தெளிந்த மனம்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

சுஜாதா சோமசுந்தரம்


ஒரு வாரமாக இப்படித்தான்.எதுவுமே பிடிபடாமல் விட்டத்தை வெறித்தபடி மல்லாந்து படுப்பதும், எழுந்து உட்கார்வதும்,நேரத்திற்கு சாப்பிடுவதும் தூங்குவதுமாக பொழுது போய்க் கொண்டிருந்தது சண்முகத்திற்கு.வீட்டிற்கு விவரம் தெரியாமல் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது.எத்தனை நாளைக்கு மனைவியிடமும் குழந்தைகளிடமும் மறைக்க முடியும் ? நாடகம் ஆட முடியும் ?

கலிமந்தானில் பத்தி எரியத் தொடங்கிய தீ இந்தோனேசியா ரூபியா நாணயத்தை சரிய விட்டதோடு அல்லாமல் மற்ற ஆசிய நாடுகளையும் ஒரு கலக்கு கலக்க ஆரமபித்துவிட்டது.இதனால் பொருளியல் மந்தம். பொருளியல் மந்தத்தால் ஆட்குறைப்பு.

சண்முகத்திற்கு மனதிற்குள் சிங்கப்பூர் நிலவரம் நன்றாகவே புரிந்தது.உற்பத்தி திறனையும்,உலக வர்த்தகத்தையும் முழுமையாக நம்பியிருக்கும் நாடு.அப்படி இருக்கும் போது இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்கள் இறக்குமதியாகும் அண்டை அயல் நாடுகளும் பொருளியல் சிரமத்தில் சிக்கி தவிக்கையில் ஆட்குறைப்பு அவசியமானதாக இருந்தாலும் தொழிலாளர் பாடு திண்டாட்டம்.

அப்படித்தான் சண்முகத்திற்கும் வேலை போனது.ஒன்றுமே புரியாத மனக் குழப்பத்தில் இருந்தார்.உயர்நிலை சான்றிதல்கூட இல்லாத நிலையில் தினமும் செய்திதாளைப் புரட்டி பார்த்து கண்களும் களைத்துவிட்டன.

தகுதிக்கு மீறி வாங்கிய கடன் பாறாங்கல்லாய் அழுத்தியது.வீடு வேறு புதிதாக வாங்கி சில மாதங்களே ஆகி இருந்தது.மகன் பேச்சிலர் டிகிரி முடித்திருந்தாலும் மேலே படிக்க போவதாக சொல்கிறான்.நான் தான் படிக்காமல் இளமைக் காலத்தை வீணாக்கி விட்டேன்.பையனாவது பெரிய படிப்பு படித்து முன்னுக்கு வரட்டும் என்று நினைத்த சண்முகம் தடையேதும் சொல்லவில்லை.

சின்னவள் உயர்நிலை மூன்றில் படிக்கிறாள்.அப்பா வயதானவர். ஆனாலும் தன் கையை நம்பி வாழும் மனிதர்.மனைவியோ வரவுக்கு மீறி செலவு செய்யும் ரகம்.தன் பர்ஸ் நிறைய பணம் இருப்பதாக தோழிகளிடம் பெருமை அடித்துக்கொள்ள விரும்பும் வர்க்கம்.

குடும்பம் அளவானது.ஆனால் தேவைகள் அதிகம்.வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு விட்டிருந்தாலும் மனைவியின் அறுநூறு வெள்ளி வருமானத்தில் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும் ?

மாடாய் உழைத்து ஓவர் டைம் செய்து பை நிறைய பணத்தோடு வரும்போதே சரியாக மதிக்காத மனைவி படுத்தே கிடந்தால் என்ன செய்வார் என்று சொல்லவே வேண்டாம்.தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்கும் வரை மனைவியை அண்டி வாழ்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை சண்முகத்திற்கு.

சுறுசுறுப்புடன் எழுந்து உடைகளை மாற்றிக்கொண்டு சவரம் செய்யாத முகத்துடன் அறையை விட்டு வெளியே வந்த சண்முகம் கேட்டை திறந்த தந்தையைப் பார்த்ததும் ஆமை போல மீண்டும் தன் அறைக்குள் சுருங்கி கொண்டார்.

கிழம் வேலைக்கு போயிட்டு வருது.வாலிபம் கால் மேல் கால் போட்டு படம் பார்க்குது.எல்லாம் நேரம் என்று முணு முணுத்தபடி உள்ளே நுழைந்தார் ராமபத்ரன்.

ஏண்டா ஜீவா …உங்கப்பன் வேலைக்கு போகலையா ?

இல்ல தாத்தா..மெடிக்கல் லீவாம் ..தொலைக்காட்சியிலிருந்து கண்களை அகற்றாமல் பதில் சொன்னான் பேரன்.

படிச்சே..பட்டம் வாங்கினே..வாங்கின பட்டத்தை வைச்சு நாக்கு வழிக்கப்போறியா ?உருப்படற வழியை விட்டுட்டு இந்த கண்றாவியெல்லாம் ரசிக்கத்தான் வீட்ல உக்காந்திருக்கியா ?

என்ன தாத்தா நாட்டு நிலவரம் புரியாம பேசறீங்க…அனுபவம் உள்ள ஆளுங்களையே கழற்றி விட்டுட்டு இருக்காங்க…நான் இப்பதான் யுனிவர்சிடியில இருந்து வெளியே வந்து மாஸ்டர்ஸ் படிக்க கனடா போகப் போறேன். இப்ப போய் வேலைக்கு போன்னா என்ன அர்த்தம் ?

டேய்..விட்ல உட்கார்ந்திருக்கற நேரம் ஏதாவது பார்ட் டைம் வேலை பார்க்கலாம் இல்ல.. ?

தாத்தா..பாடின பல்லவியையே திரும்ப திரும்ப பாடாதீங்க..அலுத்துக்கொண்டான் பேரன்.

ஏண்டா..சாதிக்கிறவங்க ஒவ்வொருவருடைய வாழ்க்கையைப் பத்தியும் உலக ஏட்டில் எதுக்கு பதிக்கிறாங்க தெரியுமா ? உன்னை மாதிரி படிச்ச இளைஞர்களோட மூளைக்கு வேலை கொடுக்கத்தான்.புகழ் பாடுறதுக்கு இல்ல.மேலை நாட்டு நாகரிகத்தால வேண்டாததெல்லாம் கத்துக்கறீங்க.

என்ன என்பது போல முறைத்தான் பேரன்.

முடியை கன்னாபின்னான்னு வெட்டிட்டு ஆடையை அலங்கோலமா பைத்தியக்காரன் மாதிரி கிழிச்சிக்கிறீங்க..

அதுக்கு பேர் பேஸன் தாத்தா.நவீன உலகத்துல நாலு பேர் மாதிரி நாமும் இருக்க வேண்டாமா ?

எதுடா நாகரிகம் ?நாலு சுவத்துக்குள்ள ஆணும் பெண்ணும் அனுபவித்து கொடுக்க வேண்டிய முத்தத்தை நாலு பேர் முன்னால் வெளிச்சம் போட்டு தர்றதுக்கு பேர்தான் நாகரிகமா ?பொது இடத்தில் சுத்தி இருக்கிறவங்க பார்க்க கட்டிப் பிடித்து கொஞ்சுறதுக்கு பேர்தான் நாகரிகமா ? உடம்பை கெளரவமா மறைக்க உடை உடுத்துறது போய் எதிர்ல இருக்கிறவங்க கண்ணுக்கு விருந்து தர மாதிரி அரைகுறையா உடம்பெல்லாம் தெரிய உடுத்தறதுதான் நாகரிகமா ? கன்னி என்ற பட்டத்தில் இருந்து திருமதி ஆகாம தாய்மை பதவி அடையிறதுதான் நாகரிகமா… ? ரொம்ப நாள் குமுறலை கொட்டித்தீர்த்தார் தாத்தா.மேலும் தொடர்வதற்குள் போன் வந்தது.தாத்தா எடுத்தார்.பேரனுக்குத்தான் கொடுத்தார்.

பதினைந்து நிமிடம் போனில் இனிக்க இனிக்க ஆங்கிலத்தில் தூக்கலான உச்சரிப்பு போட்டு ஏற்ற இறக்கத்துடன் அவள் அருகில் இருந்து பேசுவவனைப்போல் முகபாவங்களுடன் பேசினான்.

ஏன் தாத்தா..45 வருடமா சிங்கப்பூர்ல இருக்கீங்க..ஹோல்டான் சொல்லத் தெரியாது.இருங்கன்னா மொழி தெரியாதவங்களுக்கு என்ன புரியும் ?இனிமே போனை எடுத்து என் மானத்தை வாங்காதீங்க…என்று பொரிந்தான்.

தொலைக்காட்சியை பிரைம் 12க்கு மாற்றிவிட்டு தன் அறைக்குள் புயல் வேகத்தில் நுழைந்தான். ஐந்தே நிமிடத்தில் சென்ட் மணக்க வெளியே வந்தான்.பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுனேகா புத்தகப் பையை ஹாலிலேயே போட்டுவிட்டு முகம் அலம்பாமல் வியர்வை நாற்றம் வீடு முழுவதும் வீச சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கலானாள்.

ஏம்மா இவ்வளவு லேட் ?என்று கேட்ட தாத்தாவிடம் சற்று எரிச்சலாக, கூட்டாளி வீட்டுக்கு போய் ப்ராஷக்ட் பண்ணிட்டு வர்றேன்.காலையில அம்மாகிட்ட சொல்லிட்டுதானே போனேன்.அப்பாகிட்ட கம்பியூட்டர் வாங்கித் தரச்சொல்லி எனக்கு வாய் வலிச்சதுதான் மிச்சம் என்று அலுத்துக்கொண்டாள்.

எல்லாவற்றையும் தன் அறையினுள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் இனியும் தாங்க முடியாது என்பது போல தன் அறையை விட்டு வெளியே வந்தார்.

அடுத்த மாதம் வரை பொறுத்துக்கம்மா.கட்டாயம் கணினி வாங்கித்தர்றேன் என்று பாசத்துடன் தன் மகளின் கூந்தலைத் தடவினார் சண்முகம்.

வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் மனைவியின் சந்தோசமான முகத்தை பார்த்ததும் அவருக்கு பகீரென்றது.

ஏதோ பெரிய திட்டத்தை போட்டு வந்து இக்கட்டான நிலையில் கழுத்தை அறுக்க போகிறாளோ.. ? அவள் பட்டியல் போடுவதற்கு முன்பே வேலை போனதை சொல்லி விடலாமா என்று நினைத்தார் சண்முகம்.

என்னம்மா..இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இறுக்கே போலிருக்கே ?தாத்தா கலக்கி தந்த காபியை உறிஞ்சியபடி கேட்டாள் சுனேகா.

ஆமாம்மா..இன்னைக்கு நான் மன நிறைவோடு ஒரு காரியத்தைச் செஞ்சிட்டு வந்திருக்கேன்.புதுப்பெண்ணைப் போல நாணத்துடன் சொன்னாள்.

25 வருட இல்லற வாழ்க்கையில் பேசிப் பேசிப் பழகிய பார்வை மொழியிலேயே என்னது என்று பொருள்படும்படி நிமிர்ந்து பார்த்தார் சண்முகம்.

என் தோழி லட்சுமிக்கும் அவ புருசனுக்கும் சேர்ந்தே வேலை போயிடிச்சி.பொடிப்பொடியா நாலு பசங்க.என்கிட்ட சொல்லி மனம் கஸ்டப்பட்டு அழுதா..என்னமோ போல ஆயிட்டு.அதனால என் வேலையை அவளுக்கு நானே விட்டுக் கொடுத்துட்டேன்.

அம்மான்னா அம்மாதான்.இன்னிக்குதான் உங்க மகளா பிறந்ததுக்கு ரொம்ப பெருமைப் பட்றேன்.நமக்காவது அப்பா இருக்காரு…லட்சுமி ஆன்டிக்கு புருசன் இருந்தும் பலனில்லை..என்று மகள் அம்மாவை பாராட்டிக்கொண்டிருந்தாள்.

சண்முகம் பாராட்டுகிற நிலையிலா இருந்தார் ? ஒரு பக்கம் தன் மனைவியின் பெருந்தன்மையை நினைத்து பெருமையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இறைவன் கஸ்டத்தை முழுவதும் தன்னிடம் கொடுத்து சோதிக்கிறானே என்று வேதனையாக இருந்தது.

தன்மீது மனைவியும் மக்களும் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் போது வேலை போனதை சொல்ல முடியுமா ?நினைக்கவே கஸ்டமாக இருந்தது.

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமானால் நண்பன் சொன்னதே சரியென்று தோன்றியது.காலையில் சேகர் தன்னிடம் அரை மணி நேரமாகப் பேசியதன் சாராம்சம் உறைத்தது.

சண்முகம்..இங்கே வேலை இல்லன்னு சொன்னா நம்ப மாட்டேன்.வயித்து பிழைப்புக்கு வழியப் பார்க்காம படுத்தே கிடந்தா எந்த பலனும் இல்ல. இன்னிக்கு நாடு இருக்கிற நிலைமையில கெளரவம்பார்க்காம் கிடைக்கிற வேலையை செய்யிற தொழிலை தெய்வமா நினைச்சி செய். பொருளாதார சரிவிலிருந்து மீண்டப்பறம் நம்ம இஸ்டப்படி வேலை தேடிக்கலாம்.

நண்பனின் வார்த்தைகள் மீண்டும் அசரீரிபோல் மனதில் ஒலித்தது. சண்முகத்தின் குழம்பிய மனம் தெளிந்தது.

முற்றும்.

சுஜாதா சோமசுந்தரம்.

13-10-1998 (சிங்கை எக்ஸ்பிரஸ்)

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்