்தமின்றி வெளியேறி, இரு குடிகளுக்கிடையேயான பாதையில் நடந்தனர்.

முழங்காலிட்டு பக்தியுடன் மலைக்கடவுளை வணங்கினர்.

“கருணையுள்ளம் கொண்ட கடவுளே! எங்கள் குடியை, மக்களைக் காப்பாற்று. மொகுலு யாரையும் காயப்படுத்த அனுமதிக்க வேண்டாம். நாங்கள் கஷ்டப்பட வேண்டுமென்று இருந்தால் நாங்கள் இருவர் மட்டுமே பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்!”

விடாது அழுதபடி பிரார்த்தனையைத் தொடர்ந்தனர். கண்ணீர் பெருகியது. அவர்களின் உடையையும், புல்லையும் நனைத்தது கண்ணீர்.

அதிகாலை நேரம் நெருங்கியது. சூரியனின் முதல்கதிர் மரங்களுக்கிடையே பாய்ந்தது.

திடீரென மின்னலடித்தது. தொடர்ந்து செவிடாக்கும் இடி இடித்தது.

மலைக் கடவுள் அவானா, அவாசா இருவரையும் இரு ஏரிகளாக்கியது. ஒன்று பெரியதாய், மற்றொன்று சிறியதாய், ஆனால் இரண்டும் இணைந்திருப்பதாய்.
இரு குடிகளின் இடையேயான பாதையை அந்த ஏரிகள் தடைசெய்தன.

சூரியன் உயரே எழும்பியது. ஏரியின் நீர் பளபளத்தது, இரு கண்ணாடிகள் ஒளிர்வதுபோல. தண்ணீர் மினுமினுத்தது இரு சகோதரிகளின் அழகிய கண்களும் இமைப்பதுபோல்.

மொகுலு தனது படைகளுடன் கத்தி, வில், அம்பு எடுத்துக்கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.

“என்ன ஆச்சர்யம்! எங்கிருந்து வந்தன இந்த இரு ஏரிகள்? மூன்று நாட்களுக்கு முன்பு இங்கே எந்த ஏரியும் இல்லையே!”

மொகுலுவும் அவனின் குடிகளும் வியந்தனர்.

இரு சகோதரிகள் தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து தோன்றினர். மலைக்காற்று அவர்களின் கருங்கூந்தலையும், சிவந்த உடையையும் அசைத்தது. தண்ணீர், காட்டையும் அவர்களின் அழகிய உருவையும் பிரதிபலித்தது.

பெரியவள் மொகுலுவிடம் தெளிந்த குரலில்,”மொகுலு, நீ பல தீய காரியங்கள் செய்துவிட்டாய். அதை உணர்ந்து திருந்தாவிட்டால், மலைக் கடவுள் உன்னை தண்டித்துவிடுவார். நீ அழிந்து போவாய்” என்றாள்.

மொகுலு சத்தமாய்ச் சிரித்தான்,”நான் அலி மலையின் பெருங்கரடி. மலைக்கடவுள் என்னை என்ன செய்துவிட முடியும். நீங்கள் இருவரும் உடனே என்னிடம் வந்துவிடுங்கள்” என்றான்.

இளையவள் கோபத்துடன், “சகோதரி, இவன் வருந்தவில்லை. திருந்தவும் மாட்டான். அவனுக்கு எடுத்துரைப்பது வீண். மலைக்கடவுள் இவனை தண்டிக்கட்டும்.” என்றாள்.

இரு சகோதரிகளும் கரங்களை இணைத்துக்கொண்டு நீருக்குள் மறைந்தனர். மொகுலு உரக்க, “தப்பிக்க வேண்டாம்.” எனக் கத்தினான்.

அவர்களைப் பிடிக்க நீருக்குள் குதித்தான்.

தண்ணீரில் அவன் விழுந்ததும் கருமேகம் ஒன்று வந்து ஏரிக்கு மேல் வானத்தை மறைத்தது. உடனே மின்னல் மின்ன இடி இடித்தது. மழை பொழிந்தது. பெருங்காற்று நிலத்தைக் கடந்தது.

மொகுலு நீரில் அலைக்கழிக்கப்பட்டான். கடலில் இருப்பதுபோல் நீச்சலடிக்க முயன்றான். நிலமே அவன் கண்களுக்குப் புலப்படவில்லை.

தொடர்ந்து நீந்தி நீந்தி நீந்தி …….. கடைசியில் பயந்து எல்லா திசைகலிலும் அலைபாய்ந்தான்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனால் இரு சகோதரிகளையோ, கரையையோ பார்க்க இயலவில்லை. முடிவில், அனைத்து சக்தியும் இழந்து ஏரியில் மூழ்கிவிட்டான்.

அவனின் ஆட்கள் பயந்து ஓடிவிட்டனர். இச்செய்தி அலி மலை முழுவதும் பரவியது.

அன்றைய இரவில், இரு உருவங்கள் ஏரிக்கரையில் வந்து இரு சகோதரிகளின் பெயரை முணுமுணுத்தன. சகோதரிகளைக் காப்பாற்றிய இரு சகோதரர்கள் அவர்கள்.

“தைரியசாலிகளான அவானா, அவாசா. நீங்கள் தனியாக இருப்பதாக நினைக்க வேண்டாம். நாங்கள் துணையாக உங்கள் அருகில் இருக்கிறோம்.”
என்றனர் இரு சகோதரர்களும்.

மூன்று பகல் மூன்று இரவு இரு சகோதரர்களும் அங்கேயே நின்றிருந்தனர்.

இந்த சிரத்தை மலைக்கடவுளின் மனதைத் தொட்டது. அவர் இரு சகோதரர்களை கிளைகளால் இணைக்கப்பட்ட இரு மரங்களாக மாற்றினார். எப்போதும் அச்சகோதரிகளுக்குத் துணையாக அங்கேயே அவர்கள் நின்றனர்.

அதன்பிறகு ஒவ்வொரு பௌர்ணமியிலும் இரு சகோதரிகளும் நீரிலிருந்து தோன்றி நிலத்துக்கு வருவதாகப் பேசிக்கொண்டனர்.

மர சகோதரர்களைச் சுற்றி அவர்கள் ஆடிப்பாடுவார்களாம்.

நிலவின் ஒளியில் ஏரிக்கரையில், ஏரிச்சகோதரிகளின் ஆடல் பாடலுடன் இணைந்த காட்சியின் அழகு, இன்னும் அலி மலையின் அழகையும் மர்மத்தையும் அதிகரிக்கிறது.


madhuramitha@gmail.com

Series Navigation

மதுமிதா

மதுமிதா