நடக்கவே நடக்காத விஷயங்களை சுடச்சுட வழங்கும் ஒரே நாளிதழ்
***
நள்ளிரவில் ஸ்டாலின் மீண்டும் கைது.
ஸ்டாலின் வீட்டைச் சுற்றி இருக்கும் சென்னை அதிரடி காவல்படை இன்று தூங்கிக்கொண்டிருந்த ஸ்டாலினை தட்டி எழுப்பி கைது செய்தனர். அருகேயே தூங்கிக்கொண்டிருந்த சன் டிவி மற்றும் இதர தொலைக்காட்சியினரும் எழுந்து இந்த நள்ளிரவு கைது சமாச்சாரத்தை திகில்படம் போல படம்பிடித்தனர். போலீஸிடம் இந்த கைதுக்கான காரணத்தை கேட்ட பத்திரிக்கையாளர்களின் கேமரா போன்ற சமாச்சாரங்கள் வழக்கம்போல உடைக்கப்பட்டன. உடைக்கப்படும் என்று தெரிந்திருப்பதால் முன்னமே பொம்மைக் கேமரா கொண்டுவந்திருந்த பத்திரிக்கையாளர்கள் உண்மையான கேமராவை எடுத்து போலீஸார் மற்றும் ஆவேசமான குடும்பத்தினர் ஆகியோரை படம் பிடித்தனர்.
மேலும் இந்த நள்ளிரவு கைதுக்காக சென்னை மற்றும் மதுரையிலிருந்து வந்திருந்த திமுக தொண்டர்கள் ‘அழகிரி வாழ்க ‘, ‘ஸ்டாலின் ஒழிக ‘ ‘அழகிரி ஒழிக ‘ ‘ஸ்டாலின் வாழ்க ‘ போன்ற கோஷங்களை எழுப்பியபடி கலைந்து சென்றதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
ஸ்டாலின் தும்மல் போட்டார் – ஸ்டாலின் கைதுக்கு ஜெயலலிதா விளக்கம்
இன்று சட்டப்பேரவையில் வழக்கம்போல எதிர்கட்சியினர் அனைவரது மைக்குகளும் பிடுங்கப்பட்டு ஜெயலலிதாவின் மைக் மட்டுமே வேலை செய்யும்படி இருக்க பேரவைத்தலைவர் வழக்கம்போல ஆணையிட்டுவிட்டு, அந்த ஆணையை அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.
இதன் பின்னர் அமெரிக்காவில் நடக்கும் அராஜகம், சீனாவில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தல் குழறுபடிகள், ஜப்பானில் நடக்கும் அடாவடி அரசியல் அனைத்தையும் விளாசி பேருரை ஆற்றினார் முதல்வர் ஜெயலலிதா. சீனாவில் நடக்கும் அராஜகத்தை கேட்காத கம்யூனிஸ்டு கட்சியினருக்கு வேட்டி கட்டவே அருகதை இல்லை என்று கம்யூனிஸ்டு கட்சியினருக்கு அறிவுறுத்தினார் முதல்வர். இதற்கு ‘சீனாவுக்கு விளக்கேற்ற வந்த சிங்கார அம்மா வாழ்க ‘ கோஷங்கள் ஆளும்கட்சியைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் கோஷம் எழுப்பினார்கள். ‘சீனாவில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தாத கம்யூனிஸ்டுகளே வெளியேறுங்கள் ‘ என்று கோஷத்தை எழுப்பினார்கள். அதுவரை கம்யூனிஸ்டு கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் உட்கார்ந்திருந்ததால், பேரவைத்தலைவர் அவர்களை வெளியேற்றும்படி போலீசுக்கு உத்தரவிட்டார். குண்டுக்கட்டாக அவர்கள் வெளியேற்றப்பட்டதும், மிகவும் மனம் வருந்தி முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ‘இவ்வாறு நான் கேட்டதற்கு பதில் கூறாமல் வெளிநடப்பு செய்யும் கம்யூனிஸ்டு கட்சியினர் மக்களுக்குத் துரோகம் இழைப்பதை பார்த்துக்கொண்டு தமிழ்மக்கள் இருக்கமாட்டார்கள் ‘ என்று ஆவேசமாக பதில் கூறினார்.
இதே போல ராஜஸ்தானில் நடந்த அக்கிரமங்களுக்காக காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்விக்கப்பட்டார்கள். இதன் பின்னர் பாண்டிச்சேரியில் நடக்கும் அக்கிரமங்களுக்காக பாமக கட்சியினர் வெளிநடப்பு செய்விக்கப்பட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்றத்துக்கு வராமல் இருப்பதற்காக திமுகவினர் வெளிநடப்பு செய்விக்கப்பட்டார்கள்.
இதன் பின்னர் பேருரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ‘தன்னை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து இந்த முதல்வர் பதவியில் அமர்த்திய சோ, ராமதாஸ், மூப்பனார் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றிகூறி, சோ, மூப்பனார், ராமதாஸ் போன்றோருக்கு தான் எப்படி நன்றி கூறினேனோ, அதே போல தமிழக மக்களுக்கும் ‘நன்றி ‘ கூற தொடங்கியிருப்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் ‘ என்று கூறி முடித்தார். அதிமுகவினர் கரகோஷம் எழுப்பி ‘அம்மா அம்மா அம்மா ‘ என்று வெறிகொண்டு ஆடினார்கள் என்று நம்பவேமுடியாத வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்களை கையமர்த்திய ஜெயலலிதா, ‘எதிர்கட்சியினர் தங்கள் வேலையைச் செய்யாமல் வெளிநடப்பு செய்திருப்பதால், தமிழக மக்களுக்கு என் கடமை உணர்வை தெரிவிக்கும் பொருட்டு, ஏன் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பதை கூறுகிறேன். அவர் தும்மல் போட்டார் என்று போலீஸ் வட்டாரங்கள் கண்டுபிடித்துள்ளன. அவர் ரகசியமாக சதி செய்து சார்ஸ் நோயை உடல் மேல் தானே போட்டுக்கொண்டு தமிழகத்தை தும்மியே நோய் பரப்ப துணிந்துவிட்டதாக ரகசிய வட்டாரங்கள் சதி வேலையை அம்பலம் செய்துவிட்டன. அதனால் அவர் கைது செய்யப்பட்டு எல்லா கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் ‘ என்று தெரிவித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
நம்நாடு பத்திரிக்கை ஆசிரியர் கைது .
அதிமுகவின் நாளேடான நம்நாடு பத்திரிக்கையின் ஆசிரியர் இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா இந்தியாவுக்கு பிரதமராக வேண்டும் என்று கோரி எழுதிய கார்ட்டூனில் அவரது உருவம் சற்று குண்டாக வரையப்பட்டதால், அவதூறு வழக்கின் கீழ் அவர் இன்று கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனந்த விகடன் முதல், டெலிகிராஃப், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து வரை எல்லா பத்திரிக்கைகள் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பது தெரிந்ததே. அதே வரிசையின் இன்று அதிமுகவின் நாளேடான நம் நாடு பத்திரிக்கையும் இணைந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது என்று சுஜாதா, வாஸந்தி போன்ற பத்திரிக்கையாளர்கள் தெரிவித்ததை சன் டிவி ஒளிபரப்பியது.
உலகப்புகழ் பெற்ற நம்நாடு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்தது நம்நாடு பத்திரிக்கைக்கு இழுக்கல்ல என்றும், அது கைது செய்தவர்களுக்கே இழுக்கு என்றும் கல்கி ராஜேந்திரன் கூறியதையும் சன் டிவி ஒளிபரப்பியது.
***
துக்ளக் ஆசிரியர் சோ கைது.
நேற்று நள்ளிரவு நாடக ஆசிரியர், நாடக நடிகர், அரசியல் வித்தகர், அரசியல் தரகர், பத்திரிக்கையாளர் சோ அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது எழுப்பி கைது செய்யப்பட்டார். யாரை அதிமுக அரசு கைது செய்தாலும் அதற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் சோ அவர்களே இன்று கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சி அலையை எழுப்பியது. இருப்பினும் பல பத்திரிக்கையாளர்கள் ‘வேண்டும் அந்த ஆளுக்கு ‘ என்று கூறியதை நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
‘தூங்கிக்கொண்டிருக்கும்போது உங்களை கைது செய்தார்களா ? ‘ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள். ‘தூங்கிக்கொண்டிருக்கும்போது எப்படி கைது செய்யமுடியும். எழுப்பித்தான் கைது செய்தார்கள் ‘ என்று வழக்கம்போல இடக்கு முடக்காகப் பதில் கூறினார் சோ .
‘உங்களைக் கைது செய்ய காரணம் என்ன ? ‘ என்று கேட்டார்கள் பத்திரிக்கையாளர்கள்.
‘இந்த அரசு எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். என்னை கைது செய்யதற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும். தீவிரவாதிகளை இந்த அரசு ஒடுக்குகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆகவே இந்தக் கைதையும் நான் வரவேற்கிறேன். என்னைக் கைது செய்ததன் மூலம் தீவிரவாத ஒழிப்பில் இந்த அரசின் தீவிரத்தைப் புரிந்து கொள்கிறேன் ‘ என்று சோ கூறினார்.
***
எல்லா எதிர்க்கட்சி எம் எல் ஏக்களும் கைது: புரட்சித்தலைவி அதிரடி நடவடிக்கை
இன்று தமிழ்நாட்டின் அதி மு க அல்லாத எல்லா எம் எல் ஏக்களும் கைது செய்யப் பட்டனர். என்ன காரணம் என்று ஜெயலலிதாவிடம் கேட்ட போது, ‘அவர்கள் அத்து மீறி சட்டசபையில் நுழைந்ததால் கைது செய்யப் பட்டார்கள். ‘ என்று ஜெயலலிதா தெரிவித்தார். எம் எல் ஏக்கள் சட்டசபைக்குப் போகாமல் வேறு எங்கே போவார்கள் என்று ஒருவர சன்னமான சன் டிவி குரலில் முணுமுணுத்தார்.
‘அவர்கள் அ தி மு கவில் சேராதது குற்றமல்லவா ? மக்கள் தீர்ப்பை மதித்து அதி மு கவில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து விட்டால் பிரசினை இல்லை. ‘ என்று காளிமுத்து தீர்ப்பளித்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
தமிழக போலீஸ் கமிஷனர் கைது.
தமிழக போலீஸ் கமிஷனரை கைது செய்யும் படி தமிழக போலீஸ் கமிஷனருக்கே உத்தரவிட்டு சாதனை படைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
தமிழக போலீஸ் கமிஷனர் கால் சுளுக்கியிருந்ததால் ஒருமாதிரி நடந்து வந்தபோது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதனை கண்டு கோபம் கொண்டு போலீஸ் கமிஷனரை கைது செய்யும்படி உத்தரவிட்டார். வேறு வழியின்றி தமிழக போலீஸ் கமிஷனர் தன்னைத்தானே கைது செய்ய முயன்றார். அது பார்க்க வேடிக்கையாக இருந்தது என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக போலீஸ் கமிஷனர் தன்னைத்தானே தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்று போலீஸ் லாக்கப்பில் அடைத்துக்கொண்டார்.
பெரிய மனதுடைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக போலீஸ் கமிஷனர் மீது இரக்கம் கொண்டு, துணை போலீஸ் கமிஷனரை அழைத்து போலீஸ் கமிஷனர் மீது என்ன வழக்கு போடலாம் என்று சிந்தித்து சொல்லும்படி ஆணையிட்டிருப்பதாகவும் நம்பத்தகாத செய்திவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
***
எல்லா பத்திரிக்கை ஆசிரியர்களும் கைது.
இந்த முக்கியமான செய்திகளுக்கு நடுவே தேவையில்லாமல், பயங்கரவாதத்தை தூண்டும் வண்ணம், தஞ்சைத் தரணியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதையும், கோயமுத்தூரில் நெசவாளிகள் தற்கொலை செய்துகொண்டதையும் வெளியிட்ட தினமணி, எக்ஸ்பிரஸ், தினமலர், தினதந்தி ஆகிய செய்திப்பத்திரிக்கை ஆசிரியர்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்தார் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
இனி அச்சுத்தொழில் தமிழ்நாட்டில் தேவையா என்று ஆராய்ந்து அறிய உயர்மட்டக் குழுவை பேரவைத்தலைவர் காளிமுத்து அவர்கள் முதல்வரின் காலை தொட்டு வணங்கி ஆரம்பித்து வைத்தார். உயர்மட்டக்குழுவில் சிறையில் இருக்கும் சோ, நம்நாடு ஆசிரியர் இருவரும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் ஜெயலலிதா அரசின் பாரபட்சமற்ற போக்கை வெளிக்காட்டுகிறது என்று பேரவைத்தலைவர் காளிமுத்து அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று நம்பவே முடியாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
அனைத்து தமிழக மக்களும் கைது – ஜெயலலிதா அதிரடி ஆணை
சசிகலாவையும் ஜெயலலிதாவையும் தவிர தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் கைது செய்யும் படி இன்று காலை ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனை நடைமுறைப் படுத்த இந்திய ராணுவத்தையும் மத்திய போலீஸையும் அனுப்பித்தரும்படி மத்திய அரசை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மத்திய அரசு கவர்னரும் கைது செய்யப்படுவாரா என்று கேள்வி எழுப்பி அவருக்கு கேட்டுள்ளது. கவர்னர் கைது செய்யப்பட்டால், கான்ஸ்டிடியூஷனல் பிரேக்டவுன் ஆகலாம் என்று சில சட்ட நிபுணர்கள் கூறினார்கள். இதுவரை நடக்காத எந்த பிரேக்டவுனும் இனிமேல் நடக்கப்போவதில்லை என்று சூடாக தமிழக அரசிடமிருந்து பதில் வந்திருப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. ரஜினி ரசிகர் வட்டாரங்கள், ரஜினியை கைது செய்வதற்காகத்தான் இப்படி அனைத்து தமிழக மக்கைளையும் கைது செய்ய உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று நம்புவதாகவும் சூனியர் விகடன் பத்திரிக்கை தெரிவித்துள்ளதாக நம்பத்தகாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
***
***
என்னைக் கைது செய்வதற்காகவே தமிழக மக்கள் அனைவரையும் கைது செய்ய ஜெயலலிதா ஆணை – கருணாநிதி கடிதம்
‘அண்ணாவின் தம்பி, என் மருமகனின் மாமன், ஸ்டாலினின் தந்தை, அழகிரியின் அப்பாவான என்னை கைது செய்யவென்றே இந்த தமிழக மக்களை கைது செய்யும் ஆணை என்பதை உணர்ந்திட்டு உடன்பிறப்புகள் பஸ்களை உடைத்திட வேண்டாம் என்றும், சாலைமறியல்களைப் பண்ணவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ‘அய்யோ கொல்றாங்க ‘ என்று கூக்குரலிட்ட என் அருமை உடன் பிறப்புகளும் சிறைக்குப் போகின்ற அவலத்தினை கேட்க நாதியில்லாமல் போய்விட்டது. மத்திய அரசு முரசொலி மாறனுக்கு மருத்துவ வசதி செய்து தந்திருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக என் உடன் பிறப்புகளை பலிகொடுத்து இந்த அராஜக அரசினை தாங்கிக்கொள்ளும்படி ஆகிவிட்டது என்பதனை என் உடன் பிறப்பான நீ உணர்ந்தே இருக்கிறாய். ஆகவே கொதித்து எழுந்து விடாதே. பொங்கி புரப்பட்டுவிடாதே. பொறுமை காத்திடு. தம்பி மாறன் வந்திடுவான். அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ‘ இவ்வாறாக கலைஞர் மு கருணாநிதியின் கடிதம் இருந்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
***
தமிழ்மக்கள் அனைவரும் கைது.
கவர்னர் கைது இல்லை.
மத்திய அரசு நிம்மதி பெருமூச்சு.
வழக்கம்போல நள்ளிரவில் எல்லா தமிழக மக்களும் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு ஒத்துழைக்காததால், தமிழ்நாட்டு போலீஸை வைத்தே எல்லா தமிழர்களையும் கைது செய்து சாதனை படைத்திருக்கிறார் டாக்டர் மாண்புமிகு புரட்சித்தலைவி முதல்வர் ஜெயலலிதா அவர்கள் என்று பேரவைத்தலைவர் காளிமுத்து சிறைக்குச் சென்றதும் அங்கு ஏற்கெனவே கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிருபர்களிடம் தெரிவித்தார். எல்லா தமிழர்களையும் கைது செய்துவிட்டு தானும் சிறைக்குள் வந்து பூட்டிக்கொண்ட தமிழக போலீஸாரைப் பார்த்து பெருமிதம் அடைந்தார் டாக்டர் மாண்புமிகு புரட்சித்தலைவி முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
கான்ஸிடியூஷனல் பிரேக்டவுன் ஆகாமல் இருக்கவேண்டி கவர்னரை விட்டுவைத்ததற்காக சிறையில் இருந்த தமிழ்நாடு பாஜக கட்சித்தலைமை ஜெயலலிதா அவர்களைப் பாராட்டியது. முஸ்லீம்களை சிறையில் அடைத்த ஒரே காரணத்துக்காக முதல்வர் ஜெயலலிதா அவர்களை பாராட்டுவதாக ராமகோபாலன் தெரிவித்தார். இந்துக்களையும் அவர் சிறையில் அடைத்திருக்கிறாரே என்று கேட்டதற்கு, கருணாநிதி இந்துக்களை மட்டும்தான் சிறையில் அடைத்திருக்கிறார் என்பதை நான் ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பேன் என்று ஆவேசமாக ஆடினார் ராமகோபாலன். எதற்கு வம்பு என்று நிருபர்கள் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்கள். சோனியா இத்தாலிக்கு உல்லாசப்பிரயாணம் சென்றிருப்பதால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோபா தெரிவித்தார். கூட இருந்த இளங்கோவன், சோபா சொல்வது தவறு என்றும், கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரத்துக்கு சோனியா உல்லாசப்பிரயாணம் சென்றிருப்பதால்தான் நம்மால் முடிவெடிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். இந்த நேரத்திலும் இப்படி கோஷ்டி சண்டை போடும் காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்து வெளிப்படையாகவே நிருபர்கள் தங்கள் தலையில் அடித்துக்கொண்டதாக நம்பவே முடியாத வட்டாரங்கள் தெரிவித்தன.
***
அனைத்து செய்திகளையும் வழங்கிய நம்பவேமுடியாத வட்டாரங்களுக்கு நன்றிகூறி தலைமறைவாக ஓடுவது
உங்கள் சொதப்பப்பா.
சொதப்பப்பா
தப்பப்பா
ப்பப்பா
பப்பா
பா…..
(தொலைக்காட்சி, வானொலியில் கேட்கும் எதிரொலி போல)
***
- அனுபவக் குறிப்புகளும் ஆனந்தமும்(சிகரங்கள் – வளவ.துரையனுடைய கட்டுரைத்தொகுதி நுால் அறிமுகம்)
- மலராகி மருந்தாகி….
- பிள்ளை-யார் ?
- காதல் கழுமரம்.
- அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:6 சாண எரி வாயு தொழில்நுட்பத்துக்கான சந்தையை உருவாக்குதல்
- அறிவியல் துளிகள்-23
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 1 ஆல்பர்ட் ஐன்ஸ்டானும் நெய்ல்ஸ் போரும்
- மு.வ. ஒரு படைப்பாளியா ?
- ‘ ‘ நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள் ! ‘ ‘
- நான் யார்……
- அன்பாலான உலகம் (து.ராமமூர்த்தியின் ‘அஞ்ஞானம் ‘ ) எனக்குப்பிடித்த கதைகள் – 58
- பாரதி இலக்கிய சங்கம் – சொல் புதிது மீதான விமரிசனம் பற்றிய தொகுப்பு
- தினகப்ஸா – அராஜக சிறப்பிதழ்
- சிலந்தி
- யார் இந்த பாரதிதாசன் ?
- வண்ணம்
- தமிழா கேள்…… தமிழவேள்!
- தாவரக்காதல்
- மீன் சாமியார்
- மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம்
- இயலாமை..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் மூன்று
- கடிதங்கள்
- குதிங்கால் வலியும், அது குணமான விதமும்
- தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது ?
- தீர்வை நோக்கி விரையும் காவிரிப் பிரச்சனை
- ஊழ்
- சுயசவுக்கடிக் கழைக் கூத்தாடிகள் : நம் தலித்-திராவிட-இடதுசாரி அறிவுஜீவிகள்
- உலகின் மிகப் பெரிய எதிரி யார்!
- இன்னும் தொலையாத இன்னல்
- வாழப் பழகிய சந்தன மரம்
- வாக்குமுலம்
- ‘பாரதி பாடாத பாட்டு ‘
- எது வரை…….. ?