தேம்பித் திரிவர்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

எஸ்.கே


ஆம், சோம்பர் என்பவர்!

ஒரு பழைய கதை.

நான்கு சோம்பேறிகள் ஒரு சத்திரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு திடாரென்று நெருப்புப் பிடித்து விடுகிறது. தீ அந்த சோம்பேறிகளை நெருங்குகிறது. வெப்பத்தை உணர ஆரம்பிக்கிறார்கள்.

‘சோம்பலம்பலம் வேகுதடா ‘ என்றான் முதல்வன்.

‘பேசாதேடா, வாயைத்தான் வலியாதா ‘ என்றான் இரண்டாமவன்.

‘ம்ம்…ம்ம் ‘ என்று வெறுமே முனகினான் அடுத்தவன்.

அதையும் செய்யவில்லை கடைசி வஜ்ர சோம்பேறி!

அந்த நால்வரும் எழ முயற்சி செய்யவில்லை. நெருப்பில் வெந்தார்கள்.

இது என்ன கதை, இது போல் நடக்குமா என்ன ? என்னதான் சோம்பலென்றாலும் உயிர் பிழைக்க நிச்சயமாக எழுந்து ஓட மாட்டார்களா என்று கேட்கலாம். ஏன், நம்மில் பலர் உயிருக்கு நிகரான பலவற்றை சோம்பலாலும், முயற்சியின்மையாலும் அன்றாடம் இழந்து கொண்டிருக்கிறார்களே! அதற்கென்ன சொல்கிறீர்கள்!

சோம்பலின் தாக்கம் மிகுதியாக ஆட்கொண்டால் அவர்களிடம் ஆக்கம், ஊக்கம் எதுவும் இருக்காது.

திருவள்ளுவர் இந்த சோம்பல் சைத்தானைப் பற்றி ஒரு முழு அதிகாரமே ‘மடியின்மை ‘ என்ற பெயரில் பொருட்பாலில் இட்டுள்ளார். அதில் உள்ள முத்தான கருத்துக்களை சிறிது பார்ப்போம்.

முதலில் எந்த விதமான குடிப் பெருமை இருந்தாலும் சோம்பல் குடி கொண்டால் அது எப்படி மங்கி விடும் என்பதை இந்தக் குறள் மூலம் விளக்கியுள்ளார்.

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

இதற்குமேல் ஒரு அடி போய் இந்த மடியைக் கொண்டவன் குடி அவன் முடிவுக்கு முன்னேயே முழுதும் அழியும் என்பதை இங்கே அடிக்கோடிடுகிறார்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.

இதோ பாருங்கள். இன்னும் விளக்கமாக நான்கு விசேஷ குணங்களை (காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம்) சுட்டிக் காண்பித்து மீளாத துன்பமெனும் இலக்கை நோக்கிச் செல்லும் தோணிகளாக அவற்றை வர்ணிக்கிறார்! வீணாய்ப் போவது என்று முடிவு செய்தவர்கள் விரும்பி ஏற்கும் தோணிகளாம் அவை!

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.

இந்தக் காலத்தில் சிறு வேலைகள் ஆவதற்குக் கூட ஏதாவது சிபாரிசு தேவைப் படுகிறது. கோவிலுக்கு சென்று கிட்டத்தில் சாமி கும்பிடுதல்கூட பெரிய மனிதர்கள்பால் செல்வாக்கு இருந்தால்தான் நடக்கும். இல்லாவிடில் மணிக்கணக்காக காத்துக் கொண்டிருந்து விட்டு உம்மாச்சியை நெருங்கும் நேரத்தில், ஒரு பெ(ரு)த்த வி.ஐ.பி கர்ப்பக் கிரகத்துக்குள் அழைத்துச் செல்லப் படுவார் – அவர் தன் பிருஷ்ட பாகத்தால் இறைவன் சிலையை மறைத்து விடுவார்! To get things done without hassles in this world, either you have to be somebody, or you must know somebody! இந்த சூழ்நிலையில் ஒருவேளை பல பெரிய மனிதர்களின் அன்புக்கு பாத்திரராக இருக்க நேர்ந்தால் நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி! ஆனால் அந்த பாக்கியம் கிட்டியும் கூட சோம்பலால் ஆட்கொள்ளப் பட்டவராக நீங்கள் இருந்தால் எந்த ஒரு பயனையும் உங்களால் பெற இயலாது என்கிறார் வள்ளுவர் இந்த மணியான குறளில்:

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

நம்மில் சிலருக்கு காலக்கெடு என்பதே தெரியாது. அவர்கள் அறவே வெறுப்பது கடிகாரத்தைத்தான். எதையும் தாமதமாகத் தான் செய்வார்கள். இந்தக் குறைபாடு சோம்பலினால் வருவது. எந்த நேரத்திலும் மந்தமாகவே இருப்பர். நேரத்தின் மதிப்பை இவர்கள் உணர்வாரல்லர். எல்லோருக்கும் தினமும் கிடைப்பது இருபத்து நான்கு மணி நேரந்தான். அந்தப் பொன்னான நேரத்தை சிலர் சரியானபடி செலவிட்டு அதை தன் முழுமையான ஆளுமைக்குள் கொண்டு வந்து, வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். ஆனால் வேறு பலரோ அந்த அடிப்படைத் தேவையை மனத்தில் கொள்ளாமல் நேரத்தை சும்மா இருந்து சோம்பலில் செலவிட்டு பின் எல்லாமே இழந்து நிற்பர். இது போல் ‘சும்மா ‘ இருப்பதை ஒரு கலைபோல் பாவிக்கின்றனர் நம் நாட்டில் சிலர்.

‘தம்பி என்ன செய்திட்டிருக்காப்பல ? ‘

‘சும்மாத்தான் இருக்கான் ‘

இவர்களுக்கு விமோசனமே கிடையாது!

சோம்பலை மிகுதியாய்க் கொண்டவரிடம் லக்ஷ்மி குடி கொள்ள மாட்டாள். ‘குந்தித் தின்றால் குன்றும் மாளும் ‘ என்பது போல இவர்களிடம் தன் முன்னோர் சேர்த்து வைத்த சொத்து பத்து இருந்தாலும் அவை உப்பு சேர்த்த ஐஸ் கட்டி போல் தானாகக் கரைந்து விடும்.

சோம்பேறித்தனம் நம்மை ஆட்கொண்டுவிட்டால், எந்த வேலையையும் செய்யத்தோன்றாமல் ஒரு மாதிரி ஓச்சலாகவேயிருக்கும். ஏதோ ஒன்று நம்மை இயங்காமல் தடுக்கும். எல்லாவற்றையும் தள்ளிப்போடச் செய்யும். சோம்பேறித்தனத்தின் அண்ணன் இந்த ஒத்திப் போடும் வியாதி. Procrastination என்று அழைக்கப் படும் இந்தக் குறைப்பாட்டினால் பீடிக்கப் படுபவர்கள் மனச் சுமையால் பாதிக்கப் பட்டு பறிகொடுத்தவர்போல் காட்சியளிப்பர். முற்றிய நிலையில் மன அழுத்தத்தால் நோயாளியாகி விடுவர். இவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது மிக அவசியமாகும்.

நல்ல பழக்க வழக்கங்கள் தவிர உணவும் இவ்வித மனப்பாங்குக்கு துணை புரிகிறது. மனிதர்களின் குணங்களை ‘சத்வம் ‘, ‘ரஜஸ் ‘, ‘தமஸ் ‘ என்று பிரிக்கிறது பகவத் கீதை. சத்வ குணத்தைக் கொடுக்க வல்ல உணவு நற்குண நற்செய்கைகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. முனிவர்களும், தமக்கென ஒன்றும் கொள்ளாமல் பிறருக்குத் தொண்டு செய்வதே தன் கடமையாகக் கொண்டு செயலாற்றுபவர்களும் சத்வ குண உணவையே உட்கொள்வார்கள். காஞ்சி காமகோடி பீடம் ‘மகா பெரியவர் ‘ என்று அழைக்கப் பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் ஒரு கைப்பிடி வெறும் நெல்லுப் பொரியை பாலில் போட்டு அதை மட்டும் உண்டு வாழ்ந்தார் என்று சொல்வார்கள்.

ரஜெள குணம் என்பது வேட்கை, பற்று ஆகியவற்றை உண்டாக்கும். ஆனால் இது கெட்டது அல்ல. மனிதனுக்கு ஆசை என்று ஒன்று இல்லையேல் இவ்வுலகில் இயக்கமே இருக்காது. செயலாற்றும் உந்துதல் கொடுப்பதே ஆசைதான். ஆனால் அது அளவு மிகும்போது தோன்றும் பேராசைதான் கூடாது என்பார் பெரியோர். ஆசையை உண்டாக்கும் உணவு வகைகள் இத்தகைய கிளர்ச்சிகளை எழச்செய்யும். வெங்காயம் இவ்வகையைச் சேர்ந்த உணவு என்பது பலர் நம்பிக்கை. இந்த ‘காயமா ‘கிற உடலுக்கு அது வெம்மையை ஊட்டும் என்பது காரணமாக இருக்கலாம்!

அடுத்தது ‘தமோ குணம் ‘. இதுதான் மந்த கதியைக் குறிக்கிறது. மதி மயக்கம், அஞ்ஞானம், முயற்சியின்மை, தூக்கம் இவற்றை ஏற்படுத்தும் குணமாக இது கூறப்படுகிறது. பழைய உணவு, புளித்த தயிர் அல்லது மோர், கிழங்கு வகைகள், வயிறு முட்ட உண்ணும் உணவு ஆகியவை இந்த தாமஸ குணத்தை மேலோங்கச் செய்யும் என்பர்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் கூர்ந்து கவனித்தால், அவர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் சரி, அவர்கள் எல்லோரிடமும் பொதுவான குணமாக சுறுசுறுப்பும், ஊக்கமும், முயற்சியும், நேரந்தவறாமையும் நிச்சயம் இருக்கும்.

விடியற்காலையில் எழுந்து, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, குளித்து முழுகி, ‘பளிச் ‘சென்று உடை உடுத்தி, மலர்ச்சியான முகத்துடன் எப்போதும் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பும் ஊக்கமும் உள்ளவர்களாக இருந்தால் எடுத்த காரியம் எதனினும் வெற்றி கிட்டும்.

அதை விடுத்து, காலையில் விழிக்காமல் போர்த்திப் படுத்து, உதயத்துக்கு அப்புறமும் தூங்கி, படுக்கையிலேயே காப்பி, டிபனைச் சாப்பிட்டு, குளிக்காமல் அழுக்கு மூட்டையாய், பெருந்தீனி தின்று கொண்டு, ஒரு மதமதர்ப்புடனேயே காலத்தைப் போக்கினால் அக்காதேவி தான் வாசம் செய்வாள்!

திரு. தம்பி சீனிவாசன் அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:-

மீண்டும் வருமா ?

====

அன்றொருநாள் ஆடுகையில்

நானிழந்த பந்து

பின்னொரு நாள் தேடுகையில்

மீண்டும் வந்ததுண்டு

அன்றொரு நாள் பாடுகையில்

அடி மறந்த பாடல்

பின்னொரு நாள் நினைவினிலே

மீண்டும் வந்ததுண்டு

அன்றொரு நாள் போட்டியிலே

நான் இழந்த நண்பன்

பின்னொரு நாள் சேர்ந்திடவே

மீண்டும் வந்ததுண்டு

அன்றொரு நாள் சோம்பலிலே

நான் இழந்த காலம்

என்னருமை வாழ்க்கையிலே

இன்னொரு நாள் வருமா ?

சோம்பலை வெல்வோம். ‘ஊழையும் உப்பக்கம் ‘ காண்போம். என்னேரமும் வெற்றிதனை ஆட்கொள்வோம்!

—-

எஸ்.கே

skichu[@]gmail.com

http://kichu.cyberbrahma.com/

Series Navigation