திண்டுக்கல் சோதிடரும் மழையும்

This entry is part 1 of 1 in the series 19991013_Issue

சுப்பிரமணிய பாரதியார்


(இந்தியா:4-8-1906, பக்கம் 5)

மே மாதக் கடைசி முதல் நமது தேச முழுதும் மழை பெய்து பெரு வெள்ளமாக ஓடப் போகிற தென்று திண்டுக்கல் மு. கந்தசாமிப் பிள்ளை சோதிடம் சொல்லி அது இரண்டு மூன்று தடவை தோற்றுத் தோற்றுப் போனதற்கப்பால் விடாமல் மேன்மேலும் புதுப் புது விளம்பரங்களை அனுப்பிக்கொண்டே வந்தார்.

அவர் சோதிடம் வெளியேற, வெளியேற எல்லா வருடங்களிலும் சாமானியமாகப் பெய்யும் மழைக்குக்கூட இடமில்லாமல், தேசமெங்கும் மிகவும் வருத்தமடைந்து நின்றது. அவர் சொல்லிய கால வரையறை யெல்லாம் கடந்து போகும் வரை மேகங்கள் காத்துக் கொண்டே யிருந்தன. ஒரு மட்டிற்கு அவர் சொல்லிய கால வரையறை கடந்து போனதின் பிறகு மழை சிறிது தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது.

அதற்குள்ளே இவருக்கு பொறுக்காமல் மறுபடியும் தமது சோதிட விளம்பரத்தை வெளியிட்டு விட்டார்.

இவர் எழுதியிருக்கும் விளம்பரத்தை நோக்கும்போது மிகப் பரிதாபகரமாக இருக்கின்றது.

இந்த தடவையும் தமது சோதிடம் பொய்த்துப் போகும் விஷயத்தில் தமது சோதிடக்கடையையே கட்டி வைத்து விடுவதாக இவர் வாக்களித்திருக்கின்றார்.

அந்த விளம்பரத்தின் பிரதியொன்றை கீழே தருகின்றோம்.

பெருமழைத்தோற்றம்

சென்ற மேமாதம் 29-ந் தேதி முதல் இந்தியாவில் எங்கெங்கும் கனமான அதிக மழை வருஷிக்குமென நான் எழுதியவண்ணம் மேற்படி மழையானதுஇ இதுவரை வருஷிக்கவில்லை.

ஆகையால், கடைசியாக இன்னும் ஒருமுறை யான் எடுத்துப் பேசுவதற்குப் பொறுமையுள்ள மகா ஜனங்கள் எனக்குத் தயவோடு கொஞ்சம் இடம் கொடுப்பார்களாக.

முக்கிய கவனிப்பு.

நாளது ஆகஸ்டு மாதம் 13,14-ந் தேதி கார்த்திகை ரோகிணி நக்ஷத்திரம் முதல் மேற்படி மாதம் 19, 20-ந் தேதி ஆயில்ய மக நக்ஷத்திரம் வரை உள்ள நாட்கள் ஏழுக்குள் …

… மற்ற விஷயங்களை யெல்லாம் என்னுடைய முதல் பத்திரிக்கையில் பார்த்துக் கொள்க. இந்த முறையும் முன்போலவே சாமனியமாகப் போய்விடுகிற பக்ஷத்தில் இனி முன்னேறி வந்து யாதொன்றையும் எழுதாமல் சோதிட நூலையும் கட்டிவைத்து விடுவேனாகவும்.

மு. கந்தசாமிப் பிள்ளை

திண்டுக்கல்.

முன்பெல்லாம் இருந்தது போல இந்தத் தடவையும் வானத்திலுள்ள கிரகங்கள், இவரது சோதிடத்துக்கு மாறாகவே செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்யாமல் இதை மறந்தாயினும் மழை பெய்யுமாறு ஏற்பாடு செய்யுமென நம்புகிறோம்.

****

திண்டுக்கல் சோதிடரும் ‘இந்தியன் மிர்ரர் ‘ பத்திரிக்கையும்.

பாரதியார்

(இந்தியா: 8-9-1906- பக்கம் 12)

‘ஒரு தீர்க்கதரிசிக்கும் தனது சொந்த நாட்டில் கவுரவம் ஏற்படுவதில்லை ‘ என்பதாக இங்கிலீஷ் பாஷையிலே ஒரு பழமொழி இருக்கிறது.

இப்போது திண்டுக்கல் சோதிடர் மிஸ்டர் கந்தசாமிப் பிள்ளையைப் பற்றி ‘இந்தியன் மிர்ரர் ‘ பத்திரிக்கை எழுதியிருப்பதை நோக்குமிடத்து நமக்கு மேற்படி பழமொழி ஞாபகம் வருகின்றது.

அந்த சோதிடர் தமது சோதிடங்களை இரண்டு மூன்று தடவை மாற்றும்படி நேர்ந்ததற்கப்பாலும், தேதிகளில் சில தப்புகள் நேரிட்டிருக்கின்றன வென்றாலும், பொதுவாகவே அவர் சோதிடப்படி மழையும் வெள்ளமும், ஜன்ச் சேதமும் ஏற்பட்டே யிருக்கின்றன வென்பதாக கல்கத்தா பத்திரிக்கை சொல்கிறது.

எனவே பெங்காளத்து மேகங்கள் நமது சோதிடருக்கு மதிப்பு காட்டுகின்றனவெ யல்லாமல், நமது மாகாணத்து மேகங்கள் சிறிதேனும் கீழ்ப்படிதலில்லாத மூட மிருகங்களா யிருக்கின்றன.

***

Thinnai. October 31 1999

Thinnai 1999 December 3

திண்ணை


  • திண்டுக்கல் சோதிடரும் மழையும்

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.