தேர் நிலைக்கு வரும் நாள்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

விக்ரமாதித்யன் நம்பி


தெருவில் நிற்கிறது தேர்
நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி
வடம்பிடித்து இழுத்து வந்து
இரதவீதிகளில் வலம் வரவைத்து
பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து
எல்லாம் முடிந்து இன்னமும்
நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்காது
நிற்கிறது தேர் நடுத்தெருவில்

புறப்பட்டு வந்த அன்று இருந்த
உற்சாகம் இன்று இல்லை ஜனங்களுக்கு
என்று நிலைக்கு வந்து சேருமென்று
யாராலும் சொல்ல முடியவில்லை
தேர் தெருவில் நிற்கிறது

தேரை இழுத்துத் தெருவில்
விட்டுவிட்டுப் போய்விட்டன குடிபடைகள்

நிலையத்திலேயே நின்றிருந்தாலும் நிம்மதியாக
நின்றுகொண்டிருக்கும் தன்பாட்டுக்கு

அயர்வு
வந்துவிட்டது ஐயருக்கே
குழம்பித் தவிக்கிறார்
நிர்வாக அதிகாரி
குதித்து ஓடிப்போய்க் கோயிலடைந்து விடலாமாவென
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுவாமியும் அம்பாளும்

திருவிழா தொடங்கிய நாளில்
திரண்டுவந்திருந்த கூட்டம் இப்பொழுதில்லை

வடம்பிடித்துக்கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியாளர்
காவல்துறை உயர் அதிகாரி எவரும் கண்டுகொள்ளவேயில்லை

தேருக்கு ஒரு கேடுமில்லை
தெய்வக்குற்றம் எதுவும் இல்லை

வடம்பிடிக்கத்தான் ஆளில்லை
வந்துசேரத்தான் வழியில்லை

தெருவிலேயே நிற்கிறது
தேர்

நிலைக்கு வந்துசேரும்
நாள் என்று

பெருமூச்சு விட்டபடி நிற்கிறது
தேர் தெருவிலேயே

சொல்லவும் முடியவில்லை
மெல்லவும் முடியவில்லை

நிற்கிறது தேர்
நடுத்தெருவிலேயே இன்னமும்.

*******************************************************************

Series Navigation