ஆபிதீன்
சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திலிருந்த மரத்தின் கிளையில் தாவிக்கொண்டிருந்த ஒன்றை அது ஒரு குரங்குதானென்று கண்டுபிடித்து என் மனைவியிடம் சொல்லுமுன்னரே அவள் , ‘ஹை…ஆம்புளெ கொரங்கு ‘ என்று பரவசமாக என்னிடம் சொன்னாள் முன்பு. அத்தனை கூர்மையான கண்கள் அவளுடையது. அந்தக் கண்கள் இப்போது கடுமையான கோபத்தில் சிவந்திருந்தன.
பெண்களின் கண்களே இப்படித்தானாம். சக்திப்பிழம்பாகச் சொல்வார்கள் ஹஜ்ரத். ‘ஒரு செகண்ட்தான் பாப்பா. ஒங்க மூக்கு முடி, கம்கட்டு மஞ்ச பூத்துக்கிறது, கால்நவம் வெட்டாம இக்கிறதுண்டு எல்லாம் தெரிஞ்சிடும். ஒரு படத்துலெ சொல்லுவான்: ‘அஹ தூங்கிக்கிட்டிக்கிறாஹா. நாம வெளையாடிக்கிட்டிக்கிறோம். அஹ முழிச்சாஹா…. ? நாம தொலெஞ்சோம் ‘ண்டு. அவ்வளவு பவர் இக்கிது. அவ பேசுறதுலாம் இல்ஹாம். துனியாவெ அலஹாக்குக்குறதே கொலந்தெயும் பொம்பளெயும்தாம்ப்பா… ஒண்ணு தெரியுமா ? எதுக்கும் கட்டாயப்படுத்த முடியாது அவளுவளெ.. ஏதோ பக்கத்து வூட்டுக்காரி எதுத்த வூட்டுக்காரி சொல்லிக்கொடுத்துட்டா….பால் கொடுக்கனும் பாய் விரிக்கனும்ண்ட்டு. அவளுவளும் ஏமாந்துபோயி ஏத்துக்கிட்டு.. ஏதோ ஓடுது. அதுவரைக்கிம் சலாமத்து ‘
இப்படியும் பெண்கள் ஆண்களிடம் கருணை காட்டிவிடக்கூடாது. ஆனால் ஹஜ்ரத்தின் பேச்சில் உண்மையும் இருக்கிறதுதான். அஸ்மாவின் பார்வையில் நான் எரிந்து விடுவேன் போல்தான் இருந்தது. பொதுவாக அபூர்வமாகவே அவளுக்குக் கோபம் வரும். அபூர்வம் இனி தினமும் வரும் போலிருக்கிறது.
ஏதோ பாடப் போகிறாள் என்னை. திட்டுவதை , பாடுவது என்பது ஊர் வழக்கம். பாட்டம் உடுறது… சாபம் வாங்கித் தொலைத்த சபராளியை என்ன சொல்லிப் பாடினாலும் தகும்தான். pond+frog+plop ? அவன் எதுவும் அல்ல.
வலா ஹவ்ல வலா குவ்வத்த…
பொறுத்துப் பொறுத்துப்பார்த்துதான் அஸ்திரத்தை வீசியிருக்கிறாள். எழுந்து கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்த அதே நொடியில் வீழ்ந்தேன் வேறு வழியில்லாமல். பரம்பைசா இல்லாத முஸாபரைப் பார்த்து பால்பவுடர் வாங்கச் சொல்கிறாளே… அப்படி ஒன்றும் நான் பிச்சைக்காரனல்ல. முழுதாக ஒரு பதினோரு பைசா நாணயம் என் சட்டைப் பையில் இருக்கத்தான் செய்தது. இந்த செல்வச் செழிப்பு இருந்தும் கூட அனீஸின் பசியைத் தீர்க்க முடியாதது என் குற்றமா அரசாங்கத்தின் குற்றமா ? வேலை தராத பா-ரதமாதா, என்னை இந்தப் பாடு படுத்துகிறாயே…
அஸ்மாதாவிடம் அமைதியிழந்து சொன்னேன்: ‘இவ்ளோபெருசா வச்சிக்கிட்டு ஏன்புள்ளே இல்லேங்குறா ? கொடேன் ‘. சுரப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்ற விஞ்ஞானமெல்லாம் தெரியாத கொழுப்பெடுத்தவன் நான்.
‘சுத்தமா நிண்டுடிச்சி மச்சான்.. நீங்களும் அப்பப்ப வாயை வச்சிப்புடுறீங்க.. என்னா பண்ணித் தொலையிறது ? ‘ – படபடப்பாகச் சொன்னாள். என் அசட்டு இளிப்பைப் பார்த்து அத்தோடு விடாமல் , ‘பெருசா இருந்தா வரணும்டு சட்டமா ? பக்கத்துவூட்டு நானாவுக்கு ‘பலாப்பளம் ‘ பெருசாத்தான் இக்கிது ‘ என்று பொரிந்தாள். ‘மர்ஹபா ‘ என்றேன். நொடியில் சுதாரித்துக்கொண்டு , ‘..ண்டு சொல்றாஹா.. ‘ என்று தொடர்ந்தாள். ‘அஹலுக்கு புள்ளையை காணோம். நான் பெத்த சீதேவி மவனுக்கு இவ்வளவு நோவுனை.. ‘ என்று முடித்து அழுதாள். ‘மர்ஹப்தைன் ‘ என்று பாராட்டைப் பன்மையாக்கினேன். செளதியிலிருந்தவனல்லவா ? ஊரில் ‘ரெட்டெ மர்ஹபா ‘ என்பார்கள் எளிமையாக. ‘கொட்டெ மர்ஹபா ‘ என்பதுதான் இன்னும் பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்.
குடித்துவிட்டு உளறும்போதும் துக்கத்தை பிழியப்பிழிய அழுது தீர்க்கும்போதும் உண்மை வெளிப்படும் என்று சொல்வார்கள். உண்மைதான் போலிருக்கிறது. பார்த்தால் கூட பலாப்பழம் இனிக்குமே.. முள்தோல் போர்த்திய ‘மூன்றுமுடிச்சு ‘ காட்டி வேதனையிலும் முறுவலிக்க வைத்தீர்களே நானா , நீர் வாழ்க. அஸ்மா , உன்னைச் சொல்லி குற்றமில்லை. கொல்லைசுவர் இடிந்து விழுந்திருப்பதில் நானும் கூடப் பார்த்தேன். ‘கொல்லையிலெ போவா ‘ என்று ஏகத்திற்கு நாம் சின்னவயதில் திட்டுவாங்கியதன் பலனால்தான் இம்மாதிரி பெரும் கொடைகளைக் கொள்ளையடித்து நம் கொல்லை கொடுக்கிறது போலும்.
பெரிதாக இருப்பதாலேயே சிறப்பு வந்துவிடாதுதான். என்னைக்கூட ஊரில் பெரிய அறிவாளி என்றுதான் ஒருவர் கருதுகிறார். அட, நான் அல்லங்க அது. எதற்கு வீண்வம்பு என்று யாருடனும் பேசாமல் ஒதுங்கிப் போனால் இப்படியா ? பேசினால் உளறிவிடுவேன் என்ற பயத்தில்தானே அப்படி வாயைப் பொத்துகிறேன். அப்போதும் விடுவதில்லை.
‘ரொம்ப நாளா சத்ததையே காணோமே ‘ என்று கேட்டார் அவர்.
‘பாங்குதான் சொல்லனும் அதுக்கு ‘
‘அல்லாஹூ அக்பர், ஒங்கட்டயா பேசமுடியும் ? ‘ என்று நகர்ந்து விட்டார் அவரும் பேச்சில் அப்பைசப்பையல்ல. வறுமை ஏறஏற வாய்க்கொழுப்பு அதிகமாகுமோ ?. தர்ஹா மார்க்கெட்டில் அவரை ‘உல்லான் வாங்கலையாங்கனி.. ? ‘ என்று கேட்டிருக்கிறான் கடைக்காரன். ‘உள்ளானுக்கு உல்லான். நான் இல்லான் ‘ – இவர். ‘ஜோக் ‘ அடிப்பதல்ல, கொல்லாபுரம் மனிதர்களின் இயல்பே அதுதான். என்னமோ சொல்ல வந்தேனே…ஆங்…நான் அறிவாளியாகத் தெரிவதற்குக் காரணம் அகலமான என் நெற்றியாம். இந்த சாமூத்திரகா லட்சணப்படிப் பார்த்தால் அஸ்மாவுக்கு கூடத்தான் நெற்றி அகலம்.
தமாஷூக்குச் சொன்னேன். ‘மஹ்சரின் கண் ‘ணாக ஐந்தாவதோடு வீடடக்கப்பட்டாலும் அஸ்மா அறிவாளிதான். என்னைப்போன்ற பிழைக்கத்தெரியாத மடையனுக்கு அவள் கிடைத்தது பேரதிர்ஷ்டம். ‘புராக் மாதிரி இக்கிது அந்த புள்ளே ‘ என்று ஊர்ப்பெண்களை பராக்கு பார்க்க வைத்த பேரழகி. ஜிவ்வென்று தூக்கிக்கொண்டு பறக்கும் குதிரை. Onewayல் ஊர் வந்திருந்த நான் கொஞ்சம் கூட முகம் சுண்டக் கூடாதென்று நினைப்பவள். அவள் மட்டும் இல்லையென்றால் கஷ்டங்கள் வந்திருக்குமா ? ‘கஷ்டங்கள் வருவது புடம்போட. நாம் யார் என்று தெரிய ‘ என்பது ஆன்மீகத்தின் பாலபாடம். ஆன்மீகமே கஷ்டம்தானே என்கிறீர்களா ? அதைப்புரிவதும் ஆன்மீகம்தான் – குருவை நிராகரிப்பவர் பெரும் குருவாவதுபோல.
குரு என்றதும் கக்கூஸ் ஞாபகம் வருகிறது. கக்கூஸ் இல்லாத வீடு ஒரு வீடா ? முடியெடுப்பதற்கு மட்டுமல்ல கக்கூஸ், முக்கிக்கொண்டே முடிவெடுக்கவும்தான். முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு குதத்தைச் சுருக்கி விரிக்கச்சொல்லும் அந்தத் தரீக்கா ரகசியங்களெல்லாம் இப்போது வேண்டாம். எடுப்புக் கக்கூஸை எடுத்தெறிந்து எங்கள் மானம் காக்க தீர்மானம் போட்டாள் அஸ்மா. மாமிக்கு கால்வலியென்று ஸ்பெஷலாக யூரோப்பியன் கக்கூஸ் போட்டதில் பாதி காசு போயிற்று. W.Cயின் மேல் வெளிநாட்டு கம்பெனி பெயர் DURR என்று – Uக்கு மேல் இரண்டு புள்ளிகளுடன் – இருந்ததில் மாமிக்கு வெள்ளைக்காரி போல ஒரு மிதப்பு. அவர்கள் போய் வரும்போதெல்லாம் மிதக்கும். ‘ஏன்டி , flush செய்ய மாட்டாஹலா ஒங்க உம்மா ? ‘ என்று அஸ்மாவிடம் கேட்டால் , ‘செஞ்சிப்பாஹா மச்சான்; அஹ பீக்கு வெயிட் பத்தலே போலக்கிது ‘ என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள். இதற்குமா செலவு செய்வது ? ‘ஒலக்கையெ முழுங்கட்டும் ‘ என்று சொல்லிவிட்டு மீதியிருந்த மூவாயிரம் ரூபாயில் காரைக்கால் போய் கம்ப்யூட்டர் கற்றேன். திறமை வளர்ந்தால் சந்தர்ப்பம் தானாக வருமென்பார்களே…அதனால்தான். அந்தப் பெரும்பிசாசு அந்த நேரத்தில்தான் எங்கள் ஊர்ப் பக்கம் வந்திருந்தது. இப்படியெல்லாம் செய்வதற்குப் பதிலாக மிருகத்தின் உடல்பலத்தையும் வேட்டையாடும் லாவகத்தையும் பெற்றிருந்தேனென்றால் எதையாவது பிடித்தோ அடித்தோ லட்சங்கள் சம்பாதித்திருக்கலாமோ ? தெரியவில்லை. இப்போது புலம்பிப் புண்ணியமுமில்லை.
சவுதி அராம்கோவிலிருந்து திருடிவந்த – கறுப்புத்திரையில் பச்சை எழுத்துக்கள் வரும் – அந்த ஒரே ஆயுதத்தை வைத்து அந்த ஆள் சார்லஸ்பாபேஜின் சகாமாதிரி அலட்டினாலும் நான் கொஞ்சம் கற்றுக்கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். முக்கியமாகக் கற்றது , எப்படி முட்டாள்தனமாக நாம் செலவழிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் , மானிடரை ‘உர்ர் ‘ரென்று முறைத்துப் பார்க்கும் உலகக்கலையில் தேர்ந்தேன். இதற்குக் காலைதோறும் போய்வர பஸ் செலவு ? அஸ்மாதான் கொடுத்தாள்.
மாலைநேரக் கடைத்தெருவில் கமிஷன் வேலை பார்த்து நான் கொடுத்த காலணாவில் , ‘குண்டும் இல்லாம மருந்தும் இல்லாம ‘ குடும்பத்தை ஓட்டுவதற்கு அவள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. பரிசாக அவளுக்கு நான் கொடுத்தது , இரவுநேரத்தில் , ‘தொப்பித்தலையன் ‘ என்று அவள் செல்லமாக அழைக்கும் என் ‘துப்பாக்கி ‘யிலிருந்து வந்த தொடர் குண்டுகள்தான். உடல் சரியில்லாத சமயங்களில் ‘ஊசி ‘ போடச்சொல்வாள். அவ்வளவுதான். ‘சே, இதுவா.. ‘ என்றால் பிரிவின் கொடுமை உணர்ந்த மனைவியின் நோக்கில் பாக்கனும்ங்க… ‘உம்மாவெ பிரிஞ்சி வாப்பா, ஒன்னெப் பிரிஞ்சி நான் ‘ என்று காத்து பிரிஞ்சிக்கிட்டே கவிதை வாசிப்பதெல்லாம் பத்தாது. முப்பது வருடம் தொடர்ந்து சபரில் இருந்தால் -ஆமீன்- முப்பது மாதம் மனைவியுடன் சேரலாம். நல்லபிள்ளையாக மாதம் இருபது என்று அதைக் கணக்கிட்டால் கூட மொத்தத்தில் ஆறுநூறு முறைதான் மனைவியை மருவலாமென்றால் என்ன மயிரு வாழ்க்கை இது ? அனுபவித்திருக்கிறீர்களா ? இடக்கரலடக்கல் பற்றி மட்டும் இளித்துக் கொண்டு சொல்ல வந்து விடுவீர்கள். எல்லாம் தொங்கிப்போன வயதில் , குறியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, ‘அஸ்மா, சரியா சொன்னா ஒனக்கு பத்து மார்க். லெஃப்ட்லெ வுலுவுமா ரைட்லெ வுலுவுமா ? ‘ என்று நான் பந்தயம் கட்டப் போகும் காலத்தை நினைத்தாலே பகீர் என்கிறது. அஸ்மாக்கள் தோற்கவே மாட்டார்கள்.
செளதியிலிருந்தபோது , ‘ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் அசந்து குசுநாறிப்போய் பெண்டாட்டியைச் செய்வார்கள். நாங்கள் ஊர் வந்தால் ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரேமாதத்தில் போடுவோமாக்கும் ‘ என்று மேதாவி மாதிரி நான் கடிதம் எழுதியதற்கு நண்பன் ரகுதான் செருப்பாலடித்த மாதிரி பதில் எழுதினான்.
நல்லா இருக்கேடா நீ சொல்றது.. ஒண்ணு செய், ஏன் தினமும் பேலனும் ? அதையும் ரெண்டு வருஷம் சேர்த்து வச்சி ஊர் வந்து ஒரேயடியா பேலுங்க.
இன்னும் அந்த வாசகம் மறக்கவில்லை.
அதற்காகத்தான் செல்லக்கிளி alias வெட்டுக்கிளி அத்தனை முக்கியத்துவம் கொடுத்தாள் இப்போது . செமபோடு. அவள் உடல் தந்த நிம்மதி இந்த ஜென்மத்திற்கும் போதும். அத்தனை வகைகள். கலவி ஒன்று போதும் கவலை மறக்க . இதில் Top : #89தான். ‘விஷயத்தை ‘ பரஸ்பரம் சும்மா பார்த்துக்கொண்டே இருப்பது. ஒரே ஒரு கஷ்டம், மறதி அநியாயமாக வரும். பார்த்ததாகத் தெரியாது. மறுபடிமறுபடிப் பார்ப்போம்.
‘பொண்டாட்டியோட படுக்குறதை சாதாரணமா நெனச்சிடாதீங்க. அதை வுட ரூஹானியத் , இபாதத் கிடையாது. சரியா செய்ய முடியாத காரணத்துனாலதான் அதுக்குள்ள லாபத்தை அடையமுடியாம போவுது உங்களாலெ.. ‘ என்பார்கள் ஹஜ்ரத் – தன் சீடர்களிடம். ஒரு பாட்டும் வரும் உற்சாகமாக :
‘உச்சந் தலையிலு முகங்கண்ணிலு
முவந்த இருகன்னங் குழிதழும்
இச்சையுட னிருவிலாபுறமு
மிசைந்த தனமிரண்டு மிடை நடுவும்
பச்சமுடன் றெப்பு ழரையல்குலும்
பரிந்து நாவு கொண்டாட்டி நீட்டி
யச்சமின்றியே யமுதம் வாங்கி
யருந்தும் பெரியோர்களமலாகுமே ‘ (*3)
அமல்… கல்யாணமான ஹஜ்ரத்துகளின் கானாப்பாட்டே தனிதான். வக்கிரமோ உக்கிரமோ , தஸவ்வுஃப் தெரிந்தபிறகு தவறு செய்யக்கூடாது. அதுவும் நக்கலாக எழுதுபவன். ஆனால் இப்போது அமல் அல்ல , அமுல்தான் தேவை. அரேபிய மருத்துவத்தில் அற்புதப் பங்கை வகிக்கும் தேனைச் சுவைத்தும் தேனீக்கள் கொட்டின. உவாங் வேண்டியிருந்தது எதற்கும்.
யுவாங்சுவாங்கைகூடப் பார்த்து விடலாம், இந்த ‘உவாங்உவாங் ‘ஐப் பார்ப்பது அத்தனை கஷ்டம். உவாங் என்றால் ஊரில் பணம். மலாய் பாஷை. ‘ஆப்பாபியாங் ஓராங் ஆப்பையெ தூக்கிட்டு ஓட்றான் ‘ என்பார்கள் என் வாப்பா வேடிக்கையாக. உண்மையிலேயே முப்பது வருஷம் ஆப்பையைத் தூக்கிக்கொண்டு நெருப்பில்தான் நின்றார்கள் கோலாலம்பூரின் மஸ்ஜித்இந்தியா ஹோட்டல்களில். என் சீதேவி வாப்பா….
என்ன செய்வதென்று புரியவில்லை. சொந்தங்கள் , கடைத்தெரு என்று எல்லோரிடமும் கடன் வாங்கியாகி விட்டது. துபாய் கஃபாலத் விசாவை வாங்கி இதோஅனுப்புகிறேன் அதோ அனுப்புகிறேன் என்று ஒரு நண்பன் இழுத்தடித்துக் கொண்டிருந்தான். பணத்திற்கு எப்படித் தோது பண்ணுவதென்று தெரியவில்லை. உம்மாவின் முகமோ எரிமலையாய் இருந்தது. அப்படி அவர்கள் முகம் காட்டினால்தான் ஃபிரான்ஸில் தட்டு கழுவி பணம் அனுப்பும் தம்பிக்குப் பிடிக்கும். என் பங்காக மாதப்பணம் கொடுத்து மாதங்கள் பலவாகிவிட்டன. ஆயினும் தொடர்ந்து பகல் சாப்பாடை மட்டும் உம்மா வீட்டில்தான் சாப்பிட்டேன். ‘உம்மா என்றழைக்காத உயிரில்லையே.. உம்மாவை வணங்காமல் உயர்வில்லையே.. ‘ என்று உயிரைவிட்டுப் பாடினேன் காசுதாஸாக. பாட்டா ? யாருக்கு வேணும் ? நோட்ட தா மவனே..
கல்யாணமாகாத மூத்த தங்கச்சியால் அன்போடு வைக்கப்படும் தட்டின் சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்தது. தாய்சொல்லைத் தட்டக்கூடாது. வெறும் தட்டை வைத்தாலும் சாப்பிடு. திட்டைப் பொருட்படுத்தாமல் அங்கே கோபித்துக்கொண்டு பகல்வேளையில் மனைவியிடம் போனால் என்னால் அவளுக்கு மேலும் செலவு அதிகரிக்குமென்று தவிர்த்தேன். கடன் வாங்கியாவது காடை பொறிப்பாள் அஸ்மா. என் ‘காடை ‘க்கு ரொம்ப முக்கியம். அஸ்மாவின் உம்மாவும் முணங்க ஆரம்பித்தார்கள். மகளின் நகைகள் வட்டிக்குப் போவதும் விற்கப்படுவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்வது ? அந்த நகைகளுக்கும்தான் பிடிக்கவில்லை. அஸ்மாவை செய்வதைத்தவிர வேறு ஏதாவதும் நான் செய்தாக வேண்டும். என்ன செய்ய ?
அஸ்மாவிடம் புலம்பினால் ‘அல்லாஹ் இக்கிறான் ‘ என்கிறாள் பெரிய அவுலியா மாதிரி. அட, யார் இல்லையென்றது ? அல்லஹூ சமது.. எந்தத் தேவையுமற்றவன். மனிதர்களைக் காப்பாற்றும் தேவை கூட அவனுக்குக் கிடையாது. தன்னைக் கேடயமாக வைத்துக்கொண்டு பிழைக்கும் முஃப்திகளின் பரிந்துரையில் , எழுத்தாளர்களின் தலைக்கு மேலே ஃபத்வா கத்திகள் தொங்கினால் மட்டும் பரம இன்பம். கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் பாலுக்கு நாயாய் அலைபவர்களல்ல என்றா ? ‘நானோ என் நபியோ அப்படி சொல்லலையேப்பா.. ‘ என்று அவனும் புலம்பலாம். அவன் படும் கஷ்டம் சொல்லி மாளாது. சரி, அதைவிடு அஸ்மா, உனக்கு என்ன வேண்டும் இப்போது ? பால்பவுடர் . செரிமானத்தை lock செய்யாத செரிலாக் அல்ல , அமுல். ஆறுமாதம் வரை அதுதான். எப்படியாவது வாங்கி வந்து கொடுக்க வேண்டும். அவ்வளவுதானே ?
‘காசுக்கு எங்கேடி போவேன் ? ‘
‘வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபிbல்லாஹ்.. போக்கு காட்டாம புள்ளைக்கி மாவுடின்னுக்கு வளியெ பாருங்க. ஹூம்.. ‘ – முகத்திலடித்தாற்போல சொன்னாள் அஸ்மா.
பெரிய அரபுக்காரி என்ற நினைப்பு… ஆனால் வாக்கியத்தின் அர்த்தம் தெரியாமலேயே சொல்கிறாள். சங்கடம் வரும்போதெல்லாம் , மகத்துவமிக்க அல்லாஹ்வின் புகழை இப்படித்தான் ஊர் பாடுகிறது. ‘அல்லாஹ்வைத் தவிர எந்த ஆற்றலும் யாருக்கும் இல்லை ‘ என்று அர்த்தம். இல்லாபில்லாஹி= அல்லாஹ்வைத் தவிர. இதைக் கொல்லாபுரம் ஆலிம்ஷாக்களிடம்தான் கேட்டறிந்தேன். வேறு ஒரு அரபி வாக்கியம் சொல்லி அதற்கு அர்த்தம் கேட்டபோது இது கிடைத்து விட்டது. எது தெரிந்து என்னாகப் போகிறது, எனக்குத் தெரிய வேண்டியது அஸ்மாவின் கோபத்தை எப்படித் தணிக்க வேண்டும் என்பதுதான்.
டெலிஃபோன், டி.வி என்று அவள் கேட்பதற்கெல்லாம் நான் ஏதாவது சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருந்ததில் கோபம் வரத்தான் செய்யும். நான் என்ன செய்வேன் ? அப்போது அதெல்லாம் பெரிய மனிதர்கள் வீட்டில்தான் எங்கள் ஊரில் இருந்தது.
பாவம், கோபப்படக்கூடாது அவள்மேல். பால்கொடுக்கவெல்லாம் கட்டாயப்படுத்த முடியுமா ? ‘ஒட்டகத்தின் அம்பாரியிலிருந்தாலும் கணவன் கூப்பிட்டால் மனைவி வரவேண்டும் ‘ என்ற ஹதீஸைப் படுக்கைக்குப் பயன்படுத்தவே பதறும்போது , பால் நின்றுபோனவளிடம் பாய பைத்தியமா ? பெண்களின் அத்தியாவாசியக் கடமையா இது ? வேறுவேலையற்ற வானவர்கள் விடியும்வரை வைதால் வைது விட்டுப் போகட்டும். நான் சொல்ல மாட்டேன். வானவர்களை விட மனிதன் உயர்ந்தவன் என்று குறிப்பாகச் சொல்கிறது இறைமறை(*1).
அந்தக்கால அரபுநாட்டில் பால்கொடுக்கவே தனியாக செவிலித்தாய்கள் இருந்திருக்கிறார்கள். நாயகத்திற்கு கொடுக்கவந்த ஹலீமாவின் வற்றிப்போன மார்பகம் கூட வற்றாத ஜம்ஜம்-ஆக மாறி அமுதம் சுரந்ததும் பக்கத்தில் படுத்திருந்த கிழட்டு ஒட்டகையின் மடு கூட பருத்ததும் வரலாறு. ‘பெண்மணி ஆமினா பெற்றிடு தவமணி ஹலிமா வின்பால் அருந்திய மன்மணி ‘யான நாயகமா நாமெல்லாம் ? இன்னல்லாஹ வ மலாயி கத்தஹூயுஸல்லூன அலந்நபிய்யி யா அய்யுஹல்லதீன் ஆமனூஸல்லூ அலைஹிவ ஸல்லிமூ தஸ்லீமா (*2). ‘கரடுமுரடான ‘ சிறுகதைக்குள் நாவல் எழுதக் கூடாதென்பது விதியென்பதால் தொடராமல் விடுகிறேன்.
வெளியாளை வைத்து ஏற்பாடு செய்யலாம். என் சொந்தக்காரர் ஒருவருக்கு வீட்டு வேலைக்காரி பக்கிரிச்சிதான் பால் கொடுத்தாளாம். வளர்ந்தபிறகு அவர், பால்கொடுத்தவளின் மகளையே பதம் பார்த்தாரென்றாலும் பாசம் மட்டும் மாறவில்லை. அஸ்மா வீட்டில் வேலைக்காரி கிடையாது. என்மேல் அவ்வளவு நம்பிக்கை. அடுப்படிவேலைக்கு உதவுகிறேன் என்று ஒரு கிழவி எப்போதாவது வரும். அஸ்மாவின் உம்மாவைச் சொல்லவில்லை , கோபித்துக் கொள்வார்கள். தன் துணிகளைத் துவைக்கும்போது அப்படியே காற்றில்லாத நீள பலூனாகத் தொங்கும் தன் முலைகளையும் தரையில் விட்டு அலசிப்பிழிந்து முதுகுப்பக்கம் போட்டு காயவைக்கும் முத்திமுறுவுன கிழவி அது. நானாவது கொடுக்கலாம் என்றாலோ பாழும் இந்த இயற்கை பெரும் வஞ்சனை செய்து விட்டது. இயற்கையை வெல்லவே மனிதன் பிறந்திருக்கிறான். அவன் பால்பவுடரைக் கண்டுபிடித்தான்.
தாய்ப்பாலுக்கு இருக்கிற நோய்எதிர்ப்பு சக்தி , அதைக் கொடுக்கும்போது பிள்ளைக்கும் தாய்க்கும் உருவாகும் விவரிக்க இயலாத உறவு , பால்பவுடரில் கிடையாது என்கிறார்கள். எனக்கு இதில் நம்பிக்கையில்லை. என் உம்மாவுக்கும் எனக்குமுள்ள உறவே சாட்சி. சாலியா , சதக்குப்பை என்று லேகியம் கிண்டி சாப்பிடாமலேயே திடனாக இருந்த உம்மா , எனக்கு நாலு வயது வரை தாய்ப்பால் கொடுத்தார்கள். எதற்கும் ஒரு பாதுகாப்புக்கென்று வாங்கிவைத்த மாவுடின்னுக்கு வேலையே இல்லையாம். எனக்கிருக்கும் எழுபத்தெட்டு நோய்கள் இருக்கட்டும், வந்ததும் வளர்ந்திருப்பதும் உறவா ? துறவு. தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகள் மற்றபிள்ளைகளைவிட புத்திசாலிகளாக இருக்கும் என்பதும் சரியில்லை. உலகத்தில் நான் ஒருவன் மட்டும் இருந்தால்தான் அது உண்மையாகும். எதிலுமே உண்மை கிடையாது என்று தத்துவம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. அனீஸூக்கு இப்போது பால் வேண்டும். அதை வாங்கப் பணம் வேண்டும். பணம்தான் உண்மை. ஆன்மிகமெல்லாம் அப்புறம்தான்.
அஸ்மா பக்கமும் இதில் குற்றம் இருந்தது. என் உம்மாவிடம் போட்ட சண்டைகளைச் சொல்லவில்லை. சண்டையில்லாமல் மருமகளா ? ரகுவின் படித்த மனைவி எழுதியிருந்த ஒரு பாட்டிவைத்தியத்தை அவள் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடிக்காததைச் சொல்கிறேன். அது ஒன்றுமில்லை, அற்பத்திலும் அற்பமான பூண்டு. அதை Elixre of Life என்றிருந்தது மீனாட்சி. அண்டவாதம்,கபால வாயு, மூலவாயு போன்ற முன்னூற்றிருபது நோய்கள் போக்குவது தவிர பால் சுரக்கவும் அற்புதமான மருந்தாம் அது. பாலில் நாலைந்து பூண்டுப் பல்லைப் போட்டு சிறிது ஏலப்பொடியும் சேர்த்துக் காய்ச்சி கொடுத்து வந்தால் பால் நன்றாக சுரக்குமாம். பூண்டு தின்னும் தாயின் பால் , குழந்தைகளுக்கு ருசியாகவும் இருக்கும் என்று சொல்லியிருந்தது அது. Allium sativum , பைபிள், சீனா A.D. 510 , வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டியில் ஆஸ்டின் எஸ்.வீஜ், பர்ஜர், ஜாக் பென்ஸ்கி ஆகிய விஞ்ஞானிகள் ஈடுபட்ட புற்றுநோய் ஆய்வு , செலீனியம் ஜெர்மானியம்… இதெல்லாம் அதிகப்படி. சரிதான், இஞ்சிப்பூண்டு நிறையக் கொடுத்த எந்தக் கறிப் பெரட்டல் ஆனாலும் போட்டு சுழாட்டும் அஸ்மாவுக்குப் பிடிக்க வேண்டுமே… ‘பால்லெ கொதிக்கவச்சா கெழங்குமாதிரி இக்கிம் ‘ என்றார்கள் மாமி. உவ்வே… ‘நாலஞ்சி பல்லை சுட்டாச்சும் திண்ணுடி ‘ என்றும் சொன்னார்கள். அதற்கும் மறுத்துவிட்டாள். இறைவனின் கருணையை நினைத்து என் காதுகள் அசைந்தன. அதிகம் அசைந்தால் தங்களை முகரவைத்து விடுவான் என்று நிறுத்திக்கொண்டன.
பூண்டின் நாற்றம் எனக்கும் பிடிக்கவே பிடிக்காது. பெயரே முதலில் சரியில்லையே… Stinking Rose. எனவே ‘A garlic a day keeps everyboby away ‘ என்பதில் முழு உடன்பாடு – சின்னவயதிலிருந்தே.
அப்போதெல்லாம் மலேயாவிலிருந்து மீன் எண்ணெய் மாத்திரைகள், பூண்டு மாத்திரைகள் பாட்டில்பாட்டிலாய் வரும் என் உம்மா வீட்டுக்கு. மீன் எண்ணெயாவது பரவாயில்லை. குத்தும் இந்தப் பூண்டின் நெடி… சகிக்காது. அலறவைக்கும் யுத்த நெடியிலும் மலக்குவியல்களுக்கு நடுவேயும் மனிதர்கள் வாழும் பல இடங்களின் கொடூரத்தைப் படித்தும் கொஞ்சம் பார்த்தும்கூட இந்த சாதாரணப் பூண்டுக்கு இத்தனை அருவருப்படைவது என் நாற்றத்தைச் சொல்லவே சொல்கிறது. ஆனாலும் என்ன, பூண்டு நாற்றம்தான். நாயகத்தை எனக்கு பிடித்துப் போனதுகூட ‘பச்சைப் பூண்டு , வெங்காய நாற்றத்தோடு -பள்ளிக்கு- வராதீர்கள் ‘ என்ற ஹதீஸ்தான் காரணம் என்று நினைக்கிறேன். அடுத்த மனிதர்களின் சிறுமுகச்சுளிப்பைக் கூட அளந்த எங்கள் அருமை நாயகம். ‘மஹா லெளகீக தந்திரி ‘ . எங்கள் ஊர் கவிஞர், ‘இருட்டில் இருந்தான் இறைவன் – நபி இங்கே பிறந்திடும் முன்பு ‘ என்பார். தன் வீட்டில் மின்சாரமே இல்லாத நிலையிலும் அப்படிப்பாட எவ்வளவு அன்பு வேண்டும்.. அல்லது தன்னையே இறைவனென்று சொல்லிக்கொண்டாரா ? இருக்கலாம். இந்த சூஃபிஸம் படாத பாடு படுகிறது.
அந்த நாயகம் பிறந்த மண்ணில் , பின்னர் நாய்படாத பாடு நான் பட்டதற்கு ஆலிவ் எண்ணெயில் ஊறிய பச்சைப் பூண்டை மென்றுகொண்டே இருந்த ஒரு அரபியும் காரணம். புராதன எகிப்தியர்கள் பூண்டை வணங்கினார்கள், கிரேக்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அது பெரும் சக்திப்பிழம்பாக இருந்தது என்றெல்லாம் அவன் சொல்வான். தான் தொழப்போவாததற்காகவும் இருக்கலாம். அதிசயமாகப் படித்தவன் இல்லையா ? சம்பளம் கேட்டால் மட்டும் வாயை ‘ஃப்பூ ‘ என்று ஒரு ஊது. ஏய், உன் மனதை விடவா அது நாற்றம் ? முன்னரோ பின்னரோ – நாம் ஏறி ஓட்டியே ஆகவேண்டிய – மரணம் என்ற ‘ஜமல் அஸ்வத் ‘ நம் ஒவ்வொருவரின் வீட்டு வாயிலும் நிற்கிறது… புரிந்து நட ஏ.. முதலாளியே..என் அப்துல்லா-அல்-கால்தியே…
‘யா தஅபாbன், ஹதா மூ கஸ்வா. கருப்பு ஒட்டகம்தானே ? அதில் ஏறும்முன் அதையும் ‘ஏறி ‘க்கொள்கிறேன். ப்பூ.. ‘ – மறுபடியும் பூண்டு நாற்றம். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.. ‘த்தோம் ‘ என்றால் அரபியில் பூண்டு. ‘பbஸல் அbபியத் ‘ என்பார்கள் என்னைப்போல உட்டாலக்கடி அரபி பேசுபவர்கள். எந்த மொழிதான் எனக்குச் சரியாக வந்திருக்கிறது , மெளனம் உட்பட ?
என்னதான் சொல்லுங்கள், சுட்டாலும் குடலைப்பிடுங்கும் நாற்றம்தான் அது. பூண்டைச் சொல்கிறேன்.
என் ருசிபற்றித் தெரியாமல் , கோமளாதேவி குத்தாலிங்கம் என்ற விசிறி வேறு அதையே போட்டுத்தாட்டி ஒரு சமயம் கொடூரமாகப் பழிவாங்கினார். மாயவரத்தில் இருந்தார். எழுதிய ஒரே கதைக்கு கிடைத்த ஒரே விசிறி. முடை சிற்றிதழில் வெளியாகியிருந்த எனது ‘தொங்கல் ‘ அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனதாலோ என்னவோ கடிதம் போட்டு அன்போடு கூப்பிட்டிருந்தார். அப்போது நான் தனியன். அஸ்மா தப்பித்திருந்தாள். செலவுசெய்து விருந்துக்குப் போனால்… பூண்டில் எத்தனைவகையுண்டோ அத்தனை வகையும். பூண்டு ரசம், பூண்டுக் குழம்பு , பூண்டு ஊறுகாய். பூண்டு சோறும் பூண்டுத் தயிரும் மட்டும்தான் இல்லை. பூண்டோடு ஒழிந்தேன். அதைவிடக் கொடுமை , அவர் ரசித்துப் பாராட்டிய அந்தக் கதை..அந்தக் கதை… அது என் கதையே அல்ல. இது காதில் மாட்டுவதாக்கும். ஆனால் நாமொன்று எழுதினால் தாமொன்று வலியப் புரிந்துகொள்ளும் – குழாயைத் திறக்கச் சொன்னால் மூடியே வைக்கச் சொல்வதாக ‘உரிமையுடன் ‘ எடுத்துக் கொள்ளும் – வாசகர்களுக்கு இந்த டாக்டரம்மா தேவலைதான். ஒரு உண்மையையும் சொல்ல வேண்டும். காதைக் காட்டுங்கள். அந்தக் கதை என் கதையை விட நன்றாகவே இருந்தது.
கதை எழுதுவதையே விட்டுவிட்டேன் அன்றிலிருந்து.
ஒருவேளை அதற்காகத்தான் அந்த விசிறி பூண்டு வைத்தியம் எனக்குச் செய்தாரோ என்னவோ. என்னிடம் நேரில் சொல்லியிருக்கலாம் இல்லையா ? அங்கிருந்து கழன்றுகொண்டு வருவதற்குள் உயிர் போய்விட்டது. கழன்றுகொன்டு… ஊர்பாஷையில் : புண்டுகிட்டு . பூண்டு மட்டுமல்ல இந்தப் புண்டும் ரொம்ப அபாயமான வார்த்தை. ‘புஞ்சை ‘ பற்றி பிரமீள் அடித்த கமெண்ட் ஞாபகம் வருகிறதா ?. அஸ்மா அதைப் பயன்படுத்தும் விதம்தான் ஜோர். பொரித்த கோலாமீன் சாப்பிடும்போது அதன் முள்ளை நாசூக்காக எடுத்தவண்ணம் சதையைப் பிட்டுப்பிட்டு எனக்கு வைப்பவள், பிடரியிருந்து அற்புதமாகப் பாடும் அரபிப் பாடகிகளின் ர ஹ ஸ் ய மா ன குரலில் , குறுகுறுபார்வையோடு சொல்வாள்:
‘ஒங்களுக்குத்தான் புண்டமீனுண்டா ரொம்பப் புடிக்குமே ‘
உண்ட மீனெல்லாம் வெளியில் வந்து விடும் எனக்கு சிரிப்பில். அடி ஷைத்தான், நான் தேவல புள்ளே..
பூண்டைத் தின்னமாட்டேன் என்று என்னைப்போலவே சங்கற்பம்_பூண்ட இவளிடம் போய் என்னத்தைச் சொல்ல ? பாரதியை மீண்டும் இழுக்கலாமா ? ‘வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா ‘ . ஆமாண்டா , உன் செல்லம்மாவுக்கு வந்தது. என் செல்ல அஸ்மாவுக்கு வரலையே.. என்ன செய்ய ? அதற்கு மாற்றுதான் கேட்கிறாள் இப்போது. வழி தெரியவில்லை. சீட்டுக்கவிகள் எழுதினால் சீ.கு.சீனிவாசன் M.Dக்குப் பிடிக்காது.
பசும்பாலைக் கொடுக்கலாம் என்று பார்த்தால் டாச்செலவைக் குறைக்கிறேன் என்று அதையும் நிறுத்தியாகி விட்டது. தேவைப்பட்டால் பிள்ளைக்கு மட்டும் வாங்க வேண்டியதுதான் என்று நினைப்பு. ‘அரபிலாம் சுலைமானிதான் குடிப்பானுவ ‘ என்றுசொல்லி அடக்கி வைத்திருந்தேன். ‘அரபிட்ட காரும் இக்கிமே ‘ என்று கேலிசெய்த அஸ்மாவை பொருட்படுத்தவில்லை. எந்தப் பக்கம் அவள் சொல்வாளோ அந்தப்பக்கம் எனக்கு காது கேட்காமல் போய்விடும் கடுமையான வியாதி வந்திருந்தது.
அஸ்மா படு உஷார். ஒரு டியூப் வைத்து என் இருகாதையும் இணைத்து உரக்கச் சொன்னாள் : ‘வர்ற வெள்ளிக்கிழமை செடிக்கால்பாளையம் தர்ஹாக்கு கார் எடுத்துக்கிட்டு போவனும். புள்ளைக்கி நேர்ந்திருந்தேன் ‘
‘அல்லாவே , வர்ற வெள்ளிக்கிழமையா ? ‘
‘ஏன்மா ? ‘
‘அன்னக்கி எனக்கு அம்மை வார்க்கும் புள்ளே ‘
அந்த சமாளிப்பெல்லாம் இப்போது நடக்காது. உடனடியாகச் செய்ய வேண்டியது பக்கத்து வீட்டுக்கு வந்ததால் பகையாளிகளாகப் போனவர்களிடம் கடனேயென்று பால் வாங்கச் சொல்வது. அடுத்தது நான் ஆண்பிள்ளையென்று ‘காட்ட ‘ வேண்டும்.
செவ்வாய்க்கிழமை பஜார் விடுமுறை. பீடையாம். எலியட் இருந்தால் ‘Ash Tuesday ‘ என்று பாடியிருப்பான். பஜார் தப்பித்தது மனிதர்களிடமிருந்து . என்னிடமிருந்தும்தான்.
நூருலமீன்நானாவைப் பார்க்கப்போனால் என்ன ?
வெளிப்படையாக உங்களுக்கு காரணத்தைச் சொன்னால், வீட்டிலிருந்து வெளியே ஓடினால்தான் வழிபிறக்கும் என்று பட்டது. குஞ்சுகளுக்கு இரைதேட தாய்ப்பறவை வெளியில் போகிறதே.. எத்தனை தீர்மானம், நம்பிக்கை. ஏதாவது கொண்டுவருகிறதா இல்லையா ? நம் குஞ்சு பொரித்த குஞ்சுக்கும் இப்படித்தான் வழிதேட வேண்டும். இறைவன் மேலானவன்.
தொக்குத்தெரு சென்றேன். நாட்டுக்கு ஒரு குத்பு – இறைநாயகர் – வேண்டுமென்றால் நாலு குத்பு வேண்டும் இந்தத்தெருவுக்கே. அவ்வளவு கொடுமையான தெரு. அதிலிருந்த ஒரே மனிதன் அவர்தான். அதனால் தனியாகத்தான் இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது மனம் ராஹத் ஆகும். குழப்பம் அதிமானால் தெளிவு பிறக்கும், இல்லையா ? ஹஜ்ரத் மவுத்தானபிறகு மனசு ரொம்ப குழப்பமாக இருந்தால் அவரைத்தான் நாடுவது வழக்கம். ஹஜ்ரத் இருந்திருந்தால் ஏன் குழப்பமும் வருகிறது ?
‘க்யூங் ஜிந்தகி கி ராஹ் மேங் மஜ்பூர் ஹோ கயே ‘ என்று பாடிக்கொண்டிருந்தவர் , கசங்கிய என் முகத்தைப் பார்த்ததுமே உடனே புரிந்து கொண்டார். ‘அதாவது.. ஜனாபுக்கு தற்கொலை பண்ணிக்கலாம்டு வருது ‘ என்றார்.
‘சரியான எடத்துக்குத்தானே வந்திக்கிறேன் ‘
‘இது போதும். நம்மட வேலையெ இன்னொருத்தவனை வுட்டு பண்ணணும். இப்ப இந்த வூட்டு வரி , காட்டு வரிண்டு இக்கிது. நானா கட்டுறேன் ? சிங்கப்பூருலேந்து ஒருத்தன் நான்தான் கட்டுறேண்டு கெஞ்சிக்கெஞ்சி கட்டுறான். என்னத்தைக் கொடுக்குறேன் அவனுக்கு ? வெறும் மொஹப்பத். அன்பு ‘
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது நானா. இப்ப மாவுடின் வேணும் எனக்கு. கையிலே ஒரு பைசாகூட இல்லை. இருந்தா கொடுங்க ‘
‘ஓய் அடப்பு. அது தெரியாது எனக்கு ? டன்ஹில்லேர்ந்து பீடிக்கு வந்து அதையும் தெருவுல பொறுக்குற எத்தனெப் பேரெ நான் பாத்துக்கிட்டிக்கிறேன். ஒமக்கு மாவுடின்தானே வேணும் ? அதுக்கு ‘மின்னல் ஹபீபு ‘ எதுக்கு ? மொனைக்கடை ஜானிபாய்ட்டே நான் சொன்னதா சொல்லி வாங்கிக்கும் ‘
‘அவனுக்கு நீங்க காசு கொடுத்துத்தானே ஆவனும் நானா ? ‘
‘கொஞ்ச நஞ்சமில்லே.. முழுசா முப்பதாயிரத்து நானூத்தி சொச்சம். அதெ அடுத்தமாசம் சாதுல்லாகாக்காட்ட வாங்கி கொடுத்துடுவேன், இன்ஷா அல்லாஹ் ‘
‘சாதுல்லாகாக்காக்கு திருப்பிக் கொடுக்கனும்லே நானா எப்படியும் ? ‘
‘அதெ அடுத்தவருஷம் ஹாஜாமரைக்கார்ட்டெ வாங்கி கொடுத்துட்டாப் போச்சு ‘
எனக்குத் தலை சுற்றியது. போகிறபோக்கில் என்னிடமே கடன் வாங்கிடுவார்போல் இருந்தது. அப்படியெல்லாம் செய்யவில்லை. வற்புறுத்தி , பகல் தன்னுடனேயே சாப்பாடு சாப்பிட வைத்தார். அது எந்த ஹோட்டலிலிருந்தோ வந்திருந்தது. அடுக்குசட்டியை வைத்தவனும் ஏதோ ராஜாவுக்கு வைக்கிறார்போல்தான் வைத்தான். நான் நானாவைப் பார்த்தேன். சிரித்தார். ‘கொடுக்குறது அவன் ‘ என்று மேலே கை காட்டினார். ‘அவன் ‘ இவரிடம் நிறைய கடன்பட்டிருந்தாற்போல்தான் தோன்றியது. ‘தைரியமா போவும் வூட்டுக்கு. அல்லா வழி காட்டுவான். நம்பிக்கையில்லேண்டா ஜானிகடை. ok ? ஃபிஅமானில்லா ‘ என்றார்.
மாலை திரும்பும்போது , இடையில்வந்த ஜானிகடையின் மேல் கண் பதிந்தாலும் ஏதோ அசட்டுத்துணிச்சலில் தாண்டினேன். மனதில் இனம் தெரியாத நம்பிக்கையும் தைரியமும். போகிறவழியில் வானத்திலிருந்து மாவுடின் பொத்துக்கொண்டு விழுந்தாலும் விழுமென்றில்லை, உம்மாவிடம் கடைசியாக கேட்டுப்பார்க்கலாமென்றுதான். உம்மாட்ட போயி யாராச்சும் மானம் அவமானம் பாப்பாஹலா ? எரிஞ்சி வுழுந்தாத்தான் என்னா ? ‘பொன்னும் மணியுமிங்கே – பெற்ற தாய்தமக் கிணையாமோ ? ‘ என்பார் கவிஞர் அம்புடன்புஹாரி.
உம்மாவீட்டில் நுழைந்தால் வீடு பரபரவென்றிருந்தது. கொல்லையிலிருந்து லாப்பை சுடும் வாசம் வந்தது. பண்டாரிவைத்து பெரிய அளவில் பண்ணிக்கொண்டு இருந்தார்கள். உம்மாவைப் பார்த்தேன். ‘அஸ்மாவுக்கு பா.. ‘ என்று ஆரம்பித்ததுமே விருட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்கள். ‘ல் ‘ஐ நெருப்பில் எரிந்தேன்.
என்ன நடக்கிறது ?
தெருவாடி மனிதர்கள் ஒவ்வொருவராய் வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் விரித்திருந்த பாயில் உட்காரும்போதுதான் மெல்ல விளங்கிற்று. நடக்கப்போவது தங்கச்சியின் கக்கிலி. கல்யாண முன் ஒப்பந்தம். அதாவது.. இரண்டாவது வரை படித்த அரபுநாட்டு புரட்சி மாப்பிள்ளைக்கு , அருவருப்பான பணம் வேண்டாம், அழகான பங்களா மட்டும் போதும் போன்றவைகளை உறுதிபடுத்திக்கொள்வது. என் புர்ரட்சியை உம்மா ஏமாற்ற அவர்களை அஸ்மாவின் உம்மா ஏமாற்றியது தனிக்கதை. அப்புறம் சொல்கிறேன்.
அறையில் அடைந்திருந்த துப்பட்டிக் கும்பலில் என் அஸ்மா மட்டும் இல்லை. கூப்பிடாமலிருந்தால்தான் சொல்லியும் வரவில்லையென்று நிறுவலாம். நிகழ்ச்சி முடிந்து ஜனங்கள் வெளியேறும்வரை நெருப்பில்தான் குளித்தேன் என்று சொல்ல வேண்டும். ‘என்னாடா… வூட்டுக்காரஹ நீயே ‘ஙே.. ‘ண்டு பாத்துக்கிட்டு நிக்கிறா. லாச்சாராவுலெ இக்கிது…லட்டும் சர்பத்தும் ஒலுங்கா பவுந்தியா இல்லையா வந்தஹலுக்கு.. ? ‘ – ஒரு பொன்னையனின் குரலில் சற்று உஷார் வந்தது. இவர்களாவாவது பிறந்திருக்கலாம்.
வூட்டுக்காரஹ… நானா ? லாத்தாவின் முழுக் கல்யாணச் செலவும் என் தலையில் விடிந்ததிலிருந்து நிறையச் சொல்ல வேண்டும். நேரமில்லை. அஸ்மாவையும் தேடுகிறது. என்னதான் செய்திருக்கிறாளோ என்னை… முக்கியப் பிரச்சனை என் கல்யாணத்திலிருந்துதான் ஆரம்பித்தது என்று மட்டும் சுருக்கமாக சொல்லிக் கொள்கிறேன். நான் அஸ்மாவுடன் வீட்டிற்கு வந்து தங்குவதில்லையென்பதும் உம்மாவின் பெரும் குறை . எங்களுக்கென்று இருக்கும் ஒரே அறையில், அந்தப் பழைய வீட்டில் , எப்படி எல்லோரும் தங்க முடியும் ? – மனம் ரணமானது.
ரணத்திற்கு ஒரு மணமும் உண்டுதான். மச்சான் ஞாபகம்… உம்மா போலவே ஜைனப்மாமியும் அவர்களின் மகனைப்பற்றிக் குறைப்பட்டார்கள். தன் உயரமான மனைவியை வீட்டுக்குக் கூட்டி வந்த சித்திக்மச்சான் , அவர்களின் ஒரே அறைக்குள்ளேயே படுதாவைப்போட்டு மறைத்து , அடுத்த பக்கத்தில் எம்பிஎம்பி இயங்கியதில் ஏக ரகளை. மருமகள், ‘ஹா..ஹூ ‘ என்று பெருமூச்சு விட்டாலும் பரவாயில்லை, ‘அங்கதான்.. அங்கதான்.. ‘ என்று ஆவேசமாக சத்தம் போட்டால் ? ஒரே கூக்குரெ ஆகிவிட்டது. ‘இஸ்லாமான பொம்பளையிலுவ அடக்க ஒடுக்கமா இக்கிறதில்லே.. ? சீ. ‘ என்று தெருபூராவும் பேச்சு. என் விஷயம் நேர் எதிர்.
ரகசியம் எப்போதும் ரகசியமாகவல்லவா இருக்க வேண்டும் ? உம்மாவிடம் ரகசியம் ஏதுமில்லை. மகனை அவமானப்படுத்த வேண்டுமென்றில்லை. மறந்து விட்டார்கள். அவ்வளவுதான். சம்பாத்தியமே இல்லாமல் மலேயாவில் முடங்கிப்போன வாப்பா இப்போது வீட்டில் இருந்தாலும் அவர்களிடமும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ‘உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே ‘ பாடிய மாதா மரித்துப் போனாள்.
‘உலகிலேயே உற்றதுணை எனக்கு யார் யா ரசூலுல்லா ? ‘ என்று கேட்டவரிடம் நாயகம் (ஸல்) சொன்னார்கள் : ‘உன் தாய் ‘. ‘அடுத்தது ? ‘ . ‘உன் தாய் ‘. ‘அடுத்தது ? ‘. ‘உன் தாய் ‘. ‘அடுத்தது ? ‘. ‘உன் தந்தை ‘(*a). தந்தையர்தாம் மடையர். கல்யாணம் முடிஞ்சாவது சொல்வியா உம்மா ? ‘தாயில்லாமல் நானில்லை ‘ என்று தாய் மடியில் படுத்துக்கொண்டே தமிழ் கதாநாயகர்கள் காலாகாலத்துக்கும் தம்பட்டம் போட்டுக்கொண்டிருப்பதெல்லாம் சும்மா இல்லை. தாயின் சபதங்களுக்காகத்தான் பக்கத்து நாடுகளை பதம் பார்க்கின்றன தாய்த்திருநாடுகள். தாய்மொழி. தாய்க்குத் தலைமகன். தாய்க்குப் பின் தாரம்….மா துஜே சலாம்.
‘உங்கள் சொர்க்கம் உங்கள் தாயின் காலடியில் இருக்கிறது ‘ என்று நாயகம் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள். ‘இருமூன்றில் தாய் இழந்த நபி ‘யின் தாய்ப்பாசத்திற்கு ஈடில்லை. அதனால்தான் அவர்களின் உம்மத்துக்களுக்கு , ஒன்றுக்குப் பதிமூன்றாக தாய்மார்கள் கிடைத்தார்கள்(*b).
பழங்கணக்கை விடுவோம், நமக்குக் கிடைத்த ஒரு தாய் , தாயாக இருந்தால் போதாதா ? சொர்க்கத்தை யாருக்கும் காட்டக்கூடாதென்று அவர்கள் ஏன் ஒரே இடத்தில் நிற்க வேண்டும் ? ஏன், இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்: சொர்க்கத்தை மிதித்துக்கொண்டு நிற்கிறார்கள் அவர்கள். ஆமாம், அதுதான் சரி. இது தந்தையாலா சிந்தையாலா ? தாயின் காலடியில் சொர்க்கம் என்றால் அவர்களின் செருப்பை சொர்க்கமென்று எடுத்துக் கொள்ளனுமோ ? மகான்களின் மிதியடியை தலையில் பவ்யமாக பல பக்தர்கள் வைத்துக் கொள்கிறார்களே, அதுபோலவா ? இல்லை, இதெல்லாம் இலக்கிய நயம். ‘கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே ‘வைக் கேட்பவர்கள் ஹனிஃபாவின் கண்ணில் இறங்கி நீந்தவா செய்வார்கள் ? மிதிபடும் சுவனம்… எப்படியோ , வாழ்க சுவனத்துச் சுந்தரிகள். கோபத்தைக் கொட்ட வழி தெரியவில்லை. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாதாகையால்தான் தாயைப் படைத்தான் என்கிற யூதப் பழமொழி நினைவுக்கு வந்து இன்னும் என்னை எரிச்சல் படுத்திற்று. ஆமாங்கனி, அதனால்தான் இருக்கமுடியாமல் தொலைந்து போனான். அதுகூட அவனுக்கு உம்மா இல்லாமலிருந்ததால்தான் முடிந்திருக்கும்.
ஊர் உம்மாக்களை மாற்ற ஒரே வழி, வீட்டு ஆண்கள் சாமத்தியம் பண்ணுவதுதான். அதற்கு சபர் போக வேண்டும். பிறகு மறு சபர் போவதற்கும் சாமத்தியம் பண்ண வேண்டும். இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே…
சபரில் மாட்டிகொண்டு முழிப்பதை வேப்பமரத்துப் பேய்பிடிப்பதாகச் சொல்வார்கள். அது ரொம்பப் பழசு. உமர்குட்டி என்ற மலையாளிதான் சவுதியில் சொன்னான் புதுசாக. ஒன்றுமில்லை, குஞ்சாலிஹாஜியார் ஒரு எருமை வளர்த்தார். வளைந்த இரு பெரும் கொம்புகள் அதற்கு. ஹாஜியார் மிகவும் புத்திசாலி. எருமையின் கொம்புகளுக்கிடையே தன் தலையை விட்டுப் பார்த்தால் என்ன என்று நினைப்பு வந்தது அவருக்கு. ரொம்..ப நாளாக யோசித்து யோசித்து கொம்பின் இடையில் தன் தலையை ஒரு நாள் நுழைத்தும் விட்டார். அவ்வளவுதான். அது வெறிகொண்டு ஓட ஆரம்பித்து விட்டது. அல்லாஹ்வைக் கூப்பிட்டு அலறியபடி தொங்கிக்கொண்டே போனார் அவர். அல்லாஹ்தான் எங்கும் இருப்பானே… எவனோ ஒருவனது வேடத்தில் வந்து அவரைக் காப்பாற்றிக் கேட்டிருக்கிறான் :
‘முட்டாள் ஹாஜியாரே..இதெல்லாம் யோசிச்சி செய்யவாணாமா ? ‘
ஹாஜியார் சொன்னாராம் அப்பாவியாக : ‘ரெண்டு வருஷமா யோசிச்ச பொறவுதானே தலையை வுட்டேன் ‘
ஹாஜியார்களை அவன் காப்பாற்றலாம் , என்னைக் காப்பாற்றுவானா ?
கனத்த மனத்துடன் அஸ்மா வீடு சென்றேன். இருள் கப்பியிருந்தது தெரு. போகும் வழியெல்லாம் ஒளிமயமான தெய்வத்தின் நினைப்புதான். ஒவ்வொரு மதத்து தெய்வங்களும் கருணையாகவே தன் பக்தர்களுக்கு பால் ஊட்டியிருக்கின்றன போட்டி போட்டுக் கொண்டு. விஸ்வரூபமெடுக்கும் சில தெய்வங்கள் , பக்தர்களின் பாலை ரத்தத்தோடு உறிஞ்சவும் செய்யும். அது வேறு. பாற்கடல்… மந்திரக்கோலால் மனங்கவர்ந்த லா.ச.ரா கதைகளில்கூட தெய்வத்தின் மார்பிலிருந்து பால் பீறிட்டடிப்பதில் பலமுறை நனைந்திருக்கிறேனே..இல்லை, இவைகள் வெறும் கதைகள்.
அனீஸை வைத்துக்கொண்டிருந்த மாமியார் என்னைப் பார்த்ததுமே திடுக்கிட்டு, ‘யாநபி பைbத் ‘துக்கு எழுந்திருப்பதைப்போல நின்றுகொண்டார்கள். ஓடவில்லை. மருமகன் மேல் ரொம்பவும் அன்பு. ‘தோ..பாரு..காக்காபீ.. ‘ என்றார்கள் என்னைக் காட்டி. அவனும் அது சரிதான் என்பதுபோல் மிழற்றினான். முகம் தெளிவாகத்தான் இருக்கிறது. என்னமோ நடந்திருக்கிறது. ‘காக்காபீ ‘யைப் பார்த்ததாலோ ? காக்காபீ ஒரு பைத்தியம். வாயால் ‘கிர்ர்ர் ‘ என்று ஓசையெழுப்பிக்கொண்டே அங்குமிங்கும் ஊரில் ஓடிக் கொண்டிருப்பான். நிஜத்தில் அவனாகவே இருந்திருக்கலாம். தொல்லையே இல்லை. அவனால் ஊர் ஜனங்களுக்கு சந்தோஷமும் கூட. ரெட்டிப்பு சந்தோஷம் சமயத்தில் அவன் ஆடையில்லாமல் ஓடுவது.
‘அஸ்மாவா ? ரூமுலெ இக்கிறாம்மா ‘ என்றார்கள்.
அனீஸைக் கூட வாங்காமல் ரூமில் நுழைந்தேன். அங்கே ஆச்சரியம் காத்திருந்தது. ஆமாம், அஸ்மாவின் காலடியில் நிஜ சொர்க்கம் இருந்தது. 1/2அடியுள்ள அமுல்டின். ஆனால் பழையது. ஆனாலும் அந்த டின்னுக்குள் பால்பவுடர்தான் இருக்கும் என்று எனக்கு சர்வநிச்சயமாகத் தெரிந்தது. பெண்ணுக்கு மட்டும்தான் பொங்கிக்கொண்டு இல்ஹாம் வருமா என்ன ? ‘இல்ஹாம் ‘ என்றால்… ம்..ஆன்மிக அரபியில் இருப்பதால் பெரிதாக நினைத்து விட வேண்டாம். . ‘ஸ்ட்ரைக் ஆச்சு எனக்கு ‘ என்கிறோமல்லவா ? அதுதான். ‘பொறி தட்டியது ‘ என்பார்கள் எலித்தாளர்கள்.
நான் நுழைவதைக்கூட பார்க்காமல் இவளின் பார்வை என் அபூர்வமான புத்தக அலமாரியில் ஏன் நிலைத்திருக்கிறது ? கொஞ்சம்கூட விளங்காத மொழிகளில் உள்ள உலக இலக்கியங்களை சிரமப்பட்டுச் சேர்த்த என் மேதைமை புரியவில்லையா ? விரைவில் எடைக்குப் போட்டு விடுகிறேன் என் கண்ணே… இல்லை, எடுக்க மாட்டார்கள். வெட்டாறு வீணானலும் சரி, அதிலேயே போட்டு விடுவோம்.
ஆணோ பெண்ணோ மனித இனமே அசடுதான். கீழே சொர்க்கத்தை வைத்துக்கொண்டு எதையோ பார்த்துக் கொண்டிருக்கும் வர்க்கம். ஆனால் அன்னை ஒரு ஆலயமென்பதை மட்டும் மறுக்கக் கூடாது. அஸ்மா ஒரு பள்ளிவாசல் என்பதையும்தான். நான் ? வாசலுக்கு வெளியிலுள்ள பல்லி. அவமானப்பட்டு நிற்பவனைப் ‘பல்லியாப் போய்ட்டாஹா.. ‘ என்பார்கள் ஊரில். அவமானப்படும் மனிதன்தான் வளரமுடியுமென்றாலும் அவமானமென்றால் என்னவென்று பல்லிக்குத் தெரியுமா ?
‘எப்படி வந்திச்சி புள்ளே இது ? ‘
‘ஒங்க உம்மாதான் மருமவளுக்கு கொடுத்து வுட்டாஹா.. ‘
‘அல்லாஹூ ரப்பி. ஹக்கானபடிக்கி ? ‘
சத்தியம்தான். ‘ரொம்..ப அவுரியமான சாமான். ஆனா அல்லா காப்பாத்திட்டான். இப்ப நல்லா பால் சொரக்குது ,தெரியுமா ?. ஒங்களுக்கும் வைப்பேன் ‘ என்றாள். குரலில் மட்டும் ஏனோ புகைச்சலும் கேலியும் . தொலையட்டும், எந்த மருமகளுக்குத்தான் மாமியாரைப் பற்றிச் சொல்லும்போது மனிதகுணம் வருகிறது ?
எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. என் உம்மா…உனக்கும் பார்வை கூர்மைதான். கண்கலங்கிற்று. அஸ்மா சொன்ன அந்த ‘ஆனா ‘ மட்டும் நெருடுகிறதே… அதைப் பற்றிக் கேட்குமுன் சின்னதாக ஒரு சிணுக்கம் கூடத்திலிருந்த அனீஸிடமிருந்து வந்ததைக் கேட்டு , ‘என்னட ஜூஜூஜூ… ‘ என்று வேகமாக விரைந்தாள். பிள்ளையின் பெயரை சரியாக அழைப்பவள் இவள் ஒருத்திதான். ‘மருமகள் வரும் கணத்திலே மவுத்தாவாள் உம்மா ‘ என்றாலும் பெரும் நுணுக்கம் இந்தப் பெண்மை. கந்தூரி களேபாரத்திலும் கூட கவனம் சிதறாது. ரத்தம் பாலாகும் அதிசயங்கள் நிறைந்த அற்புதப் படைப்பென்பதிலும் சந்தேகமேயில்லை. பிள்ளைக்கென்றே பதமாக வரும் பாலின் அந்த இளஞ்சூட்டை நினைத்தாலே பரவசம்தான். இதற்குமுன் , ‘கோதுமைக்கனி ‘க்காகக் கொக்கரிக்கும் அகங்காரம் பிடித்த ஆண் கண்டிப்பாக ஒரு பல்லியேதான். தவிரவும், ஆணுக்குச் சுரப்பதெல்லாம் அஹமது மரைக்காயர் செக்காலையில் சும்மாதானே கிடைக்கிறது.
‘ஹூம்.. விந்தோட மதிப்பு மட்டும் புரிஞ்சீங்கண்ணா முகத்துலெ தடவிக்கிட்டு அலைவீங்க.. ‘ என்பார்கள் ஹஜ்ரத். சொல்லிமுடித்த அவர்களின் முகத்தை உடனே நான் பார்த்தேன் அப்போது. அவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. அல்லது துடைத்துவிட்டுச் சொன்னார்களா ? இருக்கலாம்.
அஸ்மா நகர்ந்ததும் , அந்த டின்-ஐ ஏனோ திறந்து பார்க்கத் தோன்றியது. நான் குழந்தையாக இருக்கும்போது உம்மா வாங்கிய அதே டின்போலத் தெரிந்தாலும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டாமா ? அஸ்மாவுக்கு மறுபடியும் சுரக்காவிட்டால் உபயோகப்படுமே.. அப்படியொன்றும் கடவுள் கருணையில்லாதவன் இல்லைதான். அமுதச்சுனை கொஞ்சமாவது உலகத்தில் அங்கங்கே வற்றாமலிருப்பதற்கு அவனுடைய அருள்தான் காரணம்.
டின்-ஐத் திறந்தேன்.
என் இல்ஹாமில் இடிவிழ. பால்பவுடரா ? ‘குப் ‘பென்று கொடும் நாற்றத்தைக் கிளப்பியவண்ணம் வெள்ளை வெளேரென்று என்னைக் கேலி செய்தபடி உருண்டோடின உரித்த பூண்டுகள். வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லா , அல்ல , பொல்லாப் பூண்டுகள். வெகு தூரத்தில் பெரும் எருமைக் கொம்புகளுடன் ஒரு வினோத கறுப்பு ஒட்டகம் வந்து கொண்டிருப்பது போல காட்சி… அஸ்மா வந்ததும்தான் கேட்கவேண்டும் அது ஆணா பெண்ணா என்று.
(முற்றும்)
படித்துறையில் (Dec ‘2004) பிரசுரமானது
விளக்கக் குறிப்புகள் :
குர்ஆன் வசனங்கள் : *1 (2 : 30-32) , *2 (33:56)
*a புஹாரி ஹதீஸ் 8:2
*b ஜமால் எழுதிய ‘மறுவிலா முழுமதி ‘. 11ஆம் பதிப்பு. பக் : 289
*3 ‘உச்சந் தலை.. ‘ பாடல் – நூஹூ லெப்பை ஆலிம் அவர்களின் வேதபுராணத்திலிருந்து (இல்முன்னிஸா படலம்)
சபராளி – சம்பாதிக்க வெளிநாடு செல்பவர் (சஃபர் – பிரயாணம்)
இல்ஹாம் – இறைஉதிப்பு
சலாமத் – பாதுகாப்பு
முஸாஃபர் – பயணி , பிச்சைக்காரன்
மஹ்சர் – மறுமைநாள்
புராக் – பறக்கும் குதிரை. பெருமானார் (ஸல்) தனது ‘மெஹ்ராஜ் ‘ பயணத்தின்போது ஏறியது. (மெஹ்ராஜ் – விண்ணேற்றம்)
ரூஹானியத் – ஆன்மிகத்தின் ‘உயிர் ‘ சார்ந்த
தஸவ்வுஃப் – (சூஃபிகள் செய்யும்) யோகம்
அமல் – செயல்
முஃப்தி – ஃபத்வா வழங்கும் ‘தகுதி ‘ பெற்றவர்
‘யா தஅபாbன் ‘ – ‘ஏ சோதாப்பயலே ‘ என்று திட்டுவது
‘ஹதா மூ கஸ்வா ‘ – ‘அது கஸ்வா இல்லை ‘ [கஸ்வா – ‘ஹிஜ்ரத் ‘ன் போது பெருமானார் (ஸல்) ஏறிய ஒட்டகத்தின் பெயர்]
மின்னல் ஹபீபு – பணத்தை வேடிக்கையாகச் சொல்வது
லாச்சாரு – தொந்தரவு
கர்பலா – நபி(ஸல்)யின் பேரரான இமாம் ஹூசைன்(ரழி)-ஐ எதிரிகள் கொன்ற இடம் [61 A.H. (680 A.D.)]
யாநபி பைbத் – நபி(ஸல்)க்கு சலாம் சொல்லும் பைbத்(பாமாலை). சுபுஹான மவுலூதில் ஓதப்படும். (மவுலூது – புகழ்மாலை)
கோதுமைக்கனி – பெண்குறியை மறைவாகச் சொல்வது
அவுரியம் – அபூர்வம்
*
நன்றி : முத்து, சந்திரவதனா செல்வகுமாரன் ( பூண்டுகள் பற்றிய வலைப்பதிவுக்காக)
*
E-Mail : abedheen@yahoo.com
- கடிதம் ஜனவரி 20,2005 – செருப்பு: குறும்படம்.
- ஆறடி அறைகளின் குரல்கள்
- தியாகத்தின் கதை – போர்க்குதிரை – நுால் அறிமுகம்
- நெரூதா அனுபவம்
- காஞ்சி மடம் – க.நா.சு – பிலோ இருதயநாத் – மாலதி சந்தூரின் தெலுங்கு மிட்டாய் – வலம் போன நரி (அல்லது – மஞ்சரி 1955 தொகுப்பு)
- மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டியின் கட்டுரை
- பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் கால்வினோ கதைகள்
- ஓவியப்பக்கம் பதினான்கு – வில்லியம் கெண்ட்ரிட்ஜ் – நவீன் ஊடகத்தில் உயிர்த்தெழும் கோட்டோவியங்கள்
- வெங்கட்ரமணனின் குவாண்டம் கனி
- புத்தக விழாவில் ‘பிடித்தவை ‘
- கடிதம் ஜனவரி 20,2005
- ஹதீஸ் – ஒரு சிறு விளக்கம்!
- இயற்பியல்::2005 புதிய இணையதளம்
- கடிதம் ஜனவரி 20,2005 – நேச குமார் தெளிவுபெறவேண்டும்
- கடிதம் ஜனவரி 20 ,2005
- கடிதம் ஜனவரி 20,2005 – ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரால் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிர்ப்பு… பணிந்தது இரான்
- கடிதம் ஜனவரி 20,2005 – திருமாவளவனும் தமிழ்த்திரையுலகும்
- அவரவர் உடை அவரவர் விருப்பமே!
- முகம்
- ஓவியர்களின் உலகம் அழைக்கிறது – ஜனவரி 25 ,2005
- ஜனவரி 30,2005 – ராஜராஜேஸ்வரம் நிகழ்ச்சி
- அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும்
- குர்பான்
- சுனாமிக்கு (அமெரிக்கா) IRS காட்டும் பரிவு:
- மறுபடியும்
- இப்படிக்கு இணையம்….
- த ளி ர் ச் ச ரு கு
- து ை ண – குறுநாவல் – 1
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -55
- வேட்கை
- பேரழிவுச் சீரமைப்பு -உளவியல் கண்ணோட்டம்-2
- நிஜமான போகி
- வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம்
- வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்
- அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங்
- சொன்னார்கள் சொன்னார்கள் – ஜனவரி 20 ,2005
- தினம் ஒரு பூண்டு
- கவிதைகள்
- என் பொங்கல்
- பெரியபுராணம்- 27 -16. கண்ணப்ப நாயனார் புராணம்
- கவிக்கட்டு 45 – என்னை என்ன செய்யப்போகிறாய் ?
- உதிரிப்பூக்கள்
- அலைகளை மன்னிக்கலாம்
- கவிதைகள்
- இவ்வாண்டு படைத்த கடற்பொங்கல்!
- கண்டு கொண்டேன் !
- சனிக்கோளின் துணைக்கோளில் தடம் வைத்த ஈரோப்பியன் விண்ணுளவி ஹியூஜென் [ESA Probe Huygens Lands on Saturn ‘s Moon Titan] (Jan 14 2005