துடிப்பான சிறகுகள்

This entry is part [part not set] of 4 in the series 20000206_Issue

மனுபாரதி


காற்றில் ஓர் அரங்கம்.
அங்கே….
கால் பாவாமல்
நிற்கும் ஒரு வித்தை.

நம்பமுடியவில்லை.

கண்ணுக்குத் தெரியாத
கயிறொன்றைப் பிடித்திருக்கிறாயோ ? –
என் ஐயமனத்தில்
ஒரு கேள்வி.

‘நாங்கள் இருக்கிறோம்,
இருக்கிறோம். ‘ – என்று
அதிவேகமாய் அடித்துக்கொள்ளும்
உன் சிறகுகள்
பதிலாய்..

* * * *

உன் சிறகுகளால்
அறையப்படும் காற்று
என் முகத்தில் அறைய
துடிக்குது
ஆசை.

ஓரிடத்தில் நிலைக்காத சிறகுகள்.
ஆனால்…
உன்முழு உடலையும்
காற்றில்
நிலை நிறுத்தும் அவை
நங்கூரமாய்.

நிலையாமையால் நிலைத்து
பூமியின் முரணைப்
பிரதிபலிக்கிறாயோ ?

* * * *

அந்தரத்தில்…
தலைநேராக நிற்கும்
உன் பூஞ்சொர்க்கம்.

பூக்களும்,
வண்ணங்களும்,
நறுமணங்களும்
மட்டும் அதில்.

மேலே ஜிவ்வென்று ஏறி,
கீழே சட்டென்று இறங்கி,
மூன்று சுற்றுகள் சுற்றி…

உனக்கு மட்டும்
எளிதில் புலப்படும்
பூக்களின் பாதை.

பூக்களை
உயர்த்தித் தாங்கும்
காம்புகளுக்குப்
போட்டியாய்
உன் சிறகு பலம்.

உயர்ந்து நிற்கிறாய்.
என் மனத்திலும்.

* * * *

பூவின் மீதமராமல்
அதன் மென்மைக்கு மதிப்பளிப்பதால்
தள்ளி நின்று
தேனெடுக்கிறாயோ ?

இல்லை,
அதன் அழகை படம்பிடித்துப்
புரிந்துகொள்ள
எட்ட நின்று
பார்க்கிறாயோ ?

ஓயாத ஓட்டத்திலும்
இயற்கை ரசனைக்கு
நீ நேரம் ஒதுக்கி
நின்று நிதானிப்பதாய்ப்
படுகிறது எனக்கு.

* * * *

பிறர் உழைப்பில்
வளர்ந்த தேனடைகளை
தீண்டுவதில்லை
உன் குழலலகு.

சொந்தச் சிறகுகளில்
சுயமாய் நிற்கிறாய்.

நீ முணுமுணுப்பது எதை ?

‘ஓயாதே, உழை! ‘ – என்றா ?
‘சோம்பாதே, செயலாற்று! ‘ – என்றா ?

உன் முணுமுணுப்பைக் கேட்டு
உனக்கு பெயர் மட்டும்
வைத்திருக்கிறோம்.

….நாங்களா ?
கற்பனையில் இருக்கிறோம்.
‘நீ சிறகொடுக்கி இருந்தால்
எப்படி இருப்பாய் ? ‘ – என்று.

* * * *

Thinnai 2000 February 6

திண்ணை

Series Navigation

Scroll to Top