தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

நக்கீரன்



இப்பதிவு வெளியாகும் வேளையில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகளின் தலையெழுத்தைத் தமிழக மக்கள் நிர்ணயத்திருப்பார்கள்.
தி.மு.க அணியோ அ.இ.அ.தி.மு.க அணியோ, கருணாநிதியோ ஜெயலலிதாவோ, அல்லது கூட்டணி ஆட்சியோ இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்கப் போகிறது.
இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு சரமாரியாக இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளித் தெளித்துள்ளன. மக்களும் இவர்களின் இலவச சலுகைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் நம்பி மிகுந்த எதிர்பார்ப்புடன் இவர்களுக்கு ஒட்டளித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
http://www.iamformylapore.com/content/emtamil.pdf
அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையைக் காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
http://www.aiadmkindia.org/manifesto%202006/Election%20Manifesto-%20English%20Tamil%20Nadu.pdf
இதைத் தவிர இந்த இரு கட்சிகளுமே அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லாத பல சலுகைகளைப் போகிறபோக்கில் இறைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பற்றாக்குறைக்கு இவர்களின் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் வேறு.

எங்கும் இலவசம் எதிலும் மானியம். தொலைக்காட்சிப்பெட்டி, தங்கத்தாலி, கணினி, எரிவாயு அடுப்பு, மிதிவண்டி என்று இன்னும் பல பொருட்கள் இலவச வரிசையிலுண்டு.
திருமணத்திற்கு 15000, கர்ப்பிணிகளுக்கு மாதம் 1000, வேலையில்லாதோற்கு மாதம் 300 என்று பல நிதியுதவிகள். தமிழனை சோம்பேறியாக்கப் போட்டி போடுகின்றன கழகங்கள். எனக்குத் தெரிந்த வகையில் இத்தகைய இலவசத் திட்டங்களால் எந்த நாடோ சமுதாயமோ முன்னேறியதாக நினைவில்லை. மாறாக அது அச்சமுதாயத்தை அழிவுப்பாதைக்கே கொண்டுச் செல்லும். இதையெல்லாம் காணும் பொழுது ‘வேட்டி சேலை கேக்காதீங்க, வேலை வெட்டி கேளுங்க வேட்டி சேலை நாமலே வாங்கிக்கலாம்’ எனும் தமிழ்த்திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.

இலவசம் குறித்த வாதங்கள் ஒரு புறம் இருக்க, இந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்படும் என்பதுதான் இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வி. இப்பொழுதே பிரதமர் நிழலில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தி.மு.க தலைவர் பிரதமரை துணைக்கழைக்கிறார். எவெரேனும் குறித்துக் கொண்டு, அ.தி.மு.க தலைவருக்குத் தேர்தலுக்குப்பின் நினைவுறுத்தினாலன்றி அவர் அளித்த வாக்குறுதிகள் அவருக்கு நினைவிருப்பது ஐயமே. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தேர்தல் அறிக்கைகள் கட்சிகளின் ஜனநாயக உரிமை அதில் தலையிட முடியாது என மறுத்து விட்டன. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அளிக்கலாம். அது நிறைவேற்றப்பட முடியாததாகினும் கவலையில்லை. வாக்குறுதிகளின் நம்பகத்தன்மைக் குறித்தும் கவலையில்லை. வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றவில்லையென்றாலும், யாரும் ஒன்றும் செய்ய இயலாது. இந்த விஷயத்தில் அரசியல் சட்டங்கள் மிகத்தெளிவாக அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாகத் தீட்டப்பட்டுள்ளன. அப்படியென்றால் யார் தான் இதை கண்காணிப்பது?

ஓட்டு போட்டவுடன் நம் வேலை முடியவில்லை மக்களே! வல்லாரை மூலிகை சாப்பிட்டாவது இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைக்க வேண்டும். வெற்றிப் பெற்று வரும் அரசு, அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்த பட்சம் வாக்குறுதிகளை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளையாவது எடுக்க வேண்டும். அப்படி கொடுத்த வாக்குறுதிகளை மறுப்பவருக்கும், மறப்பவருக்கும் அல்லது நிறைவேற்றாமலிருக்க ஏதாவது சாக்கு சொல்வோருக்கும் தண்டனை கொடுக்க நாம் 5 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் மூன்றாண்டுகளில் வரும். வேறு எதற்கும் பயப்படாத அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பயப்படும் ஓரே ஆயுதம் ஓட்டு. அதிர்ஷ்டவசமாக ஜனநாயகம் அந்த ஆயுதத்தை மக்களிடம் அளித்துள்ளது. அதற்கு பயந்துதான் கோடீஸ்வரனும் குடிசைக்குள் நுழைந்து ஓட்டு கேட்கிறான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும் கட்சிக்கே அடுத்த ஓட்டு என்பதை உணர்த்துவோம். இதனால் இரு பயன்கள். ஒன்று அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடும். இரண்டு அடுத்த தேர்தலில் நியாமான வாக்குறுதிகளை அளிக்கும்.

தமிழா! உன் மறதியை மூலதனமாகக் கொண்டு இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. நீ உறங்கும் வரை உன்னை உறிஞ்சி உயர்வடையும் இந்த அரசியல் கூட்டம்.
விழித்துக் கொள்.

Series Navigation

author

நக்கீரன்

நக்கீரன்

Similar Posts