திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

இப்னு பஷீர்


1) ‘திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?’ என்று கார்கில்ஜெய் என்பவர் கேட்டிருந்தார். தூற்றுவது நானல்ல. ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை வைத்து அவசியமில்லாமல் பாரதி திப்புவை தூற்றியிருப்பதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். அனைத்து மன்னர்கள் மீதும் ஆத்திரம் கொண்டவர் பாரதி என்றால் சமண முனிவர்களை கழுவிலேற்றிய பாண்டிய மன்னன் மீது ஏன் ஆத்திரம் கொள்ளவில்லை? பாண்டிய மன்னன் முஸ்லிம் அல்ல என்பதாலா? அவன் சைவர்களுக்கு அனுகூலமாகவே நடந்து கொண்டான் என்பதாலா?

2) திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக காந்தி ஒரு கட்டுரையில் எழுதினார். (காந்தியின் பெயரைச் சொன்னாலே இங்கு சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. விடுதலைப்போரில் அவரது பங்களிப்பை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் சிலர் பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சரி. அது வேறு விஷயம்.) வரலாற்றுக் குறிப்புகள் என்று வரும்போது, யாரோ ஒரு சுற்றுலா வழிகாட்டியின் வார்த்தைகளை விட, தேச விடுதலைக்காக பாடுபட்டு, அதிலேயே தனது உயிரையும் பறிகொடுத்த காந்தியின் வார்த்தைகளை நான் ஆதாரமாக எடுத்துக் கொள்கிறேன்.

3) ‘எப்போதுமே மகாத்மா இந்துக்கள் செய்யாத தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும் வழக்கத்தை கடைபிடித்தார்’ என்று சொன்ன கார்கில்ஜெய் ‘ஆயிரக்கணக்கான அப்பாவி ஹிந்துக்களை ஜாலியன் வாலா பாக்-கில் சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரை தேசபக்தர் உதம் சிங் கொன்றார். மகாத்மா காந்தி ‘வெறியன் உதம் சிங் செய்த படுகொலைக்காக’ ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.’ என்று தெரிவிக்கிறார்.

உதம்சிங்க் ஜெனரல் டயரை சுட்டுக் கொன்றது மறுக்கவியலா உண்மை! மற்றவர்கள் இதை வீரச்செயலாக பார்த்தபோது, காந்தியின் கண்ணோட்டம் வேறு விதமாக இருந்தது. அவர் இச்செயலை தவறு எனக்கருதினார். அதனாலேயே அவர் அச்செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். அதேபோல, பூர்ணய்யா திப்புவுக்கு செய்த துரோகத்தை பிறர் இயல்பானதாக கருதியபோது, காந்தி அதை அவமானகரமானதாக கருதினார். அதனாலேயே அவர் அச்செயலுக்காக வெட்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இவ்விரண்டு சம்பவங்களிலும், காந்தியின் கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதத விலக்கி விட்டு பார்த்தாலும், சர்ச்சைக்குறிய அச்செயல் நடைபெற்றே இருக்கிறது என்பது தெளிவாகும். ஜெனரல் டயரை உதம்சிங்க் சுட்டுக் கொன்றது எப்படி உண்மையோ, அதே போல பூர்ணய்யா திப்புவுக்கு துரோகம் இழைத்ததும் வரலாற்று உண்மையே!

– இப்னு பஷீர்


ibnubasheer@gmail.com
http://ibnubasheer.blogsome.com/

Series Navigation