தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கோபால் ராஜாராம்


(தீராநதி ஏட்டிற்கு இந்தக் கடிதம் அனுப்பப் பட்டது. வெளிவருமா, இல்லையா என்று தெரியவில்லை.)

தேசபக்தி பற்றி அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை எனக்கு வியப்பை அளிக்கவில்லை. டால்ஸ்டாயை மேற்கோள் காட்டுவதன் மூலம் தன் தேசவிரோதத்திற்கு ஆதரவு தேடும் பரிதாபமான முயற்சி, அ மார்க்ஸின் வழக்கமான எழுத்துப் பாணியிலிருந்து மாறுபட்ட ஒன்றல்ல. அவருடைய நூல்கள் எல்லாமே அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கோள்களைப் பிய்த்துப் போட்டு, தான் நிறுவ வந்த எளிமையான சூத்திரங்களை “நிரூபிக்கும்” முயற்சிகளே தவிர வேறில்லை. காந்தியின் மேற்கோள்கைளைக் குதறிப் போட்டு காந்தியை பெரியாரிஸ்ட் என்று நிறுவியது போல, டால்ஸ்டாயும் பெரியார் தொண்டர் தான் என்று ஒரு புத்தகம் அவர் எழுதினால் நான் ஆச்சரியப் படமாட்டேன். அவருடைய எல்லாப் புத்தகங்களுமே அந்த வகை இரவலின் விளைவுகள். அவருடைய புத்தகங்களில் இந்த இரவல் ஜீவிதம் இல்லாமல் ஒரே ஒரு சுயசிந்தனை கூடக் கிடையாது. அவர் ஆசிரியராய் இருந்து வெளிவந்த ஒரே ஒரு புத்தகம் இதற்கு விதிவிலக்கு. அதற்கு பாவம் அவரைக் குற்றம் சொல்ல முடியாது. அது கா சிவத்தம்பியின் தவறு.
இந்த மனநிலை, திருவிழாச் சந்தையில் பிரபலங்களின் படங்களின் அருகில் நின்று தன்னைப் பெருமைப் படுத்திக் கொள்ள முயலும் பாமரனின் மனநிலை தான்.
ஜெயமோகன் பேசுவது இந்தியா என்ற தேசம் பற்றி. ஜெயமோகனின் கட்டுரையில் தேசபக்தி என்ற வார்த்தை வருவது இறுதியில் ஒரே ஒரு இடத்தில் தான். அது தேசபக்தியைப் பாவம் என்று சொல்லி தேசத்தைச் சீர் குலைக்கும் சக்திகளுக்கு எதிராக எழுந்த குரலே தவிர தேசத்தின் அதிகார மையங்களைப் பாதுகாக்கிற குரல் அல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தை தேசங்கள் தாண்டிய புதுத்தேசியமாய் உருவாக்கி , அதன் மூலம் கேள்விகள் அற்ற தேசபக்தியை ஒத்த மதவாதம் உருவாக்கப் படுவது பற்றிய எச்சரிக்கைக் குரலையும் அவர் பதிவு செய்துள்ளார்.
தேசபக்தியோ, தேசபக்திக்கு எதிரான குரலோ எந்தப் புள்ளியிலிருந்து பிறக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் அதன் மீதான விமர்சனம் நாம் வைக்க முடியும். தேசபக்தி விமர்சனமற்ற குருட்டுத்தனமான பக்தி என்றால் அதற்கு எதிரான குரல் எழுவது அவசியம். அதேபோல் தேசபக்திக்கு எதிரான குரல், பாமர மக்களை பலி கொள்ளும் மதவாதத்திலிருந்து எழுகிறதா அல்லது, அர்த்தமற்ற சித்தாந்தத்திற்கு வன்முறை மூலம் வலிமை தேடும் முயற்சியிலிருந்து எழுகிறதா என்று பார்க்க வேண்டும்.

டால்ஸ்டாய் தன் தேசபக்திக்கு எதிரான பதிவு, வன்முறைக் கலாசாரத்தை கலகம் என்று பேசும், பயங்கரவாதிகளின் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் குழு பயன்படுத்தும் என்று எண்ணியிருப்பாரா? டால்ஸ்டாயைப் பயின்றவர்கள் அவர் தேசபக்திக்கு எதிராகப் பேசுவது எந்த புள்ளியிலிருந்து என்று தெளிவாகவே புரிந்து கொள்வார்கள். மானுட நேசத்தை முன்வைத்து அவர் எழுப்பும் குரலின் பொருளை உணர்ந்த, அந்த நேசத்தினை உண்மையாய்த் தம் வாழ்வில் பாவித்த காந்தி, மண்டேலா, மார்டின் லூதர் கிங் ஆகியோர், தேசம் என்ற கருத்தாக்கக்தைத் துறக்கவில்லை. தேசங்களிடையே பரஸ்பர நம்பிக்கையும், போர்க் குணம் துறந்த ஜனநாயகத் தன்மையும் இருந்தால் தான் தேசபக்தியைத் தாண்டிய மனித நேயம் உருவாக முடியும். தேசங்கள் சீர்குலைந்தல்ல, தேசங்கள் தம்முடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு அச்சுறுத்தல் இல்லாமல், ஆயுதங்களின் தேவை இல்லாமல் இருக்க முடிந்தால் தான் தேசபக்தி அர்த்தமற்றுப் போகும்.

ஐரோப்பாவின் சிறு தேசங்கள், தங்களது தேசபக்தியின், மொழிப்பற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான வருடங்கள் தங்களுக்குள் போர்புரிந்தபோது அதனை எதிர்த்து வந்த கலகக்குரல் டால்ஸ்டாய் முதலானோரது. அந்த குரலின் நோக்கம் மொழிகளை தாண்டி, குறு தேசியங்களை தாண்டி பரந்த அளவில் மனிதர்கள் இணையவேண்டும் என்பதுதான். ஆனால், அவர்களது வார்த்தைகளை பயன்படுத்தி, இந்திய தேசியத்தினை உடைத்துவிட முனைகிறவர்கள், மொழிகளை தாண்டி, குறு தேசியங்களை தாண்டி இணைந்துள்ள இந்தியாவை, மீண்டும், குறு தேசியங்களாகவும் மொழி வெறியின் அடிப்படையில் உடைத்து ஆயிரக்கணக்கான வருடங்கள் ஐரோப்பாவில் நடந்த மொழி, இன, குறு தேசியப்போர்களை இந்தியாவில் நடத்திவிட ஆர்வப்படுகிறார்கள். இதுதான் டால்ஸ்டாயுக்கும் அமார்க்ஸ்களுக்கும் இடையே உள்ள அடிப்படை வேற்றுமை.

இந்த அ மார்க்ஸ் என்ற இரவல்ஜீவி தான் மேற்கோள் காட்டும் புத்தகங்களைக் கூட ஒழுங்காகப் படித்ததில்லை என்பதற்கு ஒரே ஒரு சிறு உதாரணம் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன்.

ஹன்னா ஆரெண்ட் என்ற யூதப் பெண்மணி எழுதிய “எதேச்சாதிகாரத்தின் மூலகாரணம்” என்ற புத்தகம் தேசபக்தி ஏன் தவறு என்பதை நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் அல்ல. அதன்மையப்புள்ளி மார்க்சிய ஸ்டாலினிஸ்ட் ரஷ்யாவும், நாஜி ஜெர்மனியும் எப்படி எதேச்சாதிகாரத்தில் ஒற்றுமை கொண்டு விளங்குகின்றன என்பதும், தேசம் என்ற கருத்தாக்கம் எப்படி கிருஸ்துவ மதம் அரசு மதமாக மாறி, யூதவெறுப்பில் தொடங்கி தேசத்தினை ஒருமுகமாகக் கட்டுவிக்க முயன்றது என்பதும் பற்றியது. யூதரான ஹன்னா ஆரெண்ட் இஸ்ரேலின் உருவாக்கத்தை எதிர்த்தவரும் அல்ல.

யூத எதிர்ப்பைத் தன் தாரக மந்திரமாக வைத்திருக்கும் மதவாதிகளின் மடியில் இருக்கும் அ மார்க்ஸ் ஹன்னா ஆரெண்டை மேற்கோள் காட்டும் விந்தை எப்படி நிகழ்கிறது?

மூர்க்கமாக ஸ்டாலினிசத்தை எதிர்த்த ஹன்னா ஆரெண்டைத் துணைக்கு அழைத்து தேசபக்தி எப்படி தவறு என்று மேற்கோளை அள்ளி வீச அ மார்க்சால் எப்படி முடிகிறது?

இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அவருடைய ஸ்டாலினிஸ்ட் நண்பர்களும், மதவாத நண்பர்களும் யாரும் ஹன்னா ஆரெண்ட் எழுதிய மூலப் புத்தகங்களைப் படிக்கப் போவதில்லை என்ற துணிச்சல் தான்.

அ மார்க்ஸை விமர்சனம் செய்தால் உடனே தன்னைப் போஷிக்கும் மதவாதக் குழுக்களின் பின்னால் மறைந்து கொண்டு இதோ பார் இவன் இஸ்லாமிய விரோதி, பார்ப்பன அடிவருடி என்று புலம்ப ஆரம்பித்து விடுவார். கதாபாத்திரங்கள் மாறினாலும், அ மார்க்ஸைப் பொறுத்தவரையில் கதை ஒன்று தான்.

கோபால் ராஜாராம்

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்