திணித்தல்

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

ஏ.எம். குர்சித்


பட்டாம்பூச்சி பிடிக்க எத்தனிக்கும்
வெகுளித்தன தோழியையும்
தெருவோரச் சருகுகளில் மூத்திரம் போகும்
களிசான் கிழிந்த பையன்களையும்
பார்க்கும் தோறும்
அப்பாவின் சட்டையை பிடித்துக் குலுக்கும்படியாய்
ஆத்திரம் பற்றியெடுக்கிறது.

“இந்த இளவயதில் எதற்கு” சொன்னதின் கடுமையை
சாணம்பட்ட செருப்பால் கசக்கி
சாளரம் வழியாய் கொல்லையில் எறிந்துவிட்டு
கலர் ரீ.வி.
வுிசிலடிக்கும் கேஸ் குக்கர்
ஒரு கடைவாய்ப் புன்னகைக் கணவன்
இத்தனையையும் வாங்கித் தந்த அப்பாவை
கடித்து சிதைத்தாலென்ன.

எனக்கான எந்த அனுபவித்தலையும்
வெளியேயிருந்து உள்ளேயும்
உள்ளேயிருந்து வெளியேயும்
அனுமதிக்கா அரைக்கிறுக்கு கணவன்,
மரத்துப்போன கொங்கிறீற் மனசு மாமியார்,
கரண்ட் குறைந்தால் இரையும் றேடியோ,
எப்போதும் குரைக்கும் சங்கிலியில் பிணைத்த நாய்,
இத்தனையின் அசூசையும் தாங்கி
எனது எஞ்சிய வாழ்வின் எண்பது வருசங்களை
எப்படித்தான் கழித்துக் கொள்வேன்.

ஏ.எம். குர்சித், இலங்கை

Series Navigation

ஏ.எம். குர்சித்

ஏ.எம். குர்சித்