தீயின்மீது ஒரு உரையாடல்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

ஹெச்.ஜி.ரசூல்


தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்ற இலக்கியச் சந்திப்பின் நிகழ்வுகளில் ஒன்றாக 27 – 12 – 2008 சனியன்று கதைவாசிப்பும் உரையாடலும் நடை பெற்றது.மின் அஞ்சலில் பெறப்பட்டதும் திண்ணை இணய மின் இதழில் பிரசுரம் ஆனதுமான எச்.முஜிபுர் ரகுமானின் தீயடிநானுக்கு கதை உரையாடலுக்குஎடுத்துக் கொள்ளப் பட்டது. விமர்சகர் பிரசாத் கதைப் பிரதியை வாசித்தார்.

விவாதத்தில் ஆய்வாளர் கண்ணன் கதையின் அமானுஷத் தன்மை குறித்தும் முன்பிருந்தே மன்ற அரங்குகளில் முஜிபுர் ரகுமான் விவாதித் திருந்த மெட்டாபிக்ஷன் வகைமாதிரியாக இருந்த போதிலும் கதை ஒர்வித அயர்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்தார்.

ஹாமீம்முஸ்தபா தீ இக்கதையில் எதிர் படிமமாக உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் மனித குலவரலாற்றில் தீக் கான இடம் எதிர்மறையாக இல்லை என்றார்.

தீ பிடித்து எரியும் நான் யார் என்பதின் குறியீடு என்பதும் கதையின் களம் கூட பூடகத்தன்மையோடு இருப்பதாகவும் சிவராமன் விவாதித்தார்.

கவிஞர் ஜி.எஸ்.தயாளன் கதையில் எரியும் தீ அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆப்கனிலும் ஈராக்கிலும் எரியும் தீயாக தனது வாசிப்பில் அர்த்தத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முனைவர் செல்வகுமாரன் மாறுபட்டதொரு வாசிப்பை இக் கதைப் பிரதி உருவாக்குவதாக கூறினார்.இந்தத் தீ தீவிரவாதிகளால் மும்பையில் பற்ற வைத்த தீயாக இருப்பதாகவும்,வீணையடி நீயெனக்கு,மேவும் விரல் நானுனக்கு என்ற பாரதியின் பாடல் துவக்கத்தை தீயடிநானுனக்கு என்ற தலைப்பிடுதலே நினைவுபடுத்தினாலும் இந்தியத் தாயை நோக்கி ஒரு இஸ்லாமிய தீவிரவாதி தீயடி நானுனக்கு என்று கூறுவதாக கட்டமைப்பை கொண்டுள்ளதாகவும் பேசினார்.

தன்னை இக்கதை வெகுவாக பாதிக்கவில்லை என்றும் புதுமைப்பித்தனின் கதையாக்கத்தில் இத்தகையதான தொனி ஏற்கெனவே பேசப்பட்டிருப்பதையும் நினைவுகூர்வதாகக் கூறிய அனந்தசுப்பிரமணியன் நேர்கோட்டுத்தன்மையே இக் கதையாடலின் போக்காக இருப்பதாகவும்,சாபத்தின் விளைவாக தீ என்பது மறுபிறப்பு,கடவுட் கொள்கை போன்றவற்றை வலியுறுத்தும் கருத்தாக்கமாக உள்ளது என்றார்.

ஹெச்.ஜி.ரசூல்,எதில் தீ பற்றினாலும் அணத்து விடலாம். ஆனால் உடம்பில் பற்றிய இந்த தீயை யாராலும் அணைக்கமுடியவில்லை. எரியும் உடம்போடு நடமாடுகிற இந்த கதாபாத்திரம் ஒரு வினோதத் தன்மையை கொண்டுள்ளது. வாழ்வின் எதார்த்தத்தை வினோதத் தன்மையோடு வெளிப்படுத்தும் பாணியைக் கொண்டுள்ளதாகவும் தனக்கும் முதலில் இந்தத் தீ மும்பைத்தீயாகவே உணரமுடிந்தது என்றார்.கதைக்குள் கதை என்றவகையில்புராதன தொன்மம் தீசர்ப்பம்,கண்ணகியின் சீற்றம் என் மாறுபட்டு பதிவுகள் உள்ளதால் இதை நேர்கோட்டு கதையாக்கம் இன்றுசொல்வதுமறுபரிசீலனைக்குரியது
என்றும் பிரதியை உருவாக்கிய நபரோடு பொருத்திப் பார்த்தால் நண்பர் செல்வகுமாரன் கூறியது போல் ஒரு சில முஸ்லிமிடத்தும் பற்றிஎரிந்து கொண்டிருக்கிற தீவிரவாதத் தீயாக இது அர்த்தப்படுகிறது. ஆனால் பிரதியின் ஆசிரியனை நீக்கிவிட்டு இக்கதை உருவாக்கும் அர்த்தப்பிரதியை உற்று நோக்கினால்இது ஒவ்வொருவரிடத்திலும் பர்றி எரிகிற அடிப்படைவாதத்தீயாகவும் உருவாகிற சாத்தியங்களே அதிகம் உள்ளது. இந்து,இஸ்லாமியம்,கிறிஸ்தவம் என அனைத்து எல்லைகளிலும் உள்ள ஒவ்வொரு மனிதனிடத்திலும் தன்னைவிட்டு,தன் குடும்பத்தை,சமூகத்தைவிட்டு அந்நியப்படுத்துகிற விதத்தில் எரிந்து கொண்டிருக்கிற அடிப்படைவாதத் தீயாகவும் அனுமானிக்கலாம். மார்க்யூஸின் சிறகுகள் பொருத்திய வினோத வயோதிக கதாபாத்திரத்தோடும் நிகழ்வுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்றார்.

நாவலாசிரியர் மீரான் மைதீன் ஏற்கெனவே முஜிபுர் ரகுமானால் எழுதப் பட்ட நான் பறவை மனிதன் கதையின் வடிவாக்கத் தொடர்ச்சியை கொண்டுள்ளதாக தெரிவித்தார். நாகராஜன், விஜயகுமார்,முத்துராமன்,எஸ்.கே.கங்கா உட்பட இன்னும் பலர் இந்த உரையாடலில் பங்கேற்றனர்.
குறிப்பு: முஜிபுர் ரகுமான் தற்போது அரபு நாட்டில் பணியாற்றுகிறார்.கலை இலக்கிய பெருமன்றத்துக் காரர்.
தமிழின் புதுவித கதை எழுத்துக்கு உதாரணமாக வெளிவந்த இவரது கதைத் தொகுதி தேவதைகளின் சொந்தக் குழந்தைகள்.பல்குரல் தொனியை இஸ்லாமிய கலாச்சார வெளியில் மீள்வாசிப்பாக நிகழ்த்திய இவரது நாவல் தேவதூதரின் வரிகள். அடித்தளமுஸ்லிம்கள்,பின்நவீன,அதற்குப் பிறகான இலக்கியக் கோட்பாடுகள் குறித்தும் தீவிரமாக எழுதிவருபவர்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்