தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

அரவிந்தன் நீலகண்டன்


‘மகா மங்கலமான புண்ணிய பூமியே

இவ்வுடல் உனது பணிக்கே அர்ப்பணமாகட்டும் ‘ – சங்க பிரார்த்தனை

பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குஜார் இன இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் குழந்தைகளும் அடக்கம். கொலை செய்தவர்கள் இஸ்லாமிய ஜிகாதிகள். காரணம் இந்த மக்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான கிராம பாதுகாப்பு படையில் இணைந்து செயல்படுவதுதான். எங்கோ ஈராக்கில் சித்திரவதை செய்ததாக சொல்லப்படுவதற்கு காஷ்மிர் முதல் நாகர்கோவில் வரை கொடி பிடித்து கூச்சல் போடும் வகாபி ரக இஸ்லாமிய சமுதாய தலைவர்களின் மவுனம் காதைச் செவிடாக்குகிறது. இந்த குஜார் இன மக்களின் தியாகம் யாராலும் நினைக்கப்படாமல் போகக்கூடாது. பொதுவாகவே நம் மதச்சார்பின்மைக்கு ஒரு நோய் உண்டு. அலி மியான்களுக்கும் அவுரங்கசீப்புகளுக்கும் வக்காலத்து வாங்கி அவர்களையே ஏதோ இஸ்லாமிய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக காட்ட முற்படும் இடதுசாரி, சோசலிச மதச்சார்பற்ற கட்சிகள், நமக்கு அஷ்பக்குல்லா கானையோ அல்லது தாரா ஷுகோவையோ, ரஸகானையோ நமக்கு கூறுவதில்லை. அல்லது காஷ்மிரில் அராபிய மேன்மைவாத பயங்கரவாதத்தால் அழிக்கப்படும் உண்மை காஷ்மிரியத்தின் சூஃபி அம்சங்கள் குறித்து சிறிதும் கவலை கொள்வதில்லை. எனவேதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடலாக்குடி எனும் இஸ்லாமியர் அதிகம் வாழும் ஊரில் வாழும் சராசரி இஸ்லாமிய இளைஞனுக்கு ஒசாமா பின் லாடனுக்காக கூறப்படும் ‘மதச்சார்பற்ற ‘ நியாயங்கள் தெரியுமளவுக்கு, யூத வெறுப்பின் ‘நியாயங்கள் ‘ தெரியமளவுக்கு, தக்கலை பீரப்பாவின் பாடல்கள் தெரிவதில்லை. எனவேதான் சராசரி இந்திய இஸ்லாமிய இளைஞனுக்கு பாலஸ்தினீய பயங்கரவாதிகளுக்கு ஏற்படும் பரிவு காஷ்மீரில் அல்லாவின் புனிதப்படை என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களால் படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி முஸ்லீம்கள் குறித்து (குறைந்தபட்ச வருத்தமோ கோபமோ கூட) ஏற்படவில்லை. ஆனால் நாம் அனைவருமே அந்த பாரத இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தலைவணங்க கடமைப்பட்டிருக்கிறோம்.

அடுத்ததாக 28 வயது சுதீர் குமார் புந்திர் மற்றும் அவரது சகோதரர் 18 வயது சகோதரர். சுதீர் ரயில்வே எஞ்சீனியர். காஸிகுந்த்-பாராமுல்லா புகைவண்டி இணைப்புப்பணியில் பணியாற்றி வந்தவர்.அவரையும் அவரை காண வந்த அவரது சகோதரரையும் ஷகீன் என்னும் வெறியனின் தலைமையில் இயங்கும் லக்ஷர்-ஈ-தொய்பா வெறியர்கள் கடத்திச் சென்றனர். 50 இலட்சம் ரூபாய் மீட்புத்தொகையாக கேட்ட இந்த வெறியர்கள் கடத்திச் சென்ற இருநாட்களுக்கு பின்னர் ஜூன் 25 ஆம் தேதி அவர்களை கொன்றனர். கழுத்துகளை வெட்டி. உலகெங்கும் இந்த கழுத்து வெட்டும் ஜிகாதி பண்பாடு அண்மையில் பிரசிக்தி வருகிறதென்றாலும் காஷ்மீருக்கு இது மிகவும் பழைய ஒன்று என்றுதான் கூறவேண்டும். பாரத பண்பாட்டில் சிறிது அதீத ஈடுபாடு கொண்ட சுற்றுலா பிரயாணியான நார்வேஜிய நாட்டு ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓஸ்ட்ரோ 1995 இல் அல்-பரான் (இன்று இந்த அமைப்பின் பெயர் ஹர்கத்-உல்-முஜாகிதீன்) அமைப்பினால் கழுத்து சீவப்பட்டார். தலை துண்டிக்கப்பட்ட அவர் உடல் அல்-பரான் என்ற எழுத்துக்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இதுதான் சர்வதேச அளவில் காஷ்மீரில் நடைபெறும் ஜிகாதி காட்டுமிராண்டித்தனத்தை வெளி உலகிற்கு கொண்டுவந்தது. ஆனால் இதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி பல காஷ்மீரி பண்டிட்களும் சரி, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தலைவணங்க மறுக்கும் இஸ்லாமியர்களும் சரி இந்த காட்டுமிராண்டித்தனத்தை அனுபவித்தே வருகின்றனர். 2001 இல் பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டு ஹிந்து கோவில் பூசாரிகள் தலை துண்டிக்கப்பட்டது. இம்முறை கொல்லப்பட்ட குஜார் இன மக்களில் ஐந்து வயது ஸாகிதாவும் அவளது நான்கு வயது தம்பியும் அடக்கம்.

இன்று மிகத்தெளிவாக லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாதி என நிரூபிக்கப்பட்டுள்ள இஷ்ரத்துக்காக முதலைக்கண்ணீர் வடித்த அரசியல்வாதிகளும், ‘மதச்சார்பற்ற ‘ பத்திரிகையாளர்களும் இன்ன பிற இஸ்லாமிய மேன்மைவாதிகளும் ஸாகிதாவுக்காகவோ அல்லது சுதீர் குமார் புந்திருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீரையும் விடப்போவதில்லை. குறைந்த பட்சம் பாரதிய ஜனதாவாவது தங்கள் தோல்விக்கு யார் காரணம் என குடுமிப்பிடி சண்டை போடுவதை விட்டுவிட்டு இந்த உண்மையான தியாகிகளுக்காக தங்கள் மரியாதையையும் அஞ்சலியையும் காட்டி நாடுமுழுவதும் அஞ்சலி கூட்டங்கள் நடத்தலாம். மீண்டும் இந்த தியாகிகளுக்கு சிரம் தாழ்த்துவோம். இந்த எழுதப்படாத தியாகங்களே நம் தேசத்தை வாழவைப்பவை. நம் ஒவ்வொரு செயலும் இத்தியாகங்களால் சுக வாழ்க்கை வாழும் நம்மை இத்தியாகங்களுக்கு சிறிதளவேனும் தகுதியுடையவர்களாக்கட்டும். ஜெய் ஹிந்த்!

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்