துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

ராமசந்திரன் உஷா


செல்விக்கு உடலும் உள்ளமும் பரபரத்தது.முதலில் கணவன்ராஜேந்திரனுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாள்..ராஜூ என்று செல்லமாய் அவளால் அழைக்கப்படும் அவள்கணவனுக்கு அதை கேட்டவுடன், இன்று இவள் இருக்கும் ஜோரில் சமையல் செய்ய போவது இல்லை என்பது மட்டும் புலனானது.

நிதானமாய், ‘மதிய சாப்பாடு எங்கிருந்து கொண்டு வரட்டும் ?சரவணபவனா இல்லை புதுசாய் மீனாட்சிபவன் என்று ஒன்று ஆரம்பித்திருக்காங்க,அங்க டிரை பண்ணலாமா ? ‘ என்று கேட்டான்.

ஒரு நிமிட மவுனத்துக்கு பிறகு,செல்வி மீனாட்சிபவன் என்று சொல்லி போனை வைத்தாள்.பிறகு ஒவ்வொரு நண்பிகளுக்கும் போன் செய்து பிரபல எழுத்தாளினி திருமதி மீனாநவநீதகிருஷ்ணன் தன் வீட்டிற்கு வரும் மகத்தான செய்தியை சொல்லத் தொடங்கினாள்.ஆனால் பெரியதாய் யாரும் இந்த விஷயத்தில் சுவாரசியம் காட்டவில்லை.

சே!கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று தன்னையே சமாதானபடுத்திக் கொண்டாள்.

செல்விக்கு கல்யாணமாகி ஐந்து வருடமாகிறது.கணவனுக்கு துபாயில் ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பனியில் வேலை.ஆனால் இன்னும் குழந்தை இல்லை.செளகரியமான வாழ்க்கை,ஆனால் பொழுது போகவில்லை என்று புலம்ப ஆரம்பித்தவள், கம்யூட்டரில் மேய ஆரம்பித்தாள்.தமிழ் இணைய தளங்கள் கண்ணில் பட்டாலும் தமிழ்எழுத்துக்கள் தஞ்சாவூர் கல்வெட்டாய் தெரிந்தன.

பார்த்த தமிழர்களிடமெல்லாம் இதைபற்றி கேட்டாள்.கம்யூட்டரில் தமிழா என்று ஆச்சரிய அலட்சியமாய் பார்த்தனர்.எப்படியோ தமிழ் மென்பொருள் பற்றி தெரிந்து கொண்டவள் விதவிதமான தமிழ் பக்கங்களை படிக்க ஆரம்பித்தவள் கண்ணில், தமிழ்குழுக்கள் பட்டது.அதிலும் அவள் போற்றி வழிப்படும் எழுத்தாளினி திருமதிமீனாநவநீதகிருஷ்ணனின்

தனிப்பட்ட குழுவில் உறுப்பினர் ஆனது தன் வாழ்வில் பெறற்கரிய பேறாய் கருதினாள்.

எழுத்தாளினியும் இப்போது கதைகள் எழுதுவது நின்று போய்,ஒரு பத்திரிக்கையில் பெண்களுக்கான அட்வைஸ் தொடரும்,இன்னொரு பத்திரிக்கையில் வாசகர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கேள்வி,பதிலும் எழுதிக்கொண்டு இருந்தாள்.

கிட்டதட்ட ஒரேமாதத்தில் எழுத்தாளிமீனாவும்,செல்வியும் உ.பி.சா ஆனார்கள்.தினமும் காலை ராஜூ ஆபிசுக்கு புறப்பட்டு போனவுடன் கம்யூட்டர் முன்பு அமர்ந்துவிடுவாள்.தினமும் மெயிலும்,சாட்டுமாய் அவளுக்கும் பொழுது போனது.ராஜூவுக்கு முதல் மாதம் இண்டர்னெட் பில்லை பார்த்து தலைசுற்றியது.பிறகு ஏதோ நம்மை பிடுங்காமல் இருக்கிறாளே என்று பேசாமல் இருந்துவிட்டான்.

இப்படி இருக்க, இரண்டு மாதங்களில் துபாயில் இருக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஒன்பது தமிழ் சங்கங்களில் ஒன்றின் அழைப்பின் பேரில் எழுத்தாளினி துபாய் வருகிறாள் என்ற செய்தி தாங்கிய மெயிலை பார்த்த செல்விக்கு உள்ளம் பூரித்தது.அவளை தன் வீட்டுக்கு அழைத்து உபசரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

ராஜூவும் வேறு வழி இல்லாமல் தலையை ஆட்டினான்.தன் வீட்டுக்கு வந்து தங்க வேண்டும் என்ற கோரிக்கையை

அவளுக்கு அனுப்பினாள்.அவளும் வருவதாக ஒத்துக்கொண்டாள்.

வீட்டில் புது ஏ.சி பொறுத்தப்பட்டது.மெத்தை,டவல்கள்,பெட்ஷீட்டுகள் புதியது வந்தன.கைக்கு புதியதாய் நான்கு வளையல்களும்,ஆறு டிசைனர் சேலைகளும் வாங்கிக்கொண்டாள் செல்வி.எழுத்தாளியுடன் படம் பிடித்துக்கொள்ள வீடியோ கேமிரா கேட்டதற்கு மாத்திரம் ராஜூ மறுத்துவிட்டான்.சரி யாரிடமாவது கேட்டு இரவல் வாங்கி கொள்ளலாம் என்று இருந்து விட்டாள் செல்வி.

எழுத்தாளி மீனாநவநீதன் அன்பு மகளே என்று விளித்து மடல்கள் அனுப்பினாள். இருவருக்கும் நெருக்கம் கூடி, தன் சொந்தபிரச்சனைகளை எல்லாம் செல்வி அவளிடம் யோசனை கேட்க ஆரம்பித்தாள்.

எழுத்தாளியும் ஒருநாள்துபாய் வந்தாள்.சங்க ஆண்டு விழாவில் முன்னாள் கனவு கன்னி இன்னாள் டாவி புகழ் நடிகையையும் அழைத்து இருந்தார்கள்.ஆனால் உபசரிப்பில் நடிகைக்கு கொடுக்கும் முதலிடம் தனக்கு கிடைக்கவில்லை என்று செல்வியிடம் ஆதங்கப்பட்டாள் எழுத்தாளினி.

விழாவில் சிறு பிள்ளைகள் ஓ போடு,பருவாயில்லை பாட்டுகள் பாடி ஆடினர்.இளைஞர்கள் நடிகையிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.

நடிகையும் தன் குடும்பம்,பிள்ளைகள்,கணவன் என்று பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.இப்படி துபாயில் தமிழர்கள் தமிழைவளர்த்துக்கொண்டு இருந்தப்பொழுது,எழுத்தாளினி முன்பே கேட்டுக்கொண்டப்படி விழா நினைவு பரிசாய் தங்கசங்கிலியை பெற்றுக்கொண்டு செல்வியுடன் கிளம்பினாள்.

இரண்டு நாட்கள் விருந்தோம்பல் நடைப்பெற்றது.எல்லா இடங்களும் சுற்றி காட்டினாள் செல்வி.கிளம்பும் போது துபாய் பார்த்தாஸ்ஸில் வாங்கிய பட்டு புடவையும் அஜ்மால் பெர்பியூமும் அன்பளிப்பாக கொடுத்தாள் செல்வி.தான் பெறாத மகள் என்று உச்சிமுகர்ந்தாள் மீனா மேடம் என்று செல்வியால் அழைக்கப்பட்ட எழுத்தாளினி.செல்வியும் தனக்கு பெற்றோர் இல்லாத குறை நீங்கியது என்று புளங்கித பட்டாள்.சென்னைக்கு வந்தால் தன்வீட்டுக்கு வர வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டாள் மீனாமேடம்.

சென்னை திரும்பிய எழுத்தாளினி துபாய் பயணக்கதையை புத்தகமாய் போட்டு விட்டாள்.செல்வியை பற்றி அதில் குறிப்பிட்டுள்ளேன் என்று அவள் அனுப்பிய செய்தியை படித்து, அந்த புத்தகத்தை ஐந்து மடங்கு செலவழித்து ஏர்மெயிலில் வரவழைத்தாள் செல்வி.

அதில்தனக்கு நிறைய விசிறிகள் துபாயில் இருப்பதாகவும்,சில விசிறிகள் காட்டிய அன்பு தன்னை திக்குமுக்காட செய்துவிட்டதுஎன்றும்,சிலர் எவ்வளவோ வேண்டாம் என்று மறுத்தும் பட்டு புடவை,தங்க ஆபரணங்கள் முதலான விலையுயர்ந்த பொருள்களை அன்பளிப்பாக தந்தார்கள் என்றும் இது தமிழுக்கு கிடைத்த மரியாதை என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட பட்டிருந்தது.தான் ஏமாந்ததை ராஜூவிடம் சொன்னால் கேலி செய்வான் என்று அவனிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாள்.

ஒரு வருடத்தில் அவர்கள் நெருக்கம் இன்னும் அதிகமான தருணத்தில் செல்விக்கு குழந்தை வேண்டி ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

துபாயில் மிகவும் செலவாகும் என்பதால் சென்னைக்கு செல்ல ஏற்பாடு ஆனது.சென்னையில் ராஜூவின் அக்கா வீட்டில் எப்போதும் தங்குவார்கள்.ஆனால் கிளம்புவதற்கு முதல் நாள் முன்பு ராஜூவின் அக்காளின் மாமனார் மண்டையை போட்டு விட்டார்.அவர்கள் போனில் விஷயத்தை சொல்லிவிட்டு,திண்டுகல்லுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.அவர்களை தவிர சென்னையில் வேறு நெருங்கிய உறவு யாரும் இல்லை.ஆப்பரேஷனுக்கு பிறகு மூன்று நாட்கள் ஆஸ்பத்திரி வாசம்.அதற்கு பிறகு மூன்று நாள்கழித்து ஒரு முறை பரிசோதனை செய்துக்கொண்டு ஊருக்கு திரும்பலாம் என்று முன்பே முடிவெடுத்திருந்தனர்.இப்போதுஅந்த மூன்று நாள் எங்கே தங்குவது என்ற கேள்வி எழுந்தது.கடைசி நிமிடத்தில் கிளம்புவதை ஒத்திப் போட முடியாத சூழ்நிலை.

ராஜூதான் முதலில் உன் பெறாத தாய்வீட்டில் தங்கலாமே என்று ஆரம்பித்தான்.சிறிது தயக்கத்துடன்,ஒத்துக்கொண்ட செல்வி மெயில் அனுப்பினாள் .அவர்கள் கிளம்பும் வரை பதில் வரவில்லை .அங்கே போய் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிவுடன் கிளம்பி விட்டனர் இருவரும்.

மலர் ஆஸ்பத்திரியில் ஆபரேஷனும் நல்லப்படி முடிந்தது.ஆஸ்பத்திரியில் மூன்று நாள் ஓய்வுக்கு பிறகு டி.நகரில் ஒரு ஹோட்டலில்ஒரு ரூம் எடுத்து தங்கினர்.திரும்ப மீனாமேடம் வீட்டில் தங்கலாம் என்று ஆரம்பித்தான் ராஜூ.

அவளை விட்டுக்கொடுக்க மனம் இல்லாத செல்வி,நம்மை போலவா,அவுங்க எவ்வளவு பிசி ஆனவங்க என்றாள் செல்வி.

ஆனால் அவன் தொணப்பு தாங்காமல் மேடம் வீட்டுக்கு போன் செய்தாள் செல்வி.வேலைகார பெண் எடுத்து,அவள் யார் என்று கேட்டாள்.தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட செல்வி,மேடத்துடன் பேச வேண்டும் என்றாள்.

அந்த பெண்ணோ,ஒரு வாரத்துக்கு முன்பு மேடம் ஒரு விழாவுக்கு தலைமைதாங்க கோயம்புத்தூர் போயிருப்பதாக சொல்லி போனை வைத்துவிட்டாள்.

செல்வி, ‘ பார்த்தீர்களா அவுங்க ஊருல இல்ல,இருந்திருந்தா கட்டாயம் என்னை வந்து பார்த்து இருப்பாங்க ‘ என்றாள்.

ராஜூ பதில் சொல்லவில்லை.யோசனையில் ஆழ்ந்தான்.

சிறிது நேரம் கழித்து தானே போன் செய்தான்.திரும்ப அதே வேலைக்கார பெண் எடுத்தாள்.கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட கொங்கு தமிழில் தான் திருப்பூரில் மில் ஓனர் எனவும்,மேடத்தின் எழுத்துக்கள்தான் தன் முன்னேற்றத்துக்கு காரணம் எனவும் தான் நேரில் பார்த்து நன்றி சொல்லவேண்டும் என்றும் சொன்னான்.

ஒரு கணம் எதிர்புறம் அமைதி நிலவியது.மறுநிமிடம்,மிஸஸ் மீனாநவநீதம் ஸ்பீக்கிங் என்ற குரல் எழுந்தது.

கோபம் கலந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு,திரும்ப அதே கதையை சொன்னான்.அவளும் வீட்டில்தான் இருக்கிறேன், வரலாம் என்று அழைத்தாள்.

ராஜூ, ‘ உங்களுக்கு பட்டுபுடவை என்றால் பிடிக்கும் என்பதை உங்கள் துபாய் பயணக்கதையில் படித்தேன்.உங்களுக்கு என் அன்பு பரிசாக நல்லியில் இருந்து ஒரு புடவை வாங்கி வருகிறேன்.என்ன கலர் வேண்டும் ? ‘என்றான்.

‘அதெல்லாம் வேண்டாம் தம்பி,ஒங்க அன்பே எனக்கு போதும் ‘என்றாள்

‘இல்லைங்க!துபாய்ல ஒங்க விசிறி பட்டு புடவை கொடுத்தாங்கன்னு எழுதியிருந்தீங்களே,அந்த புடவைய பார்க்கும் போது எல்லாம்,அவுங்க நெனவு வருமில்லையா,அந்த மாதிரிதானுங்க நா கொடுக்கறதும் ‘ என்றான்.

கொஞ்சம் அசட்டு சிரிப்புடன், ‘ஆமாம்,ஆமாம்! காப்பர்சல்பேட் நீலம் கிடைக்குதான்னு பாருங்க.இப்போ எல்லாம் நிறைய வெரைட்டிங்க போதீஸ்ல கெடைக்குது ‘என்றாள்.

‘சரிங்கம்மா,இப்போவே போத்தீஸ்க்கு போயிட்டு ரெண்டு மணி வாக்குல ஒங்க வீட்டுல இருப்பேன்னு ‘ சொல்லிட்டு போனை வைத்தான்.

எதுவும் புரியாமல் அவனை பார்த்த செல்வி, ‘பொடவையா வாங்கிட்டு போகப்போறீங்க ? ‘ என்று கேட்டாள்.

‘வேற வேல இல்லை ‘ என்றான் ராஜூ.

ஏமாற்றத்தை மறைக்க உடல் வலியுடன் சிரித்தாள் செல்வி.

Ramachandranusha@rediffmail.com

Series Navigation