தியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

பாவண்ணன்


மொழிபெயர்ப்பாளர்களின் தளரா முயற்சியால் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பலவேறு வகைப்பட்ட படைப்புகள் தமிழ்வாசகர்களுக்குத் தொடர்ந்து கிடைத்தவண்ணம் இருக்கின்றன. எண்பதுகளில் மீட்சி இதழின் வெளியீடாக வந்த ‘இலத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் ‘ என்னும் தொகுப்பு நல்ல தொடக்கமாக அமைந்து, கடந்த இருபதாண்டுகளில் பலவேறு படைப்புகள் நம்மை வந்தடைந்துள்ளன. அர்ஜைன்டானாவைச் சேர்ந்த போர்ஹெயின் படைப்புகளும் கொலம்பியாவைச் சேர்ந்த காப்ரியேல் கார்சியா மார்க்யூஸின் படைப்புகளும் கியூபாவைச் சேர்ந்த இடாலோ கால்வினோவின் படைப்புகளும் மெக்ஸிகோவைச் சேர்ந்த ஆக்டோவியா பாஸின் படைப்புகளும் சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெருடாவின் படைப்புகளும் ஏறத்தாழ தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளுக்கு இணையாகவே வெளிவந்து பாராட்டைப் பெற்றுள்ளன. இடாலோ கால்வினோ, போர்ஹெ, ஸெர்வானோ சொராண்டினோவின் சிறுகதைகள் மட்டுமே அடங்கிய தனித் தொகுதிகளே தமிழில் வெளிவந்துள்ளன. இம்முயற்சிகளுக்குக் காரணமாக இருந்த மொழிபெயர்ப்பாளர்களான பிரம்மராஜன், சா.தேவதாஸ், எம்.எஸ். சிவக்குமார், அசதா போன்ற அனைவருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்த வரிசையில் சமீபத்தில்¢ தமிழை வந்தடைந்திருக்கும் புதிய ஸ்பானிய நாவல் பராகுவாவைச் சேர்ந்த அகஸ்டோ ருவா பஸ்டோஸ் எழுதிய ‘போர் தொடர்கிறது ‘. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.பாலச்சந்திரன். தமிழில் ஏற்கனவே அறிமுகமான பிற இலத்தீன் அமெரிக்க எழுத்துகள் எடுத்துரைப்பு முறையிலும் கட்டமைப்பு முறையிலும் சோதனைவகைப்பட்டவையாக இருக்கும் நிலையில் இப்போது அறிமுகமாகும் ருவாவின் எழுத்து முற்றிலும் வேறுவகைப்பட்டதாகும். வரலாற்றை முன்வைத்துப் பேசும் இந்நாவல் ஃபிரான்ஷியாவின் சர்வாதிகார ஆட்சிக்காலத்திலிருந்து சாக்கோப் போருக்குப் பின்னர் வந்த ஆண்டுகள் வரையிலான காலத்தையே களமாகக்கொண்டுள்ளது.

ஒன்றுக்கொன்று தொடர்பற்றதைப்போலத் தோற்றமளிக்கக்கூடிய ஒன்பது சித்திரங்களைத் தொகுத்து முன்வைக்கிறது இந்த நாவல். மக்காரியோ என்னும் முதியவர் இடாபா குன்றில் ஒரு காலத்தில் வசித்த இசைக்கலைஞனும் தச்சுவேலை நிபுணனும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவனுமான காஸ்ப்ரோவைப்பற்றிய அறிமுகக்குறிப்புகளைக் குழந்தைகளுக்குச் சொல்வதைப்போல முதல்பகுதி அமைந்திருக்கிறது. எல்லாராடைய அன்புக்கும் விருப்பத்துக்கும் உரிய கலைஞன் காஸ்ப்ரோ. ஆனால் எல்லாரிடமிருந்தும் விலகி காட்டில் தன்னந்தனியே வாழ்ந்து மடிகிறான் அவன். முடியும்போதெல்லாம் தொழுநோயாளிகளிடையே ஒரு மருத்துவரைப்போல வாழ்ந்த இயேசுவின் புகழைப் போதிக்கிற ஆலயவாசிகள் முரண்பட்டவகையில் காஸ்ப்ரோவால் செதுக்கப்பட்ட இயேசுவின் மரச்சிலையை ஸ்தாபிக்க தேவாலயத்துக்குள் இடம் மறுக்கிறார்கள். வெடிவைத்துத் தகர்க்கவும் சதி செய்கிறார்கள். கோபத்துடன் வெகுண்டெழும் பொதுமக்களால் காஸ்ப்ரோ வாழ்ந்துமறைந்த அக்குன்றின் உச்சியிலேயே அந்த இயேசுவின் சிலை நிறுவப்படுகிறது. மானுடகுமாரனின் உருவச்சிலை மானுடர்களாலேயே ஸ்தாபிக்கப்படுகிறது. ‘மரமும் சதையும் ‘ என்னும் இரண்டாம் பகுதியில் வந்ததும் தெரியாமல் மறைவதும் தெரியாமல் மருத்துவச்சேவை செய்துவிட்டுப் போகும் ஒரு ருஷ்ய மருத்துவரின் வாழ்க்கை இடம்பெறுகிறது. ‘நிலையங்கள் ‘ என்னும் அடுத்த சித்திரத்தில் அதிகாரிகளால் வெவ்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட பிரயாணிகளின் ரயில் பயணம் இடம்பெறுகிறது. ‘வெளியேற்றம் ‘ என்னும் சித்திரத்தில் டகுரு-புகுவில் மேட் பண்ணையிலிருந்து தப்பிவரும் காஸ்யானோ- அப்போதுதான் குழந்தையை ஈன்றெடுத்த நாதி தம்பதியினர் எதிர்கொள்ளும் வேதனைகள் இடம்பெறுகின்றன. ‘வீடு ‘ என்னும் பகுதியில் வேராவின் கிராம வருகையும் கிராமத்தில் போர்ப்படையை உருவாக்கிக்கொண்டிருக்கும் சில்வெஸ்டர் அக்வினோவின் அறிமுகமும் சித்தரிக்கப்படுகின்றன. ‘விருந்து ‘ என்னும் பகுதியில் கலகக்காரர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்த குற்றத்துக்காக ராணுவ வீரன் கைது செய்யப்படுவதும் மற்ற கலக வீரர்கள் கொல்லப்படுவதும் முன்வைக்கப்படுகின்றன. ‘தண்டிக்கப்பட்டவர்கள் ‘ பகுதியில் முழுக்கமுழுக்க வேராவின் நாள்குறிப்புகள் இடம்பெறுகின்றன. ‘போர் தொடர்கிறது ‘ பகுதியில் முகமறியாத போர்த்தோழர்களுக்குத் தண்ணீர் லாரி ஓட்டிச்சென்று பகைவர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகும் கிரிபோவின் தியாகக்கதை இடம்பெறுகிறது. ‘பின்விளைவுகள் ‘ பகுதியில் படையிலிருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸாண்டோ மனம் பேதலித்த நிலையில் தன் சொந்தப் பண்ணைவீட்டையே குண்டுவீசித் தாக்கி அழிக்கிறான்.

‘போர் தொடர்கிறது ‘ என்னும் தலைப்பில் இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் நாவலின் உண்மைத்தலைப்பு ‘மனித குமாரன் ‘ (Son of Man) என்பதாகும். மனித குமாரன் வேறு யாருமல்ல, இயேசுவே. ஜெருசலேம் நகரின் தலைமைக்குரு இயேசுவை விசாரிக்கும்போது ‘நீங்கள் கடவுளின் மகனாகிய மெசியாவா ? ‘ என்று விசாரிக்கிறார். அதற்குப் பதிலுரைக்கும் இயேசு தன்னை மனிதகுமாரன் என்றே அடையாளப்பப eத்திக்கொள்கிறார். தன்னை மற்றவர்களைவிட உயர்வாகக் காட்டிக்கொள்ள விரும்பாத அவருடைய மேன்மையான மனம் இச்சொல்லில் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். விசாரணை நடத்தியவர்கள் மரணதண்டனை விதிக்கும்படி ஆளுநரிடம் பரிந்துரைப்பதைக் கேட்கும்போதும் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் மனமேன்மை இயேசுவிடம் இருந்தது. ஒருவகையில் ‘மனிதகுமாரன் ‘ என்னும் சொல்லை துயரங்களை ஏற்றுக்கொள்வதன் அல்லது எல்லா வகையான தியாகத்துக்கும் அணியமாக இருப்பதன் படிமம் என்றே சொல்லவேண்டும். ருவாவின் நாவலில் இடம்பெறும் மாந்தர்கள் அனைவருமே துயரங்கள் நிறைந்தவர்கள். அடிமைத்துயரம். வறுமைத்துயரம். எதிர்த்துப் போராடச் செல்லும் பயணத்தில் உயிரையே பலியாகக் கொடுக்கும் துயரம். இந்தத் துயரங்களுக்கும் தியாகங்களுக்கும் என்ன பொருள் என்பதுதான் இந்த நாவல் எழுப்பும் முக்கியக் கேள்வி. இயேசு அனுபவித்த துயரங்களுக்கெல்லாம் என்ன பொருளோ, அதே பொருள் மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கும் தியாகங்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்துகொள்ளலாம். பராகுவே வரலாற்றில் நிகழ்ந்த போராட்டச் சம்பவங்களே நாவலில் தொகுக்கப்பட்டு நாவலில் முன்வைக்கப்பட்டாலும், இந்தச் சிலுவையேற்றங்களும் மரணங்களும் துன்பங்களும் மனிதகுலத்தை ஏன் தொடர்ந்தபடி இருக்கின்றன என்று காலம்க  1லமாக மானுடன் பதில்தேடி நிற்கிற கேள்வியைநோக்கி நெருங்கிவரும் தருணத்தில் நாவலின் முக்கியத்துவம் கூடிவிடுகிறது. வரலாற்றுநாவல் என்னும் அடையாளத்தை இத்தருணத்தில் மீறிவிடுகிறது நாவல்.

மனிதகுமாரன் நமக்காக ரத்தம் சிந்தினார் என்பதும் நமக்காக சிலுவையை ஏற்றார் என்பதும் கிறித்துவச் சமூகத்தின் பரம்பரை பரம்பரையான நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒட்டிய விவாதமாக நாவல் அமைந்திருக்கிது. மற்றவர்களுக்காக ரத்தம் சிந்துகிற, கண்ணீர் வடிக்கிற, சிலுவையை ஏற்கிற எல்லாரும் மனித குமாரர்களே என்று மனம் அழுத்தமாக உணரும்வகையில் இந்த விவாதக்களம் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலின் ஒன்பது சித்திரங்களும் ஒன்பது வகைகளில் நிகழ்ந்தாலும் அவற்றில் பொதிந்துள்ள புனைவுத் தருக்கத்தாலும் சம்பவ அடர்த்தியாலும் மனத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுவிடுகின்றன. எல்லாச் சித்தரிப்புகளும் அலுப்பில்லாத வகையில் நீள்கின்றன. ஒவ்வொன்றும் தனக்கே உரியவகையில் வாழ்வின் பொருளையும் தியாகத்தின் பொருளையும் மீண்டும் வரையறை செய்ய முயற்சி செய்கிறது. ‘மனிதர்களின் வாழ்க்கை நதியைப்போன்றது. அந்த வாழ்க்கை மற்றவர்களின் வாழ்வுடன் கலக்கலாம். அல்லது சதுப்பு நிலத்துக்குச் சென்று தேங்கி நின்றுவிடலாம் ‘ என்றும் மற்றவர்களின் நினைவுகளில் நீங்காமல் வாழ்பவனே மிக உயர்ந்த மனிதன் என்றும் கதைப்பாத்திரங்கள் அடிக்கடி முன்வைக்கும் பார்வைக்கோணங்கள் அனைத்தும் இத்தகு மறுவரைறயறைகளே. ருவோ எழுதும் பராகுவேயின் புதுவரலாறு இதுவே .

எந்த மொழியிலும் ஒரு மனிதன் இன்னொருவனுக்காக தன் சுகங்களையும் செல்வத்தையும் சிற்சில சமயங்களில் தன் உயிரையும் தியாகம் செய்பவனை மனம்பதற முதன்முதல் அடையாளம் காண்பவன் கலைஞனே. மானுட வரலாற்றுக்கு மீண்டும்மீண்டும் இத்தியாகத்தை நினைவூட்டியபடி இருப்பவை அவனுடைய படைப்புகளே. மானுட வரலாறு என்பது ஒருவகையில் தியாகத்தின் வரலாறாக இருப்பதை கலைஞனே உணர்த்துகிறான். ஒரு நாட்டின் சுதந்தரப் போராட்டமாக இருந்தாலும் அல்லது வாழ்வின் வெற்றிக்கான போராட்டமாக இருந்தாலும் அப்போராட்டங்களின் மறுபக்கத்தில் நிறைந்திருப்பவை கணக்கிலடங்காத தியாகங்களாகும். இந்த நாவலில் பராகுவே மக்களின் பல்வேறு காலகட்டப் போராட்ட எழுச்சிகளும் தயாரிப்புகளும் வேகங்களும் வெற்றிகளும் தளர்வுகளும் ஒருங்கிணைந்து காட்டப்படுகின்றன. இறுதியில் இத்தியாகங்கள்¢ ஏன் முடிவடைவதில்லை ? ஒருவரையொருவர் சிலுவையில் ஏற்றிக் கொல்லும் அம்சம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கவேண்டுமா ? என்கிற புள்ளியில் மோதி வெடிக்கிறது நாவல்.

விரிந்துசெல்லும் கதையமைப்பைக்கொண்டதாக உள்ளது நாவல். மிக நுட்பமாக வெவ்வேறு தனித்தன்மைகள் கொண்டவிதமாக பாத்திரங்கள் வார்க்கப்பட்டிருக்கின்றன. காஸ்ப்ரோவின் சித்திரம் கிட்டத்தட்ட இயேசுவின் சித்திரத்தைப்போல மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இடாபா குன்றில் கிதார் இசை மிதக்கும் அந்தக் காடும் காஸ்ப்ரோவின் குடிசையும் மிகவும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் களமாக அமைந்துள்ளது. இக்குடிசைக்கு அருகில்தான் தேவாலயத்தால் மறுக்கப்பட்ட இயேசுவின் மரச்சிற்பம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இக்குடிசையைச் சுற்றித்தான் ஊராரால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகள் வசிக்கிறார்கள். இதன் அருகில்தான் மரியாவின் சந்ததியினர் காவல்காக்கும் இடுகாடு உள்ளது. தேடுதல் வேட்டை நடத்தும் குதிரைவீரர்களின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு இக்குடிசையி ன் அக்கம்பக்கத்தில்தான் போராளியான கிரிடோ மறைந்துவாழ்கிறான். ஊருக்கு மருத்துவம் செய்ய வருகிற ருஷ்ய மருத்துவனுக்கும் இக்குடிசையே இருப்பிடமாகிறது.

வாழ்க்கை என்பது தியாகத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதே நாவலின் கண்டடைதல். ஒவ்வொரு மனிதனும் தியாக வடிவான மனித குமாரனே. அவனே ஓடும் நதி. ஓடும் நதியிலிருந்தே மானுட வரலாறு எழுதப்படுகிறது. சதுப்புநிலத்தில் தேங்கி நாற்றமெடுக்கும் நதிகள் புறக்கணிப்புக்கு ஆளாகின்றன. ருவோ ஓடும் நதியான தியாக வாழ்வையே ஏற்கிறார். மற்றவற்றை நிராகரிக்கிறார். தியாகமே ஒரே உண்மை. மனித தியாகத்தின் விளைவு என்பது எதுவுமில்லை. இதுவே இடாபா குன்றின் மீது ஸ்தாபிக்கப்பட்ட மரச்சிற்பமான இயேசு விடுக்கும் மெளனச்செய்தி. இச்செய்தியே எல்லாரையும் வழிநடத்திச்செல்கிறது. நாவலில் ஒலிப்பதும் இக்குரலே.

படிக்கும்போது மனம்பதற வைக்கிற தருணங்கள் நாவலில் பல உள்ளன. ஒரு காட்சியில் கிராமத்துப் போராளிகள் ஒன்றிணைந்து முற்றுகைக்காக ஒரு ரயிலில் கிளம்புகிறார்கள். தந்தி அதிகாரி ஒருவன் கொடுத்துவிடும் தகவலால் எச்சரிக்கையடைந்த அதிகாரிகள் முழுக்கமுழுக்க வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட வேறொரு ரயிலை எதிர்த்திசையில் இயக்கி ஒரு குறிப்பிட்ட இடத்தில் போராளிகளின் ரயிலுடன் மோதவைக்கிறார்கள். போராட வந்தவர்கள் அனைவரும் ஒரேகணத்தில் மண்ணோடு மண்ணாகிவிடுகிறார்கள். ரயில்களின் மோதலால் பூமியில் மிகப்பரெிய பள்ளம் உருவாகிறது. மனிதர்களால் எப்போதும் நிரப்பமுடியாத பள்ளமாக அந்த மோதல் அமைந்துவிடுகிறது. இன்னொரு காட்சியில் மேட் பண்ணையிலிருந்து தப்பிவரும் காஸ்யானாவும் நதியாவும் ஒரு புதரருகில் மறைந்திருக்கிறார்க ள். பின்னாலேயே தேடிவரும் குதிரை வீரர்களின் கவனத்தை குழந்தையின் சின்ன முனகல் சத்தம் கவர்ந்திழுக்கிறது. அகப்பட்டுவிடுவார்கள் என நினைக்கும் தருணத்தில் வேறொரு புதரிலிருந்து முனகியபடி புலியொன்று வெளியே வருகிறது. வீரர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு அப்புலி பலியாகிறது. இறந்துபோன புலியைச் சுமந்துகொண்டு போகிறார்கள் வீரர்கள். குதிரைவீரர்கள் அல்லது புலி என இரண்டு திசைகளில் எத்திசையில் அகப்பட்டிருந்தாலும் மரணம் நிச்சயம் என்கிற நிலையில் எதிர்பாராத விதமாக உயிர்பிழைக்கிறார்கள். பதற்ற்முட்டவும் நெகிழவைக்கவும் நாவல் நெடுக இத்தகு சம்பவங்கள் பல காணப்படுகின்றன.

தமிழுக்கு இந்த நாவல் மிகமுக்கியமான வரவு என்றே சொல்லவேண்டும். தங்குதடையில்லாத தமிழில் இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கும் எஸ்.பாலச்சந்திரனுக்குத் தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டுள்ளது. அழகுற வெளியிட்டிருக்கும் விடியல் பதிப்பகம் பாராட்டுக்குரியது.

( போர் தொடர்கிறது-ஸ்பானிய நாவல். மூலம்: அகஸ்டோ ருவா பஸ்டோஸ். ஆங்கிலத்தில்: ரஷேல் காஃபின், தமிழில்: எஸ்.பாலச்சந்திரன். விடியல் வெளியீடு, 11, பெரியார் நகர், மசக்காளிப்பாளையம் வடக்கு, கோவை-641 015. விலை ரூபாய் 150 )

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்