திறவாத தாழ்கள்

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

மு ரெங்கம்மாள்


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் – திருவள்ளுவர்

வாயைத்திற பேசு, சாப்பிடு, புகழ்ச்சி செய், முத்தமிடு,
கன்னத்தை உதட்டால் நெருடு.
எச்சில் படுத்து. எச்சில் படு.

கண்ணைத் திற அகல.
பார் முகங்களை, கால்களை, கண்களை.
மலர்ச்சி மறைந்து
பஞ்சடைந்த கண்களைக் கழுவித் திற.
வியப்பதன்றி
வேறென்ன வேலை பார்வைக்கு ?

கையைத் திற விரல்கள் அழகு
நீவிவிட்டுக் கைகோர்த்துக் கொள்
இன்னொரு கையினைத் தேடி.
பிளவுண்ட இலையின் நரம்புகள் வேய்ந்தது போல்.
விரலிடை வெளிகளில் உலகைச் செருகிக்கொள்.

கால்களைத் திற நடந்து பார் கொஞ்ச நேரம்
மணலில் இளஞ்சூட்டில் வெறுங்காலில்,

உடம்பைத் திற இறுகிய உறுப்புகள் இளகட்டும்
துய்க்கவும் , தொடவும் தொடப்படவும் என.

மனதைத் திறந்து வை –
புதுக் காற்றும், வெட்டவெளி நிறங்களும்
புழுக்களும், பறவைகளும் சென்றடையட்டும்.

காதுகளைத் திற.
நாராசமும் கூட ஒலிக் கலவை தான்.
நகரும் உலகின் சப்தம் காதுக்கு வேண்டாமா ?

தாழிட்ட வாசலைத் திற
அடைபட்ட காற்று வெளிச்செல்ல

‘திறவாத கதவோரம் தென்றல் வந்து வீசாது. ‘

திறந்தவை எல்லாம் எல்லோருக்கும்.
அடைபட்ட எதுவும் உனக்கும் இல்லை – எவருக்கும் இல்லை.

அடைபட்ட அன்பு அன்புமல்ல.

**********

Series Navigation

மு. ரெங்கம்மாள்

மு. ரெங்கம்மாள்