தீ தித்திப்பதில்லை…

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

சேவியர்.


மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா
இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா
மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா
சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ?

ரயில் மீது தீக்கடலை வேகமாய் பாய்ச்சுவதோ
மயில் தோகை பிய்த்தெடுத்து சகதியதிலே பூசுவதோ
வெயில் தேசம் மீது தொடர் சூரியனை தேய்ப்பதுவோ
குயில்களுக்கு வேலையென்ன சாராயம் காய்ச்சுவதோ ?

கத்திகளின் முனைகளிலே உயிர் எரித்தல் நியாயமா ?
சத்தியத்தின் வேர்களிலே வேல் விழுந்த வேதனா!
முக்தி பெறும் நிலைகளுக்கு முன்னுரையே காலனா ?
பக்தியென்ன உயிர் விழுங்கி உடல் துப்பும் அரக்கனா ?

உள்ளுக்குள்ளே அன்புகொண்டு வாழுதலே மானுடம்
உள்ளத்திலே கோயிலொன்றை கட்டுதலே நல்மதம்
பிள்ளைகளில் கள்ளமில்லா உள்ளமதே ஜீவிதம்
கொள்ளிகளை அணைத்துவிட்டு பிள்ளைகளாய் வாழுவோம்.

Series Navigation