தாழ் திறவாய், எம்பாவாய்!

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மூடிக் கிடந்த
இரும்புக் கதவுகளை உடைத்தென்
இதயக் கோயிலின் உள்ளே
ஓடிப் போய்
தாழிட்டுக் கொண்டாய்!
தட்டித் தட்டிக் கை வலித்து
வாசலில் மணிக் கணக்காய்
தவங் கிடக்கிறேன்!
தாழ் திறவாய், எம்பாவாய்!
இடத்தைக் காலி செய்ய எழுதிய
மடல் அனைத்தும்
என்னை நோக்கியே
மீண்டன!
சாவியை எடுத்து
துளைக்குள் பார்த்தால்
கோபுரத் தூணாய்க்
கொங்கைகளைக் காட்டி
பாவை விளக்கேந்தி
பரதக் கலை நடம்
பயின்று கொண்டிருக்கிறாய்!
காவியச் சிலைகளைச் செதுக்கும் போது
எனக்கு ஓவியமாய் நின்று
உளிகளையும் அவ்வப்போது என்
கையில் கொடுத்தாய்!
கதவைத் தட்டுவது காதில்
விழவில்லையா ?
வெளியே வா, என்னுயிர்த் தோழீ!
அன்னை எழுந்து விட்டாள்!
ஆலய மணியை அடித்து நெஞ்சைப் பிளந்திடுவாள்!
விரைவில் வா!
இப்போது நான் தட்டுவது
என் இதயத்தை அல்ல!
உன் இதயத்தை!
தாழ் திறவாய் எம்பாவாய்!

*************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா