தாகூரின் கீதங்கள் – 63 வாழ்க்கைப் பயணத்தின் முடிவு !

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என் வாழ்க்கைப் பயணம்
முடிந்து போவது
தடைப்பட்டு
ஊடுருவ முடியா
இரவினிலே
இழந்து போய் விட்டது !
“அஞ்சாதே” என்று மௌனமாய்
விரல்களை அசைத்து
விண்மீன்கள் அமைதியாய்
ஊக்கம் அளிக்கும்
எனக்கு !
பூத்து மலரும் நாட் பொழுதின்
மிச்சங்களைச்
சேர்த்துக் கொண்டு
இக்கரையி லிருந்து
அக்கரைக்குப் போகிறேன்
புது வாழ்வு நோக்கிப்
பூர்த்தி அடைய
என் பயணம் !

என் அத்தமன வேளையில் நான்
படைத்த வற்றை எல்லாம்
உன் கனிவுக் கண்காணிப்பில்
விட்டுச் செல்கிறேன் !
இருளின் தோழனே ! உந்தன்
கருணைக் கையினில்
கட்டி விடுகிறேன்
எனது அன்பு நாணை !
விடிவை நோக்கி
எனது தன்னம்பிக் கையும்
பற்பல இரவுப் பாடல்களும்
பற்பல பூரிப்புக் கனவுகளும்
பந்த பாசத்தின்
சோர்வுகளும்
பூர்த்தியாக வேண்டும் நான்
விடைபெறும் போது !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 5, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா