திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

ரெ.கார்த்திகேசு


தமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்று சொன்னால் அவை சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் முடங்கிக் கிடந்த காலம் ஒன்று உண்டு. கல்கி, சாண்டில்யன், அரு.ராமநாதன் போன்றோர் இந்தப் போக்கை ஆரம்பித்து வைத்தனர். அற்புதமான புதினங்களையும் எழுதினார்கள். ஆனால் இந்தக் குறுகிய பரப்பில் மூவேந்தர் காலத்தின் பின்னான தமிழகத்தின் வரலாற்றினைச் சொல்லும் புதினங்கள் ஏதுமில்லை. மொகலாய மன்னர்களின் ஆளுகையில் தமிழ்நாடு பல குட்டி ராஜ்ஜியங்களாகப் பிரிந்து வாழ்ந்த கதை அதிகம் எழுதப்படவில்லை. சிற்றரசர்களின் கதையும் அதிகமில்லை.
இந்தப் போக்கை உடைத்து பிரிட்டிஷ் காலச் சரித்திரத்தை வைத்து சுஜாதா ஒரு நாவல் எழுதினார்.”ரத்தம் ஒரே நிறம்” (1983). முன்னுரையில் சுஜாதா எழுதுகிறார்:
“சரித்திர நாவல் எழுதுவதற்கு என்று சில எழுதப்படாத விதிகள் இருக்கின்றனவாம். சரித்திர நாவலில் சரித்திரம் மட்டும் இல்லாமல் சில தீப்பந்தங்களும் உறையூர் ஒற்றர்களும் கட்டாயம் வேண்டும். கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீள வாக்கியங்களில் வருணிக்க வேண்டும். அடிக்குறிப்புக்கள் தாராளம் வேண்டும். சோழனாக இருந்தால் நல்லது. பாண்டியன் பரவாயில்லை. தமிழ்ச் சாதியின் மேம்பாடு, கடல்கடந்த நாகரிகம் இவைகளைச் சொல்வது உத்தமம். குதிரைகள் தங்கி தேர்கள் முத்துக்கள் இறைத்திருக்கும் வீதிகள், யவன வியாபாரிகள், யாழ், இன்ன பிறவும் வேண்டும்.”
இவற்றையெல்லாம் மறுத்து அவர் எழுத எடுத்துக்கொண்ட கருப்பொருள் சிப்பாய் கலகம். 1857இல் நடந்தது. சுவையான, பதிந்துவைக்க வேண்டிய, தமிழ் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய நிகழ்வின் புனைந்த வடிவம் அது.
அதன்பின் தமிழ் வரலாற்று நாவல்களை இன்னொரு தளத்திற்குக் கொண்டு சென்றவர் பிரபஞ்சன். அவர் பிரிட்டிஷ் ஆட்சியும் பிரெஞ்சு ஆட்சியும் தமிழ் நாட்டை ஆள ஆரம்பித்த ஆரம்ப காலத்தைப் பின்னணியாக வைத்து (1740 -1750) தமது “மானுடம் வெல்லும்” மற்றும் “வானம் வசப்படும்” என்னும் இரு நாவல்களை 90களின் தொடக்கத்தில் எழுதினார். கதைக் களத்தாலும் உள்ளடக்கத்தாலும் சொல்லுகின்ற மொழியாலும் தனித் தன்மை பெற்ற நாவல்கள் அவை.
1800களின் இறுதியிலும் 1900த்தின் நடுப்பகுதி வரையிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பாளையக்காரர்கள், ஜமீன்கள் வாழ்ந்த பின்னணியில் எழுதப்பட்ட வடவீர பொன்னையாவின் “வருச நாட்டு ஜமீன் கதை” (1999), அந்தக் காலப் பின்னணியை வலுவான ஆதாரங்களுடன் கூறும் அரிய நாவல். எட்டயபுரம், கண்டமனூர், உத்தம பாளையம், வடவீரநாயக்கன் பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும், அரிய விவரங்கள் அடங்கிய கதை. கொஞ்சமாகக் கற்பனை கலக்கப்பட்ட வரலாறு.
இப்படி வரலாற்று நாவல்களுக்குப் புதிய தளங்களைத் தேடியடைந்த இன்னொரு நாவல் நாகரத்தினம் கிருஷ்ணாவின் “நீலக்கடல்” (2005). நாகியின் பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும். இந்தப் பின்னணியும் தமிழுக்குப் புதியதே.
இப்படி தமிழ் வரலாற்றுப் புதினத்துக்கான களங்கள் மாறி வரும் போக்கில் மிக அண்மைய அளிப்பாக திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன் – 22-09-1914” வந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்த எஸ்.எம்.எஸ்.எம்டன் எனும் ஜெர்மானியக் கப்பல் சென்னையைத் தாக்கிக் கலக்கியது. பிரிட்டிஷாரால் அதனைப் பிடிக்கவோ அழிக்கவோ முடியவில்லை. எம்டன் தமிழ் மொழியில் அழுத்தமாக இடம் பெற்றுவிட்ட சொல். “என்னடா, நீ பெரிய எம்டனா?” என்று பாமரர்களும் கேட்கிறார்கள். இந்த எம்டனை நாம் இன்னும் அணுக்கமாக அறிந்துகொள்ளச் செய்யும் நாவல் இது.
திவாகர் – அவருக்கு வேறு பல பரிமாணங்கள் உண்டு என்றாலும் – அதிகமாக அறியப்படாத நாவலாசிரியர்தான். “வம்சதாரா” என்ற அவருடைய முதல் நாவல் 2003இல் வெளியானது. அதைத் தொடர்ந்து இன்னும் சில படைப்புக்களும் வந்துள்ளன. 2009இல் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” வெளியாகியுள்ளது.
“எஸ்.எம்.எஸ்.எம்டன்”இல் நம்மை முதலில் கவருவது இந்தச் சம்பவம் வரலாற்றுப் பிழையின்றி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள அக்கறைதான். அவருடைய முன்னுரையில் மட்டுமின்றி அவர் கொடுத்துள்ள அடிகுறிப்புக்களிலும் அந்த அக்கறை தெரிகிறது. எம்டன் சென்னையின் மீது குண்டு வீசிய நிகழ்வைக் குறிப்பிட்டுள்ள வரலாற்று ஆவணங்களை நுணுக்கமாக ஆய்ந்து அவற்றைத் தழுவியே தம் நாவலின் கதையோட்டத்தை திவாகர் அமைத்துள்ளார்.
ஆனால் திவாகரின் நாவல் இந்த வரலாற்றுச் சுத்தத்திற்காக மட்டும் போற்றப்பட வேண்டிய நாவல் அல்ல. அந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்துக் கொண்டு அவர் பின்னியிருக்கின்ற நுணுக்கமான கதைக்காகவும் அது சிறப்புப் பெறுகிறது.
உண்மையில் எம்டனில் இரு கதை இழைகள் இருக்கின்றன. ஒன்று எம்டனுக்குச் சற்றும் சம்பந்தமில்லாதது. அது மிகவும் மர்மங்கள் நிறைந்தது. நமக்கு அதிகம் தெரிந்திராத ஒரு சனாதன சமய மரபைச் சார்ந்தது. சிதம்பரம் என்னும் ஒரு மருத்துவ டாக்டரான இந்தக் கதாநாயகனின் தந்தை சபாநாயகம் பிள்ளை, தன் முன்னோர்கள் மரபுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு யாகம் வளர்த்து, யோக நிலைக்குச் சென்று மாடியிலிருந்து குதித்துச் சமாதியடைகிறார்.
இந்தச் சமாதியடைதல் மரபுக்கு இன்னொரு வரலாற்றுப் பின்னணியையும் திவாகர் படைக்கிறார். ராஜேந்திர சோழனின் தந்தை ராஜராஜ சோழனும் இவ்வாறே யாகம் வளர்த்து சமாதியடைந்திருக்கிறார். இது கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளதென திவாகர் காட்டுகிறார். இது ராஜராஜ சோழனைத் தமிழ் வாழ்க்கையின் குறியீடாகப் பார்த்துப் பழக்கப்பட்ட என் போன்றோருக்குப் புதிய செய்திதான். ஆனால் வேத தர்மங்களைத் தமிழ் வாழ்க்கையில் தீவிரமாகப் புகுத்தியதில் சோழர்களுக்கு முக்கிய பங்குண்டு என்று பார்க்கும் பொழுது இது ஓர் அன்னியமாகத் தெரியவில்லை.
பிரிட்டிஷாரின் மேற்கத்தியப் போக்குகள் இந்தியாவின் மரபு மர்மங்களை ஒழித்துத் தங்கள் வாழ்க்கை முறைக்கு இந்திய மக்களை மாற்ற முயற்சி செய்கின்ற வேளையில் சபாநாயகம் பிள்ளையின் இந்த மரணம் நிகழ்கிறது. (அவர் சோழனின் பாரம்பரியத்தில் வந்திருக்கக்கூடும் என்னும் யூகமும் இருக்கிறது.) ஆளும் பிரிட்டிஷார் இதனை ஒரு தற்கொலை என்றே சாதிக்க முயலுகிறார்கள். ஆனால் குடும்ப மரபும் சனாதன மரபும் அறிந்து தெளிந்திருக்கும் சிதம்பரம் இந்த நிலையை அவர்களுக்கு விளக்க முயல்கிறான். இந்த மரணத்தின் மர்மத்தைத் துலக்கும் தீவிரத்தில் டிஐஜி லாங்டன் சிதம்பரத்தைத் துரத்தியவாறு இருக்கிறான்.
இந்தக் கதை இழை ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் எம்டன் சென்னையை நோக்கிக் குண்டு வீசுகிறது. அதில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்யக் கடற்கரைக்குப் போன டாக்டர் சிதம்பரம் ஜெர்மானியர்களால் கடத்தப்பட்டு எம்டன் கப்பலுக்குக் கொண்டு செல்லப் படுகிறான். எம்டனில் காயப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத்தான் அவனை அப்படிக் கடத்துகிறார்கள்.
அப்படி எம்டனுக்குள் கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்ட சிதம்பரம் அங்கு நடக்கும் பரபரப்பான போர்க்கால நடவடிக்கைகளில் மாட்டிக் கொள்கிறான். அங்கு நிர்ப்பந்தங்களின் காரணமாக ஒரு சாகச மிக்க வீரனாக அவன் மாறுகிறான். இப்படி அங்கு இன்னொரு கதை இழை விரிகிறது.
இந்த இரு இழைகளையும் கொண்டு வந்து முடிச்சிட்டு கதையை முடிக்கும் இடத்தில் எழுத்தாளரும் ஒரு பெரும் சாகசம் நிகழ்த்துகிறார் என்றே சொல்லலாம். அந்த முடிவை உடைத்து வாசகர்களின் ஆர்வத்தைக் குலைக்க விரும்பவில்லை. வாசகர்களே படித்து உணர வேண்டும்.
கதையில் பல விஷயங்கள் சொல்லப்பட்டு விளக்கப் படுகின்றன. எம்டன் பற்றிய விஷயங்கள், அது இயக்கப்படும் விதம், அதன் ஆயுதங்கள், அவற்றை இயக்கும் மனிதர்கள் பற்றிய விவரணைகள் உள்ளன. இரண்டாம் இழையில் ஒரு சனாதனி தாமே தம் மரணத்தைத் தேடி அதனை அடையும் விஷயமும், அதன் பின் உள்ள மரபுகளும் மந்திரங்களும் பற்றியும் விளக்கப்படுகின்றது.
“எஸ்.எம்.எஸ்.எம்டன்” பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவே தனது கதை இழையைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது. ஆனால் அதற்காகக் கதைச் சுவையை அது விட்டுவிடவில்லை. ஆனால் இறுதியில் கதையை விட இந்தத் தகவல்களே மிக முக்கியத்துவம் பெறுகின்றன என்றே நினைக்கிறேன்.
தமிழ்ப் புதினங்கள் இறந்த கால, நிகழ் கால (எதிர் காலத்திலும் கூட) கதைகளுக்கான புதிய வெளிகளைத் தேடும் இக்காலத்தில் திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” திசைகளை விரிவு படுத்தும் பயனுள்ள பங்களிப்பாகும்.

Series Navigation

author

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு

Similar Posts