தினமணி பத்திரிக்கை நிருபர் தற்கொலையும் தமிழ் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

வெளி ரங்கராஜன்


அண்மையில் தினமணி பத்திரிகையின் இளம் நிரூபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக இந்து பத்திரிகையில் செய்தி வந்தது. தினமணியில் பணிபுரிய வேண்டும் என்கிற ஆர்வத்தில் தன்னுடைய வேலையையும் விட்டுவிட்டு தினமணிக்கு வந்த இந்த பட்டதாரி இளைஞர் தினமணி நிர்வாகத்தால் முறைகேடாக நடத்தப்பட்டு பழிவாங்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக கேள்விப்பட்டேன். பத்திரிகை வட்டாரத்தில் இது ஒருபெரும் புயலைக் கிளப்பும் என்று நினைத்தேன். ஆனால் எந்தவிதமான சலனமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. கொலைச் செய்திகளையும், விபத்து செய்திகளையும் வைத்தே பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகங்கள் இந்த செய்தியில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. சென்னை பத்திரிகையாளர் சம்மேளனம் அந்த இளைஞருக்கு நஷ்ட ஈடு கோரி தீர்மானம் நிறைவேற்றியதோடு விஷயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றோ, தனிப்பட்ட சம்பவம் என்றோ ஒதுக்கிவிடமுடியாது. உண்மையில் இது வெளிப்படையான ஒரு சம்பவம். தமிழ் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்களில் உண்மையான ஆர்வத்துடன் வேலைக்கு சேரும் பலர் அந்த ஊடகங்களின் மதிப்பீட்டு சரிவுகளால் மனச்சிதைவுற்று நடைப்பிணமாவதே தொடர்ந்து நிகழ்கிறது. தங்களைச் சுற்றி நடக்கும் இது போன்ற அவமானங்களுக்கும், முறைகேடுகளுக்கும் அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க நேர்கிறது.

இதுபோன்ற மனித உணர்வுகளுக்கு மதிப்பில்லாத அப்பட்டமான வியாபார நிறுவனங்களில் மேலான மதிப்பீடுகளைக் கோருவது பொருத்தமற்றது என்றாலும் நிறுவனத்துக்குத் தேவையான உழைப்புக்கு உரிய மரியாதையையும், ஊதியத்தையும் எதிர்பார்ப்பது ஒரு அடிப்படை உரிமை தானே. ஆனால் உழைப்பும் சுரண்டப்பட்டு உரிய ஊதியமும் இல்லாமல் மனச்சிதைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு சூழல் கண்டிக்கப்பட வேண்டியதாகிறது. மிகவும் மன நெகிழ்ச்சியும், தீவிரமும் கொண்ட கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இது நேரும்போது மிகவும் அசாதாரண முடிவுகளுக்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள். புதுமைப்பித்தன் காலத்திலிருந்தே இவை ஏதாவது விதமாக அகால மரணங்களின் பின்புலமாகின்றன. இன்றைய நெருக்கடியான தொழில்உறவுச் சூழலில் மனித உறவுகளின் சிதைவுற்ற தன்மை என்பது ஒரு பரவலான விஷயம் என்றாலும் தமிழ் ஊடகங்களில் நிலவி வரும் ஒரு பாதுகாப்பற்ற நிலை அடிப்படையான மனித உரிமைகள் குறித்த ஒரு தீவிர கவனத்தை கோரி நிற்கிறது.

அதுவும் அண்மைக் காலங்களில் இணையத் தகவல்களின் வரவால் ஏற்பட்ட வாசகப் பெருக்கத்தில் இந்த ஊடகங்கள் தங்களுடைய நம்பகத்தன்மையை விஸ்தரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இல்லாவிட்டால் கோணங்கியும், சாருநிவேதிதாவும் இவர்களுடைய பக்கங்களில் எப்படி இடம் பெற முடியும் ? சிறுபத்திரிகை சார்ந்த இளம் படைப்பாளிகளின் படைப்புகள் வெளியாகி இருக்கும் சமீபத்திய இந்தியா டுடே இலக்கிய மலரைப் பார்க்கும்போது அதில் வந்திருக்கும் விஷயங்களை இந்தியா டுடே ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இன்றைய தகவல் பெருக்கத்தில் இந்த ஊடகங்களுக்கு தங்களை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தங்களுடைய சுய இருப்புக்காகவாவது புதிய படைப்புக்களையும், கருத்தோட்டங்களையும் இவை நாட வேண்டிய சூழல் இருக்கிறது.

இத்தகைய நிர்ப்பந்தத்தில் உள்ள இந்த ஊடகங்கள். இவற்றிற்கு பங்களிப்பு செய்யும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உரிய முறையில் கெளரவிப்பதில்லை. இந்த ஊடகங்களின் பத்தாம் பசலித்தனமான பார்வைகளும், நடைமுறைகளும்தான் இவர்களுடைய உறவுமுறைகளை நிர்ணயம் செய்கின்றன. நிறுவன நலன் சார்ந்த தொழில்முறை உறவுகளைக் கூட இவர்கள் பேணுவதில்லை. இதனால் புதிய விஷயங்களுக்கு வரவேற்பு இருப்பது போல் தோன்றினாலும் அவைகளை வளர்த்தெடுக்கக் கூடிய வாய்ப்புள்ள படைப்பாளிகள் தொடர்ந்த அவமானத்தையும், புறக்கணிப்பையுமே சந்திக்க நேர்கிறது. வறிய சூழலில் உள்ள இந்தப் படைப்பாளிகள் தங்கள் இருப்புக்காக இந்த அவமானங்களை சகித்துக் கொள்ளவேண்டி இருக்கிறது.

இன்றைய சூழலில் நல்ல எழுத்துக்கள் பரவலாக இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பது போல் தோன்றினாலும் அவைகளுக்கான மரியாதை என்பது இந்த ஊடகங்களில் கேவலமானதாகவே உள்ளது. தன்னுடைய சுயமரியாதைக்காகவும், கெளரவத்துக்காகவும் ஒரு எழுத்தாளன் கடுமையாகப் போராடவேண்டிய சூழலே தொடர்ந்து இந்த ஊடகங்களில் உள்ளது.

***

Series Navigation