தாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

ஜெயஸ்ரீ


பாவண்ணனின் தினமணிக் கட்டுரைகள் பரவலான வாசகர்களைக் கவர்ந்தவை. வாழ்வைப்பற்றியும் வாழ்வின் மேன்மையைப்பற்றியும் அக்கட்டுரைகள் வாசகர்களுடன் உரையாடுகின்றன. கண்ணைவிற்றுச் சித்திரம் வாங்கும் செயல்களை மனிதர்கள் செய்யலாகாது என்கிற பரிவும் பதற்றமும் அவர் கட்டுரைகளில் எங்கெங்கும் காணப்படுகின்றன. கடந்த நான்காண்டுகளில் பல்வேறு தலைப்புகளில் அவர் தினமணியில் எழுதிய கட்டுரைகளை ஒருங்கே வாசிப்பது நல்ல அனுபவத்தைத் தருகிறது. மனத்தை மலர்ச்சியுடனும் கள்ளமில்லாமலும் அன்புடனும் குழந்தைமையுடனும் வைத்துக்கொள்வதன் அவசியத்தை நுாலில் உள்ள எல்லாக் கட்டுரைகளிலும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் சுட்டிக்காட்டியபடி செல்கிறார் பாவண்ணன்.

தொகுப்பில் முப்பத்தைந்து கட்டுரைகள் உள்ளன. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கவேண்டிய உறவுநிலை, குழந்தைக்கல்வி, குழந்தை வளர்ப்பு, இரக்கமற்ற முறையில் நிகழும் சமூகக்கொடுமைகள், கல்வியின்மை, வேலையின்மை, கையறுநிலையில் நிற்கும் இளைஞர் கோலம், குழந்தைத் தொழிலாளர்கள், விவசாயிகள் தற்கொலை, தண்ணீர், வன்முறை, சுவரொட்டிகளில் வெளிப்படும் போலிப்புகழுரைகள் எனப் புறஉலகில் கண்முன் நிகழும் பல விஷயங்களையும் பாவண்ணணுடைய கட்டுரைகள் தொட்டுக்காட்டிப் பேசுகின்றன. ஒவ்வொன்றையும் அவர் தமக்கே உரிய முறையில் அணுகி இழைஇழையாய்ப் பிரித்துச் சொல்வதைப் படிக்கும்போது அவருடைய சமூக அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல சம்பவங்கள் நிகழ்ந்ததற்கான காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. சில சம்பவங்கள் சில சமயங்களில் நம்மைக் கலங்கவைத்துவிடுகின்றன. சில சம்பவங்கள் ஆதங்கப்படவைக்கின்றன. சம்பவங்களின் விளைவுகள் நல்லவையாக அமையும்போது மனத்தில் ஒருவித மகிழ்ச்சியும் நிறைவும் ஒருங்கே உருவாகின்றன. வேறுவிதமாக அமைந்துவிடும்போது அதிருப்தியையும் பெருமூச்சுகளையும் அங்கலாய்ப்புகளையும் வெளிப்படுத்துகிறோம். உடனே அவற்றை மாற்றிச் சீராக்கிவைக்கவே நம் மனம் எழுச்சியுறுகிறது. தனிப்பட்ட குடும்ப வாழ்வில் குறைகளைக் களைவதும் ஓட்டைகளை அடைப்பதும் வளைவுகளை நிமிர்த்துவதும் எளிதாக இருக்கிற அளவுக்குப் பொதுவாழ்வில் சீர்ப்படுத்துவது எளிதான செயலாக இல்லை. நம் எண்ணங்களையும் செயல்களையும் கட்டுப்படுத்துகிற எண்ணற்ற புற விஷயங்கள் நம் கண்களையும் கைகளையும் கட்டிப்போட்டுவிடுகின்றன. வளைவுகளின் மையப்புள்ளியைக் கண்டுபிடித்துக் கொட்டப்படவேண்டிய கோபமும் எரிச்சழூம் வெறுப்பும் வளைவுகளைக் கண்டு மனம் பொறுக்காமல் நிமிர்த்தச் செல்கிறவர்கள்மீது திசைதிரும்புகின்றன. ‘என்னய்யா பெரிசா கேக்க வந்துட்ட, நீ என்ன பெரிய இவனா / இவளா ? ‘ என்கிற கேள்வி ஊட்டக்கூடிய சோர்வு கொஞ்சநஞ்சமல்ல. சில சமயங்களில் இதன் விளைவுகள் விபரீதமாகவும் முடிவுறக்கூடியவை. பேருந்தில் கிண்டல் செய்யப்படுகிற பெண்ணுக்குப் பரிந்துபேசக்கூடிய மற்றொரு பெண் கிண்டல் செய்யும் கூட்டத்தாருக்கு உடனடியான ஓர் இலக்காக மாறிவிடுகிறாள். எக்கணமும் தாக்கப்பட்டுவிடுவோம் என்கிற அச்சஉணர்வை அவளால் ஒருகணமும் உதற முடிவதில்லை. தன் போக்கையும் எண்ணங்களையும் தகுதியுள்ளதாக மாற்றிக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் மனிதகுலத்தின்முன் இருந்தபோதும் ஏன் தன்னை உயர்ந்த தகுதிக்கு உயர்த்திக்கொள்ள மனிதகுலம் முன்வரவில்லை என்பது முக்கியமான கேள்வி. தன்னலத்தையும் அதனால் கிட்டக்கூடிய சுகங்களையும் உதறிக்கொண்டு மனிதர்களால் எழமுடியவில்லை என்பதுதான் சோகமான உண்மை. வருத்தத்தொனியுடன் தன் கட்டுரைகளில் இந்த உண்மையின் தடத்தை அழுத்தமுடன் பதிவு செய்திருக்கிறார் பாவண்ணன். ஆதங்கங்களாகவும் மனக்குமுறலாகவும் ஏக்கங்களாகவும் கையறுநிலையைக் கண்ட கொதிப்புகளாகவும் அப்பதிவுகள் காணப்படுகின்றன.

‘எட்டுத் திசையெங்கும் தேடி ‘ என்கிற தலைப்புக் கட்டுரை மிகமுக்கியமானது. நம் முந்தைய தலைமுறையினர் நமக்காகத் தேடி அலைந்து தமிழில் மொழிபெயர்த்து வைத்திருக்கிற இலக்கியச் செல்வத்தின் மேன்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது கட்டுரை. இலக்கிய வாசிப்பில் ஆர்வமுள்ள இளம்மனத்துக்கு உத்வேகம் ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளது. ‘எங்கெங்கு காணினும் சுவரொட்டிகள் ‘ தொகுப்பின் மற்றொரு முக்கிய கட்டுரை. தமிழர்வாழ்வில் நேர்ந்த அவலத்தை இக்கட்டுரை அழகாகப் படம்பிடித்துள்ளது. ஐம்பதாண்டு கால வாழ்வில் எந்த அளவுக்கு வெற்றுப் புகழுரைவிரும்பிகளாகவும் தன்னலவாதிகளாகவும் சுயமோகம் கொண்டவர்களாகவும் மனிதர்கள் மாறி விட்டார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

குழந்தைகள் சார்ந்த உலகின்மீதான பாவண்ணனின் அக்கறை பல கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கிறது. இன்றை சூழலில் குழந்தைக்கல்வி மனித மாண்புகளின் வளர்ச்சிக்கானதாக அல்லாமல் மதிப்பெண்களுக்கானதாகவும் உச்சஇலக்கை நோக்கி நகர்வதாகவும் அமைந்திருக்கும் துரதிருஷ்டத்தைக் ‘கனவு சுருங்கிய கதை ‘ என்னும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குழந்தைகளிடம் குழந்தைமை என்பதையே பெரியவர்கள் சுரண்டி எடுத்துவிடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். குழந்தைகளிடையே நட்பு என்கிற பண்பு கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்துவருவதால் உருவாகும் அச்சத்தை ‘சிறகு முறிந்த பறவைகள் ‘ கட்டுரை எதிவு செய்திருக்கிறது. அன்பின் ஊற்றிலிருந்து பிறப்பதல்லவா நட்பு ? நட்பு கொள்ளும் பழக்கம் குறைகிறதென்றால் அன்பின் ஈரமே வற்றத் தொடங்குவதன் அறிகுறியல்லவா ? கட்டுரையின் முடிவில் புரிந்துகொள்வதற்காக அவரே சில அளவுகோல்களையும் தருவது ஒவ்வொருவரையும் சிந்திக்கத் துாண்டும்.

தியானம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே அந்தக் குறிப்பிட்ட இடத்தின்மீது தன்னையறியாமல் ஒருவித வாஞ்சையும் நெருக்கமும் கொண்டுவிடுவதாகச் சொல்வதுண்டு. பல சமயங்களில் அந்த இடத்தை நெருங்கியதுமே மனஒருமை தானாகக் கைகூடுவதுமுண்டு. படிப்பது கூட ஒருவிதத்தில் தியானத்தைப்போன்ற செயலே. வீட்டில் அதற்கென்று ஓர் இடம் இருக்கும்போது வாசிக்கும் ஈடுபாடு தானாகவே எழுகிறது. ‘படிப்பதற்கென்று ஓர் இடம் ‘ கட்டுரையில் பாவண்ணன் இதை அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். இடம் என்பது நாற்காலி, மேசை போன்ற பொருள்களின் வசதியல்ல. அறையோ கூடமோ கூட அல்ல. உண்மையிலேயே அது ஓரடிக்கு ஓரடி கொண்ட நிலம் . படிப்பதற்காக நாம் ஏற்படுத்தவேண்டிய நிரந்தர இடம். இதை நம் இளம்பிள்ளைகளுக்கு ஒதுக்கித் தருவதன் அவசியத்தை அழகாக எடுத்துரைக்கிறார் பாவண்ணன்.

‘பற்றி எரியும் பசி ‘, ‘கிராமத்து இளம்பிஞ்சுகள் ‘ ஆகிய இரண்டு கட்டுரைகளும் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதன் சித்திரத்தைத் தீட்டிக்காட்டுகின்றன. பெண்சீண்டல் கொடுமை, பெண்களை இரண்டாம்நிலை பிரஜைகளாகவே பார்க்கிற சமுதாயப் பார்வை, மறுமணம் போன்ற பெண்கள் சார்ந்த விஷயங்களைப் பேசும் கட்டுரைகள் பெண்கள்மீது கட்டுரையாளருக்குள்ள மரியாதையைக் காட்டுவதோடு அவர்களும் சகமனிதர்கள்தாமே என்கிற உணர்வை வாசிப்பவர்கள் மனத்தில் ஏற்படுத்துகின்றன. தனிமனித வன்முறைகள், அரசியல் காழ்ப்புணர்வு, மலிவான அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கங்கள் இளைஞர்களைத் திசைதிருப்பும் அரசியல் போன்ற விஷயங்களைக் கவலையோடு எடுத்துரைக்கிறார் .

‘மெல்ல மனம் இனிச்சாகும் ‘ அருமையான கட்டுரை. படிக்கிற காலத்தில் மதிப்பெண்களைக் குறியாகக் கொண்டு மனப்பாடம் செய்வதில் மூழ்கும் குழந்தைகள், இளைஞர்களானதும் அம்மதிப்பெண்கள் ஈட்டித்தரும் வேலையில் மூழ்கித் திரிகிறார்களே தவிர வெளியுலகத்தைப்பற்றிய அவர்களுடைய பார்வை தட்டையாகவே உள்ளது. படிக்கும்போது மதிப்பெண்களை நோக்கிய வேட்டை. பிறகு வேலையை முன்வைத்து வசதிகளை நோக்கிய வேட்டை. வெறும் வேட்டைவிலங்காகவே வாழப்பெற்று முடிவுற்றுவிடும் வாழ்வுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா ? மனித மனங்கள், மானுட உணர்வுகள், மாண்புகள், பெருமைகள், புறஉலகம் என எதுவுமே தெரியாமல் வாழும் கூண்டுவாழ்க்கை மிகவும் அவலமானது. எல்லாருடைய மனத்திலும் குடிகொண்டுள்ள இந்த ஆதங்கத்தைப் பாவண்ணனின் கட்டுரை அழகாகப் பதிவு செய்துள்ளது.

சாதி மதம் என்று பிரித்துவைத்து மனிதர்களை வேறுபடுத்தும் சமூகத்தின்மீதான சாடலாக அமைந்துள்ளது ‘இளைதாக முள்மரம் கொல்க ‘ என்னும் கட்டுரை. ஓய்வெடுத்தல் என்றாலே தொலைக்காட்சியைப் பார்ப்பதுதான் என்று எண்ணுகிற எவரும் படிக்கவேண்டிய ஒன்றாக ‘ஓய்வெடுத்தல் என்றால் என்ன ? ‘ கட்டுரை அமைந்திருக்கிறது. ஓய்வெடுத்தல் என்பது மாற்று வேலையில் ஈடுபடுவது என அழகாக உணர்த்துகிறார் பாவண்ணன்.

கிரிக்கெட்டையும் ஆட்டக்காரர்களையும் மட்டுமே பிறர் ரசித்துக் கொண்டிருக்க, அந்த மைதானத்தில் காணப்படும் ஒரு மரம் பாவண்ணனின் மனத்தில் ஏற்படுத்தும் எண்ண அலைகளை ‘மரம் சொல்லும் பாடம் ‘ என்னும் கட்டுரை அருமையாக விவரிக்கிறது. மரம் வெட்டாதீர்கள் என்ற ராணுவத்தொனியில் கட்டளையாக மட்டுமே இவ்விஷயம் சொல்லப்பட முடியும் என்கிற எண்ணத்தை மாற்றி படிப்பவர் எவரையும் சிந்திக்கத் துாண்டும் வகையில் கட்டுரை அமைந்துள்ளதைச் சிறப்பம்சமாகச் சொல்லவேண்டும்.

‘எட்டாத இடம்போன தண்ணீர் ‘, ‘அன்னமூட்டும் கை ‘, ‘ஆர்ப்பரிக்கும் செல்பேசிகள் ‘ ஆகிய கட்டுரைகள் பாவண்ணனுடைய நுணுக்கமான கவனிப்பையும் மனப்பதிவையும் வெளிப்படுத்துகின்றன. அவரே முன்னுரையில் குறிப்பிடுவதைப்போல எக்கட்டுரையும் இப்படித்தான் என்கிற தொனியைக் காட்டுவதில்லை. ஆற்றாமையின் பதிவுளாகவே உள்ளது. ஆனால் நீரிலிட்ட கல் ஏற்படுத்தும் வளையங்களாக மனத்தில் உருவாக்கும் எண்ணங்கள் ஏராளம்.

பாவண்ணனுடைய எல்லாக் கட்டுரைகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டு பேசுபவையாக இருக்கின்றன. அவர் சீற்றத்துடன் எழுதும் கட்டுரைகளும் அன்பின் உரிமையில் அழுத்தமுடன் சொல்லப்பட்ட வாசகங்களாகவே உள்ளன. ஒரு தாய் தன் குழந்தையிடம் பரிவோடு ‘இப்படிச் செய்வதற்கு மாறாக அப்படிச் செய்துபார் ‘ என்றோ ‘நீ அடித்தால் பாப்பாவுக்கு வலிக்குமல்லவா ‘ என்றோ கனிவோடு சொல்வதைப்போல உள்ளது.

எதையும் நிறுவிக்காட்ட முடியவில்லை என்கிற ஆதங்கத்தை பாவண்ணன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் வாசிப்பவர்களுடைய நெஞ்சில் கட்டுரைகள் அழுத்தமான தாக்கத்தை உருவாக்குகின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எந்த விதத்திலும் போதனைத்தொனி வெளிப்பட்டுவிடாத வகையில் சக பிரயாணி ஒருவரிடம் பேசுவதைப்போன்ற சகஜமான தொனியுடன் இக்கட்டுரைகள் அமைந்திருப்பதை இந்நுாலின் மிகப்பெரிய வலிமையாகச் சொல்லவேண்டும்.

( எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு. வெளியீடு: அகரம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-7. விலை. ரூ90)

jayashriraguram@yahoo.co.in

Series Navigation