திருப்பரங்குன்றத்து நீலாம்பல மலர்கள் போல உன் கண்கள்

author
0 minutes, 7 seconds Read
This entry is part [part not set] of 12 in the series 20001112_Issue


எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்


சிறிய கரையான் சிரமப்பட்டுக் கட்டிய
பெரிய செம்மண் புற்றின் உள்ளிருக்கும் புற்றுச் சோற்றைத் தின்றலுத்து
இலுப்பையின் வெண்மையான பூக்களை
பெருங்கைக் கரடியின் பெரும் சுற்றம் தின்னும்

அப்படி நீண்ட தொலைவு போய், நன்றாக
அரிய பெரிய பொருட்களை எளிதாக பெற்றாலும்
நான் வரமாட்டேன் – என் நெஞ்சே வாழ்க – சேரமன்னர்களது
சுள்ளி எனப்படும் பெரியாற்றின் வெண் நுரை கலங்க
யவனர்களின் நல்ல கப்பல்கள்
பொன் எடுத்து வந்து மிளகு கொண்டு செல்லும்
வளமையான முசிறியை ஆரவாரத்துடன் வளைத்து
பெரும் சமர் வென்று பொற்சிலையை எடுத்து வந்த
யானைப்படை வைத்திருக்கும் போராளியான செழியனின்
கொடிகள் நிறைந்த தெருக்கள் உடைய மதுரை மாநகரின் மேற்கே
பல புள்ளிகளை உடைய மயிலின் வெற்றிக்கொடி உயர்ந்த
ஓயாத விழாக்கள் இருக்கும் முருகனின் திருப்பரங்குன்றத்தில்
வண்டுகள் மொய்க்கும் வட்டச் சுனையில் பூத்திருக்கும் நீலாம்பல மலர்கள்
இரண்டு சேர்ந்திருந்தாற்போல இருக்கும்
இவளது வரியோடிய கண்கள் மழைபோல கண்ணீர் கொட்ட.
(நான் வர மாட்டேன்)

***
(எளிமையாக பொருள் கிடைத்தாலும் என் மனைவி அழ நான் அவளை விட்டு போய் பொருள் சேர்க்க போக மாட்டேன், என்பதை சேர சோழ பாண்டிய நாடுகளின் சிறப்பையும், இன்னும் பல விஷயங்களையும் சேர்த்து நீட்டி முழக்கி சொல்கிறார் கவிஞர்)

***

அகநானூறு 149ஆம் பாடல்

பாடியவர் :எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
திணை: பாலை
துறை: தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
சிறப்பு: சேரநாட்டுடன் யவனர் செய்த வாணிகமும், செழியனின் மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங்குற்றத்து சிறப்பும்

சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
அரிது செய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்-வாழி, என் நெஞ்சே! – சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடா அது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய

ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண் பனி கொளவே
**

சொல் விளக்கம்
சிதலை – கரையான்
சேண் – சேறு
முனையின் – வெறுத்ததாலும்
இருப்பை – இலுப்பை
தொள்ளை – ஓட்டை
எண்கு – கரடி
இருங்கிளை – பெரிய சுற்றம்
நீள்இடை – நீண்ட வழி
கறி – மிளகு
வளைஇ – வளைத்து, முற்றுகையிட்டு
அருஞ்சமம் – பெரிய சமர், அருமையான போர்
படிமம் – பொற்சிலை
வவ்விய – எடுத்துவந்த
மறுகு – தெரு
கூடற் குடா – மதுரை நகர்
பல்பொறி – பல புள்ளிகள்
மஞ்ஞை – மயில்
வெல்கொடி – வெற்றிக் கொடி
ஒடியா – ஓயாத
நெடியோன் – முருகன்
குன்றத்து – திருப்பரங்குன்றத்து

***
இக்காலத் தமிழ் மொழிபெயர்ப்பு – துக்காராம் கோபால்ராவ்
***

Series Navigation

Similar Posts