தைத்திருநாள் விழா கவியரங்கம் – 5

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


தைத்திருநாள் விழா கவியரங்கம்—–5

இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07

சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்)
முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி
ஏற்பாடு: லிட்டில் இந்தியா கடைத்தொகுதி மற்றும் மரபுடமைச்சங்கம் (தமிழவேள் நற்பணிமன்றம் பொறுப்பு)

கவியரங்கத் தலைமை : பிச்சினிக்காடு இளங்கோ

தலைப்பு…………………………………………..கவிஞர்கள்

அறுவடைத்திருநாள்………………கவிஞர் திருமுருகன்
திருவள்ளுவர் திருநாள்………….கவிஞர் மாதங்கி
புத்தாண்டு முதல்நாள்…………….கவிஞர் மகேஷ்குமார்
பொங்கல் திருநாள்……………….கவிஞர் மலர்விழி இளங்கோவன்
தமிழர்திருநாள்………………………கவிஞர் சேவகன்

பொதுத்தலைப்பு: தைத்திருநாள்
துணைத்தலைப்பு : தமிழர் திருநாள்(சேவகன்)

(பாடியது பிச்சினிக்காடு இளங்கோ)

ஆதியில் தமிழரிடம்
மதமில்லை
மனிதம் இருந்தது

‘னி’ என்கிற எழுத்து
அந்நியமானதால்
மனிதம்
மதமானது

ஆதியில் தமிழரிடம்
மனிதம் இருந்தது
பாதியில்தான் தமிழரிடம்
மதம் வந்தது

ஓரெழுத்துப் போனதால்
மனிதம்
மதம் ஆனது
தமிழர்களின்
தலையெழுத்து மாறியது

தலையெழுத்து மாறியதால்
மடமை
தலைவிரித்தாடியது

பளபளக்கும் விழாக்கள்
தலையெடுக்கத் தொடங்கின

தலையெடுத்த விழாக்களெல்லாம்
தமிழனைத்
தனித்தனியாய்ப் பிரித்தன

தனித்தனியாய்ப் பிரிந்தவனை
பிரிந்து
தனித்தீவாய் ஆனவனை
ஓரிடத்தில்
ஓரணியாய்
ஒன்றாகவைத்து–உள்ளத்தால்
ஒன்றவைத்து
தைத்த விழாதான்
தைத்திருநாள்
தமிழர் திருநாள்
அதுதான்
தமிழர்களின்
சமத்துவிழா

உயர்திணைகளோடு மட்டும்
தமிழன்
ஒன்றிப்போனதில்லை

அ·றிணைகளோடும்
ஐக்கியமானவன்
அ·றிணைகளையும்
அரவணைத்துக்கொண்டவன்
அதனால்தான்
மாட்டுக்கும் பொங்கல்வைத்தான்

மாட்டுக்கும் பொங்கல்
மாட்டுக்கும் ஊர்வலம்
எந்த நாட்டிலுண்டு?

தமிழர்வாழும்
எந்த நாட்டிலுமுண்டு–அதனால்
சிங்கைநாட்டிலுமுண்டு

(சேவகனை அழைத்தல்)

இவரோடு நகைச்சுவை
இணைந்து பிறந்தது
அறுசுவை உணவுபோல்
இவர்கவிதை
அனைத்துச்சுவையும் நிறைந்தது

இவர் சேவகனா?
கேசவனா?
தமிழ்முரசு குழப்பியது

தொண்டுசெய்வதும்—தமிழுணர்வை
தூண்டிவிடுவதும்
சேவையாயிவர் செய்வதால்
சேவகன்தான் இவர்பெயர்

விழித்திடத்தான் அதிகாலை
சேவல்கூவும்
விழிப்புணர்வைச் சேவகன்
கவிதைத்தூவும்

வாய்ப்புகளைக் குறைப்பதனால்
இவர்திறமை குறைவதில்லை
வாய்ப்புகளை வழங்குதற்கு
கவிமாலை மறந்ததில்லை

ஆண்டுக்கு ஒருவாய்ப்பு
இதுவே போதும்–அது
ஆனைமுகன்
பெற்றோரைச் சுற்றிவந்து
பெற்றதிரு ஞானப்பழம்போலாகும்

ஞானப்பழம் பெற்றவர்போல்–கவி
ஞானம்மிக பெற்றவரே
கானம் பாடவல்ல
வானம்பாடியாரே வாருங்கள்
தமிழர்திருநாள் வரலாற்றைப்பாடுங்கள்
தமிழர்திருநாள் வருங்காலம்பாடுங்கள்

சேவைசெய்யும் சேவகனே–அச்
சேவையை
இப்போது
இங்கே
இந்த
அவையில் செய்யுங்கள்

( தமிழர்திருநாள் பற்றி சேவகன் பாடுகிறார்)
///////////////////////////////////////////////////////////////////////////////////
(பாடிமுடித்தபின்)
/////////////////////////////////////////////////////////
(மீண்டும் இளங்கோ)

இலக்கணத்தோடு பாடினால்தான்
தளைதட்டும்–இவர்
இதயத்திலிருந்தல்லவா பாடினார்
எப்படித் தளைதட்டும்?
களைகட்டும்
இவரும் கவிதையில்
களைகட்டினார்
கைதட்டல் மிகவாங்கினார்

சொன்னதுபோல் பாடிவைத்தார்–கருத்துக்களைச்
சொல்லிவைத்தார் சேவகன்
சொக்கவைத்தார் சேவகன்

கல்வெட்டில் எழுதியதுபோல்
காலத்தைப் பதிவுசெய்தார்
சொல்வெட்டில் திருநாளை
சொற்சிற்பம் செதுக்கிப்போனார்

சேவகன் செய்ததெல்லாம்
சேவை
தமிழ்ச்சேவை

சேவகன் செய்யும் சேவை
தேவை
மிகத்தேவை

வாழ்த்துக்கள்

(முடிவுரை)

தைத்திருநாள்
தமிழர்திருநாள்
பொங்கல்திருநாள்
புத்தாண்டின் முதல்நாள்
திருவள்ளுவர் திருநாள்
அறுவடைத்திருநாள்
எத்துணைப்பரிமாணம்
இந்தத்திருநாளுக்கு!

ஆடுகளை மாடுகளை
அனைத்து உயிர்களை
சமமென்று எண்ணுகிற ஞானம்–தமிழர்
தவமின்றிப் பெற்றதிரு ஞானம்

ஆதவனை வணங்குவது
அறுவடையைப் பொங்குவது
ஞானத் தமிழர்தந்த பாடம்–அறிவை
வீணாக்கும் விழாவெல்லாம் வேடம்

வேடம் களைவோம்–தமிழ்ஞானப்
பாடம் பயில்வோம்

அறுவடைத்திருநாளே
பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாளே
தமிழர் திருநாள்
தமிழர் திருநாளே
தைத்திரு முதல்நாள்
தைத்திரு முதல்நாளே
புத்தாண்டின் முதல்நாளே

இன்றுதான் இன்றுதான்
தமிழர்க்குப் புத்தாண்டு
புத்தாண்டு பிறந்த இன்று
புதியதை வரவேற்போம்
புதிய’ தை’ பிறந்த இன்று
அமைதியை ஆராதிப்போம்
மதத்தை மறந்திவிட்டு
மனிதத்தை வென்றெடுப்போம்
நன்றியோடு வாழ்ந்து
நன்றியை நிலைக்கவைப்போம்
நன்றி

(அடுத்தவாரம் தொடரும்)

Series Navigation

தைத்திருநாள் விழா கவியரங்கம் – 4

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


தைத்திருநாள் விழா கவியரங்கம்—–4

இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07

சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்)
முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி
ஏற்பாடு: லிட்டில் இந்தியா கடைத்தொகுதி மற்றும் மரபுடமைச்சங்கம் (தமிழவேள் நற்பணிமன்றம் பொறுப்பு)

கவியரங்கத் தலைமை : பிச்சினிக்காடு இளங்கோ

தலைப்பு…………………………………………..கவிஞர்கள்

அறுவடைத்திருநாள்………………கவிஞர் திருமுருகன்
திருவள்ளுவர் திருநாள்………….கவிஞர் மாதங்கி
புத்தாண்டு முதல்நாள்…………….கவிஞர் மகேஷ்குமார்
பொங்கல் திருநாள்……………….கவிஞர் மலர்விழி இளங்கோவன்
தமிழர்திருநாள்………………………கவிஞர் சேவகன்

பொதுத்தலைப்பு: தைத்திருநாள்
துணைத்தலைப்பு : பொங்கல்திருநாள் (மலர்விழி இளங்கோவன்)

(பாடியது பிச்சினிக்காடு இளங்கோ)

பொங்கலைப் பொங்குவது
யார்?
பொங்கலன்று மட்டுமல்ல
பொங்கலென்றால்
பொங்குவது எந்நாளும்
பெண்கள்தாம்
பெண்களைப்
பொங்கவைத்துப்பார்ப்பது
ஆண்கள்தாம்

பெண்களைப்
பொங்கவைத்த ஆண்கள்
சராசரி ஆனார்கள்

பெண்களுக்காகப்
பொங்கிய ஆண்கள்
சரித்திரம் ஆனார்கள்

சரித்திரம் எதுவென்றாலும் – உணவு
தரித்திரம் போவற்கு
பொங்கவேண்டும்;
பொங்கல்வேண்டும்

பானைநீர் பொங்கவேண்டும்
பச்சரிசி பொங்கவேண்டும்
பாலும் பொங்கவேண்டும்
ஏலம் வெல்லம்
எல்லாம் பொங்கிப்
பொங்கலோ பொங்கலென்று
கூவி இறக்கவேண்டும்
கூப்பிட்டு வழங்கவேண்டும்

இனிக்கும் பொங்கலை
நினைக்கும் கவிதையை
அடிக்கரும்பின் சுவையோடு
அடிதோறும் எழுதிப்பாடும்
ஆண்டாள் மலர்விழியை
அன்போடு அழைக்கின்றேன்

மணந்தும்
மக்களோடு மகிழ்ந்தும் வாழும்
கவிஞர்
மலர்விழி இளங்கோவனை
ஆண்டாள் என்றது சரியா?
சரிதான்.

கவிமாலைக்கவிஞர் மலர்விழி
ஆண்டால்(ஆண்டுகளால்)
எங்களுக்கு இளமை
ஆனால் அண்மையில்
கணையாழிக்கவியரங்கில்
ஏற்றார் தலைமை.

ஆண்டுகளால் இளமையான
அன்பு மலர்விழி
கவியரங்கை
அண்மையில் தலைமைதாங்கி
ஆண்டார் என்பதால்தான்
ஆண்டாள் மலர்விழி என்றேன்

மலர்விழித்தால் மணக்கும்-அது
மகரந்தப்பொடிகளால் கனக்கும்
மலர்விழிகவிதையும் மணக்கும்-அது
சிறக்கும் சிந்தனையால் கனக்கும்

வேலு நாச்சியார்
வீர வரலாற்றுச்
சீமையிலிருந்து வந்தவர்
ஆமைபோல் இருக்கமாட்டார்
ஆமாம்சாமி போடமாட்டார்
ஆத்திரம்வந்தால் பொங்குவார்

நாளும்
பாத்திரத்தில் பொங்கும் மலர்விழி
பொங்கினால் என்ன?
பாத்திறத்தால் பொங்குவது
தமிழ்ப்பொங்கல்தானே

சமைக்கத்தான் பொங்கல்
தெரியும் என்பதில்லை
சொல்லைச் சுவையோடு கவிதையில்
அமைக்கவும் தெரிந்தவர்

திருமதி மலர்விழியே வாருங்கள்-உங்கள்
கூர்த்தமதி கவிதையினைக் கூறுங்கள்

( பொங்கல் திருநாள்பற்றி மலர்விழி பாடுகிறார்)
///////////////////////////////////////////////////////////////////////////////////
(பாடிமுடித்தபின்)
/////////////////////////////////////////////////////////
(மீண்டும் இளங்கோ)

இனங்களோடு
இனங்கள் எல்லாம் இணைவதற்கு
இனிய ‘தை’
இதுவென்றார்

எல்லோர்க்கும்
இரைகொடுக்கும் உழவனை
‘இறை’ என்றார்

உழவுக்கும் தொழிலுக்கும்
உதவிசெய்த
ஆதவன் முதலாக
அனைத்திற்கும் நன்றிசொல்ல
நன்றியாய் அமைந்தவிழா
நல்லவிழா பொங்கல்விழா

உழவன் உலகத்துக்கு
அச்சாணி¢ என்றான் வள்ளூவன்
ஐயமில்லை

அச்சாணி உழவன்
இல்லையென்றால்
அரசுத்தேர் ஓடாது
அரிசிச்சோறு தேறாது

அச்சாணி உழவன் இல்லையென்றால்
பிரியாணி இல்லை
பிரியமுள்ள கரும்பில்லை
மஞ்சள் வாழையில்லை
மாடில்லை பாலில்லை
பிள்ளையாரைப்
பிடித்துவைப்பதற்கும்
பிடிசாணி(மாட்டுச்சாணி)இல்லை
பின்
பிள்ளையார் இல்லை

அச்சாணி உழவனை
உச்சாணிக் கொம்பிலே
உயர்த்திவைத்து நன்றிசொன்ன
மலர்விழி இதயத்தை வணங்குகிறேன்
மனமார இதயத்தால் வாழ்த்துகிறேன்

(அடுத்தவாரம் தொடரும்)

Series Navigation

தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

மகேஷ்குமார்


0

தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3

இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07

சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்)
முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி
ஏற்பாடு: லிட்டில் இந்தியா கடைத்தொகுதி மற்றும் மரபுடமைச்சங்கம் (தமிழவேள் நற்பணிமன்றம் பொறுப்பு)

கவியரங்கத் தலைமை : பிச்சினிக்காடு இளங்கோ

தலைப்பு…………………………………………..கவிஞர்கள்

அறுவடைத்திருநாள்………………கவிஞர் திருமுருகன்
திருவள்ளுவர் திருநாள்………….கவிஞர் மாதங்கி
புத்தாண்டு முதல்நாள்…………….கவிஞர் மகேஷ்குமார்
பொங்கல் திருநாள்……………….கவிஞர் மலர்விழி இளங்கோவன்
தமிழர்திருநாள்………………………கவிஞர் சேவகன்

பொதுத்தலைப்பு: தைத்திருநாள்
துணைத்தலைப்பு : புத்தாண்டு முதல்நாள் (மகேஷ்குமார்)

(பாடியது பிச்சினிக்காடு இளங்கோ)
ஒன்றென்றிருப்பதிலும்
உண்டென்றிருப்பதிலும்
ஒருபோதும் தமிழருக்கு
உடன்பாடு இருந்ததில்லை

தெய்வம் என்றாலும்
திருத்தலம் என்றாலும்
ஆயிராமாய் இருப்பதில்தான்
அளவற்ற மகிழ்ச்சி

யாரை நம்புவது?
எதை நம்புவது?
என்பதிலும் தமிழருக்கு
எப்போதும் சிக்கல்தான்

சாமியாரை நம்பலாம்
சாமி யார்? என்பதிலும்
யார் சாமி? என்பதிலும்
சிக்கல்தான்

எது புத்தாண்டு?
எது தமிழாண்டு?
சித்திரையா? தையா?
இன்னும் சிக்கல்தான்

பெரியாரைத் துணைக்கொள்ள
வள்ளுவன் சொன்னதை
யார் கேட்டார்?

பெரியோர் எல்லாம்கூடி
பெரும்முடிவு எடுத்தார்கள்
தைமுதல் நாளே
தமிழரின்
புத்தாண்டு முதல்நாள் என்றார்கள்

தைமுதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டின்
முதல்நாள் என்று
முழங்க வருகிறார்

மதிமுகத்தின்(மதிமுக) சொந்தக்காரர்
மந்திர புன்னகைக்காரர்
சுதிகூட்டிப் பேசுவதில்
சொல்லேர் உழவர்
சாதனைகளை முறியடிக்கும்
சாதனையாளர்
மகேஷ்குமார் வருகிறார்
மாப்பிள்ளைபோல் வருகிறார்

தம்பி மகேஷ்குமார்
தங்கச்சி மடத்துக்காரர்
அண்ணாவின் தம்பி
எனக்கும் தம்பி–அவர்
இன்றைக்குத் தம்பி
எதிர்காலத்தில்
ஏதாவதொரு தொகுதியில்
நின்றால் எம்பி

அறிவுமுகம் அவர்முகம்
அவரை
அறிமுகம் செய்வதில்
ஆனந்த மடைகிறேன்

மகேஷ்குமார் வருக
மன்றத்தில் கவிபாடி
சபாஷ் பெருக…

( தமிழ்ப்புத்தாண்டு முதல்நாள்பற்றி மகேஷ்குமார் பாடுதல்)
///////////////////////////////////////////////////////////////////////////////////
(பாடிமுடித்தபின்)
/////////////////////////////////////////////////////////(மீண்டும் இளங்கோ)

ஆண்டை வருடமென்றோம்
திங்களை மாதமென்றோம்
கிழமையை வாரமென்றோம்
திங்களை வைத்துத்தான்
திங்களை முடிவுசெய்தான் தமிழன்

அம்மாவாசையையும் விடவில்லை ஆத்திகர்கள்
அழகாகச்சொன்னார்

அம்மாவின்மீது ஆசையை
யார்தான் விட்டார்?
ம.தி.மு.கத்தார்
மகேஷ்குமார் விட்டாரா?

தைமுதல்நாள்தான்
தமிழ்ப்புத்தாண்டின் முதல்நாள்
நெஞ்சில் தைக்கும்படி
கவிதையால் தைத்தார்

தம்பி மகேஷ்குமார்
எதிர்காலத்தில் இந்தியாவில்
எதாவதொரு தொகுதியில்
நின்றால் எம்பியென்றேன்

எதிர்காலம் எதற்கு
நிகழ்காலத்திலேயே
நிற்கிறேன் என்று
கவியரங்கில் நின்றார்
கவிதையாலும் நின்றார்

தம்பி
தமிழ்க்கவிதைத் தும்பி
கருத்துக்களை மேடையில்
எம்பி எம்பிப்பாடினார்
எம்பியானார் வாழ்த்துக்கள்

(அடுத்தவாரம் தொடரும்)

Series Navigation

தைத்திருநாள் விழா கவியரங்கம் – 2

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

பிச்சினிக்காடு இளங்கோ



தைத்திருநாள் விழா கவியரங்கம்—–2

இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07

சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்)
முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி
ஏற்பாடு: லிட்டில் இந்தியா கடைத்தொகுதி மற்றும் மரபுடமைச்சங்கம் (தமிழவேள் நற்பணிமன்றம் பொறுப்பு)

கவியரங்கத் தலைமை : பிச்சினிக்காடு இளங்கோ

தலைப்பு…………………………………………..கவிஞர்கள்

அறுவடைத்திருநாள்………………கவிஞர் திருமுருகன்
திருவள்ளுவர் திருநாள்………….கவிஞர் மாதங்கி
புத்தாண்டு முதல்நாள்…………….கவிஞர் மகேஷ்குமார்
பொங்கல் திருநாள்……………….கவிஞர் மலர்விழி இளங்கோவன்
தமிழர்திருநாள்………………………கவிஞர் சேவகன்

பொதுத்தலைப்பு: தைத்திருநாள்
துணைத்தலைப்பு : திருவள்ளுவர் திருநாள் (மாதங்கி)

(பாடியது பிச்சினிக்காடு இளங்கோ)

அறுவடைத் திருநாள்
அறிவுடைய விழாமட்டுமல்ல
திருவுடைய விழா
திருவள்ளுவர் விழா

வயிற்றுப் பசியோடு
வாழ்க்கை முடிவதில்லை
அறிவுப்பசி வேண்டும்
அதுதான் வாழ்க்கை

அறிவுப்பசிதான்
விலங்குப்பசியிலிருந்து நம்மை
வித்தியாசப்படுத்தும்

திருத்தலங்கள் எல்லாம்
தேடி அலைந்தாலும்–அங்கே
விக்ரகங்களை
விழுந்து வணங்கினாலும்
அறிவுப்பசி நீங்க
அறவே வழியில்லை

அறிவுப்பசி நீக்கும்
அட்சய பாத்திரம்தான்
அதிசய பாத்திரம்தான்
திருக்குறள்

திருக்குறள் தந்த
திருவள்ளுவர் திருநாள்பற்றிப்பாட
திருநெல்வேலி மங்கை
திருமதி மாதங்கி வருகிறார்

கலைமகளின் மறுபெயர்
மாதங்கி-இந்தக்
கவிமகளின் இயற்பெயரோ
மாதங்கி
மதுரை மீனாட்சியின்
மறுபெயரும் மாதங்கி

விழியில் மீனாட்சி-விழி
வில்லில் மானாட்சி
சொல்லில் தேனாட்சி
எழுத்தில் தமிழாட்சிச்செய்கிற
மாதங்கி வருகிறார்

தமிழாட்சிச் செய்கிற திருமதி
தமிழச்சி மாதங்கி
இங்கே
கவியாய் ஒருகாட்சி
கவிதைக்காட்சி
காட்டப்போகிறார்

வாருங்கள் மாதங்கி–இங்கே
பாடுங்கள் குரலோங்கி

( திருவள்ளுவர்நாள்பற்றி மாதங்கி பாடுதல்)
///////////////////////////////////////////////////////////////////////////////////
(பாடிமுடித்தபின்)
/////////////////////////////////////////////////////////(மீண்டும் இளங்கோ)
மறைமலை சொல்லித்தான்
தமிழ்மறை
தமிழ்த்திருமறை
திருக்குறள் தந்த
திருவள்ளுவர் திருநாள்
கண்டதைச்சொன்னார்

உண்மையைக் காட்டிலும்
பொய்யுக்கு வேகமென்றார்
அதுதான்
உண்மையான உண்மை

திருக்குறளில் மதமில்லை
இனமில்லை ஜாதியில்லை
மண்டிக்கிடக்கும்
மூடப்பழக்கமில்லை
மானுடம் அழியும்
வன்முறைக்கு வழியே இல்லை

அதில்
அன்புண்டு பண்புண்டு
அறமுண்டு அடக்கமுண்டு
எதையும் அடையும்
இனிய வழிகளுண்டு
எல்லோர்க்கும் உண்டான
இன்பத்துப் பாலுமுண்டு

இன்பத்துப்பால் உண்டு
இல்லறம் எனும்
நல்லறம் நடத்த
நல்லவழி பலஉண்டு–இன்னும்
என்னன்ன உண்டோ
அத்தனையும் உண்டு
அதுதான்
திருக்குறள் என்று
தெளிவாகச்சொன்னார் மாதங்கி

தொடக்கத்தில் அவரைத்
திருநெல்வேலி என்றேன்
திருநெல்வேலியென்றால்
இலக்கியம் சுவைத்த டி.கே.சி
நினைவுக்கு வரலாம்
விடுதலை உணர்வுதந்த
வ.ஊ.சி வரலாம்
வாழ்கிற தி.க.சி வரலாம்
எட்டயபுரம் வரலாம்
கட்டபொம்மன் வரலாம்
இன்னும்
எத்தனையோ வரலாம்
ஆனால் கண்டிப்பாக
‘அல்வா’
நினைவுக்கு வரக்கூடாது

‘அல்வா’ பிரியர்களாய்த்
தமிழர்கள் ஆனதால்தான்
பலரும் தமிழருக்கு
‘அல்வா’ கொடுக்கிறார்கள்

ஆனாலும்
திருநெல்வேலி அல்வாவின்சுவை
அலாதிதான்
அச்சுவையை
கவிச்சுவையாய்க் காட்டிய
கவிஞர் மாதங்கிக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

(அடுத்தவாரம் தொடரும்)

Series Navigation

தைத்திருநாள் விழா கவியரங்கம்

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

கவிஞர் திருமுருகன்


தைத்திருநாள் விழா கவியரங்கம்

இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07

சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்)
முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி
ஏற்பாடு: லிட்டில் இந்தியா கடைத்தொகுதி மற்றும் மரபுடமைச்சங்கம் (தமிழவேள் நற்பணிமன்றம் பொறுப்பு)

கவியரங்கத் தலைமை : பிச்சினிக்காடு இளங்கோ

தலைப்பு…………………………………………..கவிஞர்கள்

அறுவடைத்திருநாள்………………கவிஞர் திருமுருகன்
திருவள்ளுவர் திருநாள்………….கவிஞர் மாதங்கி
புத்தாண்டு முதல்நாள்…………….கவிஞர் மகேஷ்குமார்
பொங்கல் திருநாள்……………….கவிஞர் மலர்விழி இளங்கோவன்
தமிழர்திருநாள்………………………கவிஞர் சேவகன்

பொதுத்தலைப்பு: தைத்திருநாள்

தமிழருக்கும் பொங்கலுக்கும்
தனிப்பொருத்தம் இருக்கிறது-அது
ஏழாம் பொருத்தமாய்
இருந்து கசக்கவில்லை
அந்தத் தனிப்பொருத்தம்
இனிக்கும் பொருத்தமாய்
இருந்து இனிக்கிறது
இயல்பாய் இருக்கிறது
தமிழருக்கும் பொங்கலுக்கும்
உள்ள பொருத்தம்-அது
உள்ளப் பொருத்தம்

உள்ளப் பொருத்தம்
உண்மையில் இருக்குமானால்
எந்தப் பெருக்கமும்
வெள்ளம்போல் பெருக்கம்தான்-கரும்பு
வெல்லம்போல் இனிக்கும்தான்

பொங்கல்
எல்லார் வீட்டிலும் பொங்குவார்கள்
தமிழர் வீட்டிலும் பொங்குவார்கள்
என்ன வித்தியாசம்?
எல்லாரும் பொங்குதற்கும்
தமிழர் பொங்குதற்கும்
என்ன வித்தியாசம்?

எல்லார் வீட்டிலும்
உணவுக்காகப் பொங்குவார்கள்
தமிழர் வீட்டில்
உணவுக்காகவும் பொங்குவார்கள்
உணர்வுக்காகவும்
உரிமைக்காகவும் பொங்குவார்கள்

உணவைப்
பொங்கி வழங்குவதும்
உணர்வுகளால்
பொங்கிவழிவதும்தான்
தமிழர்வாழ்க்கை

இனிக்கின்ற பொங்கலைப்
பொங்கி வழங்கியவர்கள்
கரிக்கும்
கண்ணீர்ப்பொங்கலோடும்
காலம் கழிக்கிறார்கள்

தமிழருக்கும் பொங்கலுக்கும்
தனிப்பொருத்தம் இருக்கிறது-அது
இனிக்கும் பொருத்தமாய்
இருந்து இனிக்கிறது

இயற்கையிலிருந்து வாழ்க்கையை
இயற்கையாய்க் கற்றவர்கள்
தமிழர்கள்

இயற்கையோடு இயற்கையாய்
இயைந்து வாழ்ந்தவர்கள்
தமிழர்கள்

அறியாமை
இல்லாத வாழ்க்கை
தமிழர் வாழ்க்கை

அறிவுடமை
அகலாத வாழ்க்கை
தமிழர் வாழ்க்கை

அறியாமை இல்லாத
அறிவுடமை அகலாத
அறுவடை விழாவை
அறிமுகப் படுத்தினான் தமிழன்

ஆதாரம் உயிருக்கு
ஆகாரம் என்பதறிந்தான்
அனைத்திற்கும் ஆதாரம்
ஆதவன் என்பதுணர்ந்தான்

சூரியனை வணங்கும்
சூத்திரத்தைச் சொல்லுதற்கே
அறுவடைத் திருவிழாவை
அறிமுகப் படுத்தினான்

இன்னலில்தான் வாழ்க்கை
இனிக்கும் என்பதை
கன்னலைக் காட்டித்தான்
கற்பித்தான்

இனிக்கும் கரும்பு
கடித்ததும் இனிப்பதில்லை
கடிப்பதும் எளிமையில்லை

துணுக்குகள் இனிக்கலாம்
கணுக்கள் இனிக்குமா?

கடிப்பதைக் கூட
நுனியில் தொடங்கினால்
இனிப்பது தொடரும்

அடியிலே தொடங்கினால்
அடியோடு நின்றுவிடும்
அடுத்தது கசப்புவரும்

இன்னலில்தான் வாழ்க்கை
இனிக்கும் என்பதை
கன்னலைக் காட்டித்தான்
கற்பித்தான்

ஏலம்போல் மணக்கச்சொன்னான்
தமிழன்
ஏதிலியாய் ஆகிப்போனான்

ஏதிலியாய் திசைதோறும்
ஏகினாலும்
தேன்கதலி செங்கரும்பு
செந்நெல் மஞ்சள்
இஞ்சி ஏலம்
வெல்லம் முந்திரி
எல்லாம் கைக்குவரும்
இனியநாள் கண்டுசொன்னான் -அது
தைத்திருநாள் என்றுசொன்னான்

அத்தை வந்தால்
அத்தையுடன்
அத்தைமகள் வரலாம்
வராமலும் போகலாம்

தைமகள் வந்தால்
தையோடு செந்நெல்வரும்
கையோடு கன்னல்வரும்
இனிக்கும் வாழைவரும்
ஏலம்வரும் வெல்லம்வரும்
இஞ்சியும் மஞ்சளும் சேர்ந்துவரும்
எங்கு வரும்?
எங்கும் வரும்.
சிங்கைக்கும் வரும்
சிராங்கூன் சாலைக்கும் வரும்
தைத்திங்கள் எங்கள்
திருநாள் என்றான்

அறுவடைத் திருநாள் (திருமுருகனை அழைத்தல்)

ஆதிவிழா தமிழனுக்கு
அறுவடைத் திருவிழாதான்
பாதியில்தான் வந்தன
பலப்பல விழாக்கள்
ஆமாம் எல்லாம்
பளபளக்கும் விழாக்கள்

பயன்தரும் விழாக்களில்லை
பகுத்தறிவு விழாக்களில்லை
பணமெல்லாம் சாம்பலாகும்
பக்குவமில்லா விழாக்கள்

அறுவடை விழாதான்
அறிவுவிழா
ஆதிவிழா
முதல்விழா-அனைத்திற்கும்
முதன்மைவிழா

அறுவடை நடந்தால்தான்
அடுப்புப்பொங்கும்
மனிதனின்
அகம்பொங்கும்
முகம்பொங்கும்
அனைத்தும் பொங்கும்

அனைத்தும் பொங்க
அடைப்படை விழாதான்
அறுவடைவிழா

நான்சொன்னால் நம்பமாட்டீர்கள்
முருகன்சொன்னால் நம்புவீர்கள்

தமிழர்களுக்கு ஒரு
நல்லபழக்கமுண்டு
எதையும்
மனிதர்கள் சொன்னால்
நம்பமாட்டார்கள்–மனிதப்
புனிதனே சொன்னாலும்
நம்பமாட்டார்கள்
முருகன் சொன்னால்
நம்புவார்கள்

தம்பி முருகனை அழைக்கிறேன்
தம்பிதான் முருகன் திருமுருகன்
திருமுருகனை அழைக்கிறேன்…

வா முருகா வா
வா முருகா வா
ஆதிவிழா அறுவடைவிழா
சொல் முருகா சொல்
திருமுருகா சொல்

( அறுவடைத்திருநாள் பற்றி திருமுருகன் பாடுதல்)
///////////////////////////////////////////////////////////////////////////////////
(பாடிமுடித்தபின்)
/////////////////////////////////////////////////////////

வியர்வைச்சொந்தங்களே
என்று
விளித்தார்

வியர்வைத்தாவரங்கள் நூல்வெளியிட்ட
நான் வியந்தேன்

வியர்வையின் விழாதான்
அறுவடை விழாவென்று
விரிவாகச்சொன்னார்-கருத்துச்
செறிவாகச்சொன்னார்
அழகாகச்சொன்னார்
அழகன் முருகன் திருமுருகன்

அவமானங்களை
அறுவடை செய்துபார்
அனுபவம் கிடைக்குமென்றார்
இப்படி
நெருப்பு வார்த்தைகளால்
நின்றார் திருமுருகன்

அதனால்தான்

கருப்புத்தான் எனக்குப்பிடித்த
கலரு
அது
சூப்பர் ஸ்டார் கருப்பு
என்பதால் அல்ல

அர்த்தமற்ற எதையும்
சட்டை செய்யாத
தந்தைபெரியாரின்
சட்டை
கருப்பு என்பதால்–நான்
கட்டியமனைவியும்
கருப்பு என்பதால்
கண்முன் இருக்கும்
கவிஞர் யுகபாரதியும்
கருப்பு என்பதால்

மழைபொழியும் மேகமெல்லாம்
கருத்திருக்கும்
கருத்திருக்கும் திருமுருகன் கவிதையில்
கருத்தான கருத்திருக்கும் என்பதால்
கருப்புத்தான் எனக்குப்பிடித்த
கலரு

தம்பி திருமுருகன்
ஆறுபடைக்குச்சொந்தக்காரனில்லை
அறுவடைக்குச்சொந்தக்காரன் -வயிற்றுக்குச்
சோறுபடைக்கும் சூத்திரக்காரன்

அறுத்தால் குவித்தால்
கதிர்கனக்கும்
கருத்தால் நயத்தால்
கற்பனையால்
கனக்கும் கவிதைதந்த
உனக்கும்
உன் பேனாவுக்கும்
நன்றி

(அடுத்தவாரம் தொடரும்)

Series Navigation

author

கவிஞர் திருமுருகன்

கவிஞர் திருமுருகன்

Similar Posts