திறனாய்வுக் கூட்டம்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

சோதிப் பிரகாசம்


மாலை மயங்கிக் கொண்டு இருந்தது. அதை விட மங்கலான ஒளியில், நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் உலவிக் கொண்டும் அந்தக் கூடத்தில் பலர் மது அருந்திக் கொண்டு இருந்தார்கள் — பல் வேறு வகையான கலை-இலக்கிய மது!

கூடம் முழுவதும் போதையின் மயக்கம் பரவி இருந்தது. கூடவே, கலை, அழகியல், முற்போக்கு, பிற்போக்கு, பின்-நவீனத்துவம், படைப்பு, திறனாய்வு, முதலிய கருத்துகளும் ஊடாடிக் கொண்டு இருந்தன.

ஒரு பக்கம் பாமரர் கூட்டம்; மறு பக்கம் அறிவாளர் சிலர்; இடையில் அரை-அறிவாளர்கள் பலர்!

பாமரர் கூட்டத்தில் இருந்து சற்று ஒதுக்குப் புறமாக — உயரமான ஒரு மேசையைச் சுற்றி — அமர்ந்து இருந்தனர் அறிவாளர்கள்! அவர்கள் முகத்தில் கலையின் அழகியல் ஒளிர்ந்து கொண்டு இருந்தது. பாமரர்களில் இருந்து வேறுபட்டு இருந்த அறிவாளர்கள் அவர்கள் — வாசகர்களில் இருந்து வேறுபட்ட எழுத்தாளர்களைப் போல! எல்லோர் கையிலும் காலியாகிக் கொண்டு இருந்த கதை-கவிதைக் குவளைகள்!

ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு வகையான கலை நயம் மேவி நின்று கொண்டு இருந்ததை யாரும் கவனிக்க வில்லை.

சிலர் முகத்தில் இனம் தெரியாத ஒரு சோகம்!

சிலர் முகத்தில் ஏதோ ஓர் அவலம்; துயரம்!

சிலர் முகத்தில் ஒரு புன்னகை!

மற்றவர் முகங்களிலோ வீரம், பரிதாபம், கருணை, காதல், எனப் பல் வேறு வகையான சுவைகள்!

‘சங்கக் காலம் ‘ என்று குறிப்பிடப் பட்டு இருந்த குவளையை அருந்திக் கொண்டு இருந்த ஒருவர் இந்தப் பாவனைகளைக் கூர்ந்து கவனித்தார்.

‘தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் இது! ‘

அவரது குரலை யாரும் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரிய வில்லை.

‘ஜெய காந்தன் ‘ என்று குறிப்பிடப் பட்டு இருந்த குவளையைச் சுவனித்துக் கொண்டு இருந்த அறிவாளர் ஒருவர் மந்தகாசமாகக் கூறினார்:

‘ஜே.கே. என்றால் ஜே.கே.தான். அவனை வெல்ல இனி ஒருவன் பிறந்துதான் வர வேண்டும். இதமான ஏற்ற-இறக்கங்களுடன் இவ்வளவு இனிமையான மயக்கத்தை வேறு எவனும் தந்து விட முடியாது. ‘

இடையில் சுந்தர ராமசாமியின் குரல் குறுக்கிட்டது.

‘என்ன அது! ஜே.கே.வா ? காலாவதி ஆகிப் போன குறியீடு அல்லவா அது! இப் பொழுது எல்லாம் ஜெய மோகந்தான்! ‘

காற்றில் படம் வரைவதைப் போல விரல்களை அசைத்துக் கொண்டு அவர் பேசினார். கொஞ்ச நேர மவுனத்திற்குப் பின்னர் மீண்டும் அவர் கூறினார்:

‘கலைக்கு ஒரு விலை இருக்க முடியுமா ? ‘

பாமரர்கள் யாருக்கும் ஒன்றும் புரிய வில்லை.

‘பணம் கொடுத்துதானே கலைக் குவளைகளை நாம் வாங்கி இருக்கிறோம். அதற்கு ஒரு விலை இல்லை என்றால் எப்படி ? ‘

பாமரர்களின் நெஞ்சங்களில் எண்ணங்கள் நிழலாடின.

பாமரர்கள் இப்படி நினைத்துக் கொண்டு இருந்தது ரவிக் குமாரின் மூளையில் உடனே பதிவு ஆகி விட்டது. மவுன மொழிகளைப் படிப்பதில் வல்லவர் அவர்!

‘அவர் சொல்லுவது, உங்களுக்குப் புரிய வில்லையா ? புதுமைப் பித்தன் கதைகளுக்குச் சொத்து உரிமை உண்டா ? என்பதுதான் அவரது கேள்வி. கவுரவம்தான் எழுத்தின் சொத்து! வேறு உரிமை எதுவும் எழுத்திற்குக் கிடையாது. ‘

ரவிக் குமாரின் பேச்சைக் கேட்டு அறிவாளர்களின் மேசைக்கு அருகே பாமரர்களின் கூட்டம் திரளத் தொடங்கியது.

ரவிக் குமாரின் அருகில் இருந்த ஒருவர் பேச்சை மாற்ற விரும்பினார். அவர் குடித்துக் கொண்டு இருந்த குவளையில் ‘தாஸ்தாவெஸ்கி ‘ முத்திரை போடப் பட்டு இருந்தது.

‘இதை வடித்தவன், இதன் விளைவைப் பற்றி என்ன நினைத்து இருந்தான் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இதைக் குடிப்பவனின் அனுபவத்தைப் பொறுத்துதான் அதன் விளைவுகள் அமைகின்றன. குடிப்பவனின் சட்டகத்திற்கு உள்ளேதான் தனது முழு வடிவத்தைப் பிறதி பெறுகிறது. எத்தனை பேர் குடிக்கிறார்களோ, அத்தனை முழுமைகள்! தனித் தனியான முழுமைகள்! ஒரு பிறதிக்குதான் எத்தனை முகங்கள்! பன் முகங்கள்! ‘

தனது குவளையைத் தூக்கிப் பிடித்துப் பாமரர் கூட்டத்தில் இருந்த ஒருவன் கத்தினான்:

‘ஒரு பராசக்திக்கு உன் பிறதி ஈடாகுமா ? ‘

‘ஏன், ஓர் எம்.ஜி.ஆர். படத்தின் முன்னால் இவன் நிற்க முடியுமா ? ‘

இன்னொருவனின் கத்தல் இது.

சுந்தர ராமசாமிக்குக் கோவம் வந்து விட்டது.

‘சுவை நயத்திற்கும் ஒரு தரம் வேண்டும். ‘

‘தரமா ? என்னய்யா அது, தரம் ? வடிப்பவன் தரமாக வடித்தால், குடிப்பவனுக்குத் தரம் தெரியாமல் போய் விடுமா ? ஆடத் தெரியாதவளுக்குத் தெருக் கோணலாம்! ‘

சுந்தர ராமசாமி அமைதி ஆனார். அவரது உள்ளத்தில் மவுன மொழிகள் அலை பாய்ந்து கொண்டு இருந்தன.

ஒரு மூலையில் அமர்ந்து இருந்த இன்குலாப்பின் முகத்திலோ ஒரு மவுனப் புன்னகை!

இடையில், புதிய கோடாங்கியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்த கண்ணனின் குரல் ஓங்கி ஒலித்தது:

‘அவனவனுக்கு அவனவன் போதை! குடித்தோமா, போனோமா, என்று இல்லாமல் இதில் என்ன விவாதம்! வீட்டிற்குப் போய் வாந்தி எடுத்துக் கொள்ள வேண்டியது

தானே! ‘

கண்ணனை நிமிர்ந்து நோக்கினார் ரவிக் குமார். சுந்தர ராமசாமியின் உதடுகளில் ஒரு முணுமுணுப்பு!

‘எதையாவது நாம் சொல்லப் போக, எங்காவது எதையாவது எழுதி விட்டு எதிர் கொள்ளும் துணிச்சல் உண்டா என்று நெஞ்சை வேறு இவன் நிமிர்த்துக் கொள்ளுவான்! இவனை இருட்டடிப்புச் செய்வதுதான் சரி! ‘

ரவிக் குமாரும் சுந்தர ராமசாமியும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

மவுன மொழியில் அ.மார்க்ஸுக்கு நம்பிக்கை இல்லை போலும்!

‘இலக்கியத்திற்கு எதிராகத் தத்துவம்! பகுத்தறிவின் வன்முறை இது! இதுதான் அதிகார மையம்! ‘

கண்ணனை விட சத்தமாக அவர் குரல் கொடுத்தார். இன்குலாப்பால் அவருக்குக் கைதட்டாமல் இருக்க முடிய வில்லை.

‘அதிகாரத்தைக் கேள்விக் கேட்கும் பின்-புதின வாதம் இதோ! ‘

அ.மார்க்ஸை அவரது கைகள் சுட்டிக் காட்டின.

அறிவாளர்களின் மேசையைச் சுற்றி அரை-அறிவாளர்கள் வட்டம் இட்டனர்.

‘போத்ரியாவும் தெரிதாவும் ஃபூக்கோவும் இது பற்றி என்ன கூறினார்கள் ? யாராவது சொல்லக் கூடாதா ? ‘

அவர்களில் ஒருவன் கேட்டான். அவன் கையில் இருந்ததோ ‘காலச் சுவடு ‘ குவளை.

‘ஆமாம், ஆமாம். ‘

அவனை இன்னொருவன் ஆமோதித்தான் — ‘சொல் புதிது ‘ குவளையுடன்!

சுந்தர ராமசாமியின் போதை உச்சம் அடைந்தது.

‘மனிதனின் எழுச்சி இது! ‘

மனுஷ்ய புத்திரனை அவர் பார்த்தார்.

‘இந்த நிழல்களைப் பற்றி ஒரு கவிதை பாடக் கூடாதா ? ‘

தலையைத் திருப்பிக் கொண்டார் மனுஷ்ய புத்திரன்!

‘மனித குமாரனுக்கோ தலை சாய்க்க இடம் இல்லை. எனென்றால், அவன் தேவ குமாரன். ‘

சுற்றி நின்றவர்கள் எல்லோரும் கை தட்டினார்கள்.

இன்குலாப்புக்குக் கோவம் வந்து விட்டது.

‘நாங்கள் விடியல் கீதம் பாடுகிறோம்; கனவு விலங்குகள் உடையட்டும்!

. . .இல்லை, இல்லை. . . நொறுங்கட்டும்!

தமது கரங்களை அவர் உயர்த்தினார்.

:கார்க்கியின் மதுவால் போதை ஏறிப் போய் இருந்த இளவேனிலுக்கு உற்சாகம் பிறந்து விட்டது.

‘மகரந்தங்களில் இருந்தும் துப்பாக்கி ரவைகள்! ‘

இன்குலாப்பைச் சுட்டிக் காட்டி அவர் முழக்கம் இட்டார்.

‘கவிதையா இது! அதற்கு ஒரு கவித்துவம் வேண்டாமா ? ‘

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் எழுந்து வந்தது.

அரை-அறிவாளர்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.

குரல் வந்த திசையில் எல்லாக் கண்களும் திரும்பின. அங்கே ஜெய மோகன் நின்று கொண்டு இருந்தார்.

அவரைச் சுற்றிப் பிழம்பாக ஒரு சுடர் ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அவர் வாயிலோ ‘கலையின் மவுன மொழிகள் ‘!

‘கலைக்குள் ஒரு தேடுதல் வேண்டும். ‘

அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவர் தமது குவளைக்குள் உற்றுப் பார்த்தார். குவளை காலி ஆகிப் போய் இருந்தது.

‘என்ன சொல்லுகிறார் இவர் ? எங்கள் காதில் ஒன்றும் விழ வில்லையே ? ‘

அரை-அறிவாளர்கள் இடையே ஒரு முணுமுணுப்பு

‘கலையின் மவுனங்களைப் புரிந்து கொள்ளுவதற்கு ஒரு தகுதி வேண்டும். மவுன மொழி தெரிந்து இருக்க வேண்டும்! ‘

ஜெ. எம். சரக்கை அருந்திக் கொண்டு இருந்த ஒருவன் எழுந்து நின்று கத்தினான்.

அரை-அறிவாளர்களுக்குள் ஒரு நடுக்கம் பரவியது. கேள்வி கேட்டால் முட்டாள் என்று பட்டம் சூட்டி விடுவார்களோ என்னும் பயத்தில் மவுனப் புன்னகைகளை மட்டும் அவர்கள் மலர்த்திக் கொண்டு இருந்தனர்.

ஆனால், பாமரர் கூட்டத்தில் இருந்து ஒருவன் குரல் கொடுத்தான்:

‘என்னடா அது, மவுன மொழி ? சிவாஜி கணேசனின் வசன மொழியைக் கேட்டு இருக்கிறாயா நீ ? எம். ஜி. ஆரின் குத்துச் சண்டை ஓசை உன் காதில் விழுந்து இருக்கிறதா ? வீரப்பாவின் சிரிப்பு உனக்குத் தெரியுமா ? அல்லது கலைஞரின் வசனத்தைதான் நீ கேட்டு இருக்கிறாயா ? பேசத் தெரியாதவனின் மவுனத்திற்கு மொழி ஒரு கேடா ? ‘

அவன் பின்னால் பாமரர் கூட்டம் திரளத் தொடங்கியது.

கார்ல் பாப்பர், சசூர், ஃபூக்கோ, தால்ஸ்தாய், பின்-புதின வாதம், நவீனத்துவம், என்று எல்லாம் பதிலுக்குக் கூச்சலிடத் தொடங்கினார்கள் அறிவாளர்கள்!

கூச்சலில் மவுனம் கலைந்து போன இன்குலாப் தமது மவுனப் புன்னகையைக் களைந்து விட்டுப் பலமாகச் சிரித்தார்.

சற்றும் எதிர் பாராத விதமாக அறிவாளர்களுக்கும் பாமரர்களுக்கும் இடையே கை-கலப்புகள் நிகழத் தொடங்கின.

‘இதுதான் மொழிப் போர்! எல்லாவற்றிற்கும் மொழிதான் காரணம்! ‘

உரத்துக் கூறியவாறே கூடத்தை விட்டு அ.மார்க்ஸ் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்த இன்குலாப் போகிற போக்கில் கண்ணனைப் பார்த்துக் கூறினார்:

‘இதனால்தான் சொன்னேன், ‘சொல்லாடல் ‘ வேண்டும் என்று! ‘

கூடத்திற்கு உள்ளோ ‘கையாடல் ‘ நடந்து கொண்டு இருந்தது.

ஜப்பான் மொழியில் பாதியும் தமிழ் மொழியில் பாதியுமாகக் கையாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டுக் கூடத்தில் இருந்து சிவகாமி வெளியேறிக் கொண்டு இருந்தார்.

28 – 01 – 2002.

sothipiragasam@yahoo.co.in

( ‘சொல் புதிது ‘ இதழில் வெளியானது )

Series Navigation