து ை ண 9 – (இறுதிப் பகுதி)

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

ம.ந.ராமசாமி


ஞாயிற்றுக்கிழமை. சுமார் பத்து மணிக்கு ராமகிருஷ்ணன் வந்தான். அவனிடம் ஒரு பத்திரிகையைத் தந்து விட்டு நான் சாலட்டுக்குக் காய் நறுக்க சமையல் அறைக்குள் புகுந்தேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சண்பகத்துக்கு நான் உதவுவது உண்டு. சாதாரணமாக அவள் என் உதவியை உபத்திரவம் என்றுதான் சொல்வாள்.

பத்தரை மணிக்கு அந்தப் பெண் வந்தாள். பெயர் ஜானகி. ராமகிருஷ்ணன் அமர்ந்திருப்பதைக் கண்டும் காணாததுமாக வீட்டினுள் வந்தாள். வந்தவள் சண்பகத்தின் முந்தானையுள் சமையலறையில் முடங்கிக் கொண்டாள்.

ராமகிருஷ்ணன் அவளைக் கண்டதும் திடுக்கிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் சமையல் அறையில் இருந்து வந்த என்னை நிமிர்ந்து நோக்கினான். பார்வையில் கேள்வியின் கொக்கி இருந்தது.

‘விருந்துன்னா உனக்கு மட்டுமா ? உன்னோட வருங்கால மனைவிக்கும் சேர்த்துத்தான்! ‘

‘நான்தான் சொல்லியிருந்தேனே… ‘ பேச முடியாமல் அவனிடம் ஒரு தத்தளிப்பு. என்னென்னவோ உணர்ச்சிகள் அவனில் அலைபோல் மோதினாப் போலிருந்தது!

‘அவசரப்படாதே. நீவேணா அப்பிடித் தீர்மானம் பண்ணிடலாம். நாங்க எல்லாரும்- உன் தாய் தகப்பனார், ஜானகியின் பெற்றோர், ஜானகி எல்லாரும் ஒத்துக்க வேணாமா ?…

உன் மனசை மாத்தணும்னு நான் பார்க்கறேன். அதையும் மீறி விடாப்பிடியா நீ இருந்தியானா நாங்க என்ன செய்ய முடியும் ? ‘

‘அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு சண்பகம் எங்கள் படுக்கையறைக்குச் சென்றாள். அவளை விட்டுவிட்டு வெளியே வந்தாள். ராமகிருஷ்ணன் பத்திரிகையில் கவனம் செலுத்துவதாய் பாவனை செய்து கொண்டிருந்தான். கொஞ்சம் படிப்பு ஆர்வமும் வந்திருக்கலாம் இப்போது…

‘ராமகிருஷ்ணன், இப்டி வாங்க ‘ என்றேன். படுக்கையறையுள் நுழைந்து நிலையின் அருகில் நின்றேன்.

ராமகிருஷ்ணன் அறையுள் நுழைந்தான். நான் வெளியே வந்து சட்டென்று கதவைத் தாளிட்டேன்.

—-

இந்த எனது செய்கை சற்று கீழ்த்தரமானதாகப் பட்டது. இருந்ததில் சுமாரானது படுக்கையறைதான். அடுத்தது ஸ்டோர் ரூம். அருகே சமையல் அறை. மாடியில் ஓர் அறை இருக்கிறது. அங்கும் கட்டில் நாற்காலிகள்இருக்கின்றன.

ராமகிருஷ்ணனையும் ஜானகியையும் கல்யாணத்துக்கு முன்பே சேர்த்து வைத்துவிட வேண்டும். கட்டிலும் படுக்கையும் உதவும் என்பது என் நோக்கம் அல்ல.

அப்படியொரு செயலில் அவர்கள் ஈடுபட்டு விடுவார்கள் என்று நான் கருதவில்லை. படித்தவர்கள். விவரம் அறிந்தவர்கள். அந்த நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரே அறையில், தனிமையில் பேசி ஒரு முடிவுக்கு வர அனுப்பி யிருக்கிறேன்.

கட்டில் படுக்கை என்பவை சம்பந்தப் படாதவையே!

காம விகாரம் என அவர்களுக்குள் எழுமாகில் அதற்கு கட்டிலும் படுக்கையும் அவசியம் என்பது இல்லை!

சண்பகம் விவரமாக ஜானகியிடம் சொல்லி இருக்கிறாள். திருமணம் வேண்டாம் என்ற எண்ணத்தில் ராமகிருஷ்ணன் இருப்பதாகச் சொல்லி வைத்திருக்கிறாள். அவனுடைய மனதை மாற்ற வேண்டிய பொறுப்பு ஜானகிக்கு இருப்பதாக வலியுறுத்தி யிருக்கிறாள்.

‘மனசா, வாசா, கர்மணா… என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது. கண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள். அவசியமானால் கொட்டிவிடு! ‘ என்று சொல்லி அனுப்பி யிருக்கிறாள்.

இந்த விவரங்களை ராமகிருஷ்ணனிடம் நான் தெரிவிக்கவில்லை. அவன் மறுக்கலாம். அவன் மறுத்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. விருந்தில் கலந்து கொள்ளாமல் அவன் வெளியேறி விடலாம். அதனால்தான் நான் இப்படியொரு உபாயத்தில் ஈடுபட வேண்டியதாய் இருந்தது.

பிராயச்சித்தம்!

உள்ளே என்ன களேபரம் தெரியாது! என் கற்பனைக்கும் அப்பாற் பட்டதாய் இருந்தது உள்நிகழ்ச்சிகள்!

சுமார் ஒரு மணி நேரத்தில் அவர்கள் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்தோம். ஒரு மணிக்கு மேலாயிற்று. அறைக் கதவு திறக்கப் படவில்லை. சாப்பாடு தயார்.

சண்பகம் என் அருகில் நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். காத்திருந்தோம். இத்திட்டம் முழுமையாக வெற்றியடையும் என்பது அவளது நம்பிக்கை. கெட்டிக்காரிதான்.

மணி பன்னிரண்டு அளவில் அறைக்கதவு திறக்கப் பட்டது!

ஜானகி வெளியே வந்தாள். பின்னால் ராமகிருஷ்ணன் வந்தான்!

இந்த ஒரு அறிகுறி போதும் எங்களுக்கு. முடிவு என்ன என்பதைப் புரிந்து கொண்டோம். சண்பகம் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

இருவரும் எங்களை நோக்கி நின்றனர். ‘நமஸ்காரம் பண்ணலாமா ? ‘ என்று ஜானகி ராமகிருஷ்ணனிடம் கேட்டாள்!

‘பண்ணலாமே! ‘ என்றான் அவன். பூம்பூம் மாடு!

ஜானகி தடுத்தாள். ‘இப்ப வேணாம். சாப்பிட்டுட்டு ஆத்துக்குப் போகும்போது பாத்துக்கலாம் ‘ என்றாள்.

விருந்து உபசாரத்துக்குக் குறைவு இல்லை. பாயசத்தை ஒரு கை பார்த்தான். நாக்கு செத்த மனுஷன்! சாப்பாடு ஆகி சிறிது பொதுப்படையாய்ப் பேசினோம். வெற்றிலை பாக்கு ஜோர் வேறு.

கிளம்பும்போது நமஸ்காரம் பண்ணினார்கள். சண்பகம் பட்டு ஜரிகை போட்ட ஒன்பது கஜம் கூரைப்புடவையைத் தட்டில் வைத்துத் தந்தாள்.

‘என்ன மாமி! ‘ என்று வியப்புடன் வாங்கிக் கொண்டாள் ஜானகி.

‘இதைக் கட்டிண்டுதான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்! ‘ என்றாள் சண்பகம்.

‘எனக்கு ? ‘ என்றான் ராமகிருஷ்ணன்

‘உனக்குப் புடவை கிடையாது ‘ என்றேன். ‘உனக்கு ஜானகி! ‘


ma na ramasamy

31 srichakra nagar chellamnagar ext kumbakonam 612001

india cell 094432 90030 & 094431 16324

e mailing _ fwd to

storysankar@rediffmail.com – attn m n ramasam

Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி