திண்ணை என்ன சொல்கிறது ?

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

திண்ணை ஆசிரியர் குழு


கடந்த மூன்றரை ஆண்டுகளில் திண்ணை ஆசிரியர் குழு மிகச் சொற்பமே எழுதியுள்ளோம். திண்ணை மாறுபட்ட, பல வேளைகளில் முரண்பட்ட கருத்துகளுக்கும் களமாக அமையவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். எங்களுக்கு லாப நோக்கமோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது கருத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. ஜனநாயக ரீதியாக, அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு பொது மேடையாய்த் தான் திண்ணை இருக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

தமிழில் இப்படிப் பொதுமேடையாக இருக்கிற ஊடகங்கள் மிக அரிது . தமிழில் மாற்றுக் கருத்துகள் வெளிப்படுவது என்பதே கிடையாது. எல்லோரும் அவரவர் மேடைகளில் தம்முடைய கருத்துகளை வெளியிடுவார்களே தவிர, ஒரே மேடையில் முரண்பட்ட பார்வைகள் வெளிவருவது என்பது காணக் கிடைக்காதது. இதனாலேயே திண்ணை தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. மேடை அமைத்துக் கொடுத்ததாலேயே கருத்துகளுடன் திண்ணை உடன்படுகிறது என்ற தோற்றம் எப்படி அமைய முடியும் என்று தெரியவில்லை.

இதன் ஆரம்பத்திலிருந்து தொடங்கலாம். ஜெயமோகன் மு தளையசிங்கம் பற்றி ஊட்டியில் ஒரு கூட்டம் நடத்துகிறார். இதற்கான விதிமுறைகளை அவர் நியமிக்கிறார். இது சொல் புதிது சார்பில் , ஜெயமோகன் முன்னின்று நடத்தும் கூட்டம் என்பதால் அதற்கான விதிமுறைகளைக் கூறி அவற்றை நடைமுறைப் படுத்தும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. இந்தக் கூட்ட்ம் பொதுக் கூட்டம் அல்ல. கூட்டத்தின் மையத்திற்கு ஆக்கம் சேர்கவில்லை என்று கருதினால், எவரையும் காரணம் சொல்லாமலே கூஅட நீக்குவதற்கு அமைப்பாளருக்கு முழு உரிமை உண்டு என்று ஒரு கருத்தும் ஆசிரியர் குழுவில் வெளியாயிற்று.

அந்தக் கூட்டம் பற்றிய விரிவான பதிவு திண்ணையில் வெளியாகிறது. இதில் பங்கு பெற்ற ராஜநாயகம் தமக்கு அநீதி இழைக்கப் பட்டதென ஒரு கட்டுரையை திண்ணைக்கு சமர்ப்பிக்கிறார். இதில் திண்ணை ஆசிரியர் குழு , கட்டுரையின் மையத்திற்கு அப்பாற்பட்டவை என்று கருதிய சில வரிகளை நீக்கிவிட்டு பிரசுரிக்கிறது. ஜெயமோகன் இதற்கு எதிர்வினையாக விவாதக் களத்தில் எழுதுகிறார். (காலச்சுவடு இந்தக் கட்டுரை முழுமையைப் பிரசுரித்திருக்கிறது. ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் பார்க்கலாம். இப்போது ஏன் திண்ணை ஆசிரியர் குழு சில பகுதிகளை நீக்கியது ? ஏன் காலச்சுவடு ஆசிரியர் குழு நீக்குவது அவசியம் இல்லை என்று கருதியது ? இதற்கெல்லாம் திட்டவட்டமான பதில்கள் சாத்தியமா ? அந்த பதில்கள் அனைத்துத் தரப்பினரையும் திருப்தி செய்யுமா ?)

ராஜநாயகத்தின் கட்டுரையில் ஒரே ஒரு வரியின் தொனியை எடுத்துக் கொண்டு மாலன் எழுதுகிறார். அதற்கு சரவணன் பதில் எழுதுகிறார். ஜெயமோகனின் கட்டுரையை முழுமையாய்ப் படிக்காமல் மாலன் அவதூறு செய்கிறார் என்பது சரவணனின் வாதம். ‘அவதூறு ‘ என்ற சொற்றொடர் நீக்கப் பட்டிருக்கவேண்டும் என்பது மாலனின் வாதம் . இந்தப் பிரசுரத்திற்கு திண்ணை பொறுப்பேற்க வேண்டும் என்பது மாலனின் கோரிக்கை.

இந்தத் தொடர் நிகழ்ச்சியில் திண்ணை என்ன செய்திருக்கவேண்டும் ? எங்கே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும் ? ராஜநாயகம் கட்டுரையைப் பிரசுரித்தது தவறா ? இது ராஜநாயகத்திற்கு நியாயம் செய்ததாகுமா ? ராஜநாயகத்தின் கட்டுரையை ஆசிரியர் குழு விவாதித்த போது, ‘தொழுகை ‘ பற்றிய விவாதம் எழுந்தது. எங்கள் விவாதம் செல்லம்மாவின் மீறல் அலங்காரத்தம்மாளின் மீறலோடு ஒப்பிடப் படுவதில் மையம் கொண்டது. இது எழுப்பும் கேள்விகள் பல.

‘லேடி சாட்டர்லிஸ் லவரு ‘டன் ஒப்பிட்டு ஒரு குறிப்பு விவாதத்தில் வருகிறது. இது ஒரு சரியான புரிதல் என்று கருதினோம். வர்க்கங்களை மீறிய காமமாய் லேடி சாட்டர்லியின் மீறல் சரியாகவே புரிந்து கொள்ளப்பட்டதால் தான் இது தடை செய்யப்படவேண்டும் என்று இங்கிலாந்தில் கோரிக்கை எழுந்தது . அதுபோலவே சாதியத்தை மீறியது செல்லம்மாவின் செயல். ஆனால் இந்த ஒப்பீட்டில் கோபம் பற்றியும் ராஜநாயகம் பேசுகிறார். செல்லம்மாவின் குழந்தைகள் எப்படிப் பாதிக்கப்படும், மீறல்கள் செல்லம்மாவைக் கடந்து வேறு குடும்ப நபர்களைக் காயப் படுத்துமா ? எனில் இந்தப் பயத்தை முன்னால் வைத்துத் தானே சமூகம் இயல்பான உணர்ச்சிகளுக்குத் தடை விதிக்கிறது ? குடும்பத்திற்கு விசுவாசமாய் இரு, குலத்திற்கு விசுவாசமாய் இரு, மதத்திற்கு விசுவாசமாய் இரு, சாதிக்கு விசுவாசமாய் இரு, உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதே என்பது தானே எல்லா மூடிய சமூகங்களின் குரலாய் இருந்து வந்திருக்கிறது ? மீறல் என்று சொன்னவுடன் ராஜநாயகத்தின் நினைவிலி மனதில் அலங்காரத்தம்மாள் வருவது சிந்தனைக்குரியது. சாதீயத்திற்கான மீறல் என்று வெளிப்படையாய் தி ஜானகிராமனால் சொல்லப் படாவிட்டாலும் மிக மெல்லிய குறிப்பு சிவசுவின் மீசை வடிவில் வருகிறது. ஆனால் விவாதத்திற்குரிய விஷயம் என்னவென்றால் , செல்லம்மா உடனடியாக அலங்காரத்தம்மாளை நினைவிற்குக் கொண்டு வருமெனில் , முத்துவேலரை (ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலுபேர் ‘) தி ஜானகிராமனின் ‘அடி ‘ நாவலில் வரும் பல் டாக்டரை , ‘மரப்பசு ‘வில் வரும் கோபாலியை ஏன் நினைவுக்குக் கொண்டு வரவில்லை. ஆணாதிக்க மனம் மீறலைப் பார்க்கும் ஒரு பார்வையாய்க் கொள்ளலாமா ? ஆனால் நாங்கள் எங்களுக்குள் விவாதித்த இவை எதுவுமே விவாதத்தில் முன்வைக்கப் படவில்லை.

ராஜ நாயகத்தின் கட்டுரையைப் போடாமல் இருக்கலாம். இது ஜெயமோகனைக் காபந்து பண்ணும் ஒரு முயற்சியாய்ப் பார்க்கப் படாதா ? மாலன் தொனியின் அடிப்படையில் எழுதியதை நிராகரித்திருக்க வேண்டுமா ? அவர் ஆரம்பப் புரிதல் தவறு என்றாலும் , தளையசிங்கம் பற்றி சில தகவல்களைத் தெரிவிக்கிறார் இல்லையா ?

சரவணனின் கட்டுரையை நிராகரித்திருக்க வேண்டுமா ? இப்படி செய்வது மாலனைக் காபந்து பண்ணுவதாகாதா ? இது சரியாகுமா ? இவர்கள் எல்லோருமே தம்மைத் தாமே காபந்து பண்ணிக்கொள்ளக் கூடிய எழுத்தாற்றலும் , திறமையும் உள்ளவர்களே. ஒருவர் சார்பாகத் திண்ணை பேசுவதென்பது எப்படி இயலும் ?

திண்ணை என்ன சொல்கிறது என்பது மாலனின் கேள்வி.

திண்ணை ஒன்றும் சொல்லவில்லை என்பது திண்ணையின் பதில்.

எடிட்டிங்கிற்கும் தணிக்கைக்குமான வேறுபாடு மிகமிக மெல்லிதானது . எங்கள் எண்ணம் எல்லோரும் தயங்காமல் கருத்துகளைச் சொல்ல அனுமதிக்க வேண்டும். இது குறித்து எங்களுக்கு வருத்தமில்லை. வாசகர் குரல் பகுதியில் பொறுப்புணர்வுடன் எழுதிய பலரின் முக்கியமான கருத்துகள் இப்படிப்பட்ட ஒரு பொதுமேடையில்லாமல் சாத்தியமில்லை. இவர்களில் செங்கள்ளுச் சித்தர், டி ஜே தமிழன், ஜீவன் கந்தையா , வ ந கிரிதரன் போன்ற பலரின் கருத்துகள் இந்த அமைப்பின் கீழ் தான் வெளியாகியிருக்கமுடியும்.

திண்ணையில் எழுதுபவர்கள் பொறுப்புடன் எழுதுங்கள். கருத்துகளைப் பற்றிப் பேசும்போது, வெறும் தனிப்பட்ட கோபதாபங்களுக்கான வடிகாலாய் எதையும் எழுதாதீர்கள். வரிக்கு வரி எடிட் சாத்தியமும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல. முடிந்த அளவு இதை நாங்கள் எடிட் செய்ய முயன்றாலும் எந்த நீக்கமும் எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது.

***

திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளுக்கான பிரசுர உரிமை அவற்றை ஆக்கியவர்களுக்கே. அவர்கள் வேறு எந்தப் பத்திரிக்கையில் அவற்றை மறுபிரசுரம் செய்தாலும், அந்த விஷயத்தை திண்ணைக்கு தெரிவிக்கவேண்டிய கட்டாயமும் இல்லை; திண்ணையில் இந்த தேதியில் ஏற்கெனவே பிரசுரமானது என்ற விஷயத்தை குறிப்பிடவும் தேவையில்லை. (அப்படி குறிப்பிட்டால் திண்ணை ஆசிரியர் குழு நன்றி பாராட்டும்). திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்த படைப்பாளிகளே பொறுப்பு.

***

திண்ணையில் வெளியிடப்படும் கதைகள் கட்டுரைகள் மூன்று வகையானவை. முதலாவது படைப்பாளிகளே திண்ணைக்கு அனுப்பி பிரசுரிக்கக் கோருபவை. இப்படிப்பட்ட படைப்புக்கள் வேறு பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய விரும்புபவர்கள் நேரடியாக அந்தப் படைப்பாளிகளையே தொடர்பு கொள்ளவேண்டும். அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் திண்ணையில் வெளியிடப்படுகின்றன.

இரண்டாவது, திண்ணை குழு மொழிபெயர்க்கும் படைப்பாளிகள். இந்தக் கட்டுரைகளை திண்ணையில் மொழிபெயர்த்து பிரசுரம் செய்ய தேவையான அனுமதி பெரும்பாலும் திண்ணை பெற்றிருக்கிறது. கேட்ட அனுமதி திண்ணையில் மொழிபெயர்த்து பிரசுரம் செய்ய மட்டுமே. இவைகளை மறு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டுமெனில் அந்தந்த ஆசிரியர்களுக்கே நீங்கள் எழுதவேண்டும். இந்த மொழிபெயர்ப்பையே நீங்கள் உபயோகப்படுத்தும் பட்சத்தில், மொழிபெயர்ப்பு திண்ணை என குறிப்பிடுதல் நலம்.

மூன்றாவது படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை ஒரு சில கட்டுரைகளையும் கதைகளையும் பிரசுரித்திருக்கிறது. அந்தப் படைப்பாளிகளின் முகவரி தெரியாதது ஒரு காரணம். சிலவற்றிற்கு நேர்ப்பேச்சில் அனுமதி பெற்றதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட முக்கியமான படைப்பு தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பது இன்னொரு காரணம். உங்களது படைப்புக்கள் அப்படி திண்ணையில் வெளிவந்திருந்தால், அப்படி வெளிவர நீங்கள் விரும்பவில்லை என்றால், திண்ணை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுங்கள். அந்த குறிப்பிட்ட பக்கங்களை திண்ணையிலிருந்து நீக்கி விடுகிறோம்.

***

editor@thinnai.com

***

Series Navigation

திண்ணை ஆசிரியர் குழு

திண்ணை ஆசிரியர் குழு