மலர்மன்னன்
பொது வாழ்வில் ஈடுபட்டுவிட்டால் குடும்பத்தை மறந்துவிட வேண்டியதுதான். இது அனைவருக்கும் பொருந்தும் நிலை. மக்கள் நலனைவிடக் குடும்ப நலன்தான் முக்கியம் என்று கவனமாக இருக்கிற இன்றைய அரசியல்வாதிகள் சிலர் வேண்டுமானால் இதற்கு விதி விலக்காக இருக்கக் கூடும். ஆனால் அவர்களுங்கூடத் தம் மனைவி மக்களின் அன்றாடப் போக்குகளைக் கவனிக்க நேரமின்றி, மேம்போக்காகக் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்பவர்களாகவும், பிள்ளைகளைப் பிற்காலத்தில் தமது வாரிசுகளாக உருவாக்குபவர்களாகவுமே இருக்க முடியும்.
கடந்த நூற்றாண்டில் மாபெரும் மக்கள் தலைவராகத் தமது தடத்தைப் பதித்தவர் காந்திஜி. பல தலைமுறைகள் சார்ந்த இளமைத் துடிப்புள்ள லட்சக் கணக்கானஆண்களும் பெண் களும் வீட்டுக்கு வெளியே வந்து விடுதலைப் போராட்டத்தில் மட்டுமின்றிப் பல பொது நலப் பணிகளிலும் ஈடுபடச் செய்தவர் அவர். அவரது குரலுக்குக் கட்டுப்பட்டுத் தமது கல்வியையையும், தொழிலையும் குடும்ப நலனையும் காற்றில் பறக்கவிட்டுப் பலரும் தெருவுக்கு வந்து, சமூக நலனுக்காகப் பணிசெய்ய வைத்தவர் அவர். பிறரை இவ்வாறு குடும்ப நலனை மறக்கச் செய்த காந்திஜி தாமும் அவ்வாறு ஒரு முன்னுதாரணமாக இருந்திருப்பார்தானே! அதனால் அவர் மனைவி மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்பது பலவாறான ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும்.
இந்தக் கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும் எனத் தூண்டுவதேபோல் வந்துள்ளது, காந்தி, என் தந்தை என்னும் ஹிந்தி, ஆங்கில இரு மொழித் திரைப்படம்.
ஒரு தேசம் தனக்கெனத் தந்தையைப் பெறுவதற்காக ஒரு மகன் தன் தந்தையை இழக்க நேரிட்டது என்கிற உண்மையைத் தெரிவிக்கிற படம், காந்தி, என் தந்தை.
1869 ல் பிறந்த காந்திஜிக்கு 1888ல் அவரது பத்தொன்பதாம் வயதில் பிறந்த மூத்த மகன் ஹரிலால். குடிகாரனாகவும் பாலியல் பெண் தொழிலாளர்களைத் தேடி அலைகிறவனாகவும் சீரழிந்து, பால்வினை நோய்களும் காசமும் பீடித்து ஒரு பிச்சக்காரனாகத் தனது அறுபதாவது வயதில் ஓர் அனாதையைப் போல மும்பை மருத்துவமனை ஒன்றில் மரித்துப்போனவன் ஹரிலால் என்கிற காந்திஜியின் மூத்த மகன்!
காந்திஜி கண் மூடியது 1948 ஜனவரி 30. லட்சோப லட்சம் மக்கள் தம் தந்தையாரே மறைந்து போனது போன்ற துக்கத்தில் ஆழ்ந்து, பெருந்திரளாக வந்து அஞ்சலி செய்து, மாபெரும் ஊர்வலமாகச் சென்று அவருக்குப் பிரியாவிடை கொடுத்தனர். மகன் ஹரிலாலோ, அதே 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள் உயிர்விட்டு, எவர் கவனத்திற்கும் வராமல் அனாதைப் பிணம் போலக் கிடந்தான்.
காந்திஜி அரசியல் தலைவராக மட்டும் விளங்கியவர் அல்ல. மனித வாழ்க்கையின் சகல கூறுகளையும் ஆராய முற்பட்டவர். இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் என்றெல்லாம் தம்மையே ஒரு சோதனைக் கூடமாக அமைத்துக் கொண்டு பரிசோதனைகள் செய்து பார்த்தவர். பிரம்மசரியத்தைத் தம்மால் சரிவரக் கடைப்பிடிக்க முடிகிறதா என்றுகூடச் சோதனை செய்து பார்த்தவர் அவர்! இதற்காக மற்றவர்களின் உள்ளுணர்வு எப்படியிருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாத அளவுக்கு மனித இயல்புகளின் சாத்தியங்களைக் கண்டறிவதில் மித மிஞ்சிய ஆர்வம் உள்ளவராக விளங்கியவர் காந்திஜி.
நமது நாட்டிற்கேற்ற தொழில்கள், பொருளாதாரம், கல்வி முறை என்றெல்லாம் சிந்தித்த காந்திஜி, தம் மகன்களுக்கு ஆங்கிலக் கல்வி முறை தேவையில்லை என முடிவு செய்தார்.
மகன் ஹரிலாலுக்கோ, தந்தையாரைப் போல இங்கிலாந்து சென்று கல்வி பயின்று பாரிஸ்டராக வேண்டும் என்கிற விருப்பம். காந்திஜி அதைப் பொருட் படுத்தவில்லை. இங்கிலாந்து சென்று படிப்பதற்கான உதவித் தொகை யை ஒரு இளைஞருக்குக் கிடைக்கச் செய்யும் அதிகாரம் அவருக்குக் கிட்டியபோதுகூட வேறொருவருக்கு அதனைச் சிபாரிசு செய்கிறார், அவர். மனைவி கஸ்தூர் பாவே மகன் ஹரிக்குச் சாதகமாக வேண்டியும் காந்திஜி மனம் மாறுவதில்லை. இதன் காரணமாகவே படிப்பில் ஆர்வம் குன்றிப் போகிறான், ஹரிலால்.
ஹரிலாலுக்குத் தந்தை மீதான பிணக்கு மேலும் வளர வேறொரு சந்தர்ப்பமும் வருகிறது. குலாப் என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான், ஹரிலால்.
காந்திஜிக்கு அதில் சம்மதமில்லை. எதனால் என்று அவர் காரணமும் சொல்வதில்லை. தம்மைப் போல் ஹரிலாலும் பக்குவப் படாத மிகவும் இளைய வயதில் இல்வாழ்க்கையில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை. மேலும் வாழ்க்கையில் சுயமாகக் காலூன்றுவதற்கு முன் திருமணம் குறித்து அவன் யோசிப்பது சரியல்ல என்றும் அவர் கருதுகிறார். ஹரிலாலுக்கோ மனைவி வீட்டார் மூலமாகவேனும் தனக்கென்று ஒரு நிரந்தரமான வாழ்க்கை அமையுமென்கிற எதிர்பார்ப்பு. தந்தையாரின் விருப்பத்திற்கு மாறாகத் தன் எண்ணப்படியே குலாபை மணந்துகொண்டு, தந்தையாருடனான தென்னாப்ரிக்க வாழ்க்கையை முறித்துக்கொண்டு, குஜராத் திரும்புகிறான் ஹரிலால். ஆமதாபாதில் சிறு வியாபாரம், பிறகு கொல்கத்தாவில் தந்தையாரின் நண்பரது வர்த்தக நிறுவனத்தில் வேலை என்று அவனது இல்லறம் தொடங்குகிறது. சீக்கிரமே இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாகிவிடுகிறான்.
இதற்கிடையில் காந்திஜியும் தாயகம் திரும்பி காங்கிரஸ் மகாசபையை மாபெரும் மக்கள் போராட்ட இயக்கமாக முன்னெடுத்துச் செல்கிறார். தாய் நாட்டின் சுய தொழிலை மீட்டெடுக்க அந்நியத் துணிகளை பகிஷ்கரிக்குமாறு காந்திஜி விடுக்கும் அறைகூவலை நாடே உணர்ச்சிப் பெருக்குடன் ஏற்கிறது. ஆனால் மகன் ஹரிலால் சுயமாக வியாபாரம் செய்ய முற்பட்டு குறைந்த விலைக்குக் கிடைக்கும் அந்நியத் துணிவகைகளை வாங்கிப் போடுகிறான். சீந்துவாரின்றி அவை தேங்கிப் போய்விட, வியாபாரத்தில் பெருத்த நஷ்டமடைகி றான். மனச் சோர்விலிருந்து தப்பிக்க குடிப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். மனைவி குலாப் கணவனோடு வாழ இயலாமல் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மாமனார் காந்திஜி நிறுவிய ஆசிரமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபின் பிறந்தகத்திற்கே போய்விடுகிறாள். அங்கு மன உளைச்ச்சல் மிகுந்து இளம் வயதிலேயே இறந்தும் போகிறாள்.
குடும்ப வாழ்க்கை தரும் கட்டுப்பாட்டையும், பொறுப்புணர்வையும் இழக்கும் ஹரிலால், இளமையின் தூண்டுதல்களால் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களைத் தேடிச் செல்லத் தொடங்குகிறான். வரவு ஏதும் இன்றி வரம்பு மீறிய செலவுகளும் மிகுந்து கடனாளியாகி, பொய் பித்தலாட்டம் என்று ஹரிலாலின் வாழ்க்கையே குற்றங்கள் மலிந்த அவலமாகிப் போகிறது. தன்னுடைய வாழ்க்கை இப்படியாகிப் போனதில் ஹரிலாலுக்கு வருத்தமில்லை. மாறாக ஒருவிதத்தில் குரூரமான மகிழ்ச்சியுங்கூட!
நாடே மகாத்மா என்று கொண்டாடுகிற ஒருவருடைய மகன் இப்படி ஒழுக்கங்கெட்டுச் சீரழிவதன் மூலம் அந்த மகாத்மாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்த முடிகிறது அல்லவா? முறைகெட்ட நடத்தையால் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்கிற போதெல்லாம் நான் காந்திஜியின் மகன் என்று பிரகடனம் செய்து அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்குவதில் ஹரிலாலுக்கு அலாதியான மகிழ்ச்சி. காந்திஜியின் மகன் என்பதாலேயே நடவடிக்கை ஏதுமின்றித் தப்பித்துக் கொள்ளவும் அவனால் முடிகிறது.
ஹரிலால் ஒருவரை முப்பதாயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்ட போது அவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஏமாற்றப்பட்டவரை வலியுறுத்துகிறார், காந்திஜி. ஹரிலால் இனித் தம் மகன் அல்ல, அவனது செயல்கள் தம்மைக் கட்டுப்படுத்தாது என்று காந்திஜி பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிற அளவுக்கு ஹரிலாலின் நடத்தை வீழ்ச்சியடைகிறது.
காந்திஜி ஹிந்து, முகமதியர் என்கிற பாகுபாடு இன்றி ஹிந்துஸ்தானத்து மக்கள் அனைவரின் பிரதிநிதயாக அடையாளம் காணப் பெறுவதை விரும்பாத சில முகமதியப் பிரமுகர்கள் காந்திஜியை சங்கடப்படுத்துவதற்கென்றே அவருடைய மகன் ஹரிலாலைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். ஹரிலாலை முகமதியனாக மதம் மாறச் செய்து ஊர் ஊராக அவனை அழைத்துச் சென்று அவன் மதம் மாறியதை விளம்பரப் படுத்துகிறார்கள்.
ஹரிலால் 1938 ஆம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் தாய் மதம் துறந்து, முகமதியனாக மதம் மாறியிருக்கிறான். நல்ல அறிவு முதிர்ந்த, விவரம் தெரிந்த வயதுதான். ஆனால் அவனது மத மாற்றத்தில் எந்த அளவுக்கு ஆழ்ந்த மன மாற்றம் இருந்திருக்கும்? அதையும் பார்க்கலாம்.
அந்தக் கால கட்டத்தில் வெளி வந்த பத்திரிகைகள் இந்தச் செய்திக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தன. மும்பை ஜும்மா மசூதியில்தான் ஹரிலால் கலிமா ஓதி முகமதியனாக மதம் மாறினானாம். அவன் மதம் மாறி, அப்துல்லா என்று பெயர் சூட்டிக் கொண்டதும் பலர் வரிசையில் நின்று அவனோடு கை குலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார்களாம். அவனும் ஏதோ மகத்தான சாதனையைச் செய்துவிட்ட மாதிரிப் பெருமிதத்துடன் பாராட்டுகளை ஏற்றுக் கொண்டானாம்.
முகமதியப் பிரமுகர்கள் ஹரிலாலை ஐக்கிய மாகாணம் (இன்றைய உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளிட்ட பகுதி ), பம்பாய் மாகாணம் முதலான பகுதிகளில் ஊர் ஊராக அழைத்துச் சென்று பிரதான வீதிகளில் ஊர்வலம் விட்டு காந்திஜியின் மகன் ஹரிலால் முகமதியனாக மதம் மாறிவிட்ட தாக அறிவித்தார்கள். இன்று மகன், நாளை மகன் வழியில் தந்தை என்கிற கோஷம் வழி நெடுகிலும் வானைப் பிளந்ததாம். குதிரைகள் பூட்டிய கோச்சு வண்டியில் கழுத்து நிறைய மலர் மாலைகளுடன் அமர்ந்திருந்த ஹரிலால் மது போதையுடன் புகழ் போதையும் தலைக்கேறக் கையசைத்துச் சென்றானாம்.
லக்னௌ என்று அழைக்கப்படுகிற லட்சுமணபுரியில் ஊர்வலம் சென்றபோது ஹரிலால் போதையின் வீரியம் தாங்காமல் இருக்கையிலிருந்து உருண்டு விழுந்தானாம். பார், பார் காந்திஜியின் மகன் இருக்கிற கோலத்தை என்று தெருவில் நின்றவர்கள் சிரித்தார்களாம். உருண்டு கிடந்த ஹரிலாலைத் தூக்கி மறுபடியும் இருக்கையில் உட்கார வைத்தார்களாம்.
மனம் உடைந்துபோன காந்திஜி, எனது முகமதிய சகோதரர்களுக்கு எனத் தலைப்பிட்டு
ஒரு பகிரங்கக் கடிதம் எழுத நேர்ந்தது.
என் மகன் ஹரிலால் ஒழுக்ககேடான வாழ்க்கை நடத்தி அதன் காரணமாகவே பெருமளவுக்குப் பணத் தட்டுப்பாட்டில் இருப்பவன். பணத்தாசை காட்டி அவனை மதம் மாறச் செய்ய சில முகமதிய, கிறிஸ்தவ அமைப்புகள் முயற்சி செய்துவருவதாக முன்னரே கேள்வியுற்றேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. ஹரிலால் ஆன்மிகம் குறித்தோ மதக் கோட்பாடுகள் குறித்தோ ஏதும் அறியாதவன். எதேனும் ஆதாயம் காரணமாகவே அவன் மதம் மாறியிருக்கக் கூடும். அவன் மும்பை ஜும்மா மசூதியில் மதம் மாறியதும் அவனை ஏதோ பெரிய விஷய ஞானம் உள்ளவன் தங்கள் மதத்தைத் தழுவிவிட்டது போலப் பலர் பாராட்டி வரவேற்றதாக அறிந்தேன் என்று தமது பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிடுகிறார், காந்திஜி.
பின்னர் தாயார் கஸ்தூர் பா வின் மன்றாட்டுக்குச் செவி சாய்த்து ஆரிய சமாஜத்தினரது சுத்தி சடங்கின் வாயிலாகத் தாய் மதம் திரும்புகிறான், ஹரிலால். ஹிந்துஸ்தானத்தில் மத மாற்றங்கள் பெரும்பாலும் ஆன்மிகத் தூண்டுதல் எதுவும் இன்றி இப்படித்தான் கேலிக் கூத்தாக நடைபெற்று வருகின்றன என்பதற்கு ஹரிலாலின் இந்த மத மாற்றம் ஒரு சாட்சியமாக விளங்குகிறது.
ஹரிலாலின் கண்ணோட்டத்தில் காந்திஜியின் மறுபக்கத்தைக் காட்டும் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் குஜராத்தி நவ நாடக இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வரும் பெரோஸ் அப்பாஸ் கான். திரைக்கதையையும் அவரேதான் அமைத்திருக்கிறார். படத்தில்
காந்திஜியின் பாத்திரத்தை வகிப்பவரும் குஜராத்தி நாடகத்தில் அனுபவம் மிக்கவர்தான். பெயர் தர்ஷன் ஜாரிவாலா. கஸ்தூர் பாவாக வருபவரும் ஷிபாலி ஷா என்கிற தேர்ந்த நாடக நடிகர்தான். ஹரிலாலின் பாத்திரத்தை ஏற்றிருப்பவர் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் அட்சய் கன்னா. மூவருமே பாத்திரங்களின் இயல்பை நன்கு புரிந்துகொண்டு தாம் ஏற்றுள்ள பாத்திரங்கள் வெகு சமீப காலத்தில் நிஜமாக நடமாடியவர்கள்தாம் என்கிற பிரக்ஞையுடன் நடித்திருக்கிறார்கள். அதிலும் தர்ஷன் ஜாரிவாலா தமது பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, காந்திய சித்தாந்தங்களை ஆழ்ந்து படித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் காந்திஜி எவ்வாறு தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார் என்று தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்து காந்திஜியை உருவகப் படுத்தியிருக்கிறார்.
பொழுதுபோக்குத் திரைப்படங்களில் கதா நாயக வேடம் தரித்து நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற அனில் கபூர்தான் திரைப்படத்தின் தயாரிப்பாளர். கலையினூடாக ஒரு சமூக சேவை செய்யும் கடமையுணர்வுடன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார், அனில் கபூர். திரைப்படத் துறையில் வளமாக இருக்கும் மற்றவர்களும் அவரை முன்மாதிரியாகக் கொண்டால் எதிர் காலத்தில் லாப நோக்கமற்ற தரம் வாய்ந்த திரைப் படங்களை அதிக அளவில் காணும் வாய்ப்புக் கிட்டும்.
ஹரிலால் தொடக்க காலத்தில் தன் தந்தையாரிடம் எவ்வளவு பாசத்தோடும் மரியாதையோடும் இருந்திருக்கிறான் என்பதையும் அந்தப் பாசமும் மரியாதையும் எப்படிப் படிப் படியாக வெறுப்பாகவும் துவேஷமாகவும் மாறுகின்றன என்பதையும் நுட்பமாக உணர்த்தும் காட்சிகள் பலவற்றை அமைத்திருக்கிறார், பெரோஸ் அப்பாஸ். தென்னாப்பிரிக்காவும் , ஹிந்துஸ்தானத்தில் ஆமதாபாத், கொல்கத்தா, தில்லி எனப் பல நகரங்களும் அழகான ஓவியங்களைப் போலப் படத்தில் பதிவாகியிருக்கின்றன.
ஹரிலால் சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ஒற்றை வாடைத் தெருவிலும் குடிபோதையில் புரண்டு கிடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். சென்னையிலும் அவன் சில நாட்கள் இருந்திருக்கிறான். அந்த நாட்களும் பதிவுபெறத் தக்கவையே. சென்னை சவுக்கார்பேட்டையில் அவன் சிலரது பரிவின் காரணமாகக் காலங் கழித்ததாகச் சொல்வார்கள். பிறகு அவனது நடத்தையின் அவலம் தாங்காமல் விலகிக் கொண்டார்களாம்.
ஹரிலாலின் பிற்கால வாழ்க்கை முழுவதும் ஒரு பிச்சைக்காரனுக்குரிய வாழ்க்கைதான். தந்தைதான் திரஸ்கரித்து விட்டார். சகோதரர்களாவது அவன் விஷயத்தில் சிறிது அக்கரை எடுத்திருக்கலாம். ஏன் அது நிகழவில்லை?
ஹரிலால் ஒரேயடியாகத் தன் தந்தையிடமிருந்து அந்நியப்பட்டுப் போகும் அளவுக்கு காந்திஜி அப்படி என்னதான் செய்துவிட்டார் என்பதை இயக்குநர் இன்னும் ஆராய்ந்து திரைக் கதையினை அமைத்திருக்கலாம். ஏனெனில் காந்திஜியின் மற்ற புதல்வர்கள் தந்தையாரின் மனம் கோணாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஹரிலாலுக்குத் தன் சகோதர்ரகளுடனான உறவு எவ்வாறாக இருந்தது என்பதைச் சித்திரிக்கவும் திரைக்கதை அமைத்த இயக்குநர் தவறிவிட்டார். இதில் அவர் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் தெளிவு கிடைதிருக்கும்.
திரைப்படம் வெகு விரைவாக ஓடி, திடீரென முடிவதில் தேவையற்ற ஓர் அவசரம் தெரிகிறது. காந்தி, என் தந்தை கற்பனைக்கு இடமில்லாத ஓர் உண்மையான வரலாற்றின் பதிவு. ஆகையால் அது ஓர் ஆவணப்படமாகத்தான் அமையமுடியும். எனினும் சுவாரசியமான கதைப்படம் போல அதனை அமைப்பதில் பெரோஸ் பெரிதும் முயற்சி செய்திருப்பது புலப்படுகிறது.
காந்திஜியின் பொது வாழ்க்கையைப் பலரும் ஒரு திறந்த புத்தகம் போலப் புரட்டிப் புரட்டிப் படித்துப் பலவாறாக விமர்சிக்கத் தவறுவதில்லை. ஆனால் ஹரிலால் என்கிற மகனின் நிமித்தமாக அவர் எவ்வளவு தூரம் மனதில் சுமையைத் தாங்கிக் கொண்டு தமது உணர்வுகளை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் பொது விவகாரங்களில் தீவிரமாக இயங்கி வந்துள்ளார் என்பது படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வருகையில் கனமாக உறைக்கிறது.
malarmannan79@rediffmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- வாசிப்பின் எல்லைகள்
- அக்காவின் சங்கீத சிட்சை
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- கடிதம்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- பொதுவாய் சில கேள்விகள்
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- பெண்கள்
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- போதி
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- மௌனம்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- அழகிய சிங்கரின் கவிதைகள்