தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

துவாரகன்


தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.

ஈழக்கவிஞர் தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ என்ற கவிதை நூல் தமிழ்நாடு உயிர்மை பதிப்பகத்தால் வெளிவருகின்றது.

ஈழப்போரும் அது ஏற்படுத்திய வலியும் கவிஞனின் உணர்வுபூர்வமான வரிகளால் நிரம்பியுள்ள இத்தொகுப்புக்கு தமிழகத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான சுகுமாரன் முன்னுரை எழுதியுள்ளார்.

போருக்குள்ளேயே வாழ்ந்த மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வும் வலியும் மட்டுமல்லாது சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட மக்களின் உயிர்ப்பிச்சைக்கான ஏக்கமாகவும் தீபச்செல்வனின் கவிதைகள் அமைந்துள்ளன. வாழ்வதற்காக ஆதாரங்களை உலகம் படிப்படியாகத் தேடிக்கொண்டிருந்தபோது எமது மக்கள் தாம் வீழ்ந்ததற்கான அடையாளங்களையே தொலைத்தவர்களாக இருந்தார்கள்.
குண்டடிபட்டுச் செத்துப்போன மாடுகளில் இருந்து மனிதர்கள் வரை போரின் எச்சத்தைப் பாடுபவையாகவும் இவரது கவிதைகள் அமைந்துள்ளன. நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னான கவிஞர்களில் கவனிப்புக்குரிய ஒருவராக கவிதைகளாலே தன்னை வெளிப்படுத்தி வருபவர் தீபச்செல்வன்.

எதிர்வரும் டிசம்பர் 30 ஆந் திகதி நடைபெறவுள்ள 34 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளிவருகின்றது.

தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ என்ற முதலாவது கவிதை நூலை சென்ற ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. ‘பாழ் நகரத்தின் பொழுது’ என்ற மற்றுமொரு கவிதை நூலையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவுள்ளது.

உயிர்மை என்ற மாத இதழை வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் இம்முறை 90 நூல்களை இக்கண்காட்சியில் வெளியிடுகின்றது. 13 நாடுகளைச் சேர்ந்த 4 தலைமுறையின் 51 படைப்பாளிகளின் நூல்கள் இம்முறை உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுவது முக்கியமான நிகழ்வாகும்.

உலகளவில் கவனிப்புக்குரிய நூல்கள் அறிமுகம் செய்யப்படும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில்> இம்முறை வ.ஐ.ச ஜெயபாலனின் ‘அவனது கூரைமீது நிலா ஒளிருகின்றது’> தமிழ்நதியில் ‘கானல்வரி’ ஆகிய நூல்கள் உட்பட சாருநிவேதிதா> ஜெயமோகன்> சுஜாதா> என். ராமகிருஷ்ணன்> யமுனா ராஜேந்திரன்> மனுஷ்யபுத்திரன்> ரவிக்குமார்> வாஸந்தி> யுவன் சந்திரசேகர்> ஆகியோரின் நூல்களும்
வெளிவருகின்றன.

காலச்சுவடு> ஆழி> காவ்யா> கிரியா உட்பட பல பதிப்பகங்களும் புதிய நூல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.

எழுத்தாளர்களும் வாசகர்களும் கலைஞர்களும் ஆர்வலர்களும் கூடுகின்ற புத்தகத் திருவிழாவாகவே வருடந்தோறும் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் :- துவாரகன்

Series Navigation